06 August 2025 அகரமுதல
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – தொடர்ச்சி)
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5
வரி வடிமைப்பியல் தமிழைப்போலவே கன்னடத்திலும் உள்ளமை
தமிழ்மொழியின் வடிவமைப்பு முறையையே(ORTHOGRAPHY) இந்தியமொழிகள் அனைத்தும் பெற்றுள்ளன! அஃதாவது, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பேசப்படும் மொழிகள் அனைத்திற்கும், மொழி-வடிவமைப்பு என்னும் எழுத்தியல் முறை முற்றிலும் தமிழ் மொழியின் மொழி-வடிவமைப்பு முறையைப் பின்பற்றியே அமைந்துள்ளது. அவ்வாறிருக்கும் பொழுது கன்னட மொழிக்கான எழுத்தமைப்பு முறையும் தமிழ் வரிவடிவ முறைமையைப் பின்பற்றியே உள்ளது என்பது வியப்பல்ல. எனவேதான், தமிழ்த்தாயின் நெடுங்கணக்கு போன்றே கன்னடச் சேயிலும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய்யெழுத்துகள் அமைந்துள்ளன.
கவிராச மார்க்கத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு
மேலே கன்னடத்தின் முதல் நூலாகக் குறிக்கப்பெற்ற ஒன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த கவிராச மார்க்கம் என்பது இராட்டிரகூட மன்னன் நிருபதுங்க அமோகவர்சனின் படைப்பு. இதனை அவனது அவைக்களப் புலவரின் படைப்பாகவும் கூறுகின்றனர். இது கன்னட மொழியின் வளர்ச்சி, இலக்கிய இலக்கண மரபுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இதன் தமிழாக்கம், தண்.கி. வேங்கடாசலம் அவர்களால் எழுதப்பெற்று 2000 இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பெற்றது. முதல் நூல் என்று கருதும் வகையில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர். இந்நூல் அவர் காலமான பின்புதான் வெளிவந்தது.
உண்மையைச் சொன்ன கமலை எதிர்ப்பது ஏன்?
ஆனால், மக்கள் நீதி மையத் தலைவர் கமல் கன்னட மொழியினருடனான நெருக்கத்தைக் காட்டுவதற்காகக் கன்னடத்தின் தாய் தமிழ் என்றதற்குக் கன்னடர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலைத்துறையினர், அரசியல்துறையினர், நீதித்துறையினர் என அனைத்துத் தரப்பாரும் எதிர்க்கின்றனர். ஆராய்ச்சி முறையில் விடையிறுக்காமல் வெறுப்பு நோக்கில் கண்டிக்கின்றனர். இதற்குக் காரணம், தமிழின் தாய்மை குறித்த பாடங்களை இந்திய மொழிகளில் வைக்காமைதான். இந்நேர்வில் நாம் கமலைப் பாராட்ட வேண்டும். பொதுவாக எதையாவது சொல்லிவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் நான் அந்தப்பொருளில் சொல்லவில்லை. இதனால் யாரும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மழுப்புவார்கள். அவ்வாறில்லாமல் தான் உண்மையைத்தான் சொன்னேன் என்று உறுதியாக உள்ளமைக்கே பாராட்டு.
தமிழ்நாட்டில் உள்ள தமிழிசை போன்றவர்களே அரசியலுக்காக உண்மையை மறைத்துத் தவறாகத் தெரிவிக்கும் பொழுது உண்மையை உரைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
பி.ஒ.நி.(பி.பி.சி.) இணையத் தளத்தில் முரளிதரன் காசி விசுவநாதன், செவ்வியாகக், “கமல் சொல்வதுபோல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா?” என ஒரு படைப்பு வந்துள்ளது(04.06.2025). அதில் அவர்,
செக்கு நாட்டைச் சேர்ந்த இந்திய மொழியியல் அறிஞரான கமில் சுவலபில், தன்னுடைய The Smile of Murugan நூலில் “தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில்” என்று குறிப்பிடுகிறார். இச் சொற்தொடர் மட்டுமே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற பொருளைத் தருகிறது. ஆனால் தமிழைத் தவிர, பிற முக்கியமான திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் தொடக்கக் கால இலக்கியங்கள் வேறு ஏதோ மொழியில் இருக்கும் இலக்கியங்களைப் படி செய்தவை அல்லது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டவை என்கிறார் அவர். அந்த ஏதோ மொழிதான் தமிழ்மொழி என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்ட கன்னடம்
ஆர். நரசிம்மாச்சார்யா எழுதிய கன்னட மொழியின் வரலாறு (History of Kannada Language) என்ற நூல், அந்த மொழியின் தோற்றம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னட மொழி தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்டது என்று குறிப்பிடுகிறது.
தமிழ், கன்னடத்திற்குத் தமக்கை மொழியா? தாய் மொழியா?
… தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி தமிழ்தான் என்கிறார் தேசிய நாட்டுப்புற ஆதரவு மைய இயக்குநர் எம்.டி. முத்துக்குமாரசாமி. ஆகவே இப்போதைய கேள்வி, தமிழ் கன்னடத்துக்கு அக்காவா, அம்மாவா என்பதுதான். அக்கா என்றால் எல்லாரும் ஏற்கிறார்கள். ஆனால், இந்த அக்கா மொழி, அம்மா அளவுக்கு மூத்த மொழி என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது,” என்றும் அவர் விவரித்தார். தத்தம் மொழியில் இருந்துதான் தமிழ் பிறந்ததாகப் பொய்யான செய்தியைப் பரப்புவோர் சிலர் இருந்தாலும் தமிழ்த்தாய்மையை ஏற்க மனமின்றி அதன்முன்மையை ஒப்புக்கொண்டு மூத்த உடன்பிறப்பு மொழியாகக் கூறும் பிற மொழியாளர்களும் உள்ளனர்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௩ – 423)
என நாம் நுணுகி ஆராய்ந்து பார்த்தால் தமிழே கன்னடம் முதலான மொழிகளின் தாய் என்பதை நன்கு தெளியலாம். தாய் மகளைப்போல் இளமையாகவும் அழகாகவும் பொலிவாகவும் இருந்தால் பார்ப்பவர்கள் இருவரும் அக்கா தங்கை போல் இருப்பதாகக் கூறுவர். அதனால் தாய் அக்காவாகிவிட முடியாது. தாய் தாய்தான். அதுபோல்தான் இளமைச் செழிப்புடன் உள்ள தமிழ் தமக்கைபோல் தோன்றினாலும் தாய்தான்.
தமிழ் மரபுகளைக் கூறும் கவிராச மார்க்கம்
தமிழ்க் குடும்ப மொழிகளின் தாய்மொழி தமிழ் என்று மொழி வல்லுநர்கள் மட்டும் சொல்லவில்லை. இந்திய மற்றும் உலக அகழ்வாராய்ச்சி வல்லுநர்களும் கல்வெட்டு ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். தமிழ் மொழிக்குடும்பத்தின் தாய்மொழி மட்டுமல்ல உலக மொழிகளின் தாய்மொழியும் தமிழ் தான் என்பதை நிறுவியிருக்கிறார்கள்.
இந்தியாவில் அகழ்வில் கிடைத்த பொருள்களில் உள்ள எழுத்துகளில் தொன்மையானதும் அதிகம் கிடைத்திருக்கும் எழுத்துகளும் தமிழே! என்கிறார் ஆய்வறிஞர் அ.அரசேந்திரன்.
கன்னடத்தின் முதல் நூலாகக் கவிராச மார்க்கம் இருக்கும்போது கன்னடத்திற்கான பண்டை இலக்கண மரபுகள் இருக்க முடியாது. எனவே, தமிழ் மரபுகளைப்பற்றியே நூலாசிரியர் கூறுகிறார். எனவேதான் சமற்கிருத மரபைப் பின்பற்றலாம், ஆனால் சமற்கிருதச்சொற்களைக் கலக்கக் கூடாது என்கிறார்.
இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி: இனிய உதயம், ஆகட்டு 2025
(தொடரும்)