(கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1 : தொடர்ச்சி)

தென்னிந்தியா – இலங்கை கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்ற இராமச்சந்திரனார் குறித்த ஆங்கிலக் கட்டுரையை அளித்துள்ளார். இதுபோல் இராமச்சந்திரனாரின் இளைய மகன் இராமச்சந்திரன் எழுதிய மற்றோர் ஆங்கிலக் கட்டுரையையும்  ‘சாதனையாளர் சரிதை’ என்னும் ஐந்தாவது கட்டுரையில் அளித்துள்ளார்.

இராமச்சந்திரனாரின் முதல் முழக்கம 1916 இல் எழுதப்பெற்றது. அது வருமாறு

ஏ தாழ்ந்ததமிழகமே!

என்று நீ சமூக நீதி பெறுவாய்?

ஏ வீழ்ச்சியுற்ற தமிழகமே!

என்று நீ சமநீதி பெறுவாய்?

ஏ ஒடுக்கப்பட்ட தமிழகமே!

என்று நீ  இனவுணர்வு கொள்வாய்?

திராவிட இயக்க மாநாடுகளில் இராமச்சந்திரனார் கொண்டு வந்த ஒவ்வொரு தீர்மானமும் சீத்திருத்த நோக்கம் கொணடவை. பள்ளிகளில் சாதி வேறுபாடற்ற கட்டாயக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பெற வேண்டும் பாடப்புத்தகங்களில் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பெற்றுப் பகுத்தறிவு  புகட்டப்பட வேண்டும் என்பவை முதன்மையானவை. இவை ‘திராவிடத் தீர்மானங்கள்’ என்னும் எட்டாவது கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

‘இராமச்சந்திரனார் பேசுகிறார்’ என்னும் ஒன்பதாவது கட்டுரையில் அவரதின் பேச்சகளைக் குறிப்பிட்டு அவற்றின் மூலம் அவரது கோட்பாடுகளை விளக்கியுள்ளார்.

‘எப்படித் தோன்றினார் இராமச்சந்திரனார்’ என்னும் பத்தாவது கட்டுரையில் 1913 இல் சட்டக் கல்லூரியல் பயின்ற பொழுதே சீர்திருத்தப்பாதையில்   பயணித்து தென்னிந்திய நல உரிமைச்சங்கப் பணிகளில் ஈடுபட்டுப் பல்வேறு மாநாடுகளில் பங்கேற்றமையைக் குறிப்பிட்டுள்ளார்.

‘மாவீரர் கண்ட மாநாடுகள்’ என்னும் பதினோராம் கட்டுரையில் மேலும் அவர் பங்கேற்ற மாநாடுகளின் சிறப்புகளை விளக்கியுள்ளார்.

‘கொள்கை அரசர் ஆண்டகுடியரசு’ என்னும் பன்னிரண்டாம் கட்டுரையில் இவரின் அரசியல சுவடுகளைக் குடியரசு இதழ் பதிந்துள்ளவற்றை விளக்கியுள்ளார்.

‘வகுப்புரிமை பற்றி வ.உ.சிதம்பரனார்’ பேசியதைப் பதின்மூன்றாம் கட்டுரையாக அளித்துள்ளார்.

‘சிவகங்கைச் சூரியனின் தொலைநோக்குப் பார்வை’யைப் பதினான்காம் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

‘தலைமுறைத் தலைவர்கள்’ எனப் பெரியார், இராமச்சந்தினார் அறிஞர் அண்ணாவைக் குறிப்பது பதினைந்தாம் கட்டுரை.

‘பெரியாரின் உறவினர்’ என்னும் பதினாறாம் கட்டுரையில் இராமச்சந்திரனாரைப் பெரியார் போற்றுவதைக் குறிப்பிடுகிறார்.

“தோழர் இராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும் மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய செளகரியமும் இருந்தும் அவற்றை இலட்சியம் செய்யாமல், இயக்கத்திலேயே கவலை கொண்டு மற்றவற்றை அலட்சியம் செய்து வந்த உண்மைச் சுயமரியாதை வீரரும் ஆவார்” என்று எழுதியுள்ளார்.

கடமை உருவாக்கிய உறவு நாகம்மையார் நட்பு

முதுமை உருவாக்கிய உறவு மணியம்மையார் நட்பு

காலம் உருவாக்கிய உறவு இரசாசி நட்பு

கொள்கை உருவாக்கிய உறவு இராமச்சந்திரனர் நட்பு

என இக்கட்டுரையை முடிக்கிறார்.

1929 ஆம் ஆண்டு நடைபெற்ற தன்மதிப்பு மாநாட்டிலும் தன்மதிப்பு மாநாட்டிலும் அதற்கு முன்னரே நடைபெற்ற பல பொதுக்கூட்டங்களிலும் தந்தை பெரியாரை இராமச்சந்தினார் பெளத்தர் என்று அடைமொழி இட்டு அழைத்து வந்தார்.

இருபதாம் நூற்றாண்டு பெளத்தர்

நமது பெளத்தர்

தீர்க்கதரிசி பெளத்தர்

பெளத்தர்

எனப் பலமுறை பல வகைகளிலும் அழைத்து வந்துள்ளார்.

இதனைப்  ‘புத்தரும் புனிதரும்’ என்னும் பதினேழாம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் வைரவிழுது‘ என்னும் பதினெட்டாம் கட்டுரையில் இராமச்சந்திரனார் மீது அண்ணா வைத்திருந்த மதிப்பைக் குறிப்பிட்டுள்ளார். 28.02.1984 இல் சிவகங்கையில் இராமச்சந்தினார் பெயரில் பூங்கா ஒன்றை அண்ணா திறந்து வைத்தார். அப்போது ஆற்றிய உரையில் முத்தாய்ப்பாக அண்ணா கூறியதை நிறைவு செய்து இக்கட்டுரையை முடித்துள்ளார். அவ்வுரை வருமாறு

‘சுயமரியாதைத் தீபம் ஏந்தும் படையின் தளபதி’  என்று தொண்டர்கள் சொன்னதாகவும் ‘இனமானக் காவலர்’ என்று திராவிட இனம் சொல்வதாகவும் ‘அறிவுப் பூகம்பம்’ என்று திராவிடன் நாளேட்டின் ஆசிரியர் செ.எசு.கண்ணப்பன் சொன்னதாகவும் ‘மூட நம்பிக்கையை அழிக்க வந்த பீரங்கி’ என்று பட்டுக்கோட்டை அழகிரி சொன்னதாகவும் ‘சுயமரியாதைக் களஞ்சியம்’ என்று பூவாலூர் பொன்னம்பலனார் சொன்னதாகவும் ‘எனக்கு ஊக்கமளித்த வழிகாட்டி’ என ஆர்.வி.சாமிநாதன் சொன்னதாகவும் ‘என்னை உயர்த்திய தலைவர்’  என்று வி.வி.இராமசாமி சொன்னதாகவும் ‘என்னைப் பொதுவுடைமை வாதியாக உருவாக்கிய செம்மல்’ எனத் தோழர் சீவா சொன்னதாகவும் ‘கருப்பு மெழுகுவர்த்தி’ என்று கைவல்ய சாமியார் சொன்னதாகவும் ‘சுயமரியாதைச் சிங்கம்’ என்று குத்தூசி குருசாமி சொன்னதாகவும் சமூகநீதிச் சிற்பி என்று ஈரோடு ஐயாமுத்து சொன்னதாகவும் ‘பெண்கள் விடுதலைக்காகக் கொட்டும் முரசு’ என்று மரு.முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் சொன்னதாகவும் ‘ஈரோட்டின் பகுத்தறிவுப் பதிப்பகம்’ என்று இலக்கியவாதிகள் சொன்னதாகவும் ‘சுயமரியாதையில் தீட்டப்பட்ட வைரம்’ என்று எழுத்தாளர்கள் சொன்னதாகவும் ‘என் பூணூலை விலைபேசிய பகுத்தறிவு வாதி’ என்று மதுரை காங்கிரசு தலைவர் வைத்தியநாத ஐயர் சொன்னதாகவும் அண்ணா சொல்லி முடித்தார்கள்.