20 November 2025 அகரமுதல
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! – தொடர்ச்சி)
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25
செய்யாததைச்செய்ததாகக்கூறிப்புகழாதே!
”செய்யா கூறிக் கிளத்தல்,
எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே.”
செய்யா=செய்யாதவற்றை, கிளத்தல்=பேசுதல், எய்யாதாகின்று=அறியாததாக ஆயிற்று,
செய்யாததைச் செய்ததாகப் பாராட்டிக் கூறுதல் என் நா அறியாததாகும்.
அஃதாவது பொய்யாகப் புகழ்தல் புலவருக்கு வழக்கமில்லை என்கிறார்.
நாமும் இதைப் பின்பற்றி ஒருவர் செய்யாததைச் செய்ததாகக் கூறிப் பாராட்டக் கூடாது.
***
கண்டீரக் கோப்பெருநள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர்.
நள்ளியிடம் சென்று புலவர் வன்பரணர் அவனது கொடைத்தன்மையைப் பாராட்டினார்.
அப்பாராட்டிற்குத் தான் தகுதியுடையவன்தானா என்று நள்ளிக்கு ஐயம் வந்தது.
அதற்காகத் தான் பொய்யாகப் பாராட்டுவதில்லை எனக் கூறி அதன் மூலம் அப்பாராட்டிற்கு நள்ளி முழுத் தகுதியுடையவன் என்று தெரிவித்தார்.
முழுப்பாடல் வருமாறு:
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின்
அசைவு இல் நோந்தாள் நசை வளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடு விளங்கு வியன் நகர்ப் பரிசில் முற்று அளிப்பப்,
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்,
எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே.
பாடல் : புறநானூறு 148
பாடியவர் : வன்பரணர்.
பாடப்பட்டோன் : கண்டீரக் கோப்பெருநள்ளி.
திணை : பாடாண்.
துறை : பரிசில்.
பதவுரை:
கறங்கு=ஒலி; மிசை=மேல்; அருவிய=அருவியை உடைய; பிறங்கு மலை=உயர்ந்த மலை/ஒளியுடைய மலை; நள்ளி=நள்ளி; நின்=உன்; அசைவு இல்=தளர்வு இல்லாத;
நோந்தாள்=வலிமையான முயற்சி; நசை=விருப்பம்; வளன்=செல்வம்; ஏத்தி=புகழ்ந்து; நாடொறும்=நாள்தோறும்;
நன்கலம்=நல்ல அணிகலன்; களிற்றொடு=யானையோடு; கொணர்ந்து – கொண்டு வந்து; கூடு=நெற்குதிர்; விளங்கு=விளங்கும்; வியன் நகர்=பெரிய ஊர் /பெரிய இல்லம்;
பரிசில் முற்று அளிப்ப=பரிசாக முழுவதையும் அளிப்பதால்; பீடு இல்=பெருமை இல்லாத; மன்னர்=மன்னர்களை; புகழ்ச்சி=புகழ்வதற்கு;
செய்யா=செய்யாதவற்றை; கூறி=கூறி; கிளத்தல்=பேசுதல்; எய்யாதாகின்று=அறியாததாக ஆயிற்று; எம்=என்; சிறு=சிறிய, செந்நாவே=செம்மையான நேர்மையான நாக்கு.
வீடுகளின் தெருப்புறத்தே நெற்கூடமைத்தல் பண்டையோர் மரபு; இன்றும் சிற்றூர்களில் இக்கூடுகளைக் காணலாம்.
முற்றுதல் – சூழ்தல். பாணர் சூழ்ந்திருந்து வளம் பெற்றுச் செல்வர். எனவே, “முற்று பரிசில்” என்றார் எனவும் கருதுவர்.
பொருளுரை:
பேரொலியுடன் மேலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவிகளையுடைய மலையை ஆளும் நள்ளி!
உன் தளர்வு இல்லாத வலிமைமிகு முயற்சியால் திரட்டிய விரும்பத்தக்க செல்வத்தை வாழ்த்தி,
நாள்தோறும் நல்ல அணிகலன்களை யானையோடு கொண்டு வந்து நெற்குதிர்கள் நிறைந்து விளங்கும் பெரிய நகரில் பரிசாக முழுவதையும் அளிக்கின்றாய்.
பெருமை இல்லாத மன்னர்களைப் புகழ்வதற்கு வேண்டி, அவர்கள் செய்யாதவற்றை வியந்து கூறுவதை அறியாது, என்னுடைய சிறிய நேர்மையான நாக்கு.
வேண்டுவதோ விரும்பியதோ தேவையானதோ கிடைக்கும் என்பதற்காக யாரையும் பொய்யாகப் புகழக் கூடாது என்பதுதான் தமிழர் நெறி.
ஆனால், அவ்வாறில்லாமல் பணமோ செல்வமோ பதவியோ கிடைக்கும் என்பதற்காகப் பிறரைப் புகழ்வோர் இருக்கத்தான் செய்கின்றனர்.
அத்தகையோரை நாம் விலக்கி வைக்க வேண்டும். இதை உணர்த்துவதுதான் புலவரின் தன்னிலை விளக்கப் பாடல்.
தாம் அவ்வாறு பொய்யுரை கூறி எதையும் பெறுவதில்லை என்பதன் மூலம் பிறரும் அவ்வாறு பிறரைப் பொய்யாகப் புகழாமல் இருக்க வேண்டும் என உணர்த்துகிறார்.
நற்செயல் செய்யாத ஒருவனை அவ்வாறு செய்ததாகக் கூறிப் புகழ்வது அவன் நற்செயல் ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாது.
தீயன செய்யும் ஒருவனைப் புகழ்வது அவனைத் தீய செயல்களிலேயே தொடருமாறு செய்யுமே தவிர, அவன் திருந்தவோ அவனுக்கு நல்லன புரிய வேண்டும் என்ற எண்ணம் வரவோ வாய்ப்பு ஏற்படாது.
தான் என்ன செய்தாலும் புகழ்கிறார்கள் என்ற ஆணவத்தில் மேலும் தீங்குகள் புரிந்து நல்லோரைப் புறக்கணிப்பான்.
இதனால் அவனுக்கும் அவனைச் சார்ந்தவருக்குமே தீமைகள்தான் விளையும். எனவேதான் தன்னலம் கருதி வீண் புகழ்ச்சி செய்தல் கூடாது.
பிறரைப் போலியாகப் புகழக் கூடாது என்பது ஆள்வோர்களுக்கு மட்டுமல்ல. பிற தலைவர்கள், செல்வாக்கானவர்கள், செல்வ நிலையில் உள்ளவர்கள் பிறருக்கும் பொருந்தும்.
அவர்களைப் புலவர்கள்தான் புகழவேண்டும் என்று இல்லை. அவர்களுக்கு அணுக்கமாக இருப்பவர்கள், உதவி நாடி வருபவர்கள்,
அவர்கள் தயவை எதிர்நோக்கி இருப்பவர்கள், ஊடகத்தினர், கட்சி, அலுவலகம், அமைப்பு போன்றவையாயின் சார்நிலையில் உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பாருக்கும் பொருந்தும்.
எனவே யாரைப் பற்றியாயினும் யாராயினும் இல்லாத பண்புகள் இருப்பதாகவோ செய்யாத நற்செயலைச் செய்ததாகவோ கூறக்கூடாது.
ஆதலின் சங்கப் புலவர்கள் வழியில் நாமும் செய்யாதனவற்றைச் செய்தனவாகக் கூறிப் புகழாதிருப்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment