அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு?
முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்!
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்னும் ஒரே ஓர் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறு அணியினர் வரும் சூனிலும், சூலையிலும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்துகின்றனர். ஏன் இந்த முரண்போக்கு என்பதை முன்பே கேட்டிருந்தோம்.
பொதுவாகவே உலக மாநாடுகள் என்றாலே மகிழ்ச்சி அடைவதைவிட எரிச்சல் அடைவதே மிகுதி என்பதாக மாநாடு நடத்துநர்களின் போக்கு உள்ளது. கடந்த முறை சிக்காக்கோவில் நடைபெற்ற 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கூடத் தமிழாராய்ச்சியாளர்களுக்குக் குறைந்த அளவு பங்களித்துத் தம் நிதிவசதியைப் பெருக்குவதற்காகத் தமிழர் மாநாடாக நடந்ததை நாமறிவோம். இப்போது இரு வேறு அணியினர் புறப்பட்டு ஆராய்ச்சியாளர்களைக் குழப்பிக் கொண்டுள்ளனர்.
“யார் வேண்டுமென்றாலும் அல்லது எந்த அமைப்பு வேண்டுமென்றாலும் உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தலாம். ஆனால், ஒரே அமைப்பின் பெயரில் ஏட்டிக்குப் போட்டியாக மாநாடுகள் நடத்துவது இந்த அமைப்பைத் தோற்றுவித்த தனிநாயக அடிகளாருக்கும் அமைப்பில் முன்நின்ற அறிஞர்களுக்கும் இழுக்கு தேடுவதாகும். ஒரு மாநாடு முடிந்ததும் அடுத்த மாநாடு குறித்து முடிவெடுத்து முறையாக அறிவிப்பதே செல்லத்தக்கதாகும். எனவே, பத்தாவது மாநாட்டுப் பொதுக்குழு தேர்ந்தெடுத்த முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையிலான குழுவினர்தான் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் உண்மைப் பொறுப்பாளர்கள். எனவே, இவர்கள் எடுக்கும் முடிவே சரி. மாற்றுக் கருத்து இருந்தால் இக்குழுவில் தெரிவிக்க வேண்டுமேயன்றிப் போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது. “ என அகரமுதல இதழில் (06.11.2022) “திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் முனைவர் மு.பொன்னவைக்கோவிடம் ஒன்றுபட்டு நடத்துவதே சிறப்பு என வலியுறுத்தி வந்தோம்.
சார்சாவில் நடத்துவதாக இருந்த மாநாட்டினர் அங்கு நடத்த இயலாமல் மலேசியாவில் நடத்த உள்ளனர். சிங்கப்பூரில் நடத்துவதாக இருந்த மாநாட்டினர் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு இடம் தேடி வருகின்றனர். இப் பொழுது திடீரென்று பொன்னவைக்கோ தலைவர் என்ற முறையில் பொதுச்செயலரிடம் மட்டும் கலந்து பேசி இதுவரை செல்லாது என்ற கூறிவந்த அணியினருடன் “உங்கள் மலேசியா மாநாட்டுடன் இந்த மாநாட்டுப் பேராளர்களையும் இணைத்து நடத்துங்கள்” எனக் கேட்டுள்ளார். அதன் தலைவர் இன்னும் முடிவெடுக்கவில்லை.
தமிழ்நாட்டரசிடம் பொருளுதவி கேட்டதாகவும் இரு வேறு அணியாகப் பிளவு பட்டுள்ளதாலும் அரசே உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் திட்டத்தில் இருப்பதாலும் அதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். பொருளன்றி ஓரணுவும் அசையாது என்பதால் தனியாக நடத்துவதைக் கைவிட்டு இணையும் முடிவிற்குத் தாமாகவே வந்துள்ளார். ஆனால், சிக்காகோ மாநாட்டின் பொழுது நம் அரசிடம் பெற்ற உரூபாய் ஒரு கோடித் தொகையை வைத்துச் சிறப்பாக மாநாட்டை நடத்தலாமே எனப் பிற உறுப்பினர்கள் கருதுகின்றனர். சென்னையில் அல்லது சென்னையருகில் உள்ள ஏதேனும் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால் ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் தன் வளாகத்தை மாநாட்டிற்குத் தர இசைவதால் அங்கேயே நடத்தலாம் என்கின்றனர். இணையும் முடிவு நல்ல முடிவுதானே என்று தெரிவித்தால், அதை அறிவித்த முறை சரியில்லை என்றும் “நீங்களே நடத்துங்கள் என்று சொல்லாமல் இணைவோம் வாருங்கள்” என்று அழைத்திருக்கலாம் என்றும் பிறர் கருதுகின்றனர்.
இந்த இடத்தில் உலகத்தமிழராய்ச்சி மன்றம் குறித்துக் காண்போம்.
ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் (1913-1980) உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை(International Association of Tamil Research, IATR) 1964-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் பாரிசு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கினார். அப்போது, இதன் நோக்கமாக,”உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தமிழாய்வில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைக்கழகத் தொடர்புகளை ஏற்படுத்துதல்” எனக் கூறப்பட்டது.
இந்நோக்கத்திற்கமைவாக, இரண்டாண்டுகட்கு ஒருமுறை பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துவதையும் இலக்காகக் கொண்டனர். இதன்படி முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-இல் கோலாலம்பூரில் நடத்தப் பெற்றது. தொடர்ந்து சென்னை (1968), பாரிசு (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987), மொரீசியசு (1989), தஞ்சாவூர் (1995), கோலாலம்பூர் (2015), சிக்காகோ (2019) ஆகிய நகரங்களில் பத்து மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
உ.த.ஆ.மன்றத்தினைப் பதிவு செய்யாமையால் வங்கிக் கணக்கு தொடங்கப்படவில்லை; இதனால் நிதி ஆதாரம் இல்லை; எனவே பிறரைச் சார்ந்தே இயங்க வேண்டி இருந்தது. இதனால், தஞ்சாவூரில் நடைபெற்ற. எட்டாவது மாநாட்டில் வெளியிட்ட மலரின் 870 படிகள் நூலகங்களுக்கு வழங்கப்பட்டதற்குரிய தொகையாகிய உரூ. 12.18 இலட்சம் தொகை, தமிழ் நாட்டரசின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திடம் (International Institute of Tamil Studies) ஒப்படைக்கப் பட்டது. இக்குறையைப் போக்க 2016இல் இந்தியாவில் World Tamil Research Association என்ற பெயரில் பதிவு செய்யப்பெற்றது. இதன் பின் சிக்காகோவில் நடைபெற்ற மாநாட்டில் (2019) தமிழ்நாடு அரசு உருபாய் ஒரு கோடி நன்கொடை வழங்கியது. மாநாட்டின் இறுதி நாளன்று கொடுக்கப்பட்ட இத் தொகை கட்டுரையாளர்களின் போக்குவரத்துச்செலவு, தங்குமிடச் செலவு போன்றவற்றிற்கு உதவியாக அவர்களுக்கு உரியவாறு அளிக்கப்படவில்லை.
இப்பொழுது பதினொன்றாவது மாநாட்டில் தொடக்கத்தில் குறிப்பிட்ட முரண் நேர்ந்துள்ளது.
60 ஆண்டுகளில் 30 மாநாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இது வரை 10 மாநாடுகள்தான் நடைபெற்றுள்ளன என்பதே இவ்வமைப்பின் செயற்பாட்டுக் குறைபாட்டை உணர்த்தும்.
பொதுவாகத் தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட்டாலே கட்சி வண்ணம் பூசப்பட்டுக் குறை சொல்லப்படுகிறது. யார் ஆட்சியில் நடந்தாலும் ஆளுங்கட்சி மாநாடாகவே சொல்லப்படுகின்றது.
இவ்வாறு குறைசொல்லாத அளவிற்கு அமைப்பைக் கொண்டு செல்ல வேண்டும். மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் சந்து செய்து(இணக்குவித்து) ஒரே மாநாடாக நடத்தச் செய்து தொடக்கவுரை ஆற்ற வேண்டும். தமிழ்நாட்டரசின் தற்போதைய தமிழ், தமிழர் நலப்பணிகளையும் மேற்கொண்டு திட்டமிட்டுள்ள பணிகளையும் உலகத் தமிழாராய்ச்சியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சி யமைச்சர், தலைமைச் செயலர், செயலர் ஆகியோரும் பங்கேற்க வேண்டும். முதல்வர் தமிழார்வலரான தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு மூலம் ஒன்றுவிக்கும் பணியைச் செய்யலாம். இதெல்லாம் அரசின் வேலையா எனக் கருதாமல் தமிழால் ஒன்று படவேண்டியவர்கள் பிளவுபடக்கூடாது என்பதாலும் தமிழன்பர்களின் நலன் கருதியும் இதில் கருத்து செலுத்த வேண்டும்.
இப்போதைய ஈரமைப்புகளின் தலைவர்களுக்கு மாற்றாகப் புதிய ஒருவரைத் தலைவராக அரசே அமர்த்தலாம். புதிய தலைவர், செயலர் பழிவராத வண்ணம் நேர்மையாகவும் ஆராய்ச்சியைப் பரப்பும் ஈடுபாட்டுடனும் தமிழ்வளர்ச்சியில் நாட்டம் கொண்ட தமிழறிஞர்களாகவும் இருக்க வேண்டும். இம்மன்றத்தில் உள்ள செம்மொழி விருதாளர்கள் முனைவர் ப.மருதநாயகம், முனைவர் இ.சுந்தரமூர்த்தி போன்றவர்களைத் தலைவராகத் தேரந்தெடுக்கச் செய்யலாம். செயலர்களையும் மாற்ற வேண்டும். மாற்றப்படுபவர்கள் விரும்பினால் புதிய அமைப்பின் வேறு பொறுப்பிற்கு வரலாம். இவ்வாறு முதல்வர் தலையிட்டு உலகத்தமிழ் மன்றத்திற்குப் புத்துணர்ச்சி தர வேண்டும். மன்ற நிதியிலிருந்து ஒரு பங்கும் தமிழ்நாட்டரசு பொருளுதவியில் இருந்து மறு பங்கும் கொண்டு மாநாட்டைச் சிறப்பாக நடத்தச் செய்ய வேண்டும்.
ஒருவேளை அதற்கான வாய்ப்பு அமையாவிட்டால் முனைவர் மு.பொன்னவைக்கோ பொதுஅரங்க மாநாட்டைக் கைவிட்டு இணையத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட வேண்டும். இணையவழியிலும் கருத்தரங்கத்தை நடத்தலாம்.
உலகத்தமிழ் மன்றம் இனிமேல் மாநாடுகள் நடத்துவதைக் கைவிட்டு இணையவழி ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடும் பணியில் ஈடுபடவேண்டும்; இணைய வழி உரையரங்கங்களை நடத்த வேண்டும். ஈராண்டிற்கொரு முறை ஆராய்ச்சி மலரை அச்சிதழாக வெளியிடலாம்.
தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு (திருவள்ளுவர், திருக்குறள் 612).
[ஒரு செயலைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணி இடையில் விட்டுவிடாதே. அவ்வாறு வினையைக் கைவிடுபவரை உலகமும் கைவிடும்.]
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
10.04.2054 +++ 23.04.2023
No comments:
Post a Comment