Wednesday, May 15, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 : இலக்குவனார் திருவள்ளுவன்

 



(சட்டச் சொற்கள் விளக்கம் 281-285 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

286. Academic course  கல்விசார் பாடப்பிரிவு  

பாடநூற் கல்வி,

செயல்முறை சாராப் படிப்பு

பாடநூல்களின் மூலம் மட்டுமல்லாமல் பாடத்திட்டம் சார்ந்த செயல் முறை மூலமும் கற்பிக்கப்படுவதே செயல்முறைக் கல்வி. பாடநூல்களை மட்டும் அடிப்படையாகக்  கொண்டு கற்பிக்கப்படுவது பாடநூற்கல்வி்.  
287. Academic experienceகல்விப் பட்டறிவு  

கல்விப் பணியறிவு  

கல்வி வாழ்க்கை தொடர்பான  மாணவர் பெறும் பட்டறிவும் கல்வித்துறையில் பயிற்றுவிப்பில் பணியாற்றுநர் பெறும் பணியறிவும்.
288. Academic laurelsகல்வி விருது  

கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தால் உயர்ந்த முறையில் படிப்பை முடித்து வாகை சூடியமைக்காக   வழங்கப்பெறும் விருது.
Academic sessionகல்வி அமர்வு  

கல்விப்பருவம்  

நாட்காலம் எனில் வகுப்புகளை நடத்தும் நேரம்.  

குறிப்பிட்ட கால அளவைக் குறிக்கையில் கோடைப்பருவம், குளிர் பருவம்  என்பதுபோல் கல்விப்பருவம் எனப்படும்.
Academic staffகல்விப் பணியாளர்கள்  

கல்வித்திட்டத்துடன் தொடர்புடையவர்கள்.

(தொடரும்)

Sunday, May 12, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 281-285 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

281. Abutmentமுட்டிடம்  

 உதைவு  

இரண்டு உடைமைகளின் முட்டிடம்.  

அணைக்கட்டுக் கட்டமைப்பின் இரு முனைகளிலும் இருக்கும் இயற்கை நிலப்பரப்பைக் குறிக்கிறது.   உதைமானம் என்றால் முட்டு எனப்பொருள். அதனடிப்படையில் உதைவு எனப்படுகிறது.
282. Abuttals  தொடு எல்லை  

தொட்டடுத்த பகுதி  

நிலப்பகுதிகளைத் தொடும் நிலத்தின் எல்லைப் பகுதிகள்.   [இந்திய மீன்பிடி சட்டம், 1897,  பிரிவு 4(2)(Section 4(2) in The Indian Fisheries Act, 1897)]
283. Academic  கல்விபற்றிய    

செயல்முறை சாராத

கல்வி சார்ந்த  

கல்விப் பயிற்சி சார்ந்த; பள்ளி/ பல்கலைக்கழகக் கல்வி சார்ந்த.  

கல்வி என்பது பள்ளிகள், கல்லூரிகள், கல்வியகங்களில் செயல்முறையைக் காட்டிலும் ஏட்டளவிலான படிப்பு தொடர்பானவற்றைக் குறிப்பிடுகிறது.

செயல்முறை சாராத படிப்பே கல்வி என்பர். ஆனால், செயல்முறைப்படிப்பும் கல்விதானே.  

பிளேட்டோ கற்பித்த இடம் அதன் உரிமையாளரான அக்காடமசு என்ற கிரேக்க வீரனுடைய பெயரில் Akadēmía என அழைக்கப்பெற்றது. இக் கிரேக்கச் சொல்லில் இருந்து academic, academy சொற்கள் உருவாயின. இச்சொல் கற்பிக்கும் இடத்தையும், பிளேட்டோவின் கோட்பாட்டினரையும் குறிக்கிறது.
284. Academic  qualificationகல்வித் தகுதி  

கல்வியில் பெறும் தேர்ச்சி, பட்டம், சிறப்பு நிலை முதலியன.
285. Academic council    கல்விக்குழு  

பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த கல்விஅமைப்பு.

பல்கலைக்கழகத்திற்குள் பயிற்றுவித்தல், பாடத்திட்டம், கல்வி முறை, தேர்வுத்திட்டம், தேர்வுத்தரம், முதலிய கல்வி தொடர்பானவற்றைப்  பேணவும் தொடர்பான நெறியுரை வழங்கவும் உள்ள அமைப்பாகும்.

(தொடரும்)

Wednesday, May 8, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

276.
Abuse of process
சட்டநடவடிக்கை முறைகேடு  

சட்ட நடவடிக்கையைத் தீய எண்ணத்துடனோ தவறான நோக்கத்துடனோ தவறாகவோ பயன்படுத்துதல்.  

சட்ட நடவடிக்கைகளில் முறைகேடு நிகழாமல் இருக்க முறை மன்றங்கள் கருத்து செலுத்துகின்றன. சட்ட நடைமுறைத் தகாப்பாட்டைத் தடுப்பதற்காக அல்லது நீதிமுறையின் நோக்கங்களைப் பாதுகாக்க மட்டுமே முறைமன்றம் மு.த.அ.(முதல் தகவல் அறிக்கையை) -ஐ இல்லாமல் ஆக்கலாம். குற்றமற்ற ஒருவர் தேவையின்றி வழக்கிற்கு உள்ளானால் அல்லது சரியான ஏதுக்கள் இன்றி உசாவல் தொடங்கப்பெற்றால் மு.த.அ. இன்மையாக்கப்படலாம்.  

சட்டச் செயல்நிலைத் தவறாடல்  
சட்ட நடவடிக்கைத் தவறாடல்  
நீதிக்கட்டளை முறைகேடு  

வழக்கின் ஒரு தரப்பார், நேர்மையற்ற முறையில் எதிர்த் தரப்பாரைவிட நன்மையடையும் பொருட்டு நீதிமன்றத்தின் ஆணையைத் தவறாகப் பயன்படுத்துகை; சட்ட நடவடிக்கையைத் தன்னலம்கருதி  முறைகேடாகப் பயன்படுத்துகை.
277.
Abuse of the process of court
நீதிமுறைக்‌ கட்டளையைத் தவறாகப்‌ பயன்படுத்‌துதல்‌/ முறைகெட்டவகையில்‌ பயன்‌படுத்துதல்‌  

முறைமன்றச் செயல்முறை முறைகேடு
நீதிமன்றச் செயல்முறை முறைகேடு  

காண்க: Abuse of process 
 
278. Abusing his position  பதவியைத் தவறாகப் பயன்படுத்தல்  

தன் பணிநிலையைப் பயன்படுத்தி,   அடுத்தவரின் நிதி நலன்களைப் பாதுகாப்பார் அல்லது அவற்றுக்கு எதிராகச் செயல்படமாட்டார்  

தான் பொறுப்பு வகிக்கும் பதவி நிலையினைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ஆதாயம் அடைந்தாலோ பிறருக்கு இழப்பினை ஏற்படுத்தினாலோ அதுவும் குற்றமே ஆகும்.  

காண்க: abuse of power
279. abusive languageவசைமொழி    

ஒருவரின் அல்லது அவர்சார்ந்த ஒன்றின் கண்ணியத்தை இழிவு படுத்தும் வகையில், கடுமையான, வன்முறையான, அவதூறான, இழிவான, ஏளனமான, இகழ்ச்சியான முறையில் தூற்றுதல்.  

இனம்,பாலினம், நிறம், தோற்றம், சமயம், கட்சி, அமைப்பு ஆகியற்றின் மீதான இழிந்த  ஏச்சுரைகளும் அடங்கும்.  

காண்க  : Abuse
280. Abut    அடுத்துள்ள   எல்லையோடு எல்லை ஒட்டியிரு  

சொத்துச்சட்டம் நில உடைமையாளர்களின்  அடுத்துள்ள எல்லை உரிமை குறித்து குறிப்பிடுகிறது.  

பொதுச்சட்டதின் கீழ்ப் பொதுச்சாலை அல்லது நடைபாதை ஒட்டியுள்ள சொத்துரிமையாளர்கள்  அவற்றைப் பாதுகாக்க வைக்க வேண்டிய கடப்பாடு உள்ளவர்கள் அல்லர்.  

சில அகராதிகளில் ‘அண்டைக்கட்டு’ எனக் குறிப்பிடப்படுகிறது. அண்டை கட்டு என்பது, ஓருறுப்பில் உண்டான கட்டி அல்லது காயத்தின் விளைவாக மற்றோருறுப்பில், பொதுவாகக் கமுக்கூட்டில் அல்லது கீழ்முதுகுப்பகுதியில் அல்லது வீக்கம் தோன்றுதலைக்குறிக்கும் நோயாகாகும்.  எனவே, இங்கே பயன்படுத்த வேண்டா.

(தொடரும்)

Sunday, May 5, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

271.
abuse of discretion
உளத்தேர்வின் பிழைபாடு     
முடிவெடுப்பதற்கு உளத்தேர்வைத் தவறாகப் பயன்படுத்தலை இது குறிக்கிறது.    
குற்ற வழக்கிலும் உரிமை வழக்கிலும் கீழமைவு மன்றங்களின் முடிவுகளை மறு ஆய்வு செய்கையில் மேல்முறையீட்டுமன்றம், உளத்தேர்வு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக என ஆராயும்.  
discretion  – விருப்புரிமை என்றுதான் சொல்லிவந்தனர். அவ்வாறாயின் விருப்பு வெறுப்பிற்கேற்ப எடுக்கும் முடிவு எனப் பொருளாகிறது. எனவே, அவரது மனம் தேர்ந்து எடுக்கும் முடிவு என்னும் பொருளில் மனத்தேர்வு அல்லது உளத்தேர்வு என்பது சரியாக இருக்கும்.
272.
abuse of distress
தீங்கிட்டுப் பயன்கேடு  
கைப்பற்றல் பயன்கேடு  
ஒருவருக்கு ஏற்படட துயரச் சூழலைத் தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைதல்.
  கால்நடை அல்லது பிற உடைமைப் பொருள்களைக் கைப்பற்றியவர், அவற்றைத் தவறான நோக்கில் பயன்படுத்தல்.
273. abuse of jurisdiction  பணிமைப் பிழைபாடு  
பணிமை முறைகேடு
பணிவரம்பைத் தவறாகப் பயன்படுத்தலைக் குறிக்கிறது.  

 பணியாண்மை அதிகாரம், நேர்மையாகவும் கொடுக்கப்படட நோக்கத்திற்கான நன்னம்பிக்கையுடனும் செயற்படுத்தப் பட வேண்டும். எனவே, அதிகார மீறல் அல்லது பணிமைப் பிழைபாடு இருப்பின் நீதித்துறையின் மறு ஆய்விற்கு உட்படுத்தப்படும்
274.
abuse of monopoly of patent
தனிக்காப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்தல்

  முற்றுரிமைக் காப்புரிமையத் தவறாகப் பயன்படுத்தல்  

  புதுப்புனைவுரிமை அல்லது காப்புரிமை பெற்ற பின் போதிய பயன்பாடு அல்லது பயன்பாடு இல்லாமல் செய்தல்.
275.
abuse of power
அதிகாரப்   பிழைபாடு  
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்

  பதவிநிலையில் உள்ள அதிகாரத்தைத் தனக்கு அல்லது தன்னைச்சார்ந்தவர்க்கு அல்லது இரு நிலையிலும் ஆதாயம் கிடைக்கும் வண்ணம் முறைகேடாகப் பயன்படுத்துதல்.

(தொடரும்)

Wednesday, May 1, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

266. Abundanceமிகுதி
  ஏராளம்
பேரளவு   எ.கா. இம்மன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.   குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் இதற்கு முன்பே மிகுதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்.
267.
Abundant
ஏராளமான  
மிகுதியான
பேரளவான  
மிக அதிகமான அல்லது மிகையான அளவில் வழங்குதல்.

செழிப்பையும் குறிக்கிறது.
268.
Abundant caution
மிகு எச்சரிக்கை  
எ.கா. : உணர்வு பூர்வமான இவ்வழக்கை நீதிமன்றம் மிகு எச்சரிக்கையுடன் அணுகியுள்ளது.    
மிகு எச்சரிக்கையுடன் விமானத்தைச் சிறிது நேரம் தரையிறக்குவதாக விமானப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
269. Abuseஅடா மொழி    
வசை மொழி ;
திட்டுகிற / பழி தூற்றுகிற மொழி ;
அதிகார முறைகேடு
அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்துதல்;
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ;
அதிகார வன்முறை
இடுக்கண் சூழலைத் தவறாகப் பயன்படுத்தல்;
கெடுநிலை கைப்பற்றல்; கெடுநிலை நெறி கேடு;
இழிவாக, தவறாகப் பயன்படுத்து, முறையற்றுப் பயன்படுத்து, தகாதமுறையில் செய், வசை ;

உளத்தேர்வைத் தவறாகப் பயன்படுத்துதல்; ஏகபோக உரிமையைத் தவறாகப் பயன்படுத்துதல்; நீதிநெறியைத் தவறாகப் பயன்படுத்தல்; செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்தல்;  சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தல்;

ஏசு ; நிந்தி ; கொடுமைப் படுத்து;. கைப்பற்றல்; வசைபாடு;

தமது பதவி நிலையைத் தவறாகப் பயன்படுத்துதல்; பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல்; தீங்கீட்டுப்‌ பயன்கேடு

தூற்று; நிந்தை, பழிச்சொல், நெறிதவறுதல்‌; முறையற்ற அதிகாரப் பயன்பாடு வசவு; ஏச்சு   ஒருவரையோ விலங்கையோ உடல் நிலையில் அல்லது உள்ளநிலையில் அல்லது இரண்டு நிலையிலும், அல்லது பாலியல் முறையில் தவறாக அல்லது முறைகேடாகப் பயன்படுத்தலைக் குறிப்பிடுகிறது.  

 ஒருவர் மீதான ஒழுங்கீனமான செயல், கொடூரமான செயல், வன்முறைச் செயல்,பாலியல் தாக்குதல் முதலிய முறையற்ற செயல்களையும் குறிக்கிறது.  

மனைவி, குழந்தை, முதிய பெற்றோர், பேணவேண்டிய பொறுப்பிற்குரியவர் போன்ற உறவுமுறையில் சிறப்புப் பொறுப்பு உள்ள ஒருவரைத் தவறாக நடத்துவது அல்லது புறக்கணிப்பது நெறிகேடாகும்.        
     ஒரு பொருளைச் சட்டத்திற்கு மாறான முறையில் அல்லது நியாயமற்ற முறையில் பயன்படுத்துவது முறையற்றப் பயன்பாடாகும்.  

மெய், மன அல்லது பாலியல் ஊறு நேரும் வகையில் உடல், உள்ளத் தவறான பண்டுவம்(சிகிச்சை) பார்ப்பது முறைகேடான செயலாகும்.  

மனைவி, குழந்தை, முதிய பெற்றோர், பேணவேண்டிய பொறுப்பிற்குரியவர் போன்ற உறவுமுறையில் சிறப்புப் பொறுப்பு உள்ள ஒருவரைத் தவறாக நடத்துவது அல்லது புறக்கணிப்பது நெறிகேடாகும்.          
ஒரு பொருளைச் சட்டத்திற்கு மாறான முறையில் அல்லது நியாயமற்ற முறையில் பயன்படுத்துவது முறையற்றப் பயன்பாடாகும்.  
  குழந்தைத் தகாப்பாடு –  சிறுவர் சிறுமியரைத் தகாப்பயன்பாட்டில் ஈடுபடுத்தல்.
  சிறார் மீது தவறான பாலியல் பயன்பாட்டைக் கொள்ளல் முதலான  வேண்டுமென்றே அல்லது கவனிப்பற்ற(புறக்கணிப்பிலான) தகாப்பாடு குழந்தைத் தகாப்பாடு ஆகும்.  
பெற்றோர் அல்லது பேணாளர் வேண்டுமென்றே அல்லது புறக்கணிப்புச் செயல் அல்லது உரியவாறு செயல்படத்தவறுதல் குழந்தையின் தகாப்பயன்பாடு, சீரழிவு அல்லது இறப்பினை விளைவிக்கும்.   
செயல் அல்லது செய்தக்க செய்யாமை, குழந்தைக்கு உடனடியான கடுமையான தீங்கினை விளைவிக்கும்.    
மூத்தவர்களைத்  தகாப்பாட்டிற்கு ஆளாக்குதல் என்பதில், அவரது அல்லது அவளது பிள்ளைகள் அல்லது பேணுநர் தாக்குதல், ஏச்சு, தனிமைப்படுத்தல் உணவு தராமை அல்லது போதிய உணவுதராமை முதலியனவற்றிற்கு உள்ளாக்கவதும் அடங்கும்.  

பாலியல் முறைகேடு 1. சட்ட முரணான பாலியல் செயல். 2. ஒருவரின் இசைவுடன் அல்லது இசைவின்றி அவருடன் சட்ட முரணான பாலியல் செயற்பாட்டில் ஈடுபடல். இச்செயற்பாடு அல்லது தொடர்பு என்பது வலிமையைப் பயன்படுத்தி அல்லது வன்முறை அச்சுறுத்தல் மூலம் திணிக்கப்படுவது ; இத்தொடர் மாறுபடும். ஆனால், இச்செயற்பாடு அல்லது தொடர்பு, பொதுவாகக் கற்பழிப்பாக இல்லாமல், சில நேரங்களில் கற்பழிப்பையும் உள்ளடக்கியதே. உடலின்பத் தகாப்பாடு, பாலியல் தகாப்பாடு,  என்றும் இஃது அழைக்கப் பெறும்.  

வாழ்க்கைத்துணைத்தகாப்பாடு: வாழ்க்கைத் துணைவன் அல்லது துணைவியால் ஏற்படும் தகாப்பாட்டைக் குறிக்கிறது.
270.
abuse of authority
அதிகார முறைகேடு  
அரசில், முகமையில், நிறுவனத்தில், பொது அமைப்பில், அல்லது பிற அதிகார மையத்தில் தனக்குள்ள அதிகாரத்தை அல்லது தன் பொறுப்பின் மூலம் பெறும் அதிகாரத்தைத் தன்னலம் கருதியோ, தன்னைச் சார்ந்தவர் நலன் கருதியோ, ஆதாயத்திற்காகவோ, பிறருக்குத் தொல்லை தருவதற்காகவோ, பிறரைப் பழி வாங்கவோ அச்சுறுத்தியோ மிரட்டியோ வற்புறுத்தியோ அலுவல் கடமைகளில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்தோ சட்டத்தின்படியான செயலைச் செய்யாமலோ முறை தவறிப் பயன்படுத்துவதாகும்.  

அதிகார முறைகேடு ஊழலுக்கு வழி வகுக்கிறது.

(தொடரும்)

முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும் இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்! – இலக்குவனார்திருவள்ளுவன்

 


முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும்

இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்!

நரேந்திரர், அமித்து சா, ஒன்றிய அரசு வெளிப்படுத்தும் இந்தி, சமற்கிருதத் திணிப்பு தொடர்பான பேச்சு, தீர்மானம், நடவடிக்கை முதலியவற்றிற்கு மு.க.தாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமற்கிருதத் திணிப்பிற்கு வழிகோல



வே இந்தித்திணிப்பு நடைபெறுவதாகக் கூறி வருகிறார். இவற்றின் மூலம் ஒரே நாடு, ஒரே மொழி என்ற நிலைப்பாட்டைக் கொணர்ந்து மக்கள்நாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் நாட்டுத் தொண்டு சங்கம்/ இரா.சே.சங்கத்தின் செயற்திட்டத்தைப் பாசக நிறைவேற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். அண்மையில் வானொலியில் ஆகாசுவாணியைத்  திணித்த பொழுதும் தொலைக்காட்சியின் முத்திரையில் திணித்தக் காவி நிறம் குறித்தும் கடுமையாய்க் கண்டித்திருக்கிறார்.

பாராட்டப்பட வேண்டிய செய்தி. தமிழ் மக்களை அழிவிலிருந்து காக்க இந்தி, சமற்கிருதத் திணிப்புகளை அடியோடு நிறுத்தல் வேண்டும். விருப்பம் என்ற போர்வையில் வேறு வாய்ப்பு இன்றித் திணிக்கப்படுகின்றன இம்மொழிகள்.

அதே நேரம் பிறர் முதுகின் அழுக்கைக் குறை கூறும் நாம் நம் கைகளில் உள்ள அழுக்குகளை முதலில் துடைக்க வேண்டுமல்லவா? தமிழ்நாட்டரசு வெவ்வேறு வகைகளில் இந்தித் திணிப்பிற்கு உடந்தையாக இருப்பது அனைவரும் அறிந்ததே! அரசிற்கு இது தெரியாதா என்ன?

அரசின் 31,336 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் எண்ணிக்கை 25,50,997. தமிழ் நாட்டிலுள்ள 4,498 பதின்பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலை மாணாக்கர் எண்ணிக்கை 30,60,601. இந்தி திணிக்கப்படுவோர் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. இங்கே இள மழலை(U.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி கற்றுத் தரப்படுகிறது. யாரும் விரும்பிச் சேருவதில்லை. பதின்நிலைப்பள்ளியில் பெற்றோர் விருப்பத்திற்காகச் சேர்க்கப் படுகிறார்கள். இந்தி மழலை நெஞ்சிலேயே பாய்ச்சப்படுகிறது. மாநிலக் கல்விமுறையிலேதான் பதின்நிலைப்பள்ளிகளும் வருகின்றன. தமிழ்நாடு அரசுதான் இசைவு தருகிறது. இவர்களுக்கு இந்தி திணிக்கப்படுவது ஏன்?

தமிழ்நாட்டிலுள்ள மத்தியக்கல்வி வாரியப் பள்ளிகளின் (CBSC Schools) எண்ணிக்கை 944. 2010 இல் இக்கல்வி முறையில் 250 பள்ளிகள்தாம் இருந்தன. எனவே, இப்பொழுது நான்கு மடங்கு தமிழைப் புறக்கணிக்கும் இந்திப்பள்ளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டன எனலாம். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த மரு.தமிழிசை அனைத்து அரசு கல்வி முறையையும் மத்திய வாரியத்திற்கு மாற்றி விட்டதால் அங்கே  மக்களாட்சி குழிதோண்டி புதைக்கப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு விட்டது. இவ்வாறாக இந்தி பயிலும் இன்றைய தலைமுறை மாணாக்கரின்  பிள்ளைகளின் தாய்மொழி இந்தியாக மாற்றப்படுகிறது. எனவே  அதற்கு அடுத்த தலைமுறையினர் இந்தி மக்கள் ஆகிவிடுவர். எனவே கல்வித் திட்டம் மூலம் இந்தி திணிக்கப்படுவதை முதல்வர் தாலின் உடனே நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டரசின் கல்வித்துறையிலேயே இந்தி கோலோச்சுவதை முன்பே சுட்டிக் காட்டியுள்ளோம். கல்வித்துறையில் இந்தி வடிவச் சமற்கிருதப் பெயர்களை Samagra Shiksha, Sarva Shiksha Abhiyan (SSA), Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA), என ஒலி பெயர்ப்பில் குறிப்பிடு கின்றனர்.  (தமிழ் எழுத்துகளில் குறிக்கக் காணோம்).  ‘நம்ம school’ / Namma School Foundation எனப் புதிய மணிப்பிரவாளத்திற்கு வழி வகுக்கின்றனர். இவ்வாறு ஆட்சித்துறையிலும் இந்தி திணிக்கப்படுவதும் ஆங்கிலம் அமர வைக்கப்படுவதும் தமிழ் அகற்றப்படுவதும் நாம் நம்பும் அரசே நம்மை அழிக்கும் அவல நிலைக்கு இட்டுச் செல்கிறது.

எனவே, நம் பக்கம் உள்ள குறைகளைக் களைந்து எறிந்து விட்டு,  நம் பள்ளிகளில் திணிக்கப்படும் இந்தியை அகற்றி விட்டு, இந்தி எதிர்ப்பிற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

அடுத்தவன் சம்பாதிக்கிறானே நாமும் சம்பாதிப்போம் என்றுதான் கல்வி வணிகத்தில் பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுகிறார்கள். பணம் சம்பாதிக்கும் ஒரு வாயிலை ஒரு சாரார் மூடிவிட்டனர் என்றால் பிறரும் அவ்வழியினைப்  பின்பற்றத் தயங்க மாட்டார்கள். எனவே கட்சித்தலைவர் என்ற முறையில் மு.க.தாலின் தன் கட்சியினர் யாரும் எவ்வழியிலும் இந்தியைத் திணிப்பதற்குத் தாங்கள் நடத்தும் கல்விநிலையங்களைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துக் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2010 இல் குசராத்து உயர் நீதி மன்றம் இந்தியைத் தேசியமெழி என அறிவிக்கவோ பரப்பவோ  தடை விதிக்கும் வகையில்இந்தி தேசிய மொழி அல்ல என்று தீர்ப்பு அளித்துள்ளது.  எனவே, இந்தியைத் தேசியமொழியாகக் குறிப்பிடுவோரும் கற்பிப்போரும் கற்பிக்கும் நிறுவனங்களும் நூல்களும் தடை செய்யப்பட வேண்டும்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரசு தலைவருமான  மமுதா (பானர்சி) இந்தித் திணிப்பிற்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறார்.   2017இலிலேயே பெஙகளூரில் கேரளா, ஆந்திரா, ஒரிசா, மே.வங்காளம் முதலிய  இந்தி பேசா மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்று கூடி இந்தித்திணிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். மேனாள் துணைவேந்தர் பத்துமா சேகர் இந்தித் திணிப்பிற்கு எதிராகக் கன்னடர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளார்

நாமோ போலியான இந்தி எதிர்ப்பை உரக்க முழஙகிவிட்டு அமைதியாக ஆங்கிலத்திணிப்பிற்குக் கதவு திறந்து வைத்துள்ளோம். இதற்கான ஒரு செய்தி காண்போம். “தலைமைச் செயலர்கள் நிரல் பலகை ஆங்கிலத்தில் இருந்ததைக் கண்டு வருத்தமுற்றேன்.” (தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 – இலக்குவனார் திருவள்ளுவன் 10.03.2023 ) என வேதனையை முன்னர்த் தெரிவித்து இருந்தோம். வருத்தத்தைப் போக்கும் கையில் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. நடவடிக்கை எடுத்துள்ளார். அறை முகப்பில் உள்ள பதவியாளர் நிரல் பெயர்ப்பலகையைத் தமிழிலும் வைத்துள்ளார். இது குறித்து “இன்று(15.05.23)முதல் தமிழிலும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது எனப் புதிய தலைமுறைச் செய்தி வெளியிட்ட படத்தையும் நமக்கு அனுப்பியுள்ளார். ஏன் தமிழில் மட்டும் வைக்கக்கூடாதா எனச் சிலர் எண்ணலாம். பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வருபவர்கள் அறிய ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை தொடர்கிறது. (பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த த.செ.இறையன்பிற்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன், 16.05.2023) 

ஆனால், கடந்த திங்கள் தலைமைச் செயலகம் சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பதவி நிரல் பலகை ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பெயர்ப்பலகை இருந்த பொழுது தமிழ்ப்பெயர்ப்பலகை அகற்றப்பட்ட அநீதி ஏன் நிகழ்ந்தது. அது புதிய பலகையே. எனவே, அப்பெயர்ப்பலகை அழிநிலையில் இருந்ததாகப் பொய்யாகக் கூற இயலாது. தலைமைச்செயலர் ஆங்கிலம் மட்டும் போதும் எனச் சொல்லியிருந்தால் வேலியே பயிரை மேயும் நிலையாகிறது. பிறர் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து நடவடிக்கை எடுக்காத் தலைமைச்செயலரின் நிலைப்பாடும் வருத்தத்திற்குரியது. இன்றைய தலைமைச் செயலர் திரு சிவதாசு மீனா இ.ஆ.ப., 1998இல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது சீர்காழி மணிமண்டபம் அமைக்க வேண்டியதற்குப் பெரிதும் ஆர்வம் காட்டியவர். அத்தகைய ஆர்வம் மிக்கவர் தமிழுக்குப் பாராமுகமாகவும் ஆங்கிலத்திற்குக் காதல் முகமாகவும் ஆட்சி அமைவதற்குத் துணையாக இருப்பது வருத்தமாக உள்ளது.

“இந்தித் திணிப்பால் ஒரு கட்சி விரட்டப்பட்டது. ஆங்கிலத் திணிப்பால் வேறொரு கட்சி அகற்றப்பட்டது” என்னும் வரலாற்றுப் பதிவை ஆட்சியாளர்கள் உருவாக்கக் கூடாது.

எனவே, “தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழே!” என்பதைச் செயல் வடிவில் நிலைப்படுத்த வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் இரு கட்டங்களில் பாசக அகற்றப்படும் அதிர்ச்சிச் செய்தியைப் பாசக உணர்ந்து வருகிறது. எனவே அடுத்து ஆட்சியமைக்கும் இந்தியா கூட்டணியை ஆட்சி யமைப்பில் வழிகாட்ட முதல்வர் மு.க.தாலின் முன்வரவேண்டும். தனக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க வேண்டும். பொதுவான கல்விக் கொள்கை நாடு முழுவதும் பின்பற்ற ஆவன செய்ய வேண்டும். “ஆங்கிலம் 5 ஆம் வகுப்பில் ஆடல், பாடல் மொழியாக மட்டும் கற்பிக்கப்பட வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்தே எழுதக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள பிற மொழியினர் தத்தம் தாய்மொழிக்கான சான்றிதழ்களை அளித்தால் மட்டும் அவர்களின் தாய்மொழியைக் கற்பதற்கு வழி வகுக்க வேண்டும்.”

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியே ஆட்சி செய்ய வழி காட்ட வேண்டும். “உரிமைக்குத் தாய்மொழி!  உறவுக்கு ஆங்கில மொழி!” என்னும் நிலைப்பாட்டை மாநிலங்கள் செயற்படுத்த வழி காட்ட வேண்டும். இந்திய ஒன்றிய அரசு பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அறிவுறுத்தியவாறு மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசாக மலர வழி காட்ட வேண்டும். பேரறிஞர் அண்ணா, அரசியலறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர், குரல் கொடுத்த “மாநிலத்தில் தன்னாட்சி! மத்தியில் கூட்டாட்சி!” என்னும் முழக்கம் நடைமுறையாக்கப்பட வேண்டும்.

இந்திய மக்கள் மு.க.தாலினை வரவேற்கக் காத்துள்ளனர். மு.க.தாலின் மாநில மொழிகளை ஆட்சியில் அமர்த்தும் நற்பணிக்கு ஆயத்தமாக வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும். (திருவள்ளுவர், திருக்குறள் 674)

ஆதலின் தமிழுக்குப்பகையான பிற மொழித் திணிப்புகளை அடியோடு அகற்ற வேண்டும். முதல்வர் மு.க.தாலின் இதற்கேற்பத் தமிழ்நாட்டில் நல்வினையாற்றவும் இந்தியத்துணைக்கண்டத்திற்கு வழிகாட்டி ஆற்றப்படுத்தவும் வேண்டும்.

இதழுரை – அகரமுதல


சித்திரை 18, 2055 / மே 01.2024



Followers

Blog Archive