Sunday, September 15, 2013

சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீர்மிகு பணிகள் Sivagangai Raamachandhiranaar






சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீர்மிகு பணிகள்
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்





தமிழே நம் மொழியும் இனமுமாகும். திராவிடம் என்பது மொழியுமல்ல; இனமுமல்ல. ஆனால், ‘தமிழ் என்னும் சொல் திராவிடம் என்று மாறியுள்ளது. திராவிடம் என்பது மொழியைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுகிறது; இனத்தைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப இனங்களைக் குறிப்பிடுகிறது. அதே  நேரம் இயக்கத்தைக்  குறிப்பிடுகையில், ஆரிய மூட நம்பிக்கைகளை அகற்றும், தமிழின் அருமை பெருமைகளை உணரச் செய்யும், தன் மதிப்பில் வாழ  அறிவுறுத்தும், பகுத்தறிவை நாடச் சொல்லும் குறியீடாகத் திராவிடம் வழங்குகிறது. எனவே, ‘திராவிடம் என்று குறிக்கும் பொழுது தமிழரல்லாத  பிற தமிழ்க்குடும்ப இனத்தவரை மட்டும் குறிப்பதாகக் கருதி அதனை இழித்தும் பழித்தும் பேசுவது தவறாகும். திராவிடம் என்பதைத் தமிழில் இருந்து வேறுபடுத்துவதால் திராவிடம் என்னும் பெயரில் தமிழின் சிறப்புகள் குறிக்கப்படும் இடங்கள் எல்லாம் நமக்குரியன அல்ல என்றாகிறது. ஆதலின்,  நாம் தமிழரே என்னும் நிலையில் நின்று மன்பதை மறுமலர்ச்சிப் பணியின் குறியீடாக உள்ள திராவிடத்தை நாம் பாராட்டுவதும் திசைமாறிப் போகிறவர்களை மீளவும் ஈர்ப்பதும் நம் வேலையாகும். அந்த வகையில்  திராவிட இயக்கத்தைப் பரப்பியும் பேணியும் வந்த ஆன்றோர் சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீரிய பணிகளைப் பார்ப்பது திராவிடத்தை உணர்த்துவதற்கான உரைகல்லாகும்.

  சிவகங்கை இராமச்சந்திரனார் 50 ஆண்டுகள்(16.09.1884-26.02.1933) கூட வாழவில்லை; ஆனால், ஐம்பதினாயிரம் ஆண்டுக்கால வரலாற்றைப் பதியும் வகையில் தொண்டாற்றி விட்டார். எனினும் மிகச் சுருக்கமாகச் சிலவற்றை மட்டுமே  நாம் இங்கே நினைவு கூர்கிறோம். 

திராவிட இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவர்
  இனமானப் போராளி, தன்மதிப்புக்கொள்கைப் பரப்பாளி, பகுத்தறிவுச் செயலாளி சிவகங்கை இராமச்சந்திரனார் மன்பதை மறுமலர்ச்சிக்கென பாடுபட்டவர்; தம் உழைப்பையும் செல்வத்தையும் இதற்கெனவே செலவழித்தவர். இவரின்  அரும்பெரும் பணிகளை அறிந்த  தந்தை பெரியார்  இவரைப் பார்க்க விரும்பி, அவரைச் சந்தித்து அவருடன் இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். எனவே, திராவிட இயக்கத்தால் உருவான தலைவர் என்றில்லாமல் திராவிட இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவர் எனத், திராவிட இயக்க  வைர விழுது எனப் பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்ட சிவகங்கை இராமச்சந்திரனாரைக் குறிப்பது பொருத்தமாகும். திராவிட இயக்கம் என்பதைக் குறியீடாகக் கருதுவதால், இவ்வியக்கம் தோன்றுவதற்கு முன்னர் நீதிக்கட்சி முதலானவை மூலம் ஆற்றிய மன்பதை மறுமலர்ச்சியையும் இது குறிக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அனைவருக்குமான கல்விக்கு வித்திட்டவர்
இராமச்சந்திரனார்,
மத பேதம் கொள்ளாதவன் மனிதச் சாதி
மற்றவர்கள் எல்லாம் கீழ்ச்சாதி
என வலியுறுத்திச் சாதி இல்லா மன்பதைக்குப் பாடுபட்டார்.  கல்வி வளர்ச்சி சாதி ஒழிப்பிற்குத் துணை நிற்கும் என்பதால் தாழ்த்தப்பட்டவர்களின், பிற்பட்டவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் கருத்து செலுத்தினார். கேடில்விழுச் செல்வமாகிய கல்வி, ஆண்-பெண், ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், நகரம் - சிற்றூர் என்றெல்லாம் பாகுபாடு காட்டப்படாமல் அனைவருக்கும் அனைத்து நிலைகளிலும் வழங்கப்பெற வேண்டும் என்னும்  உறுதியான கொள்கை உடையவராகச் செயல்பட்டார் இராமச்சந்திரனார். தம் பரம்பரைச் செல்வத்தையும் தாமே  ஈட்டிய செல்வத்தையும் கல்விப்பணிக்கெனவே செலவிட்டார். 

  கொட்டக்குடி, அகிலாண்டபுரம், காஞ்சிரங்கால் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் மிகுதியாக உள்ள இடங்களில் எல்லாம் அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இரவுப் பள்ளிகளை நிறுவினார். இவரது பள்ளிகளில் படித்தவர்கள் எல்லாம் முன்னேற்றப் பாதையைக் கண்டனர். இவரது சிவகங்கைப் பள்ளியில் படித்த கக்கன்தான் பின்னாளில் அமைச்சரானார். அதுபோல், அகிலாண்டபுரத்தில் படித்த பார்வதிதான் பின்னாளில்  கக்கனின் மனைவியானார்.  பள்ளிகள், இரவுப்பள்ளிகள், விடுதிகள் என இராமச்சந்திரானர் உருவாக்காமல் இருந்தால் எண்ணற்றோர் வாழ்க்கை இருண்டுதான் போயிருந்திருக்கும். இவரது பணிகளைப் பார்த்தே தமிழ்நாட்டின் பிற இடங்களிலும்  தாழ்த்தப்பட்டோர்க்கான பள்ளிகளும் விடுதிகளும் உருவாகின.

  சிவகங்கைமன்னரின் சத்திரம் மாணவர் விடுதியிலும் பிற நகரங்களில் உள்ள மாணவர் விடுதிகளிலும் பிராமண மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். இராமச்சந்திரனார், தமிழர்கள், தமிழ்நாட்டில் கட்டும் விடுதிகளில் தமிழின மாணவர்கள் சேர்க்கப்படாமை கொடுமை என இதனை எதிர்த்துப் போராடினார். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மாணாக்கர்களும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களும் சேர்க்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பிற நகரங்களில் உள்ள மாணாக்கர் விடுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மாணாக்கர்களும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களும் சேர்க்கப்பட்டனர். திராவிட இயக்கத்தின் சமநிலைக்கான இப்பணி இல்லையேல் பிற வகுப்பினர் கல்வி வாய்ப்பையும் அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் இழந்திருப்பர். 

  இராமச்சந்திரனாரது கல்விப்பணி குறித்துத் தென்னிந்திய - இலங்கைக் கலைக்களஞ்சியம் 1937-38 இல் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது (தரவு : கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்திரனார்’):

காலஞ்சென்ற இராமச்சந்திரனார், ஆதித்திராவிடர் குமுகாயத்தின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைத்தார்; இக்குமுகாயத்தின் இளைஞர்கள் கல்வியில் சிறக்க வேண்டும் என்பதற்காகக் கல்வியகங்கள், ஏழை மாணாக்கர் விடுதிகள், இரவுப்பள்ளிகள்,  முதலியனவற்றை நடத்தினார்; இதற்கெனத் தம் சொந்த வருவாயில் இருந்து பெருந்தொகையைச் செலவழித்தார்.”

திராவிட இயக்கத்தலைவர்கள் வாய்ப்பேச்சாக எதையும் கூறாமல் மக்கள் நலன்கருதித் தன்னலம் பார்க்காமல் சொந்தச் செல்வத்தையும் செலவழித்துத் தொண்டாற்றினர் என்பதற்கு இவரது முன்னோடிப் பணிகளே சான்றாகும்.

பதவி நாடாத பண்பாளர்
 பொல்லினி முனுசாமி (நாயுடு) (1885-1935) நீதிக்கட்சியின் நான்காம் முதல்வராக 1930 முதல் 1932 வரை இருந்தார். இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மக்கள் தலைவரான இராமச்சந்திரனாரைத் தம் அமைச்சரவையில் சேருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், பதவி ஆசையின்றி அமைச்சராகும் வாய்ப்பை மறுத்துவிட்டார். சிலர் தந்தை பெரியார் அறிவுரைக்கிணங்கத்தான், அமைச்சர் பதவியை மறுத்ததாகத் தவறாக எண்ணி உள்ளனர். தந்தை பெரியார் தம் கருத்தை யாரிடமும் திணிக்கும்  பண்புடையவரல்லர். அவர்  பங்குபெற்றிருந்த நீதிக்கட்சியும் பின்னர்ப் பேராயக்கட்சியாகிய காங்கிரசும்  ஆட்சியில் இருந்த பொழுது  யாரிடமும் அவ்வாறு சொன்னதில்லையே! தான் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது பிறரை ஏன் அமைச்சராக வேண்டா எனச் சொல்லப் போகிறார். எனினும் ஆட்சியை விரும்பாதத் தொண்டர்களை உருவாக்கித்தான் திராவிடர் கழகத்தை வளர்த்து எடுத்தார். 1944 இல் நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய தந்தை பெரியார், கட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். அதற்கு முன்பே ஆட்சியில் பொறுப்பேற்க வந்த வாய்ப்புகளை உதறித்தள்ளியவர்தான் அவர். 1940-42களில் இருமுறை ஆட்சியை அமைக்குமாறு ஏற்குமாறு அழைப்பு வந்தும்  இராசாசி அவர்கள் நேரில் வந்து வேண்டியும் அதனை அடியோடு மறுத்தவர்.

  தந்தை பெரியார்போல் பதவி ஆசை இல்லாதவராக இராமச்சந்திரனாரும் விளங்கினார்; முதலில் சாதி, சமயச்  சழக்குகளில் இருந்து மக்கள் விடுதலை அடைய வேண்டும் என விரும்பினார்; பதவியில் இருந்தால்  மக்களுக்கு நன்மைகள் செய்யலாமே என்றவர்களிடம், “பதவியும் வயிறு வளர்ப்புமே மனித வாழ்வின் இலட்சியமல்ல என்றார். இதற்கு முன்பு 1929இல் மாவட்ட நீதிபதி பதவி இவரைத்  தேடி வந்த பொழுதும் மறுத்தவர். அப்பொழுதே, “நான் பதவிகள் மூலமாக என் மக்களுக்குத் தொண்டு செய்யும் காலம் என்பது, அவர்களிடம் சமத்துவம், சமதருமம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு இவை எல்லாம் சரியாக அமைந்த பின்னர்தான் வர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் பயன். எனக்கும் பெருமை. அது வரையில் போராட்டம்தான் எனக்கு வாழ்க்கை என்றார்.
 இப்பொழுதெல்லாம் நடிக்கத் தொடங்கியதுமே நாளைய முதல்வர் எனக் கனவு காண்பதுவும் எக் கட்சியில் இருந்தாலும் பதவிக்காக அலைவதையும் நம்மால் காண முடிகிறது. ஆனால், ஆட்சிப்பதவிகளை மறுக்கும் தலைவர்களையும் பதவி ஆசை இல்லாத் தொண்டர்களையும்  கொண்டு திராவிட இயக்ககங்கள் செயல்படுகின்றன என்றால் உண்மையிலேயே பாராட்ட வேண்டும் அல்லவா? மாறாகப்பதவி வெறி பிடித்த, ஊழலில் ஊறிப் போகின்ற இக்காலத் தலைவர்களின் செயல்பாடுகளை எல்லாம் அவர்கள் மீதும் திராவிடம் என்னும் குறியீடு மீதும் திணிப்பது தவறல்லவா?

மதுக்குடிக்கு எதிராகப் பாடுபட்ட மாண்புடையாளர்
  மக்களிடையே உள்ள குடிப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் இராமச்சந்திரனார்.
கையறி யாமை   உடைத்தே பொருள்கொடுத்து
       மெய்யறி யாமை கொளல்.
என்னும் தெய்வப்புலவரின் திருக்குறளை வலியுறுத்தி மக்களை மது அரக்கனின் பிடியிலிருந்து மீட்டார். திராவிட இயக்க வரலாற்றில் இராமநாதபுரத்தில் முதல் மதுவிலக்கு மாநாட்டினைத் தலைமை தாங்கி நடத்தியவரும் அவரே! இராமநாதபுர  மாவட்ட மதுவிலக்குக் குழுத் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பிறருக்கு  முன்னோடியாகத்திகழ்ந்தார்.

தமிழ் வளர்த்த தகைமையாளர்
இவரது  கல்வி வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த தாய்மாமன் - மாமனார் - தமிழ்ப்பேராசிரியர் முத்துராமலிங்கனார் அவர்களால் இவருக்கும் தமிழ்  ஈடுபாடு மிகுதியாகவே இருந்தது. தமிழ் இலக்கியங்களைப் படித்து அவற்றின் சிறப்பை மக்களிடையே பரப்பினார். தமிழர் வாழ்வின் எல்லாநிலையிலும் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும் என்பதைக் கூட்டங்கள் வாயிலாக வலியுறுத்தினார். இராசாசி  அவர்களால் இந்தி திணிக்கப்பட்ட பொழுது, தமிழ்  மேம்பாட்டிற்கும் தமிழர் வளர்ச்சிக்கும் இந்தி  இடையூறே விளைவிக்கும் என்பதை உணர்த்தித் தமிழ் வாழ்விற்காகக்  குரல் கொடுத்துப் பரப்புரை மேற்கொண்டார் இராமச்சந்திரனார்.

சாதி ஒழிப்பிற்கு உழைத்த சான்றோர்
  ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணாக்கர்களுக்காக இவர் உருவாக்கிய அரசர்விடுதியில் அவர்களுக்கு முடி திருத்த மறுத்தனர் முடிதிருத்துநர்கள். உடன், மன்னருக்கும் தமக்கும் முடி திருத்தும் தொழிலாளியைக் கொண்டே ஆதிதிராவிட மாணாக்கர்களுக்கும் பிற ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கும் முடிதிருத்தச் செய்தார். இதன் மூலம் சாதி வேறுபாடின்றி அனைவரும் சமம் என்பதை உணர்ந்தே தொழிலாளர்களும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தினார் இராமச்சந்திரனார்.

  இன்றைக்குத் தமிழ்நாடு நீங்கலாக இந்தியா முழுமைக்கும் பெயர்களுக்குப்  பின்னால் சாதிப்பட்டங்கள் வால்களாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. தலைவர்கள் சாதிப் பெயர்களால்தான் அழைக்கப்படுகின்றார்கள்;  அவ்வாறு அழைத்தால்தான் அறியப்படுகின்றார்கள். தமிழ்நாடு  விதிவிலக்காக அமைந்ததற்குக் காரணம் திராவிட இயக்கப்பணிகளின் வெற்றியே எனலாம். இன்றைக்குப் பிற மாநிலங்களில் இருந்துவரும் கலைஞர்கள் சாதிப்பட்டங்களுடன் வருகின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலரே, தாங்கள் ஒன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லர் எனக் காட்டுவதற்காக சாதிப்பட்டங்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். எனினும் மிகப்பெரும்பான்மை மக்கள் சாதிப்பட்டங்களைத் துறந்துதான் உள்ளனர். மிகப்பெரிய வெற்றி அல்லவா இது? இதற்குக் காரணமும் பகுத்தறிவுச் சுடர் இராமச்சந்திரனார்தான். செங்கற்பட்டில் 17.02.1989 இல், முதல் தன்மதிப்பு(சுயமரியாதை) மாநாடு சௌந்தரபாண்டியனார் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் தன்மதிப்பு அரிமா இராமச்சந்திரனார், பெயர்களுக்குப்பின்னார் சாதிப்பெயர்களைச் சூட்டிக்கொள்ளக்கூடாது என்றும் அவ்வாறு சாதிப்பெயர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளவர்கள் அப்பெயர்களை நீக்க வேண்டும் என முன்மொழிந்தார். தந்தை பெரியார் அதனை வழிமொழிந்தார்.  இராமச்சந்திரனாரும்  திராவிட இயக்கத்தினரும் சாதிப் பெயர்களைத் தூக்கி எறிந்தனர். அதன் விளைவுதான் சாதிப்பெயர்கள் இல்லாத் தமிழ்ப் பெயர்களை நம்மால் இன்று காண முடிகின்றது. (திரைப்படம் ஒன்றில் தந்தை பெரியார் இத் தீர்மானத்தை முன் மொழிந்தது போலும் மேடையில் மூன்றாமவராக இராமச்சந்திரனார்  வழி மொழிந்தது போலும் தவறாகக் காட்டி இருப்பார்கள்.  45 அகவையில் இருந்தவரை முதிய தோற்றத்தில் காட்டியிருப்பார்கள்.)

  சாதிப் பெயர்களை மட்டும் அல்ல, சாதி, சமய அடையாளங்களை அணியக்கூடாது என்றும் தீ்ர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். மக்களிடையே வேறுபாட்டையும் பாகுபாட்டையும் உண்டாக்கும் குறிகளை அகற்ற அவர் கொணர்ந்த தீர்மானத்தால்தான், வழிபடு இடங்கள் அல்லது வழிபடுநேரங்கள் தவிரப் பொதுவாகப் பொது இடங்களில் குறியீடுகளை இட்டுக்கொள்வோர் குறைந்து போயினர்.

  அதே ஆண்டு திருநெல்வேலி மாநகரில் நடைபெற்ற தன்மதிப்பு மாநாட்டிற்கு இராமச்சந்தினார்தாம் தலைமை தாங்கினார். 1930 இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது தன்மதிப்பு மாநாட்டிலும் இராமச்சந்திரனார் சாதி ஒழிப்பிற்காகப் பேருரை ஆற்றி மக்களை சாதியில்லாப் பாதையில் நடைபோடச் செய்தார்.  இத்தகைய அரும்பணிகள் ஆற்றிய இயக்கத்தை இன்றைய நோக்கி்ல் பார்த்துப் பழிப்பது தவறல்லவா

  இட ஒதுக்கீட்டால் நாம் இன்றைக்குப் பயனடைந்ததற்குக் கால்கோளிட்டவர்கள் சீர்திருத்தச் செம்மல் இராமச்சந்தினார் முதலானவர்களே ஆவர். இவர்கள் அன்று ஆற்றிய அரும்பணிகளால் நாம் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்! எனினும் நாம் அடைய வேண்டிய பிற இலக்குகளையும்   நாம் அடைய வில்லை.  இன்றைய அரசியல்வாதிகள் செய்த தவறுகளுக்கு நாம் முன்னோரைக்  குறைகூறிப் பயனில்லை. இன்றைய இன மான வளர்ச்சிக்குக் காரணமானவர்களைப் போற்ற வேண்டும். அவர்கள் வழியில் தமிழ்நல அரசை நிறுவ அரசியலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.  முந்தையோர் நற்பெயர்களால் ஆட்சி நலனைத் துய்ப்பவர்கள் அவர்கள் கொள்கைவழியில்  தடம் புரளாமல் நடைபோடவேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். அதே நேரம் தடம் புரண்டவர்களை அளவுகோலாகக் கொண்டு  மக்கள் நேயத்தையும் வாழ்வுரிமையையும் பரப்பிய ஆன்றோர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் சீர்திருத்த இயக்கப் பணிகளை வேறு வண்ணம்பூசி மறைக்கக்கூடாது என்பதை நாம் மறக்கக்கூடாது.

  சிவகங்கை அரசின் வழக்குரைஞராக வாழ்நாள் இறுதி வரை செயல்பட்டு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் அருந்தொண்டாற்றினார். இராமநாதபுர மாவட்ட நகராண்மைக்கழகத்திலும் கல்விக்கழகத்திலும் இராமநாதபுரம் மாவட்டக் கல்விக் குழுவிலும் எனப் பல்வேறு  பங்கேற்றுப் பல்வேறு நிலைகளிலும் மதிப்புநிலை நீதிபதி முதலான பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படச்  செயல்பட்டுச் சமஉடைமை மன்பதை அமைய பாடுபட்டார். இவ்வாறு அல்லும் பகலும் ஒல்லும் வகையெல்லாம் அருந்தமிழ் நாட்டினர் உயர்விற்கெனவே பாடுபட்டவர் இராமச்சந்திரனார்.
 இந்தியாவிலுள்ள சீர்திருத்தப் பணிகளில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் சீர்திருத்தப்பணிகளில் முன்னோடி அறவாணராகத் திகழ்ந்தவர் சீர்திருத்தச் செம்மல் இராமச்சந்திரனார். இவரைப்போன்ற ஆன்றோர்களின் உழைப்பு இல்லையேல் இன்றைக்கு நாம்அடைந்திருக்கும் வளர்ச்சியும் முன்னேற்றமும் பல நூற்றாண்டுகள் தள்ளிப் போயிருந்திருக்கும்.

 எனவே, நாம்திராவிட இயக்கப் பெருந்தலைவர் தன்மானச்சுடர் சிவகங்கை இராமச்சந்திரனாரை நினைவுகூர்ந்து அவர் வழியில் தன்மானத்துடன் வாழ்வோமாக!
(16.09.2013 பகுத்தறிவுச்சுடர் இராமச்சந்திரனாரின் 130 ஆவது பிறந்தநாள்)

Tuesday, September 3, 2013

இதழியல் செம்மல் இலக்குவனார்



இதழியல் செம்மல் இலக்குவனார்
-       இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்
முன்னுரை
  தமிழ்க்காப்புத் தலைவர், செந்தமிழ் மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் வாழ்க்கைச் சுவடுகள் என்பன முற்றிலும் தமிழ்நலனுக்காக அவர் சந்தித்த போர்க்களங்களே ஆகும்.  போர்க்களத்தில் அவர் அடைந்த வெற்றிவாகைகள் என்பன தமிழ், தமிழர் பெற்ற பயன்களாகும். அவர் சந்தித்த ஏமாற்றங்கள் என்பன தமிழுக்கும் தமிழர்க்கும் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகும்.
களப்பணியில் இதழ்ப்பணி
  தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் தமிழாக வாழ்ந்த பேராசிரியரின் பணி கல்விப்பணியுடன் இணைந்த களப்பணியாக அமைந்தது. களப்பணி என்பது, இலவசத் தமிழ்க்கல்வி, தமிழ் இலக்கியப்பரப்புரை, தமிழ்நலப் போராட்டங்களை நடத்துதல் முதலான பலவாகும். இத்தகயை களப்பணியில் குறிப்பிடத்தக்க இடம்  பெறுவது பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் இதழியல் பணியாகும். பெருஞ்செல்வந்தர்களும் நாளிதழ் நடத்த அஞ்சும் காலத்தில் தமிழ்நலனுக்காகவே குறள்நெறி என்னும் நாளிதழ் நடத்தினார் என்பதே அவரது பெருமைக்குச் சான்றாகும்.
இதழ்கள் வழி இலக்கியப் பரப்புரையாளர்
  பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பத்து ஆங்கில நூல்களையும் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும் படைத்தளித்துள்ளார். இவை யாவும் தமிழ் இலக்கியங்கள் மீது சிலரால் வேண்டுமென்றே படியவிடப்பட்ட ஆரியக் கறைகளை அகற்றுவனவாகவும் பொய்மைப் புனைந்துரைகளை நீக்குவனவாகவும் தமிழின் தொன்மையையும்  மேன்மையையும் வண்மையையும் நுண்மையையும் தாய்மையையும் தூய்மையையும் வெளிப்படுத்துவனவாகவும் தமிழர்களின் நாகரிகப் பண்பாட்டு வரலாற்றுச் சிறப்புகளை உலகிற்கு அறிவிப்பன வாகவும் அமைந்தவை. எனவே, தமிழின எழுச்சியை ஏற்படுத்த  இவ்வாராய்ச்சி நூல்களும் விளக்க நூல்களும் பேராசிரியர் அளித்த கருவிகளாய்  அமைந்தன. ஆனால் இவரது புலமை மிகு கருத்துகள் உயர்நிலையில் படிப்போரிடையே மட்டுமல்லாமல் எளிய மக்களையும் சென்று சேர்வதற்கு அவரின் இதழ்ப்பணி சிறப்பான ஊடகமாக அமைந்தது.
இலக்கியங்களை மக்களிடையே பரப்பிய மாமனிதர் 
  பேராசிரியரின் இதழ்ப்பணிகளால் தமிழ் இலக்கியங்கள்  புலவர்கள் மட்டுமே படித்தற்குரியன என்னும் தவறான எண்ணம் விலகியது. இவை வாழ்வியல் இலக்கியங்கள்; தமிழராய்ப் பிறந்த ஒவ்வொவரும் கட்டாயமாக அறிய வேண்டியவை; பழந்தமிழர்களின் பன்முகச் சிறப்பு களையும் நமக்கு உணர்த்தி இன மான உணர்வுகளை ஊட்டுபவை என அனைவரும் உணர்ந்தனர். எனவே, பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள் செய்தி ஊடகத்தைக் கருவியாகக் கொண்டு தமிழ் இலக்கியங்களை மக்களிடையே பரப்பிய மாமனிதராய் விளங்கினார் எனலாம்.
செய்தி இதழ்களுக்கும் இலக்கியத் தகுதி அளித்தவர்
  பேராசிரியரின் இதழ்ப்பணி அவரது கள வாழ்வை எளிமைப்படுத்தவும் மக்களிடையே பரப்பி ஈர்க்கவும் சிறப்பானதொரு பங்களிப்பை வழங்கியது எனில் மிகையாகாது. தகவல் தொடர்பு ஊடகமான இதழ்களின் வாயிலாகப் பேராசிரியர் அவர்கள் தமிழுலகத்தினரைத் தட்டி யெழுப்பவும் ஆற்றுப்படுத்தவும் இலக்கிய ஈடுபாடு கொள்ளச் செய்யவும் இனமானத்துடன் திகழச் செய்யவும்  சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது. வெறும் பேராசிரியராகவோ நூலாசிரியராகவோ சொற்பொழிவாளராகவோ  தமிழ்த் தொண்டராகவோ மட்டும்  இல்லாமல் தமிழ்க்காப்புத் தலைவராகப் பேராசிரியரைத் திகழச் செய்ததில் அவர் நடத்திய இதழ்களுக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ் இலக்கிய வளங்களை மக்களிடையே சேர்த்து மக்கள் இலக்கியங்களாக அவற்றை மாற்றச் செய்யவும்  இதழ்களுக்கு இலக்கியத் தகுதி கிடைக்கச் செய்யவும் பேராசிரியரின் அரும் பெரும் முயற்சிகள் வழி வகுத்தன. இந்தி எதிர்ப்புப் போரில் மாணாக்கர்களையும் பொது மக்களையும் ஈடுபடச் செய்து அதனை மக்கள்  போராக மாற்றப் பேராசிரியரின் இதழ்ப்பணியே பெரும் பங்காற்றியது. எனவே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் இதழ்ப்பணிகளை நாம் அறிவது அவரது அயரா முயற்சிகளையும் அருந் தொண்டுகளையும் அறிய வாயிலாக அமையும்.
 மாணாக்க நிலையில் இதழியல் ஈடுபாடு
 பேராசிரியர் அவர்கள் பள்ளி மாணாக்கராய்த் திகழ்ந்த போதே எழுத்திலும் பேச்சிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். பள்ளியில் நடைபெறும் விழாக்கள், சிறப்பு நிகழ்வுகளின் பொழுதும் மலர்களிலும் கவிதைகள் எழுதித் தன் எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார். திருவையாற்று அரசர் கல்லூரியில் புலவர் பட்டத்திற்குப் பயிலும் பொழுது குடியரசு, இந்து நேசன், தமிழ்ப் பொழில் முதலான இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி இதழுலகில் அடியெடுத்து வைத்தார். மாணவ நிலையில் இல்லாமல் ஆராய்ச்சியாளர் நிலையில் இவரது கட்டுரைகள் அமைந்தமையால் இவையாவும் பெரும் வரவேற்பினைப் பெற்றதாக இவருடன் பயின்ற இவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
 ஆசிரிய நிலையில் இதழியல்  ஈடுபாடு
 தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுத் தம்முடைய வாழ்க்கையை இனமானப் பாதையில் செலுத்தியவர் பேராசிரியர் அவர்கள். தன்மானத் தந்தை பெரியார் அவர்களும் பேராசிரியர்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவராக விளங்கினார். எனவேதான் தந்தை பெரியார் அவர்கள், “யான் வேறு இலக்குவனார் வேறு இல்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும் தந்தை பெரியார் அவர்கள் கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று அறிவித்த  பொழுது அதற்கு மாறான நிலையை எடுத்த பேராசிரியர் அவர்கள், இது குறித்த பல வினாக்களைத் திராவிடநாடு இதழுக்கு அனுப்பி  வைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் அவ்வினாக்களையும் அவற்றிற்கான விடைகளையும் தம் இதழில் தொடர்ந்து வெளியிட்டார். இதனால் பேராசிரியர் அவர்களுக்கு இதழுலகில் ஈடுபாடு மேலும் பெருகியது.
நேரடி இதழியல் ஈடுபாட்டிற்கு வித்து
  பேராசிரியர் அவர்களை இதழ்ப்பணியில் நேரடியாக ஈடுபடச் செய்தது நெல்லையில் நடந்த ஒரு சிறு நிகழ்வே ஆகும். திருநெல்வேலியில் வட்டத் தொட்டி என்னும் அமைப்பின் சார்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய சொற்பொழிவாளர் ஒருவர் (திரு. திரிமூர்த்தி) சங்க இலக்கியத்தை வங்கக்கடலில் போட வேண்டும் என்று பேச அங்குக் கூடியிருந்தவர்களும் கைதட்டி வரவேற்றனர் என்ற செய்தியை அறிந்த பேராசிரியர் அவர்கள் உள்ளம் பதைத்து  இவ்வாறு பேசியதும் மக்கள் வரவேற்றதும் மக்களின் குற்றமாகாது; மக்களிடையே சங்க இலக்கியத்தைக் கொண்டு செல்லாத தமிழ்ப் புலவர்களின் குற்றம்தான் எனக் குறிப்பிட்டு மக்களிடையே சங்க இலக்கியத்தை எளிய இலக்கியமாகப் பரப்ப வேண்டும் என்னும் நோக்கோடு  சங்க இலக்கியம் என்னும் கிழமை இதழை நடத்தி இதழுலகில் நேரடியாகத் தடம் பதித்தார்.
 நடத்திய இதழ்கள்
 1945 முதல் 1947 வரை நெல்லையில் சங்க இலக்கியம் இதழ் நடத்திய பேராசிரியர் அவர்கள் பின் விருதுநகரில் (1952 வரை) இலக்கியம் என்னும் இதழை நடத்தினார். பின் தஞ்சாவூரில் (1952) ‘திராவிடக் கூட்டரசு என்னும் கிழமை இதழையும்  ‘Dravidian Federation’ என்னும் ஆங்கிலத் திங்களிருமுறை இதழையும் நடத்தினார். இவற்றின் தொடர்ச்சியாகப் புதுக்கோட்டையில்(1954-1955) குறள்நெறி என்னும் திங்களிதழை நடத்தினார். கால ஆராய்ச்சி குறித்து வேண்டு மென்றே குறைபடவும் பிழைபடவும் எழுதியவர்களுக்கு மறுப்பாகக்  கால வரலாற்று உண்மையை இவ்விதழில் வெளியிட்டுத் தமிழ் இலக்கியங்களின் தொன்மையை நாடறியச் செய்தார். பேராசிரியர் அவர்கள் மதுரையில் வாழ்ந்த பொழுது குறள்நெறி (1963-1971) என்னும் திங்களிருமுறை இதழ், குறள்நெறி (1966) என்னும் நாளிதழ்,  ‘Kuralneri’ (1966) என்னும் ஆங்கிலத் திங்களிருமுறை இதழ் ஆகியவற்றை நடத்தினார். (பேராசிரியர் அவர்கள் சென்னையிலும் ஐதராபாத் திலும் பணியாற்றிய இடைக்காலத்தில்  குறள்நெறி இதழ் அவருடைய மக்களுள் ஒருவரான முனைவர் இலக்குவனார் மறைமலை அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது.)
தமிழை வளப்படுத்துவதற்காக இதழ்ப்பணி
   குறள்நெறியை மக்களிடையே பரப்பவும் தொல்காப்பியத்தின் ஒல்காப் புகழை அறியச் செய்யவும் சங்க இலக்கியங்களை அனைவரும் படிப்பதற்கும் எனக் குறள்நெறி இதழைப் பேராசிரியர் அவர்கள் நடத்தி வந்துள்ளார்கள். அத்துடன் தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை;  தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் வாழ்தல் என்னும் தம்முடைய குறிக்கோளை மக்களிடையே விதைக்கவும் இதழ்ப் பணியைத் தொடர்ந்தார்.
 இந்தி எதிர்ப்புப் போரின் படைக்கலன்
பேரறிஞர் அண்ணா அவர்கள் வாயிலாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்தி எதிர்ப்புப் போருக்கு ஆற்றுப்படுத்திய பேராசிரியர் அவர்கள் குறள்நெறியை இந்தி எதிர்ப்புப் போருக்கான படைக்கலனாக மாற்றினார். இந்தி முதன்மையால் ஏற்படும்  அழிவுகளையும் தமிழ்க்காப்பின்  இன்றியமையாமையையும் தாம் வலியுறுத்தியதுடன் நில்லாது இந்தி எதிர்ப்பு பற்றிய கட்டுரைகள், பாட்டரங்கம் முதலியன மூலம் அறிஞர்கள், புலவர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பாரையும் இதில் ஈடுபடச் செய்தார். இந்தி  எதிர்ப்புப் போரில் யாரேனும் களப்பலியாக வேண்டும் என்றால் முதல் ஆளாகத் தான் இருக்கின்றேன் எனச் சொல்லித் துணிந்து ஆட்சியாளரின்  இந்தி அடிமைப் போக்கை எதிர்த்தும்  தமிழ் உரிமைக் காப்பிற்காகவும் வாலாயமான அடக்குமுறைச் சட்டத்தின் கீழும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் என இருமுறை சிறை வாழ்க்கையைச் சந்தித்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் என்றால் அதற்கு அடிப்படையாய் அமைந்தது  அவரின் இதழ்ப்பணியே யாகும். அதேபோல், இந்தி எதிர்ப்புப்போருக்கான களத்தில் மக்களைக் குறிப்பாக மாணாக்கர்களை ஆயத்தப் படுத்தியதில் பெரும் பங்கு வகித்ததும் பேராசிரியர்  அவர்களின் இதழ்ப்பணியேயாகும்.
படைப்புகளின்  பகுப்பு
  பேராசிரியர் இலக்குவனாரின் இதழ்களில் திருக்குறள், இலக்கியம் தொடர்பான படைப்புகளுடன் அரசியல், வாழ்வியல், நாட்டியல், மொழியியல், அறிவியல், கலைச் சொற் பட்டியல், அன்றாடப் பயன்பாட்டுச் சொற்பட்டியல், நீத்தார் போற்றல், அறிஞர்களைப் போற்றல், ஆட்சி மாற்றம், இந்தி எதிர்ப்பு, மொழி பெயர்ப்புப் படைப்புகள், தொடர்கதை, தொல்காப்பிய விளக்கம், சிறுகதை, திரைப்படத் திறனாய்வு, வாழ்க்கை வரலாற்றுத் தொடர், தமிழ் அமைப்புகளின் செய்திகள் எனப் பலவகைப் படைப்புகளையும் காண முடிகின்ற போது இவ்வறிஞரின் நோக்கம், எல்லாச் செய்திகளையும் எளிய இனிய தமிழில் அளிப்பதே என்பது தெளிவாகின்றது.
ஆசிரிய உரைகளின் வகைமை
  பேராசிரியரின் ஆசிரிய உரைகளை 1.) இலக்கு சார்ந்தவை 2.) தமிழ் உரிமை சார்ந்தவை 3.) தமிழ்நெறி சார்ந்தவை 4.) கூட்டரசில் சமஉரிமை வேண்டுபவை 5.) இந்தி எதிர்ப்பு சார்ந்தவை 6.) கல்வி சார்ந்தவை 7.) இலங்கைத் தமிழர்கள் பற்றியன 8.) நினைவுரைகள் 9.) ஆன்றோர் பற்றியன  10.) கிளர்ச்சிகள் தொடர்பானவை 11.) தேர்தல் முதலிய அரசியல் பற்றியன 12.) பிற என வகைப்படுத்தலாம். தமிழக மக்களின் சிக்கல்களுடன் நில்லாது பிற மாநிலங்கள் பிறநாட்டுச் சிக்கல்கள்குறித்தும் கருத்துகளைப் பதிந்துள்ளார். இவற்றையும் விலைவாசி முதலான பொருளியல் சார்ந்தவற்றையும் பிற என்னும் தலைப்பில் அடக்கலாம். பேராசிரியரின் பயிற்சி மொழி தொடர்பான கருத்துகளைக் கல்வி சார்ந்தவை எனக் கூறுவதை விடத் தமிழ் உரிமை சார்ந்தவை என்பதே சரியான பகுப்பாக அமையும். இந்தி எதிர்ப்பை வலியுறுத்துவதன் நோக்கம் கூட்டரசில் தமிழுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும்  என்பதால் இவற்றின் பகுப்பும் மாறுபடும். கூட்டரசில் தமிழுக்கான உரிமை வேண்டுவன எல்லாம் அரசியல் பகுப்பிலும் அடங்கும். கிளர்ச்சிகள் தொடர்பானவை என்பவெல்லாம் பயிலுநர், பணியாற்றுனர் உரிமைகளை வலியுறுத்துவனவே. நினைவுரைகள் என்பன கூட ஆன்றோர் பற்றியனவே. பேராசிரியர்கள் இலக்கு பற்றியனவும் தமிழ் உரிமை சார்ந்தவையாயும் தமிழ் நெறி சார்ந்தவையாயும் உள்ளன. எனவே, இந்த வகையில் தமிழ் நலச்சார்பில் அவரது தலையங்கங்களாகிய ஆசிரியஉரைகளை வகைமைப்படுத்தலாம்.
முழக்கங்களின் வகைகள்
  கட்டுரை, கவிதைப் படைப்புகள் போல் மக்களிடையே தமிழ் உணர்வுகளை விரைவில் தூண்டக் கூடிய சிறப்பினைப் பெற்றவை இவரது இதழ்களில் இடம் பெற்ற தமிழியச் சிந்தனைகளும் தமிழ் முழக்கங்களுமாகும். இவற்றை, 1. பயிற்சி மொழி, ஆட்சி மொழி, அயல்மொழி முதன்மை அகற்றம், பிழையின்றி எழுதுதல், முதலான மொழி சார்ந்தவை, 2. இனம் சார்ந்தவை, 3. குறள்நெறி சார்ந்தவை, 4. இலக்கியமேற்கோள்கள், 5. பகுத்தறிவு சார்ந்தவை,  6. போர்க்காலத்தில் இடம் பெற்ற ஒருமைப்பாடு சார்ந்தவை, 7. பொதுவானவை, என ஏழு வகையாகப் பகுக்கலாம். இங்ஙனம் பல்வேறு தமிழ் முழக்கங்கள் மூலம் தமிழ் உணர்ச்சியைப் பரப்பிய தலைமை இதழாளராகப் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் திகழ்ந்துள்ளார். தமிழியக்கப் படைப்புகள் ஏற்படுத்திய தமிழ் உரிமை எழுச்சியை இத்தகைய முழக்கங்களும் ஏற்படுத்தி இவரது இதழ்களின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வித்திட்டுள்ளன எனலாம்.
தொலைநோக்குப் பார்வை
  பேராசிரியரின் எழுத்துரைகளுக்குப் பின் இரண்டு தலைமுறைகள் தோன்றி விட்டன. ஆனால், அவர் தெரிவித்துள்ள கருத்துமணிகள் இன்றைக்கும் நமக்கு வேண்டப் படுவனவாகத்தான் உள்ளன. ஒரு புறம் பேராசிரியரின் தொலைநோக்குப் பார்வையை இஃது உணர்த்தினாலும் மறுபுறம் தமிழ்நாட்டின் மாறா அவலங்களையும் உணர்ந்து வருந்த வேண்டியுள்ளது. செந்தமிழ்மொழி எல்லா நிலைகளிலும் ஏற்றம் பெற உழைக்க வேண்டும் என்றார் பேராசிரியர். அவ்வாறு உழைப்போர் யாருமிலர்; அவ்வாறு சிறுபான்மையர் குரல் கொடுத்தாலும் செவிமடுப்பார் இலர்.
தமிழே நம் தேசியமொழி
    தமிழர்கள், தமிழே நம் தேசியமொழி  என  உணர்ந்து அவ்வாறே அழைக்க வேண்டும் என்றும் வட்டார மொழி என அழைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார் பேராசிரியர். ஆனால் கல்வியகங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகளால் இந்தியே தேசிய மொழி என்னும் பொய்யான கருத்து வன்மையாகத் திணிக்கப்படுகிறது.
தமிழினத்தை விரும்பா இந்திய அரசு
  இந்திய அரசினர் தமிழ் இனம் என ஒன்று இருப்பதை விரும்பவில்லை என்றும் தமிழர்களின் பண்டைய வரலாற்றை மறைக்கவே செய்வார்கள்  என்றும் கவலைப்பட்டார் பேராசிரியர் அவர்கள். இன்றும் இந்த இழிநிலைதான் தொடருகின்றது. தமிழ்மக்களுடைய உதவிகள் தேவைப்படும் போதெல்லாம்  அவற்றைப் பெறுவதற்காக இந்தியர் என்றும் தமிழ்மக்களுக்கு உதவித் தேவைப்படும் போதெல்லாம்  புறக்கணிப்பதற்காகத் தமிழர் என்றும் இரட்டை அளவுகோலை இந்திய அரசு கொண்டுள்ளது. எனவேதான் அயல்வாழ் இந்தியர் கூட்டம் தமிழ்நாட்டில் நடந்தபொழுதுகூட ஈழத்தமிழர் சிக்கல்களையோ தமிழக மீனவர்கள் சிக்கல்களையோ பேசக்கூடாது; ஏனெனில்  இந்தியர் கூட்டம் என மறுக்கப்பட்டது. தமிழர்கள் இந்தியர் அல்லர் எனில் ஏன் இந்தியா என்னும் அமைப்பில் அடைத்து வைத்திருக்க வேண்டும்? என்னும் வினாவிற்கு விடை கூறுவதில்லை.
கல்வி வழங்கல் பொறுப்பு அரசையே சாரும்
  தேர்வுக்காக ஆயத்தம் செய்வதே கல்விநிலையங்களின் கடமை என்பது மாற வேண்டும் என வலியுறுத்தி வந்தார் பேராசிரியர். ஆனால் படிப்பது என்பதே பணியாற்றத்தான் என்னும் போக்கே இன்னும் மேலோங்கியே காணப்படுகிறது. கலைக்கூடங்கள் கொலைக்கூடங்களாக உள்ளமையால், அரசே கல்விச் செல்வத்தை வழங்க வேண்டும் என்றும் பேராசிரியர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அரசின் செயல்பாடு என்பது கல்விக்கூடக் கொள்ளையர்களை உருவாக்குவதாகத்தான் உள்ளதே தவிர நேரடியாகக் கல்வித் தொண்டில் ஈடுபட்டு உயர்கல்வி வரை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்னும் கடப்பாட்டை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஒருமைப்பாடு தமிழ் வரலாற்றைப் புதைக்கவா?
    தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித்தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுவதையும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த இழிநிலை இன்னும் தொடர்வதால்தான், தமிழகப் பகுதிகளைப் பிறருக்குக் கொடுத்தது போல், தமிழ் உறவுகளை இழந்தும், வஞ்சகர்கள் தமிழ் நிலத்தைப் புதைகாடாகவும் எரிகாடாகவும் ஆக்கியும் வாய்மூடி அமைதி காக்கின்றோம்.
தாக்கப்படும் தமிழர்களுக்காகக்  குரல்  கொடுக்கும்  மத்திய அரசு இல்லை
    வசதியற்றவர்களாய் ஈழத்திலும் காழகத்திலும் சிங்கப்பூரிலும் இன்னும் பிற நாடுகளிலும் கூலிகளாய்த் துன்பம் சுமந்து வாழும் தமிழர் அங்கெல்லாம் வெறி வேங்கைகளால் தாக்கப்படும்போது ஏன்? என்று கேட்க எவரும் இல்லை. நாடற்றவர்களாக விரட்டப்படுகின்றனர். நடுக்கடலில் தத்தளிக்கின்றனர் சிலர். தாய்நாட்டில் நுழைந்துவிட்ட காரணத்தால் பிச்சைக்கக்காரர்களாக ஆக்கப்பட்டு விட்டனர் பலர் எனப் பெரிதும் வருந்தி பேரிடர்க்கான விழிப்பு மணியை - அபாய மணியை - அன்றே பேராசிரியர்   ஒலிக்கச் செய்தும் கேளாச் செவியினராகவே நாம் இன்னும் இருக்கின்றோம்.
இலங்கையரசின் நட்பிற்குத் தமிழர்களைப் பலிகொடுக்கும் இந்தியா
    இந்திய அரசு இலங்கையரசின் நட்புக்காகத் தமிழர்களைப்  பலி கொடுத்து விடுவார்களோ என்று தம் அச்சத்தை அன்றே பேராசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய வருந்தத்தக்க உண்மை என்பது நாளும் தமிழ் மீனவர்களையும் நூறாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களையும் பறிகொடுத்தும் நம்மில் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பெரிதும் வேதனையாக உள்ளது.
தேசிய மொழிகளுக்குச் சமஉரிமை
    ஆங்கிலத்தை அகற்றப் போராடிக் கொண்டிருக்கும் நம் மீது இந்தி மொழியைத் திணிப்பதையும் இந்திக்கு மட்டும் முதன்மை என்பது அதன் செல்வாக்கிற்கும் பிற மொழிகளின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதையும் அனைத்துத் தேசிய மொழி களுக்கும் சம உரிமை அளிப்பதே கூட்டரசை நிலைக்கச் செய்யும் என்பதையும் பல இடங்களில் பேராசிரியர் வலியுறுத்தி வந்துள்ளார். இருப்பினும் இந்தியின் முதன்மை என்பது நாளும் மத்திய அரசால் புகுத்தப்படுவதாகவும் நம் தேசிய மொழிகளும் தேசிய இனங்களும் மறக்கடிக்கப்படுவனவாகவும்தான் இன்றுவரை உள்ளன.
சாதிக்கட்சிகளைத்தடைசெய்!
   தமிழரல்லாதவர்களால் புகுத்தப்பட்ட சாதியை அறவே அகற்றவும் சாதிக்கட்சிகளைத் தடைசெய்யவும் பேராசிரியர் கூறும் அறிவுரைகள் இன்றும் பயன்படுத்தத்தக்கனவே.

மன்பதை நோய்க்கு மருந்து மாணவர் கிளர்ச்சி
   நோய்க்கு மருந்தேபோல் மன்பதை நோய்க்கு மாணவர் கிளர்ச்சியும் வேண்டப்படுவது எனப் பேராசிரியர் கூறியுள்ளது,  போராட்டங்களையே நடைமுறை வாழ்க்கையாகக் கொண்டவர் உட்பட, இதுவரை வேறு யாரும் கூறாதது. இந்தி நோயைப் போக்க மாணவர்களைக் களத்தில் இறக்கிய பேராசிரியர் கருத்து இவ்வாறுதானே இருக்க இயலும்! கிளர்ச்சிகளை வன்முறையால் அடக்காமல் அவற்றிற்கான காரணங்களை அறிந்து போக்க வேண்டும் எனவும் மென்முறையால் அகற்ற வேண்டும் எனவும் பேராசிரியர் தெரிவிக்கும் நல்லுரைகளைப் பின்பற்றினால் ஆட்சி என்பது என்றும் நல்லரசாகவே திகழும் அன்றோ!
தமிழ் காக்கும் ஆசிரிய உரைகள்
    தேவநாகரி எழுத்துகளை அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தினால் ஏற்படும் பேரழிவு, கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடு, சங்கங்கள், பல கட்சிமுறை வேண்டாமை, தேர்தல், குடியாட்சி, தமிழ்க்காப்பு எனப்பல வகை குறித்தும் பேராசிரியர் ஆசிரிய உரை எழுதியுள்ளார். இவையாவும் இன்றைக்கும் நாம் பின்பற்றப்படவேண்டியனவே.
முழு உரிமையுடைய தமிழக அரசே தேவை!
    தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும்நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும் என்றும் முழு உரிமையுடன் கூடிய தமிழக அரசைப் பெறவேண்டும்என்றும் மக்கள் நன்மைகளுக்கான மக்களால் ஆளப்படும் மக்களாட்சியே வேண்டும் என்றும் பேராசிரியர் வலியுறுத்துவதை இன்றேனும் நாம் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். 
மக்களுக்காக மொழி; மொழி காக்க மக்கள்!
  பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் எத்தனை இதழ்கள் நடத்தியிருப்பினும் அவற்றின் அடிப்படை நோக்கம் தமிழ் நலமேயாகும். மக்களுக்காக மொழி; மொழி காக்க மக்கள்என்னும் வாழ்வியல் உண்மையை உரைக்கும் பேராசிரியர் மக்கள் நல்வாழ்விற்காக மொழி நலத்தை வலியுறுத்தியதுடன் பிற எல்லாக் குறைகளையும் அகற்ற வேண்டியதன் இன்றியமையாமையையும் வலியுறுத்தியுள்ளார்.
இதழியல் வல்லுநர்களை உருவாக்கிய பெருமை
  உயர் ஊதியம் பெற்று வந்த பேராசிரியர், அதனைக் கொண்டு தம்மையும் தம் குடும்பத்தையும் உயர்த்தினால் போதும்  என ஒருபோதும் எண்ணியதில்லை. தமிழையும் தமிழரையும் தமிழ் உலகையும் பற்றி மட்டுமே சிந்தித்துச் செயல்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் உறுதுயரையும் பொருட்படுத்தாமல் உழைத்தார்! உழைத்தார்! உழைத்துக்கொண்டே இருந்தார்! உயர்கல்வி எய்திய புலவர் என ஒதுங்காமல் மக்களுக்கான மக்கள் தலைவர் என்ற நிலையில் மக்களோடு மக்களாகக் களப்  பணிகளில் ஈடுபட்டார். அதற்குப்  பெரிதும் துணை நிற்கும் கருவியாக இதழ்ப்பணியை அமைத்துக்கொண்டார். இனிய எளிய தமிழில் திங்களிதழ்கள், கிழமை  இதழ்கள், இலக்கிய இதழ்கள் மட்டுமல்லாமல் நாளிதழும் நடத்த  முடியும் என நடத்திக் காண்பித்தார். அவரது இதழ்களில் பணியாற்றியவர்கள் பின்னர் பல்வேறு இதழ்களிலும் பணியாற்றும்  வாய்ப்பைப் பெற்றனர். இதழியல் வல்லுநர்களை உருவாக்கிய இத்தகு  பெருமை இதழியல் தந்தை ஆதித்தனார் அவர்களுக்கும் இதழியல் செம்மல் இலக்குவனார் அவர்களுக்கும் மட்டுமே உரித்தானது ஆகும்.
இதழியல் செம்மல்
  இதழ்கள் செய்திகளைத் தருவதற்கும் பொழுதுபோக்காக வாசிப்பதற்கும் மட்டுமல்ல ;  மக்களை நாட்டு அவலங்களுக்கு எதிராக மெருகேற்றும்  ஆயுதங்களாகவும் விளங்க வேண்டும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் இதழியல் செம்மல் தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார்.
இதழியல் செம்மல் இலக்குவனார் வழிநின்று இன்தமிழ் காப்போம்!
++++++
03.09.2013 - பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் 40 ஆம் ஆண்டு நினைவுநாளாகும்.

Followers

Blog Archive