(சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 581-590
581. Act Done By Consent In Good Faith For Person’s Benefit | ஒருவரின் நலன் கருதி அவர் இசைவுடன் மேற்கொள்ளப்படும் நன்னம்பிக்கைச் செயல் இந்தியத் தண்டிப்பு த் தொகுப்புப் பிரிவு 93, நன்னம்பிக்கையிலான தகவல் தொடர்பை வரையறுக்கிறது. நன்னம்பிக்கையின் அடிப்படையில் ஒருவரின் நன்மை கருதி அவருக்குத் தெரிவிக்கப்படும் தகவல். இதனால் அவருக்கு எத் தீங்கு ஏற்பட்டுத் துன்புற்றாலும் குற்றமாகாது. மருந்துகள், ஒப்பனைப்பொருள்கள் சட்டம், 1940 பிரிவு 37 நன்னம்பிக்கையில் மேற்கொள்ளப்படும் செயல்களுக்குப் பாதுகாப்பு தருகிறது. இதன்படி நன்னம்பிக்கையில் செய்யப்பெற்ற அல்லது செய்யத் திட்டமிட்டுள்ள செயலுக்காக ஒருவர் மீது வழக்கு தொடுக்கவோ குற்றம் சுமத்தவோ வேறு சட்ட நடவடிக்கை எடுக்கவோ இயலாது. |
582. Act Done In Good Faith | நன்னம்பிக்கைச் செயல் நல்லெண்ணச் செயல் நல்லெண்ண நம்பிக்கையுடன் செய்யப்படும் செயல். இ.த.தொகுப்பு 92, நன்னம்பிக்கைச் செயலைக் குறிப்பிடுகிறது. நனனம்பிக்கையில் செய்யப்படும் எச்செயலும் குற்றமாகாது என்பதே இவ்விதி. உரியவரின் ஒப்புதலின்றி நன்னம்பிக்கையில் செய்யப்படும் செயலால் உரியவருக்குத் தீங்கு நேர்ந்தாலும் குற்றமாகக் கருதப்பட மாட்டாது. பொதுவாக நல்லெண்ணச் செயல் என்றே கூறுவர். நல்லெண்ணம் மட்டுமல்ல. தான் நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளும் செயலால் தீங்கு நேராது என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். சான்றாக ஒருவர் எதிர்பாரா நேர்ச்சியால் குற்றுயிரும் குறையுயிருமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். மயக்க நிலையில் இருக்கும் அவரிடம் இசைவு பெற இயலாமலும் அவரது உற்றார் உறவினர் யாரென அறியாமலும் அவரைக் காப்பாற்ற வேண்டி மருத்துவர் பண்டுவம் அல்லது அறுவை மருத்துவம் மேற்கொள்கிறார். ஒருவேளை இதனால் அவருக்குத் தீங்கு நேர்ந்தாலும் இது குற்றமாகாது. காண்க: 581.: Act Done By Consent In Good Faith For Person’s Benefit |
583. Act done in good faith for the benefit of child | குழந்தை/சிறார் நலனுக்கான நன் னம்பிக்கை செயல் இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 89இன்படி, மன நலங்குன்றியவருக்கு அல்லது 12 அகவைக்குட்பட்ட சிறாருக்கு, அவரின் பேணாளர் அல்லது சட்டப்படியான பொறுப்பாளர் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஒப்புதலுடன் அல்லது ஒப்புதல் இன்றி நல்லெண்ணத்தில் மேற்கொள்ளப்படும் செயல் தீங்கு விளைவித்தாலும் குற்றமாகக் கருதப்பட மாடடாது. எடுத்துக்காட்டாக, ‘அ’ என்பவர் தன் குழந்தை நலன்கருதி குழந்தையின் ஒப்புதலின்றி, அக்குழந்தைக்கு இறப்பு நேர வாய்ப்புள்ளதை அறிந்தாலும், ஆனால், அக்குழந்தையை இறக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கமின்றி அறுவை மருத்துவத்திற்கு ஒப்புக் கொள்வது. இதனால், அதுபோல் நலமடையவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மருத்துவர் மேற்கொள்ளும் செயலால் தீங்கு நேர்ந்தாலும் குற்றமாகக் கருதப்பட மாட்டாது. காண்க : 581. Act Done By Consent In Good Faith For Person’s Benefit & 582. Act Done In Good Faith |
584. Act done in private defence | தனிப்பட்ட பாதுகாப்பிற்காக மேற் கொள்ளப்படும் செயல் இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 100, தனிப்பட்ட பாதுகாப்பிற்கான செயலை ஏற்கிறது. இல்லாவிட்டால் பேரிடர் அல்லது ஆபத்து விளைவிப்பவரால் உயிர் போகலாம் அல்லது பெருந் தீங்கு நேரலாம் அல்லது கற்பழிப்பிற்கு ஆளாகலாம் அல்லது அமில வீச்சிற்கு ஆளாகலாம் அல்லது கடத்தப்படலாம் அல்லது அடைத்து வைக்கப்படலாம் போன்று நேர உள்ள பேரிடரைத் தவிர்க்க வேறு வழியின்றித் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் செயல் குற்றமாகாது. இதேபோல், எதிர்பாராப் பேரிடரை அல்லது ஆபத்தை எதிர்நோக்க வேறு வழியின்றி மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூடும் குற்றமாகாது. தில்லியில் 2012இல் குழுக் கற்பழிப்பால் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிருபயா வழக்கின் பின், குற்றவியல் (திருத்தம்) சட்டம் 2013 இயற்றப்பட்டுத் தனியர் பாதுகாப்பிற்குச் சட்ட ஏற்பை முழுமையாக அளிக்கிறது. |
585. Act Done Under Colour Of Office | அதிகாரப் போர்வைச் செயல் எத்தகைய அரசாங்க பொறுப்பும் இல்லாத ஒருவர், ஒரு பொது ஊழியராகப் பணிபுரிவதாக நடிப்பதும் குற்றமாகும். அப்படிப் பொறுப்பில் இல்லாத போது, பொறுப்பில் உள்ள ஒரு பொது ஊழியரைப் போல் ஆள் மாறாட்டம் செய்வதும் குற்றமாகும். இப்படிப் பொறுப்பில் இருப்பது போல நடித்து எத்தகைய செயல் செய்தாலும் அல்லது செய்ய முயன்றாலும் குற்றமாகும். இ.த. தொ.பிரிவு 170 இன் கீழ் இக்குற்றம் ஈராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத் தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் தண்டனைக்குரியது. ஒரு பொது ஊழியர், தனக்குரியதல்லாத பொறுப்பில் இருப்பதாக நடித்துத் தவறான அதிகாரத்தைச் செயல்படுத்துவதும் தண்டனைக்குரிய ஆள்மாறாட்டமே. |
586. Act Done Without Criminal Intent And To Prevent Other Harms | குற்ற நோக்கின்றியும் பிற தீமைகளைத் தடுப்பதற்காகவும் செய்யப்படும் செயல் இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 81 இன்படி தீங்கு நேர்விக்கும் செயல், ஆனால், தீங்கு விளைவிக்கும் எந்தக் குற்ற நோக்கமுமின்றி அச்செயல் செய்யப்பட்டிருப்பின் அது குற்றமாகாது என்கிறது. இச்செயல் நன்னோக்கத்தில், தனியருக்கோ உடைமைக்கோ தீங்கு நேர்வதைத் தவிர்ப்பதாகவோ தடுப்பதாகவோ இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாகத் தீ பரவி வரும் இடத்தில், அத் தீ பிற இடங்களில் பரவுவதை, அதனால் பிற உயிருக்கோ உடைமக்கோ தீங்கு நேர்வதைத் தடுக்கும் நோக்கத்துடன், அந்த இடத்திலோ அருகிலோ உள்ள வீட்டிலுள்ளவரை/ வீட்டில் உள்ளவர்களை அல்லது உடைமைகளை வெளியே இழுத்துப் போட்டாலும் அதனால் தனியருக்கோ உடைமைக்கோ சேதம் ஏற்பட்டாலும் அது குற்றமாகாது. |
587. Act, Entitled to | செயற்பாட்டு உரிமையர் செயற்பாட்டுத் தகுதியர் நிலம் கையகப்படுத்தல் சட்டம், பிரிவு 3 (எ)/ Section 3(g), L.A.A. செயற்பாட்டு உரிமையாளர்கள் குறித்துப் பின் வருமாறு வரையறுக்கிறது. அ) பயனளிக்கும் வகையில் ஆர்வமுள்ள பிறருக்கான அறங்காவலர்கள், அத்தகைய வழக்கு தொடர்பாக, – பயனுறும் ஆர்வமுள்ளவர்கள் செயல்படும் அதே அளவிற்குச் – செயல்படத் தகுதி யுள்ளவர்களாகக் கருதப்படுவார்கள், ஆ.) சிறார்களின் பாதுகாவலர், மன நலங்குன்றியோர் அல்லது பிறவி மந்த மனம் கொண்டோருக்கான குழுக்கள் அல்லது மேலாளர்கள், அத்தகையோர் இயலாமையிலிருந்து விடுபட்டிருந்தால் செயற்படுவதற்குரிய அதே அளவில் செயற்படத் தகுதியுடையவர்கள். உரிமைக்குரிய சட்டம் என்று குறிப்பது தவறாகும். உரிமையுரை சட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம். |
588. Act in his application to a district | மாவட்டத்திற்குப் பொருந்தும் வகையிலான செயல் உரிய மாவட்டத்திற்குரிய செயற்பயன்பாடு |
589. Act in his discretion, to | சதுரப்பாட்டிற்குரிய செயல் மனத்தேர்விற்குரிய செயல் குடியரசுத்தலைவர், ஆளுநர், முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள், முடிவெடுக்க இயலாச் சூழல் இருக்கும் பொழுது மனத்தேர்விற்கேற்பச் செயல்பட உரிமையுடையவர்கள். விருப்புரிமை என்பது விருப்பு வெறுப்பு அடிப்படையிலான முடிவு எனப் பொருள்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அச்சொல்லைப் பயன்படுத்த வேண்டா. சதுரப்பாடு எனக் குறிப்பதும் சரியான சொல்லே. discertion எனச் சில நூலில் இடம் பெற்றுள்ளது அச்சுப்பிழையாகும். |
590. Act in operation | செயற்பாட்டிலுள்ள சட்டம் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஒரு பொருள் குறித்துச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நேர்வில் நடைமுறையில் உள்ள சட்டத்தைக் குறிப்பது. சட்டம் காலாவதியாகவில்லை. நடைமுறைப் பயன்பாட்டில் உள்ளது என்பதைக் குறிப்பது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment