Showing posts with label lakkuvanar Thiruvalluvan. Show all posts
Showing posts with label lakkuvanar Thiruvalluvan. Show all posts

Monday, March 31, 2025

நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக!: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: தொடர்ச்சி)

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற

அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும்

பிறந்தும் பிறவாதா ரில்.

பொருள்: சூரியனை, முகத்தல் அளவுக்கருவியான ‘நாழி’ போன்று அளவுக் கருவியாகக் கொண்டு வாழ்நாளை இயமன் நாள்தோறும் அளக்கிறான். அவ்வாறு முழுமையாக உண்பதற்கு முன்னதாக அருள் உடையவர் ஆகுங்கள். இல்லாவிடில் பிறந்தும் பிறவாதவர்போல் கருதப்படுவீர்

சொல் விளக்கம்: தோற்றம்=நாள்தோறும் தோன்றும்; சால்=ஒளி மிகுந்த; ஞாயிறு=சூரியனை;நாழி ஆ=நாழி என்னும் அளவுக்கருவியாக; வைகலும்= நாள்தோறும்; கூற்றம்= இயமன்; அளந்து= அளவிட்டு; நும்= உங்களுடைய; நாள்= வாழ்நாளை; உண்ணும்=உண்பான், (ஆகையால்); யாரும்= அனைவரும்; பிறந்தும்=(மக்கட்பிறப்பாய்ப்) பிறந்தும்; பிறவாதாரில்=பிறவாது மேலுலகில் உள்ளவர் போல; ஆற்ற=மிகவும்; அறம்=அறத்தை; செய்து=செய்து; அருள் உடையீர் ஆகுமின்=அருள் உடையவர் ஆகுங்கள்.

சூரியன் காலத்தை அளக்கும் கருவியாக உள்ளது. எனவே, நம் வாணாளை அளக்கும் கருவியாகவும் அது உள்ளது. உண்ணும் என்பதால் உணவிற்கான கூலம்(தானியம்) முதலியவற்றை அளக்கும் நாழிக்கருவி போன்று சூரியனையும் கூறியுள்ளார் புலவர்.

‘மகிழம்பூ’  திரைப்படத்தில் மாயவநாதன்

தனக்குத் தனக்கு என்று ஒதுக்காதே – செய்த

தருமம் தலைகாக்கும் மறக்காதே

எனக் கூறுவதுபோல், தனக்கு என ஒதுக்கி வீணாக்காமல் பிறருக்கு வழங்கி நற்பேறு அடைய வேண்டும் என்பதே பாடல் கருத்து.

சட்டச் சொற்கள் விளக்கம் 941 – 945 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

941. Assuranceகாப்புறுதி  

வாக்குறுதி

  காப்பீடு   உறுதி,

நம்பிக்கை,

இசைவுறுதி,

வாழ்க்கைக் காப்பீடு,

அறுதியிடல்,

உத்தரவாதம் எனவும் பொருள்கள்.  

இறப்பு முதலிய துயர நிகழ்ச்சி அல்லது இழப்புகளுக்கு எதிராகக் காப்பீடு செய்தல்.  

  சட்டப்பூர்வச் சூழலில், “உத்தரவாதம்” என்பது ஒரு பொறுப்புறுதி அல்லது வாக்குறுதி.     வாக்குறுதியின் அடிப்படையில்தானே காப்பீடு வழங்கப்படுகிறது. எனவே,   இது காப்பீட்டையும் குறிக்கிறது.   

உண்மைச் சொத்தினை மாற்றிஅளிக்கும் செயலையும் குறிக்கிறது.  

ஏதேனும் நிகழலாம் அல்லது ஒப்புக் கொண்டபடி நேரலாம் என்பதன் அடிப்படையில் தரப்படும் உறுதி யுரை. இதுவே காப்பீட்டு உறுதி மொழியாகும்.  

காப்பீட்டைத் தெரிவிக்கும் ஆவணமுமாகும்.

  உ+ தரம் (உயர்வான + நிலைமை) என்பது தமிழ்ச்சொல்லே. உ என்னும் சுட்டு வடக்கு, உயர்ந்த என்னும் பொருள்களிலும் வரும்.  
942. Assurance of propertyசொத்துக்‌ காப்பீடு

சொத்துகளுக்கான உத்தரவாதம்

சட்டச் சூழல்களில், “சொத்து உத்தரவாதம்” என்பது ஒரு சொத்தில் உடைமையாளரின் உரிமைகள் அல்லது நலன்களுக்குக்  காப்பீடு அல்லது சட்ட ஒப்பந்தங்கள் போன்ற வழிமுறைகள் மூலம் காப்புறுதி அளித்தல் அல்லது பாது காத்தலைக் குறிக்கிறது.
943.  Assurance, lifeவாணாள் ஈட்டுறுதி  

ஆயுள் காப்பீடு  

ஆயுள்‌ காப்பீட்டு ஒப்பந்தம்‌  

வாழ்க்கைக் காப்பீடு  

சட்டப்பயன்பாட்டில், வாணாள் காப்பீடு அல்லது வாணாள் காப்புறுதி என்பது, காப்பீடு செய்யப்பட்டவர் இறந்தவுடன், வழக்கமான ஈட்டணம்(பிரீமியம்) செலுத்துதலுக்கு ஈடாக, ஒரு குறிப்பிட்ட தொகையை பயனாளிக்குச் செலுத்துவதாகக் காப்பீட்டாளர் உறுதியளிக்கும் ஒப்பந்தமாகும்.  

  வாணாள் காப்பீடு என்பது தனியருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும்  இடையிலான ஒப்பந்தமாகும்.   காப்பீடடாளர் இறந்தால், அவருடைய பயனாளிகளுக்கு (குடும்பத்தினர், சார்ந்திருப்பவர்கள், முதலியோர்) நிதிப் பாதுகாப்பை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
944 Astonishதிகைக்கவை  

மலைப்பூட்டு  

ஐ  

திகைப்பு  

மடியுறை  

மலைப்பு  

மாயம்  

விந்தை  

விம்மிதம்

  வியப்பு  

 மலைப்பூட்டும் செய்தி  

சட்டச் சூழலில், திகைக்கவை /astonish என்பதற்கு ஒரு குறிப்பிட்ட, முறையான பொருள் இல்லை. இச்சொல் ஒரு பொதுவான பொருளில் பயன்படுத்தப் படுகிறது, அதன் அன்றாடப் பொருளைப் போலவே, ஒருவரைப் பெரிதும் வியப்பிலாழ்த்த அல்லது அதிர்ச்சியடையச் செய்வதைக் குறிக்கிறது,

பெரும்பாலும் எதிர்பாராத அல்லது நம்பமுடியாத சட்ட விளைவு அல்லது நிகழ்வை விவரிக்கும்போது இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.  
945. Astrayநெறிதிறம்பி  

வழிதவறி  

“வழிதவறிச் சென்றது” என்பது சரியான பாதை, திசை அல்லது ஏதாவது போகவேண்டிய பாதையிலிருந்து விலகி இருப்பதைக் குறிக்கிறது.  

சட்டச் சூழல்களில், “வழிதவறி(ச் சென்றது)” என்பது பொதுவாகப்  பாதையிலிருந்து விலகிச் சென்ற, தவறாக வழிநடத்தப்பட்ட அல்லது அதன் பாதையை இழந்த ஒன்றைக் குறிக்கிறது, இது பெரும்பாலும் தொலைந்து போன அல்லது தவறாக வழி நடத்தப்பட்ட ஏற்றுமதிகள் அல்லது விலங்குகளின் சூழலில் பயன்படுத்தப்படுகிறது.    

தொலைந்து போன அல்லது தவறாக வழிநடத்தப்பட்ட ஏற்றுமதிகள்: கப்பல் சட்டத்தில், “கட்டுப்பாடின்றி  வழிதவறிச் சென்ற” ஏற்றுமதி என்பது தவறாக வழிநடத்தப்பட்ட அல்லது அதன் சேர வேண்டிய பாதையிலிருந்து விலகிச் செல்லும் ஒரு பொதிவு அல்லது சரக்கைக் குறிக்கிறது, ஆனால் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் அதைச் சரியான இடத்திற்கு வழங்க அதனைக் கொண்டு செல்பவர் கடமைப் பட்டிருக்கிறார்.  

“வழிதவறிச் சென்ற விலங்கு” என்பது  அதன் உரிமையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத, பொது அல்லது தனியார் இடங்களில் கட்டுப்பாடற்று, பெரிய அளவில் சுற்றித் திரியும் ஒரு விலங்கு என வரையறுக்கப்படுகிறது.  

பொதுவான பயன்பாடு: யாரோ அல்லது ஏதோ ஒன்று சரியான பாதை அல்லது பாதையிலிருந்து விலகிச் சென்ற சூழ்நிலைகளை விவரிக்கவும் இந்தச் சொல்லை இன்னும் விரிவாகப் பயன்படுத்தலாம்.   “உரிமையாளர் இல்லா நாய் வழிதவறிச் செல்லும் விலங்காகக் கருதப்பட்டு விலங்கு காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.”.   “தற்போதைய சட்ட அமைப்பு வழிதவறிச் செல்லும் நீதிபதிகளைக் கையாள போதுமானதாக இல்லை என்று நீதிபதி இராய் கூறியுள்ளார்.”.  

(தொடரும்)

Tuesday, February 4, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

921. assistance,  receive;  receive assistance   ஏற்கை உதவி  
பெறுகை உதவி  
கைக்கொள் உதவி
உதவி பெறல்
உதவி ஏற்றல்  

சட்ட அடிப்படையில், உதவி பெறுவது என்பது வழக்கில் வழக்கறிஞரை அமர்த்த முடியாத பொழுது இலவயச் சட்ட உதவியை ஏற்பதாகும்.   வழக்கு நுட்பம் சாந்த சட்ட அறிவுரைகளைப் பெறலையும் குறிக்கும்.
922.  assistance, render ; render assistance      கை கொடுத்தல்
உதவிக்கரம் நீட்டல்  

render  என்பதற்கு விட்டுக்கொடு, திருப்பிக்கொடு, ஈடாக அளி, ஒப்படை, வழங்கு, அளி, மாற்றாகக் கொடு, சீராக்கம் செய், தொண்டு செய், மொழிபெயர், காண்பி, செலுத்து எனவும் மேலும் பொருள்களும் உள்ளன. இதற்கு உதவுதலே இத்தொடரின் பொருள்.   சட்டத்துறையில் ஒரு வழக்குரைஞர் அல்லது அவரின் மேற்பார்வையின் கீழ்ச் செயல்படும் ஒருவர் சட்ட அறிவுரை வழங்கல் அல்லது வழக்கில் சார்பாக நிற்றலைக் குறிக்கும்.  
923. assistance,   Request ;  Request assistance  உதவி வேண்டல்  

வழக்கு தொடர்பில் சட்டமுறைக்கான உதவி வேண்டல்  

வழக்கு தொடர்பிலான தகவல்களைத் திரட்டல், சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றிற்கு உதவுதல்.  
924. assistance, require;   require assistanceகோரும் உதவி
உதவி கோரு
தேவைப்படும் உதவி  

require என்பதற்கு வேண்டு, கேள், விரும்பு, கோரு, அவாவிக்கோரு, உரிமைக் கோரிக்கையிடு, செயற் கட்டளையிடு, ஆணைக்குறிப்பு தெரிவி, வலிந்து கோரு, தேவைப்படு, இன்றியமையா நிலையுடையதாயிரு எனப் பல பொருள்கள்.   வழக்கு தொடர்பில் தேவைப்படும் சட்ட உதவியைக் குறிக்கிறது.
925. assistance, roadside ; roadside assistance   சாலையிடர் உதவி  

ஊர்திப் பழுது உதவி(breakdown coverage)   என்றும் அழைக்கப் பெறும்.    

breakdown coverage  என்பது சாலை மோதல் அல்லது சாலை நேர்ச்சியின் பொழுது ஊர்திகளுக்கான சேதத்திற்கு வழங்கப்படும்  இழப்பீடு அல்லது காப்பீடு போன்றவற்றில் ஈட்டடக்கமாக (coverage) அமைவது. இதையே உதவியாக இங்கு குறிக்கிறோம்.  

 roadside என்றால் சாலைப்பக்கம் என்றுதான் நேர் பொருள். எனினும் சாலையில் செல்லும் ஊர்திகளுக்கு நிலையான சீரமைவு இல்லாத போது இடைக்காலமாகச் சீர் செய்வதற்கு உதவி செய்வது.  

ஊர்தி மோதல் அல்லது நேர்ச்சி தொடர்பான வழக்குகளில் இத் தொடர் இடம் பெறுகிறது.  

(தொடரும்)

Followers

Blog Archive