(குறட் கடலிற் சில துளிகள் 39 : தொடர்ச்சி)

பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க!

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்

 (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௩ – 453)

மாந்தர்க்கு அறிவு மனத்தினால் உண்டாகும். தான் சேர்ந்த இனத்தினால் இனியன் அல்லது இனியனல்லன் என்று பிறரால் சிறப்பிக்கப்படும் அல்லது பழிக்கப்படும் சொல் உண்டாகும்.

பதவுரை: மனத்தான் – மனத்தைப் பொறுத்து> மனம் காரணமாக; ஆம்-ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; உணர்ச்சி-அறிவு/உணர்வு; இனத்தான்-சேரும் இனத்தால்; ஆம்-ஆகும்; இன்னான்-இத்தகையவன்; எனப்படும்-என்று சொல்லப்படும்; சொல்- நிறை மதிப்பான அல்லது குறைமதிப்பான சொல்.

மக்களுக்கு இயற்கையறிவு அவர்களின் மனத்தால் ஏற்படும், இத்தகையவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், அவன் சேரும் இனத்தால் ஏற்படும்.

மனத்தின் தன்மைக்கேற்ப இயற்கை யறிவு அமைகிறது. ஆனால் நல்லவர்களுடன் சேர்ந்திருப்பவனை நல்லவன் என்றும் வஞ்சகர்களுடன் சேர்ந்திருப்பவனை வஞ்சகன் என்றும் மதிப்பிட்டுச் சொல்வர். 

வானிலிருந்து விழும் மழை நீர் அது விழும் நிலத்தின் மண்ணின் தன்மைக்கேற்ப நன்னீர் என்றும் உவர் நீர் என்றும் மாறிவிடுகிறது. மண்ணின் நிறத்திற்கேற்பவும் மழைநீர் நிறம் பெற்று, சிவப்பு அல்லது கருப்பு அலலது சாம்பல் அல்லது பிற நிறம பெற்று விடுகிறது. ஒருவன் இயல்பாக நல்லவனாக இருந்தாலும் சேர்க்கைக்கேற்ப நல்லவனாகவும் தீயவனாகவும் மாறி விடுகிறான். ஒருவனின் உயர்விற்கும் தாழ்விற்கும் காரணமாக அமைவது சேர்ந்துள்ள இனத்தால்தான். எனவேதான், சேரும் இனத்தால்தான் இத்தகையவள் என்று சொல்லப்படும் சொல் பிறரால் சொல்லப்டுகிறது.

கூடாநட்பின் தீமையை உணர்த்தவே திருக்குறளிலும் நாலடியாரிலும் தனி அதிகாரங்களே உள்ளன. “கூடா நட்பு கேடாய் முடியும்” என்பதால் கூடா நட்பு கொள்ளக்கூடாது. ஒரு வேளை கூடாநட்பு ஏற்பட்டாலும் அதனைக் கைவிட வேண்டும். சேரும் இனமே பிறரை மதிப்பிடச் செய்யும்!-

மனத்தால் அமைவது அறிவு! இனத்தால் வருவது பழிச்சொல்! பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க!