Showing posts with label எழுதுவோம் தமிழில்!. Show all posts
Showing posts with label எழுதுவோம் தமிழில்!. Show all posts

Saturday, October 11, 2025

 

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : தொடர்ச்சி)

“ஒரு ஊழியரேனும்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது தவறு

ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்களுக்கு முன் என்ன குறிப்பிட வேண்டும் என நன்கு அறிவோம்.

கேள்வி: ‘an’ என உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னால் சேர்ப்போம். இவ்வாறு தமிழிலும் உள்ளதா?

விடை: ஆம். அதைக் குறிப்பிடத்தான் இவ்வாறு ‘ஒரு’ என உயிர் எழுத்துகளின் முன் குறிப்பிடுவது தவறு என நினைவூட்டுகிறேன்.

ஆங்கிலத்தில் a, e, I ,o, u ஆகிய உயிர் எழுத்துகளுக்கு முன்பு மட்டுமின்றி, உயிரெழுத்து ஒலிப்புடன் தொடங்கும் சொற்களுக்கு முன்பும் an hour என்பதுபோல், ‘an’ பயன்படுத்துவோம். இல்லையேல் பெருங்குற்றமாகக் கருதுவோம். ஆனால் நாம், நம் தாய்மொழியில் தவறாகக் குறிப்பிடுவதையே பெருமையாகக் கருதுவதால், இவை பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. இனியேனும் செம்மையாகப் பேசுவோம்! செம்மையாக எழுதுவோம்!

“ஒன்று’ என்பது உயிர் எழுத்துகளின் முன் ‘ஓர்’ எனவும், பிற இடங்களில் ஒரு எனவும் வரும் என்பதை நினைவில் கொள்வோம்.

ஓர் ஊழியரேனும் – ஓர் உலகம்

ஓர் ஆட்சியர் – ஓர் இதழ்

ஓர் ஆணை – ஓர் ஈகையாளர்

ஓர் இணையர் – ஓர் இயக்கம்

ஒரு பதிவேடு – ஒரு மருந்தகம்

ஒரு வங்கி – ஒரு திட்டம்

இவை போல் உயிரெழுத்துக்களின் முன் ஒவ்வொரு எனச் சொல்லாமல் ‘ஒவ்வோர்’ எனல் வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டு – ஒவ்வோர் அலுவலர்

ஒவ்வோர் இடம் –  ஒவ்வோர் இனம்

ஒவ்வோர் அலுவலகம்  – ஒவ்வோர் இல்லம்

ஒவ்வொரு முறை  – ஒவ்வொரு பகல்

ஒவ்வொரு திட்டம் – ஒவ்வொரு பள்ளி

ஒவ்வொரு கல்லூரி –  ஒவ்வொரு சுற்று

எனினும் உயிரெழுத்து இல்லாத இடத்திலும் “ஓர்’ எனப் பயன்படுத்தினால் தவறல்ல; மேலும் “ஒப்பற்ற’ என்று பொருள்படும் என்பர் சிலர். எனவே ஓர் கல்லூரி, ஓர் பள்ளி எனக் கூறினாலும் எக்காரணங்கொண்டும் உயிரெழுத்து முன் “ஒரு’ பயன்படுத்தக் கூடாது.

இவைபோல் “இரண்டு’ என்பதும் உயிரெழுத்துகளின் முன் ‘ஈர்’ எனவும் பிற இடங்களில் ‘இரு’ எனவும் மாறும்.

ஈர் அலுவலங்கள் –  இரு பதிவேடுகள்

ஈர் ஆண்டு / ஈராண்டு  இருவணிக மனை

ஈரைவர் – இரு மருந்தகம்

ஈரேழு  – இரு தவறு

இவைபோல் தற்பொழுது பெரும் வழக்கில் மறைந்து போயுள்ள மற்றொன்றையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அது இது, எது என்பனவும் உயிரெழுத்துகளின் முன் முறையே அஃது இஃது எஃது என மாறும்.

அஃது அவருடையதா?

இஃது எங்கிருந்தது?

எஃது உன்னுடையது?

அஃது உலகளாவிய திட்டம்

என்றுதான் குறிக்க வேண்டும்.

அது, இது, எது, யாது ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

அது பலகை – அது சரி

இது தட்டு – இது தவறு

எது தேவை? –  எது செவ்வைப்படி?

யாது செய்வேன்

அவை இவை, எவை ஆகியவற்றின் பின்னும் வல்லினம் மிகாது.

அவை பெரிய அணைகட்டுகள்

இவை சிறிய திட்டங்கள் –  எவை சிறப்பானவை?

* ஒவ்வொரு என்பது பற்றிப் பார்த்தோம் அல்லவா? ஒவ்வொரு என்பதன் பின் வல்லினம் மிகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொருத் திட்டம், ஒவ்வொருத்தடவை, ஒவ்வொருப் பேரூராட்சி, ஒவ்வொருத் துறை என வல்லின எழுத்தைச் சேர்த்து எழுதுவதும் தவறு ஆகும்.

ஒவ்வொரு தொழிற்பேட்டை

ஒவ்வொரு பதிவேட்டிலும்

ஒவ்வொரு துறையிலும்

ஒவ்வொரு பிரிவிலும்

ஒவ்வொரு கடிதமும்

என வரும்.

* இக்கோப்பில் “ஒவ்வொரு பிரிவுகளிலும்” என உள்ளது. ஒவ்வொரு என்பது ஒருமையில்தான் முடிய வேண்டும். அனைத்துப் பிரிவுகள் அல்லது எல்லாப் பிரிவுகள் எனப் பன்மையில் சொல்லலாம். (ஒவ்வொரு பூக்களுமே’ என்பது தவறு. ஒவ்வொரு பூவும் அல்லது எல்லாப் பூக்களும் எனக் கூற வேண்டும்.)

* குற்றவாளிகள் அன்று என உள்ளது.

அஃறிணை ஒருமைக்குத்தான் ‘அன்று’ பயன்படுத்தப் பெற வேண்டும். சான்று:

முறையான கோப்பு அன்று

உரியமடல் அன்று

அஃறிணைப் பன்மையாயின் ‘அல்ல’  பயன்படுத்தப் பெற வேண்டும்.

தூய்மையான அலுவலகங்கள் அல்ல.

செவ்வைப்படிகள் அல்ல.

சரியானவை அல்ல.

* உயர்திணை ஒருமைக்கு அல்லன்/ அல்லள்

என்றும் உயர்திணைப்பன்மைக்கு ‘அல்லர்’ என்றும் பயன்படுத்த வேண்டும்.

குற்றவாளிகள் அல்லர்.

சுறுசுறுப்பாகப் பணியாற்றுபவன் அல்லன்

விரைவாகத் தட்டச்சிடுபவன் அல்லன்

நேர்மையான அலுவலர் அல்லர்

என்பன போல் வரவேண்டும். ஆனால் உயர்திணையில் அல்ல என்றே பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவை வினைமுற்று ஆகும். எனவே, இவ்வினைமுற்று ஒன்றன் பால் ஆயின் “அன்று’ என்றும் பலவின் பால் ஆயின் அல்ல என்றும் ஆண்பால் ஆயின் அல்லன் என்றும் பெண்பாவின் அல்லன் என்றும் பலர்பால் ஆயின் அல்லர் என்றும் வரும்.

கேள்வி: “அல்ல’ என்று சொல்லாமல் இல்லை என்று சொன்னால் என்ன?

விடை: கண்டிப்பாகக் கூறக் கூடாது. பொருளே மாறுபடும்.

இவை கோப்புகள் இல்லை.

என்று சொன்னால் இவை கோப்புகள் இல்லை, வேறு எவையோ எனப்பொருள்படும்.

இவை நிதிக் கோப்புகள் அல்ல என்றால் இவை நிதி தொடர்பான கோப்புகள் அல்ல; வேறு பொருள் தொடர்பான கோப்பு எனப் பொருள்படும்.

Sunday, April 13, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

      14 April 2025      அகரமுதல







சன. 4, 2011

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1

 பேரன்புசால்அவையோருக்கு,

 வணக்கம்.

 பல்வகைப்பட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் இங்கே கூடியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இங்கே நாம் வெறும் பொழுது போக்கிற்காகக் கூடவில்லை; பயன் ஆக்கத்திற்காகக் கூடியுள்ளோம்.

 ‘உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றி யாவும் நம் வெற்றி’ என்ற எண்ணத்தில் கூடியுள்ளோம்; இன்றைய கலந்துரையாடல் மூலம் நம்மிடையே எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் கூடியுள்ளோம். தமிழ் தனக்குரிய நிலையை மீளப் பெறுவதற்கு நம் சந்திப்பு ஓர் உந்துதலாய் அமையும்; இலக்கை அடைவதற்குரிய பாதையில் முன்னேறிச் செல்ல உதவும். தமிழன்னை அரசாளுவதற்கு நாம் ஒவ்வொருவரும்,

                செந்தமிழே உயிரே நறுந்தேனே

                 செயலினை மூச்சினை உனக்களித்தேனே

என நாம் ஒவ்வொருவரும் நமது பங்களிப்பை அளித்து உவகை காண  இயலும்.

ஆட்சி மொழி வகுப்பு என்ற பெயரில்  அனைவரையும் அழைத்திருந்தாலும்

இதனை வகுப்பாகக் கருத வேண்டா; ஒருவர் மட்டும் உரை யாடும் கூட்டமாகவும் கருத  வேண்டா. ஒருவரோடு ஒருவர் கலந்து பேசும் சந்திப்புதான் இது. நாம் அறிந்தவற்றை ப் பகிர்ந்து கொள்ள – அறிந்து மறந்தவற்றை  நினைவு கூர ஒரு நல்ல வாய்ப்பு. எனவே, ‌ஐயம் வரும்போது வினா எழுப்பவும் ஒத்த வே று கருத்தோ வேறு முரணான கருத்தோ ஏற்படுகை யில்  உடனுக்குடன் தெரிவிக்கவும் தயங்கக் கூடாது.

  மேலும் இங்கு வெவ்வேறு துறைகளைச்  சார்ந்தவர்கள், போக்குவரத்துக் கழகங்கள், வாரியங்கள் முதலான அரசு சார் நிறுவனத்தினர், உள்ளாட்சித் துறையினர், பல்கலைக்கழகத்தினர் எனப் பல் திறப்பட்டோர் கூடியுள்ளோம்.

ஒரு துறையில் ஒரு கலைச் சொல்லுக்குரிய பொருள், வேறு துறைகளில்  வெவ்வேறு பொருளில் வழங்கப் படலாம். ஒரு துறையினர் நன்கு அறிந்த எளிய சொல், மற்றொரு துறையினருக்கு அறியப்படாத அரிய சொல்லாக இருக்கலாம். எனவே, மிகவும் நன்கறியப்பட்டவை குறித்துக் கூட இங்கு நாம் பேச வேண்டுமா என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

இம்மேசையில் ஒவ்வொரு துறைக்கும் உரிய சிற்சிலக் கோப்புகள் எனப் பல உள்ளன. எனவே இவற்றின் அடிப்படையில்தான் நம் கலந்தரையாடல் அமையும். எனினும் இவற்றின் தொடர்பான, இணையான – முரணான செய்திகளும் இட பெற வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் இடபெறாத, ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் – அகற்றப்பட வேண்டிய ஐயங்கள் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் இருப்பின் உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.


? ‘கோப்புகளைத் தொடுவதற்கு முன் ஒரு கேள்வி.
 ’வணக்கம்’ என்று சொன்னால் மட்டும் போதுமா, ’காலை வணக்கம்’ என்று சொல்ல வேண்டாமா?
* நல்ல கேள்வி
 ’வணக்கம்’ என்பது தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சொல். அடக்கத்தையும் பணிவையும் உணர்த்தும் பண்பைக் குறிக்கும் சொல். ஆங்கில முறையில் ‘Good Morning, good-afternoon, good evening, good night’ என்பவையெல்லாம் வாழ்த்தும் முறையே ஆகும். அஃதாவது, இது நல்ல காலைப்பொழுதாக அமையட்டு ம். இந்தப் பிற்பகல் உங்களுக்கு நல்லதாய் அமையட்டும். இந்த மாலை உங்களுக்கு நல்லது அளிக்கட்டு ம். இந்த இரவு இனிய உறக்கத்தைத் தரும் நல்லிரவாய் அமையட்டும் என நம் விருப்பத்தை வாழ்த்தாக வெளிப்படுத்துகின்ற முறையாகும். இம் முறையைப் பின்பற்றிச் சரியாகக் கூறுவதாக எண்ணிப் பலரும் ’காலை வணக்கம்’  ‘மாலை வணக்கம்’ என்பனபோல் கூறுன்றனர்.


 ஆங்கில வழியில் எண்ணுவதால் பண்பாட்டுச் சிறப்பை உணராமல் இவ்வாறு தவறாகக் கூறி வருகிறோம். வணங்கல் எனின், ’ வந்தனை , பணிதல், தண்டன், வணக்கம், பரவல், இறைஞ்சல், தாழ்தல், காண்டல், வந்தித்தல், போற்றல்’, எனப் பல பொருள் ஆகும். இவை அனைத்தும் அடக்கத்தைப் புலப்படுத்துவன. எனவே வணக்கத்தைத் தெரிவிக்குபொழுது மற்றவர்பால் நல்லெண்ணம் கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் இளையோர் மூத்தோரை வணங்கலாமேயன்றி வாழ்த்தக் கூடாது. அவ்வாறிருக்க ’ நல்லகாலையாக அமையட்டும்’ என்பதுபோல் வாழ்த்துவது எவ்வாறு ஏற்புடையதாகும். அல்லது குறிப்பிட்ட ஒரு பொழுதுதான் வணக்கமாக இருப்பேன். அஃதாவது ‘காலை வணக்கம்’ என்றால் காலையில் மட்டும் வணக்கமாக இருப்பேன். பின்னர்ப் பிணக்கமாக இருப்பேன் எனப் பண்பாட்டிற்கு மாறாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? அத்துடன் வைகறை, சந்தி,கருக்கல், பகல், முற்பகல், உருமம் (உச்சிவெயில்) நண்பகல், பிற்பகல், படு ஞாயிறு, சாயுங்காலம், செக்கர், அந்தி, அந்திக்கருக்கல், பின்னந்தி, எற்பாடு இரவு, நள்ளிரவு, பின்னிரவு, முதலான பல்வேறு பொழுதுகள் தமிழில் இருக்க, சில பொழுது மட்டும் வாழ்த்தினால் போதுமா? எனவே இனியேனும் அயல்வழக்கைப் பின்பற்றி, காலைவணக்கம், பகல் வணக்கம் என்றெல்லாம் கூறாமல், நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பண்பாட்டுடன்


’வணக்கம்’ தெரிவிப்போம்.

 (தொடரும்)

Followers

Blog Archive