(சட்டச் சொற்கள் விளக்கம் 491-500 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

501. acknowledge, doctrine of – ஒப்புகைக் கோட்பாடு

இசுலாமியர் சட்டத்தில் இது தந்தைமை ஒப்புகையைக் குறிக்கிறது.

மகவேற்புச்சட்டத்தில், ஏற்கப்பெற்ற குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கை இரு்நததாகக் கருதுவதன்அடிப்படையில் ஒப்புகைக் கோட்பாடு உள்ளது. இருப்பினும் உரிய குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கையின்றித் தகாப் புணர்ச்சியிலோ பரத்தமையிலோ பிறந்ததாயின் இது பொருந்தாது.

502. acknowledgement – ஏற்கை

ஒப்புகை

பெறுகை ஒப்பம்
ஒப்புகைசீட்டு
ஏற்றுக்கோடல்

ஒன்றின் முதன்மையை அல்லது சிறப்பை அல்லது ஒருவரின் நன்றிக்குரிய செயற்பாட்டை ஏற்பது.

ஒப்புகையையும் குறிக்கும்; பெற்றுக்கொண்டேன் என ஒப்புகையின் அடையாளமாகக் கையொப்பம்/கைநாட்டு இடுவதையும் குறிக்கும்; பெற்றதற்கான ஒப்புகையைத் தெரிவிக்கும் சீட்டையும் குறிக்கும்.

சட்டத்தில் ஒப்புகை என்பது தகுதிறமுள்ள அலுவலர் அல்லது நீதிமன்றத்தினர் முன்னிலையில் ஒப்பாவணத்தையோ முறையாவணத்தையோ நிறைவேற்றுவதாகத் தெரிவிக்கும் உறுதியுரை யாகும்.

எதையாவது இருப்பதை அல்லது உண்மையை ஏற்றுக்கொள்வது, அங்கீகரிப்பது, உறுதிப்படுத்துவது அல்லது ஒப்புக்கொள்வது.

வரம்புச் சட்டம் 1963, பிரிவு 18 வரம்புக் காலம் நீட்டிக்கப்படுவதற்கு மாற்றாக,ஏற்கெனவே உள்ள பொறுப்பை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.

ஒப்புதல் அளித்தல் எனக் கருதி ஒப்பளிப்பு எனக் குறிக்கின்றனர். அவ்வாறு சொல்வது Sanction என்று தவறாகக் கருத இடமளிக்கும்.

காண்க: Acknowledge

503. Acknowledgement Of allegiance or adherence to a foreign state – அயல் நாட்டுடன் பற்றுறுதி அல்லது பற்றுமை கொண்டிருத்தல்

அயல்நாட்டிற்குக் கடமைப்பட்டவர்கள் அல்லது பற்றுறுதியுடன் உள்ளவர்கள் இந்திய நாட்டின் நாடாளுமன்ற அவை எதிலும் உறுப்பினராக முடியாது. இந்திய அரசியல் யாப்பு 102 ஆம் பிரிவு 1.ஈ. அயல்நாட்டுடனான பற்றுறுதியை ஏற்பவர் நாடாளுமன்ற எந்த அவையிலும் உறுப்பினராக இருக்க முடியாது என்கிறது.

504. Acknowledgement Of Consent – உடன்பாட்டு ஒப்புகை

ஒப்புகையும் ஒப்புதலும் பிணைப்பத்திரத்திலும் இணை உடன்படிக்கையிலும் இணைக்கப்பட்ட படிவத்தில் கடன் ஆவணங்களில் உள்ள கூட்டுக் குறிப்பீடாகும்.

505. Acknowledgement Of Debt- கடன் ஒப்புகை

கடனொப்புகை
கடனை ஒப்புதல்

கொடுக்கப்பட வேண்டிய கடன் நிலுவையை அல்லது கடன் பொறுப்பு உண்டென்று எழுத்து மூலமாக ஒப்புக் கொள்ளுதல்.

அலுவல் முறை ஆவணம், அதில் யாரோ ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டியிருப்பது தெரிவிக்கப்படுகிறது. சான்றாக நுகரப்படும் எரிவாயுக்கான கடனை ஒப்புக்கொள்கையில் கையெழுத்திடும் போது, வாடிக்கையாளர் இறுதிப் பணம் செலுத்தும் வரை காலத்தாழ்ச்சிக்கான வட்டி பெறப்படும்.

506. Acknowledgement Of Legitimacy, Doctrine Of – முறைமைப் பிறப்பு ஒப்புகைக் கோட்பாடு

முறைமணப் பிறப்பு ஒப்புகைக் கோட்பாடு

முறைமைப் பிறப்பு என்பது சட்டமுறையான திருமண உறவில் நேரும் மகப்பேற்றினைக் குறிக்கிறது.

திருமணத்திற்கு நேரடி ஆதாரம் இருக்கும் பொழுது அத்திருமண உறவில் பிறக்கும் குழந்தைக்கு ஒப்புகை தேவையில்லை. நேரடி ஆதாரம் இல்லையென்றால் மறைமுக ஆதாரம் போதுமானது. இதுவே ஒப்புகை எனப்படுகிறது.

முறைமைப் பிறப்பில் ஐயப்பாடு எழும் நேர்வுகளில் மட்டுமே முறைமைப்பிறப்பு ஒப்புகைக் கோட்பாடு பயன்தேவையாகும்.

507. Acknowledgement Of Liability – கடப்பாட்டு ஒப்புகை
பொறுப்பு ஒப்புகை

பொறுப்படைவு, பொறுப்புப் பரிமாற்றம், கடப்பாடு, பொறுப்பு,
கடன் பொறுப்பு, கடன் திருப்புப் பொறுப்பு, சட்டக்கடப்பாடு,
கடன் தொகை செலுத்தும் கடப்பாடு, கொடுக்க வேண்டியவை, தொகை செலுத்தும் பொறுப்பு


கடன்பாடு, கடம்பாடு, கடப்பாடு, கடன் திருப்புப் பொறுப்பு என liability என்பதற்குப் பல பொருள்கள். இத்தகைய பொறுப்பை ஒப்புக்கொள்வதையே இது குறிக்கிறது.

இதன் உட்கிடை, ஒப்புக் கொள்பவர், உரிய உடைமையின் / சொத்தின் உரிமையாளராக இருக்கிறார் என்பதாகும்.

உடைமையின் உரிமையல்லாத அயலர், சொத்தின் பயனுரிமை குறித்து அறிக்கை வெளியிட்டால், சொத்திற்குச் சொந்தமானவராகவோ ஏற்பிற்குரியவராகவோ இல்லாத காரணத்தால், ஒப்புகை தர இயலாது. – நல்லதம்பி நாடார் செல்லக் கண்ணு எதிர் அம்மாள் நடச்சி செல்லத்தங்கம் வழக்கு 26.07.1963

508. Acknowledgement Of Paternity – தந்தைமை ஒப்புகை

ஒப்புகை என்பது ஒன்றின் இருப்பை ஏற்பது அல்லது ஒப்புக் கொள்வது;

தந்தைமை என்பது ஒருவரின் தந்தையாக இருக்கும் நிலையைக் குறிப்பது.

தந்தைமையின் ஏற்பு என்பது மணமாகாத் தாயாலும் தந்தையாலும் குழந்தையின் தந்தை நிலையை அடையாளம் காட்டும் சட்ட ஆவணமாகும்.
மணமான தந்தை தாயரிடையே இத்தகைய சிக்கல் எழாது. எனினும் தாயை ஒழுக்கக் கேடாகக் குறிப்பிடும் ஐய நேர்வுகளிலும் தந்தைமை அடையாளம் காட்டப்பட வேண்டியுள்ளது.

509.Acknowledgement Of Payee – பெறுநர் ஒப்புகை

தொகை பெறுபவர் ஒப்புகை

எதன் பொருட்டாவது வழங்கப்பெறும் தொகையை அதற்குரியவர் பெற்றுக் கொண்டதற்குத் தரும் ஒப்புகை.

ஊதியம், மிகை ஊதியம், விடுப்பு ஊதியம் போன்ற ஊதிய வகைகள் அல்லது தொடர்பான பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலாகவோ பொருளின் விலை அல்லது முன்பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலாகவோ வைப்புத்தொகை, வட்டி போன்ற ஏதேனும் ஒரு தொகை அல்லது கடன் பெறும் பொழுது அல்லது கடனைத் திருப்பித் தரும் பொழுது கடன்பத்திரத்தில் முழுத் தொகை அல்லது பகுதித் தொகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலாகவோ, அதனைப் பெறுபவர் பெற்றுக்கொண்டமையை ஒப்புக்கொள்ளும் ஒப்புகையாகவோ அல்லது எதன் பொருட்டேனும் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகத் தரப்படும் ஒப்புதலாகவோ இருக்கலாம்.

510.Acknowledgement of Service-
சேர்ப்பு ஒப்புகை

அழைப்பாணை அல்லது பிற வழக்காவணம் ஒருவரிடம் சேர்க்கப்பட்டதும் அதனைப் பெற்றதற்கான ஒப்புகை அளித்தல்.

இந்த இடத்தில் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை என்பதை விட நீதிமன்றம் உரிய ஆவணத்தைச் சேர்த்ததா இல்லையா என்பதே முதன்மையாகிறது. எனவே, பெறுகை ஒப்புகை எனக் குறிக்காமல் சேர்ப்பு ஒப்புகை எனப்படுகிறது.

மடல், ஆணை, அறிவிக்கை அல்லது பிற அலுவலாவணத்தை மற்றவருக்குச் சேர்ப்பதைச் சார்வு என்பர். எடுத்துக் காட்டாக,
service by post : அஞ்சல்வழிச் சார்வு, அஞ்சல்வழிச் சேவை
service of summons : அழைப்பாணை சார்வு செய்தல்
எனலாம். எனவே, சார்வு ஒப்புகை என்றும் சொல்லலாம். எனினும்
dependency : சார்வு எனப்படுவதால் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது.

(தொடரும்)