11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு:
இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே!
தமிழ்நாட்டிற்கான சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(27.04.2018) இரு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிப் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஒன்று, சட்டமன்றத்தில் மேனாள் முதல்வர் செயலலிதா படத்தை வைக்கும் பேரவைத்தலைவரின் முடிவில் தலையிட முடியாது என்பது. நீதிமன்றத்தின்படி குற்றவாளியாக அவர் இருந்தாலும் முதல்வராகச் செயல்பட்டவர் என்ற முறையில் அவர் படம் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால், இவ்வழக்கு தொடுத்த பொழுதேஇவ்வழக்கு உயர்நீதிமன்ற வரம்பிற்குள் வராது என மறுத்து வழக்கைத்தள்ளுபடி செய்திருக்கலாமே!
மற்றொன்று தமிழகத் தலைவிதியை மாற்றக்கூடியது.
முந்தைய தீர்ப்பையும் இத்தீர்ப்பையும் அளித்தது, வழக்குகளில் காலத்தாழ்ச்சியும் தேக்கமும் கூடாது என வலியுறுத்தும் தலைமை நீதிபதி இந்திரா(பானர்சி),நீதிபதி அப்துல் குத்தூசு அடங்கிய முதல் அமர்வுதான்!
சட்டமன்றத்தில் கட்சிக் கொறடா அறிவுறுத்தலுக்கு மாறாக வாக்களித்தால் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள சட்டம். கடந்த பிப்.18.2017 இல் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஓ,பன்னீர் செல்வம் முதலான பதினொருவர் அரசிற்கு எதிராக வாக்களித்தனர். அரசு கொறடா உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு ச.ம.உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன், பார்த்திபன், இரங்கசாமி ஆகியோர் பேரவைத் தலைவரிடம் 20.03.2017 அன்று எழுத்து வடிவில் முறையிட்டனர்.
இது தொடர்பில் நீதி கிடைக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். திமுகவும் இது குறித்து வழக்கு தொடுத்துள்ளது.
எனவே நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் எனப் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களும் மக்களாட்சியை விரும்புபவர்களும் எதிர்பார்த்தனர்.
பன்னீர்செல்வம் முதலானோர், கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என உயர்நீதிமன்றத்திலும் கொறடா உத்தரவு பிறப்பித்ததாகத் தேர்தல் ஆணையத்திலும் முரண்பட்டுத் தகவல் தெரிவிததுள்ளனர். இதனைத் திமுக சார்பிலான மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் வாதுரையில் தெரிவித்துள்ளார். அதனை நீதிமன்றம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் பன்னீர் செல்வம் வழக்குரைஞர் வைத்தியநாதன், கொறடா உத்தரவை 11 பேரும் மீறியதாகக் கொடுத்த முறையீட்டின்மேல் பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுக்காதநிலையில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
”சட்டமன்றத்தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?” என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இதுகுறித்து உயர் நீதிமன்றம் தலையிட முடியாது’ என, முதல் ஆய அமர்வு தீர்ப்பு கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு சரியாக இருக்கலாம். ஏனெளில் நீதிபதிகள் தகுதிநீக்கச் செயல்பாடு குறித்து ஒன்றும் தெரிவிக்க வில்லை. இது தொடர்பான முறையீடு பேரவைத்தலைவரிடம் முடிவெடுக்கப்டாத நிலையில் உள்ளது. அவ்வாறு இருக்க எவ்வாறு தீர்ப்பு வழங்க முடியும் என்பதும் அவரைத் தீர்ப்பு வழங்குமாறு எவ்வாறு கட்டளையிடுவது என்பதும்தான் நீதிமன்றக் கேள்வி.
ஆனால் மக்கள் முன் எழும் கேள்வி, பேரவைத்தலைவர் நடவடிக்கையில் குறுக்கிட முடியாது என்றால் வழக்கு தொடுத்த பொழுதே தள்ளுபடி செய்திருக்கலாமே ஏன் அவ்வாறு செய்யவில்லை. அதுதான் போகட்டும் விவாதங்கள் முடிந்த நிலையி்ல் தீர்ப்பை வழங்கியிருக்கலாமே! குறுக்கிட முடியாதுஎனச்சொல்வதற்கு ஏன் இத்தனை மாதங்கள்? இச்செயல் பெரும்பான்மை இழந்த அரசை நீதிமன்றம் முட்டுக் கொடுத்துக் காப்பாற்றுவது போல் ஆகாதா என்று கொந்தளிக்கின்றனர்.
இதற்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக மு.க.தாலின்தெரிவித்துள்ளார். இது திமுகவின் சட்டப் போராட்டம் என்று கருதாமல் நீதியின் ஆட்சியை வீரும்புவோரின் சட்டப் போராட்டமாக மக்கள் பார்க்க வேண்டும்,
இதே நேரத்தில் மற்றொரு கேள்வியும் எழுகிறது.
அரசு மீது நம்பிக்கை இல்லை யென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பத்தொன்பதின்மர், எல்லாம் வல்ல ஆளுநரிடம் 22.08.2017 அன்றுமுறையிட்டுள்ளனர். இவர்களுள் அணி மாறித் திரும்பிய ஒருவரைத் தவிர 18 உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளார் பேரவைத்தலைவர் தனபால். அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டமையால் அதனைக் காப்பாற்ற சட்ட மன்ற உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்து அதன் மூலம் எதிர்ப்பைக் குறைத்துப் பெரும்பான்மை வலு உள்ளதுபோல் பேரவைத்தலைவர் ஆக்கியுள்ளார். இதன் மூலம் ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற முறையில் பேரவைத்தலைவர்என்ற தகுதியை மறந்து ஆணை பிறப்பித்துள்ளார் என்னும் பேச்சிற்கு ஆளாகியுள்ளார்.
இது தொடர்பான வழக்கும் உயர்நீிமன்றத்தில் வாதுரைகள் முடிந்த நிலையில்நிலுவையாக உள்ளது.
தினகரன் அணியைச்சேர்ந்த 18 பேர் பதவிப்பறிப்பிலும் இதுதான் தீர்ப்பு என்றால் உடனே அதை வழங்கலாமே! ஒருவேளை 18 பேர் நேர்வில் பேரவைத்தலைவர் முடிவை அறிவித்த சூழலிலும் கருநாடகாவில் மேற்கொண்ட இத்தகைய தகுதி நீக்கம் செல்லாது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை முன் னெடுத்துக்காட்டாகக் கொண்டும் 18 ச.ம.உ. தகுதிநீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வழங்குவார்களோ!
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் (Justice delayed is justice denied) என்னும் சட்ட அறத்தை வலியுறுத்தும் தலைமை நீதிபதி மேலும் காலந்தாழ்த்தாமல் உடன் தீர்ப்பு வழங்க வேண்டும். மக்கள் நீதிமன்றத்தின் மீது குறைகாணாத வகையில் நடுநிலையான தீர்ப்பை வழங்க வேண்டும் என வேண்டுகிறோம்,
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (திருவள்ளுவர், திருக்குறள்672)
(காலந்தாழ்த்தாது விரைந்து செய்ய வேண்டிய செயல்களில் காலந்தாழ்த்தக்கூடாது.)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment