கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -14
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 26, 2011தாமரைப் பூவைப் போன்றது சீர் மிகுந்த ஊர்; தாமரைப் பூவின் இதழ்களைப் போல் தெருக்கள் அமைந்துள்ளன. பூவின் நடுவே உள்ள மொட்டைப் போன்றது அரண்மனை; அம் மொட்டில் உள்ள தாதுக்களைப் போன்றவர்கள் தமிழ்க்குடி மக்கள்; அத்தாதினை உண்ண வரும் பறவைகளைப் போன்றவர்கள் பரிசுகள் பெற வருவோர்.
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீர்ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்;
தாதுண் பறவை அனையர் பரிசில் வினைஞர்
எனவே, நகரம் தாமரைப்பூவின் இதழ்களின் அமைப்பைப் போன்று சீரிய நிலையில் சிறப்பாக இருந்துள்ளமை நன்கு புலனாகும்.
பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மரபுக் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும் இன்றைக்குக் கட்டடப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதற்கான துறை நூல்களும் உள்ளன. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டடஅறிவியல், வானறிவியல் நூல்களைப் படித்தவர்கள்தாம் கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். அத்தகைய நூல்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்தாலும் அவ்வாறான நூல்கள் இருந்தமைக்கான குறிப்புகள் உள்ளன.
அரண்மனை அமைப்பு குறித்து ஆசிரியர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், நெடுநல்வாடையில் தெரிவித்துள்ளமை இன்றைக்கும் என்றைக்கும் சிறப்பான கட்டட அமைப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.
அரண்மனையை எழுப்ப வேண்டும் எனில் அதற்கு அடிக்கல் நாட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடுத்தே அப்பணியைத் தொடங்குவர். நல்ல நாள் என்பது மூட நம்பிக்கையின்படி இல்லாமல், மழை போன்ற தொந்தரவு இல்லாக் காலத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகச் சித்திரைத் திங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கட்டட நூலில் நன்கு புலமை பெற்றவர்கள், சித்திரைத் திங்களில் 10 ஆம் நாளில் இருந்து 25 ஆம் நாள் வரை உள்ள ஏதேனும் ஒரு நாள் நண்பகல் பொழுதில் இருகோல்நட்டு அந்தக்கோலின் நிழல் வடக்கிலோ தெற்கிலோ சாயாமல் இருந்தால் அந்த நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துச் செய்வர் (அடிக்கல் நாட்டுவர்). இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்த காரணம், அப்பொழுதுதான் சூரியன் பூமியின் நடுவாக இயங்கும்.
புலவர் நக்கீரனார் பின்வருமாறு இதனைத் தெரிவிக்கிறார் : -
மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின் (நெடுநல்வாடை : 72-79)
இவ்வாறு அரண்மனை அமைப்பதன் தொடக்கப்பணி நக்கீரரால் குறிக்கப்படுகின்றது. எனவே, மிகச்சிறந்த கட்டட வல்லுநர்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர் என்பதை நாம் உணரலாம். இதற்கடுத்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தொடர்ந்து காணலாம்.
No comments:
Post a Comment