ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறும் திருக்குறள்கள்
எக்காலத்திற்கும் எல்லாவர்க்கும் ஏற்ற வாழ்வியல் நூல் திருக்குறள். திருவள்ளுவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேர்மறையாகவும் அறிவுரை வழங்கி யுள்ளார். எப்படி இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்மறையாகவும் அறிவுரை வழங்கி உள்ளார். எப்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது என்பது, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறியுரையே ஆகும். இந்நெறியுரை ஆட்சியாளருக்கு, அமைப்பின் தலைவருக்கு, என வெவ்வேறு நிலையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்க்கு, வழிகாட்டியாக இவை உள்ளன. எனவே, அனைவரும் இவற்றைப் பின்பற்ற வேண்டும். அவற்றை நாம் நோக்குவோம்!
- மொழி, இன, நாட்டுப்பற்றில்லாதவரைத் தேர்ந்தெடுக்காதே!
திருவள்ளுவர், எந்த மொழியையும், எந்த இனத்தையும், எந்த நாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், எம் மொழியினராய், எவ்வினத்தவராய், எந்நாட்டவராய் இருப்பினும் அவரவர், தத்தம் மொழி இன நாட்டுப்பற்றாளரையே பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். அக்குறள் வருமாறு:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:506)
இக்குறளுக்கு, ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க(மணக்குடவர், பரிப்பெருமாள்); சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக(பரிமேலழகர்); சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது(மு.வரதராசன்); நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது(கலைஞர் மு.கருணாநிதி); எனப் பல உரைகள் உள்ளன. தாம் செய்த பாவம் பிள்ளைகளைச் சாரும் என அஞ்சிப் பிள்ளைகள் உள்ளவர்கள் பழிபாவச் செயல்களைச் செய்யமாட்டார்கள் எனவும் அவ்வாறில்லாதவர்கள் பழி பாவம் செய்ய அஞ்ச மாட்டார்கள் என்பதும் மக்கள் நம்பிக்கை. எனவேதான், “சுற்றம் இல்லாதவரைப் பணிக்குத் தேர்ந்தெடுக்காதே” என்கின்றனர்.
இதனடிப்படையில் இடைக்காலத்தில் மகப்பேறு இல்லாதவர்களையும் நம்பக்கூடாது என்றனர். அதற்கிணங்க இக்கால அறிஞர் ஒருவர், “மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத்தலைவராகத் தெளிதலை விட்டு விடுக” என்கிறார். மகப்பேறில்லாத பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் இல்லரா? மகப்பேற்றுக்கு வாய்ப்பில்லாத் திருமணமாகாப் பெருந்தலைவர் காமரசார், அபுதுல்கலாம், வாசுபாய் முதலிய தலைவர்கள் நம்பத்தகாதவர்களா? பொருந்தவில்லை அல்லவா?
இதனை அடியொற்றி, “நாணயம் அற்றவரை, நேர்மை அற்றவரை, பதவிக்குரிய திறமை அற்றவரை, சுறுசுறுப்பு அற்றவரை, ஒழுக்கம் அற்றவரை, பண்பு அற்றவரை, தொண்டு உணர்வு அற்றவரை நம்பி எப்பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது. இதில் முதல்வர் கருத்துடன் இருப்பதால் வாழ்த்துகிறோம். இந்நிலை தொடர வேண்டுகிறோம்.”(முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின், அகரமுதல மின்னிதழ்) என நான் முன்பு குறித்துள்ளேன்.
நெறியற்றவர்களை நம்பி எப்பணியையும் ஒப்படைக்கக் கூடாது என்கிறார்கள் அல்லவா? “குறிக்கோள் உடையவரே வாழ்க்கையில் நன்னெறிச் செல்லவேண்டுமென்று நினைப்பவர். குறிக்கோள் என்பது உயர்ந்த கொள்கையை வாழ்வில் நிலைநாட்ட எண்ணி அதற்கேற்ப ஒழுகலாகும்.” எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கம் அளித்திருப்பார்(வள்ளுவர் வகுத்த அரசியல்).தாய்மொழி, தாய் இனம், தாய் நாடு பேணுவது முதன்மையான நெறியாகும். எனவேதான் இதனடிப்படையில் குறள்நெறி அறிஞர் சி.இலக்குவனார் பின் வருமாறு கூறுகிறார்: “கொள்கை இல்லாதாரைத் தெளிதலை ஒழிக; அவர் மக்கட் பற்றும் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இல்லாதவராக இருப்பர்; பழிக்கும் அஞ்சார்” (திருக்குறள் – எளிய பொழிப்புரை).
இக்கருத்தாக்க வழியில் உள்ள விளக்கம் வருமாறு: “தமிழ்ப்புலமை அற்றாரைப் பதவிகளில் ஆட்சியாளர்கள் அமர்த்தக் கூடாது. ஏனெனில் அவர்கள் தமிழ்மொழி, தமிழினப் பற்றில்லாதவர்கள். ஆதலின் தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரான பழிச்செயல்களைச் செய்வதற்கு அஞ்சமாட்டார்கள்” (எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – செம்மொழி மாநாட்டின் பொழுதான வெளியீடு) என்றும் நான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். (பிற நாட்டினருக்கு அவரவர் நாட்டுமொழிப் பற்றில்லாதவர்களைக் குறிக்கும்.)
இக்குறள் தொடர்பான என் விளக்கம் குறித்துக் குறள் விளக்கப் படைப்பறிஞர் பேரா.வெ.அரங்கராசன், “இலக்குவனார் திருவள்ளுவன், மொழிப்பற்று அற்றாரை நம்பக் கூடாது எனப் பொருத்தமான இக்காலத்திற்கேற்ற விளக்கம் தருகிறார்.” எனக் குறிப்பிட்டிருப்பார்(திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன்).
இக்கருத்தை எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறேன் என்பதற்காகத்தான் இவற்றைக் குறிப்பிடுகின்றேன். அரசு மிகுதியான நலத்திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. தமிழினப் பற்றில்லாதவர்கள் பொறுப்பில் இருப்பின் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதில் கருத்து செலுத்த மாட்டார்கள். அரசின் திட்டங்களுள் சரிவர நிறைவேற்றப்படாத திட்டம் ஆட்சிமொழிச் செயலாக்கத்திட்டம் என்பதை நாடே அறியும். தமிழ்ப்பற்றில்லாதவர்கள் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருந்தமையால்தான் உரிய குறிக்கோளை அரசு எட்ட இயலவில்லை. முதன் முதலில் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் ஆங்கிலத்தில்தான் பேசி, ஆங்கிலத்தில்தான் அறிவுரைகள் வழங்கினார் என்னும் பொழுது முதற் கோணல், முற்றும் கோணலானதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?
‘திராவிட நன்முறை‘ என்று அரசு செயற்படுத்தி வருகிறது. இனப்பற்றில்லாதவர் பொறுப்பில் தொடர்பான பணிகளை ஒப்படைத்தால் சிறப்பான விளைவுகளை எட்ட இயலுமா? மொழிப்பற்றின்றி ‘மாடல்’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டதால்தான் மக்களிடம் உரிய முறையில் இக்கருத்து சென்று சேரவில்லை என்பதையும் உணர வேண்டும்.
இதன் தொடர்பில் முன் நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். முப்பதாண்டுகளுக்கு முந்தையது என்றாலும் இப்பொழுதும் பொருந்தும் என்பதால் குறிக்கிறேன். அறிஞர் நாவரசர் ஒளவை நடராசன், மதுரையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றின் நிறுவனரிடம், “உங்களின் இலவச மருத்துவத்தொண்டால் பாகுபாடின்றி அனைவரும் பயன்பெறுகின்றார்கள். உங்களின் மருத்துவப்பணிகளால் தமிழர்க்கு நன்மை கிடைக்கின்றது. ஆனால், நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தெலுங்கர்களையே பணியமர்த்தியுள்ளீர்களே! இது சரிதானா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒரு வேளை இவர்கள் எனக்குக் கட்டுப்படாமல் தவறிழைத்தாலும் குடும்பத்தினர் இவர்களை அடக்கி அடங்கி இருக்கச் செய்வர். மொழிப்பற்றும் இனப்பற்றும் வலியமையானது என்பதை நீங்கள் அறியாததா?” என்றார். எனவேதான், தமிழ்நாட்டில் கேரளம் முதலான பிற மாநிலத்தவர் தொழில் தொடங்கினால், தொடக்கத்திலும் விரிவாக்கத்திலும் தங்கள் மொழி இனம் சார்ந்தவர்களையே வேலைகளுக்கு அமர்த்திக் கொள்கின்றனர். அவர்கள் எல்லாரும் திருக்குறளைப் படித்திருக்க மாட்டார்கள். ஆனால், மொழி, இனப்பற்று அவர்களை வழி நடத்துகிறது.
நாமோ தமிழ்நாட்டு வேலைகளுக்குத் தமிழ்ப்பற்றில்லாதவர்களையே அமர்த்தி வருகின்றோம். இந்நிலையை மாற்றப் பொறுப்பில் அமர்த்தக்கூடிய பொறுப்பில் உள்ளவர்கள் தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாட்டுப் பற்று உள்ளவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழர்க்குத்தான் தமிழினப்பற்றுவரும். அப்படியானால் முதன்மைப்பொறுப்புகளில் தமிழர்களை அமர்த்துவதுதானே முறையாகும். எனவே, இனியாவது அரசும் நாமும் இத்திருக்குறளைப் பின்பற்றித் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாட்டுப்பற்று உள்ளவர்களைப் பணியமர்த்துவோம்! பயன்பெறுவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment