14 April 2026 அகரமுதல
(குறட் கடலிற் சில துளிகள் 42: மனம், செயல் ஆகியவற்றின் தூய்மை இனத்தூய்மையாலே வரும்.- தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள் 43
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௬ – 456)
மனத்தூய்மை உடையவர்க்கு அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியன நல்லவையாய் அமையும். தூய இனம் உடையவர்க்கு நன்மை விளைவிக்காத செயல் எதுவுமில்லை.
பதவுரை: மனம்-உள்ளம்; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; எச்சம்- புகழ்; நன்றாகும்-நன்மையுடையதாகும்; இனம்-குழு; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; இல்லை-இல்லை; நன்று-நன்மையுடையது; ஆகா-ஆகாத; வினை-செயல்.
எச்சம் என்பதற்கு மணக்குடவர் “பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள்” என்கிறார். காணம் என்னும் சொல்லுக்குக் கொள்ளு, செக்கு, பழைய நிறுத்தலளவை ஒன்றின் பெயர், பொன், பொருள், பாகம் எனப் பொருள்கள். மணக்குடவர் பொன், பொருள் முதலியவற்றைக் கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பரிப்பெருமாள் மக்கள் முதலான பொருள்கள் என்றும் பரிதி புதல்வர் என்றும் காலிங்கர் மக்கட்பேறு முதலிய என்றும் பரிமேலழகர் மக்கட்பேறு என்றும் கூறுகின்றனர்.
இவர்கள் வழியில் இன்றைய ஆசிரியர்களில் பலரும் பின்வழி என்றும் மக்கட்பேறு என்றும் நன்மக்கட் பேறு என்றும் எச்சத்திற்குப் பொருள் காண்கின்றனர்.
ஆனால், இவை பொருந்தா. திருமணமாகாதவர்க்கும் அல்லது திருமணமாகிக் குழந்தைப் பேறு பெறாதவர்களுக்கும் இவ்வாறான குறட்பொருள் பொருந்தாதே!
எச்சம் என்றால் என்ன? எஞ்சி நிற்பது. அஃதாவது ஒருவர் மறைவிற்குப் அவர் விட்டுச் செல்வது. ‘மிச்சம்’ ‘விட்டிருப்பது என்றும் கூறுவர். ஒருவர் ஈட்டிய பொன், உடைமைகள், பிள்ளைகள், புகழ், நற்பெயர், நற்செயல்களின் அடையாளங்கள். முதலியனவே எச்சமாகின்றது. ஒருவர் கல்விக்கூடம், மருத்துவமனை, நீர்நிலைகள், திருமண மண்டபங்கள் முதலியவற்றைக் கட்டித்தந்திருந்தால் அவருக்குப் பின்னும் அவை மக்கட்குப் பயன்பட்டு அவரின் நற்பெயர்களைப் பறைசாற்றும். இவையே எச்சமாகும்.
தூய மனம் கொண்டவர்கள் பிறருக்கு நற்செயல்கள் புரிவர். அவற்றால் பயனடைந்தவர்கள் அவர்களின் புகழைப் பறைசாற்றுவர். நல்வினைப் பயன் என்பதையும் எச்சமாகத்தான் கருத வேண்டும்.
இனத் தூய்மை உடையவர்கள் நல்ல துணையுடன் இருப்பர். நற்செயல் புரிவோர் நற்றுணையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆகாதது என்று எதுவும் இல்லாமல் அவர்களுக்கு நடப்பனவெல்லாம் நல்லனவாகவே இருக்கும்.
இனத் தூய்மை உடையவர்கள் நல்ல துணையுடன் இருப்பர். நற்செயல் புரிவோர் நற்றுணையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆகாதது என்று எதுவும் இல்லாமல் அவர்களுக்கு நடப்பனவெல்லாம் நல்லனவாகவே இருக்கும்.
அப்படியானால், இனத்தூய்மை உடையவர்க்குத் தீயன விளையாதா? இடர்கள் ஏற்படாவா? துன்பங்கள் உண்டாகாவா? துயரங்கள் வாராவா? இவை வரலாம். ஆனால் இவற்றால் பாதிப்புகள் ஏற்படா வண்ணம் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களையும் நட்பு. எனவே, தூய இனத்தை உடையவர்க்கு இன்னலைக் களையும் நட்பு இருப்பின் எல்லாமே நல்லனவாகும். எனவே, நன்றாகாத வினை எதுவும் இருக்காது.
ஆதலின் மனத்தைத் தூயதாக வைத்திருப்போம்! நல்லினத்துடனே நட்பு பாராட்டுவோம்! நமக்கும் நம்மைச் சார்ந்தவர்க்கும் நல்லனவே நிகழும்!
நாம் ஆற்றும் நல்வினைப் பயன்களின் நல் விளைவுகள் நாம் மறைந்த பின்னரும் எஞ்சி நின்று நம் பெயரை நிலை நிறுத்தும். எனவே, நாமும் நாம் விட்டுச்செல்வதற்குரிய நற்பயன் தரும் அருஞ்செயல் ஆற்றுவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment