Showing posts with label எண்ணுவோம் தமிழில்!. Show all posts
Showing posts with label எண்ணுவோம் தமிழில்!. Show all posts

Tuesday, October 21, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail, receipt – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

      21 October 2025      No Comment



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: தொடர்ச்சி)


? case என்றால் என்ன பொருள்?


நீங்கள் எந்தத் துறை?

? மருத்துவத் துறை. case என்றால் வழக்கு என்கிறோமே. மருத்துவமனையில் case-history ஐ எவ்வாறு குறிப்பிடுவது?

‘case’ என்றால் பொதுவாக வழக்கு என்பதை நாமறிவோம். நிலை, நிலைமை, சூழ்நிலை, என்றும் பொருள்களுண்டு. எனவே, மருத்துவத்துறையில் நோய் நிலைமை, நோயர் நிலைமை என்பனவற்றைக் குறிக்கிறது. நிகழ்ச்சியையும் குறிக்கும். எனவே, நேர்வு, நேர்ச்சி, நிகழ்வுக்கூறு, நிகழ்வினம், நேர்வு வகை எனப் பல பொருள்களில் வருகிறது. வேற்றுமையையும் குறிக்கும். எனவே எட்டு வேற்றுமை உருபுகளிலும் வேற்றுமை என்ற பொருளில் வரும். பை, உறை, கூடு, பெட்டி என்ற பொருள்களிலும் வரும். செய்தி, காரியம், கேள்விக்குரிய பொருள், ஆராய்ச்சிக்குரிய பொருண்மை, தறுவாய், பண்பின் செயல்வடிவ நிகழ்வுக்கூறு, எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்க கூறு, தொழில்முறை தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு என மேலும் பல பொருள்கள் உள்ளன. வினைச்சொல்லாக வருகையில் பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு என இடத்திற்கேற்ப பொருள் வரும்.

case-history நோய் நிலைக் குறிப்பு, நோய் வரலாறு என்னும் பொருளில் வரும். இதனை நோயாறு எனப் புதுச் சொல்லாகக் குறிக்கலாம். case-history என்பது குற்றவியலிலும் வரும். அதனால் சட்டத்துறை, காவல்துறை, நீதித்துறையில் இச்சொல் இடம் பெறும். இங்கெல்லாம் வழக்கு விவரம் என்னும் பொருளில் வருகிறது. சில இடங்களில் புலனாய்வு விவரம் என்றும் பொருள்படும். ஆளைச்சுட்டிக் கூறுவதாயின் வழக்கர் விவரம் எனலாம். இத்துறைகளில் நோயாறு என்பதுபோல் வழக்காறு என்று சொல்லக்கூடாது. சொன்னால் பொருள் பழக்கவொழுக்கம் என மாறிவிடும்.

மேலும், வழக்கத்தில் case என்னும் பொழுது அந்த case எவ்வாறு உள்ளது? இந்த case நிலையில் முன்னேற்றம் இல்லை என்பது போல் நோயின் தன்மையின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு இல்லாமல், இந்த நோயர் நிலையில் முன்னேற்றம் உள்ளது; அந்த நோயர் நிலை மோசமாகிக் கொண்டு வருகிறது; என நோயர் அடிப்படையில் குறிப்பது நன்றாக இருக்கும்.

? suit case என்று கூறுகிறோமே…
பெட்டி என்னும் பொருளில் உடைப்பெட்டி என்று சொல்லலாமே. இது போல் brief case சிறு பெட்டி அல்லது கைப்பெட்டி என்று சொல்லலாம்.
தட்டச்சுப் பொறியில் விசைப்பலகையில் மேல் வரிசையில் உள்ள எழுத்துருக்களை upper case என்றும் கீழ் வரிசையில் உள்ளவற்றை lower case என்றும் குறிப்பிடுவர். இவற்றை முறையே மேலுரு என்றும் கீழுரு என்றும் சொல்லலாம். மேலும்,
in any case – எவ்வாறாயினும்
in case – என்ற நிலை ஏற்படுமானால், ஒருவேளை, எனில்
in that case – அந்நோ்வில்
make out a good case – சிறந்த காரணங்கள் அளி
என இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.
சாமீனில்(‘ஜாமீனில்’) விடுவிக்கப்பட்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. Bail – பிணை என்பதை அறிவீர்கள் அல்லவா? பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றே குறிக்க வேண்டும். பிணையில் விடுவிக்கப்பட்டவர் bailor – பிணையர் என்றும் அவ்வாறு அவருக்குப் பிணை தருபவர் bailee – பிணைதருநர் என்றும் குறிக்கப் பெற வேண்டும். பிணை தருவது தொடர்பான பணிகளைப் பார்ப்பவர் bailiff – என்பவரையே அமீனா என்கிறார்கள். பிணைப்பணியாளர் அல்லது பிணை ஊழியர் என்று சொல்ல வேண்டும். சுருக்கமாகப் பிணைப்பணியர் > பிணையர் எனலாம். இவ்வாறு பிணையில் விடத்தக்கவாறு அமைந்த குற்றத்தை
Bailable offence பிணை விடு குற்றம் என்றும் பிணையில் விட இயலா நிலையிலான குற்றத்தை non-bailable offence – பிணைவிடாக் குற்றம் என்றும் கூற வேண்டும்.
Bailable Warrant – பிணைவிடு பிடியாணை
Warrant – பணிமுறை அதிகாரப் பத்திரம், (கைது) ஆணைப் பத்திரம் என்கின்றனர். பிணையுறுதி, பற்றாணை, பொறுப்புறுதி, சான்றாணை எனவும் கூறுகின்றனர். ஒரே சொல்லையே பயன்படுத்த வேண்டும். எனவே, பிடியாணை என்பதையே பயன்படுத்தலாம்.
பற்றுச் சீட்டு எனவும் பொருளுண்டு. பற்றுச்சீட்டு என்பது பணம் பெறுகைச் சீட்டு என்றும் பணம் கொடுப்புச் சீட்டு என்றும் பொருளாகும்.. முன்பு வரிக்கான ஒப்புகைக் சீட்டு எனில் அடைச்சீட்டு பிற பண ஒப்புகைக்கு ஒடுக்குச்சீட்டு என்றும் பயன்படுத்தியுள்ளனர். நாம் இவற்றை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். இவற்றில் ஒடுக்கு என்பதற்கு மறைவிடம் என்றும் பொருள். எனவே, குளியலறை, கழிவறைகளுக்குத் தரும் பணச்சீட்டை ஒடுக்குச் சீட்டு எனலாம். ஆனால் அவ்வாறு பணச்சீட்டு எதுவும் தருவதில்லை. வில்லையை மட்டுமே தந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் அவ்வாறு பணச்சீட்டுதரும் இடங்களில் ஒடுக்குச்சீட்டு என்பதைப் பயன்படுத்தலாம்.

Thursday, September 25, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: தொடர்ச்சி)

இக்கோப்பில்,

“கை குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்’ என உள்ளது.

“கை’ என்பது  ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். ஓரெழுத்துச் சொல்லிற்குப் பின்பும் வல்லினம் மிக வேண்டும்.

கைக்குழந்தை

தீத்தடுப்புப் பயிற்சி

தைத்திங்கள்

ஈத்தொல்லை

கேள்வி: ஓரெழுத்து ஒரு மொழி’ சிலவாகத்தானே இருக்கும்.

பதில் : இல்லவேயில்லை.

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாய் அமையும் சிறப்பு தமிழில் தான் மிகுதியாக உள்ளது. நன்னூலார், நெடில் எழுத்துக்களில் உயிர், 6 மகர வரிசை 6 குறில் எழுத்துகளில் நொ, து ஆகிய சேர்ந்து 42 என்கிறார்.

 கு.கௌ, பி, வே எனச் சிறப்பில்லாதன 4 உள்ளன என்றும் குறிப்பிடுகின்றார்.

உயிர் நெடிலில்

 ஆ- பசு, ஈ- உயிரினம்; கொடுத்தல், ஊ-இறைச்சி, ஏ- அம்பு, ஐ -அழகு; தலைவன், ஓ-மதகு நீர் தாங்கும் பலகை எனப் பொருள். ஒள என்றால் “கடிதல்’ என்றும் “பூமி’ என்றும் பொருள் உள்ளனவாதலின் இதுவும் “ஒரெழுத்து ஒரு சொல்லே.

க, ச, வ வரிசைகளில்

நன்னான்கு

கா-சோலை

கூ-கூவு

கை – உடலின் உறுப்பு:

கோ- அரசன்

சா- இறப்பு

சீ- இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு, சீழ்

சே-எருது

சோ-மதில்

வா – வரச்சொல்லுதல்

வி -விசும்பு, காற்று

வீ-வீழும்பூ,

வை- வைத்தல், கூர்மை,

வெள-கவருதல்

(ஐந்தாவதாக வி சேர்க்கப்பட்டுள்ளது.)

த, ந, ப வரிசைகளில்

ஐந்தைந்து

தா-தரச் சொல்லுதல்:

தீ -நெருப்பு:

து-உப்பு:

தூ-ஊன்:

தே-தெய்வம்;

தை-தைத்திங்கள்:, தைத்தல்:

நா-நாக்கு:

நீ -முன்னிலைச்சுட்டு;

நே-அன்பு;

நை-நொந்துபோதல்;

நொ-துன்பப்படுதல்;

நோ-நோய்;

பா-பாட்டு,

பூ-மலர்,

பே-நுரை,

பை-நிறம்; அழகு; பொருள்வைப்பதற்குரிய பை

போ-போதல்

மா-மாமரம்; பெரிய,

மீ-மேல்,

மூ-முதுமை

மே-அன்பு,

மை-கண்மை; அச்சு மை;

மோ-முகருதல்)

யா வரிசையில் 1

யா-யாவை, மர வகை, கரி மரம்

குறில் எழுத்துகளில், அ, இ, உ மூன்றும் அப்பக்கம், இப்பக்கம், உட்பக்கம் எúச் சுட்டுப் பொருள் தருவன.

 “உ’கரச் சுட்டு இப்பொழுது பயன்பாட்டில் இல்லை எனினும், “ஊழையும் உப்பக்கம் காண் பர்’ எனும் குறள்அடிபோன்று “ஒ’ என்றால் “ஒற்றுமையாயிரு’ “தகுதியாயிரு’ எனப் பொருள்கள் உள்ளன. எனவே 12 உயிர் எழுத்துமே ஓரெழுத்து ஒரு சொல் ஆகும்.

பின்னர் வந்தவர்கள் மேலும் சில ஓரெழுத்தொரு மொழிகளைக் குறித்துள்ளனர்.

இவ்வாறு வேறு எந்த மொழியிலும் ஓரெழுத்து ஒரு மொழிகள் மிகுதியாக இல்லை என்பதும் தமிழுக்குரிய சிறப்புகளில் ஒன்றாகும்.

கேள்வி: தைத்திங்கள் என்பது போன்று பிற மாதங்களுக்கு அடுத்து வல்லினம் மிகாதா?

பதில்: தைத்திங்கள் என்பது இருபெயரிட்டு பண்புத் தொகையாகும். மாரிக்காலம், முல்லைப்பூ போன்றவையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

அனைத்து மாதங்களின் பெயர்களும் திங்கள் என்பதுடன் சேருகையில் “இருபெயரெட்டுப் பண்புத் தொகையாய்’ விளங்கி வல்லெழுத்து மிகும்.

தைத்திங்கள் மாசித்திங்கள், “பங்குனித் திங்கள், சித்திரைத் திங்கள், வைகாசித் திங்கள், ஆனித் திங்கள், ஆடித் திங்கள், ஆவணித் திங்கள், புரட்டாசித் திங்கள், ஐப்பசித் திங்கள், கார்த்திகைத் திங்கள், மார்கழித் திங்கள் என வரும்

கேள்வி: கிழமைகளில் இவ்வாறு வல்லின எழுத்து மிகுதியாய் வருமா?

பதில்: ஞாயிறு என்பதுடன் “கிழமை’ சேரும்பொழுது, ஞாயிற்றுக் கிழமை என வரும்.

செவ்வாய்க் கிழமை

வெள்ளிக் கிழமை

சனிக்கிழமை அல்லது காரிக்கிழமை

எனப் பிற கிழமைகளில் வல்லின எழுத்து இடையில் வரும்.

மேலும்

மழைக்காலம்

கோடைக்காலம்

பிச்சிப் பூ

மல்லிகைப்பூ

தாமரைப்பூ

அல்லிப்பூ

எனபன போல், பிற இடங்களிலும் வரும்.

மாதம் தமிழ்ச் சொல்லா?

வானியல் அறிவியல் மிகச்சிறந்த நிலையில் தமிழர்கள் இருந்துள்ளனர். நிலா பூமியைச் சுற்றும் கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட அளவு என்பதால் “திங்கள்’ எனப் பெயரிட்டனர். நிலவின் மற்றொரு பெயர் மதி. மதியை அடிப்படையாகக் கொண்டு “மதியம்’ “மாதம்’ என உருவாகியுள்ளது. “மதியம்’ என்றால் நண்பகலன்று.

மாதம் மாசம் ஆனது இருப்பினும்

திங்கள் என்பது சிறப்பான சொல்லாகும்.

கேள்வி: ஆங்கில மாதங்களில் பெயர்களுக்குப் பின்னும் வல்லினம் மிகுமா?

மார்ச்சு, ஏப்பிரல், சூன், ஆகசுட்டு ஆகிய 4 மாதங்கள் நீங்கலாகப் பிற மாதங்களில்

சனவரித் திங்கள், பிப்ரவரித் திங்கள், மேத் திங்கள், சூலைத் திங்கள், செப்டம்பர்த் திங்கள், அக்டோபர்த் திங்கள், நவம்பர்த் திங்கள், திசம்பர்த் திங்கள் என வல்லின எழுத்து மிகுதியாய் வரும்.

Sunday, April 13, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

      14 April 2025      அகரமுதல







சன. 4, 2011

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1

 பேரன்புசால்அவையோருக்கு,

 வணக்கம்.

 பல்வகைப்பட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் இங்கே கூடியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இங்கே நாம் வெறும் பொழுது போக்கிற்காகக் கூடவில்லை; பயன் ஆக்கத்திற்காகக் கூடியுள்ளோம்.

 ‘உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றி யாவும் நம் வெற்றி’ என்ற எண்ணத்தில் கூடியுள்ளோம்; இன்றைய கலந்துரையாடல் மூலம் நம்மிடையே எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் கூடியுள்ளோம். தமிழ் தனக்குரிய நிலையை மீளப் பெறுவதற்கு நம் சந்திப்பு ஓர் உந்துதலாய் அமையும்; இலக்கை அடைவதற்குரிய பாதையில் முன்னேறிச் செல்ல உதவும். தமிழன்னை அரசாளுவதற்கு நாம் ஒவ்வொருவரும்,

                செந்தமிழே உயிரே நறுந்தேனே

                 செயலினை மூச்சினை உனக்களித்தேனே

என நாம் ஒவ்வொருவரும் நமது பங்களிப்பை அளித்து உவகை காண  இயலும்.

ஆட்சி மொழி வகுப்பு என்ற பெயரில்  அனைவரையும் அழைத்திருந்தாலும்

இதனை வகுப்பாகக் கருத வேண்டா; ஒருவர் மட்டும் உரை யாடும் கூட்டமாகவும் கருத  வேண்டா. ஒருவரோடு ஒருவர் கலந்து பேசும் சந்திப்புதான் இது. நாம் அறிந்தவற்றை ப் பகிர்ந்து கொள்ள – அறிந்து மறந்தவற்றை  நினைவு கூர ஒரு நல்ல வாய்ப்பு. எனவே, ‌ஐயம் வரும்போது வினா எழுப்பவும் ஒத்த வே று கருத்தோ வேறு முரணான கருத்தோ ஏற்படுகை யில்  உடனுக்குடன் தெரிவிக்கவும் தயங்கக் கூடாது.

  மேலும் இங்கு வெவ்வேறு துறைகளைச்  சார்ந்தவர்கள், போக்குவரத்துக் கழகங்கள், வாரியங்கள் முதலான அரசு சார் நிறுவனத்தினர், உள்ளாட்சித் துறையினர், பல்கலைக்கழகத்தினர் எனப் பல் திறப்பட்டோர் கூடியுள்ளோம்.

ஒரு துறையில் ஒரு கலைச் சொல்லுக்குரிய பொருள், வேறு துறைகளில்  வெவ்வேறு பொருளில் வழங்கப் படலாம். ஒரு துறையினர் நன்கு அறிந்த எளிய சொல், மற்றொரு துறையினருக்கு அறியப்படாத அரிய சொல்லாக இருக்கலாம். எனவே, மிகவும் நன்கறியப்பட்டவை குறித்துக் கூட இங்கு நாம் பேச வேண்டுமா என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

இம்மேசையில் ஒவ்வொரு துறைக்கும் உரிய சிற்சிலக் கோப்புகள் எனப் பல உள்ளன. எனவே இவற்றின் அடிப்படையில்தான் நம் கலந்தரையாடல் அமையும். எனினும் இவற்றின் தொடர்பான, இணையான – முரணான செய்திகளும் இட பெற வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் இடபெறாத, ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் – அகற்றப்பட வேண்டிய ஐயங்கள் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் இருப்பின் உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.


? ‘கோப்புகளைத் தொடுவதற்கு முன் ஒரு கேள்வி.
 ’வணக்கம்’ என்று சொன்னால் மட்டும் போதுமா, ’காலை வணக்கம்’ என்று சொல்ல வேண்டாமா?
* நல்ல கேள்வி
 ’வணக்கம்’ என்பது தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சொல். அடக்கத்தையும் பணிவையும் உணர்த்தும் பண்பைக் குறிக்கும் சொல். ஆங்கில முறையில் ‘Good Morning, good-afternoon, good evening, good night’ என்பவையெல்லாம் வாழ்த்தும் முறையே ஆகும். அஃதாவது, இது நல்ல காலைப்பொழுதாக அமையட்டு ம். இந்தப் பிற்பகல் உங்களுக்கு நல்லதாய் அமையட்டும். இந்த மாலை உங்களுக்கு நல்லது அளிக்கட்டு ம். இந்த இரவு இனிய உறக்கத்தைத் தரும் நல்லிரவாய் அமையட்டும் என நம் விருப்பத்தை வாழ்த்தாக வெளிப்படுத்துகின்ற முறையாகும். இம் முறையைப் பின்பற்றிச் சரியாகக் கூறுவதாக எண்ணிப் பலரும் ’காலை வணக்கம்’  ‘மாலை வணக்கம்’ என்பனபோல் கூறுன்றனர்.


 ஆங்கில வழியில் எண்ணுவதால் பண்பாட்டுச் சிறப்பை உணராமல் இவ்வாறு தவறாகக் கூறி வருகிறோம். வணங்கல் எனின், ’ வந்தனை , பணிதல், தண்டன், வணக்கம், பரவல், இறைஞ்சல், தாழ்தல், காண்டல், வந்தித்தல், போற்றல்’, எனப் பல பொருள் ஆகும். இவை அனைத்தும் அடக்கத்தைப் புலப்படுத்துவன. எனவே வணக்கத்தைத் தெரிவிக்குபொழுது மற்றவர்பால் நல்லெண்ணம் கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் இளையோர் மூத்தோரை வணங்கலாமேயன்றி வாழ்த்தக் கூடாது. அவ்வாறிருக்க ’ நல்லகாலையாக அமையட்டும்’ என்பதுபோல் வாழ்த்துவது எவ்வாறு ஏற்புடையதாகும். அல்லது குறிப்பிட்ட ஒரு பொழுதுதான் வணக்கமாக இருப்பேன். அஃதாவது ‘காலை வணக்கம்’ என்றால் காலையில் மட்டும் வணக்கமாக இருப்பேன். பின்னர்ப் பிணக்கமாக இருப்பேன் எனப் பண்பாட்டிற்கு மாறாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? அத்துடன் வைகறை, சந்தி,கருக்கல், பகல், முற்பகல், உருமம் (உச்சிவெயில்) நண்பகல், பிற்பகல், படு ஞாயிறு, சாயுங்காலம், செக்கர், அந்தி, அந்திக்கருக்கல், பின்னந்தி, எற்பாடு இரவு, நள்ளிரவு, பின்னிரவு, முதலான பல்வேறு பொழுதுகள் தமிழில் இருக்க, சில பொழுது மட்டும் வாழ்த்தினால் போதுமா? எனவே இனியேனும் அயல்வழக்கைப் பின்பற்றி, காலைவணக்கம், பகல் வணக்கம் என்றெல்லாம் கூறாமல், நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பண்பாட்டுடன்


’வணக்கம்’ தெரிவிப்போம்.

 (தொடரும்)

Followers

Blog Archive