Sunday, January 11, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02: இலக்குவனார் திருவள்ளுவன்

      12 January 2026      கரமுதல



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: தொடர்ச்சி)

மண்ட லத்தே இணையி லாத

             வாழ்வு கண்ட தமிழகம்

       மகிமை கெட்டே அடிமைப் பட்டு

             மதிம யங்கி நிற்பதேன்?’’

என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை)யே வினவுகின்றார்.

அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே,

தமிழ னென்ற பெருமை யோடு

             தலைநி மிர்ந்து நில்லடா!

       தரணி யெங்கும் இணையி லாஉன்

             சரிதை கொண்டு செல்லடா!

என்று கட்டளையிடுகிறார்.

அதுமட்டுமல்ல,

நமது சொந்தம் இந்த நாடு

             நானி லத்தில் மீளவும்

       நல்ல வாழ்வு கொள்ளச் சேவை

             செய்து வாழ்க நீண்டநாள்

எனத் தமிழ்த்தொண்டாற்றவும் வேண்டுகோள் விடுத்து வாழ்த்துகின்றார்.

நம் பெருமையை நாம் மறக்கும் நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு,

தமிழின் பெருமையை மறந்துவிடின்

       தாரணி மதிப்பில் குறைந்திடுவோம்;

என விழிப்புணர்வு ஊட்டுகின்றார். ஆதலின்,

தமிழன் குரலொடு ஆர்த்திடுவோம்;

       தமிழக உரிமையைக் காத்திடுவோம்.

என்கிறார் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்கள்.

  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியம். அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இலக்கண நூல்கள் இருந்தன எனத் தொல்காப்பியர் கூறுவதில் இருந்து தெரிகிறது. அவற்றுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் தோன்றி இருக்க வேண்டும். அப்படியாயின், அவற்றுக்கும் முன்பே தமிழ் தோன்றியிருக்க வேண்டும். இவ்வாறு கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில தோன்றிய தமிழர்களின் மொழி உருவாகும் பொழுதே சிறப்புகள் நிறைந்ததாய், உயர்தனிச் செமமொழியாய்த் தோன்றிய பெருமை நமக்கு மட்டுமே உண்டு. ஆனால், நாம் செந்தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாய் வதைப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அல்லது வதைப்படுத்துவோரைப் புறந்தள்ளாமல் அமைதி காத்துக் கொண்டிருக்கும் பொழுது, நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது?

Wednesday, January 7, 2026

குறட் கடலிற் சில துளிகள் 38 : நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – தொடர்ச்சி)

நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்!

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰௨ – 452)

பொழிப்புரை: தான் அடைந்த நிலத்தினது தன்மையால் நீரினது தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அது போல மக்கட்குத் தாம் அடைந்த கூட்டத்தினது தன்மையைப் பொறுத்து அறிவு உண்டாகும் (பேரா.முனைவர் சி.இலக்குவனார்)

பதவுரை: நிலத்து-பூமியினது; இயல்பான்-தன்மையால்; நீர்-நீர்; திரிந்து-வேறுபட்டு; அற்று ஆகும்-அத்தன்மைத்து ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; இனத்து-இனத்தினது; இயல்பு-தன்மை; அது-அஃது; ஆகும்-ஆம்; அறிவு-அறிவு.

இனம் என்பதற்கு வகை வகுப்பு, குலம், சுற்றம், கூட்டம், இனம், ஒப்பு, அமைச்சர் எனப் பல பொருள்கள் உள்ளன.

நிலத்தின் தன்மையால், அதிற் சேரும் நீரின் தன்மை மாறுபடும். எந்த மண்ணில் நீர் கலக்கிறதோ அந்த மண்ணின் தன்மை நீருக்கு வரும். மண்ணின் நிறம், சுவை, பண்பு முதலியன நீருக்கும் உண்டாகும். நல்ல சுவையுள்ள நீர், கூடச் சேரும் மண்ணின் சுவைக்கேற்ப திரியும். நிறமற்ற நீர் செம்மண்ணில் கலக்கும் பொழுது செந்நிறம் அடைவதுபோல், கரிசல் மண்ணில் கலக்கும் பொழுது கரு நிறம் அடைவதுபோல், கலக்கும் மண்ணின் நிறத்திற்கேற்ப நிறத்தை அடைகிறது. உவர் நீரில் கலக்கும்போது உவர்ப்புச் சுவை அடைவதுபோல் சுவையற்ற நீர், தான் கலக்கும் மண்ணிற்கேற்பச் சுவையைப் பெற்று விடுகிறது.

இவைபோல்தான் மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் விளங்கும்; எந்த இனத்துடன் அல்லது கூட்டத்தினருடன் சேர்கிறானோ அந்த இனத்தின் அல்லது கூட்டத்தின் தன்மைக்கேற்ப அறிவைப் பெற்று விடுகிறான். நல்ல இனத்தில் சேருபவன் அறிவு நல்லறிவாவதுபோல் தீய இனத்தில் சேருபவன் அறிவு தீய அறிவாகிறது.

பின்னர் வந்த ஒளவையார், சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேர வேண்டும் என்பதற்காகச்,

சேரிடம் அறிந்து சேர்

என்றதும் இதனால்தான்.

இக்காலக் கவியரசர் முடியரசன், நல்லவரைச் சார்ந்தால் நல்லவர் ஆகலாம், அல்லவரைச் சார்ந்தால் அல்லவர் ஆகலாம். சேரிடம் அறிந்து சேராவிடில் சீரழிவாகிக் சிறுமை அடைவான் என்கிறார். இதனை அவர் கூறும் பாடல் வரிகள் பின்வருமாறு:

நல்லவர்ச் சார்வோர் நல்லோ ராகுப

அல்லவர்ச் சார்வோர் அல்லரா குபவே;

சேரிடன் அறிந்து சேர்க இன்றேல்

சீரழி வாகிச் சிறுமை மிகுமே!

(நெஞ்சில் பூத்தவை)

என்கிறார் கவியரசர் முடியரசன்.

தேனுடன் பாலைக் கலக்கும் பொழுது, பாலுக்குத் தேனின் சுவை வந்து விடுகிறது. அதே நேரம், பாலுடன் தண்ணீரைக் கலந்தால் பாலின் சுவை குறைந்து விடும். அதன் தன்மையும் மாறுபடும். எந்தப் பொருளுடனும் கலப்படம் செய்யும் பொழுது அந்தப் பொருள் தன் தன்மையை இழந்து கேடு செய்யும் பொருளாகிறது. எனவேதான் கலப்படப் பொருளை யாவரும் விரும்புவதிலலை.

நிலத்தோடு கலக்கும் நீர் அதன் தன்மைக்கேற்ப திரிவதுபோல் எப்பொருளாயினும் தன்னுடன் கலக்கும் பொருளால் நல்ல தன்மையை இழந்து விடுகிறது. மாந்தரும் தாம் சேரும் இனத்திற்கேற்ப அறிவு சிதைந்து மாறி விடுகின்றனர். அறிவு சிதையாமல் நல்லறிவுடன் இருக்க வேண்டுமென்றால், நல்லினத்துடன் சேர வேண்டும்.

அறிவு வரவிருக்கும் துன்பங்களைத் தவிர்க்கிறது; சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது; வாழ்க்கையின் உண்மையான இயல்பைப் புரிந்துகொள்ளச் செய்கிறது; தன்னம்பிக்கையை மிகுவிக்கிறது; குழப்பத்தைத் தவிர்த்து தெளிவுடன் செயல்பட வழிகாட்டுகிறது; அறிவுடையவர் எல்லாம் உடையவராகத் திகழ்கிறார். இவற்றிற்காக அறிவு சிதையாமல் இருக்க வேண்டும்; நல்லறிவாக இருக்க வேண்டும்.

எனவே, நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்வோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, January 6, 2026

நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : இலக்குவனார் திருவள்ளுவன்




(நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: தொடர்ச்சி)

கோதை அருவிக் குளிர்வரை நன்னாட

பேதையோ (டி)யாதும் உரையற்க – பேதை

உரைக்கின் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையால்

வழுக்கிக் கழிதலே நன்று.

நாலடியார் பாடல் 71

அறிவில்லாதவனிடம் ஒன்றும் சொல்லற்க! சொன்னால் அதைச் சிதைத்துப் பிறரிடம் சொல்வான். ஆதலால்  இயலும்வழியில் எல்லாம் அவனை விட்டு நீங்குதல் நன்று.

பதவுரை

கோதை=மாலை>நீரில் மாலைபோல் சேர்ந்து  கலந்து விழும் பூக்கள் கொட்டும்; அருவி=அருவி; குளிர்= குளிர்ந்த; வரை=மலை; நன்னாட=நல்ல நாட்டையுடைய; தலைவனே; பேதையோடு=அறிவில்லாதவனிடம்; யாதும்=எதையும்’ உரையற்க= சொல்லாதிருப்பாயாக; பேதை=அவ்அறிவில்லாதவன்; உரைப்பில்= எதையும் சொன்னால்;சிதைந்து= நீ சொன்னதைப் பேதை பிறரிடம் சிதைத்துக் கேடுண்டாகும்படி; உரைக்கும்=சொல்வான்; (ஆதலால்) ஒல்லும்=இயலும்; வகையால்=விதத்தால்; வழுக்கி= தப்பிl கழிதல்= (அவனை விட்டு) நீங்குதல்; நன்று= நல்லது.

அறிவில்லாதவனுக்கு எதையும் புரிந்து கொள்ளும் திறன் இருக்காது. ஆதலின் எதையும் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டான். சரியாகப் புரிந்து கொள்ளாததுடன் தான் தவறாகப் புரிந்து கொண்டதை மேலும் தவறாகப் பிறரிடம் சொல்வான். ஆதலின் சொல்லிய கருத்து பிறரிடம் தவறாகவே சென்று சேரும். எனவேதான், பேதையிடம் எதையும் சொல்லாதே என்கிறது நாலடியார்.

இல்லாமையாகிய துன்பத்தில் பெரும் துன்பம் அறிவுஇல்லாமையே என்கிறார் திருவள்ளுவர்.

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையா துலகு. (திருக்குறள்,௮௱௪௰௧ – 841)

எனச் சொல்லும் திருவள்ளுவர் புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களையும் பேதைமை என்ற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களையும் வழங்கி அறிவில்லாதவர்களைப்பற்றி உணர்த்தியுள்ளார்.

சரியாகச் சொல்வனவற்றைத் தவறாகப் புரிந்துகொண்டு பிறரிடம் சொல்வதால் தீமைதான் விளையும். நல்லன சொல்லியும் புரிதலின்மையால் அல்லனவே விளையும். எனவே, அறிவிலிகளிடம் எதையும் சொலலாதிருப்பதே நன்றாகும். எனவேதான், நாலடியாரும் நாட்டுத் தலைவனிடம் அறிவி்ல்லாதவனிடம் எதையும் சொல்லாதே என்கிறது. நாட்டுத்தலைவன் அவ்வாறு சொால்வது நாட்டிற்கே தீங்காக விளையும். ஆனால், இது நாட்டின் தலைவனுக்கு மட்டும் உரிய அறிவுரை அல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே உரியதாகும். நாடடுத் தலைவன் அறிவில்லாதவனிடம் சொல்வது நாட்டிற்கே தீங்காவதுபோல் தனிப்பட்டவர் அறிவிலியிடம் சொல்வது அவருக்கும் அவர் குடும்பத்தினரக்கும் தீங்கை விளைவிக்கும்்.

எனவே, நாம் அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதிருப்போம்!

 

Thursday, January 1, 2026

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 : நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 

 



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 தொடர்ச்சி)

 ”நன்றல் காலையும் நட்பிற் கோடார்”

கல்லாடனார், அகநானூறு 113. 1.

தலைவி கூற்று

திணை: பாலை

துறை: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொல்லியது

பொருள் விளக்கம்:

நன்று அல் காலையும் நட்பின் கோடார்.

நன்றல்காலை – நன்றல்லாத பொழுது = கேடுவந்த பொழுது = துயருற்ற பொழுது; நட்பின் கோடார் = நட்பிலிருந்து கோணாதவர்கள் = நட்பை விட்டு விலகாதவர்கள் = நட்பைக் கை விடாதவர்கள்.

இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாமல் இருப்பதுதான் உண்மை நட்பு.

இன்பமாக இருக்கும் பொழுது இணைந்து மகிழ்ச்சி அடைந்து விட்டு நண்பர்க்குத் துன்பம் வந்தால் விலகி ஓடுவது உண்மை நட்பாகுமா?

நண்பர்க்குத் துன்பம் வந்தபொழுது துணையாக இருந்து ஆறுதலாகவும் உதவியாகவும் இருப்பதுதானே உண்மை நட்பிற்கு அடையாளம்.

அவ்வாறில்லாமல் நண்பருக்கு வரும் கேட்டினால் தனக்கும் கேடு வரும், துன்பம் சேரும் என்றெல்லாம் எண்ணிக் கவலைப்பட்டு நண்பரைப்பற்றிக் கவலைப்படாமல் அஞ்சி ஓடுபவன் உண்மையான நண்பனாக இருக்க முடியுமா?

நண்பனுக்குப் பதவியோ செல்வமோ கிடைக்கும் பொழுது அவனுடன் சேர்ந்து திளைத்து மகிழ்வது மட்டும்தான் நட்பா?

தோழனுக்கு அல்லது தோழிக்குக் கேடுவந்தால், ‘’உன் கேடு உன்னோடு’’ என்று பாரா முகமாக இருக்கலாமா?

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆடை அவிழும் நிலை ஏற்பட்டால் விரைந்து சென்று சரி செய்யும் கை போல் விரைந்து சென்று உதவி நண்பனின் அல்லது தோழியின் கேட்டைக் களைவதுதானே உண்மை நட்பின் இலக்கணம்.

திருவள்ளுவரும் நண்பர்க்குத் துன்பம் வரும்பொழுது அவரைக் கைவிடக் கூடாது என்பதைப் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும். (திருக்குறள், ௭௱௯௰௯ – 799)

என, “நண்பருக்குக் கேடு வரும் காலத்தில் கைவிடுவோர் நட்பை இறப்பு வரும் காலத்தில் நினைத்தாலும் உள்ளத்தைச் சுடும்” என்கிறார்.

27 அடிகளைக் கொண்ட அகநானூற்றுப் பாடலின் முதல் அடி இது.

இம்முழுப்பாடலில் இடம் பெற்ற சில அடிகள் நமக்குச் சில சிறப்புகளைத் தெரிவிக்கின்றன.

மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,

காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்

இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்

வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள்

ஆகிய அடிகள் (4 – 7) வரலாற்றுச் செய்திகளை உணர்த்துவன.

‘’அஃதை மன்னனைப் போற்றிக் காப்பாற்றிய கோசர் வாழும் நெய்தலஞ்செறு நன்னாடு போன்ற அழகு மிக்க என் தோள்’’ என்கிறார்.

‘நெய்தலஞ் செறு’ என்பதை ஆராய்ச்சி அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் (ஏப்பிரல் 2, 1884-மார்ச்சு 28, 1944), கரந்தைக் கவியரசு இரா. வேங்கடாசலம் (பிள்ளை) (1886-1953), ஆகியோர் ஒரு நாடாகக் குறிக்கின்றனர்.

ஆனால், பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் (5 செட்டம்பர்,1909 – 3 சனவரி,1972) ஓர் ஊர் எனக் குறிப்பிடுகிறார்.

இந்நிலப்பகுதி பாணன் ஒருவனால் ஆளப் பெற்றது. எனவே, குறுநில மன்னனாகக் கருதாமல் ஓர் ஊரை ஆட்சி செய்ததாக இவர் கருதியிருப்பார் போலும்.

வாய்மை தவறாத கோசர் போல் தலைவனும் வருவதாகச் சொன்ன சொல் தவறாமல் வருவான் எனத் தலைவி உரைப்பதாக உய்த்துணர்ந்து கோசரின் சிறப்பை உணரலாம் என்பர் அறிஞர்கள்.

பழந்தமிழ்ப் புலவர்கள் நாடு நகர், ஊரைப் போன்ற அழகு மிக்க பெண் எனக் குறிப்பர். அதுபோல் இங்கே குறிக்கப்பெற்றுள்ளது.

‘’மெலியாப் பாடு இன் நோன் அடியன்’’ என்னும் பத்தாம் அடி, செருப்பு அணிந்து பரலில் நடத்தலால் ஏற்படும் இனிய ஓசையைக் குறிக்கிறது.

அக்காலத்திலேயே செருப்பணிந்து நடக்கும் நாகரிக வாழ்க்கையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர் என அறியலாம்.

அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்

என்னும் அடி (11) மூலம் மூங்கில் குழாயில் சோற்று உணவை வைத்துக் கொணரும் பழக்கம் இருந்ததை அறியலாம்.

மூங்கில் குழாயில் உணவைச் சேமித்து வைக்கும் பழக்கம் நம் நாட்டில் இன்னும் சில பழங்குடி மக்களிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

கம்போடியாவில் மூதாட்டி ஒருவர் மிதிவண்டியில் மூங்கில் குழாயில் சோற்று உணவைக் கொண்டு வந்து விற்றதைப் பார்த்துள்ளேன்.

தாய்லாந்தில் மூங்கில் குழாயில் புட்டுச்சமைக்ககும் பழக்கம் இருப்பதுபோல் இன்னும் பிற நாடுகளிலும் இப்பழக்கம் இருக்கிறது..

நன்மை அல்லாமற் போய்க், கேடே வந்துற்ற காலையினும், தம்முடைய நட்புத் தன்மையிலே நின்றும் கோணாத பண்பைக் குறிப்பதன் மூலம் நாம் ஒவ்வொ்ருவரும் நட்பை எக்காலத்திலும் எச்சூழலிலும் கைவிடக் கூடாது என வலியுறுத்துவதை உணரலாம்.

சங்கப்புலவர்கள் பொன்னுரையைப் பின்பற்றி நாமும் நண்பர்க்குக்கேடு வந்தபோதும் நட்பைக் கைவிடாதிருப்போம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தாய் மின்னிதழ் 01.01.2026

Followers

Blog Archive