Showing posts with label மொழிப்போர் வரலாறு அறிவோம்!. Show all posts
Showing posts with label மொழிப்போர் வரலாறு அறிவோம்!. Show all posts

Friday, April 4, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1

 




(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – -தொடர்ச்சி)

இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பற்பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றமை போல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தப் போராட்டத்திலும் பெண்கள் ஈடுபாடு இருந்ததில்லை.

பெரியார் ஈ. வெ. இராமசாமியும்  எதிர்க்கட்சியான நீதிக்கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய, முதற்கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் பெண்கள் பங்களிப்பு அளப்பற்கரியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வகைகள் மாநாடுகள், அணிவகுப்புகள், மறியல் போராட்டங்கள், உண்ணா நோன்பு, பேரணிகள், கறுப்புக் கொடி காட்டுதல்  எனப் பலவகையாக இருந்தன. இவை அனைத்திலுமே பெண்களின்பங்களிப்பு முதன்மையாக இருந்தது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இலக்காகவும் செயற்பாடுகளாகவும் பின்வருவன இருந்தன.

•         இந்தியை கட்டாயப் பாடமாக்குவதை ஒழிக்க வேண்டும்

•         இந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்ததை எதிர்த்தல்

•         மாணவர்களை இந்திப் பாடங்களைப் புறக்கணிக்கும் படி செய்தல்

•         இந்தியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்கள் நடத்துதல்

•         பேராயக்கட்சி(காங்கிரசு) அமைச்சர்களுக்கு எதிராக்க கறுப்புக் கொடி காட்டுதல்

•         முதலமைச்சர் வீட்டிற்கு முன்பு மறியல் நடத்துதல்

ஆண்களுக்குத் தாங்கள் எவ்வகையிலும் சளைததவ்கள் இல்லை என்று சொல்லும்படிப் பெண்களி்ன் பங்களிப்பு இவற்றில் தீவிரமாக இருந்தது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக் தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அமைப்பின் பெயரில் உள்ள ‘முன்னேற்றக் கழகம்’ என்ற தொடரைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் மருத்துவர் தருமாம்பாள் அம்மையார். இத்தொடரே முன்னேற்றக் கழகம் என்று தமிழ்நாட்டில் தொடங்கப்படும் கட்சிகளின் பெயர்களில் இடம் பெற்றது. கழகம் என்று அரசியல் கட்சிகளின் பெயர்களில் இடம் பெறவும் இதுவே தொடக்கமாக அமைந்தது.

பெண்களின் போராட்ட உணர்வுகளுக்கு  தூண்டுகோலாகவும் வடிகாலாகவும் இவ்வமைப்பு செயற்பட்டது. இத்தகைய போராட்டப் ப்ங்களிப்புகளில் ஒன்றுதான் சென்னையில்  ஒற்றைவாடை அரங்கில் 13.11.1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாடு.

மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் மாநாட்டுத் தலைமை தாங்கினார். மீனாம்பாள் சிவராசு தமிழ்க் கொடி ஏற்றினார்; பண்டிதை நாராயணி அம்மையார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரை ஆற்றினார். நாகம்மையார் படத்தைத் தோழியர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார் பெரியார் ஈ.வெ.இராமசாமி சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மரு, தருமாம்பாள், அலர்மேலுமங்கை தாயாரம்மாள், மஞ்சுளாபாய் சண்முகம், புவனேசுவரி என்.வி. நடராசன் முதலானோர் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு பெண்களுக்கு இந்தி எதிர்ப்பில் ஈடுபட அழைப்பு விடுத்தார். தமிழ்மொழி,  தமிழ்ப்பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார்

அம்மாநாட்டில்தான் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது. “இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெரும் தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமையானும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்கவேண்டும்” என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடுகள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதோடு மட்டுமன்றி ஆண்களைப் போலவே பெண்களும் சிறைபுகும் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தது. முதல் பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய பெரியாரும் அதையே வலியுறுத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறச் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சாற்றப்பட்டுப் பெரியார் ஈ.வெ.இரா.விற்குத் தண்டனை வழங்கப் பட்டது. தந்தை பெரியார் உரை கேட்டு மகளிர் போர்க் கோலம் பூண்டனர்.

இம்மாநாட்டின் மறுநாள் – 1938 நவம்பர் 14 – சென்னையில் பெத்து நாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் அருகிலிருந்து மரு.தருமாம்பாள், இராமாமிர்தம் அம்மையார், மலர்முத்தம்மையார்,  (பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியார்)பட்டம்மாள், சீதம்மாள் ஆகியோர் இந்து இறையியல் பள்ளி நோக்கி மறியலுக்குப் புறப்பட்டனர்; தளையிடப்பட்டனர். வீரத்தாய்மார்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மறியலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அங்கு நீதிபதி எவ்வளவோ கேட்டுக் கொண்டும் முன் வைத்த காலைப் பின் வைக்க மறுத்தனர். நீதிமன்றத்தையே பரப்புரை மேடையாக மாற்றி இறுதி வரை தாங்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், சிறை சென்றனர் பெண்கள். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மட்டும் 73 பெண்கள் மற்றும் அவர்களுடன் 32 குழந்தைகளும் சிறை சென்றுள்ளனர். இவர்களோடு 1164 ஆண்களும் சிறை சென்றுள்ளனர்.

தி.மு.க.தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் மகளிர்அணி தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்தது. பேரறிஞர் அண்ணா முதலில் தயங்கினார். பின்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களின் பங்குகளை நினைவு கூர்ந்தார்.அதனால் மகளிர் அணியை 21.8.1956-இல் உருவாக்கினார். என்.வி.நடராசன் வீட்டில் நடந்த அமைப்புக் கூட்டத்தில்,

சத்தியவாணிமுத்து தலைவராகவும் செயலாளர்களாக:

இராணி அண்ணாதுரை,

அருண்மொழிவில்வம்,

வெற்றிச்செல்வி அன்பழகன்.

புவனேசுவரி நடராசன்

ஆகியோரும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தயாளு கருணாநிதி,

நாகரத்தினம் கோவிந்தசாமி,

சுலோச்சனா சிற்றரசு,

பரமேசுவரிஆசைத்தம்பி,

என்எசுகேயின்மனைவி  டிஏமதுரம் முதலானோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்வை இங்கே குறிப்பிடுவதன் காரணம்  முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் பெ்ண்களின் தீவிர பங்களிப்பு இருந்தமையே பின்னர்க் கட்சிகளில் மகளிர் அணிகள் உருவாக அடித்தளமாக இருந்தது எனச் சுட்டிக்காட்டவே!

(தொடரும்)

Sunday, February 9, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8 : இலக்குவனார் திருவள்ளுவன்



(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-7 : தொடர்ச்சி)

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8

இராசாசியின் பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. இராசாசிக்கும் இந்திக்கும் எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது . இராசாசியின் கட்டாய இந்திச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், பெரியார் ஈ.வே.இரா.  ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன.  மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு, பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது.

முதல் மொழிப்போரின் எழுச்சியால் எழுந்த தமிழகம் 1938 மொழிப்போரை “முதல் தமிழ்த் தேசியப் போர்” என அடையாளங் கண்டது. தந்தை பெரியாரை “தமிழ்தேசியத் தந்தை” எனப் போற்றியது., பாவேந்தர் பாரதிதாசனைத் “தமிழ்த் தேசியத் புரட்சிப் பாவலர்” என அறிமுகப்படுத்தியது. 

வங்காள மொழிப்போர் அடிப்படையில் பிப்பிரவரி 21, உலகத் தாய்மொழி நாள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  கட்டாய இந்தித் திணிப்பு கைவிடப்பட்ட பிப்பிரவரி 21 ஆம் நாளும் இதற்குப் பொருந்துகிறது என நாம் அற்ப மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் மொழிக்காக உயிர் ஈந்த தமிழ் ஈகியருக்க உலக அறிந்தேற்பு கிடைக்க நாம் ஏதும் செய்யவில்லை.

ஆரிய மொழியாலும், அதன் கலையாலும் தேசியம் என்ற போர்வை போர்த்துத் தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்குரிய இடமும், உரிமையும், நிலை தளரச் செய்தது போதாதது போல, நமது தமிழ் மொழி, இதுபோது (1938)  எதிர்பாராதவிடத்திலிருந்து கொணர்ந்து புகுத்தப் பெறும் புதியதொரு பகை மொழியை எதிர்க்க வேண்டியிருக்கிறது. நமது மாகாணத்துத் தற்காலக் காங்கிரசு மந்திரி சபை தனக்குள்ள செல்வாக்கைக் கருவியாகக் கொண்டு, தமிழ்நாட்டுத் தமிழுக்கு விபத்தொன்றைச் செய்யத் தொடங்கித் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பாட சாலைகளிலும் எல்லா மாணவர்களும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தப் போவதாகத் தமிழர்களாகிய நம்மைப் பயமுறுத்துகின்றது. அரசாங்கத்தின் கொள்கையென்று சொல்லி, பாடசாலைப் பாடங்களுள் இரண்டாவது மொழி வகையில் விருப்பப்பாடமாக வைப்பதாயினும் நமது மாகாண மொழியாகிய தமிழ்மொழியின் சிறப்பையும் உரிமை நிலையினையும் கெடுத்துச் சீர்குலைத்து வரும் வடநாட்டு ஆரிய மொழியின் கிளையாய், சமசுகிருதத்தின் முடிவாய் வந்திருக்கும் இந்தி மொழியை நமது தமிழ்நாட்டு அறிவுப் பக்குவமில்லாத இளஞ்சிறுவர்கள் கட்டாயம் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் இத்தீச் செய்கையால் நமது தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெருங்கேடும், தமிழர் நாகரிகத்துக்கு அனர்த்தமுமே உண்டாகும். இந்தி மொழியை எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் அது நம் தமிழ் மொழியின் காற்கீழ் ஒதுங்கக்கூடிய சிறுமையுடையது. இந்தியைக் கட்டாயப்படுத்திப் படிக்கச் செய்வது, தமிழ்க் கல்விக்கு இசைந்ததாக இல்லாமலிருப்பதோடு தற்காலம் நம் தமிழ் இருக்கும் நிலையில், அதற்கும் அதன் கலைவளர்ச்சிக்கும் பெரிதும் தடையும் இடையூறும் விளைவிப்பதாகவே இருக்கிறது. தமிழ்ச்சிறுவர்களுக்குச் சிறு வகுப்பிலேயே இந்தியைக் கட்டாயமாக நுழைப்பது, தமிழ் இளைஞர்களின் முற்போக்கைத் தடுத்து அவர் உயர் கல்வியைக் கற்க வொட்டாமல் தடை செய்வதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சியே தவிர வேறில்லை. இது, சாதிச்செருக்காலும், சமூகத்திமிராலும், தங்களுக்கு உரியது சமசுகிறதமேயென எண்ணி, பல நூற்றாண்டுகளாகத் தமிழுக்குத் தாழ்வு செய்து கொண்டே வந்த ஒரு சாதி இளைஞர்களுக்கு உயர் கல்விக்குரிய சலுகை காட்டுவதற்காகச் செய்யப்படும் சுயநலத் தந்திரமேயாகும். இந்தியென்பது சமசுகிருதத்தின் கிளைமொழி யாகையால், அந்தச் சம்சுகிருதமே தங்கள் “சுவ பாசை” என்று கொண்டு பயின்று வரும் அந்தச்சாதி இளைஞர்களுக்கு இந்தி மொழி சுலபத்தில் வந்துவிடும். இந்தியை நுழைத்துவிடின், எதிர்காலத்தில் இந்தி படித்தவர்களுக்கு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்குரிய வசதிகளும் பிற்கால வாழ்வுக்குரிய தகுதிப்பாடுகளும் வழங்கப்படும். அந்நிலையில் இந்தியைக் கற்கமுடியாமல், நம் தமிழ்சிறுவர்களே மிகவும் பாதிக்கப்பட்டு மேற்கூறிய தகுதிப்பாடுகளையும் பெறமுடியாமல் வருந்த நேரிடும். தற்கால நமது மாகாண மந்திரிசபை, இந்த வகையில் தமிழர்களை அலட்சியம் செய்து, அவர்கள் கவுரவத்தையும் நிராகரித்து,  தங்களுடைய கட்சிப் பலத்தாலும், காங்கிரசின் பெயராலும், இந்தக் காரியத்தைச் செய்ய முனைந்திருக்கின்றது. நமது பாசை, கலை முதலியவற்றுக்குத் தீங்கு செய்யுமிடத்து, காங்கிரசாயிருந்தாலும் நாம் அதற்கு இடந்தரக்கூடாது. உண்மையில் காங்கிரசு நிறுவனங்கூட, இந்தியே எல்லா மக்களுக்கும் கடடாயமான பொதுமொழியென முடிவு செய்துவிடவில்லை. ஆகவே நமது மாகாண மந்திரி சபை செய்யும் இது, தமிழர்களாகிய நம்மால் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

– வட ஆர்க்காடு தமிழர் மாநாட்டுத் தலைமையுரை 26.2.1938, திருவத்திபுரம் 

ஆங்கிலம் கற்றவர் அம்மொழியைப் பேசினால் அதன் பொருளை அறியாமல் நம் ஏழை மக்கள் திகைத்து விழிப்பது போலவே; இந்தி மொழியைக் கற்றவர் நம் மக்களிடையே இந்தியில் பேசினால் அவர் அதன் பொருளை அறியாமல் திகைத்து விழிப்பர் என்பதை நாம் சொல்லுதலும் வேண்டுமோ? ஆகவே; இவ்விந்திய தேயத்தில்……தாம்தாம் பேசும் தாய்மொழியையே நன்கு பயின்று அதன் வாயிலாக இம்மை மறுமை வாழ்க்கைக்குரிய பல துறைகளிலும் நல்லறிவு பெற்று முன்னேற்றம் அடையும்படி உதவி செய்தல் வேண்டும்.

.. .. .. இங்ஙனம் செய்வதை விட்டு இந்தி மொழியைக் கட்டாயப் பயிற்சிக்காக வைக்கப் பெரிதும் முயல்வது; உமிக்குற்றிக் கைசலிப்பதாய் முடியுமே அல்லாது; அதனால் ஒரு சிறு பயன்தானும் விளையமாட்டாது.

எல்லா வகையாலும் சிறந்த தமிழ்மொழி இவ்விந்திய நாடு முழுமைக்கும் பொதுமொழி யாவதற்குரிய நலன்கள் எல்லாம் வாய்த்ததாயிருந்தும் அதனை பொதுமொழியாக்க முயலாமல் “இந்தி” முதலான சிதைவு கலப்பு மொழிகளை இத்தேயத்திற்கு பொது மொழியாக்க வேண்டுமென்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவாரா என்பதனை அறிவுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

– மறைமலை அடிகள், இந்தி பொதுமொழியா? (Is Hindi a common Language?) 1938 

Friday, February 7, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-7 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-7 : இலக்குவனார் திருவள்ளுவன்


(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : தொடர்ச்சி)

கட்சிக் கண்ணோட்டமின்றித் தமிழர் அனைவரும் பங்கேற்கும் வகையில் 1938 மொழிப் போரை நடத்த பெரியார் திட்டமிட்டார். அதனால் அரசியல் முகமாகப் பெரியாரும் பண்பாட்டு முகமாக மறைமலையடிகளாரும் நாவலரும் ச.சோமசுந்தர பாரதியாரும் மொழிப்போரில் முன் நிறுத்தப்பட்டனர். 

முதல் மொழிப்போர் வெடிக்கக் கருத்துநிலைத் தூண்டுதலாய் இருந்தோர் மூவர் ஈழத்து சிவானந்த அடிகள், புலவர் அருணகிரிநாதர், அறிஞர் அண்ணா. சென்னையில் இதற்கான பணிகளைத் திட்டமிட்டுக் களம் அமைத்த மூவர் செ.தெ.நாயகம், காஞ்சி மணிமொழியார், சண்முகாநந்த அடிகள். 

கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து  01.05.1938 அன்று இளைஞர் தாலின் செகதீசன் உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கினார்.  போராட்டக்காரர்களின் சின்னமாக அவர் மாறினார். விடுதலை இதழில்  நேர்முகமொன்றில் “தமிழ்த்தாய்க்கு இன்னும் உண்மையான மகன்கள் இருக்கிறார்கள்” என்று நேர்முகச் செய்தி அளித்தார்.

பேரறிஞர் அண்ணா, இந்தி எதிர்ப்பு போராட்டக் கூட்டமொன்றில் “இன்று சகதீசன் இறந்தால் அவரிடத்தை நிரப்ப நான் பத்து பேருடன் அமருவேன். அவர் இறந்தால் நீங்களும் இறக்கத் தயாராகுங்கள்” என முழக்கமிட்டார். சகதீசன் உண்ணா நோன்பை இடையிலேயே நிறுத்திக் கொண்டார். (ஒரு நூலில் பத்து வாரங்களில் நிறுத்திக்கொண்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை பத்து நாள் என்பது தவறுதலாக வந்துள்ளதா எனத் தெரியவில்லை.)

திருச்சிராப்பள்ளியில் 28.05.1938 அன்று தமிழ்ப்  பாசறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில்  இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவராக நாவலர் சோமசுந்தர பாரதியார், செயலாளராக கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாரியத்தின் உறுப்பினர்களாகப்  பெரியார் ஈ.வெ.இராமசாமி, தமிழவேள் தா.வே. உமாமகேசுவரன், கே.எம்.பாலசுப்பிரமணியன், ஊ. பு. அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மாணவர்கள் இந்திப் பாடங்களைப் புறக்கணிக்கும்படி செய்தல், இந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்களை நடத்துதல், உண்ணாநோன்பு இருந்தல், பேராயக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுதல், முதலமைச்சர் வீட்டுக்கு முன்னால் மறியல் நடத்துதல் என்று பல்வேறு போராட்ட முறைகள் வகுக்கப்பட்டன.

3.06.1938 அன்று முதலமைச்சர் இராசாசியின் வீட்டுக்கு முன்னால் மறியல் போராட்டம் நடைபெற்றது. தொண்டர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு பிரிவு மறியலில் ஈடுபட்டுக் கைதானதும், அடுத்த பிரிவு களத்தில் இறங்கியது. அதற்குச் செ.தெ. நாயகம் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.   அதன்பிறகு ஈழத்தடிகள் தலைமையில் அடுத்த குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அவர்களையும் கைது செய்தது. தமிழன் தன்னுடைய தாய்மொழிக்காகப் போராடினால் கைது செய்வதா என்று தலைவர்கள் கண்டனக்குரல்  எழுப்பினர்.ஆனால்,  காவல்துறை அதிகாரிகள், “முதலமைச்சர் இராசாசி வீட்டுக்கு முன்னால் மறியல் செய்தவர்களைத்தான் நாங்கள் கைது செய்கிறோம்” என்றார்கள். உடனே பெரியார் ஈ.வெ.இரா., முதலைமச்சர் வீட்டு முன் மறியல் செய்ய வேண்டா என்றும்  பொது இடங்களில் மறியல் செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் நடந்த வழக்கு விசாரணை முடிவில் செ.தெ. நாயகத்துக்கு ஒரு மாத வெறுங்காவல் தண்டனை, இருநூறு உரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட்டது. சண்முகானந்த அடிகளுக்கு நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.

மேற்படி போராட்டங்களுக்கு முன்னதாக 01.06.1938 அன்று பல்லடம் பொன்னுச்சாமி என்னும் மற்றோர் இளைஞரும் முதலைமச்சர் இராசாசி வீட்டின் முன்னர் உண்ணாநோன்பைத் தொடங்கினார். பெரியார் ஈ.வெ.இராமசாமி உண்ணாநோன்பு போராட்டத்தை விரும்பவில்லை. எனினும்   மற்ற தலைவர்கள் உண்ணா நோன்பு இருப்பவர்களை ஓர் எடுத்துக்காட்டாக அறிவித்தனர். உண்ணாநோன்பிருந்த பல்லடம் பொன்னுச்சாமி இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முதல் ஆளாகக் கைதானார்.

03.06.1938 முதல் கட்டாய இந்திக்கு எதிராகத் தமிழ்நாட்டுப்பள்ளிகள் முன் மறியல் போர் நடைபெற்றது. 3.6.38 இல் கோடம்பாக்கத்தில் கூடிய இந்தி ஒழிப்பு மாநாட்டிற்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார்.

 முதலமைச்சர்(அப்போது தலைமையமைச்சர் என்றுதான் குறிப்பர்) இராசாசி வீட்டு முன்னரும்  மக்கள் திரள் திரளாகக் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்து இறையியல் பள்ளி(Hindu theological school) முன்பும் மக்கள் புற்றீசல் போல் குவிந்து எதிர்ப்பைக் காட்டினர். 1271 பேர் இந்தி எதிர்ப்பிற்காகக் கைதாகிச் சிறை சென்றனர். இவர்களுள் ஆண்கள் 1166, பெண்கள் 73, குழந்தைகள் 32 பேராவர்(இக்குழந்தைகளுள் ஒருவரே பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இணைப்பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த என்.வி.என்.சோமு).)

“இந்தியத் தேசிய வாழ்வில் இம்மாநிலம் தனக்கு சரியான இடத்தைப் பெற, நமது கல்விபெற்ற இளைஞர்கள் இந்தியாவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியில் நடைமுறை அறிவு பெற்றிருத்தல் இன்றியமைததாகும். எனவே அரசு நமது மாநில இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் இந்துத்தானியைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. எந்தவொரு தொடக்கப்பள்ளியிலும் இந்திப்பாடம் இருக்காது, தாய்மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த அரசு விரும்புகிறது. இந்தி இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே அதுவும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் படிவங்களில், அதாவது பள்ளிவாழ்வின் 6ஆவது, 7ஆவது, 8ஆவது ஆண்டுகளிலேயே அறிமுகப்படுத்தப்படும். எனவே இடைநிலைப்பள்ளிகளிலும் தாய்மொழிக் கல்விக்கு இது எந்தவிதத்திலும் குறுக்கீடாக இருக்காது. இந்தி வகுப்புகளில் வருகை கட்டாயம் என்றளவில் மட்டுமே கட்டாயமே தவிர மாணவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் அல்லது கன்னடத்திற்கு மாற்றாக இந்திப் பாடத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது, அவற்றில் ஒன்றுடன் கூடுதலாகவே இந்தியைப் பயிலவேண்டும்.


Wednesday, February 5, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : இலக்குவனார் திருவள்ளுவன்



(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-5 : தொடர்ச்சி)

இவ்வாறு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் 28.08.1937 இல்  கண்டனக் கூட்டம் நடைபெற்றுக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமான முந்தைய சில சூழலையும் பார்ப்போம்.

1937இல் சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதிவ் இந்தியத்  தேசியப் ்பேராயக் கட்சி(காங்கிரசு) 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.   14.07.1937இல் இராசகோபாலாச்சாரி சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக இந்திப் பரப்புரை அவையத்தில்(இந்தி பிரச்சார சபாவில்)பேசிய இராசாசி வணிகத்திற்கும் அரசியல் தொடர்பிற்கும் தென்னிந்தியர்க்கு இந்தி இன்றியமையாதது என்று பேசினார். இதனை வரவேற்று ஆனந்தவிகடன் இதழ் எழுதியது. பேராயக்கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி இராமராச்சியம் அமைப்பதற்கும் வருணாசிரமத் தருமத்தைக் காப்பதற்கும் இந்தியுடன் சமற்கிருதம் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றார். தான் முதலைமச்சராகப் பொறுப்பேற்றவுடன் இந்துசுதானி கட்டாயப்பாடமாக்கப்படும் என இராசாசி அறிவித்தார். 27.08.1937 அன்று துறையூர் மாநாட்டில் அறிஞர் அண்ணா எதிர்ப்பு தெரிவித்தார். இந்தி எதிர்ப்பின் முதல் கணை அரசியல் தலைவர்களில்  இவரிடமிருந்தே வீசப்பட்டது.

11.08.1937 இல் முதல்வர் இரசாசி, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். பெரியார் ஈ. வெ. இராமசாமி,  நீதிக்கட்சித் தலைவர் அ.தா. பன்னீர் செல்வம் ஆகியோர், உடனடியாக இதனை எதிர்த்து அறிக்கை விட்டனர். எனவே சென்னை மாகாணம் முழுவதும் 4.10.1937 முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் சூலை முதல் நாள் இந்தி மொழி நாள் என்று அறிவிக்கப்பட்டது.  இதற்கு எதிராகவும் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள், கருப்புக் கொடி ஏந்தி விளக்கக் கூட்டங்கள் நடத்துதல் அரசு அலுவலகங்கள் முன் நின்று மறியல் செய்தல், இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்துதல்  எனப் பல வகைகளிலும் இந்தித் திணிப்பிற்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

10.8.1937இல் இராமகிருட்டிணா மடம் மாணவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் இராசாசி இந்தி, பள்ளிகளில் கட்டாயமொழி என்று அறிவித்தார். இந்தியில் பாடநூல்கள் விரைவில் எழுதப்படவேண்டும். புதிய இந்தி எழுத்துகளைத் தமிழக மாணவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்களேயானால் பிறகு இந்தி, சமற்கிருதத்தை அவர்கள் எளிதில் பயில வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அந்த விழாவில் அவர் பேசினார்.

10.8.1937 இல் கட்டாயப் பாடத் திட்டத்தை இராசாசி அறிவித்த போது தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்ச்சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ்க்கழகம் சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

27.8.37 இல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழவேள் உமா மகேசுவரனார் தலைமையில் கட்டாய இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது.

5.9.1937 இல் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில்  நாவலர் சோமசுந்தர பாரதியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பேசினர்.

4.10.1937 இல் சென்னை கோகலே மன்றத்தில் பெருந்திரளானோர் பங்கேற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதற்குத் தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமை வகித்தார். 

26.12.1937இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் திருச்சியில் சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டின் தலைவர் சோமசுந்தர பாரதியார். இதில் பெரியார் ஈ.வெ. இராமசாமி முதன் முறையாகப் பங்கேற்றார்.

1937இல் தமிழ்நாடு முழுமையும் ஓங்கி வளர்ந்த இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மக்கள் உள்ளத்தில் தமிழார்வத்தைத் தூண்டியது. தமிழரின் பண்டைய பெருமைகளை உணரவும் புகழார்ந்த தமிழக வரலாற்றுச் செய்திகளை அறியவும் தமிழிலக்கியச் சிறப்புகளை அறிந்து அவற்றில் ஈடுபாடு காட்டவும் இது வழிகாட்டியது.

“இந்தியாவின் தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், பொதுமொழியாகவும் ஆக்கிடும் நோக்கத்தில் தமிழகத்தில் கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நோக்கில், தமிழார்வம் கொண்ட பேரறிஞர்களும், பொதுமக்களும் அந்தக் கட்டாய இந்தியைத் தீவிரமாக எதிர்க்கும் பணியில் ஈடுபட்டார்கள். இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தமிழகம் தனியே பிரிய வேண்டும் என்ற கருத்து இந்தி எதிர்ப்பின் விளைவாக 1938 இல் உருவாகியது. வடநாட்டு அரசியல் ஆதிக்கத்தையும், பொருளாதார ஆதிக்கத்தையும், வணிக ஆதிக்கத்தையும் நாளடைவில் தமிழ்ப் பேரறிஞர்களுக்கு உணர்த்திற்று. அதன் விளைவாக, 1938 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் கூட்டப் பெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் மறைமலையடிகள் ஆவார்கள். அதனை வழி மொழிந்து பேசியவர்கள் பெரியார் இராமசாமி, ச.சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆவார்கள்.” (இரா.நெடுஞ்செழியன்,  தி.மு.க.வரலாறு)

தமிழறிஞர்கள் தலைமை தாங்கி நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை அடித்தளமாகக் கொண்டு திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் வளர்ந்தது. தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அணி திரள வேண்டிய தேவையையும் இஃது உருவாக்கியது. அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழுடன் தமிழ்க்குடும்ப  மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோரும் இருந்தனர். எனவே,  ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது வெற்றி பெறாது என எண்ணிய திராவிட இயக்கத்தலைவர்கள் “திராவிட நாடு திராவிடருக்கே” என்று மாற்றி முழங்கினர்.(பின்னர் இது கைவிடப்பட்டது தனி வரலாறு.) இதற்கு மாற்றாக அவர்கள், “தமிழ்நாடு தமிழருக்கே! அவரவர் மொழி பேசும் நிலம் அவரவருக்கே!” என முழங்கி யிருக்கலாம். அவ்வாறு இருந்திருப்பின் “தமிழ்நாடு தமிழருக்கே” என்பது நீர்த்துப் போகாமல் வெற்றி பெற்றிருக்கும். தமிழ்நாடு . இன்றுள்ளவாறான பிற மொழியினர் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாறியிருக்காது.

27.02.1938 இல் முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு, காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் கான்பகதூர் கலிபுல்லா சாகிபு தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, தமிழவேள் உமாமகேசுவரம்(பிள்ளை), சிதம்பரம் என்.தண்டபாணி முதலிய பலரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அறிஞர்களும் தலைவர்களும் ஆற்றிய உரைகள் மக்களுக்கு இந்தியை எதிர்ப்பதில் எழுச்சி ஏற்படுத்தின.

ஒவ்வொரு நாள் போராட்டத்தின் போதும் ஒவ்வொருவரைத் தளகருத்தாக்களாகச்  சருவாதிகாரிகள்  என்ற பெயரில் பெரியார் ஈ.வெ.இரா. நியமித்தார். முதல் நாள் சிடி.நாயகம், இரண்டாம் நாள் ஈழத்தடிகள், மூன்றாம் நாள் கே.எம். பாலசுப்பிரமணியம், நான்காம் நாள் சி.என்.இராசு, ஐந்தாம் நாள் எசு.கே.சாமி, ஆறாம் நாள் எம்.எசு.மொய்தீன், ஏழாம் நாள் புவனகிரி நமச்சிவாயம், 8, 9, 10, 11, 12, 13 ஆம் நாள்களில் முறையே மாயவரம் சம்பந்தம், காஞ்சி பரவசுத்து ஆச்சாரியார், பெரியகுளம் இரங்கசாமி, கந்தம் (உ)ரோசு அம்மாள், மாரியம்மாள், புலவர் இராமநாதர் ஆகியோர்  எனத் தளகருத்தாக்களை நியமித்தார். 

இலக்குவனார் திருவள்ளுவன்


Saturday, February 1, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-4 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-4 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

அடுத்து இக்கால இந்திஎதிர்ப்புப் போராட்டங்களுக்கு வருவோம்.

1930-1940 இல் எழுந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ‘முதல் மொழிப்போர்’ என்கின்றனர்.

இந்தியைப் பரப்பும் பணி 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. 1893இல் ‘நகரி பிரச்சாரனி சபா’ எனக் காசியிலும் 1910 இல் அலகாபாத்தில் ‘இந்தி சாகித்திய சம்மேளன்’ என்றும் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

1905 இல் பனாரசில் தேவநாகரி பரப்புரை அவை மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பாலகங்காதர திலகர், “உங்களுக்குத் தேசம் தேவையாயின் அதைக் கட்டமைக்க ஒரு பொதுமொழி அனைவருக்கும் தேவை. அதனால், தேவநாகரி எழுத்தை நாம் பொதுமொழியாகப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

அதன்பின், இந்தித்திணிப்பிற்கு மூலவாய் காந்தியடிகளே. ஆண்டுதோறும் நடைபெறும் பேராயக்கட்சி(காங்கிரசு) மாநாடு 1925 இல் கான்பூர் நகரில் கூடியது. அம்மாநாட்டின் முடிவு வாயிலாகத்தான் இந்தி இந்தியாவைத் துண்டாக்க நுழைந்தது.

 அந்த மாநாட்டில் இந்தியைப் பற்றிய தனது எதிர்காலத் திட்டங்களையும் கனவுகளையும் வெளிப்படுத்தினார் காந்தி.

பேராயக்கட்சியின் கொள்கைகளும் நோக்கங்களும் கடைக்கோடி இந்தியனுக்கும் சென்று சேர, அக்கட்சிக் கூட்டங்களில் பேசப்படும் மொழி ஆங்கிலமாக இருப்பது மாற்றப்பட வேண்டும். ஓர் இந்திய மொழியாக இருக்க வேண்டும். ஆக, ஆங்கிலத்தின் பயன்பாட்டைத் தவிர்த்து, எல்லாரும் இந்தியைப் பயன்படுத்தவேண்டும்!’ என வலியுறுத்தினார்.

காந்தியின் கனவை நனவாக மாற்ற வேண்டும் எனப் பேராயக்கட்சித் தலைவர்கள் முடிவெடுத்தனர். அலுவல் மொழி தொடர்பான அக்கட்சி விதியான 33ஆவது பிரிவைத் திருத்தம் செய்வதற்கு இறங்கினர்.  பேராயக்கட்சிக் கூட்டங்களும் கருத்துகளும் பரிமாற்றங்களும் ஆங்கில மொழியில் நடத்தப்படவேண்டும் என்பதுதான் 33 ஆவது பிரிவு.

அப் பிரிவு, “இனிமேல் பேராயக் கட்சியின் கூட்டங்கள் இந்தி மொழியில் நடத்தப்படும். இந்தி தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் பேசலாம்” என்று திருத்தம் செய்யப்பட்டது.

காந்தியின் இந்தி முன்மொழிவைப் பேராயக்கட்சியின் பிற தலைவர்களும் வழிமொழிந்தனர். இந்திய அரசுப்பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்தவர் வயவர்டி. விசயராகவாச்சாரி. பள்ளி, கல்லூரிகளில் இந்தியை இரண்டாவது மொழிப்பாடமாக வைக்கவேண்டும். அதன்மூலம் இந்தி கற்றுக்கொடுக்கும் பணிகள் கல்வித்துறைக்கு எளிமையாகும்; மக்களுக்கும் பலன் தரும் என்றார் இவர். அவர், இந்தித் தேர்வில் ஒருவர் வெற்றிபெற முடியவில்லை என்றால் அவரைப் படித்தவராகவே கருதமுடியாது என்றார்.

இந்தியாவின் பொதுமொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பதே காந்தியின் விருப்பம். அதை முதலில் தங்கள் கட்சியில் கொண்டு வந்தார்கள் பேராயக் கட்சியினர்.

ஒவ்வோர் ஆண்டும் அகில இந்தியப் பேராயக் கட்சி மாநாடு நடத்தும்போது அகில இந்திய இந்தி மாநாட்டையும் சேர்த்து நடத்தும் நடைமுறையை 1924இல் நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

பெரியார் ஈ.வெ.இராமசாமி, 1922இல்  பேராயக் கட்சியில் இருந்த போது இந்திப்பள்ளியை நிறுவினார். பின் அவர், சமற்கிருதத்தையும் ஆரிய நாகரிகத்தையும் நிலைநாட்டவே கட்சியிலிருந்த ஆதிக்க சக்திகள் இந்திமொழியைக் கருவியாகக் கையாளுகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே 1926 முதல் இந்தியைக் கடுமையாக எதிர்த்தார்.

இவ்வாறு நான்காவது அகில இந்திய இந்தி மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. மாநாட்டுத் தலைவர் சரோசினி(நாயுடு). இந்திப் பரப்புரை இயக்கம் என்பது ஒரு கட்சியின் அல்லது ஒரு வகுப்பாரின் வேலை அல்ல; இது நாட்டிலுள்ள அனைத்து மக்களின் – கட்சிகளின் – வகுப்பாரின் ஒற்றுமை உணர்வின் அடையாளம் என்று அவர் பேசினார். மாநாட்டினர் பெருமளவு இவ்வுரைக்கு வரவேற்பு அளித்தனர். ஆனால், இவ்வுரை இந்தி பேசா மக்களிடையே எதிர்ப்பையே விளைவித்தது.

கட்டாய இந்தி கொண்டுவருவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர், அஃதாவது 1930 இல் நன்னிலத்தில் கூடிய தன்மதிப்பு(சுயமரியாதை) மாநாட்டில் இராமநாதன் என்பார்  இந்தியை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அவர் 1938இல்  விளம்பரத்துறை அமைச்சர். என்கிறது ஒரு கட்டுரை.

அம் மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்துப்  பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார் என்கிறது ஒரு கட்டுரை.

1930ஆம் ஆண்டு நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றியுள்ளனர்  எனப் பொதுவாகக் கூறுகிறது தந்தை பெரியார் நூல் (கவிஞர் கருணானந்தம்)

‘நினைவலைகள்’ நூலில் நெ.து.சுந்தரவடிவேலு, 1931இல் விருதுநகரில் நடந்தது மூன்றாவது சுயமரியாதை மாநாடு என்கிறார். இதே மாதிரிப் பெண்கள் தலைமையில் நடந்த மாநாடுகளைக் குறிப்பிடும் கட்டுரை ஒன்றிலும் 1931 இல் மூன்றாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது என்கிறது.

மற்றொரு கட்டுரை ஒன்றில் விருதுநகரில் மாகாண சுயமரியாதை நடைபெற்ற பொழுது மூன்றாவது சுயமரியாதை இளைஞர்(வாலிபர்)மாநாடு நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறது.

ஆனால், தன்மதிப்பு  மாநாடு ஒன்றில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் வந்தது மட்டும் உண்மை. ஒருவேளை நன்னிலம் மாநாடு மாநில மாநாடாக இல்லாமல் இருந்திருக்கலாம்.

மாநாட்டில் உலகமொழியாக விளங்கும் ஆங்கிலத்தையே தாய்மொழிக்கு அடுத்தபடியாக நமது இளைஞர்கள் கற்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்க முடிவெடுத்தனர். சென்னை மாநகராட்சி மன்றத்தில் இந்தியை ஐந்தாம் வகுப்பு தொடங்கி உயர்நிலைப் பள்ளிகளிலும் விருப்பப்பாடமாக வைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை  கொண்டுவந்தார் சுயராச்சியக் கட்சி உறுப்பினர் சத்தியமூர்த்தி. இந்திக்கு மாற்றாக இந்துத்தானியை வைக்கவேண்டும் என்றார் இசுலாமிய வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர். சென்னை மாநகராட்சி மன்றத்தில் நீதிக்கட்சி பெரும்பான்மையுடன் இருந்ததால் சத்தியமூர்த்தியின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

ஆனாலும் தன்னுடைய முயற்சிகளை எசு. சத்தியமூர்த்தி கைவிடவில்லை.” இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பரப்புரை மட்டும் போதாது. இந்தியைக் கற்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவேண்டும். ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாய மொழிப்பாடமாக ஆக்கவேண்டும். அதைச் செய்தால் இன்னும் பதினைந்தே ஆண்டுகளில் இந்தியா இந்தி நாடாகிவிடும்” என்று பேசினார்(சென்னை மெயில், 12.07.1934). இந்தியை எதிர்க்கின்றவர்கள் தலைகளை வெட்ட வேண்டும் என்றவர் சத்தியமூர்த்தி.

Followers

Blog Archive