அன்றே சொன்னார்கள் 44 :
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 15, 2011உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,
வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்
குறிப்பிடுகிறார். எங்கள் தந்தையால் பாதுகாக்கப்படும் காவலை உடைய அகன்ற மாளிகை எனத் தலைவி கூறுவதாகப் புலவர் உக்கிரப் பெருவழுதி
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர் (நற்றிணை : 98.8) எனக்
குறிப்பிடுகிறார்.
புலவர் மாமூலனார் (அகநானூறு: 15.11) புலவர் கண்ணங் கொற்றனார், புலவர் ஆலம்பேரி சாத்தனார் (நற்றிணை : 156.2; 255. 3), புலவர் கயமனார் (நற்றிணை : 305.3), புலவர் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் (அகநானூறு: 232.13), புலவர் மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் (அகநானூறு: 298.16), புலவர் மோசி சாத்தனார் (புறநானூறு : 272.4), புலவர் மதுரைப் பேராலவாயர், (புறநானூறு : 247.8) ஆகியோர் காவலை உடைய அகன்ற மாளிகையைக்
கடியுடை வியல் நகர் எனக் குறிப்பிடுகின்றனர்.
புலவர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் (அகநானூறு: 224.17), புலவர் குடவாயில் கீரத்தனார் (அகநானூறு 315.8), மாறோக்கத்து நப்பசலையார் (புறநானூறு :363.6) ஆகியோர், அரிய காவலுள்ள அகன்ற பெரிய மாளிகையை
அருங் கடி வியல் நகர் என்கின்றனர்; புலவர் மாமூலனார்
(அகநானூறு : 311.2)
அருங் கடிக் காப்பின் அகல் நகர் என்கிறார்.
செல்வம் மிகுந்த பெரிய மாளிகையைத்,
திருவுடை வியல் நகர் என்கிறார் நக்கீரனார் (நற்றிணை: 258.4)
புலவர் சீத்தலைச் சாத்தனார் அழகு விளங்கும் பெரிய மாளிகையைச்
சீர்கெழு வியல் நகர் (நற்றிணை : 339.6) என்கிறார்.
புலவர் மதுரைப் பேராலவாயர் முன்புறம் மணல் பரப்பி உள்ள அகன்ற பெரிய மாளிகையை
மணல் மலி வியல் நகர் (நற்றிணை : 361.6 ) என்கிறார்.
புலவர் வண்ணப்புறக் கந்தரத்தனார் உணவுப் பொருள்கள் மிகுதியாக உள்ள காவலுடைய பெரிய மாளிகையை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர் (அகநானூறு : 49.14)
என்கிறார்.
பெருஞ்செல்வமும் மிகுந்த உணவுப் பொருளும் நிறைந்த பெரிய மாளிகையைப் புலவர் மருதனிளநாகனார்,
பெருந்திரு நலைஇய வீங்குசோற்று அகல்மனை (கலித்தொகை 83.1)
என்றும் அகல் நகர் (கலித்தொகை 83.11; 84.13) என்றும் கூறுகின்றார்.
திருமணம் நிகழ்த்தும் அளவிற்குப் பெரிதாகிய திருமண மாளிகையைப் புலவர் விற்றூற்று மூதெயினனார்
கடி நகர் புனைந்து (அகநானூறு : 136.6) என்கிறார். உணவுப் பொருள் நிறைந்த (அயினிய) திருமண இல்லத்தைப் புலவர் நக்கீரர்
புது மண மகடூஉ அயினிய கடி நகர் (அகநானூறு : 141.1) என்கிறார்.
புலவர் மதுரைப் பேராலவாயார், விடியும் வரை விளக்கெரியும் வானளாவிய அகன்ற பெரிய மாளிகையை
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் (அகநானூறு : 87.13)
என்கிறார்.
புலவர் மதுரை மருதன் இளநாகனார் (அகநானூறு: 206.11) புலவர் கயமனார் (அகநானூறு: 397.3) ஆகியோர், ஓய்வில்லாமல் முழவு ஒலி கேட்கும் வண்ணம் எப்பொழுதும் விழாக்கோலம் பூண்டுள்ள பெரிய மாளிகையை
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர் என்கின்றனர்.
புலவர் கயமனார் சிறப்பு மிகுந்த பெரிய மாளிகையைச்
சீர் கெழு வியன் நகர் (அகநானூறு : 219.1) என்கிறார்.
உயர்ந்த மாடிகளை உடைய அகலமான பெரிய மனைகள் எழுப்பப்பட்டமையைப் புலவர்
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
உறையுநர் போகிய ஓங்குநிலை வியல்மனை (அகநானூறு:103.8) என்கிறார்.
எனவே, அகலமாகவும் பெரியதாகவும் பல மாடிகளை உடையதாகவும் தமிழ்நாட்டு மாளிகைகள் அன்றே கட்டட இலக்கணத்திற்கு இணங்கக் கட்டப்பட்டு இருந்தன என்பது தெளிவாகிறது. இன்றைய கட்டடவியல் சிறப்பு மிக்க பெருமாளிகை நாகரிகத்தை அன்றே தமிழர்கள் கண்டறிந்திருந்தனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை
No comments:
Post a Comment