Showing posts with label இ.திருள்ளுவன். Show all posts
Showing posts with label இ.திருள்ளுவன். Show all posts

Monday, March 18, 2019

செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா?

தமிழ் தொடர்பான துறைகள், பதவிகள், அமைப்புகள், குழுக்கள் ஆகியவற்றின் பொறுப்பிற்கான முதல் தகுதி தமிழறிவு இல்லாதவராக இருக்க வேண்டும். தமிழராக இல்லாமல் இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். இதுதான் தமிழ்நாட்டின் எழுதப்படாத விதி. இந்திய அளவிலும் மத்திய அரசு இந்த விதியைக் கடைப்பிடிக்கத் தவறுவதில்லை. எனவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பெறும்  தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குறித்து நாம் ஒன்றும் கூறுவதற்கில்லை.
இக்குழுவில் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். எப்படியோ தவறுதலாகத் தமிழறிஞர் பேரூராதீனத்தின் இளைய பட்டமாம் தவத்திரு. முனைவர் மருதாசல அடிகளார் இதில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் வணிகவியல், கூட்டுறவு ஆகிய கல்வித்துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்; தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்; தமிழுணர்வுடன் நல்ல தமிழில் பேசுபவர்; தவத்திரு ஆறுமுக அடிகள் தாய்த்தமிழ் மழலையர்- தொடக்கப்பள்ளி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைப் பேரூர் மடம் சார்பில் நடத்தி வருகிறார். தமிழ்க்கல்லூரியின் முதல்வராகவும் உள்ளார். தமிழ் வழிபாட்டைப் பரப்பி வரும் தமிழ் இறையாளர். தமிழறிஞரான இவர் ஒருவர்தான் விருதாளர் குழுவில் தகுதியானவராக உள்ளார்.
பிற மூவர் முறையே முனைவர் நாகசாமி, திரு கோபாலசாமி, திரு நரசய்யா ஆகியோர்.
திரு கோபாலசாமி, குசராத்து மாநிலத்தில் 25 ஆண்டுகள் இ.ஆ.ப. அலுவலராகப் பல நிலைகளில் பணியாற்றியவர். அதன் பின் மத்திய அரசின் பணிகளுக்கு மாறியவர். 15 ஆவது தேர்தல் ஆணையராக இருந்து பலராலும் அறியப்பெற்றவர். சென்னையிலும் அதைச் சுற்றிலும் பள்ளிகள் நடத்தும் விவேகானந்தா கல்விக்கழகத்தின் தலைவராக இப்போது இருக்கிறார். நாட்டியக்கல்வி அமைப்பான கலாச்சேத்திராவின் தலைவராகவும் ( 22.10.2014 முதல் 5 ஆண்டுகள்) உள்ளார். இவரது முயற்சியால் ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு வேதங்களையும் இந்து சிற்பங்களையும் பாதுகாக்க 5 கோடி உரூபாய் நல்கை அளித்துள்ளது.  முடியக்கூடியவற்றை உடன் முடிப்பதில் வல்லவர்தான். ஏனெனில் மத்திய அரசின் பண்பாட்டுத்துறைச் செயலகத்தில் பணியாற்றிய பொழுது இவரைச் சந்தித்துள்ளேன். மத்திய அரசு நல்கை வேண்டுவோர் பற்றிய விவரங்களைக் கேட்பதெல்லாம் அங்கும் இங்கும் சுற்றி இறுதி நாள் முடிந்த பின்னரே வந்து சேர்கின்றன. தொடக்க நிலையிலேயே நேரடியாகக் கேட்டால்  விவரமறிந்து அரசு வழி அனுப்ப இயலும் என்றேன். உடன் நடவடிக்கை எடுத்தார்.அப்பொழுது இது தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் கேட்கும் நிதியுதவி தொடர்பான விளம்பரம் எதுவும் தமிழ்நாட்டு இதழ்களில் வருவதில்லை. தமிழ்நாட்டிலும் விளம்பரம் கொடுத்தால் பயனடைவோர் பரவலாக இருப்பர் என்றேன்.உடனே தொடர்புடைய அதிகாரியைக் கூப்பிட்டு அனைத்து விளம்பரங்களையும் தென்னகப் பதிப்புகளிலும் அளிக்க வேண்டும் என்று கட்டளை யிட்டார். உடன் செயல்பாட்டிற்கு வந்தது. 
ஒரு முறை கலாச்சேத்திரா அமைப்பைப் பார்வையிடச் சென்னைக்கு வந்திருந்தார்; நானும் உடன் சென்றிருந்தேன். அப்பொழுது துறைசார்பான கோரிக்கைகள் சிலவற்றைத் தெரிவித்ததும் உடன் ஏற்றார். உ.வே.சா.நூலகத்தின் தனித்தன்மையைக் காக்கவேண்டுவது தொடர்பான கோரிக்கையையும் செவிமடுத்துத்  தில்லி சென்று நடவடிக்கை எடுத்தார். செயல் திறன் மிக்க அதிகாரிதான்.
அண்மையில் செம்மொழித்தமிழாய்வு மத்தியநிறுவனத்தின் செயல்பாடு குறித்து மத்தியஅரசு கேட்டதற்கு இணங்க அறிக்கை அளித்துள்ளார். துறை தொடர்பான செயல்பாடுகளில் அவரது கருத்தைப் பெறுவதோ தொடர்பான குழுக்களில் இடம் பெறச் செய்வதோ தவறில்லை. எனினும், திறமையான நிருவாகியாக இருப்பதால் தமிழறிஞராக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் தமிழ்ப்புலமையாளர் தொடர்பில்  கருத்து கேட்பது பொருந்தாது அல்லவா?
மற்றொருவர் ஒரிசாவில் பிறந்து தொடக்கக்கல்வியைத் தமிழ்நாட்டில் பெற்ற தமிழ் எழுத்தாளர் காவூரி இராமலிங்கம் அப்பல நரசய்யா.  தொடக்கத்தில் 1949 ஆண்டு முதல் கப்பல் படையில் பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார். 1965 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். வங்கத் தேச விடுதலைப் போரிலும் பங்கேற்று 1991இல் ஓய்வு பெற்றவர். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.அவை மூன்று தொகுதிகளாகவும் வந்துள்ளன. இவரின் மதராசப்பட்டினம் (2006) சென்னையைப் பற்றிய சிறந்த ஆவணமாக அமைந்து இவருக்கு மேலும் புகழ் சேர்த்தது.
 இந்திய துறைமுகச் சங்கத்தின் அறிவுரைஞராக இருந்த பொழுது நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு – 1996 வரை கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். இதன் பின்னர் இவர் சென்னையில்தான் வசிக்கிறார். கடலோடியாகப் புகழ் பெற்றுக் ‘கடலோடி’ என்று நூலும் எழுதியுள்ளார். ஆனால், கடல் சார்ந்த அல்லது துறைமுகம் சார்ந்த பணிகளில் இவரின் கருத்தைக் கேட்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், தமிழ் ஆய்வறிஞர்களைத் தேர்ந்தெடுக்க இவரைப் பயன்படுத்துவது எங்ஙனம் பொருந்தும்?
முனைவர் இரா.நாகசாமி  இந்திய வரலாறு, தொல்லியல்-கல்வெட்டு எழுத்துக் குறிப்பு ஆய்வாளர் என்ற போர்வையில் வாய்ப்பு உள்ளபொழுதெல்லாம் தமிழுக்கு எதிரான கருத்துகளைப் பதிபவர். தமிழ் நாடு தொல்லியல் துறையில் பணியாற்றி முதல் இயக்குநராக (1966-1988) உயர்ந்தவர்.  தமிழ்ப் பகைமையைப் பாராட்டும் மத்திய அரசு இவருக்குத் தாமரை அணி(பத்ம பூசண்) விருதை வழங்கியது(2018).
திருக்குறள் குறித்த திரிக்கப்பட்ட கருத்துகள் அடங்கிய திருக்குறள் – சாத்திரங்களின் பிழிவு (Tirukkural – An Abridgement of Shaastras) என்னும் ஆங்கிலப் புரட்டு நூலை எழுதியுள்ளார்.
ஆரியக் கருத்துகளுக்கு எதிரான புரட்சி நூலை எழுதிய திருவள்ளுவரை ஆரியத்தைப் பின்பற்றி எழுதியுள்ளதாக இழிவுபடுத்தி உள்ளார். இந்தத் தகுதியின் அடிப்படையில்தான் இவரைச் செம்மொழி விருதுகள் தெரிவுக் குழுவில் உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழுக்கு எதிரான கருத்து கொண்டோர் தமிழுக்கு எதிரான கருத்தாளர்களைத்தானே விருதிற்குத் தேர்ந்தெடுப்பர். எனவேதான் தகுதியற்றவர்களை விருதுக் குழுவில் இருந்து நீக்க வேண்டுகிறோம்.
குடியரசுத் தலைவர் விருதுக்  குழுவிலிருந்து தமிழுக்கு எதிரான நாகசாமியை நீக்க வேண்டுமெனத் திமுக தலைவர் முக.தாலின் முதலான பலரும் தமிழ் அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.  தமிழகத் தலைவர்களுக்கும் தமிழ் அமைப்பினருக்கும் மேலோட்டமான பார்வைதான் இருக்கும் என்பதற்கு இவர்களின் எதிர்ப்பு முறையே சான்றாகும். குழுவிலிருந்து தகுதியற்ற மூவரை நீக்கித் தமிழறிஞர்களை நியமிக்க வலியுறுத்தாமல், இவரை மட்டும் நீக்குமாறு சொல்வதால், பிற இருவரை ஏற்றுக் கொள்வதாகத்தானே பொருள்.
  எனவே, செம்மொழி விருதுக் குழுவில் இருந்து பொருத்தமற்ற மூவரை நீக்கிப் புதிய குழுவை அமைக்க மத்திய அரசை வேண்டுகிறோம். மத்திய ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழக ஆளுங்கட்சியும்  முயன்று செம்மொழி விருதிற்கான புதிய குழுவை அமைக்க வேண்டும் .
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (திருவள்ளுவர், திருக்குறள் 517).
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை

Sunday, March 17, 2019

இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்!

இந்தியா மக்களாட்சி நாடு என்று சொல்லப்பட்டாலும் மத்திய மாநில அரசுகளே மக்கள் நாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதுதான் வழக்கமாக உள்ளது. தேர்தல் மூலம்தான் மக்கள் நாயகமே நிலை நாட்டப்படுகிறது. ஆனால் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையமே மக்களாட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வதில்லை. ஆளும் தலைமையின் தாளத்திற்கேற்ப ஆணையம்ஆடுவதால் மக்களாட்சியும் சிதைக்கப்படுகிறது. பல நல்ல தீர்ப்புகளை வழங்கும் நீதி மன்றங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உண்மையான ஆட்சிதான் அரசை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று எண்ணுவதில்லை.
இவ்வாறான நாணயமற்ற நாணமற்ற செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் சட்டமன்றம் தலைக்குனிவிற்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மக்களாட்சி முறை தேவையில்லை என்னும் புதிய இலக்கணம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை; மத்திய அரசின் ஏவலரான ஆளுநர் ஒருவரின் ஆதரவு இருந்தால் போதும் என்று உருவாக்கப்படுகிறது. மக்களின் ஆதரவைவிட மத்திய அரசின் முறையற்ற ஆதரவு இருந்தால் ஆட்சி நடத்தலாம் என்பது செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் துறைகள் மக்கள் பணியாற்றுவதற்குரியன அல்ல; மத்திய அரசின் ஏவலைச் செய்யும் வேட்டையாடும் துறைகள் என மெய்ப்பிக்கப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான நிலைப்பாடுகளில் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட அணுகுமுறை. தமிழகச்சட்ட மன்றத்தில் ஆட்சித் தலைமை மீது நம்பிக்கையின்மையை மாநிலத்தலைமையான ஆளுநரிடம் முறையீடு கொடுத்ததற்கு ஒரு நீதி. சட்ட மன்றத்தில் ஆளும் தலைமை மீது நம்பிக்கையில்லை என வாக்களித்தவர்கள் தொடர்பில் வேறொருவகை நீதி.
உண்மையில் யார் பக்கம் இருக்க வேண்டுமோ அவர்கள் பக்கம் நீதித்துறைஇல்லை.
தேர்தல் ஆணையமும் தேர்தல் சின்னம் தொடர்பான முறையீடுகளில் முறையற்ற தீர்ப்புகளை வழங்குகிறது. மத்திய அரசின் தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் சரியான முறை என்னும் அறமுறையற்ற நிலைப்பாட்டைப் பின்பற்றி வருகிறது. 
இதனால் மக்கள் பெரும்பான்மை ஆதரவு இலலா ஆட்சி நடைபெறுவதாக எண்ணுகின்றனர். தத்தம் தொகுதி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களின் சட்டமன்றக் கடமையை ஆற்ற முடியாமையால் தொகுதி நலன்கள்பாதிக்கப்படுவதாகக் கவலைப்படுகின்றனர். ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆட்சி நடக்கின்றது. தமிழக ஆட்சி மத்திய அரசின் மிரட்டல்களுக்கு அடி பணிந்தாலும் ஆட்சி காப்பாற்றப்படுவதால் மகிழ்ச்சியில்தான் திளைக்கிறது.
இந்தச் சூழலில் பதவி பறிக்கப்பட்ட பதினெண்மரும் கட்டுக்கோப்பாகத் தடம்புரளாமல் விலை போகாமல் உறுதியாக நிற்பது பாராட்டிற்குரியது.அவர்களை அவ்வாறு வழிநடத்தும் தினகரன் செயற்பாடும் போற்றுதற்குரியது.
இவர்களுக்கு எதிராக நடைபெற்ற அறமுறையற்ற செயல்களை நாம் முன்னரும் சுட்டிக்காட்டியுள்ளோம். மக்களும் நன்கறிவர். இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருப்பது மக்கள் கைகளில்தான் உள்ளது.
இடைத்தேர்தல்களில் மக்கள் வேறு கண்ணோட்டங்களில் வாக்களிக்காமல் இவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி இடமுடியும் என்பதை எண்ணிப்பார்த்து இவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். மாறாக வாக்களிக்கும் பொழுது இதுபோன்ற குறுக்கு வழிகளில் ஆளுங்கட்சிகள் தம் தேவைக்கேற்ப ஈடுபடும். நாம் என்ன குறுக்கு வழிகளில் இறங்கினாலும் மக்கள் தெளிவாக உள்ளார்கள்என்பதைப் புரிந்து கொண்டால்தான் ஆளுங்கட்சிகள் குறுக்கு வழிகளில்சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறிக்கா.
சட்டமன்றத் தொகுதிகளில் பதவி பறிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்களித்தாலும் அத்தொகுதி அடங்கிய நாடாளுமன்றத்தொகுதிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கட்டும்.
எனவே, சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்ற, உறுப்பினர் பதவிகளைக் குறுக்கு வழிகளில் பறிக்காமல் இருக்க, கட்சிச் சார்பு எண்ணங்களைக் கைவிட்டு, வேறுவகை அளவுகோல்களைத் துறந்து, பதவி பறிக்கப்பட்டவர்களுக்கேவாக்களிக்க வேண்டுகிறோம்.
அதிகார மிகுதியால் அல்லது செருக்கு மிகுதியால் மிக்க தீமை செய்தவர்களை வாக்காளர் என்னும் தகுதியால் மக்கள் வெல்ல வேண்டும். இப்பொழுது, வெல்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு வந்துள்ளது. வாக்குச்சீட்டு ஆயுதத்தால் வெல்க உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டவர்களின் வெற்றி அவர்களுடையதல்ல  மக்களுடையது மக்கள் நாயகத்தினுடையது என்பதை உணர்ந்து செயல்படுக

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல் (திருவள்ளுவர், திருக்குறள் 158)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை

Followers

Blog Archive