Thursday, August 29, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


  


(சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

691. Actual Or Express Notice  நேரடியான அல்லது வெளிப்படையான புரிதல்  

நிகழ்வு, கோரிக்கை, உரிமை கோரல்,செயல்முறை குறித்த உள்ளபடியான அல்லது வெளிப்படையான புரிதல்.

notice என்றால் அறிவிப்பு எனக் கொள்வதைவிட அறிதல், புரிதல், உணர்தல் என்ற முறையில் கவனிக்கப்படுவதைக் குறிப்பதாகக் கொள்வதே சரியாகும்.

  ஓர் உண்மை உள்ளதை ஒருவர் அறிதலே அல்லது  நிகழ்வு அல்லது உண்மை பற்றிய அறிவை ஒருவர் உள்ளவாறு அறிதலே உள்ளபடியான அல்லது நேரடியான அல்லது வெளிப்படையான அறிதலாகும்  அல்லது புரிதலாகும்.
692. Actual knowledgeஉள்ளபடியாக அறிதல்  

எவ்வகை ஐயப்பாடுமின்றி, உள்ளபடியான நிகழ்வு அல்லது கூற்று குறித்துத் தெளிவாக இருத்தல்.

உண்மையான அறிதல் என்பது நிகழ்வு அல்லது சூழ்நிலையைப்பற்றி ஒருவர் அறிந்திருப்பதும், அஃது இருப்பதைப் பற்றி எந்த ஐயம் இல்லாதிருப்பதும் ஆகும். இது நோக்கத்திலிருந்து வேறுபட்டது.

உண்மையான அறிதல் நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கலாம் அல்லது யாராவது கூடுதல் தகவல்களை அறிந்திருக்க வேண்டும் என்றால் அதைக் குறிக்கலாம். குற்றவியல் சட்டம், நொடிப்புச்சட்டம் முதலிய சட்டத்தின் பல பகுதிகளில் இஃது இன்றியமையாதது.
693. Actual Possession  மெய்நிலை உடைமை  

உண்மையான உடைமை.      

உரிமை உடைமையைக் குறிப்பதற்குச் சுவாதீனம் என்பர். அது தமிழ்ச்சொல்லன்று.   உடைமை என்பது ஒரு பொருளை ஒருவரின் தனிப்பட்ட காவலில் வைத்திருப்பது அல்லது அந்தப் பொருளைத் தன் பேணுகையில் வைத்திருப்பது அல்லது அந்தப் பொருளின் மீது நேரடிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகும்.  
இது கொள்நிலை உடைமையினின்று வேறுபட்டது.
694. Actual Seizure  நேரடி/ உள்ளபடியான கைப்பற்றுகை  

உள்ளபடியான கையகப்படுத்துதல்  

சட்டச் செயல்முறை மூலம் ஆள்  அல்லது உடைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரல்.  

சொத்தைக் கையகப்படுத்துதல்
695. Actual total lossஉள்ளபடி  மொத்த இழப்பு  

பொருள் அல்லது சேவை என ஏதாவதுஒன்றின் விலை  விற்பனை விலையை விட அதிகமாவதால் ஏற்படும் ஒட்டு மொத்த இழப்பே உள்ளபடி மொத்த இழப்பாகும்.  

தற்செயலாக அழிக்கப்பட்டதால் அல்லது மீட்டெடுப்பதற்கு அப்பால் சென்றதால் நேரும் இழப்பு.  

காப்பீட்டுச் சட்டத்தின் படி, காப்பீடு செய்யப்பட்ட சொத்து முற்றிலும் அழிக்கப்பட்டால், இழந்தால் அல்லது அதை மீட்டெடுக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்தால் ஏற்படும் இழப்பு உள்ளபடி மொத்த இழப்பாகும்.  

ஊர்திக்குச் சேதம் ஏற்படுகையில் அதனைச் சரி செய்வதற்காக ஆகும் செலவு உரிய காப்பீட்டு மதிப்பில்(IDV) 75 விழுக்காட்டிற்கும் மேலாக ஆகுமெனில், அது உள்ளபடி மொத்த இழப்பு எனப்படுகிறது.
696. Actual valueஉள்ளபடி மதிப்பு  

உள்ளபடி மதிப்பு உண்மை மதிப்பிலிருந்து ( real value) வேறுபட்டது.  

உண்மையான பண மதிப்பு, ஏதேனும் தேய்மானத்தைக் கழித்த மாற்று மதிப்புக்குச் சமம்.  

உள்ளபடியான மதிப்பு என்பது வாடிக்கையாளரின் இப்போதைய எதிர்கால வணிக மதிப்பைக் குறிப்பது. இது வருவாயையும் உள்ளடக்கியது.
697. Actually And Voluntarilyஉள்ளபடியாகவும் தன் விருப்பிலும்  

உள்ளபடியாகவும் தன்னார்வத்துடனும் மேற்கொள்ளும் செயலைக் குறிக்கிறது.
698. Actually And Voluntarily Resideஉள்ளபடியாகவும் தன் விருப்பிலும் தங்கியிருத்தல்  

ஓரிடத்தில் உள்ளபடியாகவும் தன் விருப்புடனும் வசித்தல்.
699. Actually deliveredஉண்மையான சேர்ப்பிப்பு  

உள்ளபடியான ஒப்படைப்பு  

உண்மையான சேர்ப்பிப்பு அல்லது ஒப்படைப்பு என்பது அப்பொருள் சேர்க்கப்பட வேண்டியவரின் கையில் சேர்ப்பிப்பது அல்லது ஒப்படைப்பது ஆகும்.  

சரக்கு விற்பனைச் சட்டம், 1930 இன் பிரிவு 2 (2) இன் படி, (Section 2 (2) of the Sale of Goods Act, 1930) சேர்ப்பிப்பு அல்லது ஒப்படைப்பு என்பது, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பொருட்களைத் தன்னார்வமாக மாற்றுவதாகும். எனவே, ஒருவர் பொருட்களை நியாயமற்ற முறையில் கையகப்படுத்தினால், அது சேர்ப்பிப்பு அல்லது ஒப்படைப்பு ஆகாது.  

சரக்கு என்பது மதுவகையையும் குறிக்கும். இங்கே ணிகப்பொருளைக் குறிக்கிறது.
700. Actually Due And Payable
உண்மையில் உரியதும் செலுத்தத்தக்கதும்
 
உண்மையில் உரியது என்பது செலுத்துவதற்குரிய கடன் , கடன் தவணை போன்ற பணம் செலுத்துவதற்கான காலம்(காலக்கெடு) வந்து விட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல் செலுத்துவதற்குரிய தொகையைக் குறிக்கும்.
 
 
செலுத்தத்தக்கது என்பது சட்டப்படி பணம் செலுத்துவதற்கான காலம்(காலக்கெடு) வந்து விட்டதற்குரிய செலுத்த வேண்டிய தொகையைக் குறிப்பது.

Tuesday, August 27, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

681. acts justified by law  சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்ட செயல்கள்

சட்டத்தால் ஞாயப்படுத்தப்பட்ட செயல்கள்

சட்டத்தால் நயன்மைப்படுத்தப்பட்ட செயல்கள்

சட்டத்தால் முறைமைப்படுத்தப்பட்ட செயல்கள்  

நிகழ்வுகளின் உண்மை நிலை குற்றம் நடந்துள்ளது என்பதைக் காட்டினாலும் குற்றம் செய்ததாகத்  தவறாகக் கருதப்படுபவர், தான் இதில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் எனப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
682. Acts regarded as trivialஅற்பமாகக் கருதப்படும் செயல்கள்  

அற்பமானவை எனக் கருதப்படும் செயல்கள்

அற்பச் செயல்கள் என்பது மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறியது, மிகச் சிறிய அளவிலானது, அல்லது முதன்மையற்றது. அவை அதிகக் கவனத்திற்கோ கருதுகைக்கோ பெறுமானம் உடையதல்ல. 1860 இன் இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) அற்பமான செயல்களைதத் தீவிரத்தன்மை அல்லது முதன்மைத்துவம் இல்லாதது என்று வரையறுக்கிறது. மேலும் சட்டம் அவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்று கூறுகிறது.

அற்பச் செயல்கள் என்பன மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறியது, மிகச் சிறிய அளவிலானது, அல்லது முதன்மையற்றது. அவை அதிகக் கவனத்திற்கோ கருதுகைக்கோ பெறுமானம் உடையதல்ல. இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) 1860, அற்பமான செயல்களைதத் தீவிரத்தன்மை அல்லது முதன்மைத்துவம் இல்லாதது என்று வரையறுக்கிறது. மேலும் சட்டம் அவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்று கூறுகிறது. அற்பச்செய்திகளைப் பாதுகாப்பது என்பது “சட்டம் அற்பச்செய்திகளைப் பொருட்படுத்தாது”(De minimis non curat lex) என்னும் கொள்கையின் அடிப்படையிலானது.இது குமுக(சமூக) நல்லிணக்கத்தையும் சரிசெய்தலையும் உறுதிப்படுத்துவதற்காகச் செய்யப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, இ.த.ச. பிரிவு 95, யாராவது வேண்டுமென்றே அல்லது தெரிந்தே தீங்கு விளைவித்தால், இயல்பான உணர்வு, சினம் கொண்ட ஒருவர் அதைப் பற்றி புகார் செய்யாத அளவுக்குத் தீங்கு சிறியதாக இருந்தால், அது குற்றமாகக் கருதப்படாது என்கிறது.
அற்பச் செயல்களின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

• எழுத்துப் பிழை
• ஒரு வீட்டின் விலையுடன் ஒப்பிடும்போது ஒரு கோப்பை பானத்தின் விலை
683. Actual    உள்ளபடி  

உள்ளபடியாக, உள்ள, உள்ளவாறு, நடைமுறை, உண்மை, உண்மையான, உண்மையாக உள்ள, நடைமுறையில் உள்ள, இருக்கின்றபடி, மெய்நிலையான, பட்டாங்கு, உள்ள, உரிமை, சரியான, நிகழ்நிலை, உலகியல் வழக்கு, உலகவழக்கம்;

நேரடி; நேர்(ந்த);    

உள்ளவாறெனக் குரைசெய்ம்மின் (தேவாரம், 385.2)

உற்றதுசொன்னால் அற்றது பொருந்தும்  

உள்வழக்கு         உள்ளதை உண்டு என்பது

மெய்ம் மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத். 156, உரை).  

பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36).  
பட்டாங்கி லுள்ளபடி  (மூதுரை) என இலக்கியங்களிலேயே இடம் பெற்றுள்ளன.  

சொல் பயன்படுமிடம்: உண்மையான உடற் தீங்கு அல்லது உடலூறு  

கொடும்உடற்காயத்தை விடக் குறைவாக ஆனால் வன்மையாக மற்றொருவரைக் காயப்படுத்துவது
684. Actual balanceஉண்மையான இருப்பு  

உண்மை இருப்பு

பதிவேட்டின்படியான இருப்பிலிருந்து பதிவிற்குப் பின் மேற்கொள்ளப்பட்டுப் பதியாமல் உள்ள செலவையும் கழித்த பின் வருவது.

இதேபோல் பதியப்படாத வரவையும் சேர்த்தது உண்மையான இருப்பு.

எடுத்துக்காட்டாகச் சொல்வதாயின் இணைய வழியில் வங்கிக் கணக்கைக் கையாள்கையில் பயணச்சீட்டு வாங்குவதற்கான செலவு கழிக்கப்பட்டு இருப்பு காட்டப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் இணையப் பிழையாலோ எதனாலோ பயணச்சீட்டு வாங்கப்பெறாமல் (தரப்பெறாமல் ) பிடிக்கப்பட்ட அத்தொகை திரும்பச் செலுத்துப்படுவதாகக் காட்டும். ஆனால், மீள் வரவு வைக்கப்பட்டிருக்காது. எனவே, பதிவேட்டு இருப்புடன் மீள்வரவையும் கணக்கிட்டால் வருவதே உண்மை இருப்பாகிறது.
685. Actual causeஉண்மையான காரணம்  

இது மற்ற தரப்பாரின் தீங்கு, சேதங்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்துவதில் ஒரு தரப்பினரின் தவறு என்பதை  மெய்ப்பிக்கும் உண்மையான ஆதாரம் அல்லது வழக்கின் உண்மைகள்.  

உரிமை வழக்கிலும் குற்ற வழக்கிலும் உண்மைக் காரணம் என்பது அடிப்படைக் கூறாகிறது.
686. Actual costஉண்மைச்  செலவு  

ஒரு பொருளை வாங்குவதற்காக அல்லது குடியிருத்தல் போன்ற ஒன்றின் பயன்பாட்டிற்காக, வாடகையாகக் கொடுக்கப்படும் பணமே செலவாகிறது.

பொருளின் விலையுடன் சரிபார்ப்பதற்குப் பணம் கொடுத்தால் அதையும் வீடு, அலுவலகம் போன்ற நமக்குத் தேவைப்படும் இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான வண்டிக்கட்டணம், கடனில் அல்லது தவணையில் வாங்கினால் நாம் கொடுக்கும் வட்டித் தொகை ஆகியனவும் சேர்ந்தே உண்மைச்  செலவு அல்லது உள்ளபடியான செலவு ஆகிறது.

அஃதாவது பொருளின் விலை அல்லது சொத்தின் விலையுடன் அதைப் பெறுவதற்கு நாம் மேற்கொள்ளும் செலவினமும் சேர்ந்ததே உண்மைச் செலவாகிறது.
687. Actual Damagesஉள்ளபடியான சேதங்கள்  

புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம், கடற்கோள் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் உண்மையான இழப்புகளைக் கணக்கிடுவது. உண்மையான சேதங்கள் என்றும் சட்டபூர்வமான இழப்பீட்டுக்குரிய சேதங்கள் என்றும் இரு வகையாகக் கூறுவர்.  

மற்றவரின் புறக்கணிப்பால் அல்லது தவறுகளால் ஏற்படும் சேதங்களையும் கணக்கில் கொள்வர்.  

நேர்ந்த இழப்பின் அளவிற்கு அல்லது தீங்கிற்கு ஏற்ப அளிக்கப்படும் ஈடு என்பதால், சட்டத்தால் வரையறுக்கப்படும் அல்லது தண்டமாக அளிக்கப்படும் இழப்பீட்டினின்றும் வேறு பட்டது.  

கேடு, குற்றம் எனக் குறிக்கும் ஏதம் என்னும் சொல்லில் இருந்து உருவான சேதம் தமிழ்ச்சொல்லே.
688. Actual Deliveryஉண்மையான வழங்கல்   

 ஒரு பொருள் ஒரு தரப்பாரிடமிருந்து மற்றொரு தரப்பாருக்குப் பருப்பொருளாக மாற்றப்படுவது உண்மையான வழங்கல் ஆகும்.  

பொருளை வாங்குநருக்கு அல்லது அவரால் ஏற்கப்பட்ட முகவருக்கு விற்பவரால் பொருள் அனுப்பப்பட்டால் அஃது உண்மையான வழங்கல் எனப்படும்.
689. Actual Evictionமெய்ந்நிலை வெளியேற்றம்  

உண்மையாக வெளியேற்றுதல்  

வாடகையர்/வாடகைக்குக் குடியிருப்பவர் அல்லது குத்தகையர் தன் பயன் உரிமை நிலம்,வீடு,கட்டடம், சொத்து போன்றவற்றில் இருந்து அகற்றப்படுதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் சட்ட முறையான செயற்பாடாகும்.
வாடகையைச் செலுத்தாத அல்லது குத்தகை ஒப்பந்தத்தை மீறும் வாடகையரை அல்லது குத்தகையரை அவர் கைக்கொண்டுள்ள(ஆக்கிரமித்துள்ள) பகுதியில் இருந்து வெளியேற்ற வீட்டு அல்லது இட உரிமையாளர் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொழுது இது நேரலாம்.

எடுத்துக்காட்டாக நில உரிமையாளர் வாடகையரை அல்லது குத்தகையரை உள்ளபடியாகவே தூக்கி எறிவதன் மூலம் அல்லது சொத்திலிருந்து அகற்றி வைப்பதன் மூலம் அல்லது பயன்படுத்தாதபடி அந்தச் சொத்தைப் பூட்டி வைப்பதன் மூலம் வெளியேற்றலாம்.
நில உரிமையாளரிடமிருந்து குத்தகையரை வெளியேற்றுவதற்கான சட்டமுறை உரிமையை மூன்றாம் தரப்பினர் பெறும்போதும், குத்தகையரை வெளியேற்றும்போதும் உண்மையான வெளியேற்றம் நிகழலாம்.


ஒரு குத்தகையர் வெளியேற்றப்பட்டால், வாடகை செலுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.


குடியிருப்பின் எந்தப் பகுதியிலிருந்தும் குத்தகையர் வெளியேற்றப்பட்டால், அவர் முழுச் சொத்தையும் திரும்பப் பெறும் வரை அவரின் வாடகைப் பொறுப்பு முற்றிலும் நின்றுவிடும்.  
690. Actual Expenditureஉண்மையான செலவு  

உண்மையாக நேரிட்ட செலவு    

உண்மையான செலவு என்பது பல பொருள்கள் உடையது.

பொது நிதிநிலை யறிக்கை கணக்கியலில் நிகர நிதி சொத்துக்களை மாற்றும் செலவு ;

ஒரு நிதியாண்டு தொடர்பில்
அந்த ஆண்டில் ஒரு செயல்பாட்டிற்காகச் செலவிடப்பட்ட தகுதியான செலவினங்களின் மொத்தத் தொகை;

நல்கைகளின்(மானியங்களின்) சூழலில் நல்கைக் காலத்தின் போது தகுதியான செயல்பாடுகளில் ஏற்படும் மொத்தச் செலவுகள்;

மொத்தச் செலவினங்களின் பின்னணியில் விற்கப்படும் மொத்தத் தொகைக்கு மாறான உண்மையில் விற்கப்படும் முடிக்கப்பட்ட பொருட்களின்/ சேவைகளின் மதிப்பு;

நிதிப் பகுப்பாய்வுச் சூழலில் ஒரு நிறுவனத்தின் நிலையான வரவு செலவுத் திட்டத்திற்கும் அதன் வருமானம் – செலவினங்களுக்கான உண்மையான புள்ளிவிவரங்களுக்கும் உள்ள வேறுபாடு.

 

Sunday, August 25, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

671. Activity, Politicalஅரசியல் செயற்பாடு  

அரசியல் கட்சியின் அல்லது அரசியல் கட்சியின்  சார்பாளனின் வெற்றி தோல்வி நோக்கிய செயற்பாடு.
672. Actori incumbit onus probandi   மெய்ப்பிப்புப் பொறுப்பு முறையீட்டாளரிடம் உள்ளது.  

வழக்கு தொடுத்தவருக்கே மெய்ப்பிக்கும் பொறுப்பு உள்ளது.  

குற்றம் நிகழ்ந்ததாக முறையிடும் வழக்காளியே அதற்கான ஆதாரத்தையும் தர வேண்டும். ஆதாரம் அளிக்கவேண்டிய சுமை, வாதியிடமே உள்ளதை இது குறிக்கிறது.  எனவே, மெய்ப்பிக்க வேண்டிய சுமை வாதிக்கு உள்ளதாகக் கூறுகிறார்கள்.   – இந்திரராசா & பிறர் எதிர் சான் ஏசுரத்தினம் வழக்கு

இலத்தீன் தொடர்
673. Acts done by several persons in furtherance of common intentionபொது எண்ண நிறைவேற்றத்திற்கான பலர் செயல்கள்  

பொது எண்ண நிறைவேற்றத்திற்காகப் பலர் செய்யும் செயல்கள்
674. Acts Done Pursuant To The Order Of  Courtநீதிமன்றத்தீர்ப்புத் தொடர்ச்சிச் செயல்கள்  

நீதிமன்றத்தீர்ப்பின் தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட செயல்கள்
675. Acts Done With Different Intentionsபல்வேறு நாட்டத்துடன் செய்யப்படுவன  

பல்வேறு நாட்டத்துடன் செய்யப்படும் செயல்கள்
676. Acts done within Indian territoryஇந்திய நிலப்பரப்பில் செய்யப்படுவன

  இந்திய நிலப்பரப்பில் செய்யப்படும் செயல்கள்
677. Acts not constituting infringementஉரிமை மீறுகை அமையாச் செயல்கள்  

உரிமை மீறலாக அமையாத செயல்கள்
678. Acts of childகுழந்தையின் செயல்கள்  

குழந்தைகள் செய்யும் சட்டத்திற்கு எதிரான செயலைக் குற்றம் என்னாது பிழைமை என்றும் அவ்வாறு பிழைமை புரிவோரைக் குற்றவாளிகள் என்னாது பிழையர்(delinquent)  என்றும் கூற வேண்டும்.

இளங்குற்றவாளி என்று சொல்லி வருவதும் தவறே. பன்னாட்டுச் சட்டத்தின்படியும் உலகளாவிய ஏற்பின்படியும் குழந்தை என்பது 18 அகவைக்குட்பட்ட பருவத்தினன் அல்லது பருவத்தினள்.

இந்தியத் தண்டிப்புத் தொகுப்பின்படியும் இளஞ்சிறார் நீதிச் சட்டம் 2000 இன்படியும்(Juvenile Justice Act, 2000) 18 அகவைக்குட்பட்ட பருவம் உடையவர் குழந்தையாவார்.

குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986 [Child Labour (Prohibition and Regulation) Act, 1986]இன் படி 14 அகவைக்குட்பட்டவர் குழந்தையாவார்.  

காண்க: Act of a child under seven years of age
679. Acts of Judicial Officersநீதித்துறை அலுவலர்களின் செயல்கள்  

சட்டப்பயன்பாடு தொடர்பாக, எளிதாக்குதல், நடுவராய்ச் செயற்படல், தலைமை தாங்கல், முடிவுகளையும் வழிகாட்டுதல்களையும் எடுத்தல் முதலியனவற்றிற்கான பொறுப்புகளை உடையவரே நீதித்துறை அலுவலர்.  

நீதித்துறை அலுவலர்கள் பாதுகாப்புச் சட்டம், (Judicial Officers Protection Act)1850, நீதித்துறை அலுவலர்களின் பணிச் செயற்பாடுகள், பணிப்பாதுகாப்புகள் முதலியன குறித்து விளக்குகின்றது.
680. Acts of waste
கழிவுச் செயல்கள்
 
கழிவு தொடர்பான செயல்கள்
 
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ( he Environment Protection Act)1986,  கழிவுகளை அகற்றல் குறித்துக் கூறுகிறது.

Thursday, August 22, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

661. Active Confidence  செயலுறு நம்பிக்கை  

முனைப்பான நம்பிக்கை  

செயற்திறமுடைய  நம்பகத்தன்மை  

ஒரு நம்பிக்கை எப்பொழுது முனைப்பாக அல்லது தீவிரமாக இருக்கும்? அது நடைமுறையில் – செயற்பாட்டில் இருக்கும் பொழுதுதானே. எனவேதான் செயலுறு நம்பிக்கை எனலாம்.  

நம்பிக்கை என்பது பேச்சளவில் அல்லது ஏட்டளவில் இல்லாமல் செயலில் – செயற்பாட்டில் – உள்ளமையைக் குறிப்பது. இந்தியச் சான்றுகள் சட்டம், 1872 இன் பிரிவு 111 இல் பயன்படுத்தப்படும்  கூட்டுச் சொல்லாகும்.  

ஒரு தரப்பினர் பரிமாற்றத்தில் செயலுறு நம்பிக்கையில் இருக்கும் பொழுது, நன்னம்பிக்கையை மெய்ப்பிப்பதைக் குறிக்கிறது. இதன் மூலம்  ஒரு தரப்பார் மற்றொரு தரப்பாரின் நலன்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர் என்றும் இதுவே இரு தரப்பாரின் உறவுமுறைக்கு அடிப்படை என்றும் புரிந்து கொள்ளலாம்.

பரிமாற்றம் என்பது இரு தரப்பாரிடையே நிகழும் வணிக நடவடிக்கை.  

வழக்கிடுநர், விற்பனையின் நன்னம்பிக்கையின் மீது வழக்குரைஞர் மீது வழக்கு தொடுத்தால், பரிவர்த்தனையின் நன்னம்பிக்கையை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு வழக்குரைஞருடையது.  

பிணைப்பு நலன்களைத் தீர்மானிப்பதற்குரிய குறிப்பு அல்லது செயலுறு நம்பிக்கைக்குள் வருவது என்பது வழக்கிற்கு வழக்கு மாறுபடும் தன்மையுடையது.  
662. Active debtநடப்புக் கடன்  

வட்டி வரும் கடன்  

தீர்வு செய்யப்படாத நடப்பிலுள்ள கடன்  
663. Active Memberசெயல்நிலை உறுப்பினர்  

முனைப்புடன் செயல்படுவதால் முனைப்பான உறுப்பினர் என்கின்றனர்.  அதைவிடச் செயல்பாட்டு நிலையிலேயே உள்ளதால் செயல்நிலை உறுப்பினர் என்பது ஏற்றதாக இருக்கும்.  

ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள உறுப்பினரையும் இவ்வாறு குறிப்பர். 
 
664. Actual occupancyகுடியிருக்கை உடைமையாட்சி  

வளாகத்தில் அல்லது மனையில் அல்லது கட்டடத்தில் முழுமையாக அல்லது பகுதியாக  வாடகை அல்லது குத்தகை அடிப்படையில்  வைத்திருத்தல் அல்லது குடியிருத்தல்.
665. Active Partnerசெயற்கூட்டாளி  

தொழில்முறைக் கூட்டாளி,

செயல்நிறைக் கூட்டாளி, ஈடுபாட்டுப் பங்காண்மையர், முனைப்புக் கூட்டாளி என்றும் கூறப்படுகின்றன. 

  பங்காண்மையில் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் முதலீட்டாளரே செயற் கூட்டாளியாவார்.  

தொழிலில் அல்லது வணிகத்தில் வருவாயைப் பெருக்கப் பெயரளவிற்கு முதலீடு செலுத்திவிட்டு அமைதியாக இராமல் நாளும் உழைப்பவராக உள்ளார். ஆதலின், மேற்குறித்தவாறெல்லாம் கூறப்படுகின்றார்.
666. Active serviceமுனைப்பான சேவை  

முழுமையான பணி

தொழிலிடத்தில் அல்லது பணியிடத்தில் தன் முழுமையான பணிகளையும் செவ்வனே ஆற்றும் பாதுகாக்கப்பட்ட பணியாளரின் பணியாகும்.  

பணிக்கால ஊழியம்

ஓய்வூதியச் சட்டம் 10.01.இன் கீழ், உட்பணி அயற்பணிகளில் ஏற்கப்பட்ட விடுப்பு நீங்கலான, உண்மையான உறுதியான பணி.  

ஈடுபாட்டு ஊழியம்

நிதிச் சட்டம் 2012 இல், முதன்முறையாக “சேவை” என்பது சட்ட முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிவு 65ஆ(44) இன்படி, ஒருவர் மற்றவருக்காக விளம்பரத்திற்காக அல்லாமல் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளும்  தொண்டு ஊழியம் ஆகும்.   ஈடுபாட்டுப் படைப்பணி   பொதுவாக  service என்பது படைப்பணியைக் குறிக்கிறது.   படைப்பணிக்காலத்தில் போரில் ஈடுபட்டிருந்தால் ஈடுபாட்டுப் படைப்பணி எனப்படுகிறது.
667. Active Titleசெயல்பாட்டுரிமை  

பொதுவாக மனைவணிகத்தில்(real Estate) செயல்பாட்டுரிமை என்பது மிகுதியாகப் பயன்படுத்தப் படுகிறது.  

உரிமையாளர் வேறொருவராகவும் அவர் சார்பில் அதனைச் செயல்படுத்துநர் மற்றொருவராகவும் உள்ள பொழுது மற்றொருவர் செயல்பாட்டுரிமையாளராக அறியப்படுகிறார்.
668. Activismசெயல்முனைவு

ஈடுபாட்டியம்  

நேரடியான தீவிரமான செயலை வலியுறுத்தும் ஒரு கோட்பாடு அல்லது நடைமுறை.

குறிப்பாக ஒரு சிக்கலில் தான் சார்ந்த கட்சி அல்லது அமைப்பின் முடிவிற்கு ஏற்ப, ஒரு புற ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை எடுத்து அதற்காக அமைப்பு கூறுவதற்கேற்பப் பரப்புரை மேற்கொள்பவர் அல்லது போராடுபவர்.
669. Activistசெயல்வீரர்  

ஒரு குழுவின் உறுப்பினராக இருந்து  அரசியல் அல்லது குமுக மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்; செயல்வீரர்.

செயலூக்கத்தை ஆதரிப்பவர் அல்லது நடைமுறைப்படுத்துபவர்: கருத்து மோதலுக்குரிய சிக்கலில் ஒரு பக்கத்திற்கு ஆதரவாக அல்லது எதிர்ப்பாக வலுவான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்; முனைப்பான ஈடுபாட்டாளர்.  

தான் சார்ந்த அமைப்பின் சார்பில் ஊர்வலங்கள், கிளர்ச்சிகள், மறியல்கள், கதவடைப்புகள், மனிதச் சங்கிலி போன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்.
670. Activityநடவடிக்கை  

செய்கைப்பாடு  

ஒன்றை நிகழ்விக்க அல்லது ஒரு நிலைமையைக் கையாள மேற்கொள்ளும் செயல்.   நலனுக்காகவோ மகிழ்ச்சிசக்காகவோ குறிப்பிட்ட நோக்கத்தை எய்துவதற்காகவோ செய்யப்படும் செயல்.  

Followers

Blog Archive