கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்?
கலைகளைப் பேணவும் கலைஞர்களைப் போற்றி ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு தரும் விருது ‘ கலைமாமணி’. இவ்விருதுகள் பிப்பிரவரி 2010 இற்குப் பின்பு வழங்கப் பெறவில்லை. விருதுகள் வழங்க அரசிற்குப் பரிந்துரைப்பதும் நடவடிக்கை முற்றுப்பெறாமல் போவதுமாகச் சிலமுறை நிகழ்ந்துள்ளன.
கலைமாமணி விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவ்வப்பொழுது செய்திகள் வரும். ஆனால் காற்றோடு கரைந்து போகும்.
நாட்டில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும்பொழுது இதற்கெல்லாம் முதன்மை கொடுக்க வேண்டுமா என எண்ணலாம். ஆனால், நாட்டு வளர்ச்சியில் கலைவளர்ச்சியும் அடக்கம். கலைவளர்ச்சியில் கலைஞர்களப் போற்றுவதும் அடக்கம். அது மட்டுமல்ல. இதற்கான நிதி ஒதுக்கீடு இருக்கும்பொழுது உரியமுறையில் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டியதும் அரசின் கடமை அல்லவா? அதனை நினைவுபடுத்துகின்றோம்.
எப்பொழுது கலைமாமணி விருதுகள் வழங்கப் பெற்றாலும் எதிர் அலைகள் வீசுவதே இயற்கையாக உள்ளது.
கலையை மதிக்காமல் கவர்ச்சிக்கு முதன்மை அளித்து விட்டனர்; திரைப்படத் துறையினருக்கே மிகுதியாக அளித்து விட்டனர்; குறிப்பிட்ட சாதியினருக்கே விருதுகள் வழங்கியுள்ளனர்; வரிசையில் நின்ற எல்லாருக்கும் விருதுகள் வழங்கினர்; மதுரை சோமசுந்தரக் கடவுள் அருள்பெற்றவர்கள் போன்ற இடைத்தரகர்கள் மூலம் விருதுகளை விற்றுவிட்டனர் என்பன போன்ற குமுறல்கள் ஊடகங்களிலும் கலைஞர்களிடையேயும் எழுவது வழக்கமாகிவிட்டது.
இந்தமுறை எந்த எதிரிடைக் கருத்தும் எழாவண்ணம் விருதுகள் வழங்கப்பெற வேண்டும்.
தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்னும் அமைப்பு கலை வளர்ச்சிக்காக 1955 இல் உருவாக்கப்பட்டது. 1973 இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி இதன் பெயரைத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்று நல்ல தமிழில் மாற்றினார். 1990 இல் அப்போதைய முதல்வர் செயலலிதாவினால் கலைபண்பாட்டு இயக்ககம் உருவாக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பெற்றது.
பைந்தமிழ்க் கலைகளை வளர்ப்பதற்காகக் கலைநிகழ்ச்சிகளை அளிக்கச் செய்தல் கலையமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் அளித்தல் முதலான பணிகளை இயல் இசை நாடக மன்றம் ஆற்றி வருகிறது. எனினும் கலைமாமணி விருது வழங்குவது மட்டுமே இதன் பணி எனப் பெரும்பாலோர் தவறாகக் கருதுகின்றனர்.
பிற பணிகளைப் போலவே கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும் என்பதை இயல் இசை நாடக மன்றம் கடமையாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்..
கலைஞர்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஈர்க்கும் நோக்கில் அல்லது எதிர்க்கட்சி ஆதரவு நிலையைத் தடுக்கும் நோக்கில் கட்சிக் கண்ணோட்டத்துடன் விருதாளர்களைத் தெரிவு செய்யக்கூடாது.
கவர்ச்சியால் படம் ஓடினால், அவ்வாறு நடித்தமைக்காக விருதுகள் வழங்கப்பெறக்கூடா.
திரைப்பட வெற்றியைமட்டும் கருத்தில்கொள்ளாமல், தொழில்நுட்பம் முதலான வகைகளில் பின்புலமாக இருப்பவர்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இளங்கலைஞர்களைப் பாராட்ட எண்ணினால், கலைமணி என்னும் விருதினை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வழங்கலாம்.20 ஆண்டுகளேனும் பட்டறிவு – அனுபவம் – உடையவர்களையும் 50 ஆண்டு அகவை( வயது) உடையவர்களையும் கருதிப்பார்க்க வேண்டும்.
படங்களுக்கும் கதை மாந்தர்களுக்கும் தமிழ்ப்பெயர் சூட்டுபவர்களுக்கும் தமிழ்ப்பண்பாட்டைப் படைப்புகளில் எதிரொலிப்பவர்களுக்கும் விருதுகள் வழங்குவதை வழக்கமாக க் கொள்ள வேண்டும்.
திரைத்துரையினருக்கு விருதுகள் வழங்கப் பல அமைப்புகள் உள்ளன. அவர்களுக்கு மட்டும் முதன்மை அளிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் விருதுகளைப் பரவலாக வழங்க வேண்டும்.
இயற்கலைஞர்கள் போதிய அளவு போற்றப்படுவதில்லை. தமிழறிஞர்களுக்கும் நற்றமிழ்ப் படைப்பாளிகளுக்கும் விருதுகள், இசை நாடகக் கலைஞர்களுக்கு இணையாக வழங்கப்பெற வேண்டும்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் நடத்திவரும், பெரியார் வாசகர் வட்டம், ஒய்எம்சிஏ பட்டிமன்றம் முதலான பல அமைப்புகள் உள்ளன. கலை அமைப்புகளுக்கு வழங்குவதுபோல், இயற்றமிழ் வளர்க்கும் அமைப்புகளுக்கும் நீண்டகாலப் பொறுப்பாளர்களுக்கும் கலைமாமணி விருதுகள் வழங்க வேண்டும்.
அரசு மாவட்ட அளவில் வழங்கும் ஐவகை கலைவிருதுகளில் மூத்தவர்களுக்கான கலைநன்மணி விருதும் கலைமுதுமணி விருதும் குறிப்பிடத்தக்கன. இவ்விருது பெற்றவர்களையும் கலைமாமணி விருது வழங்கக் கருதிப்பார்க்க வேண்டும்.
கலைபண்பாட்டு ஆணையராகத் திரு. அ.இராமலிங்கம் இ.ஆ.ப. உள்ளார். இவர் முதல்வரின் செயலராக நீண்டகாலம் பணியாற்றியவர். எனவே நாடுதழுவிய பட்டறிவு உடையவர். துறையமைச்சர் மாண்புமிகு பாண்டியராசன் அனைத்துத்தரப்பாலும் போற்றப்படுபவராக உள்ளார். இ.ஆ.ப.( I.A.S.) அதிகாரியாக இருந்து முதல்முறையாக மன்றச்செயலர் ஆனவர் திரு. தங்கவேலு இ.ஆ.ப. இசையமைப்பாளர் தேவா இரண்டாம் முறையாகத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர்கள் தங்கள் பதவிக்காலத்தில்தக்கவர்களுக்குக் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவதைக் கிடைத்தற்கரிய பேறாகக் கருதி ஆவன செய்ய வேண்டும்.
இதனை வழிநடத்தும் பொறுப்பு, அரசு செயலர் திரு அபூர்வ வருமா இ.ஆ.ப.விற்கு மட்டுமல்ல! கலைபண்பாட்டுத் துறையின் முதல் இயக்குநராக இருந்து இப்போது தலைமைச் செயலராகத் திகழும் திருவாட்டி கிரிசா வைத்தியநாதன் இ.ஆ.ப. அவர்களுக்கும் உரிய காலத்தில் விருதுகள் வழங்கச் செய்யவேண்டிய கடமை இருக்கிறது அல்லவா?
3 பவுன் தங்கப்பதக்கமும் பாராட்டிதழும் தந்து பொன்னாடை அணிவிக்கும் சிறப்பிற்குரிய கலைமாமணி விருதுகளை வழங்க மாண்புமிகு முதல்வரும் விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.
கலைஞர்களைப் போற்றித் தமிழ்க்கலைகளை வளர்த்திடுக!
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை (திருவள்ளுவர், திருக்குறள் 672)
தூங்காது செய்யும் வினை (திருவள்ளுவர், திருக்குறள் 672)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment