(நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- தொடர்ச்சி)
செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்
சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்து என்னை பரிவு
(நாலடியார் 110)
பதவுரை:
சிறுகா=சிறுத்துப் போகா; குறைய மாட்டா; பெருகா=பெருத்துப் போகா; கூடா;
முறை பிறழ்ந்து வாரா=முறை மாறி வாரா;
உறுகாலத்து=துன்புறுங்காலத்து,
ஊற்று ஆகா=ஊன்றுகோல் போல் துணை ஆகா
ஆம் இடத்தே=ஆகும் காலத்தில்
ஆகும்= நிகழும்
சிறுகாலை=முற்காலத்து,
பட்ட= உண்டாகிய,
பொறியும்=நல்வினைகளும்,
அதனால்=ஆதலால்,
இறு காலத்து=(தீவினைப்பயனால்) கேடுவருங் காலத்து,
பரிவு=வருந்துவது,
என்னை=யாது?
சிறுகாலை யென்றது பிறவித்தொடக்கம் என்றும் அதனால் கருவியின் நிலையை உணர்த்துவதாகவும் விளக்கம் தருகின்றனர். இதனடிப்படையில் கருவமையுங் காலத்திலேயே அமைந்த ஊழ்வினைகள் அல்லது கருவிலேயே அமைந்து விட்ட பழவினைகள் என்கின்றனர்.
முறைபிறழ்ந்து வாரா-முறை மாறி வாரா என்றால், தீச்செயல்களுக்கு நற்பயன், நற்செயல்களுக்குத் தீப் பயன் என நேர்மாறாக அமையா எனப் பொருள்.
நிகழ்வு, இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் குறைதல் கூடுதல் மாறுதல் இன்றி வினைப்பயனுக்கேற்ப நிகழத்தான் செய்யும் என்கின்றனர். அஃதாவது எது எது எவ்வப்பொழுது நடக்க வேண்டுமோ அது அது அவ்வப்பொழுது நடக்கும் என்பதே ஊழ்வினை என்கின்றனர்.
அந்தந்தப் பிறவியிலேயே நாம் செய்யும் நற்செயல் தீச் செயல்களுக்கேற்ப வினைப்பயனை அடைவர் என்றுதான் கொள்ள வேண்டும்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (திருக்குறள், ௩௱௰௯ – 319)
என்கிறார் திருவள்ளுவரும்.
ஒளவையாரும்
முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்
(கொன்றை வேந்தன் 74(
என்கிறார்.
இந் நன்மொழி, மக்களிடையே, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்னும் பழமொழியாக உலா வருகிறது.
இவற்றின் பொருள் ஒரே நாளிலேயே வினைப்பயன் விளையும் என்றில்லை. அதனை விரைவு கருதிய தொடராக எடுத்துக் கொள்ளலாம்.
எனவே, நாம் செய்யும் நற்செயல்கள் என்றும் நமக்கு உற்ற துணையாக நற் பயன் விளைவிக்கும். தீச் செயல்கள் உடனே நன்மை தந்தாலும் துன்பத்தையே விளைவிக்கும் என்பதை உணர்வோமாக!
–இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment