Showing posts with label மின்னம்பலம். Show all posts
Showing posts with label மின்னம்பலம். Show all posts

Wednesday, April 6, 2022

மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!, இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள்

தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!

மின்னம்பலம்

மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவே, முதல்வரின் இப்பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்பட்டால் போதுமானது. 3 ஆவது மொழி என்பது பிற மொழியினருக்கு மட்டுமே இருக்க வேண்டும். எனவே, கல்வி நிலையங்களில் எந்த வகையிலும் இந்திவடமொழி திணிப்பு இல்லாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும்

நவோதயா பள்ளிகளுக்குரிய முழுத் தொகையையும் தமிழக அரசே பெற்று முழுமையான தரமான தமிழ்வழிக்கல்வி நிலையங்களாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்” என்றும் நாம் முன்னர்க் கூறியதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். கடந்த ஆட்சியில் கூறிய கருத்துகள்தாம் இவை. எனினும் எதையும் திட்டமிட்டு மக்கள் நலனில் கருத்து செலுத்தி ஆட்சி செய்யும் முதல்வர் மு..தாலின் தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்க மாதிரிப் பள்ளிகளை அடித்தளமாகக் கொண்டு கல்விப்பணியாற்ற வேண்டுகிறோம்.

மாதிரிப் பள்ளி என்பது கட்டமைப்பிலும் உயர்ந்து இருக்க வேண்டும்; கல்வி முறையிலும் சிறந்து இருக்க வேண்டும்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் – ஆங்கிலேயர் வெளியேறும் வரை – தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வி எவ்வாறு இருந்தது என்பதற்கு இரண்டு சான்று.

செக்கிழுத்த செம்மல், தமிழறிஞர் ..சிதம்பரம் அவர்கள் தன் வாழ்க்கை வரலாற்றில்,

அறிவரிச் சுவடி ஆத்தி சூடி

செறிவுறக் கேட்டுச் சிந்தையுட் கொண்டேன் ;

எண்ணின் சுவடி எழுதும் சட்டம்

கண்ணுறக் கொண்டு கருத்தொடு பழகினேன்

உலக நீதி ஒழுக்க இயல்பு

பலமுறை கேட்டுப் பண்பொடு பயின்றேன்

கொன்றை வேந்தன்குழியின் பெருக்கம்,,

வென்றி வேற்கைவெண்பா மூதுரை

இயற்றிய ஆன்றோர் எண்ணிய பொருளுடன்

பயிற்றிய வண்ணம் பண்புறக் கேட்டேன்.

எனக் குறிப்பிடுகிறார்.

இவற்றுள், ‘குழியின் பெருக்கம்’ என்பது ‘குழிப்பெருக்கம்’ எனும் கணித நூல்; ‘வென்றிவேற்கை’ என்பது ‘வெற்றிவேற்கை; வெண்பா’ என்பது ‘நளவெண்பா’.

கல்வி என்பது விளையாட்டுக் கல்வியும் இணைந்ததே. தான் விளையாடிய விளையாட்டுகள் குறித்துப் பின்வருமாறு தமிழறிஞர் வ.உ.சிதம்பரம் (பிள்ளை) கூறுகிறார்.

சுவர்மேல் நடத்தல்தொன்மரம் ஏறுதல்,

கவண் கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,

கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,

எண்ணினைச் சுவாசம் இழக்காதி யம்பல்,

குதிவட் டாடுதல்கோலி தெறித்தல்,

குதிரைமீ தூர்தல்கோலேறி நடத்தல்,

காற்றிரி எறிதல்கான்மாறி யோடுதல்,

மேற்றிரி பந்தின் விளையாட்டுப்பற்பல.

சடுகுடுகிளியந் தட்டுபல்லி,

தெடுகடு மோட்டம்நீர்விளை யாட்டம்,

கம்பு சுற்றுதல்கத்தி வீசுதல்,

தம்மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,

கசாத்துபசுக்கிகலப்புறு குசுத்தி,

நிசத்துச் சண்டையில் நீந்தும் முறைகள்,

தாயம்சோவிசதுரங்கம்சொக்கட்டான்,

காயிதச் சீட்டுக் கரந்திருந் தாடுதல்,

வெடிகொடு சுடுதல்வில்கொடு தெறித்தல்,

அடிபிடி சண்டை அளவில புரிந்தேன்.

என்கிறார். இவற்றுள் தம்மினை அடக்குதல் என்றால் மூச்சினை அடக்குதல். இவையெல்லாம் வலிமையான உடல் வளத்திற்கும் அதன் வழி மன நலத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைவன.

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தம்முடைய ‘என் வாழ்க்கைப்போர்’ தன்வரலாற்று நூலில், தம் 7 ஆம் அகவைக்குள்ளாகவே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிசாரம், கிருட்டிணன் தூது, நிகண்டுகள், கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் கற்றதைக் குறிப்பிட்டுள்ளார். மாலையில் விளையாட்டு, இரவில் நாடகப்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், வழிபாட்டுப் பாடல் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டமையால் தம் அகவைக்குரிய முழுமையான கல்வியைப் பெற்றதையும் தெரிவிக்கிறார்.

இப்பொழுதெல்லாம் முதுகலையில் கூட முழு நூல் எதையும் படிப்பதில்லை. எல்லாம் அரைகுறைப்படிப்புதான். சிறப்பான கல்வியை அரைகுறைப்படிப்பு எவ்வாறு தரும்?

மாதிரிப்பள்ளிகள் முழுமையான நூற்கல்வியையும், விளையாட்டு, கலைக்கல்வியையும் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

பத்து அகவை வரை எழுத்துக்கல்விக்கு முதன்மை அளிக்காமல் கேள்வியறிவு மூலம் வாய்மொழிக் கல்விக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்பது பேரா.இலக்குவனார் கருத்து. கல்வி உளவியலாளர்களும் இவ்வாறுதான் வலியுறுத்துகின்றனர். எனவே, மாதிரிப்பள்ளிகளில் நாமும் மனப்பயிற்சியை வளர்த்தெடுக்கும் கல்வி முறையால் அறக்கருத்துகளைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதன் மூலம் நல்ல தலைமுறையினரை உருவாக்க இயலும். மனப்பயிற்சிக் கல்வி என்பது படைப்புத் திறனை வளர்க்கும் தற்சிந்தனைக் கல்வியாக மாறவேண்டும். அதற்கு மாதிரிப்பள்ளிகள் வாய்ப்பளிக்க வேண்டும்.

“தமிழ்மொழிக்கல்விக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் முத்தமிழ்ப்போர்வாள் பேரா.சி.இலக்குவனார் முழக்கத்திற்கு முதல்வர் மு.க.தாலின் செவி மடுக்க வேண்டும். முந்தைய ஆட்சியாளர்கள் வழியில் செல்லாமல், சிறப்பாகப் பணியாற்றி வரும் அவர், தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தமிழ்க்கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப அயல்மொழியினருக்கு மட்டும் அயல்மொழிக் கல்வியை அளித்தால் போதுமானது. அதுபோல் தமிழர்க்கு உயர்கல்வியில் அயல்மொழி கற்பதற்கான வாய்ப்பைத் தந்தால் போதுமானது ‘என்பதை நினைவூட்டித் தமிழ்வழிக்கல்வியைமட்டுமே மாதிரிப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்வழிக்கல்விக்காகப் பல போராட்டக்களங்களைக் கண்ட பேரா.சி.இலக்குவனார் சிறைவாழ்க்கையையும் மேற்கொண்டார். தமிழ் நாட்டில் உலகம் போற்றும் அறிவியல் அறிஞர்களோ பொருளியல் வல்லுநர்களோ தோன்றாமைக்குக் காரணம் என்ன என வினா தொடுக்கிறார்; அவர், நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே “பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய நாம், இரு நூறாண்டுகட்குக் குறைந்த வரலாற்றினுடைய நாடுகளின் நல்லன்பை நாடி உதவி பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ” [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965]. என்று, எல்லா நிலையிலும் தமிழ்வழிக்கல்வி வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வலியுறுத்தும் பின்வரும் கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டரசு பின்பற்ற வேண்டும்.

  1. மழலை நிலையில் திருக்குறளையும் ஆத்திசூடி முதலான பிற அற நூல்களையும் கற்பிக்க வேண்டும்.
  2. மழலை நிலையிலேய தமிழர் விளையாட்டுகளிலும் தமிழ்க்கலைகளிலும் பயிற்சி அளிக்க வேண்டும்.
  3. தமிழ்நாட்டில் உயர்நிலைப்பள்ளி வரை தமிழ் மட்டுமே மொழிப்பாடமாக இருத்தல் வேண்டும்.
  4. கல்வியகங்களின் எல்லா நிலைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  5. தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் தமிழ்வழிப்படித்தவர்களையே அமர்த்தல் வேண்டும்.
  6. பட்ட வகுப்புகளில் திருக்குறளுக்கெனத் தனித்தாள் இருத்தல் வேண்டும்.
  7. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறளை அனைவரும் அறியும் வகையில் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

இவற்றின் அடிப்படையில் மாதிரிப் பள்ளிகளைத் தமிழ்ப்பால் ஊட்டும் தாய்த் தமிழ்ப் பள்ளிகளாக அமைத்தல் வேண்டும். இப்போது நடந்துவரும் தாய்த் தமிழ்ப்பள்ளிகள் கட்டமைப்பில் சிறந்து விளங்க அரசு உதவி புரிதல் வேண்டும்.

– இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம், பங்குனி 23, 2053 / 06.04.2022

Sunday, May 30, 2021

தண்டனைக் குறைப்பு: கிணற்றுத் தவளைகளும் உலக நீதியும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

      30 May 2021      No Comment



தண்டனைக் குறைப்பு: கிணற்றுத் தவளைகளும் உலக நீதியும்!

இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட எழுவரும் தேவையின்றிச் சிறையில் காலவரம்பு கடந்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இக்கொலை வழக்கு உசாவல் அதிகாரிகளும் நீதித்துறையினரும் மனித நேயர்களும் இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னரே இவர்கள் விடுதலையை வலியுறுத்திய இன்றைய முதல்வர் மு.க.தாலின், அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, குடியரசுத்தலைவருக்கு மடல் அனுப்பியுள்ளார்.

கடந்த மே 20அன்று குடியரசுத்தலைவருக்கு இராசீவு காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் எழுவரையும் விடுதலை செய்ய உத்தரவிட மடல் எழுதி நேரில் கொடுக்கச் செய்துள்ளார்.

“எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உண்டு என்று கூறித் தமிழக ஆளுநர் அக்கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.” இதனை மடலிலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் மகுடைத் தொற்றை (கொரோனா) முன்னிட்டுச் சிறைவாசிகளை விடுதலை செய்து வருகின்றனர். பிரான்சு முதலான நாடுகளில் இதற்கெனத் தனிச்சட்டமே இயற்றி விடுதலை செய்து வருகின்றனர். இதற்கேற்பவே மகுடைத் தொற்றுப் பரவலைத் தடுக்க சிறைவாசிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. இதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரசாரின் சட்ட அறிவு

தோழமைக்கட்சியினர், எதிர்க்கட்சியினர் எனப் பல கட்சியினரும் மனித நேயர்களும் இதை வரவேற்றுள்ளனர். மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசிடம் கொடுப்பானேன் என்றும் சிலர் கேட்டுள்ளனர். இருப்பினும் பேராயக்(காங்கிரசு)கட்சியினர் இது குறித்துத் தெரிவிக்கும் கருத்துகள் சட்ட அறிவே இல்லாத இவர்களையா மக்கள் சார்பாளர்களாகத் தேர்ந்தெடுத்து வருகிறோம் என நம் இழிநிலையை உணர வைக்கிறது. அக்கட்சியின் தமிழகத் தலைவர் அழகிரி, “இவ்விடுதலை சமுதாயத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விடும். எந்த ஒரு குற்றவாளிக்கும், நீதிமன்றம்தான் தண்டனையும், விடுதலையும் வழங்கும் முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெத்த படித்தவரின் மகன் எனப் போற்றப்படும் கார்த்தி சிதம்பரம், “ஆயுள் தண்டனை கைதிகளைச் சில ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யலாம் எனச் சட்டத்தில் இடமிருந்தால் எனக்கு மறுப்பு இல்லை” எனச் சொல்லியுள்ளார்.

இவர்கள் இவ்வாறு கூறுவது முதல் முறையல்ல. திருநாவுக்கரசர் போன்ற பேராயக்கட்சித்தலைவர்களும் இவ்வாறே கூறி வருகின்றனர். இதையறியும் அப்பாவிக் கட்சியினர் சிலரும் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதா எனக் கூக்குரலிடுகின்றனர். ஆனால் இத்தகைய மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுவதற்கும் அவ்வப்பொழுது சட்டப்படியான மறு மொழிகளை அளித்தும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை.

அரசுதான் விடுதலை செய்யும்

எந்த நாடாக இருந்தாலும் நீதி மன்றத்திற்குக் கேட்பிற்கு வரும் வழக்கில் குற்றமற்றவராயின் விடுதலை செய்யவும் குற்றம் இழைத்திருப்பின் தண்டிக்கவும்தான் சட்டப்படியான அதிகாரம் உள்ளது. அதே நேரம் எந்த நீதி மன்றத்திற்கும் தான் வழங்கிய தீர்ப்பைத் திருத்தவோ தண்டனையைக் குறைக்கவோ நீட்டவோ அதிகாரம் இல்லை. எல்லா நாடுகளிலும் சிறை நடைமுறை நூல்களில் தண்டனை என்பது மன்னித்துத் திருத்துவதையும் சேர்த்துதான் எனக் குறிப்பிட்டிருப்பர்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை (திருக்குறள் 579)

என்னும் குறள்நெறி தண்டனை வழங்கப்பட வேண்டியவர்களையும் மன்னித்துத் திருத்துவதே சிறந்த பண்பு என்கிறது. இதைத்தான் உலக நாடுகள் பின்பற்றுகின்றன.

உலகின் எல்லா நாடுகளிலும் தண்டனைவாசிகளை முன்கூட்டி விடுதலை செய்வது சிறைத்துறைகளின் பரிந்துரைகள் அடிப்படையில் அரசுகள்தான். உலகெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனைக் குறைப்புப் பிரிவு (remission section)என ஒன்று இயங்குகிறது. எனவே, தண்டனைக் குறைப்பு என்பது உலக நடைமுறை.

எனவே, தண்டனைக் குறைப்பு என்பது சிறைத்துறையின் வேலை. இதில் நீதிமன்றங்கள் தலையிட வேலையில்லை. சிறைத்துறையின் பரிந்துரைகளுக்கிணங்க மாநில அரசுகள் ஆணையிடுகின்றன .

உ.பி.யின் பெருமன்னிப்பு

உ.பி.யில் பெருமன்னிப்பு வழங்க அரசமைப்புச்சட்டக் கூறு 161 தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இயோகி ஆதித்தியநாத்து அரசு 2018இல் கொள்கை முடிவு எடுத்து 1500 ஆயுள் தண்டனைவாசிகளை 2019 சனவரியில் விடுதலை செய்தது. இதே அரசமைப்புச் சட்டப்பிரிவின்படியும் குற்ற நடைமுறைச்சட்டம் பிரிவுகள் 432, 433, 433(அ) இன் கீழும் அசாம் அரசும் நூற்றுக்கணக்கான சிறைவாசிகளை விடுதலை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு உட்பட எல்லா மாநில அரசுகளும் இத்தகைய முன்கூட்டிய விடுதலைகளை வழங்கித்தான் வருகின்றன.

உலக நாடுகளில் பொதுவிடுதலை

தாய்லாந்தில் மகா வச்சிரலாங்காரன் அரசரின்(King Maha Vajiralongkorn) 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கிய அரச மன்னிப்பிற்கிணங்க ஆகத்து 2020 இல் 40,000 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். தொடர் நடவடிக்கையாகப் பின்னர் 2,00,000 சிறைவாசிகளை விடுதலை செய்தது. இதற்கு முன்னரும் திசம்பர் 2011 இல் தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேசின்(Thailand’s King Bhumibol Adulyadej) 84 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 2,700 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவரே அக்குடோபர் 2020இல் 931 சிறைவாசிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

மொரோக்கோ நாட்டின் ஆறாம் முகம்மது அரசர்(King Mohammed VI) ஏப்பிரல் 2020இல் 5,654 சிறைவாசிகளைச் சிறையிலிருந்து விடுவித்தார். தேசிய, சமய விடுமுறைகளின் பொழுது மன்னிப்பு வழங்குவதற்கேற்பப் பக்குரீத்து எனப்படும் ஈகைத் திருநாளை(Eid Al Adha) முன்னிட்டு, ஆகத்து 2020இல் 752 சிறைவாசிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதன் தொடர்ச்சியாக அக்குடோபர் 2020இல் 931 சிறைவாசிகளுக்கு விடுதலை அளித்தார். அதே ஆண்டிலேயே மன்னர்-மக்கள் புரட்சியை முன்னிட்டு 550 சிறைவாசிகளுக்கு விடுதலை வழங்கினார்.

இவ்வாறு வரலாறு நெடுக எல்லா நாடுகளிலும் நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டர்களை அரச விடுதலை செய்வதே ஏற்கப்பட்ட நீதியாகும்.

இந்த அடிப்படை அரசியலறிவுகூடப் பேராயக்கட்சியினரிடம் இல்லை என்றால் அவர்கள் அரசியலைவிட்டே ஒதுங்க வேண்டும். அறிந்தே வஞ்சக எண்ணத்துடன் திரித்துப் பேசுகிறார்கள் என்றால் தண்டிக்கப்பட வேண்டும். இராசீவு காந்தி குடும்பத்தினர் மன்னிப்புக் கருத்திற்கு எதிராகப் பேசுபவர்களை அக்கட்சியிலிருந்தே தலைமை நீக்க வேண்டும். அதே நேரம் பாதிக்கப்பட்டர்களின் மன்னிப்பு அல்லது மன்னிப்பு இன்மைக்கேற்ப எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பதையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நடைமுறைகளுக்கிணங்கவே முன் விடுதலை வழங்கப்படுகிறது என்பதையும் கிணற்றுத்தவளையாகக் கூக்குரலிடுவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இந்த எழுவரைப் பொறுத்தவரை புலனாய்வுத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர் என வழக்கு தொடர்பானவர்கள் குற்றம் சாட்டப்பட்ட சாத்தனுக்கு மாற்றாக அப்பாவியான சாத்தனை வழக்கில் சிக்க வைத்தது, இரவிச்சந்திரன் வாக்கு மூலத்தை மாற்றி வைத்தது எனப் பல முறைகேடுகள் நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் எனப் பலமுறை தெரிவித்துள்ளனர். அப்பாவிகளைக் காலத்தை நீட்டித்துச் சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மனித நேயமல்ல என்ற உணர்வுதான் நமக்கு வரவேண்டும். கொலைக்கு எதிரானவர்கள் போலவும் அறவாணர்கள் போலவும் சட்டம் தெரிந்தவர்கள் போலவும் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா என்று அறியாமையுடன் கேட்பதும் அறிந்தே குழப்பம் விளைவிப்பதாகும்.

மன்னர்கள், தலைவர்கள் பிறந்தநாள்களின் பொழுதும் ஆட்சிப்பொறுப்பில் ஏறும்பொழுதும் சிறைவாசிகளை விடுதலை செய்வது உலக நாடுகளில் காலங்காலமாக உள்ள நடைமுறையே!

– இலக்குவனார் திருவள்ளுவன்

– மின்னம்பலம்

பகல் 1 ஞாயிறு 30 மே 2021



Friday, June 12, 2020

சிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்


சிறப்புக் கட்டுரைபாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக!

தமிழ்நலம் தொடர்பான அரசாணை வெளியிடுவதாகச் செய்தி வந்தது என்றால் ஆராயாமல் ஆரவாரத்துடன் தமிழ் அன்பர்கள் வரவேற்பர். தமிழில் படித்தோருக்கான வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆணை குறித்த உண்மை நிலை புரியாமல் அதைத் தலையில் வைத்துக் கொண்டாடினர். இப்பொழுது ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் ஒலிக்கவேண்டிய முறை குறித்த அரசாணை குறித்த செய்தி வந்ததும் தலைகால் புரியாமல் குதித்து வரவேற்கின்றனர்.
“தமிழ் நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களைத் தமிழ் உச்சரிப்பைப்போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல் என்ற அறிவிப்பினைச் செயல்படுத்தல்பற்றிய அறிவிக்கை என அரசாணை (நிலை) எண் 36 தமிழ் வளர்ச்சி செய்தி(த.வ.1.1.)த்துறை 27, பிப்பிரவரி / மாசி 15, 2051 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் தமிழ்வளர்ச்சித்துறைக்கான நல்கைக்கோரிக்கையின் பொழுது துறை யமைச்சர் அறிவித்ததற்கிணங்க இவ்வாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” இவ்வாணையில் 1018 ஊர்களுக்கான ஆங்கில எழுத்துக்கூட்டலைத் தெரிவித்துள்ளனர். இதனை முதற்கட்டம் எனக் கூறியுள்ளதால் தொடர்ந்து அவ்வப்பொழுது ஆணைகள் வரும் என எதிர் பார்க்கலாம்.
1994 இல் வெளிவந்த கையேடு
இவ்வாறு ஊர்ப்பெயர்களுக்கான ஆங்கில ஒலிப்பெழுத்திற்கான ஆணை பிறப்பிப்பது இது முதல் முறையல்ல. அவ்வப்பொழுது நடைபெறுவதுதான். ‘தமிழ் ஆட்சிமொழித் திட்டம் – வரலாறும் செயற்பாடும்(1994)’ என்னும் கையேட்டிலேயே இது பின்வருமாறு குறிக்கப்பெற்றுள்ளது.

நிலவியல் பெயர்களுக்கு எழுத்துக்கூட்டல் வழங்கல்:
அந்நியர் ஆட்சி ஆதிக்கத்துடன் அந்நிய மொழிகளின் ஆதிக்கமும் தொடர்ந்து பரவி, வட்டார மொழிகளைச் சிதைத்ததன் காரணமாக நிலவியல் பெயர்கள் (Geographical Names)பல உருக்குலைந்தன. அவற்றைத் திருத்தியமைக்கும் வகையில் சரியான தமிழ் எழுத்துக் கூட்டலை வழங்கும் பணி தமிழ்வளர்ச்சித்துறையைச் சார்ந்து அமைந்துள்ளது. அஞ்சல் நிலையங்களுக்கும் இருப்பூர்தி நிலையங்களுக்குமான பெயர்களுக்குமான எழுத்துக் கூட்டல்களும் இவ்வியக்ககத்தால் அளிக்கப்பட்டு வருகின்றன.” அவ்வாறு திருத்தமான ஒலி பெயர்ப்பு வழங்கப்பெற்ற எட்டு ஊர்களின் பெயர்களும் எடுத்துக்காட்டாகக் குறிக்கப்பெற்றுள்ளன. அவை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பரங்கிப்பேட்டை, செங்கற்பட்டு, மாமல்லபுரம், திருநின்றவூர், கோடிக்கரை, கொள்ளிடம் ஆகியனவாகும். ஆனால் இவற்றில் ஆகாரத்திற்கு ஆங்கிலத்தில் ஓர் ஏ(A) தான் குறிக்கப்பெற்றுள்ளன. இப்போது ஆகார நெடிலைக்குறிக்க இரண்டு ஏ (AA) பயன்படுத்தப்பெற்றுள்ளன.

பாராட்டுக்குரியது எனினும் திரும்பப் பெற வேண்டும்!
எனினும் இப்போதைய ஆணை பாராட்டிற்குரியது. ஏனெனில், திரளான ஊர்ப்பெயர்த் தொகுதியை, 1018 சொற்களுக்கான ஒலி பெயர்ப்பை, ஒருசேர அளித்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொருவரும் தத்தம் ஊர்ப்பெயர் பட்டியலில் உள்ளதா எனத் தேட முயல்வதும், இல்லாவிடில் எப்பொழுது அதற்கான ஆணை வரும் என்று எதிர்பார்ப்பதுமான உணர்ச்சியை இவ்வாணை உண்டாக்கியுள்ளது.
பாராட்டிற்குரிய ஆணையைத் திரும்பப்பெறச்சொல்வது ஏன் என்கிறீர்களா? இதில் சீர்மை இல்லை. இதுவே இவ்வாணையின் குளறுபடியைத் தெளிவாக்குகிறது.
ஆகாரத்திற்கு இரண்டு ஏ (AA) என வரையறுத்துப் பயன்படுத்தி இருந்தாலும் பல ஊர்ப்பெயர்களில் ஆகாரத்திற்கு ஓர் (A) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றுக்குப் பின்வருவனவற்றைக் காண்போம். ஆணையில் உள்ளதை உள்ளவாறு தர வேண்டும் என்பதற்காகக் கிரந்த எழுத்து இடம் பெற்றுள்ளது. அரசு கிரந்த எழுத்து நீக்கிய ஊர்ப்பெயரை ஏற்று அறிவிக்க வேண்டும். எண்கள் அரசாணையில் குறிக்கப்பெற்றுள்ள ஊர் வரிசை எண்கள்.
36 திருவான்மியூர் – THIRUVANMIYOOR
102 வத்தராயன் தெத்து – VATTHARAYAN TETTHU
103 கிளாவடி நத்தம் – KILAVADINATTHAM
105 சீயப்பாடி – SEEYAPPADI
923 இராணிப்பேட்டை – RANIPETTAI
925 ஆற்காடு – AARKADU
934 ஜி.பாப்பாங்குளம் குரூப் – KA. PAPPANKULAM
971 மு.வாடிப்பட்டி – MU. VADIPATTI
207 அதியமான் கோட்டை – ATHIYAMAN KOTTAI
28 சிந்தாதறிபேட்டை – CHINTHADHARIPETTAI
முதலில் குறிப்பிட்டுள்ள கையேட்டில் கல்லார் – கல்லாறு, அடையார் – அடையாறு எனச் செம்மையாக மாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பர். அவைபோல் இப்பொழுதும் செய்திருக்கலாம். சான்றாகச் சிந்தாதறிபேட்டை என்பதன் சரியான பெயர் சின்னதறிப்பேட்டை. முகப்பேறு என்பதன் சரியான பெயர் முகப்பேரி. இவ்வாறு தமிழிலும் பெயர்ச்செம்மைக்கு வழி வகுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஓகார நெடிலுக்கும் ஓகாரக் குறிலுக்கும் ஒரே ஓர்  (O)மட்டும் பயன்படுத்தப்பெற்றுள்ளதும் மற்றொரு குளறுபடியாகும். எனவே, அதியமான் கோட்டை என்பது அதியமன்கொட்டை என்றாகிறது. இரண்டு ஓ (OO) ஊகாரத்தைக் குறிக்கப் பயன்படுத்துவதால் குழப்பம் வரும் என்றால் தக்க அறிஞர்களைக் கலந்து பேசியிருக்க வேண்டும்.
ஒரே ஊர்ப்பெயரிலேயே ஓர் ஆகாரத்திற்கு ஓர் (A) யும் மற்றோர் ஆகாரத்திற்கு இரண்டு (AA) யும் பயன்படுத்தும் குழப்பங்களும் உள்ளன. சான்று காண்க:
359 தாராபுரம் வடக்கு – THARAAPURAM VADAKKU (ஆங்கில ஒலிப்பில் ‘தா’ குறில், ‘ரா’ நெடில்)
361 தாராபுரம் தெற்கு – THARAAPURAM THERKU (ஆங்கில ஒலிப்பில் ‘தா’ குறில், ‘ரா’ நெடில்)
376 மாம்பாடி – MAAMBADI (ஆங்கில ஒலிப்பில் ‘மா’ நெடில் ‘பா’ குறில்,)
368 சேனாபதி பாளையம் – SENAPATHI PAALAYAM (ஆங்கில ஒலிப்பில் ‘னா’ குறில், ‘பா’ நெடில்)
இப்பொழுது இவ்வூர் SENATHIPATHYPALAYAM என ஆங்கிலத்தில் திருத்தமாகக் குறிக்கப் பெறுகிறது. அதையே தமிழிலும் பின்பற்றி அதற்கேற்ப எழுத்துக் கூட்டலை அறிவித்து இருக்கலாம்.
மடிப்பாக்கம் என்பதற்கு மடிப்பாக்கம் என இரண்டு ஏ (AA) பயன்படுத்தி MADIPPAAKKAM என மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார். ஆனால், மடிப்பக்கம் என்பதுபோல் ஓர் ஏ(A) மட்டும்குறித்து – MADIPPAKKAM (வ.எண். 46) என ஆணை வழங்கியுள்ளனர்.
இடையிலே ஒற்றெழுத்து சேர்க்கப்படாமல் சில ஊர்ப்பெயர்கள் உள்ளன. அவற்றைத் திருத்தமாகக் குறிக்கவும் ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். சான்றுக்குச் சில வருமாறு:
389 கீழ்பிடகை அப்பன்கோயில்
395 கீழ தூத்துக்குழி
396 மேல தூத்துக்குழி
398 கீழ செக்காரக்குடி
இன மெய்யெழுத்துடன் உயிர்மெய்வரும்போது உரிய எழுத்தை இரட்டிப்பாகக் குறித்துள்ளனர். சான்றாகக் கிழக்கு என்றால் KIZHAKKU, கீழ செக்காரக்குடி என்றால் KEEZHA SEKKAARAKKUDI, பேட்டை என்றால் PETTAI என்பனபோல். ஆனால் பல ஊர்களின் பெயர்கள் அவ்வாறு குறிக்கப் பெறவில்லை.
  1. KEEZHA THOOTHUKUZHI
396 . MELA THOOTHUKUZHI
என்பன போல் இன மெய்யெழுத்திற்கான ஒலி பெயர்ப்பு இல்லை.
தெருப்பெயர்களில் சாதிவாலை அறுத்துவிட்டோம் என்றார்கள். ( சில இடங்களில் இன்னும் சாதிவால் ஒட்டிக்கொண்டுதான் உள்ளது.) ஆனால்ஊர்ப்பெயர்களில் உள்ள சாதிப்பட்டத்தை நீக்கவில்லை.
181 அ.ரெட்டி அள்ளி
196 நாயக்கன் அள்ளி
957 ரெட்டியார் சத்திரம்
என்பன சான்றாகும். நாங்கள் எழுத்துக்கூட்டலில்தான் கருத்து செலுத்தினோம். இதில் இல்லை என்பது பொருந்தாது. எல்லா இடங்களிலும் அரசாணை பின்பற்றப்படுகிறதா எனப் பார்க்க வேண்டும். அதன்படி ஊர்ப்பெயர் மாற்றங்களை அறிவித்து அவற்றுக்கேற்ப ஆங்கில எழுத்துக் கூட்டலைஅறிவித்திருக்க வேண்டும்.
எகரத்திற்கும் ஏகாரத்திற்கும் ஒகரத்திற்கும் ஓகாரத்திற்கும் எவ்வேறுபாடும் இல்லாமல்தான்
24 கோயம்பேடு – KOYAMBEDU
  1. செஞ்சேரி – SENJERI
என்பனபோல் ஊர்ப்பெயர்களைக் குறித்துள்ளனர். ஆனால் வேலூர் என்பதற்கு மட்டும்
921 வேலூர் – VEELOOR
எனக் குறித்துள்ளனர். ஆனால்
937 மேலூர் – Meloor போன்ற பிற ஏகார எழுத்திற்கு இவ்வாறு குறிக்கவில்லை.
அதே நேரம் இரண்டு ஈ (EE) என்பது ஈகாரமாகவே
392 மீனவர் குடியிருப்பு MEENAVAR KUDIYIRUPPU என்பதுபோல் குறிக்கப்பெற்றுள்ளது.
வேலூருக்கான ஒலிப்பு சரி யென்றால் மீனவர் என்பது மேனவர் ஆகிறதுமீனவருக்கான ஒலிப்பு சரியென்றால் வேலூர் என்பது வீலூர் ஆகிறது.
ருமபுரியில் தமிழா?
தருமபுரி மாவட்டத்தில் பல ஊர்ப்பெயர்கள் கன்னடச் சொற்களால் குறிக்கப்பெறுகின்றன. அவற்றைத் தமிழ்ப்பெயர்களாக மாற்ற வேண்டும் என்பது தருமபுரி மக்கள் அவா. அதற்கேற்ப அம்மாவட்ட ஆட்சியர் ஊர்ப்பெயர் ஒலிப்பு எழுத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.
சான்றாக அளே என்னும் கன்னடச் சொல்லுக்குப் பழைய என்று பொருள்.
எனவே,
180 அளே தருமபுரி -PAZHAYA THARUMAPURI
எனப் பரிந்துரைத்துள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையினரோ தமிழுக்கு எப்படி மாற்றம் செய்யலாம் எனக் கருதி HALE THARUMAPURI என்று வரையறுத்துள்ளனர்.
அள்ளி என்னும் கன்னடச்சொல்லுக்குச் சிற்றூர் எனப் பொருள். வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி என்பதுபோல் பட்டி என்று ஊர்ப்பெயர்கள் முடிவடைவதைப் பின்பற்றிப் பொருத்தமாக
181 அ.ரெட்டி அள்ளி – A. REDDIPPAATTI (PAATTI எனக் குறித்திருப்பது தட்டச்சுப்பிழையாக இருக்கும்.)
182 அ.நடுஅள்ளி – K.NADUPPATTI
204 பூதன அள்ளி – POOTHANA PATTI
205 அ.ஜெட்டி அள்ளி – A.JETTIPATTI
எனப் பரிந்துரைத்துள்ளனர். இருக்கின்ற பெயருக்கான எழுத்துக் கூட்டலைக் கேட்டால் தமிழ் உணர்வுடன் முந்தைய தமிழ்ப்பெயரைச் சூட்டுவது எப்படி ஏற்றதாகும் எனத் தமிழ்வளர்ச்சித் துறை முறையே A. REDDI HALLI, K.NADU HALLI, POOTHANA HALLI, A.JETTI HALLI என்றே வரையறுத்து ஆணை யிட்டுள்ளது.
மேலும் ஊர்ப்பெயரை அள்ளி எனத் தமிழில் குறிப்பிடுவதற்கேற்ப ALLI என்று பரிந்துரைத்தாலும் ஃகள்ளி எனக் கன்னட ஒலிப்பிற்கேற்பவே ஆங்கிலத்தில் HALLI எனத் திருத்தி ஆணை பிறப்பித்துள்ளது.
அமைந்த கரை என்பது இப்போது அமிஞ்சிக்கரை எனச் சொல்லப்படுகிறது. அமஞ்சி அல்லது அமிஞ்சி என்பது கூலி பெறாமல் உழைப்புத்தானம் வழங்குவது. ஒரு காலத்தில் மக்கள் இணைந்து கூலி எதுவும் பெறாமல் எழுப்பிய கரையை அமஞ்சிக்கரை என்று அழைத்துள்ளனர். அதுவே அமிஞ்சிக்கரை என்றானது. இதைத் தவறு எனக் கருதி21. அமைந்தகரை என்பதுபோல் ஆணை பிறப்பித்துள்ளனர்.
26&27 எழும்பூர், 29&30 திருவல்லிக்கேணி முதலியவற்றிற்குத் தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபொழுது ஆணை பிறப்பிக்கப்பட்டதாக நினைவு. என்றாலும் இப்போதுபோல் EZHUMBOOR என்று இல்லாமல் EZHUMBOR என்றுதான் இருந்திருக்கும். அந்த வகையில் இந்த ஆணை சரியே.
இதுபோல் நாம் பலவற்றைக் குறிப்பிட முடியும்அப்படியானால் தமிழ்வளர்ச்சித்துறை எதற்குஅவர்கள் கூர்ந்து நோக்கிச் செவ்வைப்படுத்த வேண்டும்.
ஆணையில், 14.12.2001 ஆம் நாளிட்ட நகராட்சி நி.கு.நீ.வ.து ஆணை பார்வையில் குறிக்கப்பெற்றுள்ளது. விவரம் ஆணையில் இல்லை. ஒருவேளை இந்த ஆணை இதற்கு முந்தைய ஒலிபெயர்ப்பு குறித்தது எனில் அவற்றையும் கோடிட்டுக் காட்டியிருக்கலாம்.
மக்கள் கையிலும் பொறுப்புண்டு
அரசு ஆணைகள் செயற்பாடு மக்கள் கைகளிலும் உள்ளது. மக்கள் இவற்றை உணர்வடன் ஏற்றுச் செயற்படுத்த வேண்டும். ஆனால் செயல்படுத்துவது இல்லை. ஒவ்வொன்றுக்கும் முதல்வரோ அமைச்சரோ வந்து எழுதிக் கொண்டிருக்க முடியாது. எனவே, திருத்தம் வேண்டிய இடங்களில் அரசிடம் தெரிவித்து மற்றவற்றை ஏற்றுப் பயன்படுத்த வேண்டும். அரசு இதற்கு முன்னரே. சிரீ எனத் தொடங்கும் ஊர்ப்பெயர்களைத் திரு எனத் தமிழில் குறிக்க ஆணை பிறப்பித்ததுஇதன்படி சிரீவில்லிபுத்தூர் – திருவில்லி புத்தூர், சிரீரங்கம் – திருவரங்கம் என்பன போன்று பெயர் மாற்ற ஆணையும் பிறப்பித்தது. ஆனால், இன்றைக்கு அங்கெல்லாம் தமிழ்த் திரு தொலைந்துவிட்டது. ஆரிய சிரீயே இருக்கிறது. இறைவனின் பெயர்களில் தமிழ் முன்பே தொலைக்கப்பட்டது. ஆனால், இக்காலத்திலும் தமிழ்க்கடவுளான திருமுருகனை அறநிலையத்துறையினரே பாலசுப்பிரமணியன் என்று குறிக்கின்றனர். குமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோயில் எனத் தனிக்கோயில் இருப்பினும் தமிழர்க்கே உரித்த குமரி அம்மனையும் பகவதி அம்மன் என்கின்றனர். இதுபோன்ற இழிநிலைகளை எல்லாம் துடிப்பான அமைச்சர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1978 ஆம் ஆண்டிலேயே திருமலவாடியைத் திருமழபாடி என்றும் செய்யார் என்பதைச் செய்யாறு என்றும் இன்னும் பல ஊர்களின் பெயர்களையும் திருத்தமாக எழுத வருவாய்த்துறை ஆணையிட்டது. ஆனால் இருவகையாகவும் இன்று பயன்படுத்துகின்றனர். அரசாணையைப் பொருட்படுத்துவதே இல்லை. எனவே, ஆணை பிறப்பித்தால் மட்டும் போதாதுஅதன் சரியான செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும். அரசாணைக்கிணங்க ஊர்ப்பெயர்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடாத ஊடகங்களுக்கு விளம்பரம் தரக்கூடாது.
அரசு இந்த ஆணையைப் பிறப்பிக்கும் முன்னர் இணையத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக மக்கள் கருத்தைக் கேட்டிருக்கலாம்.
தமிழுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு தரப்படுத்தும் குழு ஒன்றை அமைத்து, அக்குழு பட்டறிவு மிக்க, மொழிபெயர்ப்பில் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்கள் கருத்துகளைக் கேட்டறிந்து பரிந்துரைப்பதன் அடிப்படையில் அரசே தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழ்க்காப்புக்கழகம் 18.03.2014இல் அரசிற்குத் தெரிவித்தது. 06.04.2014இல் சென்னையில் தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் அமைப்புகளும் இணைந்து தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறைக் கலந்துரையாடலை நிகழ்த்தியது. என் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் முனைவர் க.ப.அறவாணன், முனைவர் ப.மகாலிங்கம், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மு.முத்துவேலு, முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன், முனைவர் இராமகி, பொறிஞர் நாக.இளங்கோவன், முனைவர் இரா.சேது, அன்றில் இறையெழிலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். வந்திருந்த தமிழ் அறிஞர்களும் தத்தம் கருத்தைத் தெரிவித்தனர். 26.08.2014 இல் மீண்டும் இதுகுறித்து மடல் அனுப்பப்பட்டது. நேரிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தகவல் தொழில்நுட்பத்துறை ஆர்வம் காட்டியதே தவிர அப்போதைய தமிழ்வளர்ச்சி இயக்ககம் ஆர்வம் காட்டவில்லை.
எனவே, ஒலிபெயர்ப்பிற்கான சீரானவரைமுறையை முதலில் வகுத்து அதன் பின்னரே அதற்கிணங்க ஊர்ப்பெயர்களின் ஒலி பெயர்ப்பு குறித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். இப்போதைய ஆணையில் நூற்றுக்கணக்கான முரண்பாடுகள் மலிந்து உள்ளமையால் இதனை நிறுத்தி வைக்க வேண்டும். எனவே, செம்மையான ஆணைகளை எதிர்பார்க்கிறோம். அதே நேரம் உலகத்தமிழ் மக்கள் டமில்நடு எப்பொழுது ஆங்கிலத்தில் தமிழ்நாடு ஆகும் என எதிர்பார்க்கின்றனர். அதற்கு விரைவில் விடை தருமா தமிழக அரசு?

– இலக்குவனார் திருவள்ளுவன்

மின்னம்பலம் 13.06.2020

Followers

Blog Archive