அதிமுக–வைச் சிதைக்கிறாரா திவாகரன்?
திவாகரன் மீது தினகரனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ள சினம் சரிதான் என்று தோன்றுகிறது. நேற்று வெளியான 2.5.18 நாளிட்ட இளைய விகடனாகிய சூனியர் விகடனில் திவாகரன் தெரிவித்த கருத்துகள் வந்துள்ளன. அதைப் படித்ததும் திவாகரன் மனம் கலங்கிய நிலையில் உள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் எதிர்பார்த்தது நடக்காத போது அல்லது நம் நம்பிக்கை பொய்க்கும்போது இத்தகைய மனநிலை ஏற்படுவது இயற்கைதான். ஆனால், இந்த நிலைக்குக் காரணம் அவர்தான் என்பதை அவரது வாக்குமூலமே உறுதிப்படுத்துகிறது.
பொதுவாகத், தினகரன் தன் நெருங்கிய உறவினர்களுக்குப் பொறுப்பு கொடுப்பதில்லை; திவாகரன், அவர் மகனுக்குக்கூடப் பொறுப்புகள் தரவில்லை; எனவே புகைச்சல் இருப்பதாகத்தான் ஊடகங்களில் தெரிவித்து வந்தனர்.
ஆனால், திவாரகன் தொடக்கத்திலிருந்தே தன் உடன்பிறந்தாள் மகனும் உடன்பிறந்தான் மருமகனுமான தினகரனைக் காழ்ப்புணர்ச்சியுடன் பார்த்து அழிக்க முயன்றிருக்கிறார் என்பது இப்பொழுது புரிகிறது. “தினகரனை அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக அறிவித்ததற்காகச் சசிகலாமீது எனக்குக் கோபம்தான்” என அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், “நீங்கள் ஏன் தினகரனுக்கு அடிமையாக இருக்கிறீர்கள்? எதிர்த்துச் செயல்படுங்கள்” என்றும் முதலில் இராதாகிருட்டிணன் நகருக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தினகரனுக்காக முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் வாக்கு கேட்டபொழுது,. “ஏன் எல்லாரும் அவர் பின்னால் சென்றீர்கள்?” என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தினகரனுடன் ஒற்றுமையாக இருந்தவர்களிடம் தன் பங்கிற்கு நச்சு விதைகளைத் திவாகரன் விதைத்திருக்கின்றார் என அறிய முடிகிறது.
இரு வழி உறவினரான கட்சியில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரிடமே ஒத்துப்போகாதவர் எப்படிப் பிறருடன் ஒத்துப் போவார் என்றும் தெரியவில்லை. குடும்ப ஒற்றுமையையோ கட்சி ஒற்றுமையையோ கருதிப்பார்க்காத இவரால் அதிமுக எப்படி நன்மை யடைய முடியும் என்றும் தெரியவில்லை.
தினகரன் கட்சியில் பிளவு எனச் சிலர் எழுதுகிறார்கள். தான் அக்கட்சியில் இல்லை எனவும் இருப்பதாகச் சொன்னால் வழக்கு போடுவேன் என்றும் திவாகரன் சொல்லியுள்ளார். கட்சிக்கு வெளியே உள்ள ஒருவர் செய்யும் சலசலப்பு எப்படி அக்கட்சியின் பிளவாகும்? ஒரு புறம் நம்பிக்கை வஞ்சகம் – துரோகம் – செய்து கொண்டே மறுபுறம் பதவிகளை எதிர்பார்த்து ஏமாந்தவரின் வெற்று மிரட்டலாகத்தான் பார்க்க வேண்டும்.
செயலலிதாவைச் சசிகலா சந்திக்க விடுவதில்லை எனக் கூறுவதுபோல் சசிகலாவைச் சந்திக்கத் தினகரன் விடுவதில்லை என்கிறார். சிறைக்கண்காணிப்பாளரிடம் சந்திப்பதற்கான விண்ணப்பம் கொடுத்தால் முடிவெடுக்கப் போவது சசிகலாதான். அதனை எப்படித் தினகரன் தடுக்க முடியும்? வழக்கமான பாணியில் கதை சொல்லாமல் வேறு பாணியில் கதை சொன்னால் நல்லது.
தன் தமையனார் எடப்பாடி பழனிச்சாமி நண்பர்களான பிற அமைச்சர்கள் மூலம் நடராசன் உயிருடன் மரணப்படுக்கையில் இருந்த பொழுதே ஏன் சசிகலாவைத் திவாரகன் பிணையில் அழைத்து வரவில்லை? என்பது போன்ற வினாக்கள் ஒரு புறம் இருக்கட்டும்; ஆளும்அணியுடன் நட்புடன் இருந்தாரா அல்லது போட்டுக் கொடுக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாரா எனக் கட்சிக்காரர்கள் ஐயம் எழுப்புகிறார்கள். இந்த ஐயம் வந்தபின் இவர்மீது எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?
திவாகரன் கருத்துகளை வரிக்கு வரி மறுக்கும் வேலையைக் கட்சிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள் அல்லது சிரித்து விட்டு ஒதுக்கி விடுவார்கள். எனவே அதற்குள் போக விரும்பவில்லை. எனினும் செயலலிதாவின் பின்னணியில் இருந்த குடும்பம் சிதைவதால் சில கூற விரும்புகிறோம்.
“ஒருவீர் தோற்பினும், தோற்பது நும் குடியே” (கோவூர் கிழார், புறநானூறு – 45) என்னும் சங்க இலக்கிய உண்மையை உணர்ந்தால் குடும்பத்தினருக்கு நல்லது. இல்லையேல் குடும்பத்தில் பிளவு ஏற்படும். ‘சும்மா’ அணியால், கட்சியில் சலசலப்புதான் ஏற்படும்.
ஆளும் அணியுடன் நெருக்கம் இருப்பதால் தான் எண்ணியதை ஆற்றலாம் எனத் திவாகரன் எண்ணுகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் திறமையை அவர் உணர்ந்தாரில்லை. இப்பொழுது செயக்குமாரை விட்டுச் சசிகலா குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் சேர்க்க மாட்டோம் என்பது பிளவின் பின்னணில் தாங்கள் இல்லை எனக்காட்ட என இவரிடம் சொல்லியிருப்பார். ஆனால், இவர் சேர்ந்தால், அதை வைத்து அரசியல் பண்ணலாமே தவிர, பெருமளவுத் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் இவர் பின்னால் வரப்போவது இல்லை. அதைக் கொண்டும் முனுசாமி மூலம் சசிகலா குடும்பத்தினர் என்ற வகையி்ல் இவருக்கு எதிராக முடுக்கி விட்டும் இவரை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்.
தினகரன் வேண்டா, சசிகலா இருக்கட்டும் என எண்ணுவதாகச் சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை. தாய் உறவு, குட்டிப்பகை என்பதன் உண்மை என்ன எனப் புரிந்தவர்களுக்கு இதுவும் புரியும். நான்கு மாடுகள், ஒரு சிங்கம் கதை அறிந்த சிறுவர்களுக்கும் இது புரியும். அவர்களின் குடும்பத்தலைவியான சசிகலாவே இக்கதையை நினைவூட்டியதாக முன்பு செய்தி வந்தது. கட்சிக்கு நங்கூரமாகத் தினகரன் செயல்பட்டு வருகையில் கோடாரியாகத் திவாகரன் செயல்படுவது அவர் குடும்பத்தினருக்கும் நன்றன்று
தினகரன் என்றாலும் திவாகரன் என்றாலும் சூரியன்தான். ஒரே பொருளுடைய பெயரை உடையவர்கள் ஒருமித்த சிந்தனையில் செயல்படுவது மூத்தவர் கைகளில்தான் உள்ளது. உணருவாரா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
No comments:
Post a Comment