Showing posts with label அன்றே சொன்னாரகள். Show all posts
Showing posts with label அன்றே சொன்னாரகள். Show all posts

Wednesday, March 30, 2011

andre; sonnaargal 42: building types 2: அன்றே சொன்னார்கள் 42 : கட்டட வகைகள் -2

அன்றே   சொன்னார்கள் 42 : 

>>அன்றே சொன்னார்கள் 42


கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2

                                                                                                                

natpu
பல்வேறு வகையான வீடுகள் இருந்தமையை முதலில் பார்த்தோம். சிறந்த நகர அமைப்பும் உயர்ந்த ஊரமைப்பும் கொண்டிருந்த நகரங்களிலும் ஊர்களிலும் அமைந்த வீடுகள் வளமை மிகுந்ததாகவும் நன்முறையிலும் இருந்தமை பல பாடல்கள் மூலம் தெரியவருகின்றன.

பொதுவாக மனை என்பது வீட்டையும் வீட்டின் முன்புறம் உள்ள முற்றம், பின்புறம் உள்ள கொல்லை, சுற்றி உள்ள தோட்டம் ஆகியவற்றையும் இவ்வீட்டுப் பகுதி அமைந்துள்ள பொழிலையும் சேர்ந்த நிலப்பகுதியையும் குறிக்கின்றது.

மனை என்பது புலவர்களால் பல இடங்களில் குறிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் சில, (ஆய்வாளர்களுக்கு உதவும் என்பதால்) இங்குத்தரப்படுகின்றன.

அம்மூவனார் : நம் மனை (குறுந்தொகை : 327.5)
அள்ளூர் நன்முல்லையார் : நம் மனை (அகநானூறு: 46.9)
ஆலங்குடி வங்கனார் : எம்மனை (நற்றிணை: 330.7)
ஆலம்பேரி சாத்தனார் : மனைவயின் (அகநானூறு : 47.9-12)  
உலோச்சனார் : மனை (அகநானூறு : 400.2; அகநானூறு : 300.8); மனையிருந்து   
      (நற்றிணை : 372.10)
ஐயூர் முடவனார் : மனை (குறுந்தொகை :  322.5)
ஒக்கூர் மாசாத்தியார் : மனை (அகநானூறு : 384.13)
ஔவையார்:  நம் மனை (நற்றிணை : 129.5 )
ஓதலாந்தையார் : நும் மனை (குறுந்தொகை 399.1)
ஓரம்போகியார் :  தன் மனை (ஐங்குறுநூறு : 3.5); துஞ்சுமனை நெடுநகர்
     (ஐங்குறுநூறு:60.3);நின் மனை (ஐங்குறுநூறு:77.4); நும்மனை(ஐங்குறுநூறு :  
      86.4)
ஓரம்போகியார் : மனை (அகநானூறு : 316.11)
கபிலர் : மனை (கலித்தொகை : 57.24; அகநானூறு : 203.18); பிறர் மனை
     (கலித்தொகை : 59.16 ); (அகநானூறு :128.1)
கயமனார் : எம் மனை (அகநானூறு : 195.18); தன்மனை (அகநானூறு : 195.19)
கருவூர்ப் பூதஞ் சேந்தனார் : மனை : (அகநானூறு : 50.11)
காவன் முல்லைப் பூதனார் : மனை (அகநானூறு 21.7); எம்மனை  (அகநானூறு  
   195.18)
கூடலூர்ப் பல்கண்ணனார் : பாடு மனை (நற்றிணை : 380.10)
தங்காற் பொற்கொல்லனார் : செழு மனை (அகநானூறு: 355.8)
நக்கீரனார் : மனை (அகநானூறு : 389.10); எம் மனை (அகநானூறு : 346.16); நும் மனை (அகநானூறு : 346.17)
நல்லாவூர் கிழார் : மனை (அகநானூறு : 86.4)
பாலை பாடிய பெருங்கடுங்கோ : மனை  (குறுந்தொகை: 124.4);
     (கலித்தொகை :11.20); தன் மனை (குறுந்தொகை : 262.3)
பாலைக் கௌதமனார் : மனை (பதிற்றுப்பத்து : 26.3)
புலவர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) : நம் மனை (குறுந்தொகை :  321.3 )
புலவர் குன்றம் பூதனார்: மனை (பரிபாடல்: 9.21)
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் : எம் மனை (அகநானூறு : 56.12);  
      இம் மனை அன்று; அஃது எம் மனை (அகநானூறு : 56.14)
மதுரை நக்கீரர் : தன் மனை (புறநானூறு : 395.29) 
மதுரை மருதனிளநாகனார் : மனை (நற்றிணை : 392.3; கலித்தொகை : 68.22); 
   நுந்தை மனை (நற்றிணை : 362.2); எம் மனை (கலித்தொகை : 75.18; 77.18; 89.2)
மாங்குடி மருதனார் : (புறநானூறு : 396.7) மனைக்கோசர்
மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்: மனை மனை (அகநானூறு:54.12)
செல்லூர்ககோசிகன் கண்ணனார் : இன்சீர் அவர் மனை (அகநானூறு : 66.22)
நொச்சி நியமங்கிழார் : பிறர் மனை (புறநானூறு : 293.5)
வெள்ளை மாறனார் : எல்லா மனை (பிறர்மனை : 296.3)
பேயனார் : தன் மனை (குறுந்தொகை : 480.3)
பேயனார் : மனை (குறுந்தொகை : 405.2) 

natpu
யாரும்  குடியிராத வீடுகளை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் :
      புல்லென் வறுமனை (நற்றிணை : 321.6)
என்றும் புலவர் பாலைக் கௌதமனார்
     பீர் இவர் வேலிப் பாழ்மனை (பதிற்றுப்பத்து : 26.10) என்றும் (பீர் இவர்
பீர்க்கங்கொடி படர்ந்த) குறிப்பிடுகின்றனர்.

குடில்கள் வைக்கோலால் வேயப்பட்டன. (வீட்டின் முன்புறம் உலக்கையால் அவல் இடிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர்.) இதனைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
வரம்பில் புது வை வேய்ந்தகவி குடில் முன்றில்
அவல் எறி உலக்கைப் பாடுவிறந்து (பெரும்பாணாற்றுப்படை 226-227)
எனக் குறிப்பிட்டுள்ளார்.
(வை- வைக்கோல்; கவி குடில்- கவிழ்ந்த தோற்றத்தில் உள்ள கூரைஉடைய குடில்)

வீடுகள் வெயில் தாக்காத அளவிற்குக் குளிர்ச்சியாகவும் செழிப்பாகவும் அமைக்கப்பட்டிருந்தன என்பதைப் புலவர் ஒருவர்,
செழுந்தண் மனை (நற்றிணை : 271.3) என்று குறிப்பதன் மூலம் தெரிவிக்கின்றார்.

இப்பொழுது வீடுகளைச் செயற்கை முறையில்தான் குளிர்ஊட்டி வைத்திருக்கின்றோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கட்டடஅறிவியல் முறையிலேயே வெப்பம் தாக்காத படிச் சிறப்பாகக் கட்டடங்களை அமைத்துள்ளனர் என்பது அறிவியல் விந்தையன்றோ!

வீடுகள் அமைந்த முறை பற்றிய மேலும் சில தகவல்களைத் தொடர்ச்சியாக அடுத்துக் காண்போம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்



Thursday, March 10, 2011

andre' sonnaargal 37- shoes:அன்றே சொன்னார்கள் 37 - காலணிகளைக் கவினுற அமைத்தனர்

>>அன்றே சொன்னார்கள்37


காலணிகளைக் கவினுற அமைத்தனர்

                                                                                                                

natpu 
கற்களிலும் முட்களிலும் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுது அதனால் ஏற்படும் துன்பத்தில் இருந்து விடுபட மனிதன் தொடக்கக் காலத்திலேயே கால்களில் எதையோ அணியும் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும். அதுவே மக்கள் கூட்டத்தின் நாகரிகத்திற்கேற்ப வெவ்வேறு காலணிகளாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரேகான்(Oregon) பகுதியில் உள்ள கற்கோட்டைக் குகையில் (Fort Rock Cave) 10,000 ஆண்டுக்காலத் தொன்மையான காலணிகள் 1938இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 2009இல் ஆர்மேனியாவில் குகை ஒன்றில்  3500 ஆண்டுத் தொன்மையான காலணியைக் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தியர்கள் பண்டைக்காலத்தில் பனை ஓலைகளாலும் நாணற் புற்களாலும் ஆனக் காலணிகளை அணிந்துள்ளனர். எகிப்திய குருமார்களின் ஆடைத் தொகுப்பில் இக்காலணிகளும் இடம் பெற்றிருந்திருக்கின்றன. மெசபடோமியாவில் தோலினால் ஆனக் காலணிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உரோம் நாட்டில் ஆடம்பரப் பொருளாக இருந்த காலணிகள் மாவீரர் அலெக்சாண்டருக்குப் பிந்தைய அகசுடசு எழுச்சி வரையிலான 300 ஆண்டுக் காலத்தில் (கி.மு.323-கி.மு.30) ஓரளவு பரவலான பயன்பாட்டிற்கு வந்தன. இருப்பினும் கி.பி.1760இல் முதல் காலணித் தொழிலகம்  அமைக்கப்பட்டது. எனினும் பிற நாடுகளில், 19ஆம் நூற்றாண்டில்தான் பொது மக்கள் காலணிகளைப் பரவலாகவும் பலவகைகளிலும் பயன்படுத்தத் தொடங்கினர்.

natpu கிரேக்கத்தில் கி.மு.முதல் நூற்றாண்டில் தொன்மைக்கதை ஒன்றில் முதன்முறையாகக் காலணி இடம் பெற்றுள்ளது. (இக்கதையைத் தழுவி 1634 இல் கியம்பட்டிசுட்டா பசிலி(Giambattista Basile) என்பவர் கதைகளின் கதை(Lo cunto de li cunti) என்னும் நூலில் காலணி அடிப்படையில் கதையைப் படைத்தார். 1697 இல் சார்லசு பெர்ரால்டு (Charles Perrault) கண்ணாடிக்காலணியாக மாற்றிச் சுவையுடன் சிந்தரெல்லா (Cinderella) கதையைப் படைத்தார். இப்பொழுது, மரத்திலும் தோலிலும் மட்டும் அல்லாமல் வெள்ளி, தங்கம் முதலான மாழைகளிலும் வைரக் கற்கள் பதித்தும் வெவ்வேறு நேரத் தேவைக்கேற்பவும் ஆட்டக்காலணி, தாளணி, காலரணம், வார்மிதி, குதியணி, மிதியணி,  எனப் பல்வகைக் காலணிகள் உருவாக்கம் பெருகி விட்டது.

தமிழ்நாட்டிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே காலணிகள் பயன்படுத்தி இருக்க வேண்டும். முறையான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால் பழந்தமிழ்நாட்டில் காலணிகளின் பயன்பாடு குறித்த பல சான்றுகள் கிடைக்கும்.  தமிழில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களிலேயே மக்கள் பல்வகைக் காலணிகளைப் பயன்படுத்திய உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
காலணிகள் பற்றிய குறிப்பு காணப்படும் இலக்கியங்கள் அவற்றை வழக்கமான அணிகளில் ஒன்றாகத்தான் குறித்துள்ளன. அடையல், அரணம், கழல், குத்திச் செருப்பு, குறட்டுச் செருப்பு, தோற்பரம், நடையன், மிதியடி, பாதுகை, பாவல், அரண், தோற்பரம், பாதக்காப்பு, அடிபுனைதோல் முதலான பல்வேறு வகையிலான காலணி பற்றிய சொற்கள் வெவ்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ளமை அவை காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையை விளக்குகின்றன. இவற்றுள் தொடுதோல், செருப்பு, அடிபுதை அரணம் ஆகியவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
natpu வேடவன் செருப்பு அணிந்து செல்வதைப்  புலவர் மருதன் இளநாகனார் 
        தொடுதோல் கானவன்   (அகநானூறு: 34.3; 368.1)
எனக் குறிப்பிடுகிறார்.

காலணி அணிந்து செல்பவர்களைத்
      தொடுதோல் அடியர்
என மதுரைக் காஞ்சியில்(636) புலவர் மாங்குடி மருதனாரும் பட்டினப்பாலையில் (265)புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் குறித்துள்ளனர்.

காலிற்கும் செருப்பிற்கும் இடையே புகுந்த கல் துன்பம் தருவதுபோல் பகைவர்க்குத் துன்பம் தருபவன் எனத் தலைவன் ஒருவனைப் பற்றிப் புலவர் ஒருவர்
      செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் (புறநானூறு: 257.1)
எனக்  கூறுகிறார்.
natpu புலவர் மாமூலனார்,
        அடிபுதை தொடுதோல் (அகநானூறு 101.9)
பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.  காலடி புதைந்து - மறைந்து- காணப்படும் அடிதோல் என்பதால் இது பாதங்களில் அணியும் மிதியடிபோல் இல்லாமல் காற்பகுதியை மறைக்கும் காலணி (சூ : shoe) ஆக விளங்கி உள்ளது எனலாம்.

காலடியை மறைக்கும் காலணியை அடிபுதை அரணம் எனக் குறிப்பிட்டுள்ளதைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின்
                                                             நோன்தாள்
        அடிபுதை அரணம் எய்தி (பெரும்பாணாற்றுப்படை 69-70)
என்னும் வரிகள்  மூலம் அறிகிறோம். அடிபுதை அரணம் என்பது வீரர்களின் (பாதத்தையும் காலையும் மறைக்கும்) காலணியாக இருந்துள்ளது.

செருப்பை அணிந்த அடியவர்கள் தெளிந்த சுனை  நீரைப் பருகி,  அரிய சுரத்தைக் கடந்து சென்றனர் என்பதைக் குறிப்பிடும்
     செருப்புடைஅடியர், தெண்சுனை மண்டும்
     அருஞ்சுரம் (அகநானூறு: 129.13-14)
என்னும் வரிகள் மூலம் புலவர் குடவாயில் கீரத்தனார், மக்கள் காட்டுப்பாதையைச் செருப்பு அணிந்தே கடந்துள்ளனர் என்பதை விளக்குகிறார்.
 
natpu காலணிகளை ஆடம்பரத்திற்காக அல்லாமல் தொடர்ந்து தேவைக்காகப்பயன்படுத்தி உள்ளனர். எனவே, காலில் வடு ஏற்பட்டுள்ளது. இதனைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
      தொடுதோல் மரீஇய வடுவாழ் நோன்அடி (பெரும்பாணாற்றுப்படை : 169)
எனக் குறிப்பிட்டுள்ளார். (செருப்பினை விடாமல்(மரீஇய) அணிந்தமையால் காலில் வடு ஏற்பட்ட வலிமையான கால்(நோன் அடி))
natpu செருப்பு என்பது மலை ஒன்றிற்கும் பெயர். அதன் தலைவனான இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடும்பொழுது  மிதிப்பதற்கு அல்லாத செருப்பின் தலைவன் என வேறுபடுத்தி,
      மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே (பதிற்றுப்பத்து : 21.23)
எனப் புலவர் பாலைக் கௌதமனார் பாடுகிறார்.

எனவே, காலணிகளைப் பிறநாட்டார் போல் ஆடம்பரமாகக் கருதாமல் அனைவரும் பயன்படுத்தி உள்ளனர் எனப் புரிந்து கொள்ளலாம்.

நடக்கும் பாதையில் ஏற்படும் இடர்களில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள காலணிகளைப் பயன்படுத்திய நாம் வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் இன அழிப்பு இன்னல்களில் இருந்து நம்மைக் காக்கத் தவறிவிடுகிறோமே!

- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Tuesday, March 8, 2011

Toppest level in Biology- elephant: andre' sonnargal 36:அன்றே சொன்னார்கள் 36 -உயிரறிவியல்: யானை (1)

>>அன்றே சொன்னார்கள்36


உயிரறிவியலில் உயர்ந்த நிலையில் இருந்தனர் - யானை (1)

                                                                                                                

natpu பயிரறிவியல் ஆக இருந்தாலும் விலங்கியல் ஆக இருந்தாலும் பழந்தமிழ் மக்கள் உயர்ந்த நிலையில் ஆட்சி செய்துள்ளனர். உயிரினங்களின் பெயர்கள், உறுப்புகளின் பெயர்கள், தன்மை, முதலானவை வெறும் சொற்கூட்டமாகவோ ஒரு பொருளுக்கான பல பெயராகவோ பார்க்கப்படுவது தவறு. இவற்றையே நாம் பிற மொழிகளில் படிக்கும் பொழுது மிகப்பெரிய அறிவியல் உண்மைகளாகப் பார்க்கின்றோம். தமிழில் இலக்கிய வரிகளாக எண்ணிப் புறந்தள்ளி விடுகின்றோம். உவமைகள் மூலம் அறிவியல் செய்திகளை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெரிவித்து உள்ளார்கள் எனில், மக்களின் அறிவியல் உணர்வு மிகச் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்கத் தவறி விடுகின்றோம். நாம் இத்தகைய அறிவியல் உண்மைகளை அவ்வப்பொழுது பார்ப்போம்.  முதலில்  யானை குறித்துப் பார்ப்போம்.

யானைக்கான எலிபண்ட் (Elephant) என்னும் சொல்லிற்கு இலத்தீன் மொழியில் பெரு வளைவு என்று பொருள். பெரிய விலங்காகவும் வளைந்த தோற்றத்துடனும் காணப்படுவதால் இப் பெயரை வழங்கி உள்ளனர். பொதுவாக யானையின் தோல், செவி, முதலான சில வெளி உறுப்புகள் அல்லது பகுதிகள் குறித்து மட்டுமே அயல்நாட்டு அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழில் உள்ள அதன் ஒவ்வொரு பகுதி அல்லது அதன் வேறு பெயர்கள்,  யானையியல் குறித்து மிகப் பரந்து பட்ட அறிவியலறிவு அன்றைக்கே தமிழர்களுக்கு இருந்ததை வியப்புடன் உணர்த்துகிறது.

யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான 170 பெயர்கள் உள்ளன.
(விக்சனசரி:http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88)  
இவற்றுள் சில பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் மறைந்து அயற் பெயர்களாக அமைந்துள்ளன. ஆராய்ந்து பார்த்தால் தமிழ்ப் பெயர் நமக்குப் புலப்படலாம். சான்றாக யானையைக் கசமுகன் என்கின்றனர். இதில் ச என்னும் எழுத்து கிரந்த ஒலிப்புடன் பயன்படுத்துவதால் வேற்று மொழிச் சொல்லாகக் கருதுகிறோம். உண்மையில் கயம் என்னும் தமிழ்ச் சொல் கசம் என மாற்றப்பட்டதால் அச் சொல்லின் சிறப்பை நாம் உணராமல் போய்விட்டோம்.
கயம் என்றால் மென்மை என்றும் பொருள். யானையின்  தலை மிகப் பெரியது; ஆனால், உள்ளே கடற்பஞ்சு போன்ற எலும்புகளும் ’ஒன்றுமில்லா அறைப்பகுதிகளும்’ உள்ளன. எனவே மென்மையானது. ஆதலின் மென்மையான தலை என்னும் பொருளில் ’கயந்தலை’ என்றனர். எனவே கயந்தலை என்பது அத் தலையையுடைய யானையையும் குறிப்பதாயிற்று.யானை பற்றிய அறிவியல் சிந்தனையின் விளைவே கயம் என்னும் சொல். ஆனால், கயம் என்பது கசம் ஆக மாறி ஒலிக்கப்பட்டுக் (கசம் + முகம் உடைய) கசமுகன் என மாற்றப்பட்டதால் நாம் உண்மையை உணரவில்லை.

யானையின் பிற பெயர்களும் அதன் தன்மைக்கேற்றனவே என்பதற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
natpu
உயரம் கருதி உயரம் என்னும் பொருளில் உம்பல்; திரண்டு இருத்தலால் அப்பொருளில் உவா (60 ஆண்டிற்கு மேற்பட்ட யானை); உரல் போல் பாதம் இருந்தமையால் உரலைக் குறிக்கும் கறை என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கறைபோல் உள்ள அடி உடைய யானை கறையடி; பெரிய பாதத்தை உடைமையால் பொங்கடி; கருப்பு நிறம் உள்ள விலங்கு (மா) என்பதால் கரி அல்லது கருமா; இருள்போல் நிறம் கொண்டதால் இருள்; வேறு எந்த விலங்கிற்கும் இல்லாத வகையில் கை உள்ள - துதிக்கை உள்ள - விலங்கு (மா) என்பதால் கைம்மா;  இவ்வாறு பிற விலங்குகளில் இருந்து தனித்து வேறுபட்டுக் (கை உடன்) காணப்படுவதால்  அப்பொருளில் ஒருத்தல்; அக் கை துளையுடன் உள்ளதால் தும்பி; அக்கை தொங்கிக் கொண்டு இருத்தலால் தொங்குதல் என்னும் பொருளைக் குறிக்கும் நால் என்னும் சொல்லைப் பயன்படுத்தி நால் வாய்; முகத்தில் புள்ளி உள்ளமையால் புகர் முகம்; கை உடைய, மலைபோல் தோற்றம் கொண்ட விலங்கு என்பதால் கைம்மா; துளையை - புழையை - உடைய கை உள்ள விலங்கு என்பதால் புழைகை அல்லது பூட்கை அல்லது பூழ்க்கை; நீண்ட நெடிய கையை உடையதால் நெடுங்கை; பெருங்கையை உடைய விலங்கு என்பதால் பெருங்கை; அக் கை தொங்கிக் (தூங்கிக்) கொண்டு உள்ளதால் தூங்கல்; ஒற்றைக் கையை - ஒரே ஒரு கையை உடையதால்- ஓர்கை; பெரிய விலங்கு(மா) என்பதால் பெருமா; உருண்டு திரண்டது என்னும் பொருளில் வழுவை; புல்லை வாரிப் போடுவதால் வாரி; வாரணம் எனப்படும் சங்குபோன்ற தலை உடையதால் வாரணம்; நீர்ப்பறவைகளின் விரல்கள் இடையே உள்ள சவ்வுத் தோலாகிய துதி போல் யானையின் கைந் நுனியில் (தோலுடன் விரல் போன்ற உறுப்பு) அமைந்துள்ளதால் துதிக்கை; கம்பத்தில் கட்டப்படும் விலங்கு என்பதால் கம்பமா; கோடு (தந்தம்) உள்ள விலங்கு என்பதால் கோட்டு மா; கூட்டமாக இருக்கும் யானை தன் குழுவைப்பிரிந்து குழு அல்லாமல் தனித்தே திரிந்தால் அல்லியன்; வலிமையான விலங்கு என்பதால் வல்விலங்கு; பெரிய விலங்கு என்பதால் பெருமா; ஒற்றைக் கோடு (கொம்பு) உள்ள யானை ஒற்றைக் கொம்பன்; வளைந்த கோடு உடைய யானை ஏந்து கொம்பன்; பெரிய கொம்புகள்உடைய யானை கொம்பன் யானை; எனப் பலவகையாக யானையின் தன்மைகளை அறிந்து  பல பெயர்களைச் சூட்டி உள்ளனர். இவை தவிர போர் யானை (அதவை), பட்டத்து யானை (ஐராவணம்) முதலான வகைப்பாட்டிற்கு ஏற்பவும் யானைகளுக்குப் பெயர்கள் உள்ளன.

யானைகள் பற்றிய இலக்கியக் குறிப்புகளை அடுத்துப் பார்ப்போம்.

யானை பரவலாகப் பயன்படுத்தினாலன்றி இவ்வாறு பல பெயர்கள் தோன்றியிருக்கா; விலங்கினங்கள்  குறித்த  அறிவியல் அறிவு இருந்தாலன்றி யானைபற்றிய வேறுபாடுகளை உணர்ந்திருக்க மாட்டார்கள்.

சொல்வளமும் அறிவியல் வளமும் மிக்க தமிழ்தான் இன்றைக்குப் பாட மொழியில் புறக்கணிக்கப்படும் கொடுமைக்கு ஆளாகி உள்ளது!

 
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Saturday, March 5, 2011

thamizh views about sun - andre' sonnaargal 35 :அன்றே சொன்னார்கள்- கதிரவன்

>>அன்றே சொன்னார்கள்35


கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர்

                                                                                                                

natpu 
சூரியன் அல்லது ஞாயிறு ஒரு விண்மீனே! சூரியனின் கிரேக்கப் பெயர் அப்பல்லோ என்பதாகும். கிரேக்கத் தொன்மக் கதையின்படி லெட்டோ (Leto)வின் உறவால் சீயசு (Zeus) தாய் ஆகிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள இடம் தேடி அலைந்து இறுதியில் கிரேக்கத்தில் உள்ள தீவில் (தெலோசு : Delos) அப்பல்லோவைப் பெற்றெடுக்கிறாள். சப்பான், சிரியன் முதலான  சில நாடுகளில் சூரியன் பெண் கடவுளாகக் கருதப்படுகிறது. சூரியக் கடவுளின் பெயர் சப்பானில் அமத்தெரசு (Amaterasu) ;  சிரியாவில்  அரிண்ணா (Arinna) எனப்படும்.

ஞாயிறு என்பது, கதிரவன், பகலவன், செங்கதிரோன், பரிதி, வெங்கதிரோன் முதலிய பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. பூமியை விட இது பன்மடங்கு பெரியது. பூமியிலிருந்து ஏறத்தாழ 15 கோடி புதுக்கல் தொலைவு உள்ளது. இதைச் சுற்றி 9 கோள்கள் உள்ளன. ஞாயிற்றிற்குத் தமிழறிஞர்கள் சூட்டிய பெயர்கள் அதன் அறிவியல் தன்மைகளில் அமைந்தவையே!

‘சுரீர்’ என வெயில் அடிப்பதாகக் கூறுவோம். கடும்வெயில் அடிக்கும் பாதை, ‘சுரம்’ எனப்படும். இவை போல் ‘சுர்’ என்னும் வேர்ச்சொல்லின் அடிப்படையில், அனலாய்த் திகழும் விண்மீன் ‘சூரியன்’ எனத் தமிழில் கூறப்படுகிறது.
கதிரை உடையது கதிரவன்; வெம்மையான கதிரை உடையது வெங்கதிரோன்; செந்நிறக் கதிரை உடையது செங்கதிரோன்; வட்டமாக அமைந்து சுழல்வதால் பரிதி; பகற்பொழுதை உண்டாக்குவது பகலவன்; கனலாய்த் திகழ்வதால் ‘கனலி’ என்று பலவகைகளில் சூரியன் அழைக்கப் பெறும்.

‘எல்’ என்றால் ஒளி எனப்பொருள். ஒளிமிக்க இவ்விண்மீன் எல், எல்லி, எல்லவன், எல்லை என்று கூறுப்படும்.‘என்றூழ்’ என்பது சூரியனின் மறுபெயராகும். சூரியன் ஏற்படுத்தும் கடும் வெயில் ‘எறிப்பு’ எனப்படும்.  புவிப்பிழம்பு பிரிவதற்கு முன் ஆதியாய் இருந்தது என்னும் பொருளில் ஆதவன் எனச் சூரியனை அழைப்பது நம் தமிழ் முன்னோர்களின் அறிவியல் அறிவை நன்கு உணர்த்துகிறது.

     நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம் (அகநானூறு 31: 1)
என்னும் வரிகளில் நெருப்பு என்று சொல்லுமாறு செந்நிறமாகக் காணப்படும் வெப்பம் விளங்கும் ஞாயிற்று மண்டிலம் புலவர் மாமூலனாரால் விளக்கப்பட்டுள்ளது.

பின்வருவன ஞாயிற்று மண்டிலத்தையும் ஞாயிற்றின் தன்மையையும் குறிப்பிடுன்றன.

      விரிந்த பரப்பு உடையது ஞாயிற்று மண்டிலம்:
           மலர் வாய் மண்டிலம் (புறநானூறு:175:9)
     மிகுதியான இயக்கப் பரப்பு உடையது ஞாயிற்று மண்டிலம்:
         வீங்கு செலல் மண்டிலம் (நெடுநல்வாடை:161:45)
    ஞாயிற்று மண்டிலம் தேய்தல் இல்லாதது:
         தேயா மண்டிலம் (பரிபாடல்:17:32)
   சுடர் உடையது ஞாயிற்று மண்டிலம்
        சுடர் மண்டிலம் (அகநானூறு: 367:1)
   சுடர் ஒளி உடையது ஞாயிற்று மண்டிலம்:
natpu  
           சுடர் கெழு மண்டிலம் (அகநானூறு: 378:14)
   அழகிய வட்டமான வடிவம் கொண்டது ஞாயிறு:
            பருதிஅம் செல்வன் (கலித்தொகை: 26:2; அகநானூறு: 360:2)
  மாசில்லாதது ஞாயிற்று மண்டிலம்
            மைஅறு மண்டிலம் (கலித்தொகை:141:12)
  ஞாயிறு தன்னுடைய பலவாகிய கதிர்களைப் பரப்பிப் பல்வேறு மாண்புகளுடைய பகற்பொழுதைத் தரும்:
        பல்மான் எல்லை தருநன் பல்கதிர்பரப்பி
                                     (பொருநராற்றுப்படை: 232-233)
  ஞாயிறு விரிந்து செல்லும் கதிர்களை உடையது:
      விரிகதிர் ஞாயிறு (புறநாநூறு:228:8)
  ஞாயிறு சுடுகின்ற கதிர்களை உடையது:
     காய்சினத்த கதிர்ச் செல்வன் (பட்டினப்பாலை:122)
    தெறுகதிர்க் கனலி (புறநானூறு: 43:2; 397:24)
வெம்மை தருகின்ற   கதிர்களை உடையது ஞாயிறு:
    வெங்கதிர்க்கனலி (புறநானூறு:41.6)
ஒளிவீசும் கதிர்களை உடையது:   
    அலங்குகதிர்க் கனலி (புறநானூறு: 35.6)
பசுமை நீங்கிக்  காயும் வகையில் நிலத்தைப் பிளக்கச் செய்யும் தீயைப் போன்ற கதிர்களை உடையது ஞாயிறு:
     நிலம் பக
    அழல்போல் வெங்கதிர் பைதுஅறத் தெறுதலின்          
                                                                      (அகநானூறு:1:9-10)
அச்சம் தரும் ஞாயிற்றின் ஒளிமிகுந்த கதிர் (கடல் நீரை மொண்டு சென்று) மழை பெய்விக்கும்:
     உருகெழு ஞாயிற்று ஒண்கதிர்
     . . . . . .  . . . .    .....  ....
     . . . .  . . . .  துளிசொரிந்தாங்கு                                  
                                      (புறநானூறு:160:1-3)
   எல்லாராலும் விரும்பப்படும் வெப்பத்தைத் தரும் ஞாயிறு
            வெவ்வெள் செல்வன் (பொருநராற்றுப்படை:136)
natpu
      வெப்பத்தால் அச்சுறுத்தும் கனலையுடையது ஞாயிறு
ஞாயிறு இருளை நீக்கும்:
         இருள் நீக்கும் சுடர்                                          (கலி:100:11)
   இருளை நீக்கிப் பகலை உண்டாக்குவதற்காக எழுவது ஞாயிறு:
       பாய்இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரு
      ஞாயிறு ..........                              .( மலைபடுகடாம் 84-85)
 ஞாயிற்று மண்டிலம் நகரும் அறிவியல் உண்மையையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண்மழை
  அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும்
என்பது சிலப்பதிகாரம். (14:104-105)
ஞாயிறு தென்திசை நோக்கி நகரும் காலங்கள்:
      கார்காலம், கூதிர் காலம், முன்பனிக்காலம் ஆகியவை.
ஞாயிறு வடதிசைச் செல்லும் காலங்கள்:        
           பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் எனக்  கண்டறிந்திருந்தனர்.
நாள்மீன்களும் கோள்மீன்களும் சூழ இருப்பது ஞாயிறு:
    ’வானிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
     விளங்குகதிர் ஞாயிறு’ 
                     சிறுபாணாற்றுப்படை (242-247)
விண்பொருள்களாகக் கருதப்படுகின்ற வேறு இரு தெய்வங்களுக்குப் பிறந்தது ஞாயிறு என மூடத்தனமாக நம்பாமல் அறிவியல் தன்மையின் அடிப்படையில் கதிரவன் குறித்த கருத்துகளைத் தொடக்கக் காலத்திலேயே  தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதற்கு இவை போல் பலச் சான்றுகள் உள்ளன.
தமிழர்களின் அறிவியல் வளத்தில் ஆரியக் கலப்பால் மாசு புகுந்துள்ளதைத் துடைக்க வேண்டிய கடமை இன்றைய தமிழர்களுக்கு உள்ளதல்லவா?



Thursday, March 3, 2011

Views about venus-andre' sonnaargal 34 :அன்றே சொன்னார்கள் 34-வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர்

>>அன்றே சொன்னார்கள்34


வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர்

                                                                                                                

natpu  கதிரவனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோள். எனினும் பூமியின் மிக அருகில் உள்ள கோள். வெள்ளிக்கோளின் ஆங்கிலப் பெயர் வீனசு (Venus) என்பதாகும். வீனசு உரோமப் பெண்கடவுள் ஆகும். இலத்தீன் மொழியில் வீனசு என்றால் காதல் என்றும் காமவிருப்பம் என்றும் பெயர். இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் பெயர் அபிரடைடி (Aphrodite). எனவே, வீனசு காதல் கடவுள் ஆகும். உரோமானியர்கள், கிரேக்கர்கள் முதலானோர்போல், பிறப்பு, உடன் பிறப்பு கதைகள் அடிப்படையில் இல்லாமல் அக்கோளின்  ஒளிவிடும் வெள்ளை நிற அடிப்படையில் தமிழர்கள் அதற்கு வெள்ளி எனப் பெயரிட்டனர்.
 பிற கோள்களையும் விண்மீன்களையும் விட வெள்ளி மிகுதியும் ஒளியுடையது என்பதை
வயங்குகதிர் விரிந்து வானகம் சுடர் வர (பதிற்றுப்பத்து :24 : 23)
என்னும் வரியில் புலவர் பாலைக் கௌதமனார் கூறுகிறார். (வயங்கு-விளங்குகின்ற)
முல்லைப் பூவின் நிறத்தை வெள்ளியின் ஒளியுடன் ஒப்பிட்டுப் புலவர் மாங்குடி மருதனார்
வெள்ளி அன்ன ஒள் வீ       (மதுரைக்காஞ்சி 280)
என்கிறார்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் சுண்ணாம்பு வெள்ளியைப் போல் வெள்ளையாக இருக்கும் என்பதை
வெள்ளி அன்ன விளங்கும் சுதை  (நெடுநல்வாடை : 110)
என்கிறார்.

வெள்ளி போன்று விளங்கும் பூங்கொத்து
வெள்ளி அன்ன விளங்கு இணர் (நற்றிணை : 249: 3)
எனப் புலவர் உலோச்சனாரால் சொல்லப்படுகிறது. (இணர்-பூங்கொத்து)
மிகுந்த வெண்நிறமாகிய வெள்ளிக்கோள் ஏறு என்னும் ஓரையைச் (இடபராசி) சேருகிறது என்பதைப் புலவர் நல்லந்துவனார்  
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர (பரிபாடல் : 11: 4)
என்கிறார். இவை யெல்லாம் வெள்ளிக்கோளின் நிறம் பற்றிய விளக்கங்கள் ஆகும்.

இது மாலையில் இரவு அரும்பும் பொழுதும் காலையில் பொழுது விடியும் பொழுதும் தோன்றும். விடியற்காலையில் தோன்றுவதால் விடிவெள்ளி என்று கூறுவர். இதனையும் புலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருள் செறிந்த விடியற்காலையில் விரிந்த கதிர்களுடன் வெள்ளி முளைப்பதைப் புலவர் முடத்தாமக்கண்ணியார்
விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்இருள் விடியல்  (பொருநராற்றுப்படை 70-71)என்கிறார்.

பறவைகள் குரல் எழுப்பிப் பறக்கும் விடியற்காலைப் பொழுதில் வெள்ளி தோன்றுவதைப் புலவர் கல்லாடனார்
natpu வெள்ளி தோன்ற புள்ளுக் குரல் இயம்ப,
புலரி விடியல்        (புறநானூறு : 385: 1-2)
எனக் குறிப்பிடுகிறார். 

விடியலில் வெள்ளி வானத்தில் எழுந்தது என்பதை
வெள்ளியும் இருவிசும்பு ஏர் தரும் (புறநானூறு 397 : 1)
எனப் புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் கூறுகிறார்.
வைகறையில் திங்களின் நிலவொளி மறைந்து வெள்ளி தோன்றியது எனப் புலவர் திருத்தாமனார்,
மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர (புறநானூறு 398 : 1)
என்னும் அடியில் கூறுகிறார்.

வைகுறு மீன் எனப் பெரும்பாணாற்றுப் படையும் (318:17)
அகநானூறும் (17:21)  வைகறையில் தோன்றும் கோள் என்பதைக்
கூறுகின்றன.

வைகறையில் எழுந்து விடிவெள்ளியின் தோற்றம் கண்டு காலத்தை உணர்ந்து குளித்தனர் என்பதை,
விளக்குறு வெள்ளி முளைத்து முன்தோன்ற
. . . .        . . . . .            . . . .
தெளித்தலைத் தண்ணீர் குளித்தனன் ஆடி
எனப் பின்னர் வந்த பெருங்கதை (1:53:81. .86) கூறுகிறது. இதுபோல் வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு பயணம் தொடங்குதல் முதலிய பல நிகழ்வுகள் நடந்தமையைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
வெள்ளி கிழக்கே தோன்றும் என்பதைக்
குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும் (நற்றிணை: 230: 4)
என்கிறார் புலவர் ஆலங்குடி வங்கனார்.
   குணக்குத்தோன்று வெள்ளி  (நற்றிணை 356 : 9)
எனப் புலவர் பரணரும் கூறுகிறார்.

வெள்ளி இடம் மாறித் தோன்றினாலும் வழக்கத்திற்கு மாறாகத் திசை மாறி நகர்ந்தாலும் தீமை விளையும் என்பது எல்லா நாட்டு மக்களின் நம்பிக்கை. அதுபோல், வெள்ளி தென்திசை தோன்றுமாயின் நாட்டில் கொடிய பஞ்சம், வறுமை முதலிய துன்பங்கள் வந்து எய்தும் என நம்பினர். ஆனால், குடி மக்கள் நலம் நாடும் செங்கோல் ஆட்சியில் இதனால் எத்தீமையும் விளையாது எனக் கோள் (கிரகங்கள்) ஆட்சியை விடக் கோல்ஆட்சியைப் பெரிதும் போற்றினர் தமிழ் மக்கள். அதற்கிணங்கப் புலவர்  வெள்ளைக்குடி நாகனார், வெள்ளி தெற்கே தோன்றி இன்னலை விளைவிப்பதாக இருந்தாலும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிச் சிறப்பாகவே இருக்கும் என்பதை
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (புறநானூறு 35.7)
குறை வராமல் நிறைவளம் கொண்ட நாடு எனப் போற்றுகிறார்.

இளங்கோ அடிகளும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (சிலப்பதிகாரம் : 10 : 103)
வறட்சி இன்மையை விளக்குகிறார்.

புலவர் கபிலரும் பாரியின் ஆட்சிச் சிறப்பைப் பாடும் பொழுது
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்   (புறநானூறு 117.2)
பாரிமன்னனின் செங்கோல் ஆட்சியால் சிறப்பு மிக்கதாக உள்ளதாகக் கூறுகிறார்.

வெள்ளி தென்திசையில் தங்குதல் வறட்சியின் அடையாளம் என்பதைப் புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்
பள்ளம் வாடிய பயன்இல் காலை  (புறநானூறு : 388 : 1-2)
என்கிறார்.

வெள்ளி மழைக்கோள் என அழைக்கப் பெறும். எனவே, தெற்கே அது தங்கும் காலம் மழைவளம் இன்றி வறட்சி ஏற்படும் எனக் கண்டறிந்து உள்ளனர்.
(பள்ளம் - நீர்நிலை; வாடிய - /விளையும் வயல்களும் நீர்நிலைகளும்/ வற்றிய; பயனில்காலை- பயனற்ற பஞ்சக்காலம்)
செவ்வாயும் வெள்ளியும் அருகே இருந்தால் மழை பெய்யாது.  அவ்வாறில்லாமல் மழை வேண்டும் வயல்களுக்கு வேண்டியவாறு மழைபெய்து வளம் மிகுந்த நாடு எனப் புலவர் குமட்டூர்க்கண்ணனார், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் நாட்டுச் சிறப்பைக் கூறும் பொழுது

அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப  (பதிற்றுப்பத்து 13 : 25-26)
என்கிறார்.
(அழல் - செவ்வாய்; மருங்கு - அருகே; புலம்-மழை தேவைப்படும் நிலப்பகுதிகள்)

 வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி(பதிற்றுப்பத்து :24.24) என்னும் புலவர்பாலை கௌதமனார், வெள்ளிக் கோளின் நிலையை விளக்குகிறார்.
(வறிது - சிறிது; இறைஞ்சிய - சாய்ந்த; மழைக்கோளாகிய வெள்ளி வடக்கே தாழ்ந்தால் மழை ஏற்படும்; தெற்கே எழுந்தால் மழையின்மை ஏற்படும்.)
மழைக்கோளாகிய வெள்ளி தென்திசையில் தெரிவது தீய நிகழ்வின் முன்னறிவிப்பு; மழையின்மையை உணர்த்தும். எனினும், அவ்வாறு,

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்  (பட்டினப்பாலை : 1-2)

சோழவேந்தன் திருமாவளவன் ஆட்சியில் காவிரி வற்றாது எனப்
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறியுள்ளார்.
(வசைஇல்-குற்றம் இல்லாத; வயங்கு-விளங்குகின்ற)
இயற்கைச் சீற்றத்திலும் மக்கள் நலம்நாடும் செங்கோலாட்சி அப்பொழுது நடைபெற்றுள்ளது. இப்பொழுது .....?

Saturday, February 26, 2011

Affection about moon: andre' sonnaargal 32:அன்றே சொன்னார்கள்32- திங்கள் மீது தீராக் காதல்

>>அன்றே சொன்னார்கள்32


திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள்

                                                                                                                

natpu கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக்  காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி வழித் தொடர்ச்சியாகத்தான் மக்களிடம், முழுநிலா, இருள் நிலாக் காலங்களில் கடலலைகளின் வேகம் மிகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனலாம். மேலும் திங்களின் பல்வேறு தோற்றங்களை இயல்பாகவும் உவமையாகவும் குறிப்பிட்டுள்ளமை திங்கள் மீதுள்ள தமிழ் மக்களின் தீராக்காதலை வெளிப்படுத்துகின்றது.
குளிர்ந்த ஒளியைத் தருவதால் திங்களுக்குத் தண்கதிர் என்று பெயர். கலையென்பது நிலவொளியின் ஒரு பகுதியைக் குறிக்கும். நாள்தோறும் ஒவ்வொரு கலையாக வளர்வதும் பின்  தேய்வதுமாய தோற்றம் திங்களுக்கே உரியது. எனவே கலையுடையவன் என்னும் பொருளில் நிலா, கலையோன் எனப்பட்டது. இரவுப் பொழுதில் விளங்குவதால் இரவோன் எனவும் பெயர்.
’அல்லும் பகலும்’ என்னும் தொடரால் ’அல்’ என்றால் இரவு எனப் புரிந்து கொள்ளலாம். எனவே, இரவிற்குரிய திங்கள் அலவன் என்றும் அல்லோன் என்று பெயர்களைப் பெற்றது. 15 நாள் வளர்ந்து 15 நாள் தேய்ந்து 30 நாள் கொண்ட ஒரு கால அளவை வரையறுக்கத் திங்கள் உதவுகிறது. வரையறுத்தலை மதித்தல் என்பர்; அளவிடுதலை மதிப்பிடுதல் என்பர்.  காலத்தை வரையறுத்து மதிப்பிட உதவுவதால் ’மதி’ என்றனர். (எனவேதான் திங்களால் மதிப்பிடப்படும் கால அளவிற்குத் திங்கள் என அறிவியல் பெயர் சூட்டினர்.) இடையிடையே கறையுடையது போல் தோற்றம் அளித்தலால் கறையாகிய களங்கம் உடையவன் என்னும் பொருளில் களங்கன் என்றனர்.  குரங்கு என்றால் வளைவு என்று பொருள் உண்டு. வளைந்த பிறைவடிவில் தோன்றுவதால் பிறை நிலவைக் ’குரங்கு’ என்றனர்.  நிலவினில் காணப்படும் கறை, சிறுவர் கண்களுக்கு முயல் வடிவாகத் தோற்றம் அளிப்பதால் முயல் தங்கியுள்ள கூடு என்னும் பொருளில் முயற்கூடு என்றனர்.
இனிமையான கள்போன்று நிலவொளி இருப்பதால் இனிமை என்னும் பொருளில், தீ+கள்=தீங்கள் என்பது குறுகித் திங்கள் என்றாயிற்று.
நிறைமதி, தேய்மதி, வெள்ளுவா (பௌர்ணமி), காருவா(அமாவாசை), வளர்மதி, பிறைமதி, எட்டாம் நாள் திங்கள், மறுக்கொண்ட மதி, அரவு வாய்மதி, வைகறை மதி, பக்கமதி, நிலவு, மீன்சூழ் மதி, குழவித் திங்கள், திங்கள் குழவி, மதி அரும்பு, என நிலவின் பல்வேறு தோற்றங்கள் குறிக்கப் பெறுகின்றன.
வளைந்த கரையைக் குறிப்பிடும் பொழுது எட்டாம் பக்கத்துப் பிறைபோலும் உள்ளதாக,
    எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை (118.2)
எனப் புலவர் கபிலர் குறித்துள்ளார்.
அரைநிலாபோல் உள்ள பெண்களின் நெற்றியைக் குறிப்பிட,
   மாக்கடல் நடுவண் எண்நாள் பக்கத்துப்
   பசுவெண் திங்கள் தோன்றியாங்கு (குறுந்தொகை : 129: 3-4)
எனக் கோப்பெருஞ்சோழவேந்தன் குறித்துள்ளார்.
புலவர் முடத்தாமக் கண்ணியார், யாழின் வாயைக் குறிப்பிடுகையில் எட்டாம் நாள் திங்கள் போல் அரைவட்டமாக இருப்பதாக                                                         
எண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி (பொருநராற்றுப்படை: 11) எனக் குறிக்கிறார்.
   மாக விசும்பின் வெண் திங்கள்
   மூவைந்தான் முறை முறைக்
   கடல்நடுவண் கண்டன்ன     (கோவூர் கிழார்: புறநானூறு : 400 : 1-3)
என்னும் பாடல் வரிகள் மூலம், ஆகாயமாகிய நீல வானில் வெண்ணிலா பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தேய்ந்து வளர்ந்து கடல் நடுவே முழுமதியாய்த் தோன்றுவது போல் எனக் குறிப்பிட்டுத் திங்களின் வளர்ச்சி பற்றிய அறிவைப் புலப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு திங்களின் பல்வேறு தோற்றங்களைப் பல இடங்களில் காணலாம்.
  ...........சிறுகோட்டுக்
குழவித் திங்கள் கோள்நேர்ந்தாங்கு  
எனப் பெரும்பாணாற்றுப்படையில் (383-384) கடியலூர் உருத்திரங்கண்ணனார் நிலவு மறைப்பு (கிரகணம்) குறித்துக் கூறுகிறார்.
    பாம்புசேர் மதி
(பாலை பாடிய பெருங்கடுங்கோ : கலித்தொகை : 15 : 17)
    அரவுநுங்கு மதி
(குறுந்தொகை : 395 : 4)
    திங்களைப் பாம்பு கொண்டற்று (திருவள்ளுவர் : திருக்குறள் 1146)
என்பனவும் நிலவுமறைப்புக் காட்சிகளே!
நிலா எல்லாத் திசைகளிலும் ஒளிவீசுவதைப் புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
    திங்கள் போலத் திசை விளக்கும்மே (திருமுருகாற்றுப்படை: 98)
எனக் கூறுகிறார்.
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், இருண்ட வானத்தில் நிலா நன்கு ஒளிர்வதை
    மங்குல் வானத்துத் திங்கள் (பெரும்பாணாற்றுப்படை 480)
எனக் குறிப்பிடுகிறார்.
நிலவொளி கிளர்ச்சியையும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் அதற்கெனவே மேல்மாடியில் நிலா முற்றத்தை அமைத்துள்ளனர்.
    நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண் முற்றத்து
( மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் : நெடுநல்வாடை : 95)
    வெண்ணிலவின் பயன் துய்த்தும்
(கடியலூர் உருத்திரங் கண்ணனார் : பட்டினப்பாலை : 114)
என வரும் பாடலடிகள் இதை உணர்த்துகின்றன.
    நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்து
என்றும்
    சுடர் வெண் நிலவின் தொழில் பயன் கொண்ட
   மிசை நீள் முற்றம்
natpu என்றும் பின்னரும் நாம் சிலப்பதிகாரத்திலும் பெருங்கதையிலும் காணலாம்.
நிலா முற்றத்தை அரமியம் என மதுரைக் காஞ்சியும் அகநானூறும் குறிக்கின்றன.
அரமியத்தில் காணும் எழில் காட்சி (அரமியம் என்பதில் இருந்து) இரமியம் என மாறிற்று. (இரமியத்தில் இருந்து உருவானதே இரம்யா)
   நிலவு அடைந்த இருள் போல
   வலை உணங்கும் மணல் முன்றில்
(கடியலூர் உருத்திரங் கண்ணனார்: பட்டினப்பாலை : 82-83) என வருவது போல், நிலவொளியுடன் வெண்மணலை ஒப்பிட்டு மிகுதியான சங்கப்பாடல்கள் உள்ளன.
நிலவொளிக் கதிர் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.
    நிலவே, நீள்நிற விசும்பின்  பல்கதிர் பரப்பிப்
    பான்மலி கடலில் பரந்து பட்டன்றே
(வெள்ளிவீதியார் : நற்றிணை : 348 : 1-2)
பொதுவாகத் திங்களின் ஒளியை நிலவு என்றும் அதன் வளர்ந்துவரும் தோற்றத்தைப் பிறை என்றும் தேய்ந்து வரும் பக்கத்தை மதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பிறையை உலகெங்கும் தொழும் பழக்கம் உள்ளதால்
    தொழுதுகாண் பிறை (குறுந்தொகை : 178 : 5)
என்றும்
   பலர் தொழச்
   செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
    இன்னம் பிறந்தன்று பிறையே (குறுந்தொகை : 307 : 1-3)
என்றும்
    ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்(அகநானூறு : 236)
என்றும்
    ஆநாள் நிறைமதி அலர்தரு பக்கம்போல்
(ஆசிரியன் நல்லந்துவனார் : பரிபாடல் : 11: 31)
என்றும் கூறியுள்ளனர்.
மேற்கில் தோன்றும் நிலவு நாள்தோறும் வளர்பிறையாய் வளர்வதுபோல் ஆக்கம் சிறக்கவும் கிழக்குத் திசையில் தோன்றும் நிலா நாள்தோறும் தேய்வதுபோல் எதிரிகளின் ஆக்கம் கெடவும் வாழ்த்தி,
    குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
   வழிவழிச் சிறக்க நின் வலப்படு கொற்ற
   குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின்
   தேய்வன கெடுக, நின் தெவ்வர் ஆக்கம் (மாங்குடி மருதனார் : மதுரைக்காஞ்சி : 193-196)
என்னும் பொழுது நிலா, கிழக்கில் தோன்றும் பொழுது தேய்வதையும் மேற்கே தோன்றும் பொழுது வளர்பிறைகளாக வளர்வதையும் குறிப்பிட்டுள்ளார். (வளர்பிறைக் காலத்தில் பகலிலேயே தோன்றும் நிலா சூரியனின் ஒளியில் மங்கித் தெரிந்தும் தெரியாமலும் இருக்கலாம்; இரவில், நிலா தெரியும் பொழுது மேற்குத் திசையில் இருக்கும்.) ஆக வளர்நிலா பிறையாகவும் தேய்நிலா மதியாகவும் சொலலப்படுகின்றது.
இதனைப் பின்னர் வந்த திருக்குறளில் (782)
    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
   பின்னீர பேதையார் நட்பு
எனவும் நாலடியாரில் (125)
     பெரியவர் கேண்மை பிறை போல நாளும்
    வரிசை வரிசையாய் நந்தும் - வரிசையால்
    வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே
     தானே சிறியார் தொடர்பு
எனவும் நாம் காணலாம்.
கார்காலப் பிற்பகுதியில் வானில் பால்போலும் நிலவு கதிர்களைப் பரப்பும் முழுமதியைச் சுற்றிக் காணப்படும் வட்டம் குறிக்கப் பெறுகிறது.
திங்கள் பெண்களுடன் உவமிக்கப்படும் இயற்கைச்சூழலாகவும் பல இடங்களில் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. இவ்வாறு இடம் பெற்றுள்ள செய்திகள் திங்களைப் பற்றிய ஆராய்ச்சி அறிவு பழந்தமிழகத்திலேயே இருந்ததை உணர்த்துகிறது. எஞ்சியவற்றைப் பிறிதொரு முறை காண்போம்.
         உலகெங்கும் உள்ள காய்கதிர் போன்ற கொடுங்கோலாட்சி மறைந்து   

          நிலவுபோல் தண்மையான ஆட்சி நிலவட்டும்!

- இலக்குவனார் திருவள்ளுவன்




Followers

Blog Archive