Showing posts with label புதுச்சேரி. Show all posts
Showing posts with label புதுச்சேரி. Show all posts

Wednesday, April 3, 2024

புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும்- இலக்குவனார் திருவள்ளுவன்

 




புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும்

நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் புதுச்சேரியில் கல்விக்கொள்கையில் மாற்றம் செய்து மத்தியக்கல்வி வாரியக்கல்வி முறையைப் புகுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். பொம்மைப் பதவியான ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசையால் அரசின் கல்விக் கொள்கையில் குறுக்கிட்டுப் புகுத்தப்பட்டதே இக் கொள்கை.

பா.ச.க. வின் வெளிப்படையான கொள்கையே நாட்டை இந்துமயமாகவும் இந்திய மயமாகவும் மாற்றுவதுதான். இதற்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை, ஒரே மொழி என்பனவற்றை வலியுறுத்தி வருகிறது; வாய்ப்புள்ள நேர்வுகளில் எல்லாம் அதற்கேற்பவே செயற்பட்டு வருகிறது.

இத்தகைய போக்கை நாம் தடுத்து நிறுத்த உதவுவதே வரும் நாடாளுமன்றத் தேர்தல். எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்வதுபோல் மீண்டும் பாசகவை வரவிட்டால் அடுத்துத் தேர்தல் வரும் வாய்ப்பே இல்லாமல் போகலாம். நாம் விழிப்பாக இருந்து நம் தேர்தல் கடமையை ஆற்ற வேண்டும்.

எதிர்க்கட்சிததலைவர்கள் சிறப்பாக உரையாற்றி வருகிறார்கள். நரேந்திரர் கூறும் பொய்களுக்கு உடனுக்குடன் சுடச்சுட எதிருரை வழங்குகிறார் மு.க. தாலின். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி, பழனிவேல் இராசன்,  அன்பில் பொய்யாமொழி, மனோ தங்கராசு முதலானோரும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.இரா.பாலு, ஆ.இராசா, கனிமொழி, வெங்கடேசன் முதலானோரும் ஒன்றிய ஆட்சியாளர்களின், அவர்களின் கூட்டாளிகளின் பொய்முகங்களைக் கிழித்து வருகிறார்கள். எனினும் இந்தித்திணிப்பு குறித்துக் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும். ஏனெனில் இந்தித்திணிப்பே இந்துமயத்திற்குப் பாதையாகும்.

ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு, இதில் கருத்து செலுத்த முழுத் தகுதியின்மையே இதுதொடர்பான பேச்சில் முழு எதிர்வீச்சு இல்லை எனலாம். தமிழ்நாட்டில் எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், வாய் தமிழ் வாழ்க என்று சொன்னாலும் செயல் தமிழை மறைப்பதாகவே உள்ளது.  3 அகவைச் சிறார் தமிழ், ஆங்கிலம், இந்தி படிக்கும் அவல நிலை உள்ளது. விருப்பப்பாடம் என்ற பெயரில்  பலருக்கு வெறுப்புப்பாடமாக உள்ள இந்தி திணிக்கப்படுகிறது. அரசு, புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகப் பேசினாலும் அதற்குப் பாய்விரித்துக் கொண்டுதான் உள்ளது. அரசின் முழக்கங்களிலும் முத்திரைகளிலும் இந்தியைக் காண முடிகிறது. தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஆங்கிலம் அரசோச்சுகிறது. இன்றைக்குக் பல கோடிக்கனக்கான விளம்பரத்தாள்களில் ‘திராவிட ‘மாடல்’ என்பதைக் காண முடிகிறது. மாதிரி என்றோ நன்முறை என்றோ முன் முறை என்றோ தமிழில் குறிப்பிட்டிருந்தால் அங்கெல்லாம் தமிழ்தானே பரவியிருக்கும். பெரும்பாலான திரைப்படங்களின் பெயர்கள் பிற மொழிப்படம் என எண்ணும் அளவிற்குத் தமிழைத் தொலைத்து நிற்கின்றன. இதழ்களிலும் காட்சி ஊடகங்களிலும் தமிழ் தேய்ந்து கொண்டே போகிறது. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

“திமுகவிற்கு எதிரானவன். எனவே இவ்வாறு கூறுகிறான்” என யாரும் கூற இயலாது.

மு.க.தாலின் ஆட்சி அமைத்ததும் பிறருக்கும் முன்னதாக அனைத்து இந்திய தமிழ்ச்சங்கங்களைக் கூட்டி வாழ்த்தரங்கம் நடத்தினோம்.  “முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின்”(17.06.21) எனப் பாராட்டினோம்.

தமிழ்ப்பரப்புரைக் கழகம் அமைத்த பொழுது “இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வர்” எனப் பாராட்டினோம்(25.09.22). அவரின் ஆளுமையை உணர்ந்ததால், “மாநில உரிமைகள் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்க வேண்டும்!” என வேண்டுகோளும் விடுத்தோம்(29.04.23). ஆட்சியில் இருக்கும்போது இவ்வாறு பாராட்டுவது இயற்கைதான் எனச் சிலர் எண்ணலாம். அதே நேரம், அரசின் மொழிக்கொள்கை குறித்துக் கண்டித்தும் எழுதியுள்ளோம். பாராட்ட வேண்டியதைப் பாராட்டியும் சுட்டிக்காட்ட வேண்டிய குறைகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டியும் நடுநிலையுடன் எப்பொழுதும் எழுதி வருவதை அனைவரும் அறிவர். மு.க.தாலின் எதிர்க்கட்சியில் இருந்த பொழுதே, இன்றைய அரசியலின் திருப்புமுனையாகச் செயல்பட்டு வருபவர் மு.க.தாலின் எனக் குறிப்பிட்டு “செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே!” என வாழ்த்தினோம்(26.02.2017). “மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக!” என இந்தியாவின் வழிகாட்டியாக மாற வேண்டினோம்(25.06.2017). அவர் செயல் திறனுக்காக “வல்லமையாளர் தாலின் வெல்க!”  என்றும் வாழ்த்தினோம்(04.09.2018) . இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டினோம்(15.10.2018). மு.க.தாலின் எதிர்க்கட்சியில் இருந்தபொழுது இநதியாவிற்கு வழிகாட்ட வேண்டும் என்று நாம் வேண்டியது நிறைவேறியுள்ளது.

“40 இல் 39 இடங்களில் வென்ற பொழுது மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக!” என வேண்டினோம்(26.05.2019). இவ்வாறெல்லாம் மு.க.தாலினைப் பாராட்டி வந்துள்ள நாம் இத்தேர்தலில் அவருக்கு வலு சேர்க்க வேண்டும். ஆனால், எந்த மொழிக் கொள்கைக்காக நாம் பாசகவைக் குற்றம் சாட்டுகிறோமோ அதே மொழிக்கொள்கையைப் பின்பற்றும் இவரை மட்டும் ஆதரிப்பது ஓர வஞ்சனையாகாதா?

தமிழ்நாட்டிற்குள்ளே தமிழ் மட்டுமே வெளித் தொடர்பிற்கு மட்டும் ஆங்கிலம் என இப்பொழுது இந்தியாக் கூட்டணியினர் அறிவிக்க வேண்டும். கல்விமொழியும் வழிபாட்டு மொழியும் அலுவலக மொழியும் தமிழ் மட்டுமே என்றும் அறிவிக்க வேண்டும். பாசகவின் மாநிலத்தலைவர் ஐந்து மொழிகளைக் கற்றுத்தருவதே கொள்கை எனப் பித்தர்போல் கூறுகிறார். வளரிளங்குழந்தைப் பருவத்திலேயே பித்துபிடிக்கச் செய்யும் வழியே இது. தலைமை யமைச்சர் தமிழ்நாட்டு மக்களுடன் நமோ செயலி மூலம் தமிழில் பேசுகிறார். இவ்வாறு பிறமொழிக்கான பயன்பாடு எளிதில் கிடைக்கும் பொழுது தேவையற்ற மொழிகளைப் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கக் கூடாது.  ஐந்தாம் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்பித்தால் போதும். மாநிலம், ஒன்றியம், தனியார், அயலகம் என்ற வேறுபாடின்றித் தமிழே தமிழ்நாட்டின் ஒற்றைப் பயன்பாட்டு மொழியாகத் திகழுவதற்குரிய அறிவிப்பை அரசு வெளியிடவேண்டும். அவ்வாறாயின் முழு வீச்சில் இவ்வணியினரை வெற்றி பெறச்செய்யலாம்.

அடுத்து, மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகப் பெயரிலேயே நாம் தமிழர் என்னும் உணர்வை ஊட்டும் நாம் தமிழர் கட்சி உள்ளது. குறைபாடுகளும் பிழைபாடுகளும் இக்கட்சியின் செயற்பாடுகளில் சில உள்ளன. எனினும் பிற கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அவை குறைவே. எனவே, இந்தியா கூட்டணிக்கும் பாசக கூட்டணிக்கும் எதிராக வாக்களிப்பவர்கள் வாக்குகளைச் சிதற அடிக்காமல் ஒலிவாங்கி முத்திரையில் வாக்களித்து நாம்-தமிழர் கட்சியை ஆதரிப்பது நமக்கு நல்லது. இக்கட்சி இரண்டாம் இடத்தைப் பிடிப்பது ஆளும் கட்சியினருக்கும் பிற கட்சியினருக்கும் விழிப்பு ஒலியாக – எச்சரிக்கை மணியாக – அமையும். ஆரவார முழக்கங்களில் கருத்து செலுத்தாமல் அழுத்தமான செயல்களில் கருத்து செலுத்தச் செய்யும்.

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.   (திருவள்ளுவர், திருக்குறள், 670)

என மக்கள் அரசியலாளர்களுக்கு உணர்த்த வேண்டும்.

தமிழ் நாட்டரசு தமிழ்நல அரசாகத் தொடருவதற்கும் ஒன்றிய அரசு தமிழையும் பிற தேசிய மொழிகளையும் ஒத்த நிலையில் நோக்கவும் இந்து மயம்,இந்தி மயம், வருணாசிரமத் திணிப்பு முதலியவை அற்ற குமுக நீதியை நாட்டு மக்கள் பெறவும் நம் வாக்குகளே உண்மையான கருவிகளாகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

பங்குனி 21, 2055 / 03.04.2024

Monday, January 9, 2017

கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 168,  மார்கழி 24,2047 / சனவரி 08, 201

கிரண்(பேடி)  – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா?
  துணைக்கண்டமாகத் திகழும்  இந்தியா என்பது அரசியல் யாப்பின்படி  இந்திய ஒன்றியம் என்றுதான்   அழைக்கப்பெற வேண்டும். பல்வேறு அரசுகளையும் தேசிய இனங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்ட அரசியல் நிலப்பகுதி என்பதால் இந்திய ஒன்றியம் எனப் பொருத்தமாக அமைத்து அழைத்துள்ளனர்.
  மத்திய ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரப் பசியாலும் தேசிய இனங்களைப் புறக்கணித்து ஒற்றை இனமாகக் காட்ட முயலும் போக்காலும், இந்தியா நடைமுறையில் ஒன்றிய அரசாகச் செயல்படவில்லை. இது குறித்துத் தேசிய இனங்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
  இந்தியா மக்களாட்சியை நடைமுறைப்படுத்தும் பல்வேறு மாநிலங்களை உருவாக்கினாலும் பண்பாட்டு மரபுகளைப் பேணவேண்டி சிறிய நிலப்பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டது. அவையே  இந்திய ஒன்றியப் பகுதிகளாகும்.   அவைதாம்,  அந்தமான் நிக்கோபார் தீவுகள்(Andaman and Nicobar Islands),இலட்சத்தீவுகள்(Lakshadweep),  சண்டிகார்(Chandigarh), தமன்-தையூ(Daman and Diu), தத்திரா – நகர்  அவேலி(Dadra and Nagar Haveli), புதுச்சேரி(Puducherry), தில்லி(Delhi)  ஆகியனவாகும்.
   இவற்றுள் புதுச்சேரியிலும் புதுதில்லியிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் சார்பாளர்களின் ஆட்சி நடைபெறுகிறது. எனவே, செயற்பாட்டாளர்(Administrator) மூலம் ஆட்சி  நடைபெறும் பிற ஒன்றியப்பகுதி்களையும் துணைநிலை ஆளுநர் மூலம் செயற்படுத்தப்படும் இவ்விரு மாநிலங்களின் ஆட்சிகளையும் வெவ்வேறு பார்வையில்தான் காண வேண்டும்.
  மாநிலத்திற்கு இணையான புதுச்சேரி, தில்லிப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சார்பாளர்களுக்கு முதல்வருக்கும் அமைச்சரவைக்கும் – முதன்மை அளித்து  இவற்றின்  துணைநிலை ஆளுநர்கள் செயல்பட வேண்டும். தேசியத்தலைநகர் பகுதி(National Capital Territory of Delhi)  என அழைக்கப்பெறும் தில்லியின் துணைநிலை ஆளுநர் மாநில அரசிற்கு எதிராக அடித்த கூத்துகளைக் கண்டித்து அதன் முதல்வர் அரவிந்து கெசுரிவால் (Arvind Kejriwal)பெரும் போராட்டம் நடத்தினார். மத்திய அரசின் எடுபிடியாகத் தொடர்ந்து இருக்க விரும்பாத அதன் ஆளுநர் நசீபு(சங்கு) (Najeeb Jung) மனச்சான்றிற்கு இடம் கொடுத்து விலகிவிட்டார்.
  ஆனால், புதுச்சேரியில் கிரண்(பேடி) துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல், மக்களாட்சி நெறிமுறைகளைக்  குழிதோண்டிப் புதைத்து வருகிறார்.
  மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் பாலமாக இருக்க வேண்டியவர் உருவாக்குவதோ அலங்கோலம்!
  இவர் இ.கா.ப. அலுவலராக இருந்தமையால் அதிகார ஆசை விடாமல் இருக்கி்ன்றார் போலும்!
  தத்திரா ஆட்சிச் செயற்பாட்டாளரும் இ.ஆ.ப.தான் ( மதுப்பு வியாசு / Madhup Vyas, I.A.S.)
    இலட்சத்தீவு ஆட்சிச்செயற்பாட்டாளரும் ஓய்வுபெற்ற இ.கா.ப. அலுவலர்தான்.(பரூக்கு கான் / Farooq Khan, I.P.S.) அவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளவில்லை.
  தில்லியில் இப்பொழுதும் இதுவரையும் இருந்த 25 துணைநிலை ஆளுநர்களில் நால்வர் இ.கு.ப. (I.C.S.), இருபதின்மர் இ.ஆ.ப. (I.A.S.) அலுவலர்களாக இருந்தவர்கள்தாம். மீதி ஒருவரும் படைத்துறைஅதிகாரி. பொதுவாக மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது சிக்கல் வராமல் இருந்திருக்கலாம் இ.ப்பொழுது புதுச்சேரியில் (தில்லியிலும்தான்) வெவ்வேறு கட்சி ஆட்சி இருப்பதால் இந்நிலை  என்றால்  ஆளுநர்கள் மத்தியஅரசின் ஏவலர்களாகச் செயல்படுகின்றனர் என்றுதானே பொருள்.
  மாநிலப்பேராயக் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததும் தில்லி சென்று வந்த கிரண்(பேடி) முன்னிலும்  தீரமாகத் தனது அதிகாரத்தைச் செயற்படுத்த முனைகிறார் என்றால், பா.ச.க.வின் ஏவுகணையாகச் செயல்படுகிறார் என்றுதானே பொருள்.
  அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அரசு ஊழியர்களிடம் நேரடித் தொடர்பு, மக்களிடம் நேரிடையான தொடர்பு கொண்டு, தானே எல்லாம், தனக்கே எல்லா அதிகாரமும் என்று செயல்பட்டால், தன்னுடைய அதிகாரப் பசிக்கு நாட்டை வேட்டையாடுகிறார் என நாட்டு நலனில் கருத்து கொண்டோர் கூறத்தானே செய்வர்!
  திறமையாலும் ஊடக வெளிச்சத்தினாலும் புகழுருபெற்ற கிரண்(பேடி), அதற்குக் களங்கம் நேரும் வகையில் நடந்து கொள்வதை உணரவில்லையா?
   ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்தியவர் கட்சி சார்பின்றி நடந்து கொண்ருந்தால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றிருப்பார். மதவெறிபிடித்த கட்சியில் சேர்ந்த பொழுதே இவரது பிம்பம் உடைந்தது.  இப்பொழுது தனக்கும் மக்களாட்சி  நெறிக்கும் கேடு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது முறைதானா?
  சிறை அதிகாரியாக இருந்து சிறைவாசிகளை நடத்தியதுபோல் மக்கள் சார்பாளர்களை நடத்தலாமா?
சிறைவாசிகளிடம் சீர்திருத்தச் செயற்பாடுகளை மேற்கொண்டதாகப் பேர் பெற்றவர் அமைச்சரவையை அடிமைபோல் நடத்தலாமா?
  நாட்டுநலன்  தொடர்பான உயரிய எண்ணம் எழுந்தது எனில், சிறந்த திட்டம் இருந்ததெனில், அவற்றை  முதல்வர் மூலம் அமைச்சரவையைத் தொடர்புகொண்டு செயற்படுத்துவதுதானே முறை!
  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  இருமுறை மத்திய அமைச்சராக இருந்தும் மும்முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தும் பட்டறிவு பெற்றவர். கிரண்பேடியோ அதிகாரியாக இருந்து ஆள்வோர் கட்டளைக்கிணங்கச் செயற்பட்டவர். கட்சிச்சார்பிலான பதவியில்  அமர்ந்துவிட்டாலே அவரைவிட வல்லவர் என்று பொருளல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதிகாரப் போட்டியை மறந்துவிட்டு இணைந்து செயல்பட்டால்தான் அவருக்கும் புதுச்சேரிக்கும் நல்லது என்பதை உணர வேண்டும்.
 கிரண்(பேடி)  கூறுவதுபோல் மாநில அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம்தான் மையம் கொண்டுள்ளது.  அவரது விருப்புரிமைப்படி நடந்துகொள்வதுற்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், விருப்புரிமை என்பது எப்பொழுது வரும்?  அதுவா? இதுவா? என மாறுபட்ட கருத்து வரும்பொழுது  எது என முடிவெடுக்கும் உரிமைதானே! தானாகவே “தடிஎடுத்தவன்தண்டல்காரன்” என்பதுபோல் தான் எண்ணுவதே  அதிகாரம் என்று பொருள்கொண்டு செயல்பட்டால் இந்திய அரசியல் யாப்பையே இழிவுபடுத்துவதாகத்தானே பொருள்!
 உண்மையிலேயே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்(பேடி)க்கு மக்களாட்சி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்ததெனில்,
  உண்மையிலேயே நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் எனில்
உண்மையிலேயே தன் பொறுப்பிலுள்ள புதுச்சேரி மாநிலத்தை முதலிடத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது எனில்,
  உண்மையிலேயே புதுச்சேரி மக்களை  உயர்ந்த இடத்தில் அமர வைக்க வேண்டும் எனற துடிப்பு இருந்தது  எனில்,
இவற்றுக்கான காலம் இனியும் இருக்கின்றது.  “மத்திய ஆட்சியின் ஏவலராகச் செயல்படாமல், புதுச்சேரி மாநிலக் காவரலாகச் செயல்படுவேன்” என்ற உறுதி கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியில் அமர்ந்துள்ள அமைச்சரவையுடன் ஒத்துழைத்து வழிகாட்டியும் வழி நடத்தியும் சிறப்பாகச் செயல்படட்டும்!
 புதுச்சேரி மக்கள் உணர்வுகளுடன் மோதி, அங்கிருந்து விரட்டப்படாமல்  நிலைத்து நிற்க  அதிகாரிகளுடனும் மக்களுடனுமான தொடர்புகளைத் துண்டித்துக்  கொள்ளட்டும்!
  புதுச்சேரியும் தில்லியும் தம் மாநில நலனுக்காகப் போராடிப் பிற மாநிலங்களும் இணைந்தால், மத்திய ஆட்சியும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதைப் பா.ச.க.வும் உணர வேண்டும்.
  அரசின் பணிகளால் சிறப்புற்ற கிரண்(பேடி) அம்மையாரே!
  ஆளுநர் பதவியிலும் சிறப்புற்று விளங்க உம்மை மாற்றிக்  கொள்வீர்களாக!
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (திருவள்ளுவர், திருக்குறள்  346)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 168,  மார்கழி 24, 2047 / சனவரி 08, 2017

Thursday, August 28, 2014

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

padam-puthuceri-muthirai03 thamizh valarppeer01
  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20 4, 2039 (செப்டம்பர் 2008) காலத்தில் இரண்டாம் முறையும் முதல்வராக ஆட்சி செய்தவர், வைகாசி 2, 2042 (16 மே 2011) முதல் மூன்றாம் முறையுமாக முதல்வராக உள்ளார். முதல்வராக இருந்து இதுவரை செய்யத் தவறியவற்றை, இப்போதைய முதல்வர் பதவி மூலம்ஆற்றித் தமிழ்ப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் தமிழ்நலம் சார்ந்த பணிகளுக்காகவும் தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பது புதுச்சரேி மக்களின் நீண்ட கால வேண்டுதலாகும். குறிப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் 32 ஆண்டுகளுக்கும் மேலாகப், பிற தமிழ் அமைப்புகளையும் இணைத்து, இதற்காகப் போரிட்டு வருகிறார்.
1992இல் கல்வித்துறையில் இருந்து பிரித்துத் தனியாகக் கலைபண்பாட்டுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறை சார்பில் திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், புதுவை சிவம், சங்கரதாசு சாமிகள், முதலான தமிழ்ப்புலவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விழா எடுப்பதும் கலைவிழாக்கள் நடத்துவதும் கலைமாமணி விருதுகள் வழங்குவதும் அறிஞர்களுக்கு நிதியுதவி வழங்குவதும் பாராட்டிற்குரியது.
இத்துறை நூலகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றின் துறையாகவும் செயல்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையான அலுவலக மொழி மேம்பாட்டிற்கான துறையும் இதுதான். எனினும் தமிழ் ஆட்சி மொழிக்கெனவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கெனவும் 90% தமிழ்மக்கள் வாழும்மாநிலத்தில் தனித்துறை இல்லாதது பெருங்குறையே! இதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் இதற்குப் பொறுப்புதான். மத்திய அரசும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கலாம். எனினும் மூன்றாம்முறை முதல்வராக இருக்கும் மாண்புமிகு ந.அரங்கசாமி உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தமிழ்வளர்ச்சித்துறையை உருவாக்க வேண்டும்.
அவ்வாறு உருவாக்கும் பொழுது தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டா. தமிழ்நாட்டில் 1971 இல் ‘தமிழ்வளர்ச்சி இயக்ககம்’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கும் பொழுது தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களை அமர்த்த வேண்டும் எனக் கலைஞர் திட்டமிட்டார். ஆனால்நாவலர், அவர்களுக்கு அலுவலகப் பட்டறிவு கிடையாது எனப் பணியில் உள்ளவர்களை அமர்த்த வேண்டும் என்று நடைமுறைப்படுத்திவிட்டார்.இதனால், இளங்கலை முதலான ஏதேனும் ஒரு பட்டத்தில் ஒரு பிரிவில் தமிழில் தேர்ச்சி பெற்றவர்கள், இத்துறை அலுவலர்பதவிகளுக்குத் தகுதியானவர்கள் என விதி வரையறுக்கப்பட்டது. இதனால் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று எழுத்துப் பணி பார்த்தவர்கள், தாங்கள் பட்ட வகுப்பில் தேர்ச்சி பெறும் வரை உரிய அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தடையாக இருந்தனர். (முதலில் தனி அலுவலர் என்றும் பின்னர், உதவி இயக்குநர் என்றம் இப்பணியிடப் பெயர்கள் அழைக்கப்பெற்றன.) இது தமிழ் வளர்ச்சித்துறையில்பணித்தேக்கத்தை உண்டாக்கியது. 1990 இல் கலைஞர் முதலமைச்சராகவும் பேராசிரியர் கல்வி அமைச்சராகவும் இருந்த பொழுது தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர்களைச்சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலும் முனைவர் பட்டங்கள் பெற்றவர்களைத் தமிழாய்வு அலுவலர்களாக அமர்த்தினார். (இவர்கள் பின்னர்த் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநா்களாக மாற்றப்பட்டனர்.) இதனால் தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் இன்னும் எழுத்துப்பணியினர் பதவி உயர்வில் இப்பதவியில் அமருவதற்குப் பட்ட வகுப்பில் ஒரு பிரிவு தமிழில் தேர்ச்சி இருந்தால் போதும் என்றுதான் உள்ளது. அதே நேரம் மத்தியஅரசிலும், வங்கிகள், அரசு நிறுவனங்கள், பிற மாநிலங்களிலும் இந்தி அலுவலர் பதவிக்கான கல்வித் தகுதி என்பது இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்திவழியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என உள்ளது. எனவே, மத்திய அரசைப் பின்பற்றிக் கல்வித்தகுதிகளை வரையறுக்க வேண்டும்.தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முதன்மை அளிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு என்று பார்த்தாலும் கடைசியில் இருந்து முதலாவதாகத்தான் தமிழ்வளர்ச்சித்துறை இருக்கும். ஆனால், மத்திய அரசில் போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பெறுகிறது. எனவே, தமிழ்ப்புலமையாளர்களை மதிக்கும் வகையிலும் தேவையான அளவிற்கான முழு நிதியை வழங்கியும் திட்டங்கள் தீட்டி, விதிமுறைகள் வகுத்துப் புதிய தமிழ்வளர்ச்சித் துறையை அமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி ஆய்வு என்பது உரிய அலுவலகம் தரும் புள்ளிவிவரத்தை, ஒரு கடைநிலை ஊழியர் பெற்றுவந்து குறிப்புரையைத் தட்டச்சிட்டு அளிக்கும் அளவிற்குத்தான் உள்ளது. அவ்வாறில்லாமல் செம்மையான நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் பணித்திட்டம் இருக்க வேண்டும்.
நூல் வெளியீடுகளுக்கு நிதியுதவி என்பது ஆண்டுவருவாய் வரம்பு25,000 என இருந்து 2011-12 ஆம் ஆண்டு ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளதுஇந்தி நூல்கள் வெளியீட்டு உதவிக்குவருவாய் வரம்பு இல்லை. இங்கும் மத்திய அரசே பின்பற்றக்கூடியதாக உள்ளது. எனவே, மத்திய அரசின் இந்தி வளர்ச்சித் திட்டங்களைப் போன்றசிறப்பான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதே நேரம், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் நல்ல திட்டங்களை அங்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

 news-puthucheri-tha.va.thu.01

அரசு முத்திரையில் தமிழ் இடம் பெறச்செய்வீர்!

தமிழ் வளர்ச்சித்துறையை உருவாக்குவதுபோல் புதுச்சேரி மாநில முத்திரையில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றை அகற்றி, ‘வாய்மையே வெல்லும்’ என்றும் ‘புதுச்சேரி அரசு’ என்றும் தமிழில் குறிக்க வேண்டும். ஒன்றியப் பகுதி என்பதால் இந்தியில் இருக்க வேண்டும் என்பது தவறு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அரசு முத்திரையில் சத்தியமேவசெயதே என உள்ளதை வாய்மையே வெல்லும் எனத் தமிழில் மாற்ற வேண்டினார். மூதறிஞர் இராசாசி சத்தியம் வேறு, வாய்மை வேறு என அவ்வாறு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் வாய்மையே வெல்லும் என்பதையே பேரறிஞர் அண்ணா நடைமுறைக்குக் கொணர்ந்தார்.
மாநிலத்தகுதி கேட்கும் புதுச்சேரி மக்கள் முதலில் மாநில அரசு முத்திரையில் தமிழ் இடம்பெற அரசை வலியுறுத்தி வெற்றி பெற வேண்டும். மாநில மக்களின் நலனுக்காகத்தான் மத்திய அரசே தவிர, மத்திய அரசின் நலன்களுக்காக மாநில அரசு அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும். எனவே, புதுச்சேரி முதல்வர் அரசு முத்திரையை உடனடியாகத் தமிழ் முத்திரையாக்க ஆவன செய்ய வேண்டும்.
எனவே, தமிழ் வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைத்தும் அரசு முத்திரையில் தமிழ்மட்டும் இடம்பெறச்செய்தும் புதுச்சேரி முதல்வர் வரலாற்றில் இடம் பெற வேண்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
ஆவணி 8, 2045 / ஆக.24, 2014  http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png



அகரமுதல41

Followers

Blog Archive