உயர்நீதி மன்றத்தின் பெயர் சென்னை அல்ல… தமிழ்நாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை அல்ல … தமிழ்நாடு
– இலக்குவனார் திருவள்ளுவன்
. சென்னை மாகாணம், மதராசு என்னும் பெயரில்
வழங்கப்பட்ட பொழுது சென்னையில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1862 இல்
இது மதராசு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களால், 1968 சூலை 18
இல் சென்னை மாநிலத்தைத் ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம்
கொண்டுவரப்பட்டது. 23.11.1968 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற வரைவு
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்பொழுதே உயர்நீதிமன்றத்தின் பெயர்
‘தமிழ்நாடு உயர்நீதி மன்றம்’ என மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இல்லை.
இதனைச் சென்னை உயர்நீதிமன்றம் என
மாற்றுமாறு பல ஆண்டுகளாகப் போராடி, இப்பொழுதுதான் அவ்வாறு அறிவிக்கப்படும்
இறுதிநடிவக்கைக்கு வந்துள்ளது. சென்னை முதலான மூன்று உயர்நீதி மன்றங்களின்
பெயர்களை அந்தந்த மொழி வழக்கிற்கேற்ப அழைக்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்க
உரிய கருத்துரு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இனி ஆங்கிலத்திலும் சென்னை
என்றே அழைக்கப்படும்” என்று மத்திய அமைச்சர் சதானந்த (கவுடா)
தெரிவித்துள்ளார்.
நம் மாநிலம் தமிழ்நாடு என்று இருக்கும்
பொழுது தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என இருந்தால்தான் வழக்காடுமன்ற மொழி
தமிழாக இருக்க வேண்டும் என்பதும் எளிதில் நடைமுறைக்கு வரும். இங்கே சென்னை
என்பது சென்னையில் அமைந்துள்ள உயர்நீதிமன்றம் என்ற பொருளில்
வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்கான உயர்நீதிமன்றம்தான் இது. நகரின் பெயரில்
அமைப்பதாக இருந்தால் மதுரையில் உள்ள உயர்நீதி மன்றத்தை மதுரை
உயர்நீதிமன்றம் என்றுதானே அழைக்க வேண்டும்? அது ‘மதராசு
உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை’ என்றுதானே அழைக்கப்படுகிறது. அது
தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை என்றுதானே அழைக்கப்பட
வேண்டும்.
மேலும் இவ்வுயர்நீதிமன்றத்தின் வரம்பில்
புதுவை மாநிலமும் வருகின்றது. இரு மாநிலங்களுக்குப் பொதுவான
உயர்நீதிமன்றத்தை, பஞ்சாபு – அரியானா உயர்நீதிமன்றம் என்று அழைப்பதுபோல்,
இதனைத் தமிழ்நாடு -புதுவை உயர்நீதிமன்றம் என அழைப்பதே முற்றிலும்
பொருத்தமாக இருக்கும்.
எனவே, தமிழக முதல்வர் ‘தமிழ்நாடு –
புதுவை உயர்நீதிமன்றம்’ எனப் பெயர்மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும். மத்திய அரசும் அதை ஏற்று ‘மதராசு உயர்நீதிமன்றம்’ என்பதைத் ‘தமிழ்நாடு – புதுவை உயர்நீதி மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழக அரசியல் தலைவர்கள் இதற்காகக் குரல் கொடுப்பார்களா?
-நக்கீரன் தொகுதி 28, எண் 88, 2016, பிப்.13-15
No comments:
Post a Comment