வரிவிலக்கு தர வேண்டும் எனக் கேட்பதற்கு
உதயநிதி வெட்கப்படவில்லையா?
உதயநிதிதாலின் தான்
உருவாக்கி(நடித்துள்ள) ‘கெத்து’ என்னும் திரைப்படத்திற்குத்
தமிழ்ப்பெயருக்கான வரிவிலக்கு தரவில்லை என உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இது குறித்து இரு செய்திகளைக் குறிப்பிட வேண்டும். முதலாவது தமிழ்ப்பெயர் பற்றியது.
‘கெத்து’ என்பது தமிழ்ப்பெயர் அல்ல என உரிய குழு பரிந்துரைக்காமையால் வரிவிலக்கு மறுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
‘கெத்து’ என்பது கன்னடம், துளு, படகு
முதலான தமிழ்ச்சேய்மொழிகளில் இருந்தாலும் தமிழ்ச்சொல்தான். தமிழ்ச்சொல்
அதன் சேய் மொழிகளில் உள்ளதாலேயே அதனை நாம் தமிழ்ச்சொல்லல்ல என்று சொல்வது
தவறாகும்.
கீறிப்பிளத்தல், நறுக்குதல், (மீன் முதலியவற்றை)அறுத்தல், செதுக்குதல் என்பனவே கெத்து என்பதற்கான பொருள்களாகும்.
கோழி கொக்கரித்தலையும் சில பகுதிகளில்
கெத்து என்கின்றனர். தன்னைப்பற்றிய இறுமாப்புடன் அல்லது செருக்குடன்
நடப்பவனைக் கெத்தாக இருப்பதாகச் சொல்லும் வழக்கம் வந்துவிட்டது. இந்தப்
பொருளில் வருவதையே தமிழ்ச்சொல் அல்ல எனக் கருதுகின்றனர்.
கோழி முட்டையிட்டு அதனை அடைகாக்கக் கத்துவதையும் கெத்து குறிக்கிறது.
ஏய்த்தல் என்னும் சொல்லில் இருந்து
ஏய்த்து, எத்து என வந்து கெத்து என மாறியது. எனவே, ஏமாற்றுதல் என்னும்
பொருளில் கெத்து வழங்குகிறது. சூழ்ச்சி, தந்திரம் என்னும் பொருளும் பின்னர்
வந்தது. பொருளைக் கெத்திப்பற்றி எனத் திருப்புகழ் (1074) குறிப்பிடுவது
இப்பொருளில்தான்.
‘பாதத்தின் முன்பகுதியைத் தரையில் ஊன்றி
எம்புதல்’ என்னும் பொருளும் கெத்து என்பதற்கு உண்டு. இதேபோல் கிட்டிப்புள்
ஆட்டத்தில் (கிட்டிப்)புள்ளை எற்றிவிடுவதையும் கெத்து குறிக்கிறது.
செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலி முதலான தமிழ் அகராதிகளில் பொருள் விளக்கம் காணலாம். சிவாசி, இரசினிமுருகன்
முதலான பிறமொழிச்சொற்களுக்கெல்லாம் பெயர்ச்சொற்கள் என்ற போர்வையில்
வரிவிலக்கு தரும் அரசு இதற்குத் தமிழ்ப்பெயர் அல்ல என்று கூறி மறுப்பது
வேறு காரணம் மறுப்பதற்கில்லை என்பதைக் காட்டுகிறது. அரசு கேளிக்கை வரிவிலக்கு தரும் குழுவை மாற்றாவிட்டால் அரசிற்குக் களங்கம்தான் ஏற்படும்.
இரண்டாவது உதயநிதிக்கானது.
வரிவிலக்கு கேட்பதன் நோக்கம், சலுகையின்
பயன் படம் பார்க்கும் மக்களுக்குச் சென்று சேரவேண்டும் என்பதல்ல.
நீண்டகாலமாக இதன் பயன் மக்களுக்குச் சென்ற சேரவேண்டும் என்று வலியுறுத்தி
வந்துள்ளோம். உயர்நீதிமன்றமும் அக்டோபர் 2015 இல் வரிவிலக்கின் பயன்
படம்பார்ப்பவர்களுக்கே செல்ல வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. வரிவிலக்கின்
பயன் யாருக்குச் செல்ல வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, தமிழ்ப்பெயர்
சூட்டிய படம் என்பதால் வரிவிலக்கு தர வேண்டும் எனக் கேட்பதற்கு உதயநிதி வெட்கப்படவில்லையா?
அவரது பட நிறுவனத்தின் பெயரைத் தமிழில்
சூட்டியிருந்தால் அவரது வேண்டுகோளைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால்
முத்தமிழறிஞர் பேரனாக இருந்துகொண்டு ‘இரெட்டு செயிண்டு மூவிசு’ (Red Giant
Movies) எனப் பெயரை வைத்துக்கொண்டு பணத்திற்காகப் படத்திற்குத் தமிழில்
பெயர் சூட்டுவதை என்னென்பது?
தமிழை அன்பால் விரும்பாமல் பொருளுக்காக விரும்புபவர் வரைவின் மகளிருக்கு(குறள் 911) ஒப்பாவர் அல்லவா? அந்த நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளலாமா? இயல்பாகவே தமிழார்வரம் வரவேண்டாவா?
நிறுவனத்தின் பெயர், படத்தின் பெயர், கதை மாந்தர்களின் பெயர், கற்பனையாகக்
காட்டப்படும் இடங்களின் பெயர், படக்குழுவினர் விவரம் (முதலெழுத்து
முதற்கொண்டு) முழுமையும் தமிழில் குறிப்பிட இனிமேலும் ஆவன செய்யட்டும்!
தமிழார்வத்துடன் செயல்பட்டுத் தமிழ்ப்பெயருக்கு அரசிய லடிப்படையில்
வரிவிலக்கு அளிக்க மறுத்தால் மக்களும் அவர் பக்கம் இருப்பர்.
எனவே தமிழ்நலன்சாராத் தன் செயலுக்கு நாணி, அன்னைத்தமிழை அனைத்து இடங்களிலும் தலைமைப்படுத்த முயலட்டும்!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்!
இனத்தைக் காப்போம்!/
No comments:
Post a Comment