Showing posts with label elephant. Show all posts
Showing posts with label elephant. Show all posts

Sunday, September 16, 2012

யானையியல் - Science of Elephant - Yaanai iyal

யானையியல் - Science of Elephant - Yaanai iyal

யானையியல்

இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய அறிவியல் - சனிக்கிழமை, ஆவணி 30, 2043 08:55 இதிநே
Saturday, September 15, 2012 08:55 IST

(யானை) இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யானையின் மதிப்பை வெளிப்படுத்தும். யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான பல பெயர்கள் உள்ளன.

தும்பி, கரிணி, தோல், கண் டாலி,
கும்பி, கறையடி, குஞ்சரம், பகடு,
களிறு, பூட்கை, கரி,மா தங்கம்,
வழுவை, வேழம், வாரணம், மொய்யே,
உம்பல், எறும்பி, உவாவே,பொங்கடி,
தந்தி, அத்தி, கடிவை, கயமே,
நாகம், சிந்துரம், தூங்கல், நிருமதம்,
புழைக்கை, வல்விலங்கு, நால்வாய், புகர்முகம்
மதாவளம், தந்தா வளம்,மருண் மாவே,
கைம்மா(ப்), பெருமா, மதமா, வயமா,
மத்த மா,வே மதகயம், ஆம்பல்,
இபம்(ஏ), போதகம், களபம்,யா னைப் பெயர்
(பிங்கல நிகண்டு பா. 2412)


என யானைக்குரிய 45 பெயர்களைப் பிங்கல நிகண்டு கூறுகின்றது. (இவ்வாறு 170 பெயர்கள் உள்ளன என விக்சனரி கூறுகிறது. தமிழில் இருந்து பிற மொழிக்கு மாறி மீண்டும் தமிழில் பழக்கத்திற்கு வந்துள்ள சில சொற்களும் இவற்றில் அடங்கும்.) யானையின் தன்மைகளை உணர்ந்து இப் பெயர்கள் பழக்கத்திற்கு வந்துள்ளன எனில் யானையைப் பற்றிய விரிவான அறிவு அனைவருக்கும் இருந்திருக்கின்றது என்றுதானே பொருள்.

யானைக்கான எலிபண்ட் (Elephant) என்னும் சொல்லிற்கு இலத்தீன் மொழியில் பெரு வளைவு என்று பொருள். பெரிய விலங்காகவும் வளைந்த தோற்றத்துடனும் காணப்படுவதால் இப் பெயரை வழங்கி உள்ளனர். பொதுவாக யானையின் தோல், செவி, முதலான சில வெளி உறுப்புகள் அல்லது பகுதிகள் குறித்து மட்டுமே அயல்நாட்டு அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், யானைச் செவி -கன்னம், தாலம்; யானை நடுச்செவி – வட்டம்; யானைச் செவி அடி – சூளிகை; யானைவாய்-தளவு; யானை உமிழ்நீர்-விலாழி; யானைவால் – தாலவட்டம்; யானைவால் நுனி – வேசகம்; யானைவால் கீழிடம் – வெருகம்; யானை முன்கால் – காத்திரம்; யானைப்பின்கால் –அபரம்; யானை முகம் - மதகம், மத்தகம், கும்பம் என்பன போன்று ஒவ்வோர் உறுப்பின் பகுதியைப் பற்றிய விலங்கியலிறிவும் நம்தமிழ் முன்னோர் பெற்றிருந்தனர் (பிங்கல நிகண்டு).

உயரமாக இருத்தலால் உம்பல் என்றும் 60 ஆண்டிற்கு மேற்பட்ட யானையை உருவம் திரண்டு இருத்தலால் உவா என்றும் அழைத்தனர். கறை எனில் உரல் என்னும் பொருளுமுண்டு. உரலடி போல் - கறையடி போல் - பாதம் உடைய விலங்கு என்பதால் யானை, கறையடி எனப்பட்டது. கரு நிறம் என்பதால் கரி எனப்பட்டது. கையுடைய - துதிக்கையுடைய - விலங்கு (மா) என்பதால் கைம்மா எனவும் அழைக்கப்பட்டது. பிற விலங்குகளில் இருந்து கையுடன் தனித்துக் காணப்பட்டமையால் தனி என்னும் பொருள் கொண்ட ஒரு என்பதன் அடிப்படையில் ஒருத்தல் என்றும் யானைக்குப்பெயர். துளையுடைய கை என்பதால் தும்பி என்றும் யானையைக் குறிப்பிட்டனர். நால் என்பது தொங்குதலைக் குறிக்கும்; தொங்குகின்ற வாய் உள்ளமையால் யானையை நால்வாய் என்றனர். முகத்தில் புள்ளி உள்ளமையால் யானையைப் புகர்முகம் என்றும் அழைத்தனர். கையையுடைய மலை போன்ற தோற்றம் கொண்டதால் கைம்மலை என யானையைக் குறிப்பிட்டு வியந்தனர். புழை என்றால் துளை எனப் பொருள். துளையையுடைய - புழையையுடைய - கை கொண்டுள்ள விலங்கு என்பதால் புழைகை என்றும் பூட்கை என்றும் யானையைக் குறிப்பிட்டனர். பெரிய விலங்கு என்பதால் பெருமா எனவும் பெரிய பாதத்தை உடையமையால் பொங்கடி எனவும் அழைத்தனர். கருமையான விலங்கு என்பதால் ஏனை என்று சொல்லி அது யானை ஆயிற்று. உருண்டு திரண்டது என்னும் பொருளில் வழுவை என்றும் சங்கு போன்ற தலை உடையதாலும் புல்லைவாரிப் போடுவதாலும் வாரணம் என்றும் யானையைக் குறிப்பிட்டனர். நீர்ப் பறவைகளின் விரல்கள் இடையே உள்ள சவ்வுத் தோலின் பெயர் துதி. யானைத் தும்பிக்கையின் நுனியில் தோலுடன் ஒரு விரல் போன்ற உறுப்பு உள்ளமையால் அது துதிக்கை எனப்பட்டது.கம்பத்தில் கட்டப்படுவதால் கம்பமா என்பது போன்று, எறும்பி, கடிறு, கடவை, கரபம், வயமா என்பனவும் யானையின் வேறு பெயர்களாக அமைந்துள்ளன.

கயம் என்றால் மென்மை என்றும் பொருள். யானையின் தலை மிகப் பெரியது; ஆனால், உள்ளே கடற்பஞ்சு போன்ற எலும்புகளும் ஒன்றுமில்லா அறைப்பகுதிகளும் உள்ளன. நெற்றி எலும்பு, மண்டைப் பக்க எலும்புகள், முன் மேல் தாடை எலும்புகள், மேல்தாடைஎலும்பு, மூக்கெலும்பு, அண்ணவெலும்புகள் ஆகியவற்றிலும் பிற எலும்புகளிலும் பெரிய காற்றறைகள் இருக்கின்றன. இவ்வமைப்பினால் பெரியதலை எலும்புகள் மிகுதியான கனமில்லாமல் அமைந்திருக்கின்றன. எனவே மென்மையானது. ஆதலின் மென்மையான தலை என்னும் பொருளில் கயந்தலை என்றனர். எனவே கயந்தலை என்பது அத் தலையையுடைய யானையையும் குறிப்பதாயிற்று. யானைக் கன்று கயந்தலை எனவும் கயமுனி எனவும் குறிக்கப் பெறும்.

கயம் என்னும் சொல்லே சமசுகிருதத்தில் கசமாக மாறி கசமுகன் என்று குறிக்கப்பெறலாயிற்று. கசமுகன் என்று சொல்லும் பொழுது இனிமையாக இல்லை என்பதுடன் அயற் சொல் என விலக்க வேண்டிய உள்ளது. அதனையே கயமுகன் என்னும் பொழுது அதன் அறியில் உண்மையைப்புரிந்து பெருமை கொள்ள முடிகின்றது. இவ்வாறு யானைக்குத் தமிழில் உள்ள பெயர்களே வெவ்வேறு வடிவங்களில் இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளில் வழங்குகின்றன.

பிறப்பிட அடிப்படையில் மலையானை, வன யானை, ஆற்று யானை என யானை வகைப்படுத்தப் பெறும்.

பூணைத்திரள் அன்ன பருஏர்எறுழ்த் தடக்கை
கொலைச்சினம் தவிரா மதனுடை முன்பின்
வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு,யானை (அக நானூறு: 146)


யானை பனைமரத்தைப் போன்று பருத்த கையை உடையது; கொல்லும் சினம் நீங்காத செருக்குப் பொருந்திய வலிமை கொண்டது; வண்டுகள் மொய்க்கும் மதம் உடையது; உயர்ந்த கொம்பையுடையது. இவ்வாறு மேற்குறிப்பிட்ட சங்கப்பாடல் யானையை விளக்குகிறது.

............. கறைஅடிக்
குன்று உறழ் யானை (பெரும்பாணாற்றுப்படை: 351-352)
நெடுங்கை யானை (பெரும்பாணாற்றுப்படை:394)
பெருங்கையானை (பெரும்பாணாற்றுப்படை: 436)
பெருநல் யானை (பட்டினப்பாலை:251,மதுரைக் காஞ்சி:235)
கடுங்கண் வேழத்துக் கோடு (குறுந்தொகை:100:4)


இலக்கியப்பாடல்களில் இத்தகைய குறிப்புகள் உள்ளமையால் யானை பற்றிய அறிவியல் நூலில் சிறப்பான செய்திகள் இருந்திருக்க வேண்டும்.


யானைக்கண் சிறியதாக இருப்பதைப்போன்று இலைகளில் அல்லது காய்களில் சிறிதாகப் புள்ளி விழும்ஒரு வகைப் பயிர் நோய் யானைக்கண்நோய் எனப் பெறும். யானையின் காலைப்போல் பருத்துத் தோற்றமளித்துக் கால் வீங்கி இருக்கும் ஒருவகை நோயை யானைக்கால் நோய் என அழைத்தனர். ஆனால், யானை நோய் என்பது யானைக்கு வரும் பாகலம் என்னும் காய்ச்சலைக் குறிக்கும். அடங்காத அளவு ஏற்படும் பேரளவுப் பசி, யானைத்தீ எனப் பெறும். மணிமேகலைக் காப்பியத்தை அறிந்தவர்களுக்குக் காயசண்டிகைக்கு ஏற்பட்ட யானைப்பசிநோய் பற்றித் தெரியும்.

யானைத தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை :

என மணிமேகலை (உலக அறவி புக்க காதை, 17 : 7-8) கூறுகிறது. இவ்வகைப் பெயர்களும் யானை பற்றிய அறிவியல் தன்மைகளைப் பொதுமக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உணர்த்துகிறது.

பிங்கல நிகண்டு, பெருங்குருகு என்னும் பறவையை யானை உண் குருகு என்கிறது. யானை பயிருண்ணி; ஊனுண்ணி அல்ல. எனவே, யானை உண்ணும் குருகு - யானையால் உண்ணப்படும் குருகு - எனப் பொருள் வராது. பெருங்குருகு என்னும் பறவைதான் யானையை உண்ணும்பறவையாக மிகுந்த வல்லமையுடன் இருந்திருத்தல் வேண்டும்.

மேலும், யானைச் செவி -கன்னம், தாலம் யானை நடுச்செவி - வட்டம் யானைச் செவி அடி - சூளிகை யானைவாய்-தளவு யானை உமிழ்நீர் விலாழி- யானைவால் - தாலவட்டம் யானைவால் நுனி - வேசகம் யானைவால் கீழிடம் - வெருகம் யானை முன்கால் - காத்திரம் யானைப்பின்கால் -அபரம் யானை முகம் - மதகம்,மத்தகம், கும்பம் என்பன போன்று ஒவ்வோர் உறுப்பின் பகுதியைப் பற்றிய விலங்கியலிறிவும் நம்தமிழ் முன்னோர் பெற்றிருந்தனர் (பிங்கல நிகண்டு).

யானைபற்றிய பொதுவான குறிப்புகள் வருமாறு: -

யானைகள் ஏறத்தாழ 8 அடி முதல் 10 அடிவரை உயரம் உடையன ஏறத்தாழ 5,400 அயிரைக்கா(கிலோ) எடை உடையன. 22 திங்கள் பேறுகாலத்திற்குப்பின் யானைக்கன்றுகள் பிறக்கின்றன. இவை ஏறத்தாழ 90 அயிரைக்கா(கிலோ) எடை இருக்கும்.

யானையின் மூக்குத் துளைகள் நீளமாகவும் வளைந்து கொடுக்கக்கூடியனவாகவும் உள்ள தசைப்பிணைப்புகளால் இணைந்த அமைப்பே தும்பிக்கை எனப்பெறுகிறது.

ஆசிய யானைக்கு முன்கால்களில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும் உள்ளன. ஆப்பிரிக்க யானைக்கு முன்கால்களில் 4 அல்லது 5 நகங்களும் பின்கால்களில் 3 நகங்களும் உள்ளன.

யானைகளின் இயல்பான வேகம் மணிக்கு 6 அயிரைக்கோல்(கி.மீ.) எனினும் தேவைக்கேற்ப 40 அயிரைக்கோல்(கி.மீ.) வரை விரைந்து செல்லும் இயல்பின.

யானை பெருத்த பருத்த உருவமாக இருப்பினும் நடக்கும் பொழுது ஒலி எழுப்பாமல் மென்மையாக நடக்கும். அதன் கால்களின் அடிப்புறத்தில் உள்ள மென்மையான சதைப்பகுதியே நடப்பதால் ஏற்படும் அதிர்ச்சியைக்குறைத்து உடலைப் பாதுகாப்பதுடன் ஒலி ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றது.

யானையின் மருப்புகள் ஆண்டிற்கு ஏறத்தாழ 17 சிறுகோல்(செ.மீ.) வளரும் இயல்புடையன. இத்தகைய வளர்ச்சி அதன் இறுதிக்காலம் வரை தொடர்ந்தாலும் பொதுவாக இரண்டரை கோல்(மீட்டர்) நீளம் உடையன. எடை 45 அயிரைக்கா(கிலோ) வரை இருக்கும்.

உண்பதற்கான கிழங்கு வகைகளுக்காகப் பூமியைத் தோண்டவும் தண்ணீரைப்பெற்றுக் கொள்ளவும் பிற விலங்குகளில் இருந்து தங்களைப்பாதுகாக்கும்ஆயுதமாகவும் இவை பயன்படுகின்றன. ஆனால், மக்கள் இவற்றைச் சிற்பம் செதுக்கவும் வேறு பயன்பொருள்கள் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.

யானைப்போரைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் உவமையாகக் கூறுவதால் சங்கக்காலத்தில் யானை ச்சண்டை என்பது பரவலாக நடைபெற்றிருக்க வேண்டும்(திருக்குறள் 758).

குழுக்களாக இணைந்து வாழும் யானைகளைப் போன்று நாமும் ஒற்றுமையாக இணைந்து வலிமையுடன் வாழ்ந்தால் இனப்படு கொலை நடந்திருக்காது அல்லவா?

 http://www.newscience.in/articles/yanaiyiyal

 

Tuesday, March 8, 2011

Toppest level in Biology- elephant: andre' sonnargal 36:அன்றே சொன்னார்கள் 36 -உயிரறிவியல்: யானை (1)

>>அன்றே சொன்னார்கள்36


உயிரறிவியலில் உயர்ந்த நிலையில் இருந்தனர் - யானை (1)

                                                                                                                

natpu பயிரறிவியல் ஆக இருந்தாலும் விலங்கியல் ஆக இருந்தாலும் பழந்தமிழ் மக்கள் உயர்ந்த நிலையில் ஆட்சி செய்துள்ளனர். உயிரினங்களின் பெயர்கள், உறுப்புகளின் பெயர்கள், தன்மை, முதலானவை வெறும் சொற்கூட்டமாகவோ ஒரு பொருளுக்கான பல பெயராகவோ பார்க்கப்படுவது தவறு. இவற்றையே நாம் பிற மொழிகளில் படிக்கும் பொழுது மிகப்பெரிய அறிவியல் உண்மைகளாகப் பார்க்கின்றோம். தமிழில் இலக்கிய வரிகளாக எண்ணிப் புறந்தள்ளி விடுகின்றோம். உவமைகள் மூலம் அறிவியல் செய்திகளை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெரிவித்து உள்ளார்கள் எனில், மக்களின் அறிவியல் உணர்வு மிகச் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்கத் தவறி விடுகின்றோம். நாம் இத்தகைய அறிவியல் உண்மைகளை அவ்வப்பொழுது பார்ப்போம்.  முதலில்  யானை குறித்துப் பார்ப்போம்.

யானைக்கான எலிபண்ட் (Elephant) என்னும் சொல்லிற்கு இலத்தீன் மொழியில் பெரு வளைவு என்று பொருள். பெரிய விலங்காகவும் வளைந்த தோற்றத்துடனும் காணப்படுவதால் இப் பெயரை வழங்கி உள்ளனர். பொதுவாக யானையின் தோல், செவி, முதலான சில வெளி உறுப்புகள் அல்லது பகுதிகள் குறித்து மட்டுமே அயல்நாட்டு அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழில் உள்ள அதன் ஒவ்வொரு பகுதி அல்லது அதன் வேறு பெயர்கள்,  யானையியல் குறித்து மிகப் பரந்து பட்ட அறிவியலறிவு அன்றைக்கே தமிழர்களுக்கு இருந்ததை வியப்புடன் உணர்த்துகிறது.

யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான 170 பெயர்கள் உள்ளன.
(விக்சனசரி:http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88)  
இவற்றுள் சில பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் மறைந்து அயற் பெயர்களாக அமைந்துள்ளன. ஆராய்ந்து பார்த்தால் தமிழ்ப் பெயர் நமக்குப் புலப்படலாம். சான்றாக யானையைக் கசமுகன் என்கின்றனர். இதில் ச என்னும் எழுத்து கிரந்த ஒலிப்புடன் பயன்படுத்துவதால் வேற்று மொழிச் சொல்லாகக் கருதுகிறோம். உண்மையில் கயம் என்னும் தமிழ்ச் சொல் கசம் என மாற்றப்பட்டதால் அச் சொல்லின் சிறப்பை நாம் உணராமல் போய்விட்டோம்.
கயம் என்றால் மென்மை என்றும் பொருள். யானையின்  தலை மிகப் பெரியது; ஆனால், உள்ளே கடற்பஞ்சு போன்ற எலும்புகளும் ’ஒன்றுமில்லா அறைப்பகுதிகளும்’ உள்ளன. எனவே மென்மையானது. ஆதலின் மென்மையான தலை என்னும் பொருளில் ’கயந்தலை’ என்றனர். எனவே கயந்தலை என்பது அத் தலையையுடைய யானையையும் குறிப்பதாயிற்று.யானை பற்றிய அறிவியல் சிந்தனையின் விளைவே கயம் என்னும் சொல். ஆனால், கயம் என்பது கசம் ஆக மாறி ஒலிக்கப்பட்டுக் (கசம் + முகம் உடைய) கசமுகன் என மாற்றப்பட்டதால் நாம் உண்மையை உணரவில்லை.

யானையின் பிற பெயர்களும் அதன் தன்மைக்கேற்றனவே என்பதற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
natpu
உயரம் கருதி உயரம் என்னும் பொருளில் உம்பல்; திரண்டு இருத்தலால் அப்பொருளில் உவா (60 ஆண்டிற்கு மேற்பட்ட யானை); உரல் போல் பாதம் இருந்தமையால் உரலைக் குறிக்கும் கறை என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கறைபோல் உள்ள அடி உடைய யானை கறையடி; பெரிய பாதத்தை உடைமையால் பொங்கடி; கருப்பு நிறம் உள்ள விலங்கு (மா) என்பதால் கரி அல்லது கருமா; இருள்போல் நிறம் கொண்டதால் இருள்; வேறு எந்த விலங்கிற்கும் இல்லாத வகையில் கை உள்ள - துதிக்கை உள்ள - விலங்கு (மா) என்பதால் கைம்மா;  இவ்வாறு பிற விலங்குகளில் இருந்து தனித்து வேறுபட்டுக் (கை உடன்) காணப்படுவதால்  அப்பொருளில் ஒருத்தல்; அக் கை துளையுடன் உள்ளதால் தும்பி; அக்கை தொங்கிக் கொண்டு இருத்தலால் தொங்குதல் என்னும் பொருளைக் குறிக்கும் நால் என்னும் சொல்லைப் பயன்படுத்தி நால் வாய்; முகத்தில் புள்ளி உள்ளமையால் புகர் முகம்; கை உடைய, மலைபோல் தோற்றம் கொண்ட விலங்கு என்பதால் கைம்மா; துளையை - புழையை - உடைய கை உள்ள விலங்கு என்பதால் புழைகை அல்லது பூட்கை அல்லது பூழ்க்கை; நீண்ட நெடிய கையை உடையதால் நெடுங்கை; பெருங்கையை உடைய விலங்கு என்பதால் பெருங்கை; அக் கை தொங்கிக் (தூங்கிக்) கொண்டு உள்ளதால் தூங்கல்; ஒற்றைக் கையை - ஒரே ஒரு கையை உடையதால்- ஓர்கை; பெரிய விலங்கு(மா) என்பதால் பெருமா; உருண்டு திரண்டது என்னும் பொருளில் வழுவை; புல்லை வாரிப் போடுவதால் வாரி; வாரணம் எனப்படும் சங்குபோன்ற தலை உடையதால் வாரணம்; நீர்ப்பறவைகளின் விரல்கள் இடையே உள்ள சவ்வுத் தோலாகிய துதி போல் யானையின் கைந் நுனியில் (தோலுடன் விரல் போன்ற உறுப்பு) அமைந்துள்ளதால் துதிக்கை; கம்பத்தில் கட்டப்படும் விலங்கு என்பதால் கம்பமா; கோடு (தந்தம்) உள்ள விலங்கு என்பதால் கோட்டு மா; கூட்டமாக இருக்கும் யானை தன் குழுவைப்பிரிந்து குழு அல்லாமல் தனித்தே திரிந்தால் அல்லியன்; வலிமையான விலங்கு என்பதால் வல்விலங்கு; பெரிய விலங்கு என்பதால் பெருமா; ஒற்றைக் கோடு (கொம்பு) உள்ள யானை ஒற்றைக் கொம்பன்; வளைந்த கோடு உடைய யானை ஏந்து கொம்பன்; பெரிய கொம்புகள்உடைய யானை கொம்பன் யானை; எனப் பலவகையாக யானையின் தன்மைகளை அறிந்து  பல பெயர்களைச் சூட்டி உள்ளனர். இவை தவிர போர் யானை (அதவை), பட்டத்து யானை (ஐராவணம்) முதலான வகைப்பாட்டிற்கு ஏற்பவும் யானைகளுக்குப் பெயர்கள் உள்ளன.

யானைகள் பற்றிய இலக்கியக் குறிப்புகளை அடுத்துப் பார்ப்போம்.

யானை பரவலாகப் பயன்படுத்தினாலன்றி இவ்வாறு பல பெயர்கள் தோன்றியிருக்கா; விலங்கினங்கள்  குறித்த  அறிவியல் அறிவு இருந்தாலன்றி யானைபற்றிய வேறுபாடுகளை உணர்ந்திருக்க மாட்டார்கள்.

சொல்வளமும் அறிவியல் வளமும் மிக்க தமிழ்தான் இன்றைக்குப் பாட மொழியில் புறக்கணிக்கப்படும் கொடுமைக்கு ஆளாகி உள்ளது!

 
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


Followers

Blog Archive