Tuesday, July 30, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்

      31 July 2024      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

561. Acquitas sequitur legem / legmசமன்மை சட்டத்தின் வழியதாகும்.  

சமன்மை அல்லது சமன்நெறி அல்லது நடுவுநிலைமை என்பது சட்டத்தைப் பின்பற்றியதாகும்.  இதன் மூலம் சட்டத்தின் வழி நடுவுநிலைமையைப் பேண வேண்டும் எனலாம்.   இஃது இலத்தீன் தொடர்.

சமன்மை நெறியே சட்ட நெறி என்று சொல்வது சிறப்பாக இருக்கும். அதுவே தமிழர் நெறி. நடுவுநிலைமை எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவனர் தனி ஓர் அதிகாரத்தையே தந்துள்ளமை இதன் சிறப்பை உணர்த்தும்.
562. Acquittedவிடுவித்தல்

விடுவிக்கப்பெற்றவர்
  குற்றமற்றவர் எனக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தல்.
563. Acquittal  குற்ற விடுவிப்பு
  அஃதாவது குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்தல்.  

குற்றமற்றவன், களிம்பற்றவன், தப்பிலி, துகளிலி எனத் தமிழில் குறிப்பிடுகின்றனர்.    நிரபராதி, நிருமலன் எனச் சொல்லப்படுவன தமிழல்ல.  

குற்றச்சாட்டிலிருந்து அல்லது குற்றச் சாட்டுகளிலிருந்து விடுவிப்பது.

ஒருவர் தண்டனை முடிந்து சிறையிலிருந்து விடுவிப்பு பெறுவதை விடுதலை என்று சொல்கிறோம். அதனைச் சிறைவீடு  என்றுதான் சொல்ல வேண்டும்.   சிறைசெய் கென்றதுஞ் சிறைவீடு செய்ததும் (மணிமேகலை, 80) என மணிமேகலையை முதலில் சிறைசெய்யச் சொன்னதும் பின்னர் சிறையிலிருந்து விடுதலை செய்யச் சொன்னதும் குறிக்கப் பெற்றுள்ளது. ஆனால், இன்றைய வழக்கில் சிறைவீடு என்றால் சிறையாகிய வீடு என்பதுபோல் தவறாகக் கருதுவர். எனவே, தண்டனை முடிந்து அனுப்புவதை விடுதலை என்றே சொல்வோம். ஆனால், குற்றத்திலிருந்து விடுவித்து விடுதலை செய்வதைக் குற்ற விடுவிப்பு என்போம்.

சிறையில் இல்லாத போதும் குற்றத்திலிருந்து விடுவிப்பு பெறலாம். எனவே குற்ற விடுவிப்பு என்பதே சரியாக இருக்கும்.
564. Acquittal orderவிடுவிப்பாணை  

நீதிபதி அல்லது விசாரணை அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவரைக் குற்றச்சாட்டிலிருந்து குற்றம் புரியவில்லை என அறிவிக்கும் விடுவிப்பாணை.
565. Acquittance  செல்லுச்சீட்டு  

பற்றொப்பம்

கடன் தீர்வு ஆவணம்

செல்லெழுத்து, கடன் தீர்த்தல், பெறுகைச் சீட்டு, பற்றொப்புச் சீட்டு எனப் பலவாறாகச் சொல்லப்படுகின்றது.  

இரசீது எனப்படுவது தமிழ்ச் சொல்லல்ல.

  சம்பளப் பணம் முதலியன பெற்றதற்கான சீட்டு என்பதுடன் கடன் தொகையைத் திரும்பப் பெற்றதற்கான ஆவணச்சீட்டாகவும் கருதப்படுகிறது. எனவே, பொதுவாகச் சட்டத்தில் கடன் தீர்வு ஆவணமாகக் குறிக்கப் பெறுகிறது.  

தீர்வு செய்தல் என்னும் பொருளையும் குறிப்பதால், வழக்கினைத் தீர்வு செய்து, குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து விடுவிப்பதையும் குறிக்கிறது.
566. Acquittance registerபற்றொப்பப் பதிவேடு  

சம்பளம் முதலிய பணங்கள் சில்லறைச்செலவு முதலிய செலவுத் தொகை, பயணப்படி முதலிய படிகள் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு அவ்வாறு பெற்றமையைத் தெரிவிக்கும் ஒப்புதல் கையொப்பப் பதிவேடு.
567. Acquittance rollபற்றொப்பப் பட்டியல்

(சம்பளச்) செல்லுப்பட்டி  

யார் யாருக்கு, எது எதற்காக? எவ்வெவ்வளவுத் தொகை கொடுக்கப்பட்டது என்பதை நிரல்படக் குறிப்பிடும் பதிவேடு. பணம் பெற்றதற்கான ஒப்புகையும் இப்பதிவேட்டில் இடம் பெறும்.
568. Acreகுறுக்கம்  
¾ காணி, 43,560 சஅ (ஏக்கர்)  

ஏக்கர் என ஒலிபெயர்ப்புச் சொல்லாகப் பயன்படுத்துகிறோம்.   காணி என்றும் குறிக்கின்றனர். ஆனால், காணி என்பது நில அளவையும் குறிப்பதால் குறுக்கம் என இப்போது கூறுகின்றனர்.
569. Acreageநிலப்பரப்பு,  
குறுக்கம் / காணி(ஏக்கர்) அளவிலான நிலப்பரப்பளவு
570. Acrimoniousகடுமையான

எரிச்சலான  

சினம், வாக்குவாதங்கள், மோசமான உணர்வுகள் வெளிப்பாடு முதலியன நிறைந்த கடுந் தகராறு.

Sunday, July 28, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

551. Acquisition Of Possession  உடைமையைக் கையகப்படுத்தல்  

உரிமையாளரிடமிருந்து அவரது இசைவுடனோ இசைவின்றியோ அவரின் உடைமையைக் கைப்பற்றல். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.  

கீட்டன் என்பார் கூறுவதற்கிணங்க, விடுதிக் காப்பாளர், விடுதியில் தங்கியிருப்பவர் விடுதிக்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், அவரது உடைமையைக் கைப்பற்றல் சரியான நடவடிக்கையே. இருப்பினும் இவற்றைக் காவல்துறையினர் முன் மேற்கொள்வது ஏற்றதாகும்.
552. Acquisition Of Propertyசொத்து கையகப்படுத்தல்  

ஒருவரது உடைமையாக அல்லது அவரின் கட்டுப்பாட்டில் அல்லது அவரின் உரிமையின் கீழ் உள்ள சொத்தை வேறொருவர் தனக்குரியதாகக் கையகப்படுத்தல்.  

உடைமை யுரிமை, துய்ப்புரிமை, ஒப்பந்தம், பரம்பரை ஆகிய நான்கு வழிகளில் சொத்து கையகப்படுத்தம் நிகழும்.
553. Acquisition Of Rightஉரிமை பெறுதல்  

துய்ப்புரிமை, மீட்பு உரிமை, பிற உரிமைகளைப் பெறுதல்.
554. Acquisition Of Surplus Landsமிகை நிலங்களைக் கையகப் படுத்தல்
  – தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நிலத்தில் உச்சவரம்பு வரையறை) சட்டம், 1961 (தமிழ்நாடு சட்டம் 58/1961) கீழ் கையகப்படுத்தப்பட்ட மிகை நிலங்கள், தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (மிகை நிலத்தை அகற்றுதல்) விதிகள், 1965 இன் கீழ் ஒருவருக்கு அதிக அளவு 5 நிலையான காணி(ஏக்கர்)வரை ஒதுக்கப்படலாம்.
555. Acquisition Reference Suitகையகப்படுத்தல் எடுகோள் வழக்கு  

கையகப்படுத்தலைக் குறிப்பது தொடர்பான வழக்கு.
556. Acquisition, Compulsory  கட்டாயக் கையகப்படுத்தல்  

ஈட்டுதல் [குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955 பிரிவு 4.83(S. 4(viii) PCRA, 1955)]

கையகப்படுத்துதல்
[இந்திய-தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையச் சட்டம், 1988, பிரிவு 13 (S. 13 NHWA, 1988)]
[மாற்றாள் சொத்துப் பரிமாற்றத் தடைச் சட்டம், 1988, பிரிவு 5. அ (S. 5 BT(P)A,1988)]
[போதை மருந்துகள் – மனநோய் பொருள்கள் சட்டம், 1985, பிரிவு 9.அ.,2 (S. 9A (2) NDPSA,1985)]
    

கட்டாயக் கையகப்படுத்தல் என்பது, நிலத்தின் உரிமையாளர் அல்லது பயன்பட்டாளரின் விருப்பார்ந்த உடன்பாடின்றிப், பொதுநோக்கத்திற்காக  நிலத்தின் உரிமைகளை அரசே எடுத்துக்கொள்ளும் அதிகாரமாகும். – கெய்த்து, 2008 /Keith, 2008
557. acquisitiveஅடைதல்  

ஈட்டம்  
பொதுவான ஒன்றை அல்லது பிறர்க்குரியதை அடைதல், அதிலிருந்து பொருளை ஈட்டுதல்
558. Acquitவிடுவி  

குற்றமின்மையை அறிவி

கட்டணத் தள்ளுபடி

குற்றச்சாட்டினின்று விடுவி

பழி நீக்கு கடனாற்று,

நிறைவேற்று,  

குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், அக்குற்றத்திற்கு எவ்வகையிலும் தொடர்பற்றவர் என அறிந்து முழுக் குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்தல்.  

விடுதலை என்பது தண்டனை முடிந்து விடுவிக்கப்பெறுவதைக் குறிக்கிறது. குற்ற விடுவிப்பு தண்டனை வழங்காமல் குற்றமற்றவர் என விடுவிப்பதைக் குறிக்கிறது.
559. Aequitas erroribus medaturசமன்மை தவறுகளால் இணக்குவிக்கப் படுகிறது.  

இரு தரப்பாரிடையே சந்து செய்கையில்(Mediation) அவரவர் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி  இணக்கம் ஏற்படுத்தல்.
560. Ac-equitas Factum Habet Quod Fleri Oportuitசெய்தக்கன செய்வதே நேர்மை நெறி.  

நேர்மை நெறி என்பது சட்டத்திற்கு முரணாகாது என்பது இலத்தீன் தொடரின் பொருள். அஃதாவது நேர்மை நெறிக்கு முரணாகச் சட்டம் செல்லக்கூடாது என்பது இதன் அடிப்படைப் பொருளாகிறது.  

தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் திருவள்ளுவர்   செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.(திருக்குறள் 466) என்பது சட்ட நெறிக்கும் பொருந்துகிறது.
சட்டநெறி நேர்மை நெறிக்கு முரணாகக் கூடாது என்னும் தமிழ் நெறியே இதைச் சிறப்பாக உணர்த்தும்.

Thursday, July 25, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

541. Acquiring Propertyசொத்தினை அடைதல்  

வணிகச்சொத்துகள் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து கை மாறுகின்றன.

சொத்து கையகப்படுத்தல் என்பது மனைவணிகச்சொத்தின் மீது உரிமை அல்லது உரிமைகளைப் பெறுவதற்கான செயல்முறையைக் குறிப்பது.
542. Acquisition  கையகப்படுத்துதல்  

அகப்படுத்தல்,

கைப்பற்றுகை, கைப்பற்றல், கைக்கொள்ளல்,

ஈட்டல்,

திரட்டூக்கம், 
ஊறல்,
அடைவு,
செயல்,
தேட்டம், 
உழைப்பு,
பெற்றி,
பேறு, உரிமை, 
சேகரம்,
சம்பாத்தியம்,
ஈட்டியது,
முயன்றடைதல், 
வித்தி.  

சம்பத்தி, ஆர்ச்சனம், ஆர்ச்சிதம்,சப்தி, சம்பிராத்தி முதலிய பிறமொழிச் சொற்களைக் கையாள்வதைத் தவிர்க்க வேண்டும்.  

தனியார் சொத்துகளைப் பொதுச் செயல்களுக்காக அரசாங்கமே சட்டப்படி எடுத்துக் கொள்ளுவது, கையகப்படுத்தல் அல்லது நில எடுப்பு எனப்படுகிறது.  

கல்வி நிறுவனங்கள் அமைத்தல், பாலம் கட்டுதல், சாலை போடுதல், பொதுக் குடியிருப்புத் திட்டங்கள், குடிசைமாற்றுத் திட்டங்கள், ஊரகத்திட்டங்கள், நல வாழ்வு நிலையம் அல்லது மருத்துவமனை போன்ற பொதுக்கட்டடங்கள் கட்டுதல் ஆகிய பொதுநலச செயல்களுக்குத் தேவையான நிலங்களைத் தனியாரிடமிருந்து அரசு, தக்க இழப்பீடு தந்துவிட்டு, சட்டபடி தன் கைவசம் எடுத்துக் கொள்வதே இது.   

இந்தியா, பாகித்தான் ஆகிய நாடுகளில், தனியார் வசமுள்ள நிலத்தை, அரசு பொது நோக்கத்திற்காகக் கையகப்படுத்தத் துணை செய்ய ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1894 ஆகும். இது வெவ்வேறு காலக்கட்டங்களில் பல திருததங்களுக்கு உள்ளானது.  

இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) 2011 செட்டம்பர் 7 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் நில எடுப்பு, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை வரையறை ஆகியவற்றை விளக்குகிறது. இச்சட்டம் 2013-இல் நியாயமான இழப்பீட்டு உரிமை, வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு-மீள்குடியேற்றச் சட்டம்(Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013) அல்லது நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013 என்று மாற்றியமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டது.  

சிறப்புப் பொருண்மிய வலயச் சட்டம் (2005), அணுத்திறன் சட்டம் (1962), இருப்பூர்திச் சட்டம் (1989) முதலிய பதினாறு சட்டங்களின் கீழ் நிகழும் கையகப்படுத்தல், இச்சட்டத்தின் பரப்புக்குள் வாரா.
543. Acquisition and transfer of undertaking  எடுப்பிற்குரியவற்றைக் கையகப்படுத்தலும் (உரிமை) மாற்றலும்  

கையகப்படுத்தலும் ஏற்பு நிறுவனங்களை மாற்றலும்   எடுத்துக்காட்டாக ஏற்புவங்கி நிறுவனத்தை/நாட்டுடைமையாக்கப்பட்டநிறுவனத்தை (under taking bank)கையகப்படுத்தி  அதன் உரிமையை மாற்றுதல்  
544. Acquisition by prescription  நீடிய துய்ப்புரிமையால் ஈட்டுதல்

நீண்ட காலத் துய்ப்புரிமை அடிப்படையில் சொத்தினை அல்லது சொத்துமீதான சில உரிமைகளை அடைதல்.  

இந்தியத் துய்ப்புரிமைச் சட்டம் 1882, பிரிவு 15(S. 15 IEA,1882)   பிரிவு4(2) இந்திய மீன்பிடிச் சட்டம், 1897  

prescription என்றால் பெரும்பான்மை மருத்துவர் எழுதித்தரும் மருத்துவக் குறிப்பு என்றே கருதுவதால் அப்பொருளில் சில அகராதிகளில் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் அது பொருந்தாது.
545. Acquisition By Transferமாறுதல் வழி அடைதல்  

மாறுதல் வழிக் கையகப்படுத்தல்  

ஒன்றின் உரிமையை அதன் பங்குகளை மாற்றிப் பெறுதல் மூலம் அடைதல்
546. Acquisition Of Citizenshipகுடியுரிமை பெறுதல்  

பிறப்பால்(பிரிவு 3), பதிவால்(பிரிவு 5), மரபு வழியால்(பிரிவு 4), குடியுரிமை அளிப்பால்(பிரிவு 6), வாழ்நிலத்தை எல்லை வரம்பில் சேர்த்துக் கொள்வதால் குடியுரிமை பெறப்படுகின்றது. (இந்தியக் குடியுரிமைகள் சட்டம்  1955)
547. Acquisition Of Domicile  வாழ்வகம் கொள்ளல்  

வாழ்விடம் கொள்ளல்

வாழிடம் கொள்ளல்

உறைவிடம் கொள்ளல்  

ஒருவர் தன் உரிம மூலம் இல்லாத ஒரு நாட்டில் தன் நிலையான வாழ்விடத்தை அமைத்துக் கொள்வதன் மூலம் புதிய குடியிருப்பைப் பெறுகிறார்.   இந்திய வழியுரிமைச் சட்டம்( The Indian Succession Act,) 1925
548. Acquisition Of Easements  துய்ப்புரிமைகளைப் பெறுதல்  

easement என்றால் வசதி உரிமைகள் என்கின்றனர். இவ்வாறு சொல்வதை விடப்பயன்பாட்டு உரிமை என்னும் பொருளில் துய்ப்புரிமை எனச் சுருக்கமாகக் கூறலாம்.  

இந்தியத் துய்ப்புரிமைச் சட்டம், 1882,(The Indian Easements Act, 1882) பிரிவு 12, அசையாச் சொத்தின் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட உரிமையாளர்களில் ஒருவர், மற்றவர் அல்லது மற்றவர்களின் இசைவுடன் அல்லது இசைவின்றி அத்தகைய சொத்தின் பயன் நுகர்ச்சிக்காக, துய்ப்புரிமையைப் பெறலாம் என்கிறது.  

கூட்டுரிமையாளராலும் துய்ப்புரிமை பெறலாம். இந்நேர்வில் பிற கூட்டுரிமையரின் இசைவு தேவையில்லை.
549. Acquisition Of Gain  ஆதாயம் அடைதல்

ஆதாயத்தைக் கையகப்படுத்தல்  

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் வணிக ஒருங்கிணைவு. இதில், நிறுவனம் 50%இற்கு மேற்பட்ட பங்குகளை வாங்குகையில்  வாங்கப்படும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெறும் ஆதாயம் அடைகிறது.
550. Acquisition Of Landsநிலக் கையகப்படுத்தல்  

நிலங்களைக் கையகப்படுத்துதல்  

நில எடுப்பு  

பொது நன்மை கருதி அரசு நிலத்தை எடுத்துக் கொள்ளுதல்.
காண்க: Acquisition- கையகப் படுத்துதல்

Tuesday, July 23, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

531. Acquired Companyநிறுவனத்தைப் பெறுதல்  

ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தின் மீதான உரிமையை வாங்கிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வணிக நடவடிக்கையாகும்.
532. Acquired Evidenceசான்றாதாரம் அல்லது சான்றாதாரங்கள் அடைதல்  

உண்மையை அல்லது குற்றத்தை மெய்ப்பிப்பதற்காக அடையப்படும் சான்று.
533. Acquired Immunityநோய்மி எதிர் அடைவு  

நோய்த் தடுப்பாற்றலைப் பெறுதல்.  

நோய்த்தடுப்பு மருந்தினைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றுக்கொள்ளல்.
534. Acquired Informationதகவல்களைப் பெறுதல்  

மற்றொரு தரப்பார் அல்லது உறுப்பினர்பற்றிய கமுக்கத் தகவல்களைப் பெறுதல்.  

தன் அல்லது தன் நிறுவன வளர்ச்சிக்கான விவரங்களை அல்லது எதிர்த்தரப்பார் குறித்த தகவல்களை நேர்முகமாகவோ பிறர் வழியாகவோ நேர்வழியிலோ குறுக்கு வழியிலோ பணமோ பொருளோ ஆதாயமோ இவற்றில் இரண்டோ மூன்றோ அளித்துப் பெறுதல். எனினும் நேர்மையான முறையில் பெறும்  தகவல்களே நலம் சார்ந்தவை.
535. Acquired Knowledgeஅறிவைப் பெறுதல் 

கல்வி, கேள்வி, படிப்பு, ஆராய்ச்சி மூலம் அறிவைப் பெறுதல்
536. Acquired Landநிலம் கையகப்படுத்தல்  

பொதுமக்களின் தனியார் நிலத்தைப் பொதுநன்மை கருதி ஒன்றிய அல்லது மாநில அரசு  போதிய இழப்பீடு அளித்துத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது.
537. Acquired Propertyஅடைவு உடைமை  

சொந்த வருவாயிலிருந்து அடைந்த உடைமை

தன்னடைவு உடைமை.

மூதாதையர் மரபு வழி அடையும் உடைமை

மரபு அடைவு உடைமை.
538. Acquired Reputationபுகழ் எய்தல்

நற்பெயர் பெறுதல்  

நற்செயல்கள்/ நற்பணிகள் / நல்ல திட்டங்கள் / நேர்மையான முறைகள் போன்ற நல்ல வழிகளில் புகழைப் பெறுதல்.
539. Acquired Rightபெறப்பட்ட உரிமைகள்  

தனக்குரிய அல்லது தன் நிறுவனத்திற்குரிய உரிமைகளை அடைதல்.  

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மீதான மீற முடியாத தன்மையைக் குறிக்கிறது. பணியில் சேருநரின் அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டிருக்கலாம்.
540. Acquirerஈட்டுநர்  

உழைப்பினால் ஒன்றை உடைமை கொள்பவர் (பி.2(அ) இ.க.ஆ.ச./H.G.L.A.)

கொள்பவர், வாங்கியவர், கைப்பற்றிய நிறுவனம்

Followers

Blog Archive