(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – தொடர்ச்சி)
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7
கடலில் மறைந்த குமரிக்கண்டம்
தமிழின் தொன்மையை ஏற்பதன் மூலமும் தமிழின் தாய்மையை உணரலாம். இந்தியப் பெருங்கடலாகச் சொல்லப்படும் குமரிக்கடலில் மறைந்த நிலப்பகுதியே குமரிக்கண்டம் அல்லது இலெமூரியாக் கண்டம். இங்குதான் மனித இனம் தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இங்குள்ள மக்கள் பேசிய மொழி தமிழே என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புறத் தமிழ்ப்பகைவர்களும் அகத்தமிழ்ப்பகைவர்களும் தமிழின் பெருமையை மறைக்கும் வகையில் குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகளையே புனைகதைபோல் திரித்துக் கூறி வருகின்றனர். என்றாலும் உலகில் பல்வேறு பகுதிகளில் இப்போது கடல்கோள் சுனாமி என்ற பெயரில் நிகழ்ந்து வருவதையும் தமிழ்நாட்டில் 2004 திசம்பரில் நிகழ்ந்ததையும் பார்க்கும் நமக்குக் கடல்கோள் என்பது உண்மையே எனத் தெரிய வருகிறது. ஆழிப்பேரலை என்றாலும் அது கடல் கோள்தான்.
கடல்கோள் குறித்து இளங்கோ அடிகள்
சிலப்பதிகாரத்தில் தமிழ்த்தேசியப் பெரும்புலவர் இளங்கோ அடிகளும் இது குறித்துப் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப்பதிகாரம் 11:17-22)
பஃறுளியாறும் பக்க மலைகளை அடுக்கடுக்காகக்கொண்ட குமரி மலையும் கடலால் கொள்ளப்பட்ட வரலாற்று உண்மையை இவ்வடிகள் மூலம் இளங்கோ அடிகள் உலகிற்குத் தெரிவிக்கிறார்.
இளங்கோ அடிகளே,
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு
(சிலப்பதிகாரம், வேனிற்காதை:1-2) என்றும் குறிப்பிடுகிறார்.
கடல்கோள் குறித்து அடியார்க்கு நல்லார்
“தொடியோள் பௌவம்” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விரிவான விளக்கம் தருகிறார்.
“தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.” என்கிறார்.
காதம் என்றாலும் காவதம் என்றாலும் பத்து கல் அஃதாவது 16 புதுக்கல்(கி.மீ.) தொலைவு எனப் பொருள். 700 காவத ஆறு என்றால் 11,200 புதுக்கல் நீட்சியுடையது எனப் பொருள். இவ்வாறு ஆற்றின்பரப்பளவு, நாடுகளின் பெயர்கள் முதலியவற்றை அடியார்க்கு நல்லார் வரலாற்றுக் குறிப்பாகவே தருகிறார்.
கடலுள் புகுந்த புகார் குறித்து மணிமேகலை
மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனார் புகார் நகர் கடலில் புகுந்ததைக் கூறுகிறார். ஒருவேளை குமரிக்கண்டத்தின் பக்கவாட்டு நீட்சி புகார் வரை இருந்திருக்கலாமா என ஆராய வேண்டும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் எழுதப்பெற்ற காலம்தான் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு. அவை அதற்குப் பல நூறு ஆண்டுகள் முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர். அவ்வாறாயின் குமரிக்கண்டம் கடல் கொண்டதுடன் இதையும் தொடர்பு படுத்தினால் தவறில்லை எனலாம்.
ஆரியப் புராணங்களிலும் தொன்மக்கதைகளிலும் வரும் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கற்பனைகளையெல்லாம் வரலாற்றுச் செய்திகளாகத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோர் தமிழ் இலக்கியங்கள் கூறும் வரலாற்றுச் செய்திகளை யெல்லாம் கற்பனைக் கதைகளாகத் திரித்துக் கூறுகின்றனர். இதனை முதலில் படிக்க நேரும் வெளிநாட்டினரும் இவற்றை உண்மையாகக் கருதி உண்மையான தமிழக வரலாற்றைக் கற்பனையாகக் கூறி விடுகின்றனர்.
எனவே, மறைந்த நிலப்பகுதியின் பெயர் என்னவாகவும் இருந்திருக்கலாம். ஆனால் பாண்டிய மன்னன் ஆட்சி வரம்பில் இருந்த தமிழ்நிலம் கடலால் விழுங்கப்பட்டது என்பதே உண்மை. எனவே, அப்பகுதி மக்கள் தமிழ்மக்கள் என்பதும் அம்மக்கள் பேசிய மொழி தமிழே என்பதும் மிக உண்மை. எனவே, அங்கே இருந்த தமிழினமே கடல்கோள்களாலும் பூமித் தட்டு நகர்வுகளினாலும் சிதறிய புவிப்பரப்பில் அங்கு வாழ்ந்த மக்களும் சிதறி வாழ்ந்துள்ளனர்.
கன்னடத்திற்கும் தமிழே தாய்
அதுபோல் கடலால் கொள்ளப்பட்ட தென்னாட்டில் பேசப்பட்ட தமிழ்மொழியே உலகெங்கும் பரவி பல மொழிகளாகக் கிளைத்துள்ளது எனலாம். அவ்வாறெனில் உலக மொழிகளின் தாய் தமிழ் என்பதே பெரும் உண்மை. உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் தமிழ் திகழ்கையில் கன்னடத்திற்கும் தமிழே தாய் என்பதும் உண்மைதானே!
தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது
கன்னட மொழி என்பது தமிழ் மொழியின் சேய் மொழிகளுள் ஒன்று என்பதைப் பேரா.அ.திருமலைமுத்துசுவாமி(தமிழ்நாடும் மொழியும்) கூறுகிறார். இவர்போல் அறிஞர்கள் பலரும் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என எழுதியும் பேசியும் வந்துள்ளனர்.
இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி – இனிய உதயம், ஆகட்டு 2025
(தொடரும்)