(குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! – தொடர்ச்சி)
சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இரு!
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௧ – 451)
பெருமைப்பண்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறுமைப்பண்பு சிற்றினத்தையே சுற்றமாகக் கொள்ளும்.
பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணத்தை ; அஞ்சும்-அஞ்சி ஒதுங்கும்; பெருமை-பெருமைப் பண்பு; சிறுமைதான்-சிறுமைப்பண்பு ; சுற்றமா-சிறுமைக் குணத்தையே உறவாக; சூழ்ந்துவிடும்-சூழவும் பிணைத்துக் கொள்ளும்.
பெருமை என்பதற்குப் பெருமைப்பண்பு உடைய பெரியோர் என்றும் சிறுமை என்பதற்குச் சிறுமைக் குணம் உடைய சிறியோர் என்றும் அனைவரும் விளக்குகின்றனர்.
“தீயனைக் கண்டால் தூர விலகு” என்பர். எனவே, சிறுமைக் குணம் உடைய தீயவனைக் கண்டு ஒதுங்க வேண்டும் எனவே, பெருமைப் பண்புடையோர் கருதுவர். பெரியோர் என்று கருதாமல் பெருமைப் பண்பு உடைய யாரும் அவ்வாறுதான் நடந்து கொள்வர் எனக் கருத வேண்டும். எனவேதான் பெரியோர் என்று சொல்லாமல் பெருமைப்பண்பு எனக் கருத வேண்டும். அதைப்போல்தான் சிறியோர் என்று கருதாமல் சிறுமைப்பண்பு எனக் கருத வேண்டும். அதனாலதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெரியோர், சிறியோர் என்று கூறாமல் பண்பின் அடிப்படையில் பெருமை, சிறுமை எனக் கூறியுள்ளார்.
“இனத்தோடே இனம்சேரும்” என்கிறார் சொக்கநாதப் புலவர்
அல்லி பெற்ற பிள்ளை(1959) என்னும் திரைப்படத்தில் பாடலாசிரியர் அ. மருதகாசி
“எசமான் பெற்ற செல்வமே!” எனத் தொடங்கும் பாடலில்
“தீயவரோடு நீ சேராதே நம்பி!“
என எழுதியிருப்பார்.
“இனத்தை இனம் சேரும்”
“இனத்தை இனம் தழுவும்”
“இனம் இனத்தோடே”
“இனம் இனத்தோடு சேரும்”
என்பன பழமொழிகள்.
நாம், நல்லோரை அறிந்து நல்லோர் கூட்டத்தில் சேர வேண்டுமே தவிர, தீய இனத்தவருடன் சேரக் கூடாது. எனவேதான் உலகநாதரும் உலகநீதியில்,
“வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா”
என்கிறார். சிறுமைப்பண்பினர்தானே வஞ்சனைகள் செய்வர்.
சிற்றினச் சேர்க்கையால் தீயனவே விளையும் என்பதால்தான், பெருமைப் பண்பினரும் பெரியோரும் சிறியவரோடு பழக அஞ்சுவர்; கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால், சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.
சிறுமைப் பண்புகளினால் நாம் ஈர்க்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நாம் பெருமைப் பண்புகளுடன் திகழ வேண்டும். அப்போதுதான் சிறியாரோடு சேராமல் இருக்க முடியும்.
எனவே, சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இருப்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment