தொல்காப்பியப் பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்னும் அடியில் குறிப்பிட்டுள்ள ‘ஐந்திரம்’ என்பது தமிழ் நூலே. இது குறித்த கருத்துகள் அடிப்படையில் இக்கட்டுரையைக் காண்போம்.

இலக்கணம் அறியார் இலக்கண நூலை எங்ஙனம் எழுதியிருப்பர்?

ஐந்திரம் என்பதைச் சமற்கிருத நூலாகச் சிலர் திரித்துக் கூறுகின்றனர். அதை நம்பும் சிலரும் அவ்வாறே கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்னோ சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை. “ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துகளை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)” என்கிறார் மறைமலை அடிகள்(தமிழின் தனிச்சிறப்பு) அத்தகையவர்கள் தமிழர்களுக்கு முன்னோடியாக இலக்கண நூல் படைத்தனர் என்பது நம்பும்படியாகவா உள்ளது? தமிழ் முதலிய பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை மொழி பெயர்த்து வைத்துக் கொண்டு தங்கள் நூலே முதன்மையான என்று பொய் கூறும்  ஆரியத்தினர் இதிலும் அவ்வாறே பொய் கூறியுள்ளனர்.

எழுத்தமைப்பே இல்லாக் காலத்தில் எவ்வாறு இலக்கண நூலை உருவாக்கியிருப்பர்?

“ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டது” என்கிறார் பேரா.சி.இலக்குவனார்.  “பிராமணர்கள், தமிழ் நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர்.  பிராமணர்கள் அப்போது அங்கு வழக்கத்திலிருந்த தமிழ் வரி வடிவெழுத்துகளோடு சமசுகிருத ஒலிகளை வெளியிடக் கூடிய சில வடிவெழுத்துகளையும் சேர்த்துத் தமிழ் வரி வடி வெழுத்துகளைத் திருத்தி அமைத்தனர்” என்று திரு. எல்லிசு கூறுவதை எடுத்துக்காட்டாகத் தருகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி:  பக்கம்: 39).  மேலும், தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்தான் ஆரியர்கள் எழுத்து வடிவைத் திருத்தி அமைத்துக் கொண்டனர் என்றும் விளக்குகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி:  பக்கம்: 44). எனவே, தொல்காப்பியக் காலத்திற்கு முன்னர் ஆரியர்க்கு எழுத்து வடிவே இல்லாத பொழுது ஐந்திரத்தைச் சமற்கிருத நூலாகச் சொல்வது முழுப்பொய்அன்றி வேறில்லை.

ஐந்திறம் என்று சமற்கிருதச் சொல் எதுவும் இல்லை

ஐந்திறம் என்று சமற்கிருதச் சொல் எதுவும் இல்லை. ஐந்து – திறம்  = ஐந்திறம். ஐம்பால் என்பதுபோல் ஐந்திறம் எனப்பட்டது. ஆனால் சமற்கிருதத்தில் ஐந்து என்ற சொல்லோ திறம் என்ற சொல்லோ இல்லை. தமிழில் இருந்து சென்ற ‘பஞ்ச’ என்பதுதான் ஐந்தைக் குறிக்கும். பஞ்சு விளையும் பருத்திச் செடியின் பூ ஐந்து இதழ்களை உடையது. ஐந்து இதழ்கள் உடைய பிற பூக்களும் உள்ளன. ஆனால் மக்களின் உடைத் தேவைக்குரிய பஞ்சின் முதன்மையால் பஞ்சை நன்கு அறிந்திந்தனர். இந்தப் பஞ்சிலிருந்துதான் ‘பஞ்ச’ என ஐந்து என்னும் பொருளைக் குறிக்கும் சொல் சமற்கிருதத்தில்  தோன்றியது.    எனவே, முற்றிலும் தமிழ்ச் சொல்லாக ஐந்திரம் அல்லது ஐந்திறம் இருக்கும் பொழுது அதனைச் சமற்கிருதச் சொல்லாகக் கருதுவது முற்றிலும் தவறு. நூலின் பெயர் தமிழாக இருக்கும் பொழுது எங்ஙனம் ஐந்திறம் சமற்கிருத இலக்கணமாக இருக்கும். தமிழ்ப்பெயர்களை எல்லாம் மாற்றும் சமற்கிருதத்தார் ஐந்திறம் என்பதை மாற்ற இயலாமல் இலக்கண நூல் எனக் குறிப்பிடவே ஐந்திர வியாகரணம் என்றனர். சுருக்கமாக ஐந்திரம் என்று அழைக்கப்படுவதாகவும் அடுத்த பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர்.  எனவே, தமிழ்ப்பெயர் உடைய ‘ஐந்திறம்’ தமிழ் நூலே.

‘ஐந்திர’ என்னும் சொல்லின் பொருள்கள்

அகராதிகளில் ‘ஐந்திர’ என்னும் சொல் உள்ளது. ஐந்திர என்றால் சமற்கிருதத்தில் இந்திரனுக்குச் சொந்தமானது அல்லது புனிதமானது; இந்திரனிடம் இருந்து வருவது அல்லது தொடர்வது; இந்திரனுக்கு அளிக்கப்படும் பலியின் ஒரு பகுதி; ஐந்திரி என்பது  இந்திரனைக் குறிப்பிடும் ஒரு கூற்று; இந்திரனின் காலாண்டு; கிழக்கு; மார்கசிர்ச மாதத்தின் இரண்டாம் பாதியில் எட்டாவது நாள்; இந்திரனின் ஆற்றல்; ஒரு வகை வெள்ளரி; ஏலக்காய்; துரதிர்ட்டம் எனப் பொருள்கள். அச்சொல்லுக்கு இலக்கணத்தையோ இலக்கண வகையையோ குறிப்பிடும் எப்பொருளும் இல்லை.

தொல்காப்பியத்திற்குப் பிந்தையதே சமணம்

சிலர், ஐந்திரம் என்பதைச் சமணர் நூலாகக் கதை கட்டுகின்றனர். நூல்களின் காலங்களை எல்லாம் தவறாகவே காட்டும் ஆரியப் புரட்டை நம்பும் தமிழறிஞர்களும்  அதை நம்பி விடுகின்றனர். சமண சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரர் காலம் கிமு 539 – 467 ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு.10 ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. 7 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்பர் தொல்காப்பிய அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார். கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து  2010 இல் நடத்திய தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கத்தில் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என்று வரையறுத்துள்ளனர். அவ்வாறிருக்க தொல்காப்பியர் காலத்திற்குப் பிந்தைய காலத்தில் உருவான சமண சமயம்  தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருப்பதுபோல் சொல்வது பொருந்துமா? எனவே, அது தவறு என்பது நன்கு தெளிவாகிறது.

வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு

“இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவன் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் தொல்காப்பியம் – பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920 ஆண்டுகளாம்.” என்பது அடுத்த புரட்டாகும். ஆனால் இதை மெய்யென்று நம்பி, க.வெள்ளைவாரணனார், தொல்காப்பியம்(வரலாறு) என்னும் தம் நூலில் எடுத்தாண்டுள்ளார்.

 எழுத்தே உருவாக்காதவர்கள் எங்ஙனம் இலக்கண நூலை எழுதியிருக்க முடியும்? அதுவும் 64 சமற்கிருத இலக்கண நூல் உருவாகியிருக்க முடியும்?  எனவே, இதுவும் தவறேயாகும். காலங்களை முன்னதாகவே கூறும் வஞ்சகத்தாலும் எதுவும் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாக நிலைநாட்டும் கயமையாலும் இவ்வாறு தவறாகக் கூறப்பட்டுள்ளது.

ஐந்திரம் தமிழிலக்கண நூலே!

‘தொல்காப்பியம்’ என்னும் முகநூல் பக்கத்தில் ஐந்திரம் குறித்துப் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

ஐந்திரம் எனும் நூல் உண்மையில் தமிழிலக்கண நூலே! பண்டைத்தமிழ் இலக்கண நூல். (Ainthiram is an ancient treatise on Tamil Grammar, being the basic and source work for ancient extant Tamil Grammar, Tolkappiyam) உண்மையில் இந்திய மொழிகளுக்கு இலக்கணம் வகுக்க எடுத்துக்காட்டாக விளங்கியதும், பாணினி என்பானது வடமொழி யிலக்கணத்திற்குக் காலத்தால் மிகவும் தொன்மையானதுமாகிய முந்துதமிழ் இந்திய இலக்கணப் பொது நூலே அது (a pan Indian proto-Tamil Grammar, which set an example for later grammarians in different languages in ancient India, many centuries prior to Panini’s Sanskrit Grammar).

சரி, இந்த ‘ஐந்திரன் எனும் சொற்பிறப்பு பற்றி ஆராயுங்கால் என்ன தெரிகிறது?

 என்பது மேன்மை, உயர்வு போன்றவற்றைக் குறிப்பதாகும். இந்த ஐ என்பதிலிருந்தே ஐயன், ஐந்தன், ஐந்திரன் எனும் சொற்களும் பிணைந்துள்ளன. ஐந்திரன் எனும் சொல்லிலிருந்தே ஐந்திரம் எனும் சொல்லும் பிறந்துள்ளது. இதனை, புலம் எனும் சொல் புலத்தன் என்றும், புலந்தன் என்றும், பின்னர் அஃதே புலந்திரன் என்றும் திரிந்தமையையும், மாந்தன் எனுஞ் சொல் மாந்தரன் என்று திரிந்துள்ளமையையும் ஒப்புநோக்கி அறியலாம்.

இப்படி ஐந்திரன் என்பானால் இயற்றப்பட்ட தமிழிலக்கண நூலே ஐந்திரம் எனப்பட்டது. ‘ஐந்தன் எனும் பெயர் இன்றும் துளு மொழியில், ஐத்து, ஐந்தப்ப என்றும் வழங்கிவருகிறது. அதேபோல் பெண்பாற்பெயராக ஐந்தக்க, ஐந்தம்மா, ஐத்தை என வழங்கிவருதளையும் ஒப்புநோக்கினால், அனைத்தும் விளங்கும். இந்த ஐந்தரம் எனுஞ் சொல், ஒருவகைப் பனைமரத்தைக் குறிக்கிறது. இச்சொல் யாழ்ப்பாண வழக்கில் உள்ளதாகும். பனைமரத்தைக் குறிப்பதால் இது பனையன் என்னும் பொருளில் வழங்கப்பட்டிருக்கலாம். தொல்காப்பியர் தமக்கு முன்பே படிக்கப்பட்ட ஐந்திரம் என்னும் தமிழிலக்கணத்தை நன்கு கற்றவராதலால், முந்துநூல் மரபினைப் பேணிக் காத்துள்ளார்.

உரையாசிரியர்களின் தவறான உரை அடிப்படையில் தவறான விளக்கம்

உரையாசிரியர்களின் தவறான உரை அடிப்படையில் பின்வருமாறு ஐந்திரம் சமற்கிருத நூல் எனச் சொல்லப்படுகிறது. “இந்திரனால் செய்யப்பட்ட நூல் ஐந்திரம் என்னும் பெயர் ஏற்றது வடமொழி வழக்கு. ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்ற பனம்பாரனார் கூற்றுக்குச் சிவஞான முனிவர், ‘வட மொழியினும் வல்லனாயினான் என்பார் ஐந்திரம் நிறைந்த ‘தொல்காப்பியன்’ என்று பொருள் உரைத்தார். தொல்காப்பியர் காலத்தில் ஐந்திரமானது வடமொழியில் சிறந்த இலக்கண நூலாக விளங்கிற்று. இதையும் தொல்காப்பியர் நன்கு பயின்றிருந்தாராகலின் அவரை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று பனம்பாரனார் கூறினார்.” ஐந்திரம் என்பது சமற்கிருத மொழியில் எழுந்த நூல் என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார். இக்கருத்துகள் ஏற்கும்படி யில்லை. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்கத் திட்டமிட்ட அறிஞர் தொல்காப்பியர் நூற்றுக்கணக்கிலான தமிழ் இலக்கணப் புலவர்களை மேற்கோளாகச் சுட்டும் அறிஞர் தொல்காப்பியர்  வேற்றுமொழி இலக்கண நூலில் புலமை பெற்றுள்ளதாகக் கூறத் தேவையும்  இல்லை. இஃது ஒப்பிலக்கண நூலுமன்று. எழுதாக் கிளவியாகவும் பண்படா நிலையிலும் இருந்த தொல்காப்பியர் காலச் சமற்கிருதத்திலும் அவருக்கு முன்பும் சமற்கிருத இலக்கண நூல் இருந்ததென்பது ஆரியரின் வழக்கமான கட்டுக்கதையே! இக்கதையை நம்புவோரும் பிராமணீயத்தை உயர்த்துவதைப் பெருமையாகக் கொள்வோரும் ஐந்திரத்தை ஆரிய நூலாக்கி விட்டனர்.

‘விழுநூல்’ தமிழ் நூலே

விண்ணவர் கோமான் விழுநூல்” எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்  குறிப்பிடுவது ஐந்திரமாகவோ வேறு எந்த நூலாகவோ இருந்தாலும் அது முற்றிலும் தமிழ் நூலே. ஆரியச் சடங்கையே வேண்டா எனச் சொல்லும் தமிழ்த்தேசியப் பெரும்புலவர் இளங்கோவடிகள் வேற்று  மொழி நூலைப்பற்றிக் கூறியிருக்கத் தேவையுமில்லை.

தமிழ் ஐந்திரத்தைத் தழுவியே, வடமொழி இலக்கணங்களும் வடிக்கப்பட்டன

அத்திப்பட்டு முரளிதரன் என்பார் முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிந்துள்ளார்

“ஐந்திரம்” என்னும் நூலே, தொல்காப்பியத்திற்கு முந்தைய தமிழ் இலக்கண நூலாகும். இந்தத் தமிழ் ஐந்திரத்தைத் தழுவியே, வடமொழிகளுக்கு எழுத்துகளும், இலக்கணங்களும் வடிக்கப்பட்டன. வடமொழிகளான, மாகத, பாகத(பிராகிருத) மொழிகளின் இலக்கணங்களைக் கற்கப் புகுவோரெல்லாம் தமிழ் ஐந்திரத்தை முதலில் கற்றேயாக வேண்டும் என்னும் நிலை கி.பி.11 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்தது. இதனைக் கருநாடகத்தின் கொப்பளத்தில் கண்டெடுக்கப்பட்ட அருகச் சமயக் குரவர்களைப் பற்றிய கல்வெட்டொன்று உறுதிப்படுத்துகிறது.

மேற்சொன்ன கல்வெட்டில் கூறப்படும் இலக்கணப் பள்ளிகளில், “ஐந்திரமே” முந்தையதும், முதலாவதுமாகும். இது தொல்காப்பியத்திற்கு முந்தைய தமிழ் இலக்கணமானதால், வேதிய இலக்கணத்திற்கும் வேராயிருப்பது, “தமிழ் ஐந்திரமே” என்னும் உண்மை தெள்ளத் தெளிவாக விளங்கும்.”

கொப்பளக் கல்வெட்டில் குறிப்பிடப் பெறும் இலக்கணங்களில், “ஐந்திரம்”, தவிர்த்த பிற யாவும் மிகவும் பிற்காலத்தவையாகும். மேலும் மற்றொரு குறிப்பிடத்தக்க தன்மையாகப், பாகத மொழிக்கான இலக்கண நூலான காகந்திரத்தில்,”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”, என்னும் தொல்காப்பிய நூற்பா, பொருள் மாறாமல், வரிக்கு வரி அப்படியே காகந்திரத்தில், “அருத்த பதம் இதி ஐந்திரனாம்”, என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாகதமொழிக்கும் கூடத் தமிழ் ஐந்திரத்தை வைத்தே இலக்கணம் வகுக்கப்பட்டது என்பதற்கு இதை விட வேறு சான்றும் வேண்டுமோ? அது மட்டுமல்ல, அசோகன் காலத்திற்கு முன்பும் பின்புமாக, வடக்கேயிருந்து தமிழகத்திற்கு வந்த அருகர்கள் யாரும் யாதொரு எழுத்து வரிவடிவத்தையும் அறிந்திருக்கவில்லை. பழந்தமிழ் எழுத்துகளை, அருகர்களும், புத்தர்களும் தழுவிக்கொண்ட பின்னரே, “பிரமி” என்னும் வரிவடிவம் தோன்றியது. இந்த வரலாற்று உண்மை இன்று ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பட்டுள்ளது.

ஐந்திரம் என்பது ஐந்து பிரிவு இலக்கண நூல்

சிவமாலா என்னும் தளத்தில் ஐந்திரம் குறித்துப் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்திரம் – 5 branches of grammar

“இந்திரன் என்பவன் இயற்றியதே ஐந்திரம் என்று கூறுவாருண்டு. இந்திரனைப் பற்றிய கதைகளை நோக்கும்போது, அவன் இலக்கண நூல் வரைந்தான் என்று சொல்வது நம்பத் தகுந்ததாய் இல்லை. . . . .. இந்திர என்ற பெயருடன் ஐந்திர என்பது ஒலித்தொடர்பு உடையதுபோல் செவிப்படுவதே இந்தக் கதைகள் எழுவதற்குக் காரணம் எனலாம். இதைச் சிலர் வரலாறுபோல் சொல்லிக்கொண்டிருப்பது வேடிக்கை ஆகும். மேலும் சமற்கிருதத்துக்கு முற்காலத்தில் எழுத்துகள் இல்லை(John Kay;s History of India). வேற்று எழுத்துகளால் பின் அது எழுதப்பட்டது. “எழுதாக் கிளவி” என்ற சங்க இலக்கியத் தொடர், சமற்கிருதத்தைக் குறிக்கும்.

“எழுத்து, சொல்,பொருள் , யாப்பு, அணி என்ற ஐந்து இலக்கணம் தாம் “ஐந்திறம்” எனப்பட்டது. பண்டைக் காலத்தில், திறம் என்பது பிற சொல்லுடன் கூடிவருங்கால் “திரம்” என்று எழுதப்பட்டது என்று தெரிகிறது. திறம் என்பது விகுதியாகும் போதும், “திரம்” என்றே வரும். தமிழில் சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வரும். திறமும் அத்தகையதொன்று என்று தெரிகிறது. பாணிணியம் என்ற வடமொழி இலக்கணம், எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டையே கூறும். தொல்காப்பியம் ஐந்திலக்கணமும் கூறுகிறது.

எனவே ஐந்திறம்  – ஐந்திரம் என்பது ஐந்து இலக்கணம் என்பது குறித்ததாகலாம். இவ்வைந்து இயல்களிலும் தொல்காப்பியர் வல்லுநர் என்பதே “ஐந்திரம் நிறைந்த” தொல்காப்பியன் என்பதன் பொருள் என்று கூறுக.

புலவர் வீரபத்திரன் ஒப்பித்த ஐந்திரம்

கருமாரி தாசர் எனப்பெறும் புலவர் வீரபத்திரனால் சரசுவதி நூலகத்தில் பணியாற்றிய பொழுது ஐந்திரம் நூல் அங்கு இருந்ததாகவும்  அனைத்துப் பாடல்களையும் மனனம் செய்து வைத்திருப்பதாகவும் கூறினார். அப்போது சிற்பக்கல்லூரி முதல்வராக இருந்த கணபதி சிற்பி அவரைக் கூறச்செய்து இரண்டரை நூறாயிரம் பாடல்களை ஒலிப்பதிவாக்கினார். அவற்றிலிருந்து தொகுத்து ஐந்திரம் நூலை வெளியிட்டார். ஆனால் தமிழறிஞர்கள் பலர் இதனைத் தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடும் ஐந்திரமாக ஏற்கவில்லை. இருப்பினும் இது தமிழ் நூலே. மேலும் இதன் பதிப்புரையில் கணபதி சிற்பி ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டடக் கலை, இசைக் கலை, நாட்டியக் கலை ஆகிய ஐந்தினைக் குறிப்பிட்டு, இசைக் கலையில் இலக்கியக் கலை ஒன்றியது என்று சொல்லி, இந்த ஐந்து கலைக்குமான நூல் ஐந்திறம்  என்று விளக்கியுள்ளார். எனவே, இது செய்யுள் இலக்கணநூலல்ல.

இவ்வாறு ஐந்திரம் குறித்த வெவ்வேறு கருத்துகள் உள்ளன. இவை மேலும் இருப்பினும் சிலவே தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து ஆரியர்கள் எழுத்தே அறியாக் காலத்தில் உருவான ஐந்திரம் நூலைச் சமற்கிருத நூலாகக் கூறுவது அறிவிற்குப் பொருந்தாது. தொன்மையான தமிழ் இலக்கணத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட தொல்காப்பியத்தில் ஆரிய நூலின் புலமை தேவையுமில்லை. ஆதலின் ஐந்திரம் என்பது தமிழ் நூலே! தமிழ் நூலே! தமிழ் நூலே!

ஆசிரியர், அகரமுதல மின்னிதழ்  <www.akaramuthala.in >

thiru2050@gmail.com