மாநில உரிமைகள் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்க வேண்டும்!
மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் முன்னணியிலும் வழிகாட்டியாகவும் இருப்பது தமிழ்நாடே! “மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி” எனப் பேரறிஞர் அண்ணா முதலில் குரல் கொடுத்திருந்தாலும் மாநில உரிமைகள் தொடர்பான முழக்கங்களுக்கும் எழுத்துரைகளுக்கும் வடிவம் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியே! அவரது வழியில் அவரது திருமகனார் மு.க.தாலின் இந்தியாவிற்கு வழிகாட்டியாக மாநில உரிமைகளுக்காகச் செயல்வடிவம் தருவதில் முனைந்துள்ளார்.
அன்றைய முதல்வர் கலைஞர், 19.08.1969 அன்று அறிவித்ததற்கிணங்க 22.09.1969 இல் பி. வி. இராசமன்னார் எனச் சுருக்கமாக அறியப்படும் பகாலா வெங்கடரமண(இராவு) இராசமன்னார் (Pakala Venkataramana Rao Rajamannar, 1901–1979) தலைமையில் அதற்கான குழுவை அமைத்தார். மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி (முதலியார்)(A. Lakshmanaswami Mudaliar), நீதிபதி பலகணி சந்திர (ரெட்டி)(P. Chandra Reddy) ஆகியோரை உறுப்பினராகவும் நியமித்தார். இக்குழு தங்களுடைய ஆய்வறிக்கையை 10.03.1971 அன்று தமிழ்நாட்டரசிடம் அளித்தது. அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்மானத்தை 16.04.1974 அன்று கலைஞர் முன்மொழிந்து சட்டப் பேரவையிலும் பின்னர் மேலவையிலும் நிறைவேற்றச் செய்தார்.
இதற்கு முன்னரே இது குறித்த விவாதம் ஒன்றிய அரசு அளவில் நடந்தது. 1966-இல் மொரார்சி தேசாய் தலைமையில் பணியாண்மைச் சீர்திருத்த ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. பின்னர், மொரார்சி தேசாய் துணைத் தலைமையமைச்சரான பின், அனுமந்தையா அந்த ஆணையத்தின் தலைவரானார். அதிகாரப் பங்கீடு குறித்த அவரது தலைமயிலான ஆணையப் பரிந்துரைகளையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்குப் பின்னரும் சருக்காரியா ஆணையம் (1983-1988), நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையில் மாநில உரிமைகள் ஆணையம்(2004)முதலியவை ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டன. இருந்தாலும் அவற்றிற்கெல்லாம் மூல ஆதாரமாகப் பெருமளவு கருத்துப் பரவலுக்கு வழி வகுத்த இராசமன்னார் குழு அறிக்கையே உள்ளது. இத்தகைய குழு அல்லது ஆணையம் மாநில உரிமைகளுக்கான குரலை அடக்குவதற்காக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டவை என்னும் வகையில் இவற்றால் குறிப்பிடத்தக்கப் பயன் எதுவும் விளையவில்லை.
பலவற்றில் ஆட்சிகளுக்கேற்பக் காட்சிகள் மாறினாலும் மாநில உரிமைகளைப் பொறுத்தவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்டுத் தமிழ்நாடு குரல் கொடுத்து வருகின்றது. எனவேதான் சருக்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிப்பதற்காக 2001-இல் புது தில்லியில் கூட்டப்பட்ட மாநிலங்களிடை மன்றக் கூட்டத்தில் அப்போதைய முதல்வர் செயலலிதா அம்மையார், எஞ்சிய அதிகாரங்களைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றலாம் என்ற சருக்காரியா ஆணையத்தின் பரிந்துரையை மறுத்துப் பேசி, அவை மாநில அரசிடமே விடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கத் தேவையில்லை, ஆளுநர் பதவியின் தேவை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பன போன்று மாநில உரிமைகளைக் காக்கும் வகையில் பேசினார்.
மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவது நாட்டுப்பிரிவினைக்கு வழி வகுக்கும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் மாநில அதிகாரங்களை அடக்கி வைப்பதே பிரிவினைக்கு வழிகோலும் என அரசியலறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆளுநர் அதிகார அத்து மீறல் தொடர்பில் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொணர்ந்து நிறைவேற்றச் செய்த முதல்வர் மு.க.தாலின் பிற மாநில அரசுகளையும் கவர்ந்து விட்டார். எதிர்பார்த்தவாறு வேறு சில மாநிலங்கள் இதே போல் தீர்மானம் இயற்றியும் இயற்ற இருப்பதாயும் தெரிவித்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மமுதா அம்மையார் எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நலத்திட்டங்களிலும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மு.க.தாலின் உரைகளைப் பிற மாநிலத்தவரும் கவனமுடன் கேட்டு வருகின்றனர். இவரது வழிகாட்டுதலை ஏற்கப் பிற மாநில முதல்வர்கள் ஆயத்தமாக உள்ளனர். எனவே இவர் கூட்ட முயற்சியில் இறங்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டம் என்றில்லாமல் அனைத்து மாநிலங்களின் கூட்டமைப்பாக நிறுவிக் கூட்டங்கள் நடத்திச் செயற்பட வேண்டும்.
மாநில முதல்வர்கள் மட்டுமல்லாமல் பேரவை, மேலவைத் தலைவர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் அமைச்சர்கள் முதலிய பிறரும் அடங்கிய மாநில உரிமைகளுக்கான கூட்டமைப்பை மு.க.தாலின் உருவாக்க வேண்டும். மேம்போக்காக இந்த இந்தத் துறை மாநிலப்பட்டியலில் இருக்க வேண்டும், இன்னின்ன பொதுப்பட்டியிலில் இருக்க வேண்டும் என்று பேசாமல் தெளிவாக மாநில அரசிற்கு இருக்க வேண்டும் அதிகாரங்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு விவாதிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக இதழ்/பத்திரிகை இசைவு அதிகாரத்தைப் பார்ப்போம். ஓர் இதழை/பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்றாலும் ஒன்றிய அரசிடம்தான் செல்ல வேண்டும். அது மாநிலத் தேசிய மொழிப்பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பினால் சமற்கிருமயமாக்கப்பட்டப்பெ யரைத் திணிப்பதையே கடமையாகக் கொண்டுள்ளது. இந்தியச் செய்தித்தாள் பதிவாளர்(Registrar of Newspapers for India/RNI) அதிகாரத்தை மாநில அரசுகளிடம் வழங்கச்செய்யக்கூட மாநில அரசுகளால் இயலவில்லை.
இது போன்ற ஒன்றிய அதிகாரப் பிடுங்கல்களை மக்களிடையே பரப்பி மக்களின் பேராதரவைப் பெற வேண்டும். தொடர்பான தீர்மானங்களை அனைத்து மாநிலச் சட்ட அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும்.
மாநில உரிமைகளுக்கான கூட்டமைப்பு என்பதால் ஒன்றிய அரசை நடத்தும் ஆளும் கட்சி மாநில அரசு சார்பாகவும் இருக்கலாம். அவர்கள் தத்தம் மாநிலத்திற்கேற்ப அதிகார உரிமைகளைக் கோர வேண்டும். இப்போது பா.ச.க. ஆளும் மாநில முதல்வர்கள் முதலானோர் இக்கூட்டமைப்பில் சேர வில்லையெனில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். மாநிலத்திற்காகக் குரல் கொடுக்கையில் விலகியிருப்பின் மக்களிடம் இருந்து விலக்கி வைக்கப்படுவோம் என அஞ்சி பா.ச.க. முதல்வர்களும் சேரும் நிலை வரவேண்டும். நல்லிணக்கமாகக் கூட்டமைப்புச் செயற்படும் வகையில் எக்கட்சியையும் தாக்காமலும் தாங்காமலும் நடுநிலையுடன் உரையாடல்களும் உரைகளும் இருக்க வேண்டும்.
இக்கூட்டமைப்பு, ஒன்றிய ஆட்சியைப் பிடிக்கும் வகையில் செயற்படாமல் மாநில அதிகார மீட்பு நோக்கை இலக்காகக் கொண்டுதான் செயற்பட வேண்டும். கூட்டமைப்பிற்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு இதனைப் பயன்படுத்தலாம். ஆனால், கூட்டமைப்பு என்பது ஒன்றிய – மாநில உறவு,அதிகாரப் பரவல் குறித்து மட்டுமே இருக்க வேண்டும்.
இத்தகைய நடுநிலையான அமைப்பை ஏற்படுத்தி மாநில அதிகாரங்களை மீட்டெடுக்குமாறு முதல்வரை வேண்டுகிறோம்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
(திருவள்ளுவர், திருக்குறள் 462)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
16.04.2054/29.04.2023
No comments:
Post a Comment