தமிழக முதல்வரின் நலத்திட்டங்களில்
பாராட்டக்கூடிய ஒன்றாக அண்மையில் (ஆனி 16, 2045 / சூன் 30, 2014)
திருவரங்கத்தில் திறந்த இறையன்பர்களுக்கான தங்கும் விடுதியைக்
குறிப்பிடலாம். பயணச் செலவைவிடத் தங்குமிடச் செலவு மிகுதியாவதால் ஏற்படும்
இடர்ப்பபாடுகளிலிலிருந்து மீள நல் வாய்ப்பாக இவ் வுறைவகம் அமைகின்றது.
இத்திட்டம் தொடங்கப்பட்டபொழுதே ஒரு
சாராரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இப்பொழுது அனைத்துச் சாராரின் கசப்பை
இத் திட்டம் கொண்டுள்ளது.
கட்டடம் கட்டும் பொழுது, 140ஆண்டுகால
வரலாறு உடைய மதுரகவி நந்தவனத்திற்குரிய நிலத்தில் கட்டப்படுவதால் அவ்
வறக்கட்டளையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உலகத்தமிழர்கள் சார்பிலும்
வரலாற்று நேயர்கள் சார்பிலும் அரசிற்கு முறையீடும் செய்தனர்.
எனினும் திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் மறுமொழி ஒன்றை அளித்துவிட்டுக்
கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு விடுதியும் திறக்கப்பட்டு விட்டது.
தோன்றும்பொழுதே எதிர்ப்புடன்
தோன்றிய இவ்விடுதி தொடங்கிய பின்னரும் தமிழன்பர்களின் எதிர்ப்பிற்கு
உள்ளாகி உள்ளது. எதிர்ப்பு விடுதிக்கல்ல. அதன் பெயருக்கு!
பயணியர் விடுதி, இறையன்பர் தங்கலகம்,
விருந்தினர் இல்லம், சுற்றுலா உறைவகம், திருவரங்கத் திருமனை, மாரியம்மன்
மனைகள், ஈசுவரி குடில்கள், அரங்கர் ஓய்வகம், மாலவன் மாளிகை என்பன போன்று
எத்தனையோ தமிழ்ப்பெயர்களுள் ஒன்றைச் சூட்டி யிருக்கலாம். ஆனால்,
சூட்டப்பட்டப் பெயரோ ‘யாத்ரி நிவாசு’. ‘யாத்திரீகர்கள் தங்கும் விடுதி’
எனத் தமிழ்ப் பெயர்ப்பலகை இருப்பினும் இவ்விடுதி ‘யாத்ரி நிவாசு’ எனவே
அழைக்கப்பெறும்.
பயணியர் விடுதியை நெடுஞ்சாலைத்துறை
கட்டி, அறநிலையத்துறை பொறுப்பில் ஒப்படைப்பதாக ஒரு செய்தியும்
பொதுப்பணித்துறை கட்டியதாக ஒரு செய்தியும் திருவரங்கம் கோயில், சமயபுரம்
மாரியம்மன் கோயில் நிதியிலிருந்து செலவளிக்க அரசு ஒப்புதல் ஆணை வழங்கியதாக
ஒரு செய்தியும் என வெவ்வேறாகச் செய்திகள் வந்துள்ளன.
இவ்விடுதி எத்துறைக்குரியதாக இருந்தாலும்
இதற்குரிய பெயரைச் சூட்டியவர்கள் அதிகாரிகளாக இருக்க மாட்டார்கள்.
அதிகாரிகள் பரிந்துரைத்திருக்கலாம். எவ்வாறாயினும் முதல்வர் ஒப்புதலின்றி விடுதிக்கான பெயர் சூட்டப்பட்டிருக்காது.
பயணத்தைக் குறிக்கத் தமிழில்
சொற்களுக்குப் பஞ்சமா? பயணத்திற்குத் தமிழில் முதலில் – செல்வதைக்
குறிக்கும் சொல்லாக – ‘செலவு’ என்றே குறிக்கப்பட்டது. சங்கக்காலத்திற்கு
முற்பட்டு, ‘செங்கோன் தரைச்செலவு’ என ஒரு நூல் இருந்ததே இதற்குச்
சான்றாகும். குமரி யாற்றிற்கும் பஃறுளி யாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள
நாட்டரசனாகிய செங்கோனை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடிய நூலிது.
நீளிடைச் செலவொழிந்தனனால் (கலித்தொகை 10)
செஞ் ஞாயிற்றுச் செலவும் (புறநானூறு 30)
எனச் சங்க இலக்கியங்களில் பயணம் ‘செலவு’
எனவே குறிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தென்றல் திரு.வி.க. (திரு வி.
கல்யாணசுந்தரம்) அவர்களின் ‘இலங்கைச் செலவு’ கீர்த்திவாசனின் ‘மாமல்லபுரச்
செலவு’ முதலியன மூலம் இன்றும் பயணப் பொருளில் ‘செலவு’ நிலைத்திருப்பதை
உணரலாம்.
கள்ளைக் குடிக்கும் விருப்பத்தை உடையவர்களது பயணத்தைக் குறிப்பிடும் வண்ணம், ‘கள்ளில் கேளிர் ஆத்திரை‘
என வரும் குறுந்தொகைப் பாடலடி (293.1) மூலம் ‘ஆத்திரை’ என்பது பயணத்தைக்
குறிக்கும் சொல்லாகச் சங்கக் காலத்தில் இருந்துள்ளதை அறியலாம். இச்
செய்யுளை இயற்றிய புலவர் பெயர் அறியப்படாமையால் ‘கள்ளிலாத்திரையன்’ என்றே
அழைக்கப்பட்டுள்ளார். ஆத்திரை என்னும் சொல் பெருங்கதையில் (1.36:238, 255,
38:1, 139, 2. 9:251, 11:75, 15:9, 37,3. 1:105.)பல இடங்களில் வருகிறது.
பயணத்தைக் குறிக்கும் மற்றொரு சொல் ‘யாத்திரை’. மக்கள் பயணம் செல்லும் பாதையைக் குறிப்பிடுகையில்,
‘ஆர் வேலை யாத்திரை செல் யாறு’ எனப் பரிபாடல்(19/18) குறிப்பிடுகிறது.
அதியமான்மீது பெருஞ்சேரலிரும்பொறை படையெடுத்துச் சென்ற போர்ச்செய்தி கூறுந் தமிழ் நூல் ‘தகடூர் யாத்திரை’ என்பதாகும். பலர் எண்ணுவதுபோல் யாத்திரை அயற்சொல்லன்று. தமிழ்ச்சொல்லே ஆகும். இதில் இருந்தே ‘யாத்ரா’ முதலான சொற்கள் பிற மொழிகளில் பயன்பாட்டிற்கு வந்தன.
‘யாத்தல்’ என்பது கட்டமைப்பைக்
குறிப்பிடுவது. திட்டமிட்ட இறைப்பயணம், போர்ப்பயணம் போன்ற குறிப்பிட்ட
நோக்கத்திற்கான பயணம் ‘யாத்திரை’ எனப்பட்டுள்ளது. ஓரிடத்திலிருந்து வேறோர்
இடத்திற்கு இயங்குவது என்னும் பொருளில் ‘இயாத்திரை’ என்றும்
வழங்கப்பட்டுள்ளது.
ரகார லகார யகாரங்களை முதலாகவுடைய
மொழிகளின் முன்னர் அ,இ,உ ஆகிய குற்றுயிர் வரும் என்பதன் அடிப்படையில்
‘இயாத்திரை’ என வந்தது என்றும் கூறுவர்.
[ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்
கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே. -நன்னூல் 147]
எனினும் யானை, யாண்டு என்பனபோல் யாத்திரை தமிழ்ச்சொல்லே! யாண்டு-ஆண்டு, யாறு-ஆறு, யானை-ஆனை, என்பன போன்று யாத்திரை-ஆத்திரை ஆகியிருக்கலாம்.
‘பயணம்’ என்னும் சொல் பெரியபுராணத்தில்
பைம்பொன் மணிநீள் முடிக்கழறிற் றறிவார் தாமும் பயணமுடன்
செம்பொ னீடு மதிலாரூர் தொழுது மேல்பாற் செல்கின்றார்
(பாடல் எண் : 3876 / கழறிற் அறிவார் நாயனார் புராணம்129 ) என வருகிறது.
அயனம், அயணம் என்பன பயணத்தைக் குறிப்பன.
வெய்யோன் வடதிசை யயண முன்னி (சீவகசிந்தாமணி 851) எனச்
சூரியனின் வடதிசைப்பயணம் பற்றிக்
குறிக்கப்படுகிறது. நன்மை, தீமைகளைப் பயக்கும் செலவாகிய அயணம் பயணம்
எனப்பட்டது போலும். பயணமும் தமிழ்ச்சொல்லே. ஆனால், இடைக்காலத்தில்
தோன்றியுள்ளது.
செலவர், ஆத்திரையர், யாத்திரையர், பயணர்
எனப் பலவாறாகப் பயணம் மேற்கொள்வோரைக் குறிக்கலாம். எனினும் பயணியர் என்னும்
சொல் வழக்கத்தில் உள்ளமையால் அதனையே நாம் கையாளலாம். யாத்திரை தமிழ்ச் சொல்லாக இருப்பினும் ‘யாத்ரி’ என்பது தமிழ்வடிவமன்று. இதில் ‘நிவாசு’ வேறு. தமிழ்ப்பெயரைத் தொலைத்துள்ளோமே என உணர்ந்துதான், முதல்வர் அவர்கள், தம் உரையில் இப்பெயரைக் குறிக்கவில்லை போலும்!.
“கொள்ளிடக் கரையில், பஞ்சக் கரை சாலை
அருகே 6.40 காணி (6‘ஏக்கர்’40‘செண்டு’) நிலப் பரப்பில் 47 கோடியே 9 இலட்சம்
உரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ஏறத்தாழ 1,000 யாத்திரிகர்கள்
தங்கும் வகையிலான விடுதியினை நான் இன்று திறந்து வைத்துள்ளேன்” எனப் பொதுவாகவே கூறியுள்ளார். (தமிழக அரசின் செய்தி வெளியீடு எண் 347) <http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr300614_347.pdf >
மத்திய அரசு கட்டங்கள், திட்டங்கள்,
பதவிகள் என எப்பெயராயினும் இந்தி வடிவிலான சமற்கிருதப் பெயர்களைச்
சூட்டுவதையே கடமையாகக் கொண்டுள்ளது. அதனைத் தமிழக அரசு இதுவரை
எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டிலாவது தமிழக அரசின் துறைகள் தமிழ்ப் பெயர்களைச்
சூட்டும் என்ற நம்பிக்கையில் இடி விழுந்தது போன்று இம்மாளிகைக்கு
அயற்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனைப்பார்த்துப் பிற துறைகளும் தத்தம்
விருப்பம்போல் பிற மொழிப் பெயர்களை – குறிப்பாகச் சமற்கிருதப் பெயர்களைச் –
சூட்டுவதை உயிர் மூச்சாகக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
சங்கர மடத்திற்குக் கிளைகள் உள்ள
இடங்களில் காஞ்சிபுரம், இராமேசுவரம், திருச்செந்தூர், வைத்தீசுவரன் கோயில்,
திருவண்ணாமலை முதலான ஊர்களில் பயணியர் விடுதி நடத்துகின்றது. அவற்றின்
பெயர் ‘யாத்ரி நிவாசு’. இவ்வாறு சங்கரமடம் எங்குப் பயணியர் விடுதி
கட்டினாலும் அதற்கு ‘யாத்ரி நிவாசு’ என்றுதான் பெயர் சூட்டிவருகிறது.
இதனைப் பார்க்கும்பொழுது சங்கரமடம் வழியில் தமிழ்நாட்டரசும் செல்கிறதோ என எண்ணுவதில் தவறில்லைதானே!
தமிழ் மக்கள் பணத்தில்
தமிழ்நாட்டில் கட்டப்படும் விருந்தினர் மாளிகை தமிழ்ப்பெயர் தாங்கியிருக்க
வேண்டும் எனத் தமிழக முதல்வரை வலியுறுத்தி உடனே இப்பெயரை மாற்ற
வேண்டுகிறோம்.
தமிழ் என்பது அரசியல் நலனுக்காக
எனக் கருதியவர்கள் காணாமால் போய்விட்டனர். எனவே, தமிழ் என்பது தமிழர்
நலனுக்காகவே இருக்க வேண்டும் என்பதைத் தமிழக முதல்வர் உணர வேண்டும்!
ஆங்கிலச்சொல் இந்தி மொழி
வடசொல் யாவும்
இவண் தமிழிற் கலப்பதுண்டோ
என வினவி,
கெடல் இயக்கும் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைக்
கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே
நெஞ்சுபதைக்கும் பகர
வாய்பதைக்கும்.
எனப் பாவேந்தர் பாரதிதாசன் (தமிழியக்கம்) பதைபதைத்து,
உணர்ந்திடுக தமிழ்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!
என உணர்த்தினார். ஆதலின்,
செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே!
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
ஆனி 22, 2045 / சூலை 6, 2014
ஆனி 22, 2045 / சூலை 6, 2014
No comments:
Post a Comment