Showing posts with label I.Thiruvalluvan. Show all posts
Showing posts with label I.Thiruvalluvan. Show all posts

Wednesday, January 7, 2026

குறட் கடலிற் சில துளிகள் 38 : நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – தொடர்ச்சி)

நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்!

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰௨ – 452)

பொழிப்புரை: தான் அடைந்த நிலத்தினது தன்மையால் நீரினது தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அது போல மக்கட்குத் தாம் அடைந்த கூட்டத்தினது தன்மையைப் பொறுத்து அறிவு உண்டாகும் (பேரா.முனைவர் சி.இலக்குவனார்)

பதவுரை: நிலத்து-பூமியினது; இயல்பான்-தன்மையால்; நீர்-நீர்; திரிந்து-வேறுபட்டு; அற்று ஆகும்-அத்தன்மைத்து ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; இனத்து-இனத்தினது; இயல்பு-தன்மை; அது-அஃது; ஆகும்-ஆம்; அறிவு-அறிவு.

இனம் என்பதற்கு வகை வகுப்பு, குலம், சுற்றம், கூட்டம், இனம், ஒப்பு, அமைச்சர் எனப் பல பொருள்கள் உள்ளன.

நிலத்தின் தன்மையால், அதிற் சேரும் நீரின் தன்மை மாறுபடும். எந்த மண்ணில் நீர் கலக்கிறதோ அந்த மண்ணின் தன்மை நீருக்கு வரும். மண்ணின் நிறம், சுவை, பண்பு முதலியன நீருக்கும் உண்டாகும். நல்ல சுவையுள்ள நீர், கூடச் சேரும் மண்ணின் சுவைக்கேற்ப திரியும். நிறமற்ற நீர் செம்மண்ணில் கலக்கும் பொழுது செந்நிறம் அடைவதுபோல், கரிசல் மண்ணில் கலக்கும் பொழுது கரு நிறம் அடைவதுபோல், கலக்கும் மண்ணின் நிறத்திற்கேற்ப நிறத்தை அடைகிறது. உவர் நீரில் கலக்கும்போது உவர்ப்புச் சுவை அடைவதுபோல் சுவையற்ற நீர், தான் கலக்கும் மண்ணிற்கேற்பச் சுவையைப் பெற்று விடுகிறது.

இவைபோல்தான் மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் விளங்கும்; எந்த இனத்துடன் அல்லது கூட்டத்தினருடன் சேர்கிறானோ அந்த இனத்தின் அல்லது கூட்டத்தின் தன்மைக்கேற்ப அறிவைப் பெற்று விடுகிறான். நல்ல இனத்தில் சேருபவன் அறிவு நல்லறிவாவதுபோல் தீய இனத்தில் சேருபவன் அறிவு தீய அறிவாகிறது.

பின்னர் வந்த ஒளவையார், சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேர வேண்டும் என்பதற்காகச்,

சேரிடம் அறிந்து சேர்

என்றதும் இதனால்தான்.

இக்காலக் கவியரசர் முடியரசன், நல்லவரைச் சார்ந்தால் நல்லவர் ஆகலாம், அல்லவரைச் சார்ந்தால் அல்லவர் ஆகலாம். சேரிடம் அறிந்து சேராவிடில் சீரழிவாகிக் சிறுமை அடைவான் என்கிறார். இதனை அவர் கூறும் பாடல் வரிகள் பின்வருமாறு:

நல்லவர்ச் சார்வோர் நல்லோ ராகுப

அல்லவர்ச் சார்வோர் அல்லரா குபவே;

சேரிடன் அறிந்து சேர்க இன்றேல்

சீரழி வாகிச் சிறுமை மிகுமே!

(நெஞ்சில் பூத்தவை)

என்கிறார் கவியரசர் முடியரசன்.

தேனுடன் பாலைக் கலக்கும் பொழுது, பாலுக்குத் தேனின் சுவை வந்து விடுகிறது. அதே நேரம், பாலுடன் தண்ணீரைக் கலந்தால் பாலின் சுவை குறைந்து விடும். அதன் தன்மையும் மாறுபடும். எந்தப் பொருளுடனும் கலப்படம் செய்யும் பொழுது அந்தப் பொருள் தன் தன்மையை இழந்து கேடு செய்யும் பொருளாகிறது. எனவேதான் கலப்படப் பொருளை யாவரும் விரும்புவதிலலை.

நிலத்தோடு கலக்கும் நீர் அதன் தன்மைக்கேற்ப திரிவதுபோல் எப்பொருளாயினும் தன்னுடன் கலக்கும் பொருளால் நல்ல தன்மையை இழந்து விடுகிறது. மாந்தரும் தாம் சேரும் இனத்திற்கேற்ப அறிவு சிதைந்து மாறி விடுகின்றனர். அறிவு சிதையாமல் நல்லறிவுடன் இருக்க வேண்டுமென்றால், நல்லினத்துடன் சேர வேண்டும்.

அறிவு வரவிருக்கும் துன்பங்களைத் தவிர்க்கிறது; சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது; வாழ்க்கையின் உண்மையான இயல்பைப் புரிந்துகொள்ளச் செய்கிறது; தன்னம்பிக்கையை மிகுவிக்கிறது; குழப்பத்தைத் தவிர்த்து தெளிவுடன் செயல்பட வழிகாட்டுகிறது; அறிவுடையவர் எல்லாம் உடையவராகத் திகழ்கிறார். இவற்றிற்காக அறிவு சிதையாமல் இருக்க வேண்டும்; நல்லறிவாக இருக்க வேண்டும்.

எனவே, நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்வோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, May 18, 2019

தமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


தமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை

மாணாக்கர்களின் தமிழ் அறிவிற்கு வேராகவும் விழுதாகவும் இருக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை, மாணாக்கர்களிடம் இருந்து தமிழை விலக்கிக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் புதிய திட்டம் என்ற பெயரில் தமிழை அப்புறப்படுத்துவதையே பள்ளிக்கல்வித்துறை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.
‘மொழி வாழ்த்து’ என்ற தலைப்பில் மாணாக்கர்களுக்குத் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறும். இப்பாடலால் தமிழ் உணர்வு பெற்றோர் மிகுதி. இப்பகுதியை நீக்குவதாகக் கூறிய பொழுது எதிர்த்ததற்கு மறுத்தார்கள். ஆனால், இறைவாழ்த்து, மொழி வாழ்த்து, நாட்டு வாழ்த்து என்று இருந்த பகுதிகளைப் பொதுவாக வாழ்த்து என்ற பெயரில் அடக்கி ஏதேனும் ஒரு வாழ்த்துப்பா மட்டும் இடம் பெறச்செய்து விட்டனர். இதனால் மொழி வாழ்த்தை அப்புறப்படுத்தித் தமிழைத் துரத்தினர்.
பாடங்களில் இருந்த திருக்குறள் பாடல்களை அதிகாரத்திற்கு 5 குறட்பாக்கள் என்ற முறையில் வைத்து அதிகார எண்ணிக்கையையும் குறைத்தார்கள். இப்பொழுது எதிர்ப்பு தெரிவித்த பின்னர் கீழ் வகுப்புகளில் ஓர்  அதிகாரமும் 10 முதலான மேல் வகுப்புகளில் 2 அதிகாரங்களும் வைத்துள்ளனர். அனைத்து வகுப்புகளிலும் திருக்குறள் கற்றுத்தரப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பால் இதுவும் நடைமுறைக்கு வந்துள்ளது. இருப்பினும் திருக்குறள் தொடர்பான இன்றைய சரியான நிலைப்பாடு தெரியவில்லை.
 11, 12 ஆம் வகுப்புகளில் மொழிப்பாடங்கள் இரு தாள்களாக இருந்தன. அவற்றை ஒரு தாளாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்த பொழுது அரசில் அவ்வாறில்லை என மழுப்பினர். ஆனால், கடந்த ஆண்டு முதல் ஒரு தாள்மட்டும்தான் பாடமுறையில் இடம் பெற்றுள்ளது. ஆழமான மொழிக்கல்வி மாணாக்கர்களின் பிற துறை அறிவுக்கும் தூணாக அமையும். ஆனால், இதனைப் புறக்கணித்துத் தமிழைப் புறக்கணித்தனர்.
இப்பொழுது 9, 10 ஆம் வகுப்புகளிலும்  தொடங்க உள்ள இக்கல்வியாண்டு முதல் தமிழ்த்தாள்கள் இரண்டு என்பது நீக்கப்படுகின்றது. ஒரு தாள் மட்டும்தான்.தட்டிக்கேட்க ஆளில்லாமல் கல்வித்துறை செயல்படுகிறது.  ஆனால், மத்திய அரசு பாடத்தாள்களை ஐந்தாக வரையறுத்தும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாட முறை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது அல்லவா? அதன் விளைவுதான் இது. பா.ச.க அரசு தமிழக அரசு மூலமாகக் கல்வித்துறைக்குத் தெரிவிக்கிறது.  கல்வித்துறை, ஏதோ கல்வி வல்லுநர்கள் கூறுவதுபோல் அதை நடைமுறைப்படுத்துகிறது. 
மேலும், 11, 12 ஆம் வகுப்புகளில் ஏதேனும் ஒரு மொழியைப் படித்தால் போதும் என நடைமுறைப்படுத்தப் போவதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். அஃதாவது முதல் பிரிவில் தமிழ் அல்லது பிற மொழிகள் எனத் தமிழும் பிற மொழிகளும்  பாடங்களாக உள்ளன.  இரண்டாம் பிரிவில் ஆங்கிலம் பாடமாக உள்ளது. இனி, இவற்றுள் ஏதேனும் ஒரு மொழியைப் பாடமாகப் படித்தால் போதும் என விருப்பப்பாடமாக மாற்ற உள்ளனராம். இதனால் ஆங்கில மோகம் கொண்ட பெரும்பான்மையர் ஆங்கிலத்தைப் பாடமொழியாகத் தெரிவு செய்வர். சிறுபான்மையர் தங்கள் தாய் மொழியை விருப்பப்பாடமாக எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும் பிற மொழியினர் நான்காம் பிரிவில் தமிழ், ஆங்கிலம் தவிர உள்ள பிற மொழிப்பட்டியல்களில் இருந்து தத்தம் தாய் மொழியைத் தெரிவு செய்வர். இதனால் தமிழ் படிக்காமலேயே மேனிலைக்கல்வியை முடிப்பர். அரசைக் கேட்டால் அரசு பெற்றோர்கள், மாணாக்கர்கள் விருப்பம். அவர்களை எப்படிக் கட்டாயப்படுத்துவது என மழுப்புவர்.
ஒரே ஆண்டில் தமிழைக் கட்டாயப் பாடமாக வைக்காமல் ஆண்டுதோறும் தமிழை அறிமுகப்படுத்தி வந்தனர். ஆனால் பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம் என்னும் நிலையைக் கொண்டுவர வேண்டிய பொழுதில் அதற்கு விலக்கு அளித்து நீட்டிப்பு தந்து விட்டனர். அப்படி வந்து விட்டால் 11, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வந்து விடும். தொடக்க நிலையிலான சமக்கிருதம் முதலான பாடங்களை எடுத்து 100 மதிப்பெண் பெற இயலாது.  எனவே, சூழ்ச்சி செய்து இப்போதைய பரிந்துரையை வழங்கியுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  தமிழை மறைமுகமாக நீக்கச் செய்யும் சதியாக இஃது உள்ளது என்பதில் ஐயமில்லை.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கட்டாயத் தமிழ்க்கல்வியை நடைமுறைப்படுத்தும் வேலையில் இங்ஙனம் புதிய கல்வித் திட்டம், கல்விச் சீரமைப்புத் திட்டம் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டு தமிழ்க்கல்வியை நிறுத்த கல்வித்துறை அதிகாரிகளே காரணமாக உள்ளனர்.
ஆங்கிலவழியில் படிப்பவர்கள் தமிழை அறிய வேண்டும். தமிழைக் கட்டாய முதல் பாடமாக மாற்றி இரண்டாம் பாடத்தில் ஆங்கிலம் அல்லது பிற மொழிகள் என மாற்ற வேண்டும் என்பது கல்வியாளர்களின் நெடுநாள் கோரிக்கை. அதனை நிறைவேற்றாமல் எதிராக அரசு செயல்படுவது மாணாக்கர்களின் கல்வி நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்.  
அமெரிக்காவில் 9,10,11,12 ஆகிய நான்கு வகுப்புகளுமே இன்றியமையாததாக உள்ளன. அவர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆங்கிலத்தைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். இங்கிலாந்தில் 15 அகவை வரை ஆங்கிலம் கட்டாயப்பாடம். (கணக்கும் கட்டாயப் பாடம்) அங்கே வகுப்பு நிலை என்றில்லாமல் அகவை நிலையில் தான் கல்வி உள்ளது. தங்கள் தாய்மொழியை இவ்விருநாட்டினர் மட்டுமல்லாமல் உலகில் ஏனைய நாடுகளும் கட்டாயமாக வைத்திருக்கும் பொழுது விடுதலை அடைந்து 71 ஆண்டுகள் கடந்த பின்னரும் தாய்மொழி அறியாத் தலை முறையினரை உருவாக்கி நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டுள்ளோம்.
சீனர்கள், உருசியர்கள், சப்பானியர் எனத் தங்கள் தாய்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்தும் எல்லா நாடுகளும் முன்னேறி உள்ளன. நாம்தான் பின் தங்கி உள்ளோம். இன்னும் மோசமான நிலைக்குப் போகும் வகையில்  தமிழ்வழிக் கல்வியை ஒழித்த பள்ளிக்கல்வித்துறை தமிழ் மொழிக் கல்வியையும் திட்டமிட்டுப் பகுதி பகுதியாக ஒழித்து வருகிறது.
பாடத்தாள்களைக் குறைப்பதால் பாடநூல்கள் அச்சடிப்பு, கூடுதல் ஆசிரியர் பணியிடம், தேர்வு தொடர்பான பல்வகைச் செலவுகள் எனப் பெருந்தொகை மிச்சம் ஆவதாகக் கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர். இப்படிக் கூறுபவர்களை வீட்டிற்கு அனுப்பினால்கூடத்தான் அரசின் வருவாய் மிச்சமாகும். செய்யலாமா?
மாணாக்கர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அப்படி என்றால் கல்விக்கூடங்களே தேவையில்லையே! கல்வித்துறையும் தேவையில்லையே! ஆர்வமுடன் கற்கும் வகையில் கற்பிக்கும் முறையை மாற்றியும் மனஅழுத்தம் ஏற்பட்டால் அதனைப் போக்கியும் செயல்படவேண்டுமே தவிரப் பாடங்களைக் குறைப்பதும் நீக்குவதும் தீர்வாகாது.
மாணாக்கர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் தமிழ்வழிப் பள்ளிகளில் மாணாக்கர் எண்ணிக்கையைக் கூட்ட, நடவடிக்கை எடுக்க வில்லை. பள்ளிகளை இணைப்பதாகக் கூறித் தமிழ்வழிப்பள்ளிகளை மூடி வருகின்றனர். மேலும் தமிழ் வழிப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை அறிமுகப்படுத்தி அங்கும் தமிழை நீக்கி வருகின்றனர். இள மழலை, மழலை வகுப்புகளில் தமிழ் வழிச்செயல்பாடு இல்லாத வகையில் ஆங்கிலப் பெயர்களில் அறிமுகப்படுத்த உள்ளனர். கல்வித்துறையின் தமிழ்ப்பகைப் போக்கை இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
கல்வி யமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு மாற்றும் திட்டம் அரசிற்கு இல்லை என்பதுபோல் பேசியுள்ளார். ஆழம் பார்க்கும் வகையில் புதியதிட்டம் குறித்துச் செய்தி வெளியிட்டிருந்தாலும் அதனைத் திரும்பப் பெற வேண்டும். ஆனால், இது போன்ற சூழல்களில் முதலில் இவ்வாறு கூறுவதும் பின்னர் அமைதியாக நடைமுறைப்படுத்துவதுமே வழக்கமாகப் போய்விட்டது. 11, 12 ஆம் வகுப்பு குறித்து மறுத்த அமைச்சர் 9, 10 ஆம் வகுப்பு குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லையே! எனவே, கல்வித்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது என்பது உண்மையாகிறது.   மேலும், பா.ச.க. திட்டம். நாடெங்கும் தாய்மொழிக்கல்விகளை நிறுத்தச் செய்வதன் மூலம் இந்தியையும் சமக்கிருதத்தையும் திணிக்கலாம் என்பதே!
மத்திய மாநில இடைக்கால அரசுகள் இதில் தீவிரமாக இருப்பது மக்களாட்சிக்கு எதிரானதாகும்.
தாய் மொழிக்கல்வியைப் புறக்கணித்து யாரும் வாழ்ந்ததில்லை
தாய்மொழிக்கல்வியால் யாரும் வீழ்ந்ததுமில்லை.
எனவே, தமிழக அரசு இதில் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும். தமிழைப் புறக்கணித்து எந்தக் கல்வித்திட்டத்தையும் அறிமுகப்படுத்த முனையக் கூடாது எனக் கல்வித்துறையினரை எச்சரிக்க வேண்டும். எல்லா வகுப்புகளிலும் தாய் மொழி வாழ்த்தைப் பாடமாக வைக்க வேண்டும். தமிழை எல்லா வகுப்புகளிலும் கட்டாயமாக வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மத்தியஅரசின் பாட முறை அல்லது பன்னாட்டுப்பள்ளி முறை என எத்தகைய முறையில் பள்ளிகள் செயல்பட்டாலும் மேனிலைப்பள்ளி முடிய தமிழ் மொழிக்கல்வி இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் கற்பிக்காத பள்ளிகளை அரசு மூட வேண்டும்.
தமிழைத் துரத்துவது அரசாக இருந்தாலும் சரி, கல்வித்துறையினராக இருந்தாலும் சரி, இதனால் தாங்கள் துரத்தப்படுவோம் என்பதை உணர்ந்து கட்டாயத் தமிழ் மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகிறோம்!
 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை (திருவள்ளுவர், திருக்குறள் 652)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Wednesday, April 24, 2019

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்


திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேண்டா!

தமிழகத்தில் காலி யாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு  நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 19 அன்று  இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உரிய தேர்தல் பணிகளும் தொடங்கி விட்டன. இவற்றுள் திருப்பரங்குன்றம் தொகுதிக்குத் தேர்தல் தேவையில்லை. முந்தைய இடைத்தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற மரு.சரவணனையே வென்றவராக அறிவிக்க வேண்டும்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத்  தொகுதியில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எசு. எம். சீனிவேல் தேர்தல் பரப்புரையின் பொழுதே நலக்குறைவுடன்தான் மருத்துவமனையில் இருந்தார். இருப்பினும் அதிமுகவின் செல்வாக்கான தொகுதி என்பதால் எளிதில் வெற்றி பெற்றார். ஆனால் பதவி ஏற்கும் முன்பு மே 25 அன்று மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் 2016 நவம்பர் 19 அன்று நடந்தது. இப்பொழுதும் அதிமுக வேட்பாளர் ஏ. கே. போசு நலக்குறைவுடன்தான் இருந்தார். இருப்பினும் 55.65% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
இரண்டாம் இடம் பெற்றிருந்த திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், இரட்டை இலை சின்னத்திற்கான ஏற்பினை மருத்துவமனையில் நினைவின்றி இருந்த செயலலிதாவிடம் ‘அ’, ‘ஆ’, படிவங்களில் கை விரல் பதிவு பெற்று வாங்கி வந்ததாகக் கூறுவதால் செல்லாது என்று வழக்கு தொடுத்தார்.
 ஏ.கே.போசின் வெற்றி செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் மார்ச்சு 22 அன்று  தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம், ஏ.கே.போசு வெற்றி செல்லாது என்பதால் இரண்டாவதாக வந்த தன்னைச் சட்ட மன்ற உறுப்பினராக  அறிவிக்க வேண்டும் என்கிற சரவணனின் கோரிக்கையை மறுத்தார் நீதிபதி.
நாம் இதனை இரு கோணங்களில் பார்க்க வேண்டும்.
 தி.ப.கு. தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த ஒருவர் அல்லது பலர் இது குறித்துக் கட்சியில் முறையிடுவதே பொருத்தமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வர இருந்த வாய்ப்பு மோசடியாகஏ.கே.போசிற்கு வழங்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கப்பட்டதாக அவர்கள் கோரலாம். ஆனால், அவ்வாறு யாரும் முறையிடவில்லை. தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளித்துள்ளனர். அச்சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.கே. போசு வெற்றி பெற்றுள்ளார். கட்சியின் உரிய ஏற்பு மடல் ‘அ’, ‘ஆ’, படிவங்களில் அளிக்கப்பட்டு ஏற்கப் பெற்ற பின், வேட்பாளரின் சின்னம் இரட்டை  இலை என்பதில் மாற்றமில்லை. எனவே, வெற்றி குறித்து ஆராயத் தேவையில்லை.
அதே நேரம், இவ்வாறு முறைகேடாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதாக மடல் கொடுத்ததில் யார் யாருக்கெல்லாம் பங்கு உள்ளதோ அத்தனை பேர் மீதும் குற்ற வழக்கு தொடுத்து உசாவி தண்டிப்பதுதான் முறை.  ஆனால், இது குறித்து உயர்நீதி மன்றமும் தக்க கட்டளை பிறப்பித்ததாகத் தெரியவில்லை. காவல் துறையோ,தேர்தல் ஆணையமோ நடவடிக்கை எடுதததாகவும் தெரியவில்லை.
தீர்ப்பு வரும் முன்னரே வெற்றி பெற்ற ஏ.கே.போசு மரணமடைந்தது தனிச் செய்தி.
உணர்வற்றவரிடம் ஒப்பம் பெற்றதாகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் செல்லாது என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.பொதுவாகத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் தேர்வு முடிவு தவறு என்றால் அடுத்த நிலையில் உள்ளவர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.  இந்த நடைமுறைக்கு மாற்றாக அவ்வாறு தீர்ப்பு உரைப்பதை அல்லது அறிவிப்பதை உயர்நீதிமன்றம் ஏற்காதது தவறாகப் படுகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
தி.மு.க. தரப்பில் உரிய மறு ஆய்வு முறையீட்டை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டாலும் தானாக முன்வந்து வழக்குக் கேட்பிற்கு எடுக்கும் உயர் நீதி மன்றம், தேர்தலில் வெற்றி பெற்றவராகத் தேர்தல்  ஆணையத்தால் அறிவிக்கப் பெற்ற ஏ.கே.போசின் தேர்வு செல்லாது என்பதால் அடுத்த இடத்தில் உள்ள தி.மு.க. வேட்பாளர் மரு.சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
மேலும், இதனைத் தி.மு.க.வின் சிக்கல் எனப் பார்க்கக் கூடாது. மக்களாட்சியில் நம்பிக்கை உள்ள அனைவருமே, வழக்கமான நடைமுறைகளை ஆள்வோர்க்கு ஏற்ப மாற்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி இரண்டாம் நிலை வாக்கு பெற்ற மரு.சரவணனை வெற்றி பெற்றதாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும்.
தீர்ப்பினை விருப்பம்போல் மாற்றி அமைக்கும் போக்கு இருப்பதாக மக்கள் கவலைப்படுவதைப் போக்க வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் வெற்றி பெற்றவரின் தேர்தல் செல்லாது என்னும் பொழுது அடுத்த நிலையில் உள்ளவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பதுமே நீதி உயிரோட்டத்துடன் இருப்பதற்கு அடையாளமாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Monday, April 15, 2019

தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தன்னம்பிக்கை மிகுந்த

சீமான், தினகரன், கமல்

 தேர்தல் என்பது கூட்டணி உலகமாக மாறிவிட்டது. எனினும் துணிந்து கூட்டணி இன்றிப் போட்டியிடுவோர் இருக்கின்றனர். அவர்களுள் நாம்தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன், மக்கள்நீதி மையத்தின் கமல் பாராட்டிற்குரியவர்கள். தன்னம்பிக்கையுடன் கூட்டணி வைத்துள்ளனர் இவர்கள்.
நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. இதனைக்கண்டு ஆளுங்கட்சி அஞ்சுவதே இதன் வளர்ச்சிக்குச் சான்று. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் கடந்த தேர்தல் சின்னமான இரட்டை மெழுகினைக் கிடைக்கச் செய்யாமல் கரும்பு உழவர் சின்னம் அளித்துள்ளனர். அப்படியும் அச்சம் போகவில்லை. வாக்குப் பதிவுப் பொறியில் இச்சின்னம் தெளிவின்றி இருப்பது கூடத் தெரியாத அளவில் உள்ளது. இருப்பினும் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. 50 விழுக்காடு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நா.த.க. எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்கு வளர்ச்சியே! நாளைக்கு இந்த வளர்ச்சி அக்கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள உதவும். எனவே, ஒரு தொகுதிக்காகக் கட்சியை அடைமானம் வைக்காமல் நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்குப் பாராட்டுகள்!
அ.தி.மு.க.-பா.ச.க.கூட்டணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள அ.ம.மு.க. தனித்து நின்று செல்வாக்கைக் காட்ட போட்டியிடுகிறது. இ.ம.ம.க.(இந்திய மன்பதை மக்களாட்சிக் கட்சி / Social Democratic Party of India) உடன்பாடு வைத்து அதற்கு மத்தியச் சென்னைத் தொகுதியை அமமுக வழங்கியுள்ளது. பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வில்லை. பா.ச.க.வின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் அ.தி.மு.க. கட்சியும் ஆட்சியும் தினகரன் கைகளில்தான் இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு வராததுதான் நல்லது. வந்திருந்தால் பா.ச.க.விற்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருப்பார். இப்பொழுது துணிந்து பா.ச.க.வையும் காங்.கையும் எதிர்த்து வருகிறார்.  எத்தனைத் தொந்தரவுகள் கொடுத்தாலும் அவர் மேலாங்கி நிற்கிறார்.
அச்சுறுத்தியும் பணியாததால் பசப்புச் சொற்களில் ஈர்க்ப் பார்த்தது பா.ச.க. ஆனால் அதற்கு இடம் கொடுக்கவில்லை தினகரன். தேர்தல் சின்னம் தொடர்பான  தொல்லைகளே அமமுக மீது மத்திய மாநில ஆளுங்கட்சிகளுக்கு இருக்கும் அச்சத்தைக் காட்டுகிறது.
 தினகரன் கையே தென் மாவட்டங்களில் ஓங்கி உள்ளது. எனவேதான் அங்கே அதிமுக ஓரிடத்தில் மட்டுமே போட்டியிடுகிறது. அது மட்டுமல்ல. தமிழக மக்கள் மதுரையில் கூடும் சித்திரைத் திருவிழா அன்று வாக்குப் பதிவை வைத்துள்ளது. வாக்குப்பதிவு நேரத்தை மதுரையில் மட்டும்தானே கூட்டி உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லா மக்கள் முழுமையும் வாக்களிப்பார்கள் என எங்ஙனம் எதிர்பார்க்க முடியும்? மதுரைக்கு வரும் வெளியூர் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாதே! அவ்வாறு வாக்களிக்கக் கூடாது என்பதுதான் அரசுகளின் எண்ணம் எனத் தேர்தல் நாள் காட்டுகிறது. எத்தனை இடுக்கண் வந்தாலும் அஞ்சாது எதிர்கொண்டு போட்டியிடும் அ.ம.மு.க.விற்கும் பாராட்டுகள்!
எந்த் தொழில் புரிந்தாலும் எப்பணி ஆற்றினாலும் கட்சி தொடங்கேவா தேர்தலில் போட்டியிவோ தடையில்லை. அவ்வாறிருக்க நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பது சரியல்ல. நடிகர்களின் ஒப்பனைப் பூச்சையும் பிறர் எழுதித் தருவதைப் பேசுவதையும் நம்பி அவர்களை எடுத்துக்காட்டான நாயர்களாக எண்ணி ஆதரிப்பதுதான் தவறு. கமல் நடிகர் மட்டும் அல்லர். பல்துறைக் கலைஞர். திரைப்படங்களில் நல்லவர் வேடங்களில் மட்டும் நடிப்பவர் அல்லர். எனவே, திரைக்கதைப் பாத்திரங்கள் அடிப்படையில் மக்களிடம் வாக்குகளைப் பெறுவார் எனச் சொல்ல முடியாது. அவரும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்காகக் கட்சியை அடகு வைத்துவிட்டுக் கூட்டணி எதிலும் இணையவில்லை. ஊழலை எதிர்த்தும் நாட்டு நலன் முழக்கங்களை முன்னிறுத்தியும் அவரின் மக்கள் நீதி மையம் பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
நடிகர்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தால் தவறு. எனினும் ஊழலை ஒழிக்கும் முழக்கத்தால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள் என நம்பியிருந்தால் தவறல்ல. ஆனால் ஊழலில் திளைக்கும் மக்கள் ஊழலுக்குத் துணை நிற்பதால் ஊழல் அடிப்படையில் எக்கட்சியையும் தோற்கடிக்க முடியாது என்பதே உண்மை. எனினும் தன் வலிமை, தன் மையத்தின் வலிமை என்ன என அறிந்து கொள்ள வாய்ப்பாகத் தனித்து அவரது கட்சி போட்டியிடுகிறது. இந்த வாக்குகள் அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு உதவும். இவர யாருடைய ஆதரவு வாக்குகளை அல்லது எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வரலாம். எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகையை மீளப் பெற முடியாத அளவு குறைவான வாக்குகள் பெற்றால் கட்சியை மேம்படுத்துவதற்கான சிந்தனை உருவாகி அடுத்தத் தேர்தலுக்கு உதவும்.
எவ்வாறிருப்பினும் தன்னம்பிக்கையுடன் தனித்துப் போட்டியிடும் மக்கள் நீதி மையத்திற்குப் பாராட்டுகள்!
வெற்றி தோல்விகளை அளவுகோலாகக் கொள்ளாமல் வாக்குகள் பெறுவதையே இலக்குகளாகக் கொண்டு புதிய களம் காணும் இவர்கள் புதிய வாக்காளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தினால் நன்று. இவர்கள் போட்டிகளால். தோற்க வேண்டும் என்று நாம் கருதும் கட்சிகள் வெற்றி பெற நேர்ந்தாலும் இவர்களின் முயற்சிகள் பாராட்டிற்குரியனவே! வெற்றி பெறும் எனக் கருதும் அணிகளுக்கு வாக்களிக்காமல் நடுநிலையுடன் சிந்தித்து மக்கள் வாக்களிக்க இவர்களின் பரப்புரைகள் உதவும்.
இவர்களின் தன்னம்பிக்கை வெல்க!
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.(திருவள்ளுவர், திருக்குறள் 673)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல

Thursday, October 4, 2018

மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

மொழிக்கொலைப் போலிக்

கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்

 ஒரு மொழியின் தூய்மையையும் தனித்தன்மையையும் சிதைத்தும் அயற்சொல் கலந்தும் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் மொழி அழிகின்றது. ஒரு மொழி அழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது. எனவே மொழிக் கொலை புரியும் படைப்பாளிகள், பேச்சாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இங்கே தலைப்பில் கவிஞர்கள் எனக் குறிப்பிட்டாலும் மொழிக்கொலைகாரர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
 கவிஞர்களைக் குறிப்பிட்டதன் காரணம்  ‘சர்க்கார்’ என்னும் திரைப்படப் பாடல்களில் வேண்டுமென்றே மொழிக்கொலை புரிந்த கவிஞர் ஒருவரைக் குறிப்பிட்டுத்தான்.
‘சிமிட்டாங்காரன்’ என்னும் தலைப்பில் சொல்லப்படும் பாட்டு என்ற பெயரிலான கொலை வரிகளில் முதலில் வருவன
பல்டி பக்குற டார்ல உடனு பல்த்து
வேர்ல்டு  மொத்தமும்
அரள உடனும் பிஃச்து .
பிசுறு கெளப்பி
பேரல வுடனும் பல்த்து
அடுத்துச் சில வரிகளுக்குப்பின் வரும் வரிகள்
சிம்டாங்காரன் எங்கனாநீ  சீரென்
நின்டேன் பாரேன்
முடிஃச்டு அப்டிக்கா போறேன்
  இவற்றை மேற்கோளாகக் காட்டவே மனம் நடுங்குகின்றது. எனினும் அறியாதவருக்கு உண்மையை உணர்த்த இங்கே குறித்துள்ளோம்.
 இவற்றை எல்லாம் தமிழிசைக்கான இணையத்தளம் உருவாக்கியுள்ள இசையமைப்பாளரும் பின்னிணி பாடியவர்களும் காட்சியை இயக்குநரும் இயக்குநர் குழுவும் காட்சியில் நடிக்கும் நடிகர்களும்  பட உருவாக்குநரும்  பாடலாக்கத்திலும் காட்சியிலும் தொடர்புடைய பிற கலைஞர்களும் எப்படித்தான் ஏற்றுக்கொண்டார்கள் என்று  தெரியவில்லை. இதற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும் என எதிரபார்ப்பதாக இசையமைப்பாளர் கூறுவதுதான் வேடிக்கை. நச்சுக்கிருமிகள் விரைவாகப் பரவுகின்றன. அதற்காக அவற்றிற்கு நல்லவரவேற்பு இருப்பதாகக் கூறி அவற்றை ஒழிக்காமல் இருக்க முடியுமா?
  மன்பதைக்கு எதிரான கருத்துகள் உள்ளதாகக் கூறிப் புத்தகங்களை அரசு தடை செய்வதுபோலும் திரைப்படத் தணிக்கைக் குழு மூலமும் அரசு இப்படப்பாடல்களையும் காட்சிகளுடன் சேர்த்துத் தடை செய்ய வேண்டும். பாடலாசிரியர் முதலான குழுவினருக்கும் சிறைத் தண்டனை வழங்கவேண்டும்.
 இப்பாடல் குறித்துச் “சர்க்கார் படத்தில் காணாத தமிழ்” என எழுதியுள்ளதினமலருக்கும் உரிய செய்தியாளருக்கும் பாராட்டுகள். படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களில் 4 பாடல்களில் தமிழ் இல்லை என்பதைத் தினமலர் வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளது. வலைத்தளங்களில் ஆங்காங்கே கண்டனங்களும்  பதிவாகியுள்ளன. மக்கள் இப்படத்தைக் காசு கொடுத்துப்பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்.
  பல நாடுகளில் மொழிச்சட்டங்கள்  உருவாக்கி தத்தம் மொழியைக் காத்துவருகின்றனர். தமிழ்நாடு அரசும் ‘தமிழ்மொழிப் பாதுகாப்புச் சட்டம்’ எனச் சட்டம் ஒன்றை உருவாக்கித் தமிழ் மொழியைக் கொலை முயற்சிகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்புகளில் தமிழ்உணர்வும் தமிழறிவும் உள்ளவர்களையே பொறுப்பாளர்களாக அமர்த்தவேண்டும். பொதுவாக யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழ் தொடர்பானவற்றில் தமிழர் அல்லாதவரை அல்லது தமிழ் உணர்வு அல்லாதவரை அமர்த்துவதே தமிழக  அரசின் செயல்பாடு என்னும் தவறான நிலையை மாற்ற வேண்டும்.
 பிரான்சு நாட்டில் பிரெஞ்சுமொழியைக் காப்பாற்ற சட்டம் உள்ளது. இச்சட்டத்தை அறிமுகப்படுத்திய பண்பாட்டு அமைச்சர் தூபன் (Jacques Toubon ) பெயரில் தூபன் சட்டம் என அழைக்கப்பெறுகிறது. தூபன் என்றால் ‘யாவும் நன்று’ என்னும் பொருளும் உள்ளதால் அப்பெயரிலும் இச்சட்டம் அழைக்கப்பெறுகிறது.
  விளம்பரங்கள், ஊடகங்கள், பணி ஒப்பந்தங்கள், மாநாடுகள் முதலான அனைத்து இடங்களிலும் தூய பிரெஞ்சு மொழியைப் பேணச் செய்வதே சட்டத்தின் நோக்கமாகும். பிரெஞ்சு மொழியில் ஆங்கிலம் முதலான அயல்மொழிகளின் சொற்கள், தொடர்கள் முதலானவற்றைப் பயன்படுத்த இச்சட்டம் வகை செய்கிறது. இதைமீறி நடப்பவர்களுக்கு இச்சட்டத்தின்படி பிரெஞ்சு நாணயத்தில் 2000 வரை ஒறுப்புத் தொகையும் (அபராதமும்) விதிக்கப்படும்.
இலத்தீன், ஆங்கிலம் முதலான மொழிகளில் இருந்து பிரான்சுமொழியைக் காப்பதற்காக பிரான்சியக் கழகம்(Académie française) 1635 ஆம் ஆண்டே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு இப்பொழுது, வழக்கத்தில் உள்ள மின் அஞ்சல்/ஈ-மெயில் (e-mail) முதலான சொற்களுக்கான பிரெஞ்சு மொழிச்சொற்களைக் குறிப்பிட்டு அவற்றைப் பயன்பாட்டில் கொண்டு வர வலியுறுத்துகிறது. இதற்காக இணையத்தளம் தனியாக உருவாக்கப்பட்டுச் ‘சொல்; சொல்லற்க’ (Dire, Ne pas dire /To say, Not to Say) என்னும் தலைப்பில் இயங்கி வருகிறது.
 கனடாவில் பிரெஞ்சு மொழி வழங்கும் கியூபெக்கில்(Quebec) விளம்பரப்பலகை, தகவல் பலகை முதலானவற்றில் ஆங்கிலம் இடம் பெற்றால் ஆங்கில எழுத்துகளைப்போல் இரு மடங்கு அளவில் பிரெஞ்சும்  இடம் பெற வேண்டும் எனச் சட்டம் உள்ளது.
9 ஆவது தேசிய மக்கள் பேராயத்தின் 18ஆவது நிலைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப, மக்கள் சீனக் குடியரசுத் தலைவரின் 37 ஆம் சட்டம் நாள் 31.10.2000 இன்படி 1.01.2001 முதல் சீன மொழித்தூய்மைநடைமுறைப்படுத்தப்படுகிறது.
  சீனாவில் ஒலி,ஒளி பரப்புக்காக அயல்மொழியைப் பயன்படுத்த வேண்டுமென்றால், மாநிலக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒலிபரப்புப் பணியாண்மைக் குழுவின் (broadcasting and television administration under the State Council) ஒப்புதல் பெற வேண்டும்.
  சீன மொழிப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அயல்மொழி வணிக நிறுவனப்பெயர்கள், குறியீட்டுப்பெயர்கள் சீனமொழிக்கு மாற்றப்பட்டுப் பயன்படுத்தப் படுகின்றன  அயல்நாட்டார் பெயர்கள், அயல்நாட்டிடப் பெயர்கள், அறிவியல்-தொழில்நுட்பப் பெயர்கள் ஆகியவற்றிற்கான சீனவடிவப்பெயர்களை மாநிலக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள தரமான பேச்சு எழுத்துப் பணிக்குழு தெரிவிப்பதற்கேற்ப பயன்படுத்தப் பெற வேண்டும். தமிழர்கள்தாம் பெயர்ச்சொற்களை மாற்றுவதா? அடுத்த மொழிக்காரன் கண்டுபிடித்ததற்குத் தமிழ்ப்பெயர் எதற்கு? என்றெல்லாம் கேட்டுக் கொண்டு உ ள்ளனர்.
  10.02.20146 இல் அரபுமொழிக் காப்புச்சட்டம் (Protection of the Arabic Language) இயற்றப்பட்டு அரபின் தூய்மை காக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
  எசுக்கிமோக்கள் என அழைக்கப்பெறும்  இன்யூட்டு மக்கள் மொழிக்காக இன்யூட்டு மொழிப் பாதுகாப்புச்சட்டம் (Inuit Language Protection Act) உள்ளது.
இவ்வாறு பிற நாடுகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் தமிழ்மொழித்தூய்மை காக்க அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும்.அதற்கு முன்னதாகச் சர்க்கார் பாடலாசிரியரையும் குழுவினரையும் தண்டிக்க வேண்டும்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (திருவள்ளுவர், திருக்குறள் 550)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல

Followers

Blog Archive