புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும்
நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் புதுச்சேரியில் கல்விக்கொள்கையில் மாற்றம் செய்து மத்தியக்கல்வி வாரியக்கல்வி முறையைப் புகுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். பொம்மைப் பதவியான ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசையால் அரசின் கல்விக் கொள்கையில் குறுக்கிட்டுப் புகுத்தப்பட்டதே இக் கொள்கை.
பா.ச.க. வின் வெளிப்படையான கொள்கையே நாட்டை இந்துமயமாகவும் இந்திய மயமாகவும் மாற்றுவதுதான். இதற்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை, ஒரே மொழி என்பனவற்றை வலியுறுத்தி வருகிறது; வாய்ப்புள்ள நேர்வுகளில் எல்லாம் அதற்கேற்பவே செயற்பட்டு வருகிறது.
இத்தகைய போக்கை நாம் தடுத்து நிறுத்த உதவுவதே வரும் நாடாளுமன்றத் தேர்தல். எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்வதுபோல் மீண்டும் பாசகவை வரவிட்டால் அடுத்துத் தேர்தல் வரும் வாய்ப்பே இல்லாமல் போகலாம். நாம் விழிப்பாக இருந்து நம் தேர்தல் கடமையை ஆற்ற வேண்டும்.
எதிர்க்கட்சிததலைவர்கள் சிறப்பாக உரையாற்றி வருகிறார்கள். நரேந்திரர் கூறும் பொய்களுக்கு உடனுக்குடன் சுடச்சுட எதிருரை வழங்குகிறார் மு.க. தாலின். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி, பழனிவேல் இராசன், அன்பில் பொய்யாமொழி, மனோ தங்கராசு முதலானோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.இரா.பாலு, ஆ.இராசா, கனிமொழி, வெங்கடேசன் முதலானோரும் ஒன்றிய ஆட்சியாளர்களின், அவர்களின் கூட்டாளிகளின் பொய்முகங்களைக் கிழித்து வருகிறார்கள். எனினும் இந்தித்திணிப்பு குறித்துக் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும். ஏனெனில் இந்தித்திணிப்பே இந்துமயத்திற்குப் பாதையாகும்.
ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு, இதில் கருத்து செலுத்த முழுத் தகுதியின்மையே இதுதொடர்பான பேச்சில் முழு எதிர்வீச்சு இல்லை எனலாம். தமிழ்நாட்டில் எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், வாய் தமிழ் வாழ்க என்று சொன்னாலும் செயல் தமிழை மறைப்பதாகவே உள்ளது. 3 அகவைச் சிறார் தமிழ், ஆங்கிலம், இந்தி படிக்கும் அவல நிலை உள்ளது. விருப்பப்பாடம் என்ற பெயரில் பலருக்கு வெறுப்புப்பாடமாக உள்ள இந்தி திணிக்கப்படுகிறது. அரசு, புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகப் பேசினாலும் அதற்குப் பாய்விரித்துக் கொண்டுதான் உள்ளது. அரசின் முழக்கங்களிலும் முத்திரைகளிலும் இந்தியைக் காண முடிகிறது. தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஆங்கிலம் அரசோச்சுகிறது. இன்றைக்குக் பல கோடிக்கனக்கான விளம்பரத்தாள்களில் ‘திராவிட ‘மாடல்’ என்பதைக் காண முடிகிறது. மாதிரி என்றோ நன்முறை என்றோ முன் முறை என்றோ தமிழில் குறிப்பிட்டிருந்தால் அங்கெல்லாம் தமிழ்தானே பரவியிருக்கும். பெரும்பாலான திரைப்படங்களின் பெயர்கள் பிற மொழிப்படம் என எண்ணும் அளவிற்குத் தமிழைத் தொலைத்து நிற்கின்றன. இதழ்களிலும் காட்சி ஊடகங்களிலும் தமிழ் தேய்ந்து கொண்டே போகிறது. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
“திமுகவிற்கு எதிரானவன். எனவே இவ்வாறு கூறுகிறான்” என யாரும் கூற இயலாது.
மு.க.தாலின் ஆட்சி அமைத்ததும் பிறருக்கும் முன்னதாக அனைத்து இந்திய தமிழ்ச்சங்கங்களைக் கூட்டி வாழ்த்தரங்கம் நடத்தினோம். “முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின்”(17.06.21) எனப் பாராட்டினோம்.
தமிழ்ப்பரப்புரைக் கழகம் அமைத்த பொழுது “இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வர்” எனப் பாராட்டினோம்(25.09.22). அவரின் ஆளுமையை உணர்ந்ததால், “மாநில உரிமைகள் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்க வேண்டும்!” என வேண்டுகோளும் விடுத்தோம்(29.04.23). ஆட்சியில் இருக்கும்போது இவ்வாறு பாராட்டுவது இயற்கைதான் எனச் சிலர் எண்ணலாம். அதே நேரம், அரசின் மொழிக்கொள்கை குறித்துக் கண்டித்தும் எழுதியுள்ளோம். பாராட்ட வேண்டியதைப் பாராட்டியும் சுட்டிக்காட்ட வேண்டிய குறைகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டியும் நடுநிலையுடன் எப்பொழுதும் எழுதி வருவதை அனைவரும் அறிவர். மு.க.தாலின் எதிர்க்கட்சியில் இருந்த பொழுதே, இன்றைய அரசியலின் திருப்புமுனையாகச் செயல்பட்டு வருபவர் மு.க.தாலின் எனக் குறிப்பிட்டு “செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே!” என வாழ்த்தினோம்(26.02.2017). “மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக!” என இந்தியாவின் வழிகாட்டியாக மாற வேண்டினோம்(25.06.2017). அவர் செயல் திறனுக்காக “வல்லமையாளர் தாலின் வெல்க!” என்றும் வாழ்த்தினோம்(04.09.2018) . இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டினோம்(15.10.2018). மு.க.தாலின் எதிர்க்கட்சியில் இருந்தபொழுது இநதியாவிற்கு வழிகாட்ட வேண்டும் என்று நாம் வேண்டியது நிறைவேறியுள்ளது.
“40 இல் 39 இடங்களில் வென்ற பொழுது மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக!” என வேண்டினோம்(26.05.2019). இவ்வாறெல்லாம் மு.க.தாலினைப் பாராட்டி வந்துள்ள நாம் இத்தேர்தலில் அவருக்கு வலு சேர்க்க வேண்டும். ஆனால், எந்த மொழிக் கொள்கைக்காக நாம் பாசகவைக் குற்றம் சாட்டுகிறோமோ அதே மொழிக்கொள்கையைப் பின்பற்றும் இவரை மட்டும் ஆதரிப்பது ஓர வஞ்சனையாகாதா?
தமிழ்நாட்டிற்குள்ளே தமிழ் மட்டுமே வெளித் தொடர்பிற்கு மட்டும் ஆங்கிலம் என இப்பொழுது இந்தியாக் கூட்டணியினர் அறிவிக்க வேண்டும். கல்விமொழியும் வழிபாட்டு மொழியும் அலுவலக மொழியும் தமிழ் மட்டுமே என்றும் அறிவிக்க வேண்டும். பாசகவின் மாநிலத்தலைவர் ஐந்து மொழிகளைக் கற்றுத்தருவதே கொள்கை எனப் பித்தர்போல் கூறுகிறார். வளரிளங்குழந்தைப் பருவத்திலேயே பித்துபிடிக்கச் செய்யும் வழியே இது. தலைமை யமைச்சர் தமிழ்நாட்டு மக்களுடன் நமோ செயலி மூலம் தமிழில் பேசுகிறார். இவ்வாறு பிறமொழிக்கான பயன்பாடு எளிதில் கிடைக்கும் பொழுது தேவையற்ற மொழிகளைப் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கக் கூடாது. ஐந்தாம் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்பித்தால் போதும். மாநிலம், ஒன்றியம், தனியார், அயலகம் என்ற வேறுபாடின்றித் தமிழே தமிழ்நாட்டின் ஒற்றைப் பயன்பாட்டு மொழியாகத் திகழுவதற்குரிய அறிவிப்பை அரசு வெளியிடவேண்டும். அவ்வாறாயின் முழு வீச்சில் இவ்வணியினரை வெற்றி பெறச்செய்யலாம்.
அடுத்து, மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகப் பெயரிலேயே நாம் தமிழர் என்னும் உணர்வை ஊட்டும் நாம் தமிழர் கட்சி உள்ளது. குறைபாடுகளும் பிழைபாடுகளும் இக்கட்சியின் செயற்பாடுகளில் சில உள்ளன. எனினும் பிற கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அவை குறைவே. எனவே, இந்தியா கூட்டணிக்கும் பாசக கூட்டணிக்கும் எதிராக வாக்களிப்பவர்கள் வாக்குகளைச் சிதற அடிக்காமல் ஒலிவாங்கி முத்திரையில் வாக்களித்து நாம்-தமிழர் கட்சியை ஆதரிப்பது நமக்கு நல்லது. இக்கட்சி இரண்டாம் இடத்தைப் பிடிப்பது ஆளும் கட்சியினருக்கும் பிற கட்சியினருக்கும் விழிப்பு ஒலியாக – எச்சரிக்கை மணியாக – அமையும். ஆரவார முழக்கங்களில் கருத்து செலுத்தாமல் அழுத்தமான செயல்களில் கருத்து செலுத்தச் செய்யும்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. (திருவள்ளுவர், திருக்குறள், 670)
என மக்கள் அரசியலாளர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தமிழ் நாட்டரசு தமிழ்நல அரசாகத் தொடருவதற்கும் ஒன்றிய அரசு தமிழையும் பிற தேசிய மொழிகளையும் ஒத்த நிலையில் நோக்கவும் இந்து மயம்,இந்தி மயம், வருணாசிரமத் திணிப்பு முதலியவை அற்ற குமுக நீதியை நாட்டு மக்கள் பெறவும் நம் வாக்குகளே உண்மையான கருவிகளாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
பங்குனி 21, 2055 / 03.04.2024
No comments:
Post a Comment