Showing posts with label தொல்காப்பியம். Show all posts
Showing posts with label தொல்காப்பியம். Show all posts

Saturday, October 25, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி)

பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள், அகரமுதல 24.07.2016)

தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார் அவர்கள் வடமொழிப் பற்றின் காரணமாக இவ்வுண்மையை உணர்ந்திலர் போலும். வடமொழியாளர் பிறரால் பின்பற்றப்பட வேண்டியவர்களே யன்றிப் பிறரைப் பின்பற்ற மாட்டார்கள் என்ற துணிபு பல நூல்களையும் கற்றறிந்த சாத்திரியாரையும் விட்டிலை போலும். சாத்திரியார் நினைப்பது போல் ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு வட மொழிப் பிராதி சாக்கியங்களையும், யாசுகருடைய நிருத்தத்தையும் பாணினியினுடைய இலக்கணத்தையும் பின்பற்றித் தம் நூலை அமைத்திருப்பின் வெளிப்படையாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாததனால் சாத்திரியார் கருத்து ஆய்வு முறைக்குப் பொருத்தமற்றது என அறிதலே ஏற்புடைத்து, இந்திய மொழிகளின் தாயாம் தமிழ், ஆரியத்திற்கும் தாயாம் என்ற உண்மை அறிபப்படும் காலம் சேய்மையில் இன்று.

            ” சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்

            முதுமொழி நீ அனாதியென மொழிவதும் வியப்பாமே “

என்ற பேராசியர் சுந்தரனார் கூற்றை உன்னுக. – பேரா.சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சி பக்கம் : 114

தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்னோ சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை. “ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துகளை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)” என்கிறார் மறைமலை அடிகள்(தமிழின் தனிச்சிறப்பு) அத்தகையவர்கள் தமிழர்களுக்கு முன்னோடியாக இலக்கண நூல் படைத்தனர் என்பது நம்பும்படியாகவா உள்ளது? தமிழ் முதலிய பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை மொழி பெயர்த்து வைத்துக் கொண்டு தங்கள் நூல்களே முதன்மையானவை என்று பொய் கூறும்  ஆரியத்தினர் இதிலும் அவ்வாறே பொய் கூறியுள்ளனர்.

 “ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டது” என்கிறார் பேரா.சி.இலக்குவனார்.  “பிராமணர்கள், தமிழ் நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர்.  பிராமணர்கள் அப்போது அங்கு வழக்கத்திலிருந்த தமிழ் வரி வடிவெழுத்துகளோடு சமசுகிருத ஒலிகளை வெளியிடக் கூடிய சில வடிவெழுத்துகளையும் சேர்த்துத் தமிழ் வரி வடி வெழுத்துகளைத் திருத்தி அமைத்தனர்” என்று திரு. எல்லிசு கூறுவதை எடுத்துக்காட்டாகத் தருகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி:  பக்கம்: 39).  மேலும், தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்தான் ஆரியர்கள் எழுத்து வடிவைத் திருத்தி அமைத்துக் கொண்டனர் என்றும் விளக்குகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி:  பக்கம்: 44). எனவே, தொல்காப்பியக் காலத்திற்கு முன்னர் ஆரியர்க்கு எழுத்து வடிவே இல்லாத பொழுது ஐந்திரத்தைச் சமற்கிருத நூலாகச் சொல்வது முழுப்பொய் அன்றி வேறில்லை. அதுபோல் பாணினியத்தையோ வேறு நூலையோ தழுவித் தொல்காப்பியம ்எழுதப்பட்டதாகக் கூறுவதும் பொய்யிலும் புரட்டிலும் கை வந்தவர்கள் செயல்களாகும். (ஐந்திரம் தமிழ் நூலே! – இலக்குவனார் திருவள்ளுவன், தொல்காப்பிய விழா மலர், தொல்காப்பிய மன்றம், கனடா, 2023)

(தொடரும்)

Saturday, September 27, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – தொடர்ச்சி)

இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்:

      “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது  தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது. அந்நூலின் பெயரே அதன் பழமையைக் காட்டுவதாயுள்ளது. தொல்காப்பியத்துக்கு முன் அகத்தியம் இருந்தது என்பர். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையின், கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் பழமை வாய்ந்ததாயுள்ளது தொல்காப்பியம். “

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில

தொல்காப்பியத்திற்கு முதல்நூல் அகத்தியம் என்று கொள்வதற்கு இடமில்லை. மாறாகச் செய்யுள் வழக்கினும், உலகோர் வழக்கினும் பல காலமாய் இடம்பெற்ற பல செய்திகளும், தொல்காப்பியரால் எடுத்தாளப் பெற்றிருத்தல் இயல்பே எனலாம். ஆயினும், எழுத்து, சொல், பொருள் மூன்றன் இலக்கணமும் விவரித்திடும் விரிவானதொரு நூல், அக்காலத்தில் வேறு இல்லையாதலின் அதுவே முதல்நூல் ஆகும் என்பதில் ஐயமில்லை.” என்கிறார் பேராசிரியர் க.அன்பழகனார்: (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம் 11)

பாணினியம் முதல் நூலல்ல

“ஐந்திரம்” என்னும் நூலே, தொல்காப்பியத்திற்கு முந்தைய தமிழ் இலக்கண நூலாகும். இந்தத் தமிழ் ஐந்திரத்தைத் தழுவியே, வடமொழிகளுக்கு எழுத்துகளும், இலக்கணங்களும் வடிக்கப்பட்டன. வடமொழிகளான, மாகத, பாகத(பிராகிருத) மொழிகளின் இலக்கணங்களைக் கற்கப் புகுவோரெல்லாம் தமிழ் ஐந்திரத்தை முதலில் கற்றேயாக வேண்டும் என்னும் நிலை கி.பி.11 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்தது. இதனைக் கருநாடகத்தின் கொப்பளத்தில் கண்டெடுக்கப்பட்ட அருகச் சமயக் குரவர்களைப் பற்றிய கல்வெட்டொன்று உறுதிப்படுத்துகிறது.(அத்திப்பட்டு முரளிதரன் முகநூல்) எனவே பாணினியத்திற்கும் வழிகாட்டி ஐந்திரமே. அவ்வாறிருக்க பாணினியத்தைத் தொல்காப்பியத்தின் மூல நூலாகக் கூறுவது தவறல்லவா?

பாணினியத்தின் காலம்

இந்தியவியலாளர் கோல்ட்சுடக்கர், பண்டார்கர், முனைவர் இராதா குமுத்து முகர்சீ, பாடக்கு ஆகியோர் பாணினி வாழ்ந்த காலம் கி.மு ஏழாம் நூற்றாண்டு என்றும்,வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ. நீலகண்ட சாத்திரி கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முன் என்றும் உறுதிபட நிறுவியுள்ளனர் என்கிறார் ஒருவர். ஆனால், அவர் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு.120 என வேண்டுமென்றே தவறாகக் கூறுகிறார். எனவே, நடுநிலை தவறிய இவரது கருத்து ஏற்கத் தக்கதல்ல.

விக்கிபீடியாவில் உள்ளவாறு பாணினியின் காலம் பொ.ஊ.மு.520க்கும் பொ.ஊ.மு.460க்கும் இடையே இருக்கலாம் என அறிஞர்கள் கூறும் காலமும் தவறு.

பாணினி காந்தார நகரத்தில் தோன்றியதாகக் கூறுகின்றனர். கிமு 330-இல் பழைய காந்தார நகரத்தை அலெக்குசாண்டிரிய அரச்சோசியா எனும் பெயரில் (Alexandria Arachosia) நிறுவியவர் பேரரசர் அலெக் குசாந்தர் ஆவார். காந்தார நகரம் உருவானபொழுதே பாணினி தோன்றியவராக இருந்தாலும் அவரது காலம் கி.மு.330இற்குப் பிற்பட்டதே. எனவே அதற்கு முந்தையதாகக் கூறுவனவெல்லாம் கட்டுக்கதைகளே. பாணினியின் காலம் கி. மு. 300 என்பர் முனைவர் பந்தர்க்கார். நகர வரலாற்று அடிப்படையில் இக்கருத்து ஏற்கக்கூடியதாக உள்ளது.

(தொடரும்)

Wednesday, January 5, 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்? – இன்மதியில் இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


by Inmathi Staff | சன 5, 2022 | கல்வி



ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு  ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை அரசு உருவாக்கியிருப்பதில் எனக்கும் இரட்டை மகிழ்ச்சி. தமிழறியாதவர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணியில் அமர்ந்து கொண்டு, மக்களுக்கும் அரசிற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக் கொண்டும் மக்கள் குறைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் காலங்கடத்திக் கொண்டும் மண்ணின் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்.

இதுவரை தமிழறியாத பிற மாநிலத்தவர் தமிழர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதற்கு அடியோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டரசு மட்டுமல்லாமல், ஒன்றிய அரசு, அரசு சார்பு நிறுவனங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், ஒன்றிய அரசின் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என அனைத்திலும் தமிழக அரசின் தமிழ்த் தேர்வுத்தாளை எழுதுவதைக் கட்டாயமாக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழறிந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு என்பதும் இதனால் தமிழ் ஆட்சிமொழித்திட்டம் முழுமையாக நிறைவேற வாய்ப்பு கிட்டும் என்பதும் முதல் மகிழ்ச்சி.1990 களில் தேர்வாணையத்திலிருந்து வல்லுநர்கள் சிலரை அழைத்து இது குறித்துக் கருத்தரங்கம் நடத்தினார்கள். அப்பொழுது நான் தெரிவித்த கருத்துகள் படிப்படியாக நிறைவேறிக் கொண்டுள்ளன. அவ்வகையில் ஒன்றான இத்திட்டமும் நிறைவேறுவதால் இரண்டாவது மகிழ்ச்சி. என்றாலும் பெரும் வருத்தங்களும் உள்ளன.

தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல. வாழ்வியல் நூலாகும். ஆனால், அதனைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்காதது மிகப்பெரும் தவறாகும். எனவே, உடனடியாகத் தொல்காப்பியத்தைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான நூல் தொல்காப்பியம். ஆனால், அடிப்படைப் பாடத்திட்டங்களில் தொல்காப்பியம் இல்லை.  பட்ட, பட்ட மேற்படிப்பு நிலையில் இலக்கணம் என்ற அளவிலும்  பண்பாட்டுத்தாளிலும் தொல்காப்பியம் இடம் பெற்றுள்ளது. எனவே, அறியாமல் நேர்ந்த தவறு என்று சொல்ல இயலாது. திட்டமிட்டுத் தொல்காப்பியத்தை தேர்வுத்திட்டக் குழுவினர் மறைத்துள்ளனர் என்று கருத இடம் உள்ளது. இந்திய வரலாற்றை எழுதுபவர்கள் தொல்காப்பியத்தைப் படிக்க வேண்டும் என்பார் பேராசிரியர் இலக்குவனார்.  தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல. வாழ்வியல் நூலாகும். ஆனால், அதனைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்காதது மிகப்பெரும் தவறாகும். எனவே, உடனடியாகத் தொல்காப்பியத்தைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

திருக்குறளில் 19 அதிகாரங்களைத் தேர்வுத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். பொதுவாகப் பார்த்தால் அல்லது ஐந்தால் வகுபடும் எண்களைக் குறிப்பிடுவார்கள். அது என்ன 19 என்று தெரியவில்லை.

ஈராண்டிற்கு ஒரு முறை 25 அதிகாரங்களைத் தேர்வுத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் வேலைக்கான தகுதி பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவதன் மூலம் திருக்குறள்களைத் தொடர்ந்து அறிய வாய்ப்பு கிடைக்கும்.

தேர்வுத் திட்டத்தில் பெருங்குறைபாடு ஒன்றும் உள்ளது. சமற்கிருதம் என்பது ஒரு தாளாக உள்ளது.

தேர்வுத் திட்டத்தில் பெருங்குறைபாடு ஒன்றும் உள்ளது. சமற்கிருதம் என்பது ஒரு தாளாக உள்ளது. பழைய தேர்வுத் திட்டத்திலும் உள்ளதால், கடந்த ஆட்சியிலேயே சேர்த்திருப்பார்கள் எனக் கருதுகிறேன். பல மொழிகளுக்குமான தேர்வுத்தாள் இருப்பின் சமற்கிருதத்திற்கும் வைத்திருந்தால் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் வேலை பார்ப்பதற்கு எதற்குப் போலியான செம்மொழியான சமற்கிருதத்திற்கு எனத் தனித்தாள் தேவை? ஒன்றிய அரசு சமற்கிருதத்தைத் திணிப்பது போதாதா, தமிழக அரசும் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமா? எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாகச் சமற்கிருதத் தேர்வுத்தாளை அகற்ற வேண்டும்.

வரலாற்றுப் பாடத்திலும் தமிழர் நாகரிகமும் தமிழர் பண்பாடும், தமிழக வரலாறும் முதன்மை பெறும் வகையில் தேர்வுத்திட்டத்தை அமைக்க வேண்டும். சங்க இலக்கியம் என்பது பெயரளவிற்கு இல்லாமல் அதன் முழுமையான சிறப்பை அறியும் வகையில் தேர்வுத்திட்டம் இருக்க வேண்டும். இந்தி எதிர்ப்புப் போர்கள் வரலாற்று முதன்மையானவை. எனவே, ஒன்றிய அரசு எதிர்க்கும் என்று எண்ணாமல் தேர்வுத்திட்டத்தில் இவையும் இடம் பெற வேண்டும். ஆங்கில மொழித் தேர்வுத்தாளிலும் தமிழ், தமிழர் வரலாறு இடம் பெற வேண்டும்.

காலந்தோறும் தமிழ் எழுத்து முறை என்பது தவறான வரலாறாகும். “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என இலக்கண நூல்கள் தொன்று தொட்டு மாறாமல் எழுத்து வடிவங்கள் உள்ளன எனக் கூறுகின்றன. சிற்சில மாற்றங்களைத் தவிர எழுத்தமைப்பில் மாறுதல்கள் இல்லை. கல்வெட்டு எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியாகக்கருதக் கூடாது. ஓலைச்சுவடிகளில் அத்தகைய மாற்றங்கள் இல்லை. எனவே, தவறான வரலாறாக உள்ள எழுத்துவடிவ வளர்ச்சி குறித்த பாடத்தை நீக்க வேண்டும் என்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.

– இன்மதி நாள் 05.01.2022

காண்க. More should be done for Tamil in TNPSC exams: Scholar

Followers

Blog Archive