Showing posts with label புதினம். Show all posts
Showing posts with label புதினம். Show all posts

Saturday, February 22, 2025

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 : இலக்குவனார்திருவள்ளுவன்

 

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 : இலக்குவனார்திருவள்ளுவன்



(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன் : தொடர்ச்சி)

வணக்கம் ஐயா.

வணக்கம். வாங்க, வாங்க! இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம்?

ஐயா, உங்கள் புதினத்தின் மையக் கருத்து வளரும் தலைமுறையினர் மூத்த தலைமுறையினரைப் போற்றிப்பேண வேண்டும் என்பதுதானே.

ஆமாம். ஆமாம். கூட்டுக் குடும்பமே இல்லாமல் போன இக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தின் நன்மையைக் கருதிச் செயற்பட வேண்டும்.

ஒரு குடும்பத்தில் மூன்று அண்ணன் தம்பியரும் ஒரு தங்கையும் உள்ளனர். மேலும், இவர்களின் சித்தியும் இங்கேயே உள்ளார். அவருக்குக் கணவன் உறவில் வந்த   மணமாகா மருமகள் உள்ளார்.

அடுத்த தெருவில் இவர்களின் உறவினர் குடும்பம். பெற்றோர் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் பெற்றோரை மதிக்காமல் உள்ளனர். ஆனால் முதலில் கூறிய கூட்டுக் குடும்ப நன்மையைப் பார்த்துத் திருந்தி பெற்றோரை மதித்து வாழத் தொடங்குகின்றனர். இரு குடும்பத்தினருமே இணைந்து தத்தம் பெற்றோருக்கு வரும் சிக்கல்களை நீக்கி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

இதன் உச்சக்கட்டமே கதையின் முடிவு. இவ்வளவுதானே! ஆனால், நயம்பட ஆங்காங்கே சிறப்பான வரிகளை இணைத்துப் புதினத்திற்குப் பெருமையைச் சேர்த்துள்ளீர்கள். இப்புதினம் சிறப்பாகப் போற்றப்படுவதன் காரணமே அத்தகைய வரிகள்தாம். உணர்ச்சியுடன் நீங்கள் எழுதிய அவையே புதினத்திற்குப் பாராட்டுகளை வழங்கக் காரணமாக அமைந்துள்ளன.

 ஆமாம், ஆமாம். சரியாகச் சுருக்கமாகக் கூறி விட்டீர்கள். உங்கள் தொடர்களில் வேறு என்ன மாதிரி கதை யமைப்பை வைத்திருப்பீர்கள்.

எந்தத் தொடராக இருந்தாலும் கணவன் தரப்பில் அல்லது மனைவி தரப்பில் மணமாகாத உறவினன் அல்லது வாழா வெட்டியான உறவுப்பெண் இருப்பார். இவர்கள் அடைக்கலமாக அவர்கள் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்குத் தெரியாமல்  குடும்பத்தினருக்கு எதிராகச் சதிச் செயல் புரிவார்கள். அதுபோல் சாப்பாட்டு இராமனான ஒருவனோ பெருந்தீனிக்காரியாக ஒருத்தியோ இருக்க வேண்டும்.

இவர்களும் சதிகாரர்களா?

அப்படி யில்லை. சில நேரம் அப்படிப்பட்ட கதைகளும் உள்ளன. பொதுவாக, இவர்கள் மூலம் நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து விடுவோம்.

அது சரி. நகைச்சுவைக் காட்சிகளும் தேவைதானே. மேலும் எப்படியெல்லாம் கதையைக் கொண்டு போவீர்கள்?

பொய்ப்பழி சுமத்தி வீட்டை விட்டு விரட்டுவது, உண்மை தெரிந்து சேர்த்துக் கொள்வது, வேண்டுதலுக்காகக் கோயிலுக்குப் போவது, நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது அதில் இடையூறு ஏற்படுத்துவது, குல தெய்வக் கோயிலுக்குப் போவது என்று பல நிகழ்ச்சிகளையும் இணைத்து விடுவோம். அதற்குள் கதையை வேறு எம்மாதிரி கொண்டு போகலாம் என்று சிந்தித்து அதற்கேற்பக் கதையை அமைத்து விடுவோம். சில கதைகளில் தந்தை அன்பாக இருந்தாலும் முரட்டுத் தனமாக நடந்து கொள்பவராகக் காட்டுவோம். இவ்வாறு தொடர்களுக்கென்றே சில இலக்கணங்கள் வைத்துள்ளோம்.

இதிலும் கூடக் கோயில் திருவிழா வெல்லாம் வருகிறது. அதனால் பரவாயில்லை.

ஐயா,சொல்வதற்கு நிறைய உள்ளன. அடிப்படையான சிலவற்றை மட்டும் சொல்லியுள்ளோம்.

போதும் போதும். நீங்கள் மாறி மாறி விளக்கி விட்டீர்கள். நான் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் பார்ப்பதில்லை. ஆனால், இன்றைய தொலைக்காட்சிகளின் போக்கினை அறிய நேயர்களின் நாடியைப் பிடித்துப் பார்க்க உதவுவதற்காக இவை குறித்தெல்லாம் கேடடுத் தெரிந்து கொண்டேன்.

அதற்கு நாங்கள் விளக்கியது போதும் அல்லவா ஐயா.

போதும் போதும். நான், உங்களிடம் ஒரு செய்தி சொல்லப் போகிறேன். அது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா? மகிழ்ச்சி அளிக்குமா என்று தெரியாது.

அப்படி என்ன செய்தி சொல்லப் போறீங்க ஐயா.

உங்களுக்கு இந்தக் கதைதான்வேண்டுமா? அல்லது புத்தம் புதிய கதை உங்களுக்கென்றே எழுதித் தரட்டுமா?

புதியதாகவா? சரி எழுதித் தாருங்கள். உங்களுக்கென்றே “விருதாளர் வழங்கும் புத்தம் புதிய கதையில் வரும் தொடர்” என்று விளம்பரம செய்கிறோம். அது சரிங்க ஐயா. என்ன கதை அது?

இப்பொழுது நாம் பேசினோம் அல்லவா? அதையே புதினமாக எழுதித் தருகிறேன். கதை நடைபெறுமிடம், காட்சியில் உள்ள மாந்தரகள், புதியதாக வருவோர், காட்சியிலிருந்து வெளியேறுவோர், அணிய வேண்டிய உடைகள், அணிகலன்கள், காட்சியில் இருக்க வேண்டிய பொருள்கள், எனத் திரைக்கதைக்கு வேண்டிய எல்லாக் குறிப்புகளையும் எழுதித் தருகிறேன்.

அருமை ஐயா. திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பெயரில் புத்தகங்கள் உள்ளன. ஏதாவது உங்களுக்கு வாங்கித் தரலாமா? அல்லது நாங்களே விளக்கலாமா?

காரன் என்பவர் எழுதிய புத்தகம் உள்ளதா?

இருக்கிறதே. எங்களுக்கெல்லாம் அவர் புத்தகம்தான் வழிகாட்டி.

‘காரன்’ பற்றி வேறு என்ன தெரியும்.

20 வருடங்களுக்கு முன் மும்பையிலிருந்து வந்த அவர் ஒரு திரைப்படம் தயாரித்து இயக்கியுள்ளார்.  அத்துடன் திரைப்பட வாழ்க்கையை விட்டே ஒதுங்கிவிட்டார்.

என்ன திரைப்படம் அது?

கைப்பெண்கள் பற்றிய திரைப்படம் எனக் கேள்விப்பட்டோம்.

வேரில் பழுத்த பலா’ என்னும் படம்தானே அது.

ஆமாம் ஆமாம். அதுவேதான். உங்களுக்கு எப்படித் தெரியும் அவரைப்பற்றி. நீங்கள் மும்பையில் இருந்திருக்கிறீர்களா?

ஆம். நான் முன்பு மும்பையில்தான் இருந்தேன்.

அப்படியானால் காரன் இப்பொழுது எங்கே உள்ளார்? உங்களுக்குத் தெரியுமா? யாருக்குமே அவரைப்பற்றி ஒன்றும்  தெரியவில்லை. நீங்கள்சொன்னால் நாங்கள அவரைப்பார்ப்போம்.

காரன் இப்பொழுது இங்கே தான் இருக்கிறார்.

இங்கே என்றால் தமிழ்நாட்டிலா? சென்னையிலா?

இங்கே என்றால் இங்கேதான்.

எங்களுக்குப் புரியவில்லை. அவரிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.

நான்தான் அந்தக் காரன்.

நீங்களா? உங்களுக்கே நாங்கள் திரைக்கதை எழுதுவது குறித்துக் கற்றுக் கொடுக்க வந்துள்ளோமா? மன்னித்து விடுங்கள் ஐயா.  அது ஏன் ஐயா, காரன் எனப் பெயர் வைத்துக் கொண்டீர்கள்?

திரைத்துறையினருக்கு நான் ஒரு வேலைக்காரன் என்பதற்காக வேலைக்காரன் எனப் பெயர் வைத்துக்கொள்ள விருமபினேன். ஆனால், நான் மும்பையில் இருந்து வந்ததால்,  மும்பைக்காரனாகக் காட்டிக் கொள்ள வேலைக்காரன் என்பதைச் சுருக்கிக் காரன் எனப் பெயர் சூட்டிக் கொண்டேன். அந்தப் பெயருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

உங்கள் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்ததே. பிறகு ஏன் திரைப்படத் துறையை விட்டு விலகினீர்கள்?

நாணயம், நேர்மை, ஒழுக்கம் முதலியவற்றிற்கு வாய்ப்பு குறைந்ததால் இதில் நீடிக்க விரும்பவில்லை. காதல் காட்சிகளில் நாயகன் நாயகியிடம் நெருக்கம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடையே நெருக்கம் உண்டாகும் வகையில் அவர்களைச் சேர்த்து வைப்பது, காட்சி யமைப்பை வெவ்வேறு கோணங்களில் எடுப்பதாகக் கூறி மிகுதியான படச்சுருளை வீணாக்குவது, படுக்கைப் பகிர்வுகள், போன்ற பலவும் என்னைத் திரைத்துறையில் இருக்க விடவில்லை. எனினும் என் கதையார்வம் ஓயவில்லை. எனவே, பத்தாண்டுகள் பின்னர் இங்கே வந்து, விருதாளர் என்ற பெயரில் கதைகள், புதினங்கள் எழுதினேன்.

அதனால் இலக்கிய உலகிற்கும் நல்ல எழுத்தாளர் கிடைத்தார்.

ஐயா, இதற்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை. நீங்கள் இயக்குவதாக இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. உங்கள் இசைவைச் சொல்கிறீர்களா?

எனக்கு முழு உரிமை அளித்தால் இயக்குவதற்குத் தடையில்லை.

மிக்க மகிழ்ச்சி ஐயா. எங்கள் நிறுவனத்தினர் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள். சரிங்க ஐயா. நீங்கள் எழுதி இயக்கித் தரப்போகிற  தொலைக்காட்சிக் கதைக்கு என்ன பெயர்?

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்.”

000

Saturday, February 15, 2025

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன்

 


விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன்








(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 : தொடர்ச்சி)

பெரிய திரை என்று மட்டுமல்ல. சின்ன திரைக் கலைஞர்களையும் கதைகளில் வருவதுபோல் காட்சிகளை அமைத்து விடுவோம். அது மட்டுமல்ல.ஒரு தொலைக்காட்சித் தொடரையும் மற்றொரு தொடரையும் அல்லது மற்ற இரு தொடர்களையும் இணைத்து ஒன்றாகக் காட்டுவோம்.

தொலைக்காட்சித் தொடர்களை இணைத்துக் காட்டுவீர்களா?

ஆமாம். வெவ்வேறு தொடர்களில் உள்ள கதைமாந்தர்கள் சந்திப்பது போலும் ஏதேனும் சிக்கல்களைச் சேர்ந்து அவிழ்ப்பதுபோலும் உதவிக் கொள்வதுபோலும் கதைகளை அமைப்போம்.

குடும்பத்தினர் சேர்ந்து விளையாடுவதாகவும் காட்சிகள் வைப்போம். பாட்டுக்குப் பாட்டு விளையாட்டுப் புதிர் போன்றவற்றை நடத்துவோம். வீடுகளிலிருந்தே மக்களும் தங்களுக்குள் இதில் பங்கேற்பர். இந்த ஆர்வம் அவர்களை நிகழ்ச்சியைப் பார்க்கத் தூண்டுகோலாய் அமையும். அப்படியும் பார்ப்பவர் எண்ணிக்கையில் சறுக்கல் ஏற்பட்டால் நெருக்கமான காட்சிகளை வைப்போம்.

நெருக்கமான காட்சிகளா? குடும்பத்தோடு அல்லவா மக்கள் பார்ப்பர்.

இந்தக்காலப் பிள்ளைகள் எல்லாம் பிஞ்சிலே பழுத்தவர்கள். எனவே அது குறித்துக் கவலைப்பட மாட்டோம். எனவே, முத்தக்காட்சிகளையும்  நெருங்கிய கட்டியணைப்புகளையும் ஆவலுடன்தான் அனைவரும் பார்ப்பர். இதற்குப் பின்னணியாக நெருக்கமான நேரத்தில் பாடும் திரைப்படப்பாடல்களைப் பின்னணியில் வைத்தால் இல்லாத நெருக்கத்தையும் இருப்பதாக எண்ணி மக்கள் மகிழ்வர்.

சரி, சரி. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என் கதையில் இப்படியெல்லாம் புகுத்த வேண்டா.

உங்களை மீறி எதுவும் புகுத்த மாட்டோம்.  ஆனால், உங்கள் கதையில்  காதல் காட்சிகள், கணவன் மனைவி தனித்திருக்கும் காட்சிகள் எலலாம் இருக்கின்றன அல்லவா?

ஆமாம். இருக்கின்றன.

அக்காட்சிகளில் சுவையூட்ட  இப்படி ஏதாவது செய்தால் தவறில்லை. 

இப்படி யெல்லாம் செய்து என் கதையையே நீங்கள் மாற்றி விட மாட்டீர்களா?

இல்லை ஐயா. அப்படியெல்லாம் உங்கள் கதையில் சிதைவு ஏற்படும் வண்ணம் மாற்ற மாட்டோம்.

இதற்கு முன்பு  எழுத்தாளர்கள் சிலர், திரைப்பட நிறுவனத்தினர் தங்கள் கதையைப் படமாக்குவதாகக் கூறிவிட்டுப்  பெயரை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் கதையைத் தங்கள் பெயரில் காட்டுகிறார்கள் என்று சொல்லியுள்ளார்களே!

 ஆமாம் உண்மைதான். ஆனால், அதனால் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துக் கதையை வாங்கி விட்டோம். அதற்குப் பிறகு ஒன்றும் சொல்ல இயலாது என்று சொல்லி விடுவோம்.

அப்படியானால் எனக்கும் அப்படித்தான் சொல்லப் போகிறீர்களாட,

சே! சே! அதெல்லாம் இல்லை. உங்கள் கதையில் அப்படி நேராது.  திரைக்கதை உரையாடலே நீங்கள்தானே. உங்களுக்கு மீறி என்ன தவறு நடந்து விடப் போகிறது. கதையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எங்கள் நோக்கத்திற்கேற்ப மாற்றுவோம். அவ்வளவுதான்.

தன்னம்பிக்கையை ஊட்டும் வண்ணம் தொடர்கள் வருகின்றனவா?

ஏன் வராமல்? இ.ஆ.ப.(ஐ.ஏ.எசு) ஆகி மாவட்ட ஆட்சியராக வேண்டும், இ.கா.ப.(ஐ.பி.எசு.) ஆகிக் காவல் கண்காணிப்பாளர்(எசு.பி.) ஆக வேண்டும் என்று இலட்சியம் கொண்டவர்களை – குறிப்பாகப் பெண்களைக் கதாநாயகிகளாகக் காட்டும் தொடர்களும் உள்ளன. என்றாலும் இவற்றிலும் வழக்கமாக மேலே குறிப்பிட்டவாறான காட்சிகள் எல்லாம் வரும்.

ஆமாம். ஒருவர் 20 வருடங்களாக மாவட்ட ஆட்சியராக இருப்பதாக எல்லாம் கதை எடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

அப்படிச் செய்தால்தான் கதை ஓடும். எனவே, நாங்கள் தெரிந்தே செய்யும் தவறுகள் இதுபோல் நிறைய உண்டு. மக்களும் இது குறித்துக் கவலைப்பட மாட்டார்கள். சிலர் இது குறித்துப் பேசினாலும் மக்கள் மத்தியில் தொடர் நிலைக்க இஃது உதவத்தான் செய்யும்.

பெற்றோர் பிள்ளைகள் பாசம் எல்லாம் காட்டுவீர்களா?

ஆமாம். காட்டுவோம். ஆனால் திரைப்பட அப்பாக்கள்போல்தான். அப்பா பிள்ளைகளிடம் நேரடியாகப் பாசம் காட்ட மாட்டார். அளவுக்கு மீறிக் கண்டிப்பார். ஆனால் பிள்ளைகள் இல்லாத பொழுது தங்கள் மனைவியரிடம் பிள்ளைகள்பற்றி அன்பாகப் பேசுவார்; அக்கறைாகக் கேட்பார்.

மாமியார் மருமகள் உறவு எப்படி இருக்கும்?

நல்ல மாமியார்களும் உள்ளனர். மோசமான மாமியார்களும் உள்ளனர். பொதுவாக மாமியார் மருமகள் உறவு மோசமாக இருப்பதுபோல் கதைகள் மிகுதியாக உள்ளன. நல்ல மருமகளைக் காட்டும் பொழுது தங்கள் வீட்டிற்கு இப்படி ஒரு மருமகள் வரவேண்டும்  என விரும்பி அத் தொடரை விருப்பத்துடன் பார்க்கத் தொடங்குகின்றனர். ஆனால் மாமனார் மருமகள் உறவு நன்றாகத்தான் இருக்கும். எனினும் மாமனார் மருமகள் அல்லது மருமகன் உறவு சரியில்லாததுபோலும் கதைகள் வருகின்றன. மாமனார் எல்லாரிடமும் அடக்குமுறையுடன் நடந்து கொள்வது போலும் கதைகள் வருகின்றன. எப்படி வந்தாலும் மக்கள் விரும்பியே பார்க்கின்றனர்.

கதைகளில் படிதத இளைஞர்களைக் காட்டுவீர்களா?

காட்டுவோம். பொதுவாகப் பெண்கள் படித்து இருப்பார்கள். ஆண்கள் அந்த அளவிற்குப் படித்திருக்க மாட்டார்கள். அவர்கள் விரும்பும் பெண் படிப்பாளி என்று தெரிந்தும் படிப்பில் கருத்து செலுத்தாமல் அப்பெண்களை அடையவே விரும்பித் திருமணமும் செய்து கொள்வார்கள். மனைவியைக் கணவன் எப்படி விரும்பச் செய்கிறான் என்பதுபோல் கதைகளை அமைப்போம்.

உங்கள் கதைகள் எல்லாம் மூலக் கதைகளா?

பெரும்பான்மை பிற மொழித் தொடர்களைத் தமிழில் எடுக்கிறோம். தமிழ்த் தொடர்களையும் பிற மொழிகளில் எடுக்கின்றனர். கதையை இறக்குமதி செய்திருந்தாலும் காட்சி யமைப்பில் எங்கள் கைவண்ணங்களைக் காட்டி விடுவோம்.

அப்படியா? திரைப்படங்களைத் தழுவியும் கதை அமைக்கிறீர்களா?

அப்படியும் உண்டு.  எங்களது தொடர்களையே நாங்களே தழுவி எடுப்போம். அதற்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றது. இந்தக் காட்சி இந்தத் தொடரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்தக்காட்சி அந்தத் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது என்று மக்கள் பேசிக் கொண்டாலும் தொடரைப் பார்க்கத் தவறுவதில்ல. அவர்களைப் பொறுத்தவரை தழுவல்களைக் கண்டு பிடித்த பெருமை மனத்தில் இருக்கும். அவ்வளவுதான்.

சரி, சரி. மீண்டும் நாளை சந்திப்போம்.

(தொடரும்)

Saturday, February 1, 2025

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

 

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்



(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – தொடர்ச்சி)

4

வணக்கமுங்க ஐயா. காலையில் சாப்பிட்டீர்களா?

அதெல்லாம் முடித்து விட்டேன். இன்று நம் வேலையைத் தொடருவோம்.

சரிதாங்க ஐயா. மாறன் மல்லிகை உடனே சேரக் கூடாது. அது பற்றிப்பேசப் போகிறேன். மாறன் மல்லிகை காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும் சீக்கிரமே எல்லாரும் ஒத்துக் கொள்கிறார்கள் அல்லவா?

ஆமாம். மரபு தழைக்க வேண்டும். உறவு வலுப்பட வேண்டும் என இவர்களின் காதலுக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால், இவர்கள் உடனே சேரக்கூடாது. பல தடைகளை மீறித்தான் சேர வேண்டும்.

கதையிலேயே சில தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு மேலும் வேண்டுமா?

ஆமாம். ஆமாம். அப்பொழுதுதான் கதையில் விறுவிறுப்பு இருக்கும். மாறனுக்கும் மல்லிகைக்கும் சண்டை ஏற்பட்டு அவர்கள் முதலில் பிரிய வேண்டும். இது முதல் பிரிவு. அவர்களாகவே பிறகு சேர்ந்து விடுவார்கள். அடுத்தும் சண்டை வந்து பிரிய வேண்டும். அப்பொழுது மாறனுக்கு வண்டி மோதி உயிருக்கு ஆபத்து ஏற்பட வேண்டும். அப்பொழுது மல்லிகை வந்து அவனருகேயே நின்று அவனையே பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் நினைவிழந்து இருக்கும்போது மல்லிகை ‘மாறன், மாறன்’ எனச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் அவனுக்கு நினைவு வரவேண்டும். பின் மீண்டும் அவர்கள் சேர வேண்டும்.

பின்னர்த் திருமணம் ஆனாலும் முதலிரவு நடக்கக் கூடாது. மல்லிகையின் சித்தி ஏதாவது தடை உண்டாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். புனிதாவும் அவருடன் இணைந்து மல்லிகைக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் தனி யறையில்தானே இருப்பார்கள். எப்படி அவர்கள் சேருவதைத் தடுக்க முடியும்?

தொலைக்காட்சிக் கதை என்றால் அப்படித்தான் முடியும். தனியறையில்தான் இருப்பார்கள். ஆனால், சன்னல் வழியாக இவர்கள் பார்க்க இயலும். மல்லிகையோ மாறனோ கீழே விழுந்து அடிபடும் வகையில் ஏதும் செய்வார்கள். அதனால் சேர முடியாது.  மல்லிகையிடம் நீ உன்னுடைய இலட்சியம் அல்லது மாறனின் இலட்சியம் நிறைவேறும் வரை சேரக்கூடாது.சேர்ந்தால் அது நிறைவேறாது என்று சொல்லி அதற்கும் சத்தியம் வாங்க வேண்டும். அதையும் மீறி மாறன் நெருங்கி வந்தால், மல்லிகை கண்டபடி அவனை ஏசி விலகி இருக்கச் செய்ய வேண்டும்.

தனக்குத் தெரிந்த கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள் மூலம் மல்லிகையைக் கடத்த வேண்டும்.

கடத்தல்காரர்கள் எல்லாம் சித்திக்கு எப்படித் தெரியும். அவர்களுக்குக் கொடுப்பதற்கு எப்படிப் பணம் கிடைக்கும்.

ஐயோ! நீங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் பார்ப்பது இல்லை. அதான் இப்படிக் கூறுகிறீர்கள். தொலைக்காட்சிக் கதைகளில் ஆண்களைவிடப் பெண்கள் தான் அதிகம் வஞ்சகர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குப் பெரிய பெரிய கடத்தல்காரர்களையும் கொலைகாரர்களையும் தெரிந்து இருக்க வேண்டும். அவர்கள் கேட்பதைவிட அதிகமாகப் பணம் கொடுக்கும் அளவிற்கு இவர்களுக்கு வசதி இருக்கும்.

அவ்வளவு வசதியா?

வசதியாக இருக்க வேண்டும் என்று இல்லை. கதையில் ஏழைகளாக இருந்தாலும் பெருந்தொகையை அவர்களுக்கு மாற்றி அனுப்புவார்கள். எனவே, இதிலும் இவ்வாறு இருந்தால்தான் மக்கள் வரவேற்பார்கள். பெரிய கொலைகாரர்களாக இருப்பார்கள். ஆனால், சித்தி அவர்களை மிரட்ட வேண்டும். சதிச்செயல் நிறைவேறாது. அப்போது, “என்னடா நீயெல்லாம் பெரிய கொலைகாரன் என்று சொல்கிறாய்? ஒரு பெண்ணைக் கொலை செய்ய முடிவில்லையே ! சொதப்பி விட்டாயே! இன்னொரு முறை வாய்ப்பு தருகிறேன். சரியாக முடி. இல்லாவிடடால் உன்னை நான் முடித்து விடுவேன்.” என்று மிரட்ட வேண்டும். இவரே, விட்டில் கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்திருப்பார். ஆனால் பயன்படுத்த மாட்டார்.

கதையில் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டால் கதை முடிவதற்குள் அக்கத்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார் புகழ்பெற்ற திறனாய்வாளர் ஒருவர்.

அதெல்லாம் கதை இலக்கியத்திற்குத்தான். தொலைக்காட்சித் தொடருக்கான கதை இலக்கணமே இதுதான்.

உங்கள் கதையெல்லாம் கேட்டால் எனக்குத் தலை சுற்றுகிறது. மீதி நாளை பார்ப்போம்.

(தொடரும்)

Saturday, January 25, 2025

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

 

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்



(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – தொடர்ச்சி)

ஆமாம். நீங்கள் மனப்பாடம் செய்வதுபோல் என் புதினத்தை நன்கு படித்துள்ளீர்கள். உங்களிடம் படமாக்கும் பொறுப்பை ஒப்படைப்பது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இப்பொழுது உணவுப் பொருள்களில் செய்யும் கலப்படத்தை உணராமலும் உணர்ந்தாலும் தட்டிக் கேட்காமலும்தான் மக்கள் இருக்கின்றனர். அப்புறம் எங்கே மொழிக்கலப்பைத் தடுப்பார்கள் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இளைஞர்கள் பலர் நாம் தமிழ்த்தேசியர்கள் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என்று சிறிது நம்பிக்கை வருகிறது.

இவற்றை உரையாடலில் கொண்டு வராமல் திரைக்கதைக் குறிப்பில் காட்சி வடிவில் கொண்டு வந்தால்தான் சரியாக இருக்கும்.

சரிதான். வேறு என்ன என்ன மாதிரியான உரையாடல்கள்? காட்சி அமைப்புகள்? தேவை என எதிர்பார்க்கிறீர்கள். தொடக்கத்தில் விறுவிறுப்பிற்காகச் சில உரையாடல்களையும் உங்கள் கதைப் போக்கிற்கேற்ற காட்சிகளையும் சேர்க்கவேண்டும் என்றீர்களே!

நாலைந்து முறையாவது சத்தியம் கேட்பதுபோலும் சத்தியம் வைப்பதுபோலும் காட்சிகள் இருக்க வேண்டும்.

அப்படி ஒன்றும்  என் கதையில் தேவைப்படவில்லையே!

ஏன், தேவைப்படவில்லை. மாறன் ஊருக்குப் போய்விட்டு ஒரு வாரத்தில் திரும்புவதாக மல்லிகையிடம் சொல்கிறான் அல்லவா? அப்பொழுது அவள் அவனிடம் சத்தியம் கேட்க வேண்டும். “சத்தியமாக வருவாயாடா” எனக் கேட்டு விட்டு அவன் தயங்கினான் என்றால் இவளாகவே அவனது கையை எடுத்துத் தன் தலையில் வைத்துச் “சத்தியம்” என்று சொல்ல வேண்டும்.

எதற்கு அப்படிச் சொல்ல வேண்டும். “சத்தியம்” என்று சொல்லாமல் சொல்லக் கூடாதா?

இதெல்லாம் தொடரின் மரபு. பெரும்பாலும் வஞ்சகர்களும் சதிகாரர்களும்தான் இப்படிச் சத்தியம் கேட்க வேண்டும்.  மற்றொன்றைக் குறிப்பிடுகிறோம். மல்லிகை வைக்கும் குழம்பில் உப்பு அதிகமாக உள்ளது என அவளை அனைவரும் குற்றம் சாட்ட வேண்டும். ஆனால், உப்பை வேண்டுமென்றே புனிதா கலந்திருக்க வேண்டும். இதனை மல்லிகையும் அறிவாள். ஆனால் புனிதா மல்லிகையிடம் நீ நான் உப்பு கலந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்க வேண்டும்.

இதனால் மல்லிகைக்குத்தானே பாதிப்பு. அவள் எப்படிச் சத்தியம் செய்வாள்?

அதெல்லாம் அப்படித்தான். அவள் மிகவும் நல்லவள். எனவே, தான் செய்யாக் குற்றத்திற்கான பழியை ஏற்றுக் கொள்வாள்.

மாறனும் மல்லிகையும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் அல்லவா? மல்லிகையின் சித்தியின் உறவினர் பெண் புனிதாவும் மாறனை விரும்புவதாகக் காட்சி அமைக்க வேண்டும். ஆனால், சித்தி மாறனிடம் “நீ முல்லையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” எனச் சத்தியம் வாங்க வேண்டும்.

அவன் எப்படிச் சத்தியம் செய்வான்?

முல்லையைத் திருமணம் செய்துகொள்வேன் என்று அவன் கையை எடுத்துத் தன் தலையில் வைத்து இவளே சொல்ல வேண்டும். இப்படிச் சில காட்சிகள் உள்ளன. கதைப் போக்கில் இடையிடையே சொல்கிறோம். மற்றபடி உங்கள் கதையில் நாங்கள் குறுக்கிட மாட்டோம்.

அது சரி, இடையில் மல்லிகை மாறனை “டா” போட்டுப் பேசுவதாக உள்ளதே!

ஆம். கதையில் காதலியும் மனைவியும் காதலனாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும் “டா” போட்டும் அவன், இவன் என்று சொல்லியும்தான் பேச வேண்டும்.

அப்படியென்றால் காதலனும் கணவனும் காதலியையும் மனைவியையும் “டி” போட்டுப் பேச வேண்டுமா?

அச்சச்சோ! மறந்தும் அப்படி எழுதி விடக் கூடாது. இவர்கள் அவர்களை மரியாதையாக, வாங்க, சரிங்க, சொல்லுங்க, மன்னித்துக்கோங்க என்றுதான் பேச வேண்டும். மரியாதைக் குறைவாகப் பேசக் கூடாது.

எல்லா இடத்திலும் அப்படித்தானா?

ஆமாம். எல்லா இடத்திலும் அப்படித்தான். மாதிரிக்குச் சில சொல்கிறேன். பாருங்கள்.

மாறன் நேரம் கழித்து வருகிறான். அப்பொழுது நடைபெறவேண்டிய உரையாடலைப் பாருங்கள். .

மல்லிகை: ஏன்’டா, இவ்வளவு நேரமாச்சுடா?

மாறன்: இல்லைங்க நேரமாயிருச்சுங்க

மல்லிகை: அதான்’டா. ஏன் நேரமாயிருச்சுடா?

மாறன்: அதாங்க நேரமாயிருச்சுங்க.

மல்லிகை: ஏன்’டா அறிவோடத்தான பேசுறயாடா? வேற எவளையாவது பார்த்து வரயாடா?

மாறன்: ஏம்மா இப்படிச் சொல்றீங்க. உங்களை விட்டு வேற யாருக்கிட்ட நான் போவேங்க.

மல்லிகை: அதானடா. உனக்கு வேற யாரடா வருவா.

இன்னொரு காட்சி பார்ப்போம்.

டேய்! டேய்! நாம எங்காவது வெளியே போயிட்டு வருவோம்டா

உத்தரவு போடுங்க அரசியாரே. நீங்க எங்கே சொல்றீங்களோ அங்கே போவோம்ங்க.

ஏண்டா நான் உன்னைச்சொல்லச் சொன்னா நீ என்ன சொல்றயாடா. உனக்குச் சுய அறிவே இல்லையாடா, ஏதாவது சொல்லுடா

சரிங்க. நாம வண்டியில் எங்காவது நீண்ட தூரம் போய் வருவோமாங்க.

ஆமாண்டா அதுதான் சரி. வாடா போகலாம்டா

மற்றொரு காட்சி

டேய் எனக்குப் பசிக்குதடா!

உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். இட்லி,தோசை, பூரி, சப்பாத்தி வேண்டுமா? அல்லது இறைச்சி மீன், கோழி வேண்டுமா? சொல்லுங்கள். இப்பொழுதே கொண்டுவந்து தரச் சொல்கிறேம்மா.

ஏண்டா பசிக்குதுங்கிறேன்’டா.

சரி. வாங்க. நாம் போய்ச்சாப்பிடுவோமாங்க.

ஏண்டா பசிக்குதுங்கிறேன்’டா. உனக்குப் புரியலையாடா?

ஏங்க நான் சமைத்தா தர முடியும்ங்க.

ஏன்’டா சமைச்சுத் தரக்கூடாதாடா? சொல்லுடா.

சரிங்க. நீங்க சொல்லச் சொல்லச் சமைச்சத் தரங்க. போதுமாங்க.

என் செல்லம்டா. இப்போதாண்டா எனக்கு மகிழ்ச்சியா இருக்குதுடா.

ஏங்க. இதெல்லாம் காதலன் காதலி பேசுற மாதிரி இல்லையேங்க.

இல்லைங்க. நீங்க அந்தக் காலம்மாதிரி நினைக்கிறீங்க. இப்ப இதுதாங்க, காதலி-காதலன் பேசும் முறை. பெண்கள் பையன்களை வாடா போடா என்று பேசுவதும் பையன்கள்  பெணகளை மரியாதை கொடுத்துப் பேசுவதுமே இன்றைய பெண்கள் விருப்பம். இதில் உங்கள் கதையில் எந்தச் சிதைவும் இருக்காது.

சரிங்க. இன்றைக்கு இதுவோடப் போதும். மீதியை நாளைக்குப் பார்ப்போம்.

(தொடரும்)

Followers

Blog Archive