Thursday, October 31, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 841-850 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

சட்டச் சொற்கள் விளக்கம் 841-850 : இலக்குவனார் திருவள்ளுவன்













(சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

841. Advisory Jurisdictionஅறிவுரை வரம்பு  

சட்டம் தொடர்பில் அரசியல் யாப்பின்படியான அமைப்பு அல்லது கீழ் நீதிமன்றம் மேல் நீதிமன்றத்தின் அறிவுரையை நாடலாம்.

நீதிமன்ற அறிவுரை என்பது நீதிபதியின் வழிகாட்டும் அறிவுரையே.  
சட்டமன்றம் அல்லது பொது அலுவலர்கள்  எழுப்பும் வினாக்கள் அடிப்படையில் அறிவுரை வரம்பு வரையறுக்கப்படுகிறது.  

அரசியல் யாப்பு பிரிவு 143 இன்படிக் குடியரசுத் தலைவர் பொது முதன்மை வாய்ந்த எது குறித்தும் கருத்துரை பெறுவது இன்றியமையாதது எனக் கருதுகையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுரையை நாடலாம். ஆனால், இந்த அறிவுரையை அவர் செவி மடுக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம். அஃதாவது உச்சநீதிமன்ற அறிவுரை குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது.

உச்ச நீதிமன்றம் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் கண்டிப்பதும் அறிவுரையே. சான்றாகப் பேரறிவாளன் தொடர்பில் மாநில அமைச்சரவையின் அறிவுரைக்குப் பின்னர்க் குடியரசுத் தலைவரின் அறிவுரையைத் தமிழக ஆளுநர் கேட்டது, பெருங்கண்டமான முன்னெடுத்துக்காட்டு(Dangerous Precedent for Federalism) என உச்சநீதிமன்றம் கண்டனை கூறியதும் (27.04.2022) அறிவுரையே.
842. Advisory Memo குறிப்போலை

எழுத்து மூலமான குறிப்புரை.  

ஒரு பொருள் குறித்து எழுத்து மூலமான அறிவுரையாகவோ ஒன்றைச்செய்யுமாறு பணிக்கும் எழுத்து மூலமான ஆணையாகவோ பணி செய்யாமை குறித்து வினா தொடுக்கும் கேள்வியாணையாகவோ நினைவூட்டலாகவோ  இருக்கலாம்.
843. Advocate  வழக்குரைஞர்

வழக்கறிஞர்  

நீதி மன்றத்தில் மற்றொருவர் வழக்கிற்காகப் பேசும் ஒருவர்.

வாதிக்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் தொடர்பாளராக இருந்து வாதிடும் வாதாளர்.  

மற்றொருவருக்காகக் குரல் கொடுப்பவர்.
844. Advocate, Senior  முதுநிலை வழக்குரைஞர்  

உச்ச நீதி மன்றம் அல்லது உயர்நீதிமன்றம், ஒருவரின் சட்டப்புலமையின் அடிப்படையில் அல்லது நுண்மாண் நுழைபுலப் பட்டறிவின் அடிப்படையில், தகுதியாளராகக் கருதப்படுகையில் அவரின் ஒப்புதலுடன் அவரை முதுநிலை / மூத்த வழக்கறிஞராகக் குறிக்கலாம்.  

வழக்குரைஞர் சட்டம் 1961(Advocates Act, 1961.) பிரிவு 16 முதுநிலை வழக்குரைஞர் குறித்து வரையறுக்கிறது.  

இளைய நிலையில் வழக்குரைஞர் எனக் குறிக்கும் நாம் முது நிலையில் வழக்கறிஞர் எனலாம்.

அகவை குறைந்தவர்களும் தம் சட்டப்புலமையாலும் வாதிடும் திறத்தாலும் முதுநிலை வழக்கறிஞராக ஏற்கப் பெற்றுள்ளனர்.
845. Advocate-General    (மாநிலத்) தலைமை வழக்குரைஞர்  

தலைமை வழக்குரைஞர் என்பவர் இந்தியாவில் மாநில அரசின் சட்ட அறிவுரைஞர் ஆவார்.  இப்பதவி இந்திய அரசியல் யாப்பின்(கூறு162)படி உருவாக்கப்பட்டது.   இப்பதவி ஒன்றிய அரசின் தலைநிலை வழக்குரைஞர்(Attorney General)  பதவிக்கு ஒத்ததாகும்.

மாநில ஆளுநர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக அமர்த்தப்படும் தகுதியுடைய ஒருவரைத் தலைமை வழக்குரைஞராகப்  பணியமர்த்துவார்.
846. Advocate-On-Record  பதிவு வழக்குரைஞர்  

உச்சநீதிமன்றத்தால் நடத்தப்படும் தேர்வில் வென்று, உச்சநீதிமன்றப் பதிவேட்டில் வழக்குரைஞராகப் பதிவு செய்யப்படும் வழக்குரைஞர், பதிவு வழக்குரைஞர் எனப்படுகிறார்.  

Record-பதிவுரு ஆவணம் என்று பொருள் கொண்டு பதிவுரு வழக்குரைஞர் எனக் குறிப்பது தவறு.  உச்சநீதிமன்றத்தின் பதிவேட்டில் பதியப்பெற்ற வழக்குரைஞர் என்றுதான் பொருள்.

  கட்சிக்காரர் சார்பாக நீதிமன்றத்தில் முன்நின்று அல்லது அவர் சார்பில் சட்டநடவடிக்கைகளில் ஈடுபட்டு,வாதுரைத்து நீதி காண முயலும் சட்ட அறிவுடன் உள்ள ஒருவர் வழக்குரைஞர் எனப்படுகிறார். அவர், வழக்குரைஞர் கழகத்தில் பதிந்தபின் வழக்குரைஞராகச் செயல்படுகிறார்.  

உச்சநீதிமன்ற விதிகளின்படி, பதியப்பெற்ற வழக்குரைஞர் மட்டுமே கட்சிக்காரர் / வழக்காளி சார்பில் நீதிமன்றத்தில் தோன்றவும் / முன் நிற்கவும் வழக்காளி சார்பில் செயல்படவும் உரிமை உடையவர். வழக்காளி பதியப்பெற்ற வழக்குரைஞர் ஒருவரை மட்டுமே தன்சார்பில் வாதாடச் செய்ய வேண்டும். – அபய் பிரகாசு சஃகாய் இலாலன் எதிர் பாட்டினா உயர்நீதிமன்றம், (Abhay Prakash Sahay Lalan vs High Court Of Judicature At Patna), 28.10.1997.
847. Advocatrix  பெண் வழக்குரைஞர்  

கிறித்துவத் தேவாலயத்தல் கன்னி மேரியையும் குறிக்கும்.

வழக்குரையாளி (advocatress) என்றும் குறிக்கப்பெறுவார்.
848. Advocatus Diaboliஅலகையின் வழக்குரைஞர்

  நம்பிக்கை ஊக்காளர்

  இந்த இலத்தீன் தொடரின் ஆங்கிலப் பொருள் Devil’s advocate என்பதாகும். devil என்பதைத் தமிழில் பழு, பழுஉ, இழுதை, அள்ளை, மாலம், கறங்கல், குணங்கர், கூளி, குணங்கு, சாத்தான், சைத்தான், சயித்தான், பசாசம், அறிவழி, அலகை, கருப்பு, அழன், முனி, அண்ணை, சவம், வெறி, இதி, பூதம், பூதராயன், குணுங்கு, வருக்கம், மீளி, இடம்பகம், சோகு, கடி, மருள், துணங்கை, பிடி, அணங்கு, பசாசு, மண்ணை, வேதாளம், பேய், பிசாசு, இணங்கு, நிழல், பைசாசம், அநிமேசம், கணம் எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள் தமிழல்லாச் சொற்களும் கலந்துள்ளன. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும் (திருக்குறள் 850) என்கிறார் திருவள்ளுவர். எனவே, நாம் இச்சொல்லைப் பயன்படுத்தி அலகையின் வழக்குரைஞர் எனலாம்.  

வழக்குப் பொருண்மையில் நாட்டமின்றி அல்லது உடன்பாடின்றி எதையாவது எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே வாதிடுபவரை இவ்வாறு கூறுகின்றனர். எனவே,  நம்பிக்கை ஊக்காளர் என்றும் அழைக்கின்றனர்.
849. aditio hereditatis
பரம்பரை அணுகுமுறை; பரம்பரை அணுகல்
 
மரபுரிமையர் அல்லது இறுதி முறியில் பரம்பரையர்க்கு உரிமை வழங்குதல்.

இலத்தீன் தொடர்
850. ad quantitatemவகைப்பாட்டு அளவு
வகைமை அளவு
 
அளவின்படி
 உருப்படியான
 விற்பனை விளம்பர அளவு
 
இங்கே உருப்படியான என்பது உருப்படியாக-பயனுறும் வகையில் – ஒன்றுமில்லை என்னும் பொருளில் குறிக்கப் பெறவில்லை. கணக்கிடக்கூடிய பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்லாகக் குறிக்கப் பெற்றுள்ளது.

சொத்து எல்லைகளின் சட்ட விளக்கத்தை வழங்கச் சுற்றியுள்ள சொத்து விவரம் பயன்படுத்தப்படுகிற
து

Saturday, October 26, 2024

‘நீராருங் கடலுடுத்த’ பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே என அறிவாளிகள்(!) உணரட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 





“நீராருங்கடலுடுத்த” என்னும் மனோண்மணியம் சுந்தரனாரின் பாடல் அருமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே! தமிழ்த்தேசியப் போர்வையில் திராவிடத்தை எதிர்ப்பவர்கள் அறியாமையால் இதனைத் திராவிட வாழ்த்தாகப் புரிந்து கொண்டு எதிர்க்கிறார்கள். இதன் மூலம் போலித் தமிழ்த்தேசியவாதிகள் ஆரியத்திற்குத் துணைநிற்கிறார்கள். அதே நேரம் ஆளுநர் இரவி போன்ற பா.ச.க. தலைவர்களுக்குத் திராவிடம் என்ற சொல்லே எட்டிக்காயாக இருப்பதால் இதனை எதிர்க்கிறார்கள்.

பாசக தலைவர் இரவி “திராவிட நல் திருநாடு” என்னும் தொடரை நீக்கியமை குறித்து ஏதும் கண்டிக்கவில்லையே அல்லது மறுப்பு தெரிவிக்கவில்லையே என நாளும் சிலர் கேட்டு வருகின்றனர். பாசக தலைவர் இரவிக்கு மறுப்பாகவும் கண்டிப்பாகவும் முதல்வர் தாலின் முதலான அமைச்சர் பெருமக்களும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டித்து விட்டனர். இனி நாம் கூற என்ன இருக்கிறது என்று கருதி அமைதி காத்தோம். பின் கருத்தை மாற்றிக் கொண்டோம். திராவிடத்திற்கு அஞ்சும் பாசகவினருக்கு மறுமொழி அளிக்கா விட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை எதிர்க்கும் அறியாப் பிள்ளைகளுக்கு விளக்கம் தரவேண்டியது கடமை அல்லவா? எனவே விளக்க வந்துள்ளோம்.

தமிழ்த்தேசியம் என்னும் போர்வையில் திராவிடத்தைப் பழிப்போர் “நீராரும் கடலுடுத்த” பாடலைத் திராவிடத் தாய் வாழ்த்து என்றும் தமிழ்த்தாய் வாழ்த்து அல்ல என்றும் தவறாகப் பரப்புகிறார்கள்நாம் தமிழர் சீமான் உண்மையை உணர்ந்தால் தன் தவறான கருத்தைத் திருத்திக் கொள்பவர். அவருக்காகவும் தமிழன்பர்களுக்காகவும் பிறருக்காகவும் இப்பாடலை விளக்க வேண்டியது நம் கடமையாகிறது.

தமிழ்த்தாயாகப் பாடப்படும் “நீராருங் கடலுடுத்த” பாடல், 1891-இல் சுந்தரனார் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில்  இடம் பெற்றுள்ளது.

‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ என்னும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியே இது. நம்மைப்போல் தமிழ்த்தாய் என அவர் கூறவில்லை.  தமிழைத் தெய்வமாகப் போற்றிப் பாடியுள்ளார். இஃது எங்ஙனம் திராவிட வாழ்த்துப் பாடலாகும்?

மிகச் சிறந்த உயர்ந்த பாடல் இந்தப் பாயிரம்.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே (1)

என்று நில மடந்தையைக் குறிப்பிட்டு அதன் முகமாகப் பரதக் கண்டத்தை விளக்கி அம்முகத்தின் நெற்றியாகத் தென்னிந்தியாவைக் குறிப்பிடுகிறார். தக்கணம் எனக் குறிக்கும் பொழுதே நாம் நினைக்கும் திராவிட நாடு வந்து விடுகிறது. அந்நெற்றியின் பொட்டாகத் ‘திராவிட நல் திருநாடு’ என்கிறார். திராவிட நாட்டைக் குறிப்பிட்டு மீண்டும் திராவிட நாடு என்பாரா? தெக்கணத்தில் சிறந்த திராவிட நல் திருநாடு என்பது தென்னிந்தியாவில் சிறந்து திகழும் தமிழ்நாடே! அப்பொட்டின் நறுமணமாக எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கைத்தானே குறிப்பிட்டு வாழ்த்துகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி ஆகிய ஐம்மொழி நாடுகளும், வடவரால் முறையே திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் ஆகிய பஞ்ச திராவிடம் என அழைக்கப்பெற்றன. கூர்ச்சரம் என்பது இன்றைய குசராத்தே. குசராத்தியர் தமிழ்க்குடும்ப மொழியினரே. இதன்படி நரேந்திரரும் அமித்து சாவும் தமிழ்க்குடும்ப மொழியினரே. எனவேதான் அவர்களை அறியாமல் உள்ளுணர்வால் அவ்வப்பொழுது தமிழின் உயர்வைப் பேசுகின்றனர்.

12-ஆம் நூற்றாண்டில் காசுமீரத்தில் கல்ஃகானர்  இராசதரங்கிணி என்னும் நூலை எழுதியுள்ளார். அதில் மேற்குறித்த ஐந்து பகுதிகளில் உள்ள பிராமணர்களைத்  திராவிடப் பிராமணர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் தமிழைத் திராவிடம் எனக் குறித்துள்ளதைக் காணலாம்.

“திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும்” என்கிறார் அறிஞர் ந.சி.கந்தையா, தமிழகம் என்னும் நூலி்ல். “தமிழ் என்னும் சொல் தோன்றிய காலத்தது; திராவிடம் என்பது பிந்தையது” என்கிறார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 279). எனவே, முன்னால் இருந்த தமிழைப் பின்னால் வந்த திராவிடம் குறித்ததில் வியப்பில்லை. திராவிடம் தமிழைக் குறிக்கும் வரலாறு பல கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன. திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்!(இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல நாள் 03.04.2016), திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான்!(கொளத்தூர் மணி, பெரியார் முழக்கம்,08.04.201), வி.இ.குகநாதன்- முகநூல், 02.04.2021; நமது வலைப்பூ, 13.04.2021, தோழர் தியாகு தாழி மடல் 175 முதலியவற்றிலும் காணலாம். எனவே, அவற்றை இங்கே விவரிக்கவில்லை. ஆனால் இவற்றின் அடிப்படையில் மனோண்மணீயம் குறிப்பிடும் திராவிடம் தமிழே என்பதை உணரலாம்.

எனவே, இனி நாம் பிற பாடலடிகளைப் பார்க்கலாம்.

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும் துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.” (2)

பல உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அளித்தாலும் பரம்பொருள் தன் நிலையிலிருந்து குன்றாமல் உள்ளது. அதுபோல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு எனப் பல மொழிகள் தமிழிலிருந்து தோன்றினாலும் தன் சீரிளமை குன்றாமல் தமிழ் உள்ளது; ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாமல் உள்ளது என வியக்கிறார். வியந்து தமிழ்த் தெய்வத்தைப் போற்றுகிறார். இங்கே எங்கே திராவிட வாழ்த்து வந்தது?

கடல் குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்

தொடுகடலை உனக்குவமை சொல்லுவதும் புகழாமே. (1)

ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்

அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே. (2)

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்

முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே. (3)

இவற்றின் பொருள் வருமாறு

கடலையே குடித்த ஆற்றல் மிக்கவர் குடமுனிவர் அகத்தியர். அத்தகு திறமை வாய்ந்த அகத்தியரே தமிழை அறிய விரும்பி் தமக்குக் குருவாக இறைவனை நாடினார். உன்னை அறிய விரும்பிய அகத்தியர் குடித்த கடலை உனக்கு எப்படி உவமையாகச் சொல்ல இயலும்? அஃது உனக்குப் புகழாகாதே!

சிவபெருமான் எழுதிக்கொடுத்த (”கொங்குதேர் வாழ்க்கை” எனத்தொடங்கும்) பாடலில் தமிழ்ப் புலவராகிய நக்கீரர் பிழை கண்டு இறைவனிடம் வினவினார்; அதற்கு விடையிறுக்க இயலாமல் இறைவனே விழித்தார். இறைவனாலே உணரப்படாத உனதிலக்கணத்தின் சிறப்பையும் அதன் அற்புதத்தையும் தமிழே எப்படிப் புகழ்வது!

ஆரியம் வரும் முன்பே உலகம் முழுதும் இருந்த மொழி தமிழே என வாழ்த்தும் பொழுது இது தமிழ் வாழ்த்துப்பாடலா அன்றி திராவிட வாழ்த்துப்பாடலா என்பதை அறிவுள்ளோர் சிந்திக்க வேண்டும்

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு

காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே. (04)

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்

உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே. (05)

இவற்றின் பொருள் வருமாறு:

சைவர்களுக்கும் சமணர்களுக்கும் இடையே அனல்வாதம் புனல்வாதம் எனச் சமயப் போர் நடைபெற்றது. அப்பொழுது  சைவத்தமிழ் பனுவல்களும் பிறமொழி சமணப் பனுவல்களும் வையை ஆற்றில் விடப்பட்டன. சமற்கிருத நூலாகிய அத்தி நாத்தி  எழுதப்பட்ட ஏடு, வையை ஆற்றின் நீரோட்டத்தை எதிர் கொள்ள முடியாமல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. தமிழ்ப் பனுவல்கள் நீரோட்டத்திற்கு எதிராகச் சென்று கரையை அடைந்தன. இந்நிகழ்வு தமிழானது வையை ஆற்றை மட்டும் எதிர்கொள்ளவில்லை. காலம் என்னும் ஆற்றையும் எதிரேறி பன்னேடுங்காலம் கன்னித்தமிழாய் நடைபோடும் என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது என்பதை விளக்குகிறது.

 அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபெருமான் கடையூழிக்காலத்தில் தன் பணியின் பொழுது ஏற்படும் களைப்பைப் போக்குவதற்குத் தமிழ்ப் பனுவலாம் திருவாசகத்தைத் தானே தன் கைப்பட ஒரு படி எடுத்துக்கொண்டார். அப்படி என்றால் தமிழே உன் சிறப்பை எவ்வாறு புகழ்வது!

தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை

மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே. (06)

சங்கக்காலப் புலவர் அவையின் சங்கப் பலகை தகுதியுடைய நூல்களை மட்டும் ஏற்கும். பிறவற்றைப் புறந் தள்ளும். எனவே, தகுதியுடைய நூல்களை மட்டுமே தமிழ் கொண்டுள்ளது என்னும் சிறப்பை உடையதன்றோ!

வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்

கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே. (07)

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்

கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். (08)

கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள்

வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்? (09)

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே. (10)

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்

உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி? (11)

மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்

கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.(12)

வடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் அறிவில்லாவரே எனத் தமிழின் உயர்வைச் சிறப்பிக்கிறாரே அன்றித் திராவிடத்தின் உயர்வை அல்ல! பத்துப்பாட்டில் மனம் பற்றியவர்கள் எள்ளளவும் இலக்கணச் சிறப்பு இல்லா ஆரிய மொழிமீது பற்றுக்கொள்வார்களோ? உலகப்பொது அற நூலாம் திருக்குறளை உணர்ந்தவர்கள் ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் ஆரிய மனு நூலை ஏற்பரோ? என்றெல்லாம் கேட்கிறாரே! இதை அறிந்தவர்கள் இதனைத் திராவிட வாழ்த்தாகக் கூறும் பே்தையராக இருப்பார்களா?

எனவாங்கு,

நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்

பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்

பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்

நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்

அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்

கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்

ஆயினும் நீயே தாயெனும் தன்மையின்

மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி

உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்

வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு

ஒள்ளிய சிறுவிர லணியாக்

கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்

அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே

சுமைநீ பொறுப்பதெவன் சொல்லாய்- நமையுமிந்த

நாடகமே செய்ய நயந்தால் அதற்கிசைய

ஆடுவம்வா நாணம் அவம்.

நீயே தாய் எனப் போற்றும் இப்பாயிரத்தை அறிந்தவர்கள் இதனைத் திராவிட வாழ்த்தாகக் கூறும் அறியாமையில் மூழ்குவரோ? உண்மையான முழுமையான தமிழ்த்தாய் என்பதைத் தெளிவார்களா?

தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்ற முழுப்பாடல்களையும் பார்த்து விட்டோம். தமிழைக் குறிக்கும் திராவிட நல் திருநாடு என்னும் தொடர் தவிர எங்கேனும் திராவிடத்தை வாழ்த்தியோ போற்றியோ இயல்பாகவோ ஏதும் குறிப்பு உள்ளதா? முழுக்க முழுக்கத் தமிழ்த்தாயைப் போற்றி வாழ்த்தத்தானே செய்துள்ளார் சுந்தரனார். தலைப்பே முதலில் குறிப்பிட்டவாறு தமிழ்த்தெய்வ வணக்கம்தானே!

எனவே, நீராருங் கடலுடுத்த பாடலை நீக்க வேண்டும் என்று யாரும் முழங்கக் கூடாது. அவ்வாறு முழங்குவோர் வாய்க்குப் பூட்டுப் போட வேண்டும். “ஆட்சிக்கு வந்தால் நீராருங் கடலுடுத்த பாடலை நீக்குவோம்” என்போர் யாரும் ஆட்சிக்கு வரவும் தேவையில்லை!

Tuesday, October 1, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 821-830 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

831. Advantage, Collateral  கூடுதல் ஆதாயம்  

ஓர் ஒப்பந்தத் தரப்பார், தம் வலிமையான பேரம் பேசும் ஆற்றலைப் பயன்படுத்தித் தனக்கு /தமக்கு ஆதாயமான/சாதகமான கூறுகளைச் சேர்த்துக் கொள்வது.

பெரும்பாலும் விகிதச் சமமற்ற முறையில் அவருக்கு வழங்கப்படும் நன்மைகளுக்கு மேல் கூடுதலாகப் பெறும் வகையில் விகிதத்தைச் சேர்த்துக் கொள்வது.

இவ்வாறு பெறும் கூடுதல் ஆதாயம்.
832. Adverse Commentஎதிர்மக் கருத்து  

யாரைப்பற்றியோ / எதைப்பற்றியோ சொல்லப்படும் அல்லது எழுதப்படும் எதிர்மறையான கருத்து.  

எதிர்மக் கருத்து என்றால் ஆர்வமுள்ள தரப்பினரால், வழக்கு தொடர்பில் எழுத்து மூலமாக அளிக்கப்படும் மறுப்பு அல்லது எதிர்ப்பு அல்லது பிற எதிர்மறையான  கருத்து.    

நேரிய (fair) முறையில் வழங்கும் கடன், நுகர்வோர் பாதுகாப்பு, குடிமை உரிமைகள் தொடர்பில் மன்பதை மறுமுதலீட்டுச் சட்டத்தின்படி (Community Reinvestment Act /CRA) உரிய மண்டல இயக்குநரோ அதிகாரியோ தெரிவிக்கும் கருத்துகள் எதிர்மக் குறிப்பிற்குள் வரா.  

adverse என்பதை எதிரான, எதிரிடையான, கெடுதலான, நேர்மாறான, கேடான, தீங்கான, பாதகமான, விரோதமான எனப் பலவகையிலும் குறிக்கின்றனர்.  பின்னிரு சொற்களும் தமிழில்லை.  

ஒருவரைப்பற்றிய எதிரான குறிப்பை அல்லது கருத்தைத் தெரிவித்துள்ளார் என்றால் கூறுபவர் கூறப்படுபவருக்கு எதிரானவர் என்ற பொருள் வருகிறது. கூறுபவர் நடுநிலையுடன் கூறும் கருத்து கூறப்படுபவருக்குக் கேடு விளைவிக்கலாம் அல்லது அவருக்கு எதிரானதாக இருக்கலாம். இங்கே எதிரிடை முதலான சொற்கள் கூறப்படுபவர் குறித்த கருத்து மதிப்பீடே தவிர, கூறுபவர் அவரை எதிரியாகக் கருதித் தெரிவிப்பதாகப் பொருளல்ல. எனவே, பொதுவாக எதிர்மக் கருத்து எனலாம்.

இதற்கு எதிரான positive remark என்பது சார்மக் கருத்து ஆகும்.
833. Adverse Easementஎதிர்மத் துய்ப்புரிமை  

பிறருக்கு உரிமையான நிலத்தில் குறிப்பிட்ட சில வரையறைக்கு உட்பட்டு வைத்திருக்கும் பயனுரிமை துய்ப்புரிமை எனப்படுகிறது.   உரிமையாளருக்கு எதிரான பயனுரிமையர் போக்கு எதிர்மத் துய்ப்புரிமை எனப்படுகிறது.
834. Adverse Enjoymentஎதிர்ம நுகர்வு  
நில உடைமையை அல்லது பயன்பாட்டைச் சொத்துஉரிமையாளருக்கு எதிராக வைத்திருத்தல் எதிர்ம நுகர்வு ஆகும்.
835. Adverse Party   எதிர்த்தரப்பு  

எதிர்த்தரப்பு என்பது வழக்கின்  மறுபக்கம்/எதிர்ப்பக்கம் உள்ள ஆள், ஆட்கள், அமைப்பு, அரசு, போன்றவை.
836. Adverse Possessionஎதிர்ம உடைமை  

ஒருவர், மற்றொருவரின் உடைமைக்குச் சட்டபூர்வ உரிமை கொண்டாடல் அதற்கு அவர், குறிப்பிட்ட காலம் அச்சொத்தின் உடைமையாளாக அல்லது இடத்தின் வசிப்பாளராக இருந்திருக்க வேண்டும்.  

பொதுவாகச் சொத்து என்பது நிலத்தையே குறிக்கிறது.  

எதிர்ம உடைமை கோருநர் அ) எந்த நாளில் உடைமையாளரானார் ஆ) உடைமைத்தன்மையின் இயல்பு என்ன? இ) உடைமையாக இருந்த விவரம் மறு தரப்பிற்குத் தெரியுமா? ஈ.) எத்தனைக்காலம் உடைமை நிலை தொடர்ந்துவருகிறது? உ.) அவர் உடைமைத் தன்மை வெளிப்படையாகவும் இடையூறின்றியும் இருந்தது என்பவற்றை ஆதாரங்களுடன் அளிக்க வேண்டும்.  

அத்துமீறி நுழைபவர், சட்டத்தின் கண்களுக்குக் குற்றவாளியாக இருந்தாலும் சட்டத்திற்கு எதிரான 12 ஆண்டுக்கால எதிர்ம உடைமை சட்டமுறையான உரிமை பெற வழி வகுக்கிறது.

அத்து என்பது எல்லை என்னும் பொள் கொண்ட தமிழ்ச்சொல்லே.

மெது என்பது மெத்து என ஆனதுபோல் அது என்பதிலிருந்து அத்து வந்ததாகச் செ.சொ.பி.அகரமுதலி கூறுகிறது. ஆனால் முடிவு என்னும பொருள் கொண்ட அற்றம் என்னும் சொல்லே அத்தம் ஆகி அத்து ஆனது.
837. Adverse Remarksஎதிர்மக் குறிப்புகள்  

ஓர் அதிகாரியின் பணித்தரம், அவரின் பணியிலுள்ள குறைகள், தகுதிக் குறைபாடுகள், செயல்திறனின்மை ஆகியவை குறித்த மேலலுவலரின் குறிப்புகள் எதிர்மக் குறிப்புகள் எனப்படுகிறது.  

adverse remark என்பது குறையுரை, எதிரான குறிப்புரை, குறைதெரி குறிப்புரை எனக் கூறப்படுகின்றது. எதிர்மக் கருத்து/adverse comment காண்க. அதில் குறிப்பிட்டவாறு எதிர்மக் குறிப்பு எனலாம்.
838. Adverse Title    எதிர்ம உரிமையம்  

எதிர்ம உரிமையம் வைத்திருப்பவர், அதனை உரிமையின்றி வைத்துள்ள(ஆக்கிரமித்துள்ள)வருக்கு எழுத்து மூலமான அறிவிக்கை அளிப்பதன் மூலம் பின்னவரின் உரிமையத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும். – மார்லோ எதிர் இலிட்டர்[Marlow v. Liter, 87 Mo. App. 584, 589 (Mo. Ct. App. 1901)]  

மற்றோர் உரிமைக்கு எதிராக உள்ள உரிமையம் எதிர்ம உரிமையம்.

பாதக நிலையில் உள்ள உரிமையமும் எதிர்ம உரிமையம் ஆகும்.  

தொழில் அல்லது வருவாய் தரும் செயலைத் தொடங்க உரிமை அளிப்பது உரிமம்(license). நில உடைமைக்கு உரிமை அளிப்பது உரிமையம்(பட்டா/title).
839. Adverse Witnessஎதிர்ச்சான்றர்  

எதிர்ச்சான்றர் என்பவர் எதிர்த்தரப்புச் சான்றர் அல்லர்.   ஒரு தரப்பு சான்றர் எதிர்த்தரப்புடன் இணைந்து அவர்பக்கம் சாய்ந்து சான்று கூறுபவராக மாறுவது. இதனால் பிறழ் சான்றர் (hostile witness) என்றும் கூறப்படுகின்றார்.  

பிறழ் சான்றரைக் குறுக்கு உசாவல் செய்யும் உரிமையும் கண்டனச்சாட்டு தெரிவிக்கும் உரிமையும் முறையான உசாவலுக்கும் உரிய வழக்காடலுக்கும் இன்றியமையாதன.

மேலும், முன்னெடுப்பு வினாக்களால் பிறழ்சான்றரை உசாவலாம்.
840. Adviceஅறிவுரை  

என்ன செய்ய  வேண்டும் என்பது குறித்துத் தெரிவிக்கும் நல்லுரையே அறிவுரை.  

வழக்குரைஞர்களின் சட்ட அறிவுரைகள் வழக்கு தொடுப்பவருக்கும் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கும் இன்றியமையாதவை.

தேவைப்படும் சூழல்களில் நீதிபதிகளும் வழக்காளிகளுக்கு அறிவுரை கூறுவது இயல்பான ஒன்றாகும்.  

ஒருவர் இயல்பாகத் தானாகவும் தான்செய்ய வேண்டியது குறித்த கருத்திற்காகத் தானாகவும் மற்றொருவரிடம் அறிவுரை பெறலாம்.

ஒருவர் மற்றொருவர் கேட்டும் உரிமை அடிப்படையில் கேளாமலும் அறிவுரை வழங்கலாம்.  

இன்ன வகைகளில் செயல்பட வேண்டும் எனக் கருத்து தெரிவிக்கப்படுவதால் வகையுரை என்றும் கூறுவர். எனினும் பொதுவாக அறிவுரை என்ற சொல்லையே கையாளலாம்.

Followers

Blog Archive