(நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: தொடர்ச்சி)

என்ன செய்தாலும் நிலையான வாழ்க்கை கிட்டாது. ஆதலின் நிலையான பயன் தரும் அறம் செய்க!

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.

நாலடியார் 40

கருத்து:

ஈனச்செயலான பிச்சையை மேற்கொண்டேனும் உயிர் வாழலாம் என்னும் நிலை இருந்தால் நிலையான வாழ்விற்காக அதனை மேற்கொள்ளலாம். (ஆனால், உடம்பு நிலையானதில்லை. ஆதலின் நிலையான அறச்செயல் செய்வோமாக!)

பதவுரை:

மான அருங் கலம்=மானம் என்னும் மதிப்பு மிக்க அணிகலனை;  நீக்கி=நீக்கிவிட்டு; இரவு என்னும்=பிச்சை எடுத்தல் என்று சொல்கின்ற;    ஈன=ஈனத்தனமான; இளிவினால்=இழி செயலைச் செய்தாலும் கூட;   வாழ்வேன்மன்=உயிர் வாழ்வேனா; ஈனத்தால்=இழிவான செயல்களால்; ஊட்டியக் கண்ணும்=உணவு வகைகளை உண்பிக்கச் செய்தும்;  உறுதி சேர்ந்து=உறுதிபடச் செய்து; இவ் உடம்பு=இந்த உடல் ;   நீட்டித்து நிற்கும்=அழிவின்றி நிலைத்து நிற்கும்; எனின்=என்றால்;

நிலையாமையைக் கூறுவது போல் தோன்றினாலும் இப்பாடல் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில்தான் வருகிறது. எனவே, அறச்செயல்களை வலியுறுத்துவதற்காக நிலையிலா வாழ்வில் நிலைத்த பயன்தரும் அறச்செயல் செய்ய இப்பாடல் வலியுறுத்துகிறது.

நிலையாமை குறித்துக் காலந்தோறும் பல பாடல்கள் வந்துள்ளன. திரைப்படப் பாடல்களும் பல உள்ளன.

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித சாதி

என்னும் ஆபாவாணன் பாடலும் (ஊமை விழிகள்-1986) அவற்றில் ஒன்றாகும்.

வாழ்வு நிலைக்கும் என்ற கனவில் நிலையான அறச்செயல்களைச் செய்யத் தவறக்கூடாது என்பதே ஆன்றோர் கருத்தாகும்.

‘இரவச்சம்’ எனத் திருவள்ளவர் இரத்தலின் கொடுமை குறித்து ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில். (திருக்குறள் 1063)

என வறுமைக் கொடுமையைப்  பிறரிடம்  இரந்து   போக்கிக்  கொள்ளலாம் என்று கருதக்கூடிய கொடுமையைப்போல் வேறொரு கொடுமை  எதுவும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

நற்செயல்கள்தான் செய்ய வேண்டும். ஆனால் எப்படியாவது நிலையான வாழ்வு பெற வேண்டும் எனச் சிலர் எண்ணலாம். எனவேதான், இழிவான இரத்தலைச் செய்தாவது நிலையான வாழ்வு பெறலாமா என்ற எண்ணம் கொள்வோருக்காக இப்பாடல் அறிவுரை கூறுகிறது.

உயிர் நிலைக்கும் என்றால் இரத்தலைப் போன்ற இழிவான கொடுமையான செயல்களைச் செய்யலாம். ஆனால், என்ன செய்தாலும் வாழ்வு நிலைப்பதில்லை. எனவே, நில்லா உலகில் நிலையான அறச்செயல் செய்ய வேண்டும் என நாலடியார் வலியுறுத்துகிறது.

என்ன செய்தாலும் நிலையான வாழ்க்கை கிட்டாது. ஆதலின் நிலையான பயன் தரும் அறம் செய்க!

 இலக்குவனார் திருவள்ளுவன்