(குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – தொடர்ச்சி)
குறட் கடலில் சில துளிகள்
47: நல்லினத்துடன் சேர்க!
நற்சேர்க்கை போல் சிறந்த துணை இல்லை!
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். (௪௱௬௰ – 460)
உலகில் நல்லினம்போல் துணையாய் அமைவது வேறில்லை; தீயினம்போல் துன்பம் தருவது யாதுமில்லை.
பதவுரை
நல்=நல்ல; இனத்தின்=சேர்க்கையைவிட; ஊங்கு=மேற்பட்ட; துணை=துணை; இல்லை=இல்லை; தீ=தீய; இனத்தின்- சேர்க்கையைவிட; அல்லல்=துயர்; படுப்பதூஉம்=உண்டாக்குவதும்/ தருவதும்; இல்=இல்லை.
‘ஊங்கு’ என்ற சொல்லுக்கு மிக்க, மேலாயிருப்பதொரு, சிறந்ததாகிய, சிறந்த, மேலான, மிகுந்தது, போல, மேம்பாடு என்றவாறு பல பொருள்கள் உள்ளன.
படுப்பதூஉம் – இன்னிசையளபெடை
நம்முடனான சேர்க்கை நல்லதாய் இருப்பின் அதுவே சிறந்த துணை என்கின்றனர். சேர்க்கை கெட்டதாக இருப்பின் அதைவிட வேறு கேடு எதுவும் இல்லை.
நல்லினம் நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்; அறிவின் பாதையில் இட்டுச் செல்லும்; தீயவற்றை விலக்க வழி காட்டும்; துன்பம் வராமல் காக்கும்; நாம் கேட்காமலேயே நமக்குத் துணையாக இருக்கும்.
தீ யினமோ இதற்கு நேர்மாறான விளைவுகளை உருவாக்கும்; தீய பாதையில் செல்ல வைக்கும்; அறியாமையின் பக்கம் அழைத்துச் செல்லும்; நல்லனவற்றை விலக்கி வைத்துவிடும்; இன்பம் வருவதற்குத் தடையாக இருக்கும்; கூடவே இருந்து பகையாக இருக்கும்.
நல்ல எண்ணம் கொண்ட மனிதன் வழிமாறி தீய கூட்டத்துடன் சேர்ந்தால் துன்பம்தான் விளையும். ஆதலின் இச்சேர்க்கை பகைவருடன் கூட்டு வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தீய சேர்க்கை அறிவிலிருந்து விலக்கி அறியாமை பக்கம் அழைத்துச் செல்வதால் பகையாகிறது. எனவே, தீய சேர்க்கை கேடு நிறைந்த வாழ்க்கையைத் தருகிறது.
ஆனால் நல்ல கூட்டத்துடன் சேர்ந்தால் முள் நிறைந்த பாதையைக்கூட மலர் நிறைந்த பாதையாக மாற்றி விடும். தீயன எவை, நல்லன எவை என வழிகாட்டி நல்ல பாதையில் நடைபோடச் செய்யும். வாழ்க்கைப் பாதையைச் செப்பனிடச் செய்து, நன்மை நிறைந்த வாழ்க்கையைத் தரும். எனவேதான் நல்லினத்தைத் துணை எனவும் தீயினத்தைப் பகை எனவும் திருவள்ளுவர் கூறுகிறார்.
“கூடா நட்பு கேடாய் முடியும்” என்னும் ஆன்றோர் வாக்கும் தீய சேர்க்கையின் தீமையைக் கூறும்.
திருவள்ளுவரும் உடன்பாட்டு முறையில் ‘பெரியாரைத் துணைக் கோடல்’ என அதிகாரம் தந்ததுடன் ‘கூடா நட்பு’ என்றும் ‘சிற்றினம் சேராமை’ என்றும் தனித்தனியே ஈரதிகாரங்களைத் தந்துள்ளார். நல்ல சேர்க்கையை அடையாளம் காணவே ‘நட்பாராய்தல்’ என்றும் அதிகாரம் தந்துள்ளார்.
பலமுறையும் ஆராய்ந்து மேற்கொள்ளாத நட்பு தீயதாக அமையின் அது சாகும்வரை துன்பத்தைத் தருவதாக அமையும்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். (திருக்குறள், ௭௱௯௰௨ – 792)
என்கிறார் திருவள்ளுவர்.
கூடா நட்பு குறித்து நாலடியாரும் விளக்கியுள்ளது.
“ஏமாந்துபோகாதீர்கள்; ‘கெட்ட தோழமை நல்ல ஒழுக்கத்தைக் கெடுக்கும்'” (1 கொரிந்தியர் 15:33) என்கிறது விவிலியம்.
இவ்வாறு உலக நூல்கள் பலவும் கூடா நட்பை அதன் தீமை கருதி விலக்கவே கூறுகின்றன.
எனவே,
துணையாய் அமையும் நல்லினத்துடன் சேர்க!
தீமை விளைவிக்கும் தீயினத்தை விலக்குக!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment