(தொல்காப்பியமும் பாணினியமும் – பொருளடக்கம் : தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும் – 1 :
மூவாத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலாகத் திகழ்வது சாவாப் புகழ் கொண்ட தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் உண்மையான சிறப்பை இன்னும் தமிழர்களே அறிந்திலர். அவ்வாறிருக்கப் பிறர் எங்ஙனம் அறிவர்? தொல்காப்பியச் சிறப்பை மறைக்கும் வண்ணம் ஆரிய வெறியர்கள் பாணினியத்தை உயர்த்தியும் அதன் காலத்தை முன்னுக்குக் குறிப்பிட்டும் பிற வகைகளிலும் எழுதி வருகின்றனர். தொல்காப்பிய நூற்பாக்கள் சிறப்பு குறித்தும் பாணினியின் அட்டாத்தியாயி நூற்பாக்கள் குறித்தும் ஒப்பிட்டு எழுத முதலில் எண்ணினேன். இந்நூல் கிடைக்கவில்லை. முனைவர் மீனாட்சி எழுதிய இந்நூலை வெளியிட்ட உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் இருப்பில் இல்லை என்றனர். ஆதலின், எளிய முறையில் இரு நூல்கள், நூலாசிரியர்கள் குறித்து எழுதுவதே ஏற்றது எனக் கருதி இக்கட்டுரை அவ்வாறு அமைகிறது.
தொல்காப்பியப் பிரிவுகள்
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என முப்பிரிவுகளை உடையது. ஒவ்வொரு பிரிவும் ஒன்பது ஒன்பது இயல்களை உடையது.
பொருளிலக்கணம் என்பது தமிழ் மொழிக்கே உள்ள சிறப்பு. பொருளதிகாரத்தில் தொல்காப்பியர் “வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே” என்பதுபோல் முன்னோரை 287 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அவருக்கு முன்பிருந்த இலக்கண ஆசிரியர்களும் பொருள் வகைப்பாட்டைக் குறித்துள்ளனர் எனலாம்.
நூலின் மரபு, மொழி மரபு, நுண் பிறப்பு,
மேலைப்புணர்ச்சி, தொகை மரபு, பால் ஆம்
உருபு இயலின் பின், உயிர், புள்ளி, மயக்கம்,
தெரிவுஅரிய குற்றுகரம் செப்பு.
1. நூல் மரபு, 2. மொழி மரபு, 3. பிறப்பியல், 4. புணரியல், 5 தொகை மரபு, 6 உருபியல், 7. உயிர்மயங்கியல், 8. புள்ளி மயங்கியல், 9. குற்றியல் உகரப் புணரியல் ஆகியன எழுத்ததிகார இயல்கள்.
கிளவி ஆக்கமே, கிளர் வேற்றுமையே
ஒளி வேற்றுமை மயக்கத்தோடு, விளி மரபு,
தேற்றும் பெயர், வினைச் சொல், சேரும் இடை, உரிச்சொல்,
தோற்றியிடும் எச்ச இயல், சொல்.
1. கிளவியாக்கம், 2. வேற்றுமை இயல், 3. வேற்றுமை மயங்கியல், 4. விளிமரபு, 5. பெயரியல், 6. வினையியல், 7. இடையியல், 8. உரியியல், 9. எச்சவியல் ஆகியன சொல்லதிகார இயல்களாம்.
ஈட்டும் அகத்திணையும், ஏய்ந்த புறத்திணையும்,
காட்டும் களவு இயலும், கற்பு இயலும் மீட்டும்
பொருள் இயல், மெய்ப்பாடு, உவமம், போற்றிய செய்யுள்,
மரபு இயலும், ஆம் பொருளின் வைப்பு.
1. அகத்திணை இயல், 2. புறத்திணையியல், 3. களவியல், 4. கற்பியல், 5. பொருளியல், 6. மெய்ப்பாட்டியல், 7. உவமை இயல், 8. செய்யுள் இயல், 9. மரபியல் ஆகியன பொருளாதிகார இயல்களாகும்.
எழுத்து அதிகாரத்துச் சூத்திரங்கள் எல்லாம்
ஒழுக்கிய ஒன்பது ஒத்துள்ளும், வழுக்கு இன்றி
நானூற்று இரு-நாற்பான் மூன்று என்று நாவலர்கள்
மேல் நூற்று வைத்தார் விரித்து.
தோடு அவிழ் பூங்கோதாய்! சொல் அதிகாரத்துள்
கூடிய ஒன்பது இயல் கூற்றிற்கும் பாடம் ஆம்
நானூற்று அறுபத்து நான்கே நல் நூற்பாக்கள்
மேல் நூற்று வைத்தனவாமே.
கிளவி ஓர் அறுபான் இரண்டு; வேற்றுமையில்
கிளர் இருபஃது இரண்டு; ஏழ்-ஐந்து
உள மயங்கு இயலாம்; விளியின் முப்பான் ஏழ்;
உயர் பெயர் நாற்பதின் மூன்று;
தெளி வினை இயல் ஐம்பானுடன் ஒன்று;
செறி இடை இயலின் நாற்பான் எட்டு;
ஒளிர் உரி இயல் ஒன்பதிற்றுப் பத்துடன் எட்டு;
ஒழிபு அறுபான் ஏழ்.
பூமலர் மென் கூந்தால்! பொருள் இயலின் சூத்திரங்கள்
ஆவ அறு நூற்று அறுபத்து ஐந்து ஆகும்; மூவகையால்
ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃது என்ப,
பாயிரத் தொல்காப்பியம் கற்பார்.
ஒவ்வோர் அதிகாரத்திலும் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை உரையாசிரியர்களுக்கிணங்க மாறுபடுகின்றன. ஒவ்வோர் உரையாசிரியரின் குறிப்பிற்கு இணங்க இயல்வாரியாக இவ்வெண்ணிக்கை கீழே சுட்டிக் காட்டப்படுகிறது.
உரையாசிரியர் | இயல்கள் | மொத்தம் | ||||||||
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | ||
1.எழுத்து அதிகாரம் | ||||||||||
இளம்பூரணர் | 33 | 49 | 21 | 40 | 30 | 30 | 93 | 110 | 77 | 483 |
நச்சினார்க்கினியர் | 33 | 49 | 20 | 30 | 93 | 39 | 69 | 78 | 483 | |
2. சொல்லதிகாரம் | ||||||||||
இளம்பூரணர் | 62 | 17 | 35 | 37 | 43 | 49 | 48 | 99 | 66 | 456 |
சேனாவரையர் | 61 | 22 | 34 | 37 | 43 | 51 | 48 | 100 | 67 | 463 |
நச்சினார்க்கினியர் | 62 | 22 | 35 | 37 | 43 | 51 | 48 | 98 | 67 | 463 |
தெய்வச்சிலையார் | 60 | 21 | 33 | 36 | 41 | 54 | 47 | 100 | 61 | 453 |
3. பொருளதிகாரம் | ||||||||||
இளம்பூரணர் | 58 | 30 | 51 | 53 | 52 | 27 | 38 | 235 | 112 | 656 |
நச்சினார்க்கினியர் | 55 | 36 | 50 | 53 | 54 | – | – | – | – | 248 |
பேராசிரியர் | 0 | 0 | 0 | 0 | 0 | 27 | 37 | 243, | 110 | 417 |
சில நூற்பாக்களை 2 அல்லது 3 ஆகப் பிரித்தமையால் நூற்பாக்களின் எண்ணிக்கையில் வேறுபாடுள்ளன. மொத்த நூற்பாக்கள் இளம்பூரணாரின் கருத்துக்கு இணங்க 1595உம் நச்சினார்க்கினியர் ஆகியோருக்கு இணங்க 1611-ம் ஆகும்
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்