Showing posts with label கலைச்சொற்கள். Show all posts
Showing posts with label கலைச்சொற்கள். Show all posts

Monday, June 8, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்

      09 June 2026      



(சட்டச் சொற்கள் விளக்கம் 1056-1060: தொடர்ச்சி)

1061. Appropriate levels  தக்க நிலைகள்

பொருத்தமான நிலைகள்

உரிய நிலைகள்

சட்டச் சொல்லாடலில், “பொருத்தமான நிலைகள்” (appropriate levels) என்றால் பொதுவாகச் சட்ட முறையிலான தரநிலைகள் அல்லது அதிகார வரம்புப் படிநிலைகளை அஃதாவது வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களின் நிலைகளைக் குறிக்கிறது. சட்ட நடைமுறைகளைச் சரியாகக் கையாள்வதற்கு, ஒரு வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பதையும், அதில் எதை மெய்ப்பிக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்வது மிக இன்றியமையாததாகும்.
1062. Appropriate proceedings  தக்க செயலாணைகள்‌

பொருத்தமான செயல்முறைகள்‌

உரிய நடவடிக்கைகள்‌


சட்டமுறையிலான, பொருத்தமான தக்க  செயலாணை என்பது  உரிமையை நிலைநாட்ட, தகராற்றை முடிவாக்க அல்லது ஒரு வழக்கைத் தீர்வு செய்யத் தேவைப்படும் சரியான, சட்டப்பூர்வமாக ஏற்கப்பெற்ற சட்ட நடவடிக்கை, தீர்ப்பாயச் செயல்முறை அல்லது வழிமுறையைக் குறிக்கிறது.


சரியான அதிகார வரம்பு, நடைமுறை விதிகளைக் கொண்ட தக்க நீதிமன்றம் அல்லது ஒழுங்குமுறை அமைப்பைத் தரப்பினர் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

மண விலக்கிற்காக உரிமையியல் நீதி மன்றததை நாடாமல் குடும்பநல மீதி மன்றத்தை நாடுவது போன்று தக்க நடவடிக்கையைத் தேர்ந்தெடுத்தல்.
1063. Appropriation Bill  நிதி ஒதுக்களிப்பு வரைவம்

நிதி ஒதுக்களிப்புச்‌ சட்ட முன்வடிவு

நிதி ஒதுக்க முற்சட்டம்

Bill என்பதற்கு வேறு சொற்களைக் கையாள்வதை விட வரைவம் என்றே சொல்லலாம்.

ஒதுக்கீட்டு வரைவம் (சட்ட வரைவு) என்பது, ஒரு நிதியாண்டிற்கான ஏற்கப்பெற்ற செலவினங்களை  எதிர்கொள்வதற்காக, அரசாங்கம் தனது பொதுக் கருவூலத்திலிருந்து நிதியை எடுத்துச் செலவிட அதிகாரம் அளிக்கும் முன்மொழியப்பட்ட சட்ட நடவடிக்கையாகும்.  

இந்தச் சட்ட ஆவணம் நிறைவேற்றப்படாமல், பணிஆளுமை (நிருவாகம்) பொது நிதியைச் சட்டமுறைப்படி எடுக்க முடியாது.
1064. Approval    ஏற்பு

ஒப்பு

சட்டத்தில், ஒப்புதல் என்பது ஒரு செயல் அல்லது ஒப்பந்தத்தைச் சரிபார்ப்பதற்காக, அதிகாரமளிக்கப்பெற்ற தரப்பு, நீதிமன்றம் அல்லது ஒழுங்குமுறை அமைப்பால் வழங்கப்படும் முறையான உறுதிப்படுத்தல், ஏற்பு அல்லது வெளிப்படையான இசைவு ஆகும். ஒரு குறிப்பிட்ட முடிவு சட்டமுறையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பு, அது மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பெற்று, சட்டப்படி மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது.

இது பல குறிப்பிட்ட செயற்பாடுகளையும் சூழல் களையும் உள்ளடக்கியது. மத்திய வருவாய் வாரியங்கள் சட்டம், 1963-இன் பிரிவு 8(2) (S. 8(2) CBRA, 1963 – Section 8(2) of the Central Boards of Revenue Act, 1963) ஒரு காப்பு விதியாகும்(saving clause). இவ்விதியில் ஏற்பு குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1065. Approved    ஒப்பேற்பளிக்கப்பட்ட

ஏற்பளிக்கப்பட்ட

சட்டத்தில், ” ஒப்பேற்பளிக்கப்பட்டது” அல்லது “ஏற்பளிக்கப்பட்டது” என்றால்,   ஒரு செயல், ஆவணம் அல்லது ஒப்பந்தத்தை ஒரு தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது, அல்லது உறுதிப்படுத்தியுள்ளது என்பதாகும். ஒரு முன்மொழிவு , தேவையான அனைத்துச் சட்டத் தரநிலைகளையும் பூர்த்திசெய்து, செயல்படுத்துவதற்கோ கட்டுப்படுத்தும் பயத்தலுக்கோ (effect) சரிபார்க்கப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. Effect = விளைவு என்றால் தீய விளைவு என்றே பெரும்பாலு ம் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே, இந்த இடத்தில் தவறான பொருள் தரலாம். Effect என்பதற்குப் பயன் தருதல், நன்மை பயத்தல் என்றும் பொருள்கள் உள்ளன. வியத்தல் அடிப்படையில் வியப்பு என்பது போல், பயத்தல் அடிப்படையில் பயப்பு என்பர். பயப்பே பயன் ஆம் (தொல்காப்பியம், நூற்பா 790) என்கிறார் தொல்காப்பியர். எனவே effect என்பதற்குப் பயப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.

Monday, April 21, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 : இலக்குவனார் திருவள்ளுவன்)

956. At largeகட்டுப்பாடின்றி

கட்டுப்பாடற்று  

பொதுவாக  

பேரளவில்  

பொதுவாக நாம் large என்றால் பேரளவு அல்லது  பெரிதான என்னும் பொருள்களில்தான் எண்ணுகிறோம்.   தடையற்ற நிலை, தற்சார்பு(சுதந்திர) நிலை, அகல்விரிவு, அகல்விரிவான, முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு, பரவல் நிலை, தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை, குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை, முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம், பரந்தகன்ற, ஏராளமான, வளமான, பலவற்றை, உள்கொள்ளவல்ல, எல்லாம் தழுவுகிற, தாராளமான, ஈகைக் குணமுடைய, அன்பாதரமிக்க, பரந்த நோக்கமுடைய, குறுகிய நோக்கமற்ற, ஒருசார்பற்ற, தப்பெண்ணங்களுக்கிடங் கொடாத, பெரும்போக்கான, பெருமிதமான, பெருமதிப்புடைய, பெருமை சான்ற, முதன்மைத்துவம் வாய்ந்த, தற்பெருமையுடன் நடக்கிற, தங்குதடையற்ற, கட்டற்ற, கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த, (வினையடை) பகட்டாக, (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக எனப் பல பொருள்கள் உள்ளன.    

 the people at large – மக்கள் அனைவரும்
A large open space – ஏகப்பெருவெளி
the robbers at large – கைப்பற்றப்படாத கொள்ளையர்கள் என்னும் பொருளாகும்.  

சகடை என்னும் பெரு முரசையும் குறிக்கும்.  

பொதுவாகப் பேரளவு என்பதை உட்பொருளாகக் கொண்டு விரி பொருளில் (பேரளவிலான) பொதுமக்கள், (பேரளவிலான-பரந்த அளவிலான) சார்பாண்மை உடையவர்கள்,(பேரளவிலான) குற்றவாளிகள் என வரும்.   சட்டச் சூழலில்,  பொதுவாக விடுநிலையான(சுதந்திரமான), கட்டுப்பாடற்ற அல்லது ஒரு குறிப்பிட்ட இடம், ஆள் அல்லது செய்தி அல்லது பொருண்மைக்கு மட்டுப்படுத்தப்படாததைக் குறிக்கிறது. இது , காவலில் இல்லாத ஒரு குற்றவாளியைப் போல, கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றையும் குறிக்கலாம்.  

பெருமளவில் மக்கள் அல்லது குற்றவாளிகள் திரண்டிருக்கும பொழுது கட்டுப்பாடற்ற நிலை வந்து விடுகிறது. எனவே, அப்பொருளைக் குறிக்கிறது.  

criminals, unlawfully at large என்னும் பொழுது (சட்டத்திற்குப் புறம்பாகத்) தடுப்புக் காவலுக்கு மீளாதிருக்கும் குற்றவாளிகள் எனப் பொருளாகும்.  

அரசாங்கச் சூழலில், ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது மாவட்டத்தை மட்டுமல்லாமல், முழு அதிகார வரம்பையும் சார்பாண்மைப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளைக் குறிக்கும்.
957. At leastமீச்சிறு  

அறச்சிறிது  
அறச்சிறிய  
மிகமிகக் கொஞ்சமான  
மிகமிகக் கொஞ்சமாக  
மிகமிக அற்பமான  
மிகமிகக் குறைவாக  


குறைந்தது, குறைந்த
என அகராதிகளில் இடம் பெற்றுள்ளது. less என்றால் குறைந்தது எனலாம். இச்சொல் மிகச்சிறியதைக் குறிக்கிறது. எனவே, மீச்சிறு என்னும் சொல்லையே பொதுவாகப் பயன்படுத்துவதே சிறப்பாகும்.  

வழக்கு மன்றத்தில் இச்சொல் இடம் பெறுவதற்கு எடுத்துக்காட்டு:   வழக்கு ஒத்திவைப்பு நாளுக்கு மீச்சிறு இடைவெளியே உள்ளது. ஆதலின் மேலும் போதிய கால வாய்ப்பு வேண்டும்.  
958. At logger headsமுற்றிலும் கருத்து வேறுபாட்டில்  

வலுவான கருத்து வேறுபாட்டில்  

ஒவ்வாத நிலையில்    
சச்சரவிடும்‌ நிலையில்‌ [சச்சரவு தமிழ்ச்சொல்லே(செ.சொ.பி.அகரமுதலி)]    

சட்டத் துறையில் இத்தொடர்  துறைக்குள் உள்ள தனியர்கள் அல்லது குழுக்கள் கடுமையான கருத்து வேறுபாடு அல்லது மோதலில் உள்ளனர் என்பதைக் குறிக்கிறது.  ஒருவேளை இக்கருத்து மோதல், ஒரு சட்ட வழக்கு, கொள்கை அல்லது உத்தி தொடர்பாக இருக்கலாம்.

இது ஒரு சூடான தகராறு அல்லது கடுமையான எதிர்ப்பின் நிலையைக் குறிக்கிறது. இவர்களைச் சண்டை யிடுபவர்கள் அல்லது கலகக்காரர்கள் என்பதை விடக் கடும் கருத்து மோதலில் உள்ளவர்கள் எனக் குறிக்கலாம்.
959. At parஇணையாக  

சம விலையில்  

கட்டணமின்றி

கட்டணமில்லா   

சமமாக  

சமநிலை  

நேரிதாக          

முகமதிப்பின்படி  

சட்டத் துறையில், “சமமாக” என்பது பொதுவாக ஒரு சட்ட ஆவணம் அல்லது ஆவணத்தின் முக மதிப்பு (அல்லது பெயரளவு மதிப்பு) அதன் உண்மையான சந்தை மதிப்பு அல்லது விற்பனை விலைக்கு சமமாக இருக்கும் சூழ்நிலையைக் குறிக்கிறது.  

இது பரிமாற்றப் பட்டியல்கள் அல்லது இருப்புகளின் பங்குகள் போன்ற ஆவணங்களின் அடிப்படையில்  சட்டச் சூழல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
960. At randomநிரலின்றி/ நிரலற்ற  

இதற்கு  
ஒழுங்குமுறையின்றி
வரிசை முறையின்றி
அங்கொன்றும் இங்கொன்றுமாக குறிப்பின்றி
நோக்கம்-போல
தற்போக்காக
விதிக்கட்டின்றி
முறையின்றி
நேர்ந்தவாக்கில்  
எனப் பலவாறாகக் கூறப்படுவன யாவும் சரியானவையே. எனினும் சீராகவும் சுருக்கமாகவும் நிரலின்றி என்றே பயன்படுத்தலாம்.  

சட்டத் துறையில், “நிரலின்றி / நிரலற்ற ” என்பது சட்டப் பணிகளுக்கான நிரலற்ற தேர்வு, சட்டக் குழுக்களின் நிரலற்ற ஒதுக்கீடு அல்லது நீதிபதிகளுக்கு நிரலற்ற வழக்குகளை ஒதுக்குதல் முதலான பல சூழ்நிலைகளைக் குறிக்கிறது.  

இது நீதிமன்றத் தீர்ப்புகளின் கணிக்க முடியாத தன்மை அல்லது சில சட்ட செயல்முறைகளின் நிரலற்ற தன்மையையும் குறிக்கலாம்.  

சில நடுவர் தீர்ப்பு நடவடிக்கைகளில், நிரலற்ற முறையில் வழக்குகள் வெவ்வேறு நடுவர்கள் அல்லது நடுவர் தீர்ப்பாயங்களுக்கு ஒதுக்கப்படலாம்.  

சில அதிகார வரம்புகளில், செம்மை அல்லது நடுவுநிலையற்ற தன்மையை உறுதி செய்வதற்காக, நீதிமன்ற வழக்குகள் நிரலற்ற முறையில் வெவ்வேறு நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படலாம்.  

(தொடரும்)

Friday, April 18, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 : இலக்குவனார் திருவள்ளுவன்

சட்டச் சொற்கள் விளக்கம் 




(சட்டச் சொற்கள் விளக்கம் 946-950 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

951. At an early dateமுன்னதான நாளில்  

விரைவிலேயே; கூடியவிரைவில் என இப்போது குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குறிப்பது பொதுவான விரைவைக் குறிக்கும். அஃதாவது  எந்த நாளும் குறிப்பிடாத பொழுது விரைவில் முடித்துத் தர வேண்டுவது. ஆனால், At an early date என்றால் முன்னதான நாளில்.  

ஒரு நாள் குறிக்கப்பெற்ற பின்னர் அதற்கு முன்னர் வேண்டுவது. சான்றாக வழக்கு நாள் குறித்த பின்னர் அதற்கும் முன்னதான நாளை வேண்டும் பொழுது சற்று முன்னதான நாளில் வழக்கு நாளை வேண்டுவது. அல்லது குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டுவது.   

as soon as possible – இயன்ற விரைவில், கூடிய விரைவில் என்பது பொதுவான தொடரே ஆகும்.  

Early  என்றால் தொடக்க நேரத்துக்குரிய, தொடக்க காலத்துக்குரிய, தொடக்கத்தை அடுத்த, முற்பகுதி சார்ந்த, முந்திவந்த, முற்பட்ட, முந்துற எழுந்த, முன்கூட்டிச் சித்தமான, முற்காலத்திய, தொலை இறந்தகாலத்திய, அணிமை வருங்காலத்திய, (வினை) குறித்த காலத்துக்கு முன், முன்கூடடி, சரியான நேரத்தில், விரைவில், முந்தி, முற்பட, தொடக்கத்தில், தொடக்கத்தை அடுத்து, முற்பகுதியில், காலை நேரத்தில், விடியற்காலததில் எனப் பல பொருள்கள். எனினும் இங்கே முன்கூட்டி என்பதே சரிானது.  

Date என்றால் நாள் என்றுதான் பொதுவாகப் பொருள்.  இடத்திற்கேற்றாற் போல் நாளிடு, காலங்குறிப்பிடு, காலக்குறிப்பு முதலான பொருள்களும் உண்டு. எனினும் இந்த இடத்தில் வழக்கத்திற்கு முன்னதான நாள், எதிர்பார்த்ததற்கு முன்னதான நாள் என்ற பொருளில் வருகிறது.   எனவே, முதலில் குறிப்பிட்டாற்போல் முன்னதான நாள் என்பதே சரியாகும்.

தீர்ப்பு அல்லது வழக்கு நாள் வழக்காளியின் பயணம், மருத்துவமனை சேர்க்கை போன்ற காரணங்களால் குறிப்பிட்ட நாளுக்கு முன்னராகவே வேண்டுவது இதுவாகும்.  

செயற் திட்டத்தை அல்லது பயணத்திட்டத்தை முன்னதாக முடிக்குமாறு வேண்டுவது போன்று பிற இடங்களிலும் வரும்.  
952. At any rateஎவ்வாறிருப்பினும்  

எப்படியும்‌;
எஃது எப்படி ஆனாலும்‌;
வேறு எவை நிகழ்ந்தபோதிலும்; மற்றவை எப்படியானாலும். எப்படியிருந்த போதிலும்.  

ஒன்று குறித்து மேலும் துல்லியமான தகவல் தரும் நிலையில் பயன்படுத்தப்படுவது.

பிறர் ஒரு கருத்திற்கு வந்திருப்பார்கள் என உணர்ந்தாலும் அனைத்தையும் கருதிப்பார்த்துத் தன் கருத்தைச் சொல்லும் பொழுது எவ்வாறிருப்பினும் என்று சொல்லுவர். எ.கா. “அந்தச் சிறுமி போதிய பட்டறிவு இல்லாதவளாளக இருக்கிறாள். எவ்வாறிருப்பினும் நான் ஐயத்தின் நலனை அவளுக்கு வழங்கி அவளை உசாவலுக்கு உட்படுத்துகிறேன்.” 
953. At any timeஎந்தச்‌ சமயத்திலும்‌  

எந்த நேரத்திலும்  

நிகழ்வைப்பற்றிக் கூறுவதாயின் “எந்த நேரத்திலும்” நிகழலாம் என்பது “எப்போதும்” நிகழலாம் அல்லது “முன்னறிய முடியாத நேரத்தில் அல்லது கணிக்க முடியாத நேரத்தில்” நிகழலாம் என்பதுபோல் பொருள்படும்.  

இஃது எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் எச்சரிக்கை இல்லாமல் ஏதாவது நடக்கலாம் என்பதைக் குறிக்கிறது.  

சட்ட வழக்காற்றில் பொதுவாக “எந்த நேரத்திலும்” என்பது “எல்லா நேரங்களிலும்” என்று பொருள்படும்,   இஃது எந்த நாளிலும் எந்த நேரத்திலும் ஏதாவது நிகழலாம் அல்லது செய்யப்படலாம் என்பதைக் குறிக்கிறது. இதன் மூலம் ஒரு செயல் நடக்கக்கூடிய காலக் கட்டத்தில் நெகிழ்வுத் தன்மையை அல்லது எந்த வரம்பும் இல்லை என்பதை இது குறிக்கிறது.  

இது தேவைப்படும்போதோ விரும்பியபோதோ செயல்களைச் செய்ய இசைவளிக்கிறது(லா இன்சைடர்/Law Insider).  

இதன்படிக் குறிப்பிட்டக் கால அட்டவணை இல்லை: காலப்போக்கில் செயல்களைக் குறிக்கக்கூடிய “நேரத்திலிருந்து நேரத்திற்கு” போன்ற சொற்றொடர்களைப் போலல்லாமல், “எந்த நேரத்திலும்” என்பது ஒரு குறிப்பிட்ட அட்டவணை அல்லது இடைவெளிகளைக் குறிக்காது. எந்த நேரத்திலும் நடவடிக்கை சாத்தியமாகும் என்பதே இதன் பொருள்.
  ஓர் ஒப்பந்தத்தில் “நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் நிறுத்தலாம்” என இடம் பெற்றால், இதன் பொருள் பணிநீக்கம் குறிப்பிட்ட நாள்களில் அல்லது சில வணிக நேரங்களில் மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதாகும்.  

ஓர் அறிவிப்பில் “எந்த நேரத்திலும் உங்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பு வரும்.” என இடம் பெறின்  இதன் பொருள் அறிவிப்பை நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்திலோ வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளிலோ மட்டுமல்லாமல் எந்த நாளிலும்  எந்த நேரத்திலும் அனுப்பலாம் என்பதாகும்.  

ஒரு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் “எந்த நேரத்திலும் பணியாளரின் கடமைகளை மாற்றியமைக்க முதலாளிக்கு உரிமை உண்டு”  என இடம் பெற்றால், வரையறுக்கப்பட்டட மதிப்பாய்வுக் காலத்தில் மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் வேலைக் குறிப்புரையில் மாற்றங்களைச் செய்ய உடன்படுகிறது. எவ் வரம்பும் இல்லை  எனப் பொருளாகும். 

  நீதி மன்றத்தில் வழக்கு உசாவல் முடிந்த பின் எந்த நாளிலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதற்கும் இத்தொடரைப் பயன்படுத்துவர்.
  954. At his own riskஅவரின் சொந்த இடர்ப்பில்  

அவரின் தனிப்பட்ட பொறுப்பில்  

ஒருவரின் செயல்களால் அவருக்கோ  அவரது உடைமைகளுக்கோ தீங்கு நேரிடின், அஃது அவரின் சொந்தப் பொறுப்பு என்பதைக் குறிக்கப் பயன்படுகிறது.  

இடர்ப்பின் எடுகோள்:

சட்ட வழக்காற்றில் ” தனது சொந்த இடர்ப்பில் அல்லது அவரின் தனிப்பட்ட பொறுப்பில்” என்பது பொதுவாக ஒருவர் சாத்தியமான கண்டங்கள் / இன்னல்கள் ,  விளைவுகள் பற்றிய முழு விழிப்புணர்வுடன் ஒரு செயலை மேற்கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது.  எனவே எந்தவொரு எதிர்மறையான விளைவுகளுக்கும் அவரே பொறுப்பு.

சாத்தியமான தீங்கு அல்லது இழப்புக்கு ஒரு தரப்பினர் பொறுப்பேற் கிறார்கள் என்பதை நிறுவ இது பெரும்பாலும் பொறுப்பு துறப்பு, எச்சரிக்கைகள் அல்லது ஒப்பந்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.

  இந்தச் சட்டமுறைத் தற்காப்பு, வழக்காடி(plaintiff) ஒருவர் (இழப்பீடு கோருநர்)தெரிந்தே அல்லது தன்னார்வமாகப் பேரிடரான செயலில் ஈடுபட்டுக் காயமடைந்தால், அவர் இழப்பீடு பெற முடியாது என்று வலியுறுத்துகிறது. இது “தனது சொந்த இடர்ப்பில்” என்பதன் முதன்மைக் கூறு இதுதான்.    
955. At first blushவெட்கக்கேடான முதன்மை விதி  

வெட்கக்கேடான முதன்மையான விதி என்பது பொதுச் சட்டத்தின் (Common Law) ஒரு கொள்கையாகும். ஒரு தீர்ப்பு மிகையாகவோ நடுவர் மன்றத்தின் உணர்ச்சி அல்லது பாகுபாட்டால் ஏற்பட்டதாகவோ தோன்றினால் நீதிமன்றத்திற்கு அதைச் செல்லாததாக்க இசைவளிக்கிறது. இதன் பொருள் ஒரு தீர்ப்பு உண்மைகளை விட உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றினால், அதைத் தள்ளுபடி செய்யலாம்.  

அலகாபாத்து உயர் நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கில் அளித்த தீர்ப்புக்கும் உரிமை வழக்கைக் குற்ற வழக்காக மாற்றுவது தொடர்பான வழக்கிலும் அலகாபாத்து உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் அளித்துத் தள்ளுபடி செய்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

(தொடரும்)

Tuesday, February 25, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

936. Assistantஉதவியாளர்  

அமைச்சுப்பணியில் கீழ்நிலையில் இருந்து இரண்டாம் நிலையில் – இளநிலை உதவியாளருக்கு மேல் நிலையில் உள்ள பணியிடம்.  

சட்டத்துறையில் சட்ட உதவியாளர் அல்லது வழக்கு உதவுநர் எனக் குறிக்கப் பெறுகிறார்.   சட்ட ஆவணங்களை ஒழுங்கு படுத்தல், விசாரணையில் உதவுதல், சான்றுரைஞர்களிடம் நேர்காணல் மேற்கொள்ளல், வழக்குரைஞருக்கும் வழக்காளிக்கும் தொடர்பாளராக இருத்தல் முதலான பணிகளைப் பார்க்கிறார்.  

ஒரு பதவி நிலையில் அதற்கடுத்த கீழ்நிலையில் உள்ள பணியிடத்தை உதவி என்று சேர்த்துக் குறிப்பிடுவர். சில இடங்களில் துணை என்பதற்கு அடுத்த கீழ்நிலையில் வரும். வருவாய்த்துறையில் மட்டும்  deputy collector – உதவி ஆட்சியர் என்றும் assistant collector –  துணை ஆட்சியர் என்றும் மாறுபடக் கூறுவர்.    Assistant comptroller – உதவி நிதியாளர்  Assistant controller – உதவிக் கட்டுப்பாட்டு அலுவலர், Assistant Public Relation Officer – உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்பன போன்று உள்ளன.  

மின்வாரியம் முதலான துறை களில் helper  உள்ளனர். இவர்களை உதவியாளர் என்று சொல்லாமல் துணையாள் என்று சொல்ல வேண்டும்.
937. Assistant commandantஉதவிக் கட்டளையர்  

உதவிக் கட்டளையர்  என்பது படைத்துறை, கப்பற்படை, சீருடைப் பணித்துறை, பயிற்சி நிறுவனம் அல்லது பயிற்சிக்கழகம், ஆயுதப்படை முதலானவற்றில் இரண்டாம் நிலை தளபதிக்கு வழங்கப்படும் பதவி.   பொதுவாக ஆங்கிலப் பயன்பாடு உள்ள நாடுகளில் இப்பதவி உள்ளது.    
938.Assistant Sub-Inspector/ Assistant Police Sub Inspector (A.S.I.)    உதவிச் சார்பு ஆய்வாளர்  

உதவிக் காவல் சார்பு ஆய்வாளர்    

உதவி ஆய்வாளர் என்னும் பணியிடம் வேறு சில துறைகளிலும உள்ளதால் உதவிக் காவல் சார்பு ஆய்வாளர் என்று குறிக்கின்றனர்.   காவல்துறை அதிகார வரிசையில் உதவிச்சார்பு ஆய்வாளர் இடைநிலைப் பணியாகும்.

அரசுப்பதிவில்லா பணியிடமாகும் (NGO) இது.
939. Asst. Commissioner of Policeகாவல்‌துறை உதவி ஆணையர்  

உதவிக் காவல் ஆணையர்  

உதவிக் காவல் ஆணையர் (ACP) இந்தியக் காவல் துறையில் மூத்த பதவியில் இருப்பவர். மேலும் பெருநகரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு,போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் உதவி ஆணையர் பணியிடங்கள் உள்ளன.

பிற பகுதிகளில், உகாஆ(ACP) என்பது துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பணியிடத்திற்குச் சமம். இப் பெயரில்தான் பணியிடங்கள் உள்ளன.
உள்ளாட்சித்துறை, உணவு வழங்கல் துறை முதலான பிற துறைகளிலும் உதவி ஆணையர் பணியிடங்கள் உள்ளன.
940. Assumeமேற்கொள்  

ஏற்றுக் கொள்  

ஏற்கை  
பாவனைசெய்
ஊகம்செய்
கருதிக்கொள்
ஆராயாது எண்ணு
செருக்கிக்கொள்
வலிந்து பற்று
அனுமானம்   (அனுமானம் என்பது தமிழ்ச்சொல்லே)   “அனுமானம்” என்பது மற்றொருவரின் பொறுப்பு, கடமை அல்லது கடமைகளைத் தானாக முன்வந்து ஏற்றுக்கொள்வது அல்லது “எடுப்பது”, கடன் அல்லது குத்தகையை ஏற்றுக்கொள்வது, அடிப்படையில் மற்றொரு தரப்பினரின் பொறுப்பாக இருந்த ஒன்றுக்குப் பொறுப்பு எடுத்தல்.  இது வேறொருவருக்குச் சொந்தமான சட்டப்பூர்வ கடமையை தீவிரமாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.

(தொடரும்)

Followers

Blog Archive