Showing posts with label அகராதி. Show all posts
Showing posts with label அகராதி. Show all posts

Monday, November 17, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : தொடர்ச்சி)

1021. Auxiliary force       துணைப்படை

துணைப் படையினர் என்பது படைத்துறை அல்லது காவல்துறைக்கு உதவும் துணைப் பணியாளர்கள். ஆனால் வழக்கமான படைகளிலிருந்து மாறுபட்டு ஒழுங்கமைக்கப்பட்டவர்கள்.

துணைப் படையினர் என்பது ஆதரவான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அல்லது கோட்டைக் காவற்படை  போன்ற சில கடமைகளைச் செய்யும் படைசார் தன்னார்வலர்களாக இருக்கலாம்.

ஒரு துணைப் படை வழக்கமான வீரர்களைப் போலவே பயிற்சி அல்லது தரவரிசை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அஃது ஒரு சண்டைப் படையில் ஒருங்கிணைக்கப்படலாம் அல்லது ஒருங்கிணைக்கப்படாமலும் இருக்கலாம். இருப்பினும், சில துணைப் படைகள் முன்னாள் படைஞர்கள், போராளிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எனவே, சிறந்த பயிற்சி, போர்ப் பட்டறிவைக் கொண்டுள்ளன.

ஒரு நாட்டில் நடைபெறும் போரின்பொழுது அந்நாட்டிற்குத் துணையாக வரும் பிற நேச நாட்டுப்படைகளும் துணைப்படைகளாகும்.

Auxilia என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து Auxiliary உருவானது. இஃது உரோமானியப் பேரரசின் பகுதியாகச் செயற்படும் வகையில் அமைக்கப்பட்ட காலாட்படை, குதிரைப்படையைக் குறிக்க முதலில் பயன்படுத்தப்பெற்றது. 
 1022. Auxiliary home                 துணை இல்லம்‌

துணை இல்லம் என்பது உட்புறக் குடியிருப்பு அல்லது இணைப்புக் குடியிருப்பாகும்.
 1023. Avail          பயன்படுத்திக்‌ கொள்‌

நல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளல்  
நன்மை பயக்கு

சொத்து விற்பனை வருமானம் அல்லது காப்பீட்டுக் கொள்கை வருமானத்தினால் அடையும் ஆதாயம் அல்லது பயனையும் குறிக்கும்.
1024. Available              கிடைக்கத்தக்க

சட்டத்தில்,

கிடைக்கத்தக்க’ என்பது பொதுவாகச் சூழலைப் பொறுத்து, அணுகக்கூடியது, பெறக்கூடியது அல்லது பயன்படுத்த ஆயத்தமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாகத் தத்தெடுப்பதற்கான குழந்தையின் சட்டப்பூர்வக் கிடைக்கும் தன்மை, விற்பனை அல்லது காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ‘கிடைக்கும் வருமானம், சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வளத்தின் கிடைக்கும் தன்மை, அல்லது தகவல் அல்லது சேவைக்கான செயல்பாட்டு மற்றும் நம்பகமான அணுகல்.
இது கிடைக்கக்கூடிய வழிமுறைகளில் கைப்பணமாக மாற்றக்கூடிய பணம் அல்லது சொத்துக்களையும் குறிக்கலாம்.
 1025. Available for the reception      ஏற்புமைக்கான கிடைப்புத் தன்மை

reception என்பது பொதுவாக வரவேற்பு என்னும் பொருளில் குறிக்கப்பெறுகிறது. எனினும் சட்டத்தில் ஏற்றுக்கொள்கை, ஏற்புத்தன்மை > ஏற்புமை என்னும் பொருள்களில் குறிக்கப் பெறுகிறது.

சட்டக் கோட்பாட்டில், ஏற்புமை என்பது முதன்மையாக, மற்றொரு பகுதி அல்லது மற்றொரு காலக்கட்டத்தின் வேறுபட்டசட்ட ஒழுகலாற்றின் சட்டத் தோற்றப்பாட்டை(phenomenon) அல்லது  சட்ட நிகழ்வை ஒரு புதிய சட்டச் சூழலுக்கு மாற்றுவதாக வரையறுக்கப்படுகிறது

Monday, October 27, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : தொடர்ச்சி)

1016. Autrefois acquitமுன்னரே விடுவிக்கப்பட்டடவர்.
முன்பே குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பெற்றவர்.

autrefois என்பது “முன்னர்” அல்லது “மற்றொரு நேரத்தில்” என்று பொருள்படும் ஒரு பிரெஞ்சுச் சொல்லாகும்.
autre = மற்றொரு +‎ fois = நேரம்

எதிர்வாதி முன்னரே விடுவிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப்படுவதிலிருந்தோ தடுப்பதற்கு உதவும் நிலை.

முன்விடுதலை (Pre release) என்றால் ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பெற்று அத்  தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்படுவது எனப் பொருளாகும். எனவே, Autrefois acquit என்பதை முன் விடுதலை என்று சொல்லக் கூடாது. அகராதியைப்பார்த்து நான் முன்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதும் தவறாகும்.  

இந்தியக் குற்றவழக்கு நடைமுறைச் சட்டத்தொகுப்பு(CrPC) பிரிவு 300, இரட்டை இடர்()கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதனை விளக்குவதே இத் தொடர்.
 1017. Autrefois acquit – plea of    முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்னும் வாதம் 

விடுவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீது மீண்டும் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்கான வாதுரை.

காண்க:  Autrefois acquit
 1018. Autrefois convict        முன்னரே தண்டிக்கப்பட்டவர்

எதிர்வாதி முன்னரே தண்டிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப் படுவதிலிருந்தோ தடுத்தல்.

ஒரு குற்றச் செயலுக்காகத் தண்டிக்கப்பட்டவர் அதே குற்றத்திற்காக மீண்டும் தண்டிக்கப்படக்கூடாது என்றும் இயற்கை நீதி.

காண்க:  Autrefois acquit
1019. Autrefois convict -plea ofமுன்னரே தண்டிக்கப்பட்டவர் என்னும்  வாதம்‌

முன்னரே தண்டிக்கப்பட்ட குற்றச் செயலுக்காக மீண்டும் தண்டிக்கக்கூடாது என்பதற்கான வாதுரை.

முந்தைய தண்டனை வாதம் என அகராதிகளில் குறிக்கப்பெற்றுள்ளது பொருந்தாது. முந்தைய தணடனை குறித்த வாதம் அல்ல. முந்தைய தண்டனைச் செயலுக்காக மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது என்னும் வாதம்.

காண்க: Autrefois convict
1020. Auxiliary    துணைமை

எனினும், துணைவர் துணைப்படைவீரர் துணைவினை(இலக்கணம்) துணையான
உடனுதவியான
உதவியாளரான
துணைக்கருவி
எனப் பல பொருள்களில் குறிக்கப்படுகிறது.

துணைமையர்(Auxiliary Person) என்பது தொடர்புடைய பணியாளர் அல்லது அதற்கு இணையானவருக்காக அல்லது துணை ஒப்பந்தக்காரர் அல்லது ஒப்பந்தரின் பணியாளர் அல்லது அதற்கு இணையானவருக்காக அல்லது அவரின் அதிகாரி, சார்பாளர், அறிவுரைஞரருக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ பணியாற்றுநரைக் குறிக்கிறது.

Sunday, October 12, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : தொடர்ச்சி)

1011. Automated teller machine          தானியங்கிப் பணப்‌ பொறி

teller – கூறுபவர் என்னும் பொருளில் குறி சொல்பவர், வருவதுரைப்போர், கதை சொல்பவர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை கூறுவோர்,, கதை எழுத்தாளர், கதையளப்பவர் எனப் பல பொருள்கள் உள்ளன. குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பொருள்கள் உள்ளன.
விரைவு காசாளர்(teller) என்பவர் பணப்பரிமாற்றங்களைக் கையாளும் வங்கி ஊழியர். காசாளர்(cashier) என்பவர் கடைகள், உணவகங்கள் போன்ற வணிக மனைகளில் இதுபோல் பணப்பரிமாற்றப் பணிகளைச் செய்பவர். இவ்விரு சொற்களையும் மாற்றியும் கையாளுவதுண்டு. மேலும் விரைவு காசாளர் என்னும் சொல் வட அமெரிக்காவில் கையாளும் சொல்லாகவும் காசாளர் என்பது பிரித்தானியாவில் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளன.

தானியங்கிப் பணப்பொறி என்பது பணம் எடுப்பதற்குரிய பொறி மட்டும் அல்ல.  வங்கிக் கணக்கு  விவரம், பணம் எடுத்த செலுத்திய விவரங்கள், இறுதி இருப்பு விவரம், கடைசியாகப் பணம் எடுத்த அல்லது செலுத்திய விவரம்,  பிற வங்கிக் கணக்கு விவரங்களையும் அறியச் செய்யும் பொறியாகவும் உள்ளது.
தானியங்கிப் பொறியில் அல்லது இப்பொறி இருக்கும் மையத்தில் தனியாகக் கணக்கேட்டில் பண விவரங்களைப் பதியும் வசதியும் உள்ளது.
1012. Automatically       தன்னியல்பாக

சட்டத்துறையில் ஏதேனும் ஒரு நிகழ்வால் தூண்டப்படுவதற்கு முன்பே இருக்கும்  செயல்பாட்டின் மூலம் நிகழ்வதை அல்லது உள்ளதைக் குறிக்கிறது.

தானாகவே – 1959 ஆம் ஆண்டு அரசு சேமிப்புச் சான்றிதழ்கள் சட்டத்தின் பிரிவு 6(4)(Section 6(4) of the Government Savings Certificates Act, 1959), பரிந்துரைக்கப்பட்ட முறையில் சேமிப்புச் சான்றிதழை மாற்றுவது, முந்தைய எந்த வொரு வழிமுறைப் பரிந்துரையையும் (nomination) தானாகவே நீக்கும் என்று கூறுகிறது.
1013. Autonomous  bodyதன்னாட்சி அமைப்பு

தன்னாட்சி அமைப்பு என்பது தற்சார்பு அரசு அமைப்பாகும். இது பெரும்பாலும் அரசாங்கத்தால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்படுவது. எனினும் அரசின் மேற்பார்வைக்கும் நிதியுதவிக்கும் உட்பட்டது.

தன்னாட்சி அமைப்புகள் இவை நிறுவப்படும் குறிப்பிட்ட சட்டம் அல்லது தனியுரிமை ஆவணத்தின் மூலம் வரையறுக்கப் படுகிறது.

தன்னாட்சி அமைப்பினை அரசு சார் அமைப்பு என்றும் கூறுவர்.
1014. Autonomy   தன்னாட்சி

தன்னதிகாரம்
தற்கட்டுப்பாடு
தன்னுரிமை
சுயாட்சி என்றும் சொல்வர். இது தமிழ்ச் சொல்லல்ல.
சிந்தனை, விருப்பம், செயல் அடிப்படையில் முழு உரிமையுடையது. வெளிப்புறக் குமுக அல்லது அரசியல் ஆற்றல்களிடமிருந்து சட்ட அமைப்பின் உள் தற்சார்புரிமையைக் குறிப்பது. தனியர் அல்லது குழுவின் தன்னாட்சி, தன்வரையறை உரிமையையும் குறிப்பது.
தன்னளவில் அதிகாரம் கொண்ட தன்னுரிமை யமைப்பையும் குறிப்பது.
          1015. Autopsyபிண ஆய்வு
பிணக் கூறாய்வு

சட்டத்தில், பிண ஆய்வு என்பது நோய்வாய்ப்பட்டோ கொல்லப்பட்டோ நேர்ச்சியி(விபத்தி)னாலோ இறந்தவரின் உடலை மருத்துவ-சட்ட அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதாகும். இஃது ஒரு தடயவியல் நோயியல் வல்லுநரால் மரணத்திற்கான காரணம், விதம், நேரத்தைத் தீர்மானிக்க உதவுவது. செய்யப்படுகிறது. இது குற்றவியல் உசாசல்களில் ஒரு முதன்மைப் பகுதியாகும். குறிப்பாக   ஐயத்திற்கிடமான அல்லது இயற்கைக்கு மாறான மரணங்களில்,   இறந்தவரை அடையாளம் காணவும் காயங்களை ஆவணப்படுத்தவும் இறந்த முறையை உறுதி செய்யவும் நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த உதவுவது.

(தொடரும்)

Thursday, October 2, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : தொடர்ச்சி)

 1006. Authorities          அதிகார அமைப்புகள்‌

ஒரு பொருண்மை தொடர்பில் செயற்பட, முடிவுகளை எடுக்க, உத்தரவுகளைப் பிறப்பிக்க, இசைவுகளை வழங்க, முறையான சட்ட பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்புகள்
1007. Authority inferior               கீழ்நிலை  அதிகாரி  

எந்தப் பதவியாக இருந்தாலும் அந்தப் பதவிக்குச் சார்நிலையிலுள்ள அதிகாரி
 1008. Authority, power and          அதிகாரமும்‌ அதிகார உரிமையும்‌

Authority  என்றால் சான்று வலிமை, இசைவு, அதிகாரமுடையவர், அதிகாரக்குழு, வல்லுநர், மேற்கோள் எனப் பல பொருள்கள். இங்கே அதிகாரி எனப் பொருளாகிறது.
1009. Authorizingஅதிகாரமளித்தல்;
உரிமையளித்தல்;
இசைவளித்தல்.  

சட்ட பூர்வமான அதிகாரம் பெற்ற ஒருவர் மற்றொருவருக்கோ மற்றொரு அமைப்பிற்கோ ஒன்றைச் செயற்படுத்துவதற்குரிய அதிகாரமளித்தல்
1010. Autocracy    கொடுங்கோன்மை;

கடுங்கோன்மை
தன்முனைப்பாட்சி,
வல்லாட்சி,
வல்லாண்மை,
தனிவல்லாண்மை,
தன் விருப்பு ஆட்சி
  ‘ஏகாதிபத்தியம்’, ‘சருவாதிகாரம்’ கடைசி  இரண்டும் தமிழல்ல.

வல்லாட்சி என்பது ஆட்சியாளர் சட்டத்தினாலோ அரசியலமைப்பினாலோ வரையறுக்கப்படாத முழுமையான, கட்டுப்படுத்தப்படாத அதிகாரத்தைப் பயன்படுத்துவது.   மக்களாட்சியைப் போலல்லாமல், சட்ட அமைப்பு வல்லாட்சியின் விருப்பத்திற்குப் பணியாற்றுகிறது.   இது சட்டத்தின் ஆட்சி, மக்களின் குடியுரிமைத் தற்சார்புகளின் அடிப்படை அரிப்புக்கு வழிவகுக்கிறது.

(தொடரும்)

Wednesday, September 24, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : இலக்குவனார் திருவள்ளுவன்

      25 September 2025      கரமுதல

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : தொடர்ச்சி)

 1001. Authorised officer      /  Authorized officer           அதிகாரம்‌ பெற்ற அலுவலர்‌
 
அதிகாரம்‌ பெற்ற அலுவலர் என்பவர் தனியொருவர், ஓர் அமைப்பு அல்லது அரசு நிறுவனத்தின் சார்பாகச் செயற்பட, குறிப்பிட்ட கடமைகளைச் செய்ய, ஆவணங்களைச் செயற்படுத்த அல்லது சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்க அதிகாரம் அல்லது அதிகாரப்பூர்வமாக அதிகாரம் வழங்கப்பட்டவர்.

இந்த ஏற்பு/ அங்கீகாரம் இயக்குநர்கள் குழு அல்லது அரசுத் துறை அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் மூலம் வரலாம், மேலும் அதிகாரியின் அதிகாரங்கள் பொதுவாக ஓர் ஒப்பந்தம், சான்றிதழ் அல்லது சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
 1002. Authorised representation   / Authorized representation            அதிகாரமளிக்கப்பட்ட சார்பாற்றுநர்‌

அதிகாரமளிக்கப்பெற்ற சார்பாளர்/சார்பர்/சாரர்
அதிகாரமுள்ளவரால் அவர் சார்பில் செயற்பட அதிகாரமளிக்கப்பட்ட எந்த ஓர் அலுவலர், முகவர்,எந்தத் தரப்பாராலும் அமர்த்தப்பட்ட அல்லது தக்க வைக்கப்பட்ட தற்சார்பு ஒப்பந்தர்,  சார்பாளர்/சார்பர்/சாரர் ஆவார்.
1003. Authorised to forbid   /Authorized to forbid              தடைசெய்ய அதிகாரமளிக்கப்பட்ட

தடைசெய்ய அதிகாரமளிக்கப்பட்டவர் என்பவர் எதையும் தடுப்பதற்கு அல்லது அனுமதி மறுப்பதற்கு அல்லது ஏற்காமைக்கு அலுவல் முறை இசைவையோ சட்டவழியிலான அதிகாரத்தையோ பெற்றவர்.
 1004. Authorised translation/Authorized translation          அதிகாரம்பெற்ற மொழிபெயர்ப்பு

அதிகாரம்பெற்ற மொழிபெயர்ப்பு என்பது பாதுகாக்கப்பட்ட தொழில்முறை பட்டத்தை வைத்திருக்கும் ஏற்கப்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களால் தரப்படும் சட்டபூர்வமான மொழிபெயர்ப்பாகும்.
1005.Authoritative text           அதிகார உறுதிபெற்ற உரை

(S. 6 OLA,1963) அலுவல் மொழிச் சட்டம் 1963  பிரிவு 6 இல் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள (இந்தி தவிர) எந்த மொழியிலும்  மேற்கொள்ளும் மொழிபெயர்ப்பு, அதிகாரப்பூர்வப் பதிவிதழில் குடியரசுத்தலைரின் அதிகாரத்தின் கீழ் வெளியிடப்படுவது. 
அரசமைப்புச் சட்டம் அல்லது ஒன்றிய மாநில அரசுகளின் சட்டங்கள், சட்ட விதிகள் ஆகியவற்றின் மொழி பெயர்ப்பு எதுவாக இருந்தாலும் அது சட்டமன்ற அவைகளாலோ நாடாளுமன்ற அவைகளாலோ அரசின் சட்டத் துறை அல்லது சட்ட ஆணையம் அல்லது சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பால் ஏற்கப்படுவதே அதிகார உறுதிபெற்ற உரை.

Thursday, July 31, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : தொடர்ச்சி)

 991. Authenticate       உறுதி யளி

மெய்யெனக் காட்டு  

போலியல்ல என ஆதாரம் காட்டு
அதிகார அளிப்பு உறுதியொப்பமிடு;

உறுதி யொப்பமிடுதல்    

சட்டச் சூழலில், உறுதி அளிப்பு என்பது நீதிமன்றத்தில் அதன் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை நிறுவ, ஒரு செய்தியின், குறிப்பாக ஆதாரத்தின் உண்மையான தன்மையை மெய்ப்பிப்பதை அல்லது சரிபார்ப்பதைக் குறிக்கிறது. இச் செயல்முறை, வழங்கப்பட்ட சான்றுகள் போலியானவை அல்லது புனையப்பட்டவை அல்ல, மாறாக அவை கூறப்பட்டவை என்பதை உறுதி செய்கிறது.
 992. Authenticated extracts    உறுதி யளிக்கப்பட்ட எடு பகுதிகள்

உறுதிச்சான்றிடப்பட்ட எடு பகுதிகள்

extract என்பதை எடு குறிப்பு என்றும் சொல்கின்றனர். குறிப்பு என்பது உள்ளதை நம் வரிகளில் குறிப்பதாகவும் பொருள்படும். ஆனால் ஆவணத்தின் சில பகுதிப் பக்கங்களை உள்ளவாறே எடுத்துத் தருவது. எனவே, எடு பகுதி என்பதே சரியாகும்.
993.  Author       ஆக்கியோன்

படைப்பாளி  

மூலவர்  

ஆசிரியர்  

நூலாசிரியர்  

ஆசிரியர் என்பது புத்தகத்தின்/ நூலின் ஆசிரியர் எனப் பொருளாகும். இலத்தீன் auctor > augeō = தோற்றம் / உருவாக்கல். இதிலிருந்து  உருவானது. ஒரு படைப்பைத் தோற்றுவிப்பவன் அல்லது உருவாக்குநன். எனவே, ஆக்கியோன், படைப்பாளி என்கின்றோம்.
 994. Author of the trustஅறக்கட்டளைப் பொறுப்பாண்மையர்  

பொறுப்பமைப்பாளர்

trust என்றால் கைப்பிணை, துணிவு, பாரம், கையடை, கையம்பு, நம்பகம், நம்பிக்கை, பொறுப்பாட்சி, அறக்கொடை, அறக்கட்டளை, பொறுப்பாண்மை, பொறுப்புரிமை அமைப்பு எனப் பல பொருள்கள் உள்ளன. கைப்பிணை முதலியன நம்பிக்கை அடிப்படையில் ஒப்படைக்கப்படுவனவற்றைக் குறிப்பன. பெருமளவுத் தொகையை அல்லது சொத்தினை அறச்செயல் புரிய ஒப்படைக்கப்படுவனவற்றை அறக்கொடை என்கின்றனர். அறக்கொடையின்மூலம் அமைக்கப்படுவன என்பதால் இப்போது நாம் அறக்கட்டளை எனப் பயன்படுத்தி வருகிறோம்.

Author of the trust என்னும் பொழுது, அறக்கட்டளையைத் தோற்றுவித்தவரைக் குறிக்கிறது. அவர் இருக்கும் பொழுது அல்லது அவருக்குப் பின்னர் இதனைப் பொறுப்பாகச் செயற்படுத்தும் குழுவினரைப் பொறுப்பாண்மையர்/பொறுப்பமைப்பாளர் என்கின்றனர். எனவே, அறக்கட்டளைப் பொறுப்பாண்மையர் எனலாம்.  நம்பிக்கை என்னும் பொருள் கொண்ட தொல்செருமானியச்சொல்லான traustą என்பதிலிருந்து உருவானது.
 995. Authorisation  /    Authorization   அதிகார அளிப்பு

சட்டப்பூர்வமாக அதிகார அளிப்பு என்பது மற்றொருவரின் சார்பாகச் செயல்பட அல்லது ஒரு குறிப்பிட்ட செயலை மேற்கொள்ள அதிகாரம், இசைவு அல்லது உரிமையை வழங்குவதைக் குறிக்கிறது. இஃது அடிப்படையில் ஒருவருக்கு ஏதாவது ஒன்றைச் செய்ய சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கும் செயல்முறையாகும். அது முடிவுகளை எடுப்பதா, வளங்களை அணுகுவதா அல்லது பணிகளைச் செய்வதா என்பது குறித்ததாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு பகர அதிகார ஆவணம், நிதிமேலாண்மையிலும் சட்டம் தொடர்பானவற்றிலும்  முடிவுகளை எடுத்துச் செயலாற்ற முடியாத மற்றொருவருக்காகச் செயற்படும்  அதிகாரத்தை ஒருவருக்கு வழங்குகிறது.

Followers

Blog Archive