Tuesday, February 17, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

      18 February 2026      கரமுதல



(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 1 : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு, பெரியார், தன்னாட்சி வருமாயின் தன்மொழியும் வேண்டாவோ, தமிழ்நாடு தமிழருக்கே ஆகிய நான்கு அம்மானைப்பாடல்களுடன் நூலைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டுரையான அறிமுகத்தில் இவற்றைக் காணலாம்.

வீட்டுச் சிறையில் இருந்த பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டக்களத்தில் இறங்கிச் சிறை புகுந்ததை இந்நூல் கூறுகிறது. உலகெங்கும் வாக்குரிமை,  அதிகாரம், சம ஊதியம் தொடர்பில் ஏற்பட்ட பெண்கள் எழுச்சியையும் தமிழ் நாட்டில் மொழி காக்க எழுந்த பெண்கள் எழுச்சியையும் விளக்குவதைக் குறிப்பிட்டுள்ளார்.

 பள்ளிகளில் கட்டாய இந்திப்பாடம் 21.04.1938 ஆம் நாளிட்ட அரசாணை மூலம் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பே 24.08.1937 இல் தஞ்சையில்  முதல் இந்தி எதிர்ப்புக் குரல் எழுந்ததைக் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரை இந்நூலின் செய்திகளின் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.

போராட்டக் களத்தில் பெண்கள் பங்கேற்பு குறித்து இரண்டாவது கட்டுரை  விளக்குகிறது.

முதன்முறையாகக் கைதாகிச் சிறை சென்றவர் பெரியார் ஈ.வெ.இராமசாமியின் தங்கை சா.இரா.கண்ணம்மாள் என்பதைக் குறிப்பிடுகிறார். 24.10.1937 இல் இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்று தலையங்கம் எழுதியதால் பெரியாரும் பதிப்பாளர் என்ற முறையில் தங்கை கண்ணம்மாவும் தண்டிக்கப் பெற்றுள்ளனர். இவர், புரட்சி, குடியரசு ஆகிய இதழ்களின் பதிப்பாசிரியராக இருந்தார்.

பேராயம்பட்டுத் தோழர் டி.இரங்கம்மாள், 28.01.1938 ஆம் நாளிட்ட ‘புரட்சி’ இதழில், “திருவண்ணாமலை இரகசியம்- பார்ப்பனர்களின் கொண்டாட்டமும் பாமரர்களின் திண்டாட்டமும்” என்னும் கட்டுரையில் திருவண்ணாமலை தீபத்தின்பொழுது பெண்கள்படும் இன்னல்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். பெண்கள் பொதுவெளிக்கு வருவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்தே பெரியார் இயக்கம் நடத்தும் கூட்டங்கள், மாநாடுகளில் பெண்களுக்கென்று தனியிடம் ஒதுக்கப்பட்டது. பல மாநாடுகளில் பெண்களின் தலைமையுரை, தொடக்கவுரை, மாநாட்டுத்திறப்புரை, எழுச்சியுரை முதலியவை  இடம் பெற்றமையை இக்கட்டுரையில் விளக்குகிறார். நீலாம்பிகை அம்மையார், காந்தி பெண்களின் நிலையை உணராமையைக் குறிப்பிட்டுச் சாடியுள்ளமையை எடுத்துரைக்கிறார்(புரட்சி 04.02.1938).

மூன்றாம் கட்டுரையில் நீலாவதி அம்மையார் காந்தியடிகளிடம் கேட்ட கேள்விகள் குறித்து எழுதியுள்ளார். காந்தியடிகளின் மதவாதப்போக்கிற்கு எதிராகக் கேள்விகள் கேட்ட அவர், அவரது அறிவுரையால் தேசத்தொண்டிலும் அடி எடுத்து வைத்தார். குமுக நீதிக்கும் தன்மதிப்பிற்கும் சான்றாக நீலாம்பிகை அம்மையார் விளங்கியதை இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

போராட்டத்துக்கு உரமிட்ட தலைவர்களை நான்காம் கட்டுரையில் விளக்குகிறார். தமிழர் கழகம் அமைப்பின் தொடக்க விழாவில்(04.09.1938) தலைமையுரையாற்றிய மீனாம்பாள் சிவராசு, பெரியாராலும் அண்ணாவாலும் பாராட்டப்பெற்ற ‘அன்னை’ இதழின் ஆசிரியர் சத்தியவாணிமுத்து, 01.09.1938 இல் நடைபெற்ற மாதர் சங்கப் பொதுக் கூட்டத்தில் பண்டிதை நாராயணி அம்மையார் அமிழ் பாதை ஊர்தி(டிராம்), பேருந்து முதலியவற்றில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் இருப்பதைத் தமிழுக்கு மாற்ற வேண்டும் என்னும் தீர்மானம், 03.09.1938 அன்று தோழர் பார்வதி அம்மையார் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட இந்தி எதிர்ப்பு ஊர்வலம், 09.09.1938 அன்று சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற தோழர் மீனாம்பாள் சிவராசு தலைமையிலான பெரும் இந்திஎதிர்ப்புப் போராட்டம் முதலிய பல போராட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1938 பெண்கள் மாநாடு முதல் அறிவிப்பு குறித்து ஐந்தாம் கட்டுரை விளக்குகிறது.

இவ்வறிவிப்பின் மூலம் இதுவரை சலசாட்சி, சரசுவதி, புட்பவதி ஆகிய பெண் தலைவர்களின் பெயர்கள், தாமரைக்கண்ணம்மையார், கலைமகளம்மையார், மலர் முகத்தம்மையார் எனத் தனித்தமிழ்ப் பெயர்களாக மாறியமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

பெண்கள் மாநாட்டுக்குத் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரைத் தலைவராக்கியது தமிழ் இயக்க மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்ட உதவும் என வீரத்தமிழன்னை தருமாம்பாள் கணக்கிட்டது மிகச் சரியானது என்கிறார். எனவேதான் இந்தி எதிரப்பு என்பது வெறும் இந்தி எதிர்ப்பாக மட்டுமல்லாமல் தனித்தமிழ்க்காப்பாகவும் சிறந்து விளங்கியது.

தோழர் பார்வதியம்மாள் மூவேந்தர் கொடியின் தொன்மை, சிறப்பு ஆகியவற்றை விளக்கி, தமிழ் மக்கள் தமிழ்க்கொடியை ஏற்ற வேண்டிய இன்றையமையாமையையும் வலியுறுத்தி, தமிழ்க்கொடியை ஏற்றி வைத்தார். தமிழர் இயக்கம் வகுப்புவாதமற்றது என்பதை இராசகோபாலாச்சாரி புரிந்துகொள்ள வேண்டும் என்றவர், தமிழர்கட்கு, தமிழ்நாட்டிற்கு வெற்றி வெற்றி என்று வலுத்த கைதட்டுதலுக்கிடையே தமிழ்க்கொடியை ஏற்றியுள்ளார்.

சிலர் திரு.வி.க.விற்கு எதிராகக் குரல் எழுப்பியதையும் அதற்கு அவர் தக்கவிடையிறுத்ததையும் பதிந்துள்ளார்.  பெண்கள் மாநாட்டிற்காகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்தமையை விளக்கி இதன் சிறப்பான ஒழுங்கு முறையைப் பாராட்டியுள்ளார்.

Monday, February 16, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: இலக்குவனார் திருவள்ளுவன்



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: தொடர்ச்சி)

07

தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல்

  ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது.

தமிழென் கிளவியும் அதனோ ரற்றே.

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )

             செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 398)

             செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 400)

             தமிழ்கூறு நல்லுலகத்து

(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)

             செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு

(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)

  தமிழ் இலக்கியங்களில் ஆயிரக்கணக்கில் தமிழ் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கில் தமிழ் அடைமொழிகளுடன் குறிக்கப்படுகிறது. அவ்வாறிருக்க, தமிழ் மொழிக்குப் பெயரைப் பிற இனத்தார் அல்லது மொழியார் சூட்டினர் என்பது கேலிக்குரியதல்லோ?

‘திராவிடம்’ தவறு; தமிழ்க்குடும்ப மொழிகள் என்பதே சரி

  “உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ – ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.” என்கிறார் பழந்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ் பக்கம் 30).

  திராவிடம் என்று சொல்லாமல் நாம் தமிழ்க்குடும்ப மொழிகள், தமிழ்க்குடும்ப இனம் என்றே சொல்வோம். ஆனால், வேண்டுமென்றே திராவிடம் தமிழைக் குறிக்கின்றது என்பதை மறைத்துவிட்டு, தமிழில் இருந்து பிற மொழிகள் வந்தன என்பதையும் மறைத்து விட்டு, மூலத் திராவிட மொழி என்று ஒன்று இருந்ததாகவும் அதிலிருந்தே தமிழ் முதலான மொழிகள் தோன்றின என்றும் திரிப்போர் உலகில் செல்வாக்குடன் திரிகின்ற பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கின்றது?

  தலைசிறந்த மொழியியல் அறிஞர் தொல்காப்பியர். அவர் தமிழ் மரபைக் காக்க அன்றைக்கே நூல் எழுதினார். இன்றைக்கோ மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையர் தமிழின் சிதைவிற்கு வழிவகுத்து வருகின்றனர். பேச்சுவழக்கே மொழியின் உயிர் எனக் கூறிக் கொண்டு, கொச்சை நடைக்கு வாழ்வளித்துச் செந்தமிழை அழித்து வருகின்றனர்.

தமிழ்எழுத்துகளைச் சிதைப்போர் உளரே!

  “ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ளது. தமிழில் ஒலியைக் குறிக்கும் வரி வடிவங்கள் முப்பத்தொன்றேயாகும். ஆங்கிலத்தில் வரி வடிவங்கள் இருபத்தாறு என்றாலும் ஒரே வரி வடிவம் வெவ்வேறு ஒலிகளைத் தருகின்ற முறையில் சில எழுத்துகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இன்று. வல்லின எழுத்துகள் மெல்லினச் சேர்க்கையாலும், சார்ந்து வரும் பிற எழுத்துகளினாலும் ஒலிப்பு முறையில் சிறிது வேறுபடக் கண்டாலும் அதனால் பொருள் வேறுபாடு ஏற்படாது. மிகுமுயற்சியின்றி ஒலிப்பதற்குரிய எழுத்து முறையையுடையது தமிழேயாகும்.” என்கிறார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ், பக்கம் 27).

  உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே என்றும் தமிழரிடமிருந்து சுமேரியர் கற்றுப் பிற இனத்தவர்க்கு அறிவித்தனர் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். தமிழர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே செப்பமுள்ள எழுத்து முறையைக் கொண்டிருந்தனர். ஆதலின், எழுத்து முறை தமிழர்களிடமிருந்தே பிற மொழியாளர்க்குச் சென்றுள்ளது என்னும் கூற்றுப் பொருத்தமும் உண்மையும் உடையதாகவே தோன்றுகிறது. என்றும் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார்(பழந்தமிழ் பக்கம் 26).

  “தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் ‘தொல்காப்பியம்’ தமிழ் எழுத்து முறையை விரிவாக ஒன்பது இயல்களில் ஆராய்கின்றது. இத்தகைய விரிவான ஆராய்ச்சி வேறு எம்மொழியினும் காண்டல் அரிது. ‘எழுத்து’ என்னும் சொல் ஒலி வடிவத்தையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஆதலின் பேச்சு மொழி தோன்றியவுடனே எழுத்து முறையையும் அமைத்துக்கொண்டனர் என்று எண்ண இடம் தருகின்றது. அன்றியும் தமிழில் வரிவடிவ எழுத்து ஒலி வடிவ எழுத்தையே சுட்டுகின்றது. கருத்தினையோ (idea) பொருளையோ (object) சுட்டுவதின்று.” என்றும் நற்றமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகின்றார் (பழந்தமிழ்: பக்கம் 26).

  இத்தகைய ஒலிவடிவச்சிறப்பு மிக்க தமிழ்எழுத்துகளை ஊடகங்கள் வழி சிதைப்பவர்களும் உலவும் பொழுது வாளாவிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைகொள்ள என்ன இருக்கிறது?

தமிழ்வழிக்கல்வி முழுக் கனவாய் மாறிக்கொண்டுள்ளதே!

தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே நம்நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும்” எனப் பயிற்றுமொழிப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்.(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284-285) இன்றைக்கு ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. தமிழ்வழிப்பள்ளிகள் உள்ள அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழி புகுந்துவிட்டது. அது தானாகப் புகவில்லை. அரசால் புகுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழே கல்வி மொழி என்பதைச் செயல்படுத்தாத நாம், தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

Saturday, February 14, 2026

நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: தொடர்ச்சி)

என்ன செய்தாலும் நிலையான வாழ்க்கை கிட்டாது. ஆதலின் நிலையான பயன் தரும் அறம் செய்க!

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.

நாலடியார் 40

கருத்து:

ஈனச்செயலான பிச்சையை மேற்கொண்டேனும் உயிர் வாழலாம் என்னும் நிலை இருந்தால் நிலையான வாழ்விற்காக அதனை மேற்கொள்ளலாம். (ஆனால், உடம்பு நிலையானதில்லை. ஆதலின் நிலையான அறச்செயல் செய்வோமாக!)

பதவுரை:

மான அருங் கலம்=மானம் என்னும் மதிப்பு மிக்க அணிகலனை;  நீக்கி=நீக்கிவிட்டு; இரவு என்னும்=பிச்சை எடுத்தல் என்று சொல்கின்ற;    ஈன=ஈனத்தனமான; இளிவினால்=இழி செயலைச் செய்தாலும் கூட;   வாழ்வேன்மன்=உயிர் வாழ்வேனா; ஈனத்தால்=இழிவான செயல்களால்; ஊட்டியக் கண்ணும்=உணவு வகைகளை உண்பிக்கச் செய்தும்;  உறுதி சேர்ந்து=உறுதிபடச் செய்து; இவ் உடம்பு=இந்த உடல் ;   நீட்டித்து நிற்கும்=அழிவின்றி நிலைத்து நிற்கும்; எனின்=என்றால்;

நிலையாமையைக் கூறுவது போல் தோன்றினாலும் இப்பாடல் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில்தான் வருகிறது. எனவே, அறச்செயல்களை வலியுறுத்துவதற்காக நிலையிலா வாழ்வில் நிலைத்த பயன்தரும் அறச்செயல் செய்ய இப்பாடல் வலியுறுத்துகிறது.

நிலையாமை குறித்துக் காலந்தோறும் பல பாடல்கள் வந்துள்ளன. திரைப்படப் பாடல்களும் பல உள்ளன.

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித சாதி

என்னும் ஆபாவாணன் பாடலும் (ஊமை விழிகள்-1986) அவற்றில் ஒன்றாகும்.

வாழ்வு நிலைக்கும் என்ற கனவில் நிலையான அறச்செயல்களைச் செய்யத் தவறக்கூடாது என்பதே ஆன்றோர் கருத்தாகும்.

‘இரவச்சம்’ எனத் திருவள்ளவர் இரத்தலின் கொடுமை குறித்து ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில். (திருக்குறள் 1063)

என வறுமைக் கொடுமையைப்  பிறரிடம்  இரந்து   போக்கிக்  கொள்ளலாம் என்று கருதக்கூடிய கொடுமையைப்போல் வேறொரு கொடுமை  எதுவும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

நற்செயல்கள்தான் செய்ய வேண்டும். ஆனால் எப்படியாவது நிலையான வாழ்வு பெற வேண்டும் எனச் சிலர் எண்ணலாம். எனவேதான், இழிவான இரத்தலைச் செய்தாவது நிலையான வாழ்வு பெறலாமா என்ற எண்ணம் கொள்வோருக்காக இப்பாடல் அறிவுரை கூறுகிறது.

உயிர் நிலைக்கும் என்றால் இரத்தலைப் போன்ற இழிவான கொடுமையான செயல்களைச் செய்யலாம். ஆனால், என்ன செய்தாலும் வாழ்வு நிலைப்பதில்லை. எனவே, நில்லா உலகில் நிலையான அறச்செயல் செய்ய வேண்டும் என நாலடியார் வலியுறுத்துகிறது.

என்ன செய்தாலும் நிலையான வாழ்க்கை கிட்டாது. ஆதலின் நிலையான பயன் தரும் அறம் செய்க!

 இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, February 12, 2026

குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – தொடர்ச்சி)

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு. 

 (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௪ – 454)

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றும். ஆனால், சூழும் இனத்திற்கேற்ப உண்டாவதே அறிவாகும்.

பதவுரை : மனத்துளது போலக் காட்டி – (ஒருவனின்) மனத்தில் உள்ளதாகத் தோற்றத்தைக் காட்டி; ஒருவற்கு – ஒருவனுக்கு;
இனத்துளதாகும் – அவன் சேர்ந்துள்ள இனத்தின் தன்மையாகவே;
அறிவு – அவனது அறிவு (சிறப்பறிவு) வெளிப்படும்.

 ஒருவன் மனத்தில் உள்ளதுபோல் அறிவு தோன்றும். அது பொய்த்தோற்றம் என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் நல்லினத்துடன் சேர்கிறானா அல்லது தீய இனத்துடன் சேர்கிறானா என்பதைப் பொறுத்தே உருவாகும் அறிவு என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவன் தீய பழக்க வழக்கங்கள் உள்ள இனத்துடன் சேரும் பொழுது அக்கூடாச் சேர்க்கையால் அவனுக்குத் தீய பழக்க வழக்கங்கள் உண்டாகின்றன. அதனால் தீய பண்பினன் ஆகின்றான். அத் தீய பண்புகளுக்கேற்ப அவனது அறிவும் அமைந்து விடுகிறது. அதே நேரம் ஒருவன் நல்லினச் சேர்க்கை உடையவனாக இருந்தால் அவனது இயல்பான நற்பண்புகள் வெளிப்படுவதுடன் மேலும் நற்பண்புகளுக்கு உறைவிடமாகிறான். எனவே, அவனது அறிவு அத்தகைய நற்பண்புகளுக்கேற்பவே உருவாகி அமைகின்றது.

நிலத்தில் விழும் தூய நீர் மண்ணின் தன்மைக்கேற்பத் தன் தன்மை திரிந்து விளங்கும். அதுபோல் சேரும் இனத்தின் இயல்பிற்கேற்ப அறிவும் மாறுபடும் எனத் திருவள்ளுவர் முன்னேர(குறள் 452) கூறியுள்ளார்.

பெரும்பாவச்செயல்கள், ஆணவம், அகங்காரம், தற்பெருமை, நயவஞ்சகம், உள்ளத்தை மறைத்துப் பேசுதல், பொய் பேசுதல், அவதூறு கற்பித்தல், புறம்பேசுதல், அநீதி இழைத்தல், பிறர் பொருள் கவர்தல்,  திருட்டு, கொள்ளை, சூதாட்டம், மோசடி, சோம்பல், மது அருந்துதல், போதைப் பொருள் பயன்பாடு, போதைப் பொருள் விற்பனை, ஏமாற்றிப் பிழைத்தல், பரத்தமை முதலிய பல்வேறு தீய செயல்களில் ஒன்றையோ பலவற்றையோ உடையவர்களாகத் தீயோர் உள்ளனர். இத்தகைய தீய இனத்துடன் சேரும்பொழுது சேருவோரும் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிப் பிறருக்கும் கொடுமை இழைப்பவர் ஆகிவிடுகிறார். தீய பழக்க வழக்கங்களுக்கும் தீய செயல்களுக்கும் ஏற்ப நல்லறிவும் திரிந்து விடுகிறது. நல்லறிவுடையவர்களும் நல்ல திறமை உடையவர்களும் தீய இனத்தால் சேருவதால்  நிலை தடுமாறிச் சீரழிவதை நாம் பலரது வாழ்வில் பார்த்துள்ளோம். இவற்றைக் கதைகள் மூலமும் தொலைக்காட்சி, திரைக்காட்சிகள் மூலமும் நாம் அறிந்து வருகிறோம். எனவேதான் சேரும் இனத்திற்கேற்ப அறிவு அமைவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இதனால் நல்லினத்துடன் சேருவோருக்கு நல்லறிவும் தீய இனத்துடன் சேருவோருக்குத் தீய அறிவும் உண்டாகிறது என்பது உண்மையாகிறது. அஃதாவது அறிவு என்பது சேரும் இனத்தால்தான் உருவாகிறது.

எனவேதான் திருவள்ளுவர் மனம் காட்டும் அறிவைப் பொய்மை எனவும் சேரும் இனத்தால் சேருவதே உண்மையான அறிவு என்றும் கூறுகிறார்.

ஆதலால் சூழலால் உருவாவதே அறிவு என்பதை உணர்வோம்!


Monday, February 9, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: இலக்குவனார் திருவள்ளுவன்



(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: தொடர்ச்சி)

06

  “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.“எனச் செம்மொழி முனைவர் க. இராமசாமி (சென்னை வானொலி நிலையம் நடத்திய இலக்குவனார் நூற்றாண்டு விழா – கருத்தரங்க உரை) தொல்காப்பியத்தின் சிறப்பை விளக்குகிறார். தமிழர்க்காக – தமிழ் மரபுகள் அடிப்படையில் – தமிழ்மரபுகள் காக்கப்பட – தமிழ் முந்துநூல்கள் கண்டு தமிழில் – தமிழரால் எழுதப்பெற்ற தொல்காப்பியத்தை ஆரிய வழி வந்ததாகக் கூறுவோரும் உளர்! அத்தகையோரை உச்சத்தில் ஏற்றிக் கொண்டாடும் நாம் தமிழர் எனப்பெருமைப்பட என்ன இருக்கிறது?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தமிழர் பண்பாடு.

சாதி இரண்டொழிய வேறில்லை’ என்பது தமிழர் நடைமுறை.

  சாதி என்பதே தமிழ்ச்சொல்லல்ல என்பதிலிருந்தே சாதிப்பகுப்புமுறை தமிழர்க்குரியதல் என்பது நன்கு தெளிவாகிறது. ஆனால், நால் வருண வேறுபாட்டைப் புகுத்திய ஆரியர்கள், அதற்கேற்ப தொல்காப்பியத்தில் இடைச்செருகலைப் புகுத்தி, சாதிப்பகுப்புமுறை தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகத் தவறாகவும், இதன் அடிப்படையில் தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தொடர்ந்து இனப்பழிப்பைச் செய்து வருகின்றனர்.

  “மரம், செடி, கொடி முதலிய நிற்பன பற்றிய சொற்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன முதலிய இயங்குவன பற்றிய சொற்கள் யாவும் புலவர் தெரிந்திருத்தல் வேண்டும். மக்களைப்பற்றியும் அவர்களைச் சார்ந்தவற்றைப்பற்றியும் பிற இயல்களில் விளக்கப்பட்டுள்ளன. அங்ஙனமிருந்தும், விலங்குகளைப்பற்றியும் மரங்களைப்பற்றியும் கூறுமிடத்தில் எவ்விதத் தொடர்புமின்றி வருண வேறுபாடுகளைக் குறிக்கும் செய்திகள் கூறப்படுகின்றன. இங்ஙனம் கூறும் பதினைந்து நூற்பாக்களும் (மரபியல் 71 முதல் 85 முடிய) பின்னுள்ளோரால் இடையில் நுழைக்கப்பட்டனவே என்பதில் ஐயமே இன்று. “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்ற நூற்பாவும், “வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல் என மொழிப பிறவகை நிகழ்ச்சி” என்ற நூற்பாவும் குன்றின் விளக்கெனத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கின்றன.” என்கிறார் தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 249).

  “நூல்களைப் பற்றியும் அவற்றின் வகை பற்றியும் செய்யுளியலில் ஆசிரியர் கூறுகின்றார். கூற வேண்டுவனவற்றை ஆங்கே கூறாமல் மரபியலில் கூறத் தலைப்பட்டதன் பொருத்தம் விளங்கவில்லை. உலகியல் மரபினையும் செய்யுளியல் மரபினையும் இங்கு விளக்குகின்றார் என உரையாசிரியர்கள் உள்ளதற்கு அமைதி கூறும் வகையில் உரைத்துள்ளனரேனும் நுணுகி ஆராய்வார்க்கு உண்மை வெளிப்படுதலில் தவறாது. சூத்திரம் என்ற சொல்லும் உத்தி என்ற சொல்லும் தாம் இடையில் புகுத்தப்பட்ட தன்மையை எளிதே புலப்படுத்துகின்றன. ஆதலின் நூறு முதல் நூற்றுப் பன்னிரண்டு முடிய உள்ள நூற்பாக்கள் ஆசிரியருடையனவல்ல என்பது அங்கை நெல்லிக் கனிபோல் விளங்குகின்றது.

  நூற்பாவின் இறுதியில் நூலின் புறனடையாக உரைக்கப்பட்டிருப்பது ஏனைய புறனடைகளோடு ஒப்பிடுமிடத்துத்தான் பின் வந்த பேதைப் புலவன் படைப்பெனப் பேசா நிற்கின்றது.” என்றும் இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியரான பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 250).

இவற்றை எல்லாம் அறிந்தும் தமிழினத்தை இழிவுபடுத்தும் வகையில் நால்வருணப்பாகுபாடும் வேறுபாடும் தமிழர்கள் ஏற்றுக் கொண்ட முறை எனக் கூறுவோர் ஏற்றமுடன் வாழ்கையில் நாம் தமிழர் எனப்பெருமைப்பட என்ன இருக்கிறது?

(தொடரும்)

Sunday, February 8, 2026

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு : இலக்குவனார் திருவள்ளுவன் 1ஃ

 

ஃஃஃ   அகரமுதல  இலக்குவனார் திருவள்ளுவன்  08.02.2026

1



இன்றைய நூலாய்விற்குரிய 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் என்னும் நூலின் ஆசிரியர் இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு, எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஆய்வாளர்,பெண்ணிய வரலாற்றாளர், குமுகச்செய்றபாட்டாளர் ஆவார்.எனவே, இவரது நூல்கள் பலவும் அறியப்படாமல் உள்ள அறிய வேண்டிய செய்திகளை அறியச்செய்யும் வகையில் உள்ளன.

 

முதல் பெண்கள், ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை, சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, வடசென்னை – வரலாறும் வாழ்வியலும், அறியப்படாத கிறித்தவம் (இரண்டு பகுதிகள்), பெயரற்றவர்களின் குரல் முதலிய நூல்கள் இவரது ஆய்வுப் புலமையை வெளிப்படுத்துவன. அவ்வாறுதான் இந்நூலும் அமைந்துள்ளது. 

இவரின் ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை என்ற நூல்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு  தமிழ்ப் பேராயம் வழங்கும்  போப்பு மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுள்ளது.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இயல் இசை அருங்காட்சியகக் கண்காட்சியை வடிவமைத்துத் தந்தார். இவரின் மரபு நடைகள், ஊர்தி உலாக்கள் சென்னையின் பண்பாட்டையும் வரலாற்றையும் மக்களிடம் அறிமுகப்படுத்த உதவுகின்றன. 2023 ஆம் ஆண்டு கோத்தே பயிலகத்துடன்  இணைந்து வண்ணாரப்பேட்டை மரபு நடையை வடிவமைத்து நடத்தினார். பூந்தமல்லி, இராயபுரம், காசிமேடு முதலிய பகுதிகளில் மரபு நடை நடத்தியுள்ளார்.

இலாட்லி தேசிய விருது (2024), இலாட்லி வட்டார விருது (2021), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வழங்கும் தோழர் கே.முத்தையா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் விருது ஆகிய  விருதுகள் இவரின் படைப்பாற்றலுக்குச் சான்று பகர்கின்றன.

தமிழ்நாட்டு மொழிப்போர் வரலாறுகள் இன்றைய தலைமுறையினர் ஓரளவுகூட அறியப்படாத நிலையில் உள்ளன. அதுவும் மொழிப்போரில் பெண்கள் முனைப்புடன் ஈடுபட்டமை வெளிவராத நிலையிலேயே உள்ளன. அவற்றை எல்லாம், அன்றைய இதழ்கள், அழைப்பிதழ்கள் முதலியவற்றின் மூலம் நமக்குச் சிறப்பாக எடுத்துத் தந்துள்ளார். இந்நூலை மாணாக்கர்களுக்குத் துணைப்பாட நூலாக வைக்கலாம். இந்நூலின் கட்டுரைகளைப் பாட நூல்களில் சேர்க்கலாம்.

மொழிப்போரால் ஆட்சிக்கு வந்த அரசுகள் மொழிப்போரை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தத் தவறி விட்டன. இனியாவது வகுப்புகள் தோறும் மொழிப்போர் வரலாறுகளும் மொழிப்போராளிகள் வரலாறும் பாடங்களாக வைக்கப்பட வேண்டும்.

இனி, 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூல் குறித்துப் பார்ப்போம்.

 

இந்நூல் மொத்தம் 18 கட்டுரைகளை உடையது. அவை பின்வருமாறு

 

1. அறிமுகம்

2. போர்க்களத்தில் பெண்கள்

3. காந்தியைக் கேள்வி கேடட நீலாவதி அம்மையார்

4. போராட்டத்துக்கு உரமிட்ட தலைவர்கள்

5. 1938 பெண்கள் மாநாடு முதல் அறிவிப்பு

6. தலைவர் நீலாம்பிகை அம்மையார்

7. பெரியாருக்குப் பெரியார் எனப் பெயர் சூட்ட வேண்டும் - தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம், அன்னை தருமாம்பாள் ..

8. மாநாட்டு நிகழ்ச்சிகள்

9. அன்னை மீனாம்பாள், டாக்டர் தருமாம்பாள், பண்டிதை நாராயணி, பார்வதியம்மையார் உரைகள்

10. வ,பா.தாமரைக்கண்ணி அம்மையார் - வரவேற்புக்குழுத் தலைவர்

11. நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள்

12. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் முறையாகப் பெண்கள் கைது

13. எண்மர் கைது

14. பெரியார் மீது நடவடிக்கை

15. பெண்கள் கைதை ஒட்டிய பிற போராட்டங்கள், கைதான பெண்கள் சிறுகச் சிறுக விடுதலை

16. வேலூர் முதலாவது சென்னை மாநிலத் தமிழ்ப் பெண்கள் மாநாடு

17. கட்டாய இந்தி எதிர்ப்பு

18. பின்னுரை

 

நூலின் முன்னுரையில் நூலாசிரியர் நிவேதிதா உலூயிசு, அன்று பெரியார் என்ன செய்தார்? தமிழ்நாட்டை மொழிப்போருக்கு அவர் எப்படித் தயார் செய்தார் என அறிந்து கொள்வதிலும் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் நம் முனைப்பைக் காட்ட வேண்டிய காலம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல நிறைகள் கொண்ட தலைவர்களிடமும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வாறே பெரியாரிடமும் சில குறைகள் உள்ளன. ஆனால், பெரியாரை இழித்துப் பேசியும், அவருக்குரிய பெருமைகள் எல்லாம் உண்மையானவை யல்ல எனப் பழித்துக் கூறியும் அவரை ஏமாற்றுக்காரர் போல் விவரிததும் எழுதியும் பேசியும் வருவோர் உள்ளனர். அவர்கள் இந்நூலைப் படித்துப் பார்த்தால் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் அரிய பணிகள் நன்கு புலனாகும். ஆனால், அது மட்டும்தான் இந்நூலின் நோக்கமல்ல. இந்நூலின் முதன்மை நோக்கமே 1938 மொழிப்போரில் ஈடுபட்ட பெண்களின் பங்களிப்பு வெளிப்படாமையை வெளிப்படச்செய்வதே ஆகும். அதனை ஆசிரியர் செவ்வனே செய்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

தை 25, 2057 / 07.02.2026 அன்று தமிழ்க்காப்புக் கழகத்தின் ஆளுமையர் உரையின் பொழுது ஆற்றிய நூலுரை

Followers

Blog Archive