Showing posts with label சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?. Show all posts
Showing posts with label சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?. Show all posts

Saturday, December 13, 2025

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 8: இலக்குவனார் திருவள்ளுவன்

     14 December 2025      அகரமுதல



(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 7: தொடர்ச்சி)

திட்டத்தை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு செய்யக்கூடியது

ஒன்றிய அரசுடன் இணைந்து செய்யக்கூடியது

ஒன்றிய அரசு செய்யக்கூடியது

போன்ற மூவகை திட்டங்கள் போட்டுச் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் முன் வந்து செய்யக்கூடியதும் வர வேண்டும். அது மட்டுமல்ல இங்கே சமற்கிருத கல்விக்கூடங்கள் எல்லாவற்றையும் கருதுநிலை பல்கலைக்கழகங்களாக அஃதாவது டீம்டு யுனிவர்சிட்டி (Deemed University) என்று ஆக்கினார்களோ, அதே போன்று உலகின் பல நாடுகளில் ,பல தமிழ் அமைப்புகள் தமிழைக் கற்றுக் கொடுக்கின்றன. தமிழார்வலர்கள் தமிழைக் கற்பித்து வருகிறார்கள். அவர்கள் ஏதோச் சொந்த செலவிலும் ,நிதி, நன்கொடை வாங்கி ஏதோ ஒரு வகையிலும் செலவழித்துக் கொண்டுவருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை எல்லாம் அரசு உதவி தந்து அத்தகைய கல்வி நிறுவனம் ஏறத்தாழ ஒரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்பாக, ஒரு கல்வியகமாக அரசு சார் கல்வியகமாக மாற்ற வேண்டும். யார் யாரெல்லாம் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்களோ – பிற நாடுகளிலே – அவர்கள் அமைப்பை அரசு நிதி உதவி பெறும் கல்வியகமாக மாற்ற வேண்டும். அதற்கான முழு உதவியும் தர வேண்டும். எங்கெல்லாம் தமிழர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் இந்தியும், சமற்கிருதமும் இந்திய அரசு கற்றுக் கொடுக்கிறது . அதை நிப்பாட்ட வேண்டும். நிறுத்தி அங்கு தமிழைத்தான் கற்றுத் தர வேண்டும். மொரிசியசில் தமிழன் தமிழ் படிக்க வேண்டும் என்றால், நீ இந்தியன். இந்தி படி என்றார்கள் சமற்கிருதத்தைத் திணித்தார்கள். அப்படித்தான் அங்கெல்லாம் சென்றது. பல நாடுகளைச் சொல்லலாம் 80 நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறார்கள் அல்லவா ஆனால் சமற்கிருதம் எப்படி இப்பொழுது கூட இந்தியாவில் 25 ஆயிரம் பேர் பேசுவார்கள் என்றார்கள் இல்லையா? 25 ஆயிரம் பேர் கிடையாது. ஏறத்தாழ 10000 பேர் தான். அதனைக் கூட நாம் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெளிவாகக் கூறுகிறது, அவர்களில் பெரும்பாலோர் சமற்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். பலர் கோயில்களிலே ஓதக்கூடிய ஓதுபவர்கள் . அது அவர்களுக்குத் தாய்மொழி ஆக முடியாது.

மாத்தூர் என்று கருநாடகாவில் ஓர் இடம் இருக்கிறது .அங்கே சமற்கிருதத்திற்குப் பல நிதி உதவிகளை அரசு தருகிறது. அந்த மாத்தூரில் உள்ளவர்கள் பேசுவது சங்கேத மொழி என்று பெயர். தமிழர் தான் அவர்கள். போறேன் வாரேன் என்ற இந்த பேச்சுத் தமிழ்தான் அங்கே இருக்கிறது, ஆகப் பேச்சுத் தமிழைச் சமற்கிருதம் என்றாக்கி சமற்கிருத நிதி வருகிறது சமற்கிருதத்தை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும்.

அடுத்தது, எழுத்து இல்லாத மறைந்த அஃதாவது குறைந்த எண்ணிக்கை உள்ள மொழிகளில் எல்லாம் எழுத்தை அதாவது ஒலி வரி வடிவத்தை மாற்றி விட்டு, தேவ நாகரி வடிவத்தைப் புகுத்தி விடுகிறது. தேவ நாகரியைப் புகுத்தி விட்டு இது தேவ நாகரி வடிவம் என்று சொல்லிவிட்டு, உங்கள் மொழி இந்தி அல்லது சமற்கிருதம் என்று சொல்லிவிடுவார்கள் ஏன்? அப்படித்தான் வடக்கே செய்தார்கள் பீகாரில் மட்டுமே என்பது 80 மொழிகளை இந்தி மொழியாக மாற்றினார்கள். ஒன்றல்ல இரண்டல்ல 80 மொழிகள், பொய்யல்ல 80 மொழிகள் கற்றவர்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். புள்ளி விவரங்கள் இருக்கின்றன. குறிப்புகள் இருக்கின்றன. எல்லாமே இருக்கிறது. 80 மொழிகளை இந்தி மொழியாகக் காட்டினார்கள். இவ்வாறு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் குறைந்த எண்ணிக்கை உடைய தமிழ்க் குடும்பமொழி திராவிடமொழி என்று சொல்கிறோமே, பேராசிரியர் இலக்குவனார் சொல்படி தமிழ்க்குடும்ப மொழி என்று சொல்கிறோமே, தமிழ்க்குடும்ப மொழிகள்தான். அந்த தமிழ்க்குடும்ப மொழிகளை எப்படி மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள், தேவ நாகரி என்று சொல்லி மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆக நாம் இங்குதான் திராவிடம் திராவிடம் என்று சொல்லுவோமே தவிர அந்த திராவிட மொழி என்று சொல்லக்கூடிய தமிழ் குடும்ப மொழியினரிடம் போய் டேய் உனது தாய்மொழி தமிழ் என்று சொல்லி அவர்களை தமிழ் படிக்கவோ எழுதவோ செய்வது கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் திராவிடம் என்று குரல் கொடுத்தால் போதுமா ஏன் அந்தத் தவற்றை செய்து கொண்டு இருக்கிறோம் என்று உணர வேண்டும்.

(தொடரும்)

13.07.2025

Saturday, December 6, 2025

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7: இலக்குவனார் திருவள்ளுவன்



(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 6: தொடர்ச்சி)

செம்மொழி அரசு ஏற்பால் தமிழ் பெறும் பயன்கள் என்று பல்வேறு அறிஞர்கள் கட்டுரை அளித்தார்கள். நானும் கட்டுரை யளித்தேன். அது மலேசிய இதழ் ஒன்றிலே வந்திருந்தது, புதிய பாரதம் இதழிலும் ஒரு கட்டுரை அளித்தோம். ஆனால் அவை அனைத்தும் கற்பனை! கற்பனை! கற்பனைதான்! அவற்றில் கதை அளந்திருப்போம். எங்கெங்கெல்லாம் தமிழ் வளரும் என்று பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் வளரும், பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள், பன்னாட்டு அமைப்புகள், மொழி கலை பண்பாட்டு அமைப்புகள், இலக்கிய படைப்புகள், தகவல் ஊடகங்கள் எங்கு பார்த்தாலும் இங்கே தமிழ் வளரும் செழிக்கும் என்று எழுதினோம். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை. ஏதோ இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுவது போன்று காற்று வாக்கில் போவது போல் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் தவறான கருத்தைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மறுப்பு தெரிவித்தோம். தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்? உண்மையான தமிழ் ஆய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு, ஏன் உண்மையான என்றால் தமிழ் அமைப்பு என்றால் தமிழ் பயின்றவர்க்கு முதலிடம் தர மாட்டார்கள். தமிழர்கள் இடம் பெற மாட்டார்கள். எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும் தமிழ் பயின்றவர்க்கு முதலிடம் தர மாட்டார்கள். அது அப்படி யாரேனும் தமிழ் அறிந்தவர்கள் வந்திருந்தால் அவர்கள் தன் அறிவுத்திறனை வெளிப்படுத்தாமல் அரசிடம் ஆதாயம் பெறுவதற்காக ஏதும் ஒரு செல்வாக்கு, செல்வத்தை அடைய வந்தவர்களாக இருப்பார்கள். தமிழுக்குக் குரல் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறல்லாமல் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஒரு பெரிய குழுவை நியமிக்க வேண்டும். நியமித்து இந்த ஒன்றிய அரசின் மூலமாக என்னென்ன செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு என்னென்ன செய்ய வேண்டும். தமிழுக்கு எவ்வாறெல்லாம் நிதி ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையிலே நாம் ஒன்றிய அரசை நிதி கேட்க வேண்டும். நிதி கேட்காமல், நிதி கொடுத்தார்களா கொடுத்தார்களா என்று கேட்காதே, அதேபோல் மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய அரசு நிதி கொடுப்பது தவறு அல்ல. ஏன் தவறு அல்ல என்றால் சமற்கிருதத்திற்காக அத்தனைத் திட்டங்களைச் செயல் படுத்துகிறார்கள். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. அதே நேரம் என்ன தவறு என்றால் இத்தனைத் திட்டங்களும் தேவையற்ற திட்டங்கள், மக்களை ஏமாற்றும் திட்டங்கள், போலித் திட்டங்கள், சமற்கிருதத்தை உயர்வாகச் சொல்லக்கூடிய திட்டங்கள் . ஆக அந்த வகையிலே தேவை இல்லைதான், ஆனாலும் கூட நடைமுறையில் இருக்கும் வரை செய்யத்தானே செய்வார்கள். அந்த நடைமுறைத் திட்டங்களைத் தூக்கி எறிய வேண்டும். ஒரேடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக சமற்கிருத நிறுவனங்களை எல்லாம் குறைக்க வேண்டும். எண்ணிக்கை குறைத்து அவ்வாறு குறைப்பதன் வாயிலாக அந்த இடங்களில் தமிழைக் கொண்டு வர வேண்டும் .இவ்வாறு திட்டங்கள் தீட்ட வேண்டும். ஆக அரசு அமைக்கிற ஆணையமோ அமைப்போ என்ன செய்ய வேண்டும். முதலில் குறிப்பிட்டது போன்று மாநிலங்கள் தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் எப்படி அமைப்பது- எப்படி தமிழ்க் கல்வி நிறுவனங்களை அமைப்பது எனச் சிந்தித்து ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டும்.

இந்த மேத் திங்கள் அமித்துசா அவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்தான் புதுதில்லி முதலமைச்சர் அவர்கள் தெய்வ மொழி சமற்கிருதம் என்று மீண்டும் பேசினார். அது என்ன நிகழ்ச்சி தெரியுமா? 2008 ஆவது சமற்கிருத உரையாடல் நிகழ்ச்சி. தில்லியில் உள்ள 2000 பேருக்கிடையேயான சமற்கிருத உரையாடல்- பேசுவது எப்படி?, பிற மொழிக் கலப்பின்றி சமற்கிருதத்தில் பேசுவது எப்படி? என்ற நிகழ்ச்சி. இது நாடெங்கிலும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இருக்கிறது. சென்னையிலும் இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த பத்து நாள் உரையாடல் முகாம் முடிந்த பிறகு அவர்களை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அரசின் – சொந்த செலவில் அழைத்துச் சென்று – தங்க வைத்து அங்கு முழுக்க முழுக்க சமற்கிருதத்தில் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார்கள். இவ்வாறெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு எங்கே தமிழைப் பேசுகிறார்கள். அலைபேசியில் தமிழ் இல்லை ,தொலைக்காட்சியில் தமிழ் இல்லை , தமிழைக் கொலை பண்ணால்தான் தொலைக்காட்சி வாய்ப்பு என்றாகி விட்டது. இப்பொழுதெல்லாம் ஊடகங்களில் தமிழே இல்லாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் அரசு பயிற்சி தருவது மட்டும் அல்ல பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடும் தரவேண்டும் . ஆகத் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களைத் தலைவராகக் கொண்டு, தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களை உறுப்பினராகக் கொண்டு, தமிழுக்குச் செய்ய வேண்டியன என்ன என்ன என்று திட்டம் தர வேண்டும். அ’தாவது இதுவரை பலர் எழுதி இருக்கிறார்கள் அதில் இருந்து கருத்துகளை வாங்கிக் கொண்டு அல்லது எடுத்துக் கொண்டு திட்டத்தைக் கொடுக்க வேண்டும்.

(தொடரும்)

இணைய வழி உரையின் எழுத்தாக்கம்

13.07.2025

Saturday, November 22, 2025

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 4: தொடர்ச்சி)

நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அரசு நிறுவனத்தில் செம்மொழி ஒதுக்கீடு பற்றிய ஒரு கருத்தரங்கில் பங்கேற்றேன். அப்போதே நிதி நிலை அறிக்கையில் இருந்து மொழிகளுக்கான பல்வேறு நிதி குறித்துக் குறிப்பிட்டு இருந்தேன். இன்னின்னவாறு ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு இல்லையே என்பதாக குறிப்பிட்டு இருந்தேன். பல்வேறு ஒதுக்கீடுகள். ஆனால் இப்பொழுது இன்னும் கூடுதலாக இருக்கிறது. இந்தக் கூடுதலான நிதி ஒதுக்கீட்டிற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் ஒன்றிய அரசைக் கேட்க வேண்டும். மீண்டும் கேட்க வேண்டும். கேளுங்கள். கட்சி வேறுபாடு இன்றி மக்களைத் திரட்டி அணி சேர்ந்து ஒன்றிய அரசுக்குக் குரல் கொடுங்கள், செய்யுங்கள் இங்கே வந்து நீங்கள் தமிழை வாழ்த்தினால் போதாது. தமிழுக்கான செயற் திட்டத்தை நிதி ஒதுக்கீட்டுடன் தாருங்கள் என்று கேட்க வேண்டும் அல்லவா அதைச் செய்வதற்கு நமக்குத் தெம்பு இருக்க வேண்டும். நான் கூட “**யாருக்கும் வெட்கமில்லை**” என்று கட்டுரை எழுதி இருக்கிறேன். அப்போதைய செம்மொழி விருது அறிவிப்புக்கு எழுதி இருந்தேன். இதற்கு முன்பு என்னென்ன எழுதி இருந்தேனோ, அஃது இன்றைக்கும் பொருந்துவதாய் இருக்கிறது செம்மொழிக்கு ஒன்றிய அரசு ஒன்றும் செய்யவில்லை தமிழ்நாடு அரசும், தமிழகக் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை. விருது கொடுத்தபோது கூட ஏன் மூத்த அறிஞர்களுக்கு விருது கொடுக்கவில்லை என அப்பொழுதே கேட்டிருந்தேன். அதை அந்த “யாருக்கும் வெட்கமில்லை“ என்ற கட்டுரையில் எழுதி இருந்தேன். அஃதாவது அரபி, பெருசியன் போன்ற மொழிகளுக்கு கூட பல கோடி நிதி உதவி தருகிறது. ஆனால் தமிழுக்குக் குறைவு. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குப் போன அரபி, பெருசியன், சமற்கிருதம் அதற்கெல்லாம் போகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விருதுக்கு உரிய பணத்தைத் தரவில்லை. ஏன் அப்படி? ஆண்டுதோறும் 22 சமற்கிருத அறிஞர்களுக்கு மூத்த செம்மொழி விருது தரும் ஒன்றிய அரசு ஏன் ஒரு மூத்த தமிழறிஞருக்குக்கூட விருது தரவில்லை, அதைத் தட்டிக் கேட்கும் திறன் ஏன் இவர்களுக்கு இல்லை. இவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாவிட்டால் அதுவும் தவறு. நாம் பல்வேறு இடங்களிலே பார்த்துத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் அரசு நிருவாகத்தில் குறை என்றாகிவிடும். உளவுத்துறை, செய்தித்துறை அரசின் கருத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2008 சூனில் நடத்தினார்கள் அப்பொழுது கூட அறிவித்திருக்கலாம். இல்லை. 2008 இல் இருந்து இன்று வரை எண்ணிப் பாருங்கள். 17 ஆண்டுகள். இந்த 17 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 15 விருதுகள் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் ஆண்டிற்கு 5 அல்லது 10 பேர் என்றாவது எத்தனை பேர் என்று எண்ணிப் பாருங்கள். இல்லையே நமக்கு! எங்கு சென்றன அவை?

சரி, பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொள்வோம். சமற்கிருதப் பல்கலைக்கழகங்கள் 18, செருமனியிலே 17. பத்தாததற்கு 121 சமற்கிருதக் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. நேரடியாக ஒன்றிய அரசு மாணவர்களுக்கு நிதி உதவி செய்து தருகிறது. இவ்வாறு பல நாடுகளில் ஒன்றிய அரசு சமற்கிருதக் கல்விக்கு உதவி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏன் ஒரே ஒரு தமிழ் பல்கலைக்கழகம். 1947 இல் 26 மாவட்டங்கள் மொழிவாரி மாநிலம் வந்த பிறகு 12 மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டிலே அப்படி இருக்கும்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கழித்து விட்டுப் பார்த்தால் இன்னும் 11 பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும். குறைந்தது, பழைய மாவட்ட கணக்கில் வைக்கலாமே, மாவட்டங்கள் தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வைக்கலாமே, இதற்கான திட்டத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்கு ஒரு தமிழ் பல்கலைக்கழகத்தை வைத்து அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களை வைக்க வேண்டும். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல்வேறு இடங்களில் தமிழ்த்துறையின் பொறுப்பாளர்களாக வேறு துறையைச் சார்ந்தவர்கள் தான் இருப்பார்கள் அல்லது பேச்சு மொழிக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய தமிழ் படித்த அறிஞர்களாக இருப்பார்கள். தமிழ் அறிஞர்கள்தான் ஆனால் பேச்சு மொழியை வாழ வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் குழுவினரைத் தமிழறிவு தேவையில்லாமல் எடுத்தார்கள். ஒன்றிய அரசைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் போது தமிழ் அறிவு தேவை இல்லையா? தமிழக அரசியல் இதழில் இது குறித்து வந்த என் செவ்வியை ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைத்தேன். , செம்மொழி நிறுவனத்தில் அப்போதைய பதிவாளராக முனைவர் முத்துவேல் இருந்தார் அவரும் அதை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்து அவர்கள் நியாயமான கேள்வி என்றார்கள். உடனடியாக அக்குழுவை மாற்றினார்கள்.

அதேபோலச் செம்மொழி விருது கொடுக்கும் பொழுது, அவ்விழாவிலே தமிழிலே அறிமுகம் இல்லை. தமிழ் அறிஞன் தமிழில் விருது பெறுகிறான், தன்னைப் பற்றி என்ன சொல்கிறான் என்று கேட்கக் கூடிய அறிவு வேண்டாமா? இஃது எப்படி? தமிழில் தான் நடத்து என்று சொன்னவுடன், இது நியாயமான கோரிக்கை என்று கேட்டார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒன்றிய அரசு சொன்னால் கேட்கிறார்கள், சொல்ல வேண்டிய முறையில் நாம் சொல்ல வேண்டும். மேம்போக்காகக் கட்சியைத் திட்டுவதாலேயும் ஒன்றிய அரசைத் திட்டுவதாலேயும் பயனில்லை. இன்னமும் அப்படித்தான். திட்டிப் பயனில்லை. நாம் சரியாகக் கேட்க வேண்டும். இவ்வாறு பலவற்றை நாம் சொல்லலாம். அவ்வாறு நாம் கேட்க வேண்டியதைக் கேட்டுப் பெற வேண்டியதைப் பெற்றுத்தான் ஆக வேண்டும்

(தொடரும்)

13.07.2025

Saturday, November 15, 2025

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 4: இலக்குவனார் திருவள்ளுவன்

      16 November 2025      அகரமுதல



(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 3: தொடர்ச்சி)

ஆக எந்த ஒரு திட்டத்திற்கும் நாம் ஒன்றிய அரசைச் சார்ந்தே உள்ளோம். ஆனால், பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசைப் பின்பற்றித்தான் தென் மாநிலங்கள் பின்பற்றுகின்றன. அஃது உலகத் தமிழ் மாநாடு ஆகட்டும் வேறு பல திட்டங்கள் ஆகட்டும். ஆனால் இந்த மொழி வளர்ச்சியில் நாம் மத்திய அரசைப் பின்பற்றலாம். பின்பற்றி நாம் என்ன கேட்கலாம்? அவர்கள் சமற்கிருத வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துகிறார்கள் இல்லையா? அந்தத் திட்டங்கள் படி நாமும் பண உதவி கேட்டுப் பெறலாம். எடுத்துக்காட்டாகச் சமற்கிருத இதழ்கள், இந்தி இதழ்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு விளம்பரங்களைத் தருகிறது. அஃதாவது நிதி உதவி வேறு, விளம்பரம் வேறு, இவ்வாறு பல்வேறு திட்டங்கள் மூலமாக அம்மொழிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, சமற்கிருத நிதி ஒதுக்கீட்டிற்கு எதிராக, யார் யாரெல்லாம் கண்டனம் சொல்கிறார்களோ, ஒரு தடவைக்கு மேல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள்களைத்தான் முதலில் கேட்கிறேன் இந்தப் பத்து ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்? பத்தாண்டுகளாகத் தூங்கிவிட்டு, இப்போது ஏன் கேட்கிறீர்கள்? போன ஆண்டு சமற்கிருத நிதி ஒதுக்கீட்டு விவரம் வந்தது; கண்டித்தார்கள், அதற்கு முந்தின ஆண்டும் வந்தது; கண்டித்தார்கள். போன ஆண்டு ஒருவர் கண்டித்தார். இப்போது கண்டிக்கவில்லை; கவனம் இல்லை, வேறு சிக்கலில் இருக்கிறார் போலும். பொதுவாக அவ்வப்போது வரும் இவ்வளவு வளர்ச்சித் தொகை ஒதுக்கீடு என்று. ஆகா ஓகோ ஒன்றுமில்லா செத்த மொழிக்கு இவ்வளவா என்பார்கள். ஆனால் செத்த மொழிக்குதான் செலவழிக்கிறார்கள். நாம் வாழும் மொழியைச் சாகடித்துக் கொண்டு இருக்கிறோம். கல்வியில் தமிழ் இல்லையே, அன்றாடப் பயன்பாட்டில் தமிழில்லையே, வழிபாட்டு மொழி தமிழில் இல்லையே, எங்கு பார்த்தாலும் தமிழ் இல்லையே, தமிழே இல்லாமல் தமிழை நாம் சாகடித்துக் கொண்டு இருக்கும் போது நாம் செத்த மொழி என்று பல கோடி உரூபாய் ஒதுக்கீடு பெறக்கூடிய ஒரு மொழியைச் சொல்லலாமா, ஆக நாம் மேலோட்டமாக கண்டிப்பதிலோ அல்லது மிக கடுமையாகக் கண்டிப்பதிலோ பலன் கிடையாது.

இதே போன்று, தமிழ்நாட்டிலும் பல திட்டங்கள் உள்ளன. நிதி உதவி செய்வது, அச்சிட்ட புத்தகங்களுக்கு நிதி உதவி செய்வது என. ஆனால் அதற்கான வரையறையை நீங்கள் பார்த்தீர்களானால் மிக மிகச் சிக்கலாக இருக்கும். அஃதாவது எந்த உதவியும் யாரும் பெற முடியாது. அந்த அளவில் தான் உதவியே இருக்கும். இந்தத் திட்டங்கள் எதற்காக? தமிழைப் பரப்புவதற்காக தானே இருக்க வேண்டும். ஆனால் அஃது அல்ல அவ்வாறு இல்லாமல் நிதித் துறையை அவர்கள் சொந்த வீட்டுப் பணத்தை வாரி வழங்குவது போன்று எண்ணிக் கொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நடை முறைதான் நமக்கு இருக்கின்றது. ஆக, நாம் செய்ய வேண்டியது என்ன? சமற்கிருதத்திற்கு அதிக ஒதுக்கீடு என்று சொல்வதை நிறுத்துங்கள். மிக அன்பான வேண்டுகோள், திட்டங்களைத் தாருங்கள்,  இன்னின்ன திட்டங்கள், இந்த திட்டங்களுக்கான எங்களுக்குத் தாருங்கள், திட்டத்திற்கான பண வசதி தாருங்கள், இப்படிக் கேட்கும்பொழுது ஒட்டுமொத்த எல்லா மொழிக்கும் குரல் கொடுக்க வேண்டா. அவரவர் மொழியை அவர்கள் பார்த்து கொள்ளட்டும். அவர்கள் குரல் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் சேர்த்துச் சேர்த்தே நம் தமிழை அழித்துக் கொண்டு இருக்கிறோம். மலையாளத்தில் அவன் குரல் கொடுத்தால் இணைந்து கொள்ளுங்கள். அதை நாம் சொல்ல வேண்டா. தமிழுக்கு இன்னின்ன செய்ய வேண்டும்; செய்யுங்கள் என்று கேட்போம். நமது வேலை என்ன? தமிழ் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுதல், அது மட்டுமல்லாமல் எவ்வாறு சமற்கிருத அறிஞர்களையும், சமற்கிருத நூலாசிரியர்களையும் ஒன்றிய அரசு மதிக்கிறதோ அவ்வாறு தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விருதுகள் கொடுத்தும் மேலும் பாராட்டவும் செய்யும். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் கூட, இருக்க வேண்டிய அளவிலே இல்லை; எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு இல்லை, காரணம் நமக்கு உரிய நடைமுறை அறிவு இல்லை. வேறு சொல் பயன்படுத்தலாம் ஆனால் எனக்கு அந்தச் சொல்தான் வருகிறது. நம்மிடம் செயற்பாட்டுத் திட்டங்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆக எந்த ஒரு நடைமுறைத் திட்டமும் இல்லாமல், நாம் குரல் கொடுப்பதாலோ கண்டிப்பதாலோ ஏதேனும் பலன் இருக்கிறதா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு சிந்தித்துப் பார்த்தால்தான், ஏன்? நாம் இவ்வாறு செய்ய வேண்டி இருக்கிறது என்றும், என்னென்ன செய்யலாம் என்றும் நமக்கு விழிப்புணர்வு வரும்.

(தொடரும்)

13.07.2025

Followers

Blog Archive