Showing posts with label இலக்குவனா் திருவள்ளுவன். Show all posts
Showing posts with label இலக்குவனா் திருவள்ளுவன். Show all posts

Sunday, November 6, 2022

சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!– இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!

1966-ஆம் ஆண்டுமுதல் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 11 ஆவது உலகத்தமிழ் மாநாட்டைச் சார்சாவில் சூலை 2023இல் நடத்த இருப்பதாகத் தகவல் வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.  90களில் அரசு சார்பாகத் துபாய் செல்ல வாய்ப்பு இருந்தும் வேறு அலுவல் பணிகளால் செல்ல  முடியாமல் இருந்தது. எனவே, இப்பொழுது இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும்  என எண்ணினேன். உலக மாநாடுகள் வணிக நோக்கு மாநாடுகளாகக் கருதி அவற்றைப் புறக்கணித்து வந்த நான், இம்முறை பங்கேற்கும் ஆர்வம் வந்தது. ஆனால் சில நாட்களிலேயே சிங்கப்பூரில் சூனில்  உலகத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளதாகச் செய்தி வந்தது.

முன்னரே சிங்கப்பூருக்கு நான்கு முறை  சென்று வந்துவிட்டமையால் இம்முறை அமீரகம் செல்லலாம் என எண்ணினேன். ஆனால் அறிவிப்புகளைப் பார்த்தால் இரண்டுமே உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படுவதாக இடம் பெற்றிருந்தது. ஏன் இந்தப் பிளவு என்று அதிர்ச்சியாக இருந்தது. உடன் அறிவித்த முனைவர் பொன்னவைக்கோ அவர்களிடம் அலைபேசி வழி கேட்டேன்’ “ஓற்றுமையாகச் சிறப்பாக நடத்தலாமே” என்றேன்.

“எங்களுக்கும் அதுதான் எண்ணம். ஆனால் தவறு எங்கள் மீது இல்லை. 2019-ஆம் ஆண்டு சிகாகோவில் கடந்த 10 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் 11 ஆவது மாநாட்டிற்கான குழுவிற்குத் தலைவராக என்னையும் பிற 9 பொறுப்பாளர்களையும் முன் மொழிந்து தெரிவு செய்தவர் அப்போதைய தலைவரே. அவரேதான் தன் பெயரில் இப்பொழுது 11 ஆவது உலகத் தமிழ் மாநாடு சார்சாவில் நடைபெறும் என அறிக்கை விடுத்துள்ளார். எங்களுக்கெல்லாம் இஃது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. அவரைப் பின்னிருந்து மற்றொருவர் முடுக்கி விடுகிறார். தான் தெரிவு செய்த குழுவைத் தானே ஏன் மாற்றுகிறார் எனத் தெரியவில்லை. அவர்களை அமைதிப்படுத்தி ஓர் அமைப்பாகச் செயல்பட்டால் எங்களுக்கும் மகிழ்ச்சியே” என்றார். தொடர்பான வேறு சிலரிடமும் வினவினேன். அவர்களும் இதேபோல்தான் கூறினர்.

இலங்கையில் இருந்து ஒரு நண்பர்,  “இரு மாநாடுகள் வேண்டா என எழுதுங்கள்”  என்றார். “நான் எழுதினால் கேட்டுக் கொள்வார்களா? எனினும் உரியவர்களிடம் முன்னரே பேசியுள்ளேன்.” என விவரத்தைத் தெரிவித்தேன். மீண்டும் பேசுமாறு கூறி இலங்கையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையை வெளியிடுங்கள் என்றார். “அந்த அறிக்கை உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்ற வரலாற்றைத் தெரிவிக்கும் விரிவான அறிக்கையாக உள்ளது.  இரு தரப்பையும் ஒற்றுமைப்படுத்தும் வகையில் அறிக்கை தாருங்கள். வெளியிடுகிறேன்; சார்சா மாநாட்டினர் யாருடனும் எனக்குத் தொடர்பு இல்லை. தொடர்பு விவரங்களைத் தந்தால் அவர்களிடமும் பேசுகிறேன்” என்றேன். விரிவான அறிக்கையைச் சுருக்கச் செய்தியாக எழுதி வந்த நான், சுருக்க அறிக்கை வரும் என எதிர்பார்த்து அதனை முழுமையாக்கி வெளியிட வில்லை.  மீண்டும் சிங்கப்பூர் மாநாடு நடத்தும் உ.த.ஆ.மன்றத்தினர் சிலரிடம் பேசினேன். வி.கே.டி.பாலனும் இதுகுறித்து நேரில் வந்து பேசியதாகவும் தாங்கள் எப்பொழுதும் ஒன்றுபட்டுச் செயல்படுவதையே விரும்புவதாயும் தெரிவித்தனர். இதனை இலங்கை நண்பரிடம் தெரிவித்தேன்.

அவர் சிறிது நாள் கழித்து “நீங்கள் அவர்கள் ஆள்”  என்று எழுதியப் பதிவை எனக்கு அனுப்பினார். அப்பொழுது நான் அவர் சார்சா மாநாட்டினர் பக்கம் இருப்பதால் நடுநிலையாகக் கருத்து தெரிவிக்கும் என்னை இவ்வாறு கூறுவதாகப் புரிந்து கொண்டேன்.

யார் வேண்டுமென்றாலும் அல்லது எந்த அமைப்பு வேண்டுமென்றாலும் உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தலாம். ஆனால், ஒரே அமைப்பின் பெயரில் ஏட்டிக்குப் போட்டியாக மாநாடுகள் நடத்துவது  இந்த அமைப்பைத் தோற்றுவித்த தனிநாயக அடிகளாருக்கும் அமைப்பில் முன்நின்ற அறிஞர்களுக்கும் இழுக்கு தேடுவதாகும். ஒரு மாநாடு முடிந்ததும் அடுத்த மாநாடு குறித்து முடிவெடுத்து முறையாக அறிவிப்பதே செல்லத்தக்கதாகும். எனவே, பத்தாவது மாநாட்டுப் பொதுக்குழு தேர்ந்தெடுத்த முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையிலான குழுவினர்தான் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் உண்மைப் பொறுப்பாளர்ள். எனவே, இவர்கள் எடுக்கும் முடிவே சரி. மாற்றுக் கருத்து இருந்தால் இக்குழுவில் தெரிவிக்க வேண்டுமேயன்றிப் போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது.

இதுவரை நான், எந்த மாநாட்டில் பங்கேற்கலாம் எனக் கேட்டவர்களிடம், “நீங்கள் உங்கள் வாய்ப்பிற்கேற்ப எந்த மாநாட்டிலும் பங்கேற்கலாம். இயலுமெனில் இரண்டு மாநாடுகளிலும் பங்கேற்கலாம். ஆனால், நான் முறையான அமைப்பு நடத்தும் சிங்கப்பூர் மாநாட்டில் பங்கேற்கிறேன்” எனத் தெரிவித்து வந்தேன்.

இப்பொழுது என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.

சார்சாவில் நடைபெறும் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை உலகத்தமிழராய்ச்சி மன்றத்தின் பெயரில் நடத்தக் கூடாது. அதே பெயரில் நடைபெற்றால் இதனை உலகத் தமிழர்கள் புறக்கணிப்பதே முறையாகும். இது குறித்து உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தினர் வழக்கு தொடுத்து தடை பெறுவது சிறப்பாகும்.

புறக்கணிப்பதற்கு இதைவிட மற்றோர் இன்றியமையாத காரணம், இம்மாநாட்டில் தெய்வப்புலவர்  திருவள்ளுவருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்தரங்கப் பொருண்மைகள் உள்ளன. அவை குறித்துப் பார்ப்போம்.

இம்மாநாட்டில், சிறப்பான குறட்பணியைச் சிறப்பாக நடத்தி வரும் திருக்குறள் அமைப்பு ஒன்றுக்குத் தனி அமர்வு அளித்துள்ளனர். இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விழாக்களையும் 1330இற்கும் மேற்பட்ட ஆய்வரங்கங்களையும் நூற்றுக்கு மேற்பட்ட மாநாடுகளையும் நடத்தியுள்ளது இந்த அமைப்பு. வள்ளுவர் கோட்டத்தில் இதுவரை சனிதோறும் 975 ஆய்வரங்கங்களை நடத்தியுள்ளது. நானூறாயிரம் திருக்குறள் சான்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் திருக்குறள் விருதுகள் வழங்கியுள்ளது.  இதன் திருக்குறள் தலைமைத் தூதர் நூற்றுக்கணக்கிலான திருக்குறள் தூதர்களை அமர்த்தி அவர்கள் வழி குறள்நெறி பரப்புரை, குறளாய்வுகள் மேற்கொண்டு வருகிறார். நூற்றுக்கணக்கில் மேடையேற்றம், நூல்கள் வெளியீடு எனச் சிறப்பான பணிகளை ஆற்றி வரும் இதன் தலைமையிலுள்ள செம்மொழி விருதாளரான அறிஞருக்கு உலகின் உயர்ந்த விருது எதைக் கொடுத்தாலும் பொருத்தமாகத்தான் இருக்கும்.  ஆனால், ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு போல் இப்போது நடுநிலை என்ற போர்வையில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் களங்கம் ஏற்படுத்தி வருவது வேதனையாக உள்ளது. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்கும் உரிய அவர் என்ன செய்கிறார் என்பதை எழுதவே கை கூசுகிறது. திருவள்ளுவர், திருக்குறள் தொடர்பான மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளித்து உண்மையை வெளிக் கொணருகிறாராம். இதன்மூலம் அவ்வாறு சொல்பவர்கள் கருத்து தவறு என்பது மெய்ப்படுமாம். ஆனால், உண்மையில் இதுபோன்ற களங்க அமர்வுகள் நடைபெறவே அது வழி வகுக்கும்.

“1.  திருக்குறள் ஆரியத் தழுவல்  பெற்ற நூல்

2. ஆதி பகவன் என்னும்   பெயரைத் திருவள்ளுவர்  வேதங்களில் இருந்து

     பெற்றார்

3.  திருக்குறள் உலகப் பொதுமறை அன்று;   அது இந்துத்துவா நூல்

4.  திருவள்ளுவரின் காலம்    கி. பி. பத்தாம் நூற்றாண்டு

     எனச் சனாதனச்  சார்பாளர்கள் பரப்பி வரும்   கருத்துகளின் வன்மை மென்மைகளை ஆராய்வதே இவ்வமர்வின் நோக்கமாகும்.”  என்பனவே இவ்வமைப்பின் கூற்றுகள்.

     திருவள்ளுவர் தெலுங்கர், திருக்குறளை அதிகாரம் ஒன்றிற்கு ஒருவர் என நூற்று முப்பத்து மூவர் எழுதியுள்ளனர், திருவள்ளுவர் குறளி வகுப்பைச் சேர்ந்தவர்; எனவே, அவர் நூலுக்குக் ‘குறளி’ என்று பெயரிட்டு அது குறள் என மாறியது போன்ற வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை ஏன் விட்டு விட்டார் எனத் தெரியவில்லை.

உண்மையிலேயே நடுநிலை ஆராய்ச்சி என்றால், திருக்குறள் ஆரியத் தழுவல் அல்ல, திருக்குறள் உலகப் பொதுமறையே, திருவள்ளுவரின் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பன போன்று தலைப்புகள் வழங்கியிருக்கலாமே. சனாதனச் சார்பாளர்கள் கருத்துகள் எனக் குறிப்பிட்டால் நடுநிலைமை ஆகிவிடுமா? அக்கருத்துகளுக்கு ஏன் முதன்மை தர வேண்டும்?

“திருக்குறளில் வருணாசிரமக் கருத்துகள்” போன்ற கொடுந்தலைப்புகளும் ஆராயப்பட உள்ளன. தலைப்பில் அவ்வாறு குறிப்பிட்டு விட்டு வருணாசிரமக் கருத்துகள் இல்லை என முடிப்பது நடுநிலையாகாது.

 திருக்குறள் அமைப்பின் பெயரால் திருக்குறளை இழிவு படுத்தும் பொருண்மையிலான அமர்வை உடனே சார்சா மாநாட்டினர் நிறுத்த வேண்டும். திருக்குறளின் சிறப்புகளைக் கூற வேண்டுமென்றால் பொது அமர்விலேயே அவ்வமைப்பினர் தெரிவித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவ்வமைப்பிற்குத் தடை விதிக்க வில்லை என்றால் உலகத்தமிழன்பர்கள் யாவரும், குறள்நெறிப் பற்றாளர்கள் யாவரும் சார்சியா மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்.

நடுவுநிலைமை அல்லது கருத்துரிமை என்ற போர்வைகளில் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளுக்குத் தமிழ்நாட்டரசும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஓர் அமைப்பை முறையற்ற முறையில் பயன்படுத்தியும் திருவள்ளுவருக்குக் களங்கம் கற்பிக்கவும் நடைபெறும் மாநாட்டிற்கு எவ்வகை ஆதரவையும் தமிழ்நாட்டரசு தரக் கூடாது என்றும் வேண்டுகிறோம்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.   (திருவள்ளுவர்,திருக்குறள் 113)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

ஐப்பசி 20, 2053 / 06.11.2022




Sunday, August 11, 2019

தானமும் தவமும் தமிழே! -இலக்குவனா் திருவள்ளுவன், மின்னம்பலம்


தானமும் தவமும் தமிழே!

சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா என்பது பற்றி பார்த்தோம். அதேபோல் இந்த வாரம் தானம், தவம் என்ற சொற்களின் முகவரியைத் தேடும் ஆய்வில் மூழ்குவோம்.
தானம், தவம் ஆகிய சொற்களை அயற்சொற்கள் என மயங்கி நாம் தவிர்க்கிறோம். இவை நல்ல தமிழ்ச்சொற்களே!
அயற்சொல் அகராதி (ப.253) தானம் என்பது ஃச்தான(sthaana) என்னும் சமசுக்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் தவறாகக் கூறுகிறது. இதற்குப் பொருள் இடம், உறைவிடம், பதவி, கோயில், துறக்கம், இருக்கை, எழுத்துப் பிறப்பிடம், எண்ணின் இடம், ஆற்றல் சமநிலை, ஆற்றல் என விளக்கியுள்ளது. இவை தமிழ்ச் சொல்லான தானத்தின் பொருள்களாகும்.
தமிழ்ச்சொற்களுடன் முன்னெழுத்தாக ‘ஃஸ்’ சேர்த்து சமஸ்கிருதச் சொற்கள் உருவாகியுள்ளன. இதனை மறுதலையாக அஃதாவது சமசுக்கிருதத்தில் இருந்து தமிழ் வந்ததாக எண்ணுவது தவறு. சான்றுக்குச் சில பார்ப்போம்.
தனம் > ஸ்தனம்
தாணுநாதன் > ஸ்தாணுநாதன்
தானம் > ஸ்தானம்
தூலம் > ஸ்தூலம்
படிகம் > ஸ்படிகம்
எனவே, தமிழ்ச்சொல் தானத்திலிருந்துதான் ஸ்தான என்னும் சமசுகிருதச்சொல் உருவானது எனலாம்.
“நோற்றிட்டு, உடனாக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்தீதல் தானமாகும்” என்று சீவக சிந்தாமணியார் (1546) கூறுவது போல், ” நோற்பார்க்கு மட்டுமே ஈதல் தானம் என்பது சமணர் கொள்கை. தவம் : தன் உடல் நலனுக்கும், மகிழ்விற்கும் அறிவுக் கூர்மைக்கும் செய்யப்பெறும் நோன்மை முயற்சி. நோன்மை நோற்றல் கடைப்பிடி, அஃது இருக்கை, மனவொருமை, மெய்யறிமுனைவு முதலிய விரிவு நிலைகள் கொண்டது.” என்று பெருஞ்சித்திரனார் விளக்குகிறார்.
தானம், தருமம், கொடை, ஈகை எனப் பழந்தமிழ் மக்கள் கொடுப்பதையும் வகைப்படுத்தி உள்ளனர். பொதுநோக்கம், கோவில்பணி முதலான நற்செயல்களுக்காகத் தானாக மகிழ்ந்து தருவதைத் தானம் என்றும் கேட்போருக்குக் கொடுப்பதைத் தருமம் என்றும் கல்வி, கலைகளில் சிறந்தவர்களுக்குக் கொடுப்பதைக் கொடை என்றும் எளியோர்க்கும் இரந்தோர்க்கும் அளிப்பதை ஈகை என்றும் சொல்வதே தமிழர் வழக்கு. இவ்வகைப்பாட்டின் மூலமும் தானம் தமிழ் எனப் புரிந்து கொள்ளலாம்.
“தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே”(தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 50.1)
என்னும் தொல்காப்பியரின் வரையறையின் அடிப்படையில் ‘தா’ என்னும் வேரிலிருந்து உருவான ‘தானம்’ தமிழ்ச்சொல்லே என அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
தமிழ், திராவிட மொழிகள் என அழைக்கப்பெறும் தமிழ்க்குடும்ப மொழிகளுக்குத் தாய், ஆரியத்திற்கு மூலம் என்றும் காட்டுவது ‘தா’ என்னும் வேர் மூலம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். தமிழ் வேர் மூலமான ‘தா’ என்பதில் இருந்து பிறந்த ‘தானம்’ என்னும் சொல்லும் தமிழாகத்தானே இருக்கும்.
“தா என்னும் சொல் தமிழுக்கே யுரியதென்பது வெள்ளிடைமலை.” என அவரே திருக்குறள் தமிழ் மரபுரை முன்னுரையில் கூறுகிறார்.
மனுநீதி, “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்” எனத் தானம் வாங்குவதற்குரிய முதல் தகுதி பிராமணனுக்கே உள்ளதாகக் கூறுகிறது. இதற்குக் காரணமாக அது கூறுவது, உலகில் உள்ள நிலம், சொத்து, உடைமை, உடை ஆகிய யாவும் பிராமணனுக்குரியனவே. எனவே, பிராமணன் தானம் வாங்கினாலும், அது அவனது பொருளே, அவனது உடையே, அவனது சொத்தே, அவன் தயவினால்தான் மற்றவர்கள் அவற்றைத் துய்க்கிறார்கள் என்கிறது. ஆனால் தமிழர்களோ தம் எலும்பும் பிறர்க்கே என்னும் அன்பு நெறியில் வாழ்ந்து, பாகுபாடின்றி யாவருக்கும் தானம் வழங்குகிறார்கள்.
ஆதலின் தானம் தமிழே என்பதில் ஐயமில்லை.
இனித் ‘தவம்’ குறித்துப் பார்ப்போம்.
தவம், காடு என்னும் பொருளுடைய தவ(dava) என்னும் சொல்லில் இருந்து வந்ததாக அயற்சொல் அகராதி (பக்.236) கூறுகிறது. அஃதாவது காட்டில் மேற்கொள்வதால் அச்சொல்லில் இருந்து தவம் என்னும் சொல் வந்ததாம். தவம் என்னும் தமிழ்ச்சொல்லிற்கே காடு என்னும் பொருள் இருக்கும் பொழுது ஆரியத்தை நோக்கி ஓடுவானேன்?
தவசியர் (1), தவத்தின் (1), தவத்துக்கு (1), தவத்தோற்கே (1). தவம் (10), தவமும் (1) எனத் தவம் பற்றிய சொற்கள், சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றன.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். (திருக்குறள் 19)
எனத் திருவள்ளுவர் தானம், தவம் ஆகிய இரு தமிழ்ச்சொற்களையும் ஒரே குறளிலேயே பயன்படுத்தி உள்ளார்.
தவம் என்னும் சொல், வழிபாடு, இல்லறம், கற்பு, வாழ்த்துப்பா (தோத்திரம்), தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு, வெப்பம், காட்டுத் தீ, நோன்பு, நல் வினை, நற் செயல், நற்பயன் (புண்ணியம்) முதலிய பொருள்கள் உடைய தமிழ்ச்சொல்.
தவ வாழ்வு வாழ்பவர்களைத் தவத்தர் என்பதும், தவப்பெண்டிரைத் தவத்தி, தவப்பெண், தவமுதல்வி, தவமுதுமகள், என்றெல்லாம் அழைப்பதும் தவமுதுமகன், தவவீரர் எனத் தவவாழ்வு வாழும் ஆடவரை அழைப்பதும், தவ வாழ்க்கை வாழ்பவர்களைத் தவத்திரு எனக் குறிப்பிட்டு அழைப்பதும் தவப்பள்ளி, தவச்சாலை முதலான குடில்களும் தவவேடம், தவவேள்வி முதலாகிய சொற்களும் ‘தவம் செய்து பெற்ற பிள்ளை’ என்னும் உலகவழக்கும் தவம் என்னும் தமிழ்சொல் மக்கள் வாழ்வில் வேரூன்றி இருப்பதை உணர்த்துகின்றன.
”தானமும் தவமும் தான்செயல் அரிது” என்கிறார் ஒளவையார்.
தவம் என்றால் பற்றை நீக்கி உடலை வருத்திக் கொண்டு இறைவனை வழிபடுதல். அஃதாவது தவம் என்றால் தன்னை வருத்தி நோன்பு இருத்தல் எனப் பொருள்.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு (திருக்குறள் 261)
எனத் தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தலும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவம் எனத் திருவள்ளுவர் தவத்திற்கு இலக்கணம் கூறுகிறார். தவம் எனத் தனிஅதிகாரமே அமைத்துள்ளார். சிலர் திருக்குறளில் சமசுகிருதச் சொற் கலப்பு இருப்பதாகக் கூறினாலும் பேரா.சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் திருக்குறள்முழுமையும் தனித்தமிழ்ச் சொற்களே உள்ளதாக நிறுவியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் பிறர் சமசுகிருதச்சொற்கள் எனக் கூறிய பாக்கியம் முதலான சொற்கள் யாவும் தமிழே என உணர்த்தியுள்ளனர்.
அறிஞர்களின் கருத்துகள், உலக வழக்கு, இலக்கிய வழக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தவம் தமிழ்ச்சொல்லே என உறுதிபடக் கூறலாம்.
ஆகவே, தானமும் தவமும் தமிழே எனத் தெளிவோம்! தமிழ் வளரத் தானம் புரிவோம்! தமிழ் பரவத் தவப்பணி மேற்கொள்வோம்!

இலக்குவனா் திருவள்ளுவன்

மின்னம்பலம், 11.08.2019

Followers

Blog Archive