Showing posts with label கட்டுரைத் தொடர். Show all posts
Showing posts with label கட்டுரைத் தொடர். Show all posts

Wednesday, February 5, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : இலக்குவனார் திருவள்ளுவன்



(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-5 : தொடர்ச்சி)

இவ்வாறு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் 28.08.1937 இல்  கண்டனக் கூட்டம் நடைபெற்றுக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமான முந்தைய சில சூழலையும் பார்ப்போம்.

1937இல் சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதிவ் இந்தியத்  தேசியப் ்பேராயக் கட்சி(காங்கிரசு) 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.   14.07.1937இல் இராசகோபாலாச்சாரி சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக இந்திப் பரப்புரை அவையத்தில்(இந்தி பிரச்சார சபாவில்)பேசிய இராசாசி வணிகத்திற்கும் அரசியல் தொடர்பிற்கும் தென்னிந்தியர்க்கு இந்தி இன்றியமையாதது என்று பேசினார். இதனை வரவேற்று ஆனந்தவிகடன் இதழ் எழுதியது. பேராயக்கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி இராமராச்சியம் அமைப்பதற்கும் வருணாசிரமத் தருமத்தைக் காப்பதற்கும் இந்தியுடன் சமற்கிருதம் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றார். தான் முதலைமச்சராகப் பொறுப்பேற்றவுடன் இந்துசுதானி கட்டாயப்பாடமாக்கப்படும் என இராசாசி அறிவித்தார். 27.08.1937 அன்று துறையூர் மாநாட்டில் அறிஞர் அண்ணா எதிர்ப்பு தெரிவித்தார். இந்தி எதிர்ப்பின் முதல் கணை அரசியல் தலைவர்களில்  இவரிடமிருந்தே வீசப்பட்டது.

11.08.1937 இல் முதல்வர் இரசாசி, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். பெரியார் ஈ. வெ. இராமசாமி,  நீதிக்கட்சித் தலைவர் அ.தா. பன்னீர் செல்வம் ஆகியோர், உடனடியாக இதனை எதிர்த்து அறிக்கை விட்டனர். எனவே சென்னை மாகாணம் முழுவதும் 4.10.1937 முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் சூலை முதல் நாள் இந்தி மொழி நாள் என்று அறிவிக்கப்பட்டது.  இதற்கு எதிராகவும் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள், கருப்புக் கொடி ஏந்தி விளக்கக் கூட்டங்கள் நடத்துதல் அரசு அலுவலகங்கள் முன் நின்று மறியல் செய்தல், இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்துதல்  எனப் பல வகைகளிலும் இந்தித் திணிப்பிற்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

10.8.1937இல் இராமகிருட்டிணா மடம் மாணவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் இராசாசி இந்தி, பள்ளிகளில் கட்டாயமொழி என்று அறிவித்தார். இந்தியில் பாடநூல்கள் விரைவில் எழுதப்படவேண்டும். புதிய இந்தி எழுத்துகளைத் தமிழக மாணவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்களேயானால் பிறகு இந்தி, சமற்கிருதத்தை அவர்கள் எளிதில் பயில வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அந்த விழாவில் அவர் பேசினார்.

10.8.1937 இல் கட்டாயப் பாடத் திட்டத்தை இராசாசி அறிவித்த போது தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்ச்சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ்க்கழகம் சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

27.8.37 இல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழவேள் உமா மகேசுவரனார் தலைமையில் கட்டாய இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது.

5.9.1937 இல் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில்  நாவலர் சோமசுந்தர பாரதியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பேசினர்.

4.10.1937 இல் சென்னை கோகலே மன்றத்தில் பெருந்திரளானோர் பங்கேற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதற்குத் தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமை வகித்தார். 

26.12.1937இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் திருச்சியில் சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டின் தலைவர் சோமசுந்தர பாரதியார். இதில் பெரியார் ஈ.வெ. இராமசாமி முதன் முறையாகப் பங்கேற்றார்.

1937இல் தமிழ்நாடு முழுமையும் ஓங்கி வளர்ந்த இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மக்கள் உள்ளத்தில் தமிழார்வத்தைத் தூண்டியது. தமிழரின் பண்டைய பெருமைகளை உணரவும் புகழார்ந்த தமிழக வரலாற்றுச் செய்திகளை அறியவும் தமிழிலக்கியச் சிறப்புகளை அறிந்து அவற்றில் ஈடுபாடு காட்டவும் இது வழிகாட்டியது.

“இந்தியாவின் தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், பொதுமொழியாகவும் ஆக்கிடும் நோக்கத்தில் தமிழகத்தில் கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நோக்கில், தமிழார்வம் கொண்ட பேரறிஞர்களும், பொதுமக்களும் அந்தக் கட்டாய இந்தியைத் தீவிரமாக எதிர்க்கும் பணியில் ஈடுபட்டார்கள். இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தமிழகம் தனியே பிரிய வேண்டும் என்ற கருத்து இந்தி எதிர்ப்பின் விளைவாக 1938 இல் உருவாகியது. வடநாட்டு அரசியல் ஆதிக்கத்தையும், பொருளாதார ஆதிக்கத்தையும், வணிக ஆதிக்கத்தையும் நாளடைவில் தமிழ்ப் பேரறிஞர்களுக்கு உணர்த்திற்று. அதன் விளைவாக, 1938 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் கூட்டப் பெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் மறைமலையடிகள் ஆவார்கள். அதனை வழி மொழிந்து பேசியவர்கள் பெரியார் இராமசாமி, ச.சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆவார்கள்.” (இரா.நெடுஞ்செழியன்,  தி.மு.க.வரலாறு)

தமிழறிஞர்கள் தலைமை தாங்கி நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை அடித்தளமாகக் கொண்டு திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் வளர்ந்தது. தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அணி திரள வேண்டிய தேவையையும் இஃது உருவாக்கியது. அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழுடன் தமிழ்க்குடும்ப  மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோரும் இருந்தனர். எனவே,  ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது வெற்றி பெறாது என எண்ணிய திராவிட இயக்கத்தலைவர்கள் “திராவிட நாடு திராவிடருக்கே” என்று மாற்றி முழங்கினர்.(பின்னர் இது கைவிடப்பட்டது தனி வரலாறு.) இதற்கு மாற்றாக அவர்கள், “தமிழ்நாடு தமிழருக்கே! அவரவர் மொழி பேசும் நிலம் அவரவருக்கே!” என முழங்கி யிருக்கலாம். அவ்வாறு இருந்திருப்பின் “தமிழ்நாடு தமிழருக்கே” என்பது நீர்த்துப் போகாமல் வெற்றி பெற்றிருக்கும். தமிழ்நாடு . இன்றுள்ளவாறான பிற மொழியினர் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாறியிருக்காது.

27.02.1938 இல் முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு, காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் கான்பகதூர் கலிபுல்லா சாகிபு தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, தமிழவேள் உமாமகேசுவரம்(பிள்ளை), சிதம்பரம் என்.தண்டபாணி முதலிய பலரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அறிஞர்களும் தலைவர்களும் ஆற்றிய உரைகள் மக்களுக்கு இந்தியை எதிர்ப்பதில் எழுச்சி ஏற்படுத்தின.

ஒவ்வொரு நாள் போராட்டத்தின் போதும் ஒவ்வொருவரைத் தளகருத்தாக்களாகச்  சருவாதிகாரிகள்  என்ற பெயரில் பெரியார் ஈ.வெ.இரா. நியமித்தார். முதல் நாள் சிடி.நாயகம், இரண்டாம் நாள் ஈழத்தடிகள், மூன்றாம் நாள் கே.எம். பாலசுப்பிரமணியம், நான்காம் நாள் சி.என்.இராசு, ஐந்தாம் நாள் எசு.கே.சாமி, ஆறாம் நாள் எம்.எசு.மொய்தீன், ஏழாம் நாள் புவனகிரி நமச்சிவாயம், 8, 9, 10, 11, 12, 13 ஆம் நாள்களில் முறையே மாயவரம் சம்பந்தம், காஞ்சி பரவசுத்து ஆச்சாரியார், பெரியகுளம் இரங்கசாமி, கந்தம் (உ)ரோசு அம்மாள், மாரியம்மாள், புலவர் இராமநாதர் ஆகியோர்  எனத் தளகருத்தாக்களை நியமித்தார். 

இலக்குவனார் திருவள்ளுவன்


Wednesday, January 29, 2025

குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி)

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து

ஈண்டிய கேள்வி யவர்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 417)

நுட்பமாக ஆராய்ந்து மிகுதியான கேள்விச்செல்வம் பெற்றவர்கள் தவறாக உணரந்தாலும் அறியாமையானவற்றைச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

உளவியலறிஞர்கள். கவனித்துக் கேட்டல் அறிவாற்றலையும் ஒழுக்க நடத்தையையும் உள்ளடக்கியது. ஆதலின் அறியாமையை வெளிப்படுத்த மாட்டார்கள் என்கின்றனர்.

காலிங்கர், “ ‘பிழைத்தும்-உணர்ந்தும்’ எனப் பிரித்துத் ‘தப்பியும்’ ‘குறிக்கொண்டும்’ என்று இரண்டாக்கினார். இது கேள்விச் செல்வம் உடையோர் அறியாமலோ அறிந்தோ இவ்விருவகையானும் அறிவற்ற பேச்சு பேசார் என்ற பொருள் தரும்.” என விளக்குகிறார்.

பரிமேலழகர், இழைத்துணர்ந்து என்பதற்குப்  “பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்; ஈண்டுதல்- பலவாற்றான் வந்து நிறைதல்”  என்கிறார்.

பிழைத்து உணர்ந்து என்று சொல்லாமல் உம்மைச் சேர்த்துப் பிழைத்து உணர்ந்தும்  என்று சொல்வதால், நன்கு ஆராய்ந்து கற்போர், தவறாக உணரமாட்டார். ஒருவேளை உணர்ந்தாலும் அதனைப் பிறருக்குச் சொல்ல மாட்டார்  என்பதைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.

ஒன்றைப் படிக்கும் பொழுது சொல்லப்பட்ட முறையாலோ புரிதலில் இடர்ப்பாடு ஏற்பட்டாலோ பிழையாகப் புரிந்து கொள்ள நேரிடும். கற்றதில் தவறு நேர்ந்தது என உணர்ந்தவரகள் உடன் தன் அறியாமையைப் பிறருக்குப் புலப்படுத்த மாட்டார். கேள்விச் செல்வத்தால் அறியாமையை அகற்றிக் கொள்வார். கேட்பதிலும் தவறானவை இடம் பெறலாம். எனவேதான் நிறைந்த கேள்வி என்கிறார் திருவள்ளுவர். எனவே, நுட்பமாக ஆராய்ந்து கற்றவர்கள் தங்கள் அறியாமையைப் புலப்படுத்தாமல், கேள்விச்செல்வத்தால் அவற்றைப் போக்கிக் கொள்வர். எனவே,  கற்பதில் ஏற்படும் ஐயங்களைப் போக்கவல்லது கேள்விச்செல்வமே!

தவறானவற்றைப் பிறருக்குச் சொல்லாமல், கேள்விச்செல்வத்தால் அவற்றைப் போக்கு!

Tuesday, January 28, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்



(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

எப்போதுமே தனித் தமிழ் என்று சொன்னாலே, பிராமண எதிர்ப்பாகவும், இறை மறுப்பாகவும் கருதி எதிர்க்கருத்துகளைக் கூறுவோர் உளர். தன்மானம், தன்மதிப்பு முதலியவை பற்றிப் பேசும் திராவிட இயக்கத்தார் தமிழுக்கும் குரல் கொடுப்பதால் அவ்வாறு தவறான கருதுகையும் பரப்புரையும் நேர்ந்துள்ளன. உண்மையில் காலங்காலமாக இறை ஏற்பாளர்களும் தமிழுக்குக் குரல் கொடுத்தே வந்துள்ளனர். இறைநெறி இலக்கியக் காலங்களிலும் திருமுறைப் புலவர்களும் பிறரும் தமிழை உயர்த்தியே கூறி வந்துள்ளனர்.

இறைவழிபாட்டில் சமற்கிருதம் புகுந்து பரவத் தொடங்கியதால் அதற்கு எதிர்ப்பாக,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே (திருமந்திரம் 81)

 எனத் திருமூலர், என்னை நன்றாக இறைவன் படைத்தது, தன்னை நன்றாகத் தமிழில் போற்றவே என்கிறார்.

இறைவன் கட்டளைக்கிணங்கத் தமிழில் பாடிய சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் செந்தமிழ்ப்பாட்டுக்குப் பேரானந்தப் பேரருள் அளித்தருளும் பேராற்றல் உண்டு என்பதைத் தேனமுதத் திருப்பாட்டு என்னும் தொடர் மூலம் வள்ளலார் விளக்குகிறார்.,

தேன்படிக்கும் அமுதாம் உன்

திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போ(துஎன்னை

நான்மறந்தேன் நாவொன்றோ ? ஊன்படிக்கும் உளம்படிக்கும்

உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண்

தனிக்கருணைப் பெருந்தகையே.’

என்கிறார் அவர்.

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் கட்டளைக்கிணங்கப் பாடினார் என்பர். அவர், இறைவனே அவரைத் தமிழில் பாடுமாறு சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.

மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு கென்றார்

தூமறை பாடும் வாயார்

நான்மறை தமிழ்மறையே

இங்கே தூமறை என்பதன் நோக்ம் என்ன? தமிழில் தமிழ் மரபு போற்றும் மறைகளும் வேதங்களும் இருந்தன. பின்னர் வந்த ஆரியர் இதே பெயர்களிலேயே நூல்களை இயற்றினர். அவை நல்லன அல்ல. எனவே, தமிழின் உயர்வைக் குறிப்பிடத்  தூ மறை (தூய மறை) என்கிறார்.

நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே!” எனத்தமிழ்க்கடல் மறைமலையடிகள்தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் முதலிய அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர்.

தமிழில் தமிழர்களால் படைக்கப்பட்ட தமிழ் மறை நூல்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டே இருந்துள்ளனஅதுபோல் தமிழர்களால் தமிழில் படைக்கப்பட்ட தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களுக்கு முன்னரே தமிழில் இருந்துள்ளனசங்க இலக்கியங்கள் இவற்றைக் குறிப்பிட்டுள்ளனதமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் தமிழில் சிறப்பாக உள்ள மாந்தரையும் நூல்களையும் பிறவற்றையும் குறிக்கும் தமிழ்ச்சொற்களைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டு தமதுபோல் பயன்படுத்தினர்தமிழின் முந்தைய வரலாற்று நூல்கள் கடல்கோள்பட்டும் பிற வகைகளிலும் அழிந்தமையால் தமிழ் மறைகளையும் தமிழ் வேதங்களையும் குறிப்பிடும் இடங்களை ஆரியமாக எண்ணித் தவறு செய்துவிட்டனர்.

புரையில்

நற்பனுவல் நால் வேதம்

என்கிறார் புறநானூற்றுப் புலவர் நெட்டிமையார்(பாடல் 15). குற்றமற்ற நல்லறநெறியாகிய நால் வேதம் என உரையாளர்கள் விளக்குகின்றனர்.

குற்றமற்ற அறவழிப்பட்ட வேதம் எனக் கூறுவது ஏன்ஆரிய வேதம் அறிமுகமான காலக்கட்டம் அதுதமிழ் வேதங்கள் அறநெறிகளை மட்டுமே உணர்த்துவனஆரிய வேதங்கள் அவ்வாறல்லசான்றாக அதர்வண வேதம் நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று கருதுவதைக் குறிக்கலாம்.  “அதர்வம்வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின் என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம்பொருளதிகாரம்புறத்திணை யியல்நூற்பா 20, உரைகூறியுள்ளமை இதனை உறுதி செய்கிறதுஆரிய வேதங்கள் குற்றமுடையனஅவ்வாறு தமிழ் மறைகளை எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் ‘புரைதீர் நற்பனுவல் என்கிறார் புலவர். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!, தினச்செய்தி, 05.09.2019)

     “ மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்

      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த

      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்

என்பதுதான் அப்பாடல்.

இங்கே நாம் சமற்கிருதம் குறித்த தவறான செய்திகள் குறித்தும் பார்ப்போம். சமற்கிருதம செம்மொழியல்ல, நல்லொழுக்கங்களைப் போதிக்கும் இலக்கியங்களை உடையது அல்ல, எனச் சமற்கிருத நூலாசிரியர்களே தெரிவித்துள்ளனர். நம்மில் பலர், அறியாமையின் காரணமாக, “சமற்கிருதம் 2000 ஆண்டுகளாக நம்மை ஆட்சிசெலுத்தி வருகிறது. சமற்கிருதம் தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக இருந்தது. சமற்கிருதப் பள்ளிகள் தமிழ்நாட்டில் இருந்தன” என்றெல்லாம் தவறாகக் கூறி வருகின்றனர்.

பேச்சுமொழியாக இல்லாத சமற்கிருதம் எங்ஙனம் ஆட்சிமொழியாக இருந்திருக்க முடியும். அறிஞர்கள் பலர் கூறியுள்ளதுபோல், தமிழ்நாட்டில் ஒரு போதும் சமற்கிருதம் ஆட்சிமொழியாக இருந்ததல்லை. பிராமணர்களுக்குச் சடங்குகளுக்காகச் சமற்கிருதம் கற்பிக்கப்பட்டதே தவிர, மக்களுக்கான சமற்கிருதப் பள்ளிகளும் இருந்ததில்லை.

2000 ஆண்டுகளாகச்சமற்கித வழிபாடு இருந்ததாகக் கூறி வருவதும் தவறே.  இடைக்காலத்தில்தான் இரிக்கு ஓதும் மறையவர்க்கு ஓர் இளங்கோயில் என ஒரே ஒரு கோயிலில் சமற்கிருத வழிபாடு பிராமணர்களுக்காக நடைமுறையில் கொண்டுவரப்பட்டது.

திருமணத்தில் ஆரிய முறையும் பிற்பட்ட காலத்தல்தான் வந்துள்ளது.”மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” என இளங்கோ அடிகள் கூறுவது சமற்கிருதத் திருமண முறையல்ல. ஆரிய வழிபாடுமுறைகளுக்கான எதிர்ப்பைத் தேவந்தியிடம் கண்ணகி வாயிலாகக்காட்டுகிறார் இளங்கோ அடிகள். இது வேள்வி முறைத் திருமணமும் அல்ல.

ஆரியரின் வேள்வி என்பது நெய் முதலிய உணவுப்பொருள்கள் மட்டுமல்ல, மான் முதலிய உயிரினங்களையும் போடும் உயிர்க்கொலை செயல். விலங்கினங்கள், பறவையினங்கள் மட்டுமல்ல, மனிதர்களையும் குறிப்பாகக் பெண்களையும் வேள்வித்தீயில் இடும் கொடுஞ்செயலே வேள்வி.  ஆரியர்களால் போற்றப்பட்ட அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, பாஞ்சாலி ஆகிய பெண்களும் வேள்வித் தீயில் போடப்பட்டு உயிர்ப்பலி யாக்கப்பட்டவர்கள்.(புகழ் பெற்ற இதிகாசப் பெண்மணிகள் ஐவர், பாரதி புத்தகாலயா வெளியீடு).  உயிர்க்கொலைக்கு எதிரான கோவலன் குலத்தினர் இத்தகைய வேள்வித்தீயை வளர்த்திருப்பார்களா? தீ என்பது அழிக்கபுவம் ஆக்கவும் வல்லது. தீயைப்போல் நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள்,தீய பண்புகள் ஆகியவற்றை அழிக்கவும் நல்லெண்ணங்கள், நற்பண்புகள் ஆகியவற்றை வளர்த்து ஆக்கவும் தீயை ஒரு குறியீடாகக் கொண்டு வலம் வந்திருப்பர். இதில் குறிப்பிட்டுள்ள மாமுது பார்ப்பான் பிராமணர் அல்லர். தமிழரே. இப்பொழுதும் சில வகுப்பாரிடையே தங்கள் வகுப்பில் உள்ள மூத்தவரைக் கொண்டு திருமணம் செய்விப்பது வழக்கமாக உள்ளது.அதுபோன்ற வழக்கம்தான்.

Followers

Blog Archive